செவ்வாய், 27 நவம்பர், 2018

திருவள்ளுவர் கூறும் குற்றங்கள்

சமுதாயத்தில் வாழ்கின்ற மக்கள் தம் சமுதாய வாழ்க்கையிலும் தனிமனித வாழ்க்கையிலும் பல குற்றங்களைச் செய்ய நேரிடுகின்றது.  சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் திருவள்ளுவர் தம்முடைய திருக்குறளில்  மக்கள் எவ்வெவ் குற்றங்களைச் செய்ய நேரிடுகின்றது என்றும், அவற்றால் எவ்வெவ்வற்றை இழக்க நேரிடுகின்றது என்றும் கூறுகின்றார்.  இதன் மூலம் சமுதாய மேம்பாட்டுக்கும் தனிமனித மேம்பாட்டுக்கும் வழி செய்கின்றார்.  

   அளவறியாது ஈதல், அறிவின்மை, அன்பின்மை, இறைவனை வணங்காமை, ஈயாமை, ஊக்கமின்மை, ஊன் உண்ணல், ஒழுக்கமின்மை, கல்லாமை, களவு செய்தல், கள்ளுண்ணல், காமத்தில் மயங்கல், கேள்விச் செல்வமின்மை, கொலைத்தொழில் செய்தல், சினம் கொள்ளல், சூதாடல், சோம்பல் கொள்ளல், தீச்சொல் கூறல், தீயன செய்தல், நடுவுநிலைமை தவறுதல், நல்ல நட்பை இகழ்தல், நல்லாரைத் துணைக்கோடாமை, நற்பண்புகளைக் காக்காமை, நன்றி மறத்தல், நாணமின்மை, பகுத்துக் கொடுக்காத செல்வம், பயனில் கூறல், பிறரை வருத்திச் செல்வம் தேடல், பிறர் பொருளைக் கவர நினைத்தல், பொருளல்லவற்றைப் பொருள் என்று உணர்தல், பொறாமைப்படல், மக்கட் பண்பு இல்லாமை, மறதியுடைமை, விருந்தோம்பாமை, விலைமகளிர் தொடர்பு, வினைசெய்து முடித்தற்குரிய இடத்தினை அறியாமை, வெறுப்பை வளர்க்கும் தீய எண்ணம் கொள்ளல் போன்ற குற்றங்களைக் கூறுகின்றார்.  இவ்வெல்லாக் குற்றங்களையும் விவரிக்கின் தனி ஆய்வாகிவிடும்.  இவற்றில் சான்றுக்குச் சில மட்டும் இக்கட்டுரைக்கண் காண்போம்.

அறிவின்மை

அறிவு என்பது கற்றலால் மட்டுமே வருவதன்று.  கற்றதை உள்ளவாறு உணர்ந்து அதன் படி நடத்தலே சிறந்த உண்மையான அறிவாகும்.  இதனாலேயே வள்ளுவர்,

”கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” (குறள்., 391)

என்று கூறுகின்றார்.  அறிவே ஒருவனுக்கு இறுதி வரைக்கும் அழிவு வராமல் தடுக்கும் கருவியாகும்.  பாதுகாக்கும் அரணாகும்.  மனதைப் போன போக்கெல்லாம் போக விடாமல் தீமையை நீக்கி நல்வழிப்படுத்துவது அறிவு.  யார் எதைச் சொன்னாலும் அதனைத் தீர ஆராய்ந்து உணர வல்லது அறிவு.  இந்த அறிவைப் பெறாதவர் நிலையை வள்ளுவர்,

”அறிவுடையார் ஆவத தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்” (குறள்., 427)

என்கிறார்.  அறிவின்மையால் ஒருவன் தனக்கு வரப்போகின்றதை அறியாதவனாக இருப்பதால் அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமையாகிய பேதமைத் தன்மை அதிகரித்து அல்லல் உறுவான் என்று கூறுகின்றார்.

இதிலிருந்து அறிவில்லாதவன் தனக்கு வரக்கூடிய இன்னலை முன்பே அறிந்து கொள்ளும் திறனில்லாததால் அதிலிருந்து தப்பக் கூடிய நிலையினை இழக்க நேர்கின்றது என்பதை அறியலாம்.

அன்பின்மை

அன்பு என்பது வாழும் உயிர்களுக்குப் பொதுவான ஒன்றாகும்.  இது இயற்கையான உணர்வுகளில் ஒன்று. அதனால்தான் மனிதப் பிறவி விழுமியது என்று ஆன்றோரால் போற்றப்படுகிறது.  நட்புப் பாராட்டுதல், இல்லறத்தில் சிறத்தல் உயிர்களிடம் இரக்கம் கொள்ளுதல், நாட்டில் ஒற்றுமையை நிலவச் செய்தல் இத்தகைய பண்புகள் மூலம், மனித உலகத்தை இணைத்து வாழச் செய்யும் அற்புதச் சக்தி அன்பிற்கே உண்டு.  உலகத்தின் குற்றங் குறைகள், கொடுமைகள் ஆகியவற்றை அகற்றித் தூய்மை செய்யும் ஆற்றல் அன்பிற்கே உண்டு.

மண்ணில் மனித குலம் தழைக்க அன்பின் ஊற்று தடையின்றிப் பெருக்கெடுத்து ஓட வேண்டும்.  இன்று தடையிலா அன்பு இந்த உலகத்திற்குத் தேவை.  இத்தகைய உயரிய அன்பியலை வாழ்வியலின் உயிர்நிலையாகக் காட்டுகிறது வள்ளுவம்.

”அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்
கென்புதோல் போர்த்த உடம்பு”  (குறள்., 80)

எவ்வளவு கடுமையாக அன்பின்மையை வள்ளுவம் விமர்சிக்கிறது.  ஒருவர்க்கு உயிர் இருக்கிறதா, இல்லையா என்பதை அவர் சுவாசிப்பதிலிருந்துதான் நாம் தீர்மானிப்போம்.  ஆனால் அவன் வாழ்வில் அன்பின் விளக்கம் இருந்தால்தான் அவனுக்கு உயிர் உண்டு.  இல்லையானால் உயிரற்ற உடம்பே என்று வள்ளுவம் தீர்மானிக்கிறது.

இத்தகைய அன்பை நாடாதவனால் குற்றங்கள் அதிகரித்துச் சமுதாயம் பாழ்படும்.  இந்நிலையினைத் தடுக்கவே வள்ளுவம்,

”என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்” (குறள்.,77)

என்ற குறளில் காட்டுகிறது.  எலும்பில்லா உயிரை வெயில் வருத்துவது போல அன்பில்லாத உயிரை அறக்கடவுள் தண்டிக்கும் என்று கூறுகின்றது.

இதிலிருந்து ஒருவன் அன்பின்மையால் தனி மனித வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நல்லறத்தினையும், சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய அறத்தினையும் செய்யாமல் அவற்றால் விளையக் கூடிய பயனை இழப்பதோடு, அறவழியிலிருந்து பிறழ்ந்ததால் அறக்கடவுளால் தண்டிக்கப்படும் நிலைக்கு ஆளாவான் என்று வள்ளுவம் எச்சரிக்கின்றது.

இறைவனை வணங்காமை

பிறவித் துன்பத்திற்குக் காரணமாகிய காம, வெகுளி, மயக்கங்களைப் போக்கி, பேரின்ப அருள் அளிக்க வல்லது இறைவன் திருவடியாகும்.  அதனைச் சேராதவர்கள் பிறவித் துன்பத்திலிருந்து மீள முடியாமல் இன்னலுறுவர்.  இதனையே வள்ளுவர்,

”பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவன் அடிசேரா தார்” (குறள்.,10)

என்ற குறள் மூலம் காட்டுகிறார்.  இறைவன் அடியைச் சேர்ந்தவரே பிறவியாகிய பெருங்கடலைக் கடப்பர் என்றும், இறைவனை வணங்காமையாகிய குற்றத்தைப் புரிந்தோர் அதனைக் கடக்க முடியாமல் காம, வெகுளி மயக்கங்களில் அழுந்தி வருந்துவர் என்றும் எச்சரிக்கின்றார்.

ஈயாமை

'செல்வத்துப் பயனே ஈதல்' என்பது நம் நாட்டில் பண்டு தொட்டே வந்த ஒரு அறநெறிக் கொள்கை.  ஈட்டியானுக்கும் பிறருக்கும் பயன்படாத செல்வம் 'நன்றியில் செல்வம்' என ஒதுக்கப்பெறுகிறது.  சமுதாய நலங்களுக்குச் செலவழிக்கப் பெறாமல் ஒரு நாட்டில் செல்வம் குவிந்து கிடந்தாலும், அதனால் அவனுக்கோ சமுதாயத்துக்கோ, யாதொரு பயனுமில்லை. தீமையே விளையும்.  இதனைத் தடுக்கவே வள்ளுவர்,

”எச்சமென் றென்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்” (குறள்., 1004)

என்ற குறளில் அறிவுரை கூறுகின்றார்.  பிறருக்கு உதவி செய்தால்தான்  உலகில் அன்பை வளர்க்கலாம்.  அதனால் புகழ் தானே வந்தெய்தும்.  மக்களாய்ப் பிறந்த ஒவ்வொருவரும், தாம் இவ்வுலகை விட்டு நீங்கும் போது நிலைத்த புகழை விட்டு வைத்துச் செல்ல வேண்டும்.  ஆனால், பிறருக்கு ஈயாத செல்வமுடையவன், அன்பையும் சுற்றத்தையும் வளர்க்கவில்லை.  ஆதலால் இறுதிக் காலத்தில் எச்சம் என்று எண்ணுவதற்கு ஒன்றுமில்லாமல் போகும் என்று எச்சரிக்கின்றார்.

ஒழுக்கமின்மை

மனித வாழ்க்கையை முறையாக வளப்படுத்தி வளர்ப்பது ஒழுக்கம்.  ஒழுக்கம் என்பது மருந்துமன்று; பத்தியமுமன்று.  ஒழுக்கம் வாழ்வாங்கு வாழும் பாங்குடையவர்க்கு எளிதாக இனிதாக அமைவதேயாகும்.  மனிதன் பெற்றுக்கொண்ட, வளர்த்துக் கொண்ட அறிவு, ஆள்வினை ஆற்றல், அன்பு முதலியன சிதறிச் சிறு நெறிகளில் சென்று வீணாகாமல் தடுத்து நிறுத்தி அவனை அகநிலையில் வளர்த்துப் புறநிலையில் உயர்த்திச் சிறப்பிப்பது ஒழுக்கமேயாகும்.  இத்தகைய ஒழுக்கத்தை வள்ளுவர் உயிரினும் சிறந்ததெனக் கூறுகின்றார்.  இதனையே,

”ஓதலின் சிறந்தன்று ஒழுக்க முடைமை” (முதுமொழி, சிறந்தபத்து : 1)

என்று முதுமொழிக் காஞ்சியும், உயிரைத் தேயாது காப்பது ஒழுக்கமே என்று சீவக சிந்தாமணியும் எடுத்துரைக்கின்றது.

ஒழுக்கத்தின் தன்மையை அறிந்து வாழாதவர் அறிவிலார்.  அவர்கள் உள்ளத்துக் கோடியினும் பல எண்ணங்கள் வீணான எண்ணங்கள் இப்படி வாழ்வதிலும் உயிரினும் சிறந்த ஒழுக்கத்துடன் வாழ்தலே உயர்ந்தது என்கிறார் வள்ளுவர்.  ஒருவனுக்கு வாழ்வில் புகழையும், உயர்வையும் ஏற்படுத்தித் தருவது ஒழுக்கமே.  இத்தகைய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காதவன் வாழ்வில் உயர்வடையமாட்டான்,

”அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு” (குறள்., 135)

என்று வள்ளுவர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காத குற்றத்தால் ஒருவனுக்கு வாழ்வில் உயர்வில்லை என்று சுட்டிக் காட்டி நெறிப்படுத்துகிறார்.

கல்லாமை

உலக வாழ்வின் மக்களாய்ப் பிறந்தோருக்கும் பிற உயிரினங்களுக்குமுள்ள வேற்றுமையை மக்களுக்கு இருக்கும் அறிவினாலும் அது பிற உயிரினங்களுக்கு இல்லாமையாலும் கண்டு கொள்ள முடியும்.  இயற்கையாகவே அமைந்துள்ள அறிவொடு நூற்கல்வி, கேள்வி வாயிலாகப் பெறும் செயற்கை அறிவும் சேர்ந்து மக்கள் வாழ்க்கை சிறப்பது போல, கல்லாதவன் வாழ்க்கை சிறக்காது. கல்லாமை இருளில் கிடந்துழலும் குடிமக்கள் நிறைந்த நாடு முன்னேற்றம் இல்லாத நாடாகும்.  எனவேதான் ஒரு நாட்டு அரசுக்குத் தலைவனாகிய அரசனுக்குக் கல்வி, கேள்வி, அறிவுடைமை இன்றி அமையாதவைகளாக வகுத்த வள்ளுவர் முதியவர், இளைஞர், ஆண், பெண் அனைவருக்குமே அவை வேண்டுமென்று கருதி,

”எண்ணென்ப ஏனை எழுத்தென்ப, இவ்விரண்டும்
கண்ணென்ப வாழு முயிர்க்கு” (குறள்., 392)

என்று கல்வியின் அவசியத்தை வற்புறுத்தினார்.

”கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே” (வெற்றிவேற்கை : 35)

”கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி” (கொன்றைவேந்தன், 22)

என்று கல்வியின் தேவையைப் பிற நீதிநூல்களும் எடுத்துரைக்கின்றன.

கல்வி வேண்டுமென்பது மட்டும் போதாது.  கல்லாவிட்டால், கல்லாமை நிலவினால், நாட்டு மக்களின் நிலையும், நாட்டின் நிலையும் என்னாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கல்லாதவர்களுக்கு அறிவு சிறவாதாதலால் அவர்கள் கற்றறிந்தார் அவையின் கண் ஒன்றையும் எடுத்துச் சொல்ல இயலாது விழிப்பார்கள்.  அவ்வாறு எடுத்துச் சொல்ல விரும்பினாலும் அது பெண் தன்மை அற்ற அலிகள் காதல் வேட்கை கொள்வது போல் பயன் இல்லாமல் போகும்.  கல்லாதவர்கள் உயிரோடு உள்ளார்கள் என்ற அளவிலேயன்றி, விளைபொருள் தராத களர் நிலம் போன்று தனக்கும், சமுதாயத்திற்கும் பயனற்றவர்கள் என்றும், கல்வியால் நுட்பமாக ஆராய்ந்து தெளியும் பகுத்தறிவின் மாண்பு அற்றவர்கள் அழகாகத் தோன்றினாலும் உயிரற்ற மரப்பாவை போன்றவர்கள் என்றும் கல்லா¬மையின் பயனின்மையைக் கூறும் வள்ளுவர்,

”மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு” (குறள்., 409)

என்கிறார்.  கல்லாதார் உயர்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும் தாழ்ந்த குலத்தில் பிறந்த கற்றாரின் பெருமைகளைப் பெற இயலாது என்று கல்லாமையால் ஏற்படும் இழப்பினைச் சுட்டிக்காட்டுகின்றார்.  இதனையே நாலடியாரும்,

”கடைநிலத்தோ ராயினும் கற்றுணர்ந் தோரைத்
தலைநிலத்து வைக்கப் படும்” (நாலடி., 133)

என்கின்றது.  கற்றவர் என்ற பெருமை சமுதாய, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு அப்பாற்பட்டது.  கல்லாதவனிடம் என்ன தான் அறிவு, அழகு, செல்வம் இருந்தாலும் அவற்றால் எந்தவொரு பயனும், பெருமையும் இல்லை.

களவு செய்தல்

உயிரைப் பேணிக்காப்பதற்கு அறத்தை நாடுவதே சிறந்த வழியாகும். அழியும் உடம்பைக் காத்தற் பொருட்டுப் பொருளை விரும்பி, அதைப் பிறரிடமிருந்து வஞ்சித்துக் கொள்ளக் கருதுதல் இழுக்கினையே தரும்.  களவினால் வருகின்ற பொருள் வளர்வது போலத் தோன்றினாலும், விரைவில் அழிந்து விடும்.  மேலும் முயற்சியும், உழைப்பும் இன்றி வந்த பொருளாதலால் மனநிறைவும் இருக்காது.  இத்தகைய களவைத் தொழிலாகக் கொண்டவர்கள் தினம் தினம் செத்து மடிவர்.  மனத்தாலும் செயலாலும் களவு தவிர்த்து வாழ்கின்றவர்களே புகழடைவர்.

”கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு” (குறள்., 290)

என்பதிலிருந்து களவு செய்பவன் எல்லோராலும் இகழப்படுவதோடு, சேர்த்து வைத்த செல்வத்தையும் விரைவிலேயே இழந்து, மனநிறைவு இன்றி, வீடு பேற்றை அடையும் தகுதியையும் இழந்து அல்லல் உறுவான் என்கிறது வள்ளுவம்.

கள்ளுண்ணல்

கள்ளுண்ணல் சமுதாய வாழ்வில் மட்டுமின்றி இல்லற வாழ்விலும் கேடு விளைவிக்கும்.  கள்ளுண்பவனைக் கண்டு சான்றோர் விலகிச் செல்வர்.  கள்ளுண்பவன் மகனாக இருந்தாலும் தாயும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.  அறிவைக் கெடுக்கும் கள்ளை உண்பவர்களுக்குச் சமுதாயத்தில் எந்த ஒரு மதிப்பும் இல்லை.  வள்ளுவர் 'கள்ளுண்பவரை நஞ்சுண்பவர்' என்கிறார்.  மேலும், கள்ளுண்ணலால் ஏற்படும் இழப்பை,

”உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்” (குறள்., 921)

என்கிறார்.  கள்ளின் மேல் தீராத வேட்கை கொண்டு அறிவு கெட்டுத் திரிபவர்கள் தம் புகழை இழப்பதோடு, சமுதாயத்தில் மதிப்பற்ற நாணமுடைய வாழ்க்கையே வாழ வேண்டிவரும் என்று எடுத்துரைக்கின்றார்.

விலைமகளிர் தொடர்பு

மன உறுதியும், அறிவுத் தெளிவும் இல்லாத சிலர் நாடுகின்ற இழி செயல்களாகிய பொதுமகளிர் நாட்டம், கள்ளுண்ணல், சூதாடுதல் போன்றவைகள் குடும்பத்தை மட்டுமல்ல, சமுதாயத்தையும் சீர்குலைக்கின்றன.

நெஞ்சத்தை நிலை நிறுத்தி ஆளும் திறன் இல்லாதவர்களும் எதையும் ஆராய்ந்து காணும் அறிவில்லாதவர்களும், உயர்வு சிறிதும் இல்லாத கீழ்மக்களும், பொது மகளிரை விரும்பித் தம் வாழ்நாளை வீணாக்குகின்றனர்.   அவர்களைப் பார்த்து வள்ளுவர்,

”இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு” (குறள்., 920)

என்ற குறளில் கூறுகின்றார்.  வஞ்சகம் கொண்ட விலைமகளிர் நாட்டம், மயக்கும் மது, கெடுக்கும் சூது இவற்றால் ஒருவரின் அறிவும், செல்வமும் கெடும் என்று கூறி எச்சரிக்கின்றார்.

இவ்வாறு திருவள்ளுவப் பெருந்தகை தம்முடைய திருக்குறளில் மக்கள் ஆற்றும் குற்றங்களை பட்டியலிட்டிருக்கிறார்.  இவற்றினை உணர்ந்து திருந்தி நன்னடத்தையில் செயல்படவேண்டும் என்பது அவரது அவாவும் இக்கட்டுரையாளரின் அவாவுமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக