ஞாயிறு, 4 நவம்பர், 2018

மாதாந்திர அமுதத்தில் சிந்தனைத் துளிகள்

'மாதாந்திர அமுதம்' எனும் திங்களிதழ் தவத்திரு சுந்தரசுவாமிகளைச் சிறப்பாசிரியராகக் கொண்டு கோவை - கௌமார மடாலயத்தின் வெளியீடாக 1980ஆம் ஆண்டு சூலை முதல் வெளிவந்துள்ளது.  தவத்திரு சுந்தரசுவாமிகள் குடம் 1 முதல் குடம் 15 வரையில் உள்ள இதழ்ப் பகுதிகளுக்குச் சிறப்பாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.  அவர்தம் மறைவிற்குப் பிறகு குடம் 16 முதல் குடம் 22 வரை தவத்திரு குமரகுருபர சுவாமிகள் சிறப்பாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.  இதற்குப் பிறகு இவ்விதழ் ‘கௌமார அமுதம்’ என்ற பெயரில் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்களைச் சிறப்பாசிரியராகக்கொண்டு கி.பி.2002முதல் வெளிவந்துகொண்டு இருக்கிறது.

இவ்விதழில் கௌமாரம் தொடர்பான ஆய்வுகளும், செய்திகளும், துணுக்குகளும், சுவடிப்பதிப்புகளும், நூல்களும் வெளிவந்துள்ளன.  மேலும் மாதச் செய்திகள், சிறப்பாசிரியர் பங்குகொள்ளும் நிகழ்ச்சிகள், மடாலயத்துப் பள்ளிக்கூடத்தின் செய்திகள் மற்றும் கருத்தரங்க நிகழ்வுகள், அறிஞர் பெருமக்களின் பொன்மொழிகள், சிந்தனைத் துளிகள் மற்றும் கருத்துக்கள் போன்றன வெளிவந்துள்ளன. குறிப்பாக வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், தவத்திரு இராமானந்த சுவாமிகள், தவத்திரு கந்தசாமி சுவாமிகள், தவத்திரு சுந்தரசுவாமிகள் ஆகியோரின் நூல்கள், அந்நூல்கள் தொடர்பான கருத்துகள் வெளியிடுவதைத் தமது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

இவ்விதழின் பல்வேறு பக்கங்களில் பல்வேறு விதமான சித்தனைத் துளிகள் மக்களின் மனம்-குணம் மேன்மையடைய வெளிப்படுத்தப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

மக்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்குத் தேனீயையும் பூவையும் எடுத்துக்காட்டு காட்டி அதன் செயல்பாடுகளில் ஒப்பிடப்பட்டுள்ளது.  மக்கள் எவ்வாறு இருக்கக் கூடாது என்பது ஈயின் செயல்பாடுகளில் ஒப்பிடப்பட்டுள்ளது.  இவ்விரண்டில் எது மேன்மையானது என்பதை உணர்த்துவதாக பின்வரும் தகவல் சிந்திக்கக் தூண்டுவதாக அமைந்துள்ளது.
“ஈயானது மலத்திலும் அமரும்; தேனிலும் தின்பண்டத்திலும் வந்து அமரும்.  தேனீ இருக்கிறதே அது புஷ்பத்தில் மட்டும் அமர்ந்து தேன் குடிக்கும்; எந்த அழுக்கையும் தொடாது.  மக்களின் தேனீ போல உள்ளவர்கள் சிறந்தவர்கள்.  ஈக்கள் போன்றவர்களே மிகுதியாகக் கணாப்படுகிறார்கள்.  தெய்வ உணர்வே மக்களை உயர்த்தும்.  நமது தெய்வ வழிபாட்டில் பூக்களுக்கு இடம் இருப்பதன் காரணம் இதுவே (குடம் 1:திவலை 3:1980, ப,5).

மாட்டின் சுறுசுறுப்பை அதன் வாலின் உணர்ச்சியைக் கொண்டு கணக்கிடலாம். ஆனால், மனிதனின் சுறுசுறுப்பை எப்படி கணக்கிடமுடியும்.  அது இயலாத செயல் என்பதை, “மாடு விலைக்கு வாங்கும் போது அதன் வாலைத் தொட்டால் போதும். படுத்திருந்தாலும் எழுந்து விடும்.  நின்றால் சட்டென்று  நகரும்.  இது சுறுசுறுப்பு உள்ள மாடு.  மந்தமான மாடு வாலைத் தொட்டவுடன் எழுந்திருக்காது நகராது; மாட்டின் சுறுசுறுப்பை மாட்டின் வாலைக் கொண்டு அளக்கலாம். மனிதனை எப்படி அறிவது?” (1:3:1980, ப.12) என்ற வாசகம் உணர்த்துகிறது.

ஆன்மாவின் பயன்பாடு எத்தன்மைத்து என்பதை, “ஒரு வீட்டில் மிகவும் பயனுடையது அந்த வீட்டின் சுவர்களோ, சன்னல்களோ, மட்டியோ அன்று.  அந்த வீட்டின் காலி இடம்தான் பயன்படுகிறது.  உதாரணமாக குடத்தின் மண் ஓடு, செப்பு ஓடு, எவர்சில்வர், வௌ¢ளி, தங்கத்தகடு பயன்படுவது இல்லை.  குடத்திற்குள் இருக்கும் காலி இடமே பயன்படும் பகுதி.  இதே போன்று பயன்படுவது நம்முடைய உடம்பு இல்லை.  உடம்புக்குள்ளிருக்கும் ஆன்மாதான் பயன்படுவது.  இதனை எத்தனை நபர்கள் சிந்திக்கிறார்கள்?” (1:3:1980, ப.33) என்ற வாசகம் உணர்த்தக் காணலாம்.  மேலும், ஆத்மாவின் பயன்பெற எவ்வாறு உள்ளம் இருக்க வேண்டும் என்பதை, “தானும் அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுக்காதவனிடம் பணம் இருந்து என்ன பயன்? எதிரிகளை எதிர்த்துப் போராடாதவனிடம் படைவலிமை இருந்து என்ன பயன்?  கற்ற கல்வியின்படி நடக்காதவன் மேலும் கல்வி கற்று என்ன பயன்? புலன்களை அடக்கி ஆளாதவனுக்கு ஆத்மா இருந்து என்ன பயன்?” (1:8:1981, ப.40) என்ற வாசகம் உணர்த்துகிறது.

இறைவன் செயல்பாடு எவ்விதம் அமைந்திருக்கும் என்பதை“ஒருவனுக்கு கெடுதல் செய்ய விரும்பினால் முதலில் சிறிய அதிர்ஷ்டத்தை உண்டாக்கி அதை அவன் பொறுப்புடன் ஏற்றுக் கொள்கிறானா என்று கடவுள் சோதிக்கிறார்.  ஒருவனுக்கு நல்லது செய்ய விரும்பினால் சிறிய கஷ்டத்தைக் கொடுத்து அதை அவன் பொறுமையுடன் சகிக்கிறானா என்று கடவுள் உற்றுப் பார்க்கிறார்.” (1:8:1981, ப.52) என்ற வாசகம் உணர்த்துகிறது.

அமுதவாக்கு

இறைவனைக் காணும் விதம் எத்தன்மைத்து என்பதை, “மேடு பள்ளம் இயற்கை காட்டும் நியதி.  துன்பம், இன்பம் மன இயல்பு சமமாக அணுக வேண்டிய தூய மார்க்கம்.

படிப்பினால் பகவானைக் காணலாம் என்பது பாறைக்குள் தேரையைக் காண்பதற்குச் சமம்.  பக்தியினால் பகவானைக் காணலாம் என்பது வெண்ணெய்க்குள் நெய்யைக் காண்பதற்குச் சமம்” (4:2:1983, ப.6) என்பதால் அறியமுடிகிறது.

எச்செயலுக்கும் ஒரு அடையாளம் உண்டு.  அவ்வடையாளம் செயலின் பயன்பாடாகும்.  மறக்கவேண்டிய செயல்பாடுகள் இரண்டு உண்டு என்பதையும், ஒருவன் பக்தியோடு இருக்கிறான் என்றால் அவனைச் சுற்றி இருக்கும் பக்தர் குழாமைக் கொண்டு அவனுடைய பக்தி நிலையைக் கணக்கிடலாம் என்பதையும், “எல்லா மனிதர்களும் இரண்டு செயல்களை மறந்துவிட வேண்டும். நாம் பிறருக்குச் செய்த நன்மைகளை மறப்பது ஒன்று; பிறர் நமக்குச் செய்த தீமைகளை மறப்பது இரண்டாவது.  வானம் மழை பொழிந்ததற்கு அடையாளம் காட்டுவது பூமியின் பொறுப்பு. மனிதனிடம் பக்தி இருக்கிறது என்பதற்கு அடையாளம் காட்டுவது அவனுடைய பக்தர்குழாம்.” (4:2:1983, ப.7) என்பதால் உணரமுடிகிறது.

இதுபோன்ற பல சிந்தனைத் துளிகள் ஒவ்வொரு இதழிலும் பரவிக் கிடக்கின்றன.  மேலும், பொதுவான சிந்தனைத் துளிகள் அன்றி சில மகான்களின் அறிவுரைகள் மற்றும் பொன்மொழிகள் இடம்பெற்றிருக்கின்றன.  அவற்றுள் சிலவற்றை இங்குக் காண்போம்.

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் சிந்தனைகள் பொதுவாக எல்லா இதழ்களிலும் பெரும்பாலும் இடம்பெற்றிருக்கின்றன.  சில சிந்தனைகள் திரும்பம் திரும்ப இடம்பெற்றிருக்கின்றன. இச்சிந்தனைகளை ‘சத்திய வாசகம்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளனதைக் காணமுடிகிறது.

‘அரசன் அன்றே கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும்’ என்றும் பழமொழிக்கு ஏற்ப சுந்தரமூர்த்தி நாயனார் விளங்கினார் என்பதை, “ஆடு முதலியவற்றைப் பீசமர்த்தனத்தால் கொன்று வெந்து தின்னவும், தெய்வம் இல்லையென்று சொல்லவும், மற்றும் காலம் கருமம் முதலியவற்றுக்குப் பரத்துவம் சொல்லவும் தெய்வத்திற்குப் பித்தவுபரி உண்டென்னவும், திருட்டுத் தன்மை உண்டென்னவும், திருட்டுத்தன்மை உண்டென்னவும் சொல்லவும், குருவை வருத்தப்படுத்தல், நிந்தித்தல், புண்ணியமென்று சொல்லவும், சிசுக்களின் குறியிற்கொய்தல், முதலிய சடங்குகள் செய்யவும் சம்மதப்படுகின்ற சமயவாதிகள் இன்னம் ஏதாவது ஒரு விபரீதம் ஒன்றேற்படுத்தினாலும், அந்தப் பட்டசத்திலும் உடன்படுவார்கள் என்பதே சித்தம்.

எவ்விதப் பிரயாசை யெடுத்துக்கொண்டாவது ஒருவன், தெய்வ கிருபையைப் பெற்றுக்கொள்வான்.  ஆனால் அவன் இவ்வுலகில் எது செய்தாலும் செய்யலாம் என்பதே திண்ணம்.

அருட்பிரசாதம் பெற்ற ஒருவன் குற்றம் செய்தாலும், அவனையும் தெய்வம் தண்டித்தே பின்பு அருள்புரியும் என்பதற்குச் சான்று சுந்தரமூர்த்தி நாயனார் நேத்திரமிழந்து, வெடிவாவருந்தி பின்பு உய்ந்து, கதி சேர்ந்தது முதலியனவாம்.” (1:6:1980, ப.52) என்கிறார் வண்ணச்சரபர்.

கல்வி கற்றதன் பயன் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை வண்ணச்சரபர், “கல்வியென்பது சகல நூற்களையும் கற்றுப் பிரசங்கிப்பதல்ல.  தெய்வ நிச்சயமும், திருவருட் பிரசாத விருப்பமும், அதற்குத்தக்க முயற்சியும் ஏற்படப் பெறுதலேயாம்.” (1:12:1981, ப.46) என்றும், “கல்விக்கடல் அளவுபடாது என்று ஒரு வார்த்தை உலகில் விளங்குகின்றதாயினும், எந்தப் புலவன் மற்றொரு புலவனைக் காணும்போது பொறாமை முதலிய குணம் உதியாமல், ஆனந்தம் உதிக்கப் பெறுகின்றானோ அவன் கல்விக் கடலின் கரைகண்டவன் என்பதற்கு ஐயமில்லை.” (2:2:1981, ப.8) என்றும் உணர்த்துகிறார்.

காஞ்சிப் பெரியவர்

அம்மா என்ற சொல் தமிழில் எவ்வாறு வந்தது என்பதன் தோன்றுவாயைக் காஞ்சிப் பெரியவர், “கன்றுக்குட்டி அம்மா என்று கத்துவதைப் பார்த்துத்தான் மனிதர்கள் அம்மா என்று பெயரை வைத்திருக்க வேண்டும்.  இவ்வளவு பிரேமையுள்ள ஒரு பிராணி சொல்லுவதைத்தான் நாமும் சொல்லவேண்டும் என்று அதுமாதிரியே சொல்ல ஆரம்பித்தார்களோ என்று தோன்றுகிறது.
அம்மா என்பதிலுள்ள மா என்பதுதான் ஸமஸ்கிருத பாஷையில் தாய்க்குச் சொல்லப்படுகிறது.  ‘மா’ என்பது தாயைக் குறிக்கும் ஹிந்ஸ்தானியில் ‘மாயி’ என்றும், இங்கில¦ஷில் ‘மம்மி’ என்றும் சொல்லுகிறார்கள்.  மகாராஷ்டிரம், தெலுங்கு முதலிய பாஷைகளில் அம்மா என்றுதான் சொல்லுகிறார்கள்.” (1:10:1981, ப.43) என்கிறார்.

தவத்திரு. இராமானந்த சுவாமிகள்

இறைவனை எவ்வாறு கும்பிட வேண்டும் என்பதை தவத்திரு இராமானந்த சுவாமிகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“ஈசுவரனைத் தெரிசிக்க விரும்பி ஆலயத்துட் செல்லும் பொழுது தெய்வ சிந்தனையைத் தவிர வேறொரு நினைவையும் கொள்ளாமல் சென்று, மனம் நெக்கு விட்டுருக கைகளைக் கூப்பி ஆண்டவனது திருப்புகழ்களை மனதாரச் சிந்தித்து, வாயாரத் துதித்து, தலையாரக் கும்பிட்டு நிற்கும் அன்பன் அவ்விக்கிரகத்தைப் பேரவாவோடு கண்களால் பருகுவான் போல நோக்கி, அவ்வடிவை மனதிற் பதிய வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.  அப்போதே கண்களை மூடிக்கொண்டு பார்த்தால் மனவெளியில் முன்னிலையால் அமையக் காண்பான்.” (2:9:1982, ப.30)

மேலும், உருவத்தியானம் குறித்து, “செம்பிலிருக்கும் கறையை நீக்கிப் பரிசுத்தமாக்குவதற்குப் புளி முதலிய பதார்த்தங்கள் அவசியமாகிறது போல, நம் மனத்தின் மாசு நீங்கித் திருவருட் பிரகாசமாகிய இன்பம் எய்துவதற்குத் தெய்வத்தின் உருவத்தியானம் ஓர் சிறந்த சாதனமாகும்” (2:10:1982, ப.2) என்கிறார்.  இதனைப் பார்க்கும் போது இராமானந்த சுவாமிகள் உருவத்தியானத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார் என்பது விளங்குகின்றது.

தவத்திரு சுந்தரசுவாமிகள்

முத்தமிழின் சிந்தனையை சுந்தரசுவாமிகள், “தமிழில் மூன்று அமுதக் கடல்கள் இருக்கின்றன.  இயல், இசை, நாடகம் இம்மூன்றையும் முத்தமிழ் என்பார்கள்.  என்னைப் பொறுத்த வரை இவை தமிழ்கடல், அமுதக்கடல்களுக்குச் சமம்.” (1:3:1980, ப.41) என்கிறார்.

கிருபானந்த வாரியார் சுவாமிகள்

இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் என்பதையும், அவனைக் காணும்  வழிமுறையையும் வாரியார் சவாமிகள், “கடவுள் கண்ணுக்குத் தெரியவில்லை.  ஆகவே கடவுள் இல்லை என்றால், உயிர் கண்ணுக்குத் தெரியவில்லை.  ஆகவே உடலில் உயிர் இல்லை என்று சொல்வதா?

மின்சாரம் எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால் கண்ணுக்கு தெரியவில்லை. அதுபோல் கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். ஆனால் கண்ணுக்குத் தெரிவதில்லை.

டெல்லியையும், பம்பாயையும் பாராதவனுக்குத் தேசப்படம் மூலமாக காட்டுவது எப்படி அவசியமோ, அதுபோல் கடவுள் உண்மை தெரிவதற்காக உருவத்தின் மூலமாகக் காட்டுவது அவசியமாகும்” (1:8:1982, ப.20) என்கிறார்.
நல்லவனாக வாழ்வதற்காக வழிமுறையை வாரியார் சுவாமிகள், “நல்லவனாக வளர்வது எப்படி என்று பலரும் கேட்கிறார்கள்.  வயலில் வளரும் களையை நீக்குகிறோம் பயிர் செழிக்கிறது.  நம்மிடமுள்ள தீய குணங்களை அறிந்து அவற்றை நீக்கிவிட்டால் அதுவே நன்மை செய்யும்.  நம்மிடமுள்ள நற்குணங்களை வளர்க்க வாய்ப்பு அளிக்கும்.  இருட்டைப் போக்குவதற்குப்பதில் விளக்கை ஏற்றுகிறோம் குற்றங்களை மறந்தால் குணம் பெருகும்.

சோம்பல் உள்ளவர்கள் வறுமையால் வாடுவார்கள் அவர்கள் குடும்பத்திற்குப் பயன் இல்லாதவர்கள் சோம்பல் உள்ளவர்கள் ஞான மார்க்கத்திலும் உயர முடியாது.  இல்லறம், துறவறம் இரண்டு இடத்திற்கும் சோம்ல் தீமையே பயக்கும்.” (2:6:1981, ப.44) என்கிறார்.

சத்யசாயிபாபா

அறிவுள்ள மனிதனின் செயல்பாடு எத்தன்மைத்து என்பதை சத்யசாயிபாபா அவர்கள், “இயற்கையின் படைப்பில் முட்கள் நிறைந்த செடிகளும், முட்கள் இல்லாத செடிகளும் இருக்கின்றன.  அறிவுள்ள மனிதன் இரண்டின் மதிப்பையும் அறிவான். முட்கள் இல்லாத செடிகளைப் பயிர்செய்து முட்கள் நிறைந்த செடிகளால் வேலி அமைக்கிறான்” (1:4:1980, ப.31) என்கிறார்.

மகாகவி பாரதியார்

சிதம்பர எத்தன்மைத்து என்பதை மகாகவி பாரதியார், “எப்போதும் வானத்திலே சுற்றும் பருந்துபோல் போக விஷயங்களினால் கட்டுப்படாமல், பரமாத்மாவின் ஞானக்கதிரை விழித்து நோக்குதலே விடுதலை. அதுதான் சிதம்பரம்.  மகனே சிதம்பரத்துக்குப்போ.

சிதம்பரத்தில் நடராஜருடன் சிவகாமசக்தி பக்தருக்கு வர தானம் கொடுக்கிறார் போய் வாங்கு.

சிதம்பரமே ஸ்ரீரங்கம், அதுவே பழனிமலை எல்லாப் புண்ணிய க்ஷேத்திரங்களும் ஜீவன் முக்திச் சின்னங்கள் என்று தெரிந்துகொள். உனக்கு க்ஷேமமும் நீண்ட வயதும் ஜீவன் முக்தியும் விளையும்.

நந்தன் சரித்திரத்தில் கோபால கிருஷ்ண பாரதியார் “சிதம்பரம் போகாமல் இருப்பேனோ? இந்த ஜன்மத்தை வீணாகக் கழிப்பேனோ”என்று பாடி இருப்பதற்கும் இதுவே பொருள்.” (1:10:1981, ப.12) என்கின்றார்.

இதுபோன்ற பல சிந்தனைத் துளிகள் மாதாந்திர அமுதம் இதழில் இடம்பெற்றிருக்கின்றன. வெளிவந்திருக்கக் கூடிய அனைத்து இதழ்களிலும் இடம்பெற்றிருக்கக் கூடிய இவ்வகைப்பட்ட சிந்தனைத் துளிகள், பொன்மொழிகள், அறவுரைகள், வண்ணச்சரபரின் ‘சத்திய வாசகம்’ போன்றவற்றைத் தொகுத்து ஆய்வு செய்யின் மாதாந்திர அமுதம் இதழ் ஒரு தத்துவ இதழாக, இலக்கிய இதழாகத் திகழலாம் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக