வெள்ளி, 2 நவம்பர், 2018

தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்புகள்

தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற முப்பொரும் பிரிவுகளால் ஆனது.  இதில் எழுத்து மற்றும் சொல் அதிகாரங்கள் தமிழ் மொழியின் இலக்கணத்தைக் கூறுவன.  அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் ஆகிய ஒன்பது இயல்களாலானது பொருளதிகாரம். இப்பொருளதிகாரமோ தமிழிலக்கியம், தமிழர் சமுதாய அமைப்பு, உளவியல், உடலியல், மரபு பற்றிக் கூறுவது.

தொல்காப்பிய நிலை

காப்பியங்களையும், நீதி நூல்களையும்¢ தல புராணங்களையும், சிற்றிலக்கியங்களையும் படித்த அளவிற்கு இலக்கணங்களையும் சங்க இலக்கியங்களையும் தமிழர்கள் அதிகமாகப் படிக்கவில்லை என்றே தோன்றுகிறது.  சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் தொல்காப்பியத்தைப் பயின்றவர்கள் மிகச் சிலரே இருந்துள்ளனர்.  19ஆம் நூற்றாண்டின் முதற் கால்பகுதியில் சென்னையில் வாழ்ந்த வரதப்ப முதலியார் என்பவர் ஒருவரே தொல்காப்பியப் புலமை உடையவராக இருந்திருக்கின்றார் என்பதை, சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள் 1885ஆம் ஆண்டு வெளியிட்ட தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்புரையில் எடுத்துக்காட்டி இருக்கின்றார்.  "சென்னபட்டணத்தில் இற்றைக்கு ஐம்பதறுபது வருஷத்தின் (1825இல்) முன்னிருந்த வரதப்ப முதலியாரின்பின் எழுத்துஞ் சொல்லுமே யன்றித் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை உரையுதாரணங்களோடு பாடங்கேட்டவர்கள் மிக அருமை.  முற்றாய் இல்லை என்றே சொல்லலாம்.  வரதப்ப முதலியார் காலத்திலும் தொல்காப்பியங் கற்றவர்கள் அருமையென்பது அவர் தந்தையார் வேங்கடாசல முதலியார் அதனைப் பாடங்கேட்கும் விருப்பமுடையரான போது பிறையூரிற் திருவாரூர் வடுகநாத தேசிகர் ஒருவரே தொல்காப்பியம் அறிந்தவர் இருக்கிறாரென்று கேள்வியுற்றுத் தமது ஊரைவிட்டு அதிக திரவியச் செலவோடு அவ்விடம் போய் இரண்டு வருஷமிருந்து பாடங்கேட்டு வந்தமையானும், வரதப்ப முதலியார் ஒருவரே பின்பு அதனைத் தந்தைபாற் கேட்டறிந்தவரென்பதனானும், அது காரணமாக அவருக்குத் தொல்காப்பிய வரதப்ப முதலியாரென்று பெயர் வந்தமையானும், பின்பு அவர் காலத்திருந்த வித்துவான்கள் தமக்கு யாதாயினும் இலக்கண சமுசயம் நிகழ்ந்துழி அவரையே வினவி நிவாரணஞ் செய்தமையானும் நிச்சயிக்கலாம்" (தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சி.வை. தாமோதரம் பிள்ளை (பதி.), 1885, பதிப்புரை, ப.5) என்று கூறியிருப்பதிலிருந்து 1825ஆம் ஆண்டுக்குரிய தொல்காப்பிய நிலையை உணரலாம்.

தொல்காப்பியரால் இயற்றப்பெற்ற தொல்காப்பியம் தொல்காப்பியர் காலத்திற்குப் பிறகு பல்வேறு நிலைகளில் மக்களிடைய பல்கிப் பெருகியதைப் பின்வருமாறு பகுத்துரைக்கலாம்.

1. ஓலைச்சுவடிப் பதிப்புகள்
அ. மூலப்படிப் பதிப்புகள்
ஆ. உரைப்படிப் பதிப்புகள்
2. அச்சுநிலைப் பதிப்புகள்
அ. மூலப் பதிப்புகள்
ஆ. உரைப் பதிப்புகள்
i. மரபுரைப் பதிப்புகள்
ii. ஆராய்ச்சிக்காண்டிகையுரைப் பதிப்புகள்
iii. புத்துரைப் பதிப்புகள்
இ. ஒப்பியல் பதிப்புகள்
ஈ. மொழிபெயர்ப்புப் பதிப்புகள்
உ. எழுத்துப்பெயர்ப்புப் பதிப்புகள்
ஊ. மொழிபெயர்ப்பும் எழுத்துப்பெயர்ப்பும் கொண்ட பதிப்பு
எ. உரைவளப் பதிப்புகள்
ஏ. பிறநிலைப் பதிப்புகள்

1. ஓலைச்சுவடிப் பதிப்புகள்

தொல்காப்பியரால் தொடக்கத்தில் மூலமாக மட்டும் எழுதப்பெற்ற தொல்காப்பியம் பல நூறு ஆண்டுகள் குருவின் வாயிலாக பயிலப்பட்டு வந்துள்ளன.  தேவைக்கேற்ப மாணவர்களால் மூலப்படிகள் உருவாக்கப்பெற்றுள்ளன.  தொல்காப்பியத்திற்குக் கிடைத்த பழைய உரைகளுள் காலத்தால் முந்தியதாகக் கருதப்படும் இளம்பூரணர் (கி.பி.11ஆம் நூற்.) உரைக்கு முன்னர் வரை தொல்காப்பியம் மூலப் படிகளாகத்தான் இருந்திருக்கவேண்டும்.  அதற்குப் பிறகு உரையுடன் கூடிய படிகள் தொல்காப்பியத்திற்கு ஏற்பட்டிருக்கவேண்டும்.  தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் போன்றோரின் பழைய உரைகள் மட்டும் இதுவரை கிடைத்துள்ளன.  இவற்றில் பழைய உரைகாரர்களில் காலத்தால் பிந்தியவராகக் கருதப்படுவர் நச்சினார்க்கினியர் (கி.பி.14ஆம் நூற். பிற்பகுதி) ஆவார்.  இவ்வாறு நூலாசிரியர் மற்றும் உரையாசிரியர்களின் கருத்துக்களைப் பிறிதொருவர் வேறொரு படியெடுத்துக்கொள்ளும் போது அதுவும் ஒருவகையில் பதிப்பாகக் கொள்ளலாம்.  இந்நிலையில், மூலத்தை மட்டும் படியெடுத்ததை மூலப்படிப் பதிப்பு என்றும், உரையுடன் படியெடுத்ததை உரைப்படிப் பதிப்பு என்றும் வகைப்படுத்தலாம்.

அ. மூலப்படிப் பதிப்புகள்

இன்று எழுதப்பெற்ற ஓலைச்சுவடிகள் அனைத்தும் கிடைக்கவில்லை.  அழிந்தவை போக மீதமுள்ள ஓலைச்சுவடிகள் பல்வேறு நூலகங்களில், இல்லங்களில் பாதுகாத்து வருகின்றனர்.  தமிழ்ப் பல்கலைக்கழகம் 1991ஆம் ஆண்டு ஐந்து தொகுதிகளாக வெளியிட்ட அனைத்துலகத் தமிழ் ஒலைச்சுவடிகள் அட்டவணையின் அடிப்படையில் இன்று மூலப்படிகளாக இருக்கக் கூடிய தொல்காப்பியப் பொருளதிகார மூலப்படிகள் பின்வருமாறு:-

கொல்கத்தா தேசிய நூலகத்தில் தொல்காப்பியம் மூலம் (சு.எண்.3067), புறத்திணை (சு.எண்.3144); சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் தொல்காப்பியம் மூலம் (சு.எண்.537 மற்றும் 5196); தஞ்சை சரஸ்வதிமகால் நூலகத்தில் தொல்காப்பிய மூலம் (சு.எண்.629a மற்றும் 630); சென்னை மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதையர் நூலகத்தில் தொல்காப்பியம் மூலம் (சு.எண்.73 மற்றும் 115); சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகத்தில் பொருளதிகாரம் (சு.எண்.44538); திருப்பதி ஸ்ரீவேங்கடேசுவரா பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியம் மூலம் முழுவதும் (சு.எண்.10183); பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளால் கல்லூரியில் தொல்காப்பியம் மூலம் முழுவதும் (சு.எண்.57); திருவனந்தபுரம் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் தொல்காப்பிய மூலம் (சு.எண்.6368b); திருவாவடுதுறை ஆதீனத்தில் தொல்காப்பிய மூலம் (127B, 312 மற்றும் 313); மதுரை தமிழ்ச் சங்கத்தில் பொருளதிகார மூலம் (சு.எண்.121) போன்ற 16 தொல்காப்பியப் பொருளதிகார இயல்களுக்கான மூலச் சுவடிகள் இருக்கின்றன.

ஆ. உரைப்படிப் பதிப்புகள்

இளம்பூரணர் காலத்திற்குப் பிறகு எழுந்த பல பழைய உரையாசிரியர்களின் உரைகள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பெற்றுள்ளன.  அவற்றில் அழிந்தவை போக மீதமுள்ள ஓலைச்சுவடிகள் பல்வேறு நூலகங்களில், இல்லங்களில் பாதுகாத்து வருகின்றனர்.  தமிழ்ப் பல்கலைக்கழகம் 1991ஆம் ஆண்டு ஐந்து தொகுதிகளாக வெளியிட்ட அனைத்துலகத் தமிழ் ஒலைச்சுவடிகள் அட்டவணையின் அடிப்படையில் இன்று உரைப்படிகளாக இருக்கக் கூடிய தொல்காப்பியப் பொருளதிகார உரைப்படிகள் பின்வருமாறு:-

கொல்கத்தா தேசிய நூலகத்தில் தொல்காப்பியம் களவியல் நச்சினார்க்கினியர் உரை (சு.எண்.3178), செய்யுளியல் பேராசிரியம் (சு.எண்.3175), செய்யுளியல் மற்றும் மரபியல் பேராசிரியம் (சு.எண்.3032), அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் நச்சினார்க்கினியம் (சு.எண்.3046), பொருளதிகாரம் ஒரு பகுதி உரை (சு.எண்.3209 மற்றும் 3037); தஞ்சை சரஸ்வதிமகால் நூலகத்தில் தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம் (சு.எண்.622); தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையின் ஓலைச்சுவடிகள் நூலகத்தில் தொல்காப்பியப் பொருளதிகார மரபியல் இளம்பூரணம் (சு.எண்.610), தொல்காப்பியப் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம் (சு.எண்.2473); சென்னை மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதையர் நூலகத்தில் தொல்காப்பியம் சொல்லதிகாரம் மற்றும் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம் (சு.எண்.1), கற்பியல், பொருளியல் நச்சினார்க்கினியமும் மற்றும் மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் பேராசிரியமும் (சு.எண்.7), பொருளதிகாரம் அகத்திணையியல் முதல் பொருளியல் வரை நச்சினார்க்கினியம் (சு.எண்.9), பொருளதிகாரம் நச்சினார்க்கினியமும் (1-5 இயல்கள்), பேராசிரியமும் (6-9 இயல்கள்)  (சு.எண்.16), அகத்திணையியல் மற்றும் புறத்திணையியல் (சு.எண்.34), செய்யுளியல் இளம்பூரணம் (சு.எண்.43A), அகத்திணையியல் முதல் பொருளியல் வரையிலான நச்சினார்க்கினியமும், மெய்ப்பாட்டியல் பேராசிரியமும் (சு.எண்.53), அகத்திணையியல் மற்றும் புறத்திணையியல் நச்சினார்க்கினியமும் (சு.எண்.74), களவியல் நச்சினார்க்கினியம் (சு.எண்.75), களவியல் முதல் மெய்ப்பாட்டியல் 12ஆம் நூற்பா வரை இளம்பூரணம் (சு.எண்.103), அகத்திணையியல் முதல் கற்பியல் வரையிலான இளம்பூரணம் (சு.எண்.106), அகத்திணையியல் மற்றும் புறத்திணையியல் 16ஆம் நூற்பா வரையிலான இளம்பூரணம் (சு.எண்.106A),  புறத்திணையியல் நச்சினார்க்கினியம் (சு.எண்.120), செய்யுளியல் மற்றும் மரபியல் இளம்பூரணம் (சு.எண்.476), பொருளதிகார நச்சினார்க்கினியம்-1-5 இயல்கள் மற்றும் பேராசிரியம் - மெய்ப்பாட்டியல் மற்றும் உவமவியல் (சு.எண்.481), பொருளதிகார நச்சினார்க்கினியம்-1-5 இயல்கள் மற்றும் பேராசிரியம் - மெய்ப்பாட்டியல் (சு.எண்.502 மற்றும் 1054), செய்யுளியல் பேராசிரியம் (சு.எண்.575), அகத்திணையியல் மற்றும் புறத்திணையியல் இளம்பூரணமும் (சு.எண்.1066); சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகத்தில் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல் பேராசிரியம் (சு.எண்.44539), உவமவியல் பேராசிரியம் (சு.எண்.44540), செய்யுளியல் பேராசிரியம் (சு.எண்.44541), மரபியல் பேராசிரியம் (சு.எண்.44542); திருப்பதி ஸ்ரீவேங்கடேசுவரா பல்கலைக்கழகத்தில் பொருளதிகார நச்சினார்க்கினியம் (சு.எண்.10196); திருவாவடுதுறை ஆதீனத்தில் பொருளதிகார நச்சினார்க்கினியம் (சு.எண்.308), பொருளதிகார பேராசிரியம் (சு.எண்.308a); மதுரை தமிழ்ச் சங்கத்தில் பொருளதிகார நச்சினார்க்கினியம் (சு.எண்.156) போன்ற 36 பொருளதிகார இயல்களுக்கான உரைச்சுவடிகள் இருக்கின்றன. 

2. அச்சுநிலைப் பதிப்புகள்

தொல்காப்பியர் எழுதிய மூலத்தை குருவினாலும் பழைய உரையாசிரியர்களாலும் நிலைகொள்ளச் செய்யப்பெற்ற தொல்காப்பியத்தை முதன் முதலில் அச்சினால் காகிதத்தில் உருவேற்றி  பரவலாக்கச் செய்த பெருமை மழவை மகாலிங்கையரையே சாரும்.  இவர் 1847ஆம் ஆண்டு தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கியத்தைப் பதிப்பித்திருக்கின்றார்.  இது தொடங்கி தொல்காப்பியப் பதிப்புகள் அச்சில் வெளிவரத் தொடங்கியுள்ளன.  தொல்காப்பியப் பொருளதிகாரம் எஸ். சாமுவேல் பிள்ளை அவர்கள் 1858ஆம் ஆண்டு 'தொல்காப்பியம் - நன்னூல்' என்ற ஒப்புமைப் பதிப்பில் தொல்காப்பியப் பொருளதிகாரம் மூலம் முழுவதும் முதன் முதலில் அச்சில் வெளிவந்த சிறப்பைப் பெறுகிறது.  இது தொடங்கி அச்சுப் பதிப்புகள் பல்வேறு நிலைகளில் வெளிவந்திருக்கின்றன.

அ. மூலப் பதிப்புகள்

தொல்காப்பியம் மூலப் பதிப்பானது மூன்று அதிகாரங்கள் சேர்ந்தவையாகவும், தனித்தனி அதிகாரங்களாகவும் மூலப் பதிப்புகள் வெளியாகியுள்ளன.  

தொல்காப்பியப் பொருளதிகாரத்தைப் பொருத்தமட்டில் தனி அதிகாரப் பதிப்பாக1924ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கா. நமச்சிவாய முதலியார் அவர்கள் பண்டிதர் எதிராஜுலு நாயுடு உதவியுடன் சென்னை, காக்ஸ்டன் பிரஸ் வழியாக வெளியிட்டதே இதுவரை முதலும் இறுதியுமாகத் திகழ்கிறது.  இப்பதிப்பு முன்னுரை, பொருளடக்கத்தைத் தொடக்கத்தில் பெற்று இறுதியில் சூத்திர முதற்குறிப்பு அகராதியுடன் நிறைவுபெறுகிறது.  சூத்திரங்கள் நுதலிய பொருளைப் பதிப்பாசிரியர் அடைப்புக்¢குறிக்குள் தலைப்பாகத் தந்துள்ளார்.  இளம்பூரணர் கொண்ட பாடத்தைத் தழுவிய பதிப்பாகத் திகழ்கின்றது.  ஏனைய உரையாசிரியன்மார் கொண்ட பாடங்களைப் பாடவேறுபாடாக அடிக்குறிப்பில் காட்டப்பெற்றுள்ளது.  

தொல்காப்பியம் மூலம் மட்டும் முழுதுமான 1610 நூற்பாவுக்கும் தொடரெண் கொண்ட பதிப்பாக 1922ஆம் ஆண்டு பு. சிதம்பர புன்னைவனநாத முதலியார் அவர்கள் பி.நா. சிதம்பர முதலியார் அண்ட் கோ, சென்னை மூலமாக கையடக்கப் பதிப்பாக வெளியிடப்பெற்றுள்ளது.  திருவாளர் ம. சுந்தரபாண்டிய ஓதுவாரின் சிறப்புப் பாயிரமும், திரு. நாராயணையங்காரின் சிறப்புரையும், டி.சி. சீநிவாச அய்யங்காரின் ஆங்கில அறிமுகவுரையும் கொண்டு இப்பதிப்பு வெளியாகியுள்ளது.  சூத்திரக் கருத்து தக்க தலைப்புத் தந்ததோடு அடிக்குறிப்பில் பாடவேறுபாடுகள் சுட்டப்பெற்றுள்ளது.  

தி.சு. பாலசுந்தரம் பிள்ளை என்கின்ற இளவழகனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு சென்னை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1943ஆம் ஆண்டு தொல்காப்பியம் மூலம் முழுவதும் 1610 நூற்பாவுக்கும் தொடரெண் கொண்ட கையடக்கப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.  நூற்பாக்களை ஒருவகை எழுத்திலும், அடிக்குறிப்புகள் ஒவ்வொரு பக்கத்திலும் பிறிதொரு வகைச் சிறிய எழுத்திலும் வேறுபடுத்தி அச்சிடப்பெற்றுள்ளது.  அடிக்குறிப்பில் நூற்பா பாடவேறுபாடுகள், சொற்பொருள் விளக்கங்கள், இலக்கணக் குறிப்புகள் போன்றன இடம்பெற்றுள்ளன.  இதன் மறுபதிப்பு 1953ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

மர்ரே எஸ். இராஜம் அவர்களால் 1960ஆம் ஆண்டு ரூபாய் 1க்கு தொல்காப்பிய மூலம் வெளியிடப்பெற்றுள்ளது.  இதில் எழுத்து மற்றும் பொருளுக்கு இளம்பூரணர் முறைப்படியும், சொல்லுக்கு நச்சினார்க்கினியர் முறைப்படியும் நூற்பாவை அமைக்கப்பெற்றுள்ளது.  நூற்பாக்கள் சந்தி பிரித்து முறைப்படுத்தப்பட்டுள்ளது.  பொருள் செல் நெறிக்கு ஏற்றவாறு நிறுத்தற் குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளது.  இதன் பின்னிணைப்பில், அதிகாரங்களுள் இயல் பகுப்பும் நூற்பா அளவும், இளம்பூரணர் முதலியோர் ஒவ்வோர் இயலிலும் கொண்ட நூற்பா அளவு, இயல்களில் நூற்பாத் தொகை வேறுபாட்டின் விளக்கம், பாடவேறுபாடுகள், பொருள் அடைவு, நூற்பா முதற்குறிப்பகராதி (ஒவ்வோர் அதிகாரத்திற்குத் தனித்தனியாக இயல் எண், நூற்பா எண் கொடுக்கப்பட்டுள்ளது) போன்றன இடம்பெற்ற பதிப்பாகத் திகழ்கிறது.  இதன் இரண்டாம் பதிப்பு சூன் 1978ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சாந்தி சாதனா அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.  மாணவர் பதிப்பு ரூ.3,75க்கும், சாதா பதிப்பு ரூ.6.00க்கும், நூலகப் பதிப்பு ரூ.9.00க்கும் என இப்பதிப்பு மூன்று நிலைகளில் வெளிவந்துள்ளது.  இதன் மூன்றாம் பதிப்பை நிழற்படப் பதிப்பாக நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் 1981ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

கே.எம். வேங்கடராமையா, ச.வே. சுப்பிரமணியன் மற்றும் ப.வெ. நாகராசன் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 1996ஆம் ஆண்டு திருவனந்தபுரம், பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம் 'தொல்காப்பியம் மூலம் பாடவேறுபாடுகள் - ஆழ்நோக்காய்வு' எனும் நூலைப் பதிப்பித்திருக்கிறது.  1614 நூற்பாக்கள் கொண்டதாக இம்மூலப் பதிப்பு திகழ்கின்றது.  இப்பதிப்பில் மேற்கொண் முறைபற்றி பதிப்பாசிரியர் கே.எம். வேங்கடராமையா அவர்கள், "மிகப் பெரும்பாலும் இப்பதிப்பில் மிகப் பழமையான பதிப்புகளின் மூலபாடம் ஏற்கப் பெற்றுள்ளன.  அவற்றுள்ளும் எழுத்திற்கு இளம்பூரணர் பாடமும், சொல்லிற்குச் சேனாவரையர் பாடமும், பொருளிற்கு நச்சர், பேராசிரியர் பாடமும் ஓரளவு அதிகமாக ஏற்கப்பட்டுள்ளன.  எனினும் எந்த ஒரு பதிப்பையோ அல்லது சுவடியையோ அப்படியே அடிப்படையாகக் கொண்டு இங்கு நூற்பாக்கள் பெயர்த்தெழுதப் பெறவில்லை.

தொல். பதிப்புக்கள் பலவற்றோடும், டாக்டர் உ.வே.சா. நூலகத்தில் உள்ள பல சுவடிகளோடும் ஒப்பு நோக்கி, தொல்காப்பியப் பாடவேறுபாடுகள் என்ற கையெழுத்துப் பிரதியை முனைவர் ச.வே.சு. உருவாக்கினார்.  அக்கையெழுத்துப் படியின் அடிப்படையில் மீண்டும், ஒப்பு நோக்கி ஒவ்வொரு நூற்பாவிலும் கண்ட வேறுபாடுகட்கு நூற்பாவில் எண்கள் கொடுக்கப்பட்டன.  பிறகு அவ்வெண்ணின் கீழ் அவ்வேறுபாடு காணப்படும் இடம் சுட்டப்பெற்று சிறு குறிப்பும் தரப்பட்டுள்ளது.  ஆங்காங்கு இன்றியமையாத இடங்களில் தக்க அடிக்குறிப்புகள் தரப்பெற்றுள்ளன.

அண்மையில் தோன்றியுள்ள புதிய உரைகள், உரைவளப் பதிப்புகள் ஆகியவற்றில் காணப்படும் பாடபேதங்களும், அவை பற்றிய ஆய்வுரைகளும் உரிய இடங்களில் சேர்க்கப் பெற்றுள்ளன.  பயன்மிக்க பிற்சேர்க்கைகள் பலவும் இணைக்கப்பட்டுள்ளன" (தந்துரை, பக்.viii-ix) என்கின்றார்.  இப்பதிப்பின் பிற்சேர்க்கையாக தொல்காப்பியரையும் நூலையும் போற்றும் பழம் பாடல்கள், நூலின் அமைப்பைப் பற்றிய பழைய பாடல்கள், பழைய தொல்காப்பியப் பதிப்புகளில் இடம்பெற்றுள்ள சிறப்புப் பாயிரக்கவிகள்,  இப்பதிப்பிற்காகப் பார்க்கப்பெற்ற சென்னை டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் நூலகத்தின் தொல்காப்பியச் சுவடிகள்,  தொல்காப்பியப் பதிப்புகள், அனைத்துலக அளவில் இதுவரை அறியப் பெற்றுள்ள தொல்காப்பிய ஓலைச்சுவடிகள் பற்றிய விவரம், இதுவரை அறியப்பெற்றுள்ள தொல்காப்பியக் காகிதச் சுவடிகள் பற்றிய விவரம் போன்றனவும், இறுதியாக நூற்பா முதற்குறிப்பு அகர நிரலும் முறையே கொடுக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

ச.வே. சுப்பிரமணியம் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு சிதம்பரம், மெய்யப்பன் பதிப்பகம் 2007ஆம் ஆண்டு தமிழ் இலக்கண நூல்கள் மூலம் முழுவதும் - குறிப்பு விளக்கங்களுடன் வெளியிட்டுள்ளது.  இதில் தமிழில் உள்ள 49 இலக்கண நூல்களின் மூலம் இடம்பெற்றுள்ளது. இவற்றில் முதலாவதாக 1610 நூற்பாவுக்கும் தொடரெண் கொண்ட தொல்காப்பிய மூலம் அமைந்துள்ளது.  இதன் இறுதியில் நூற்பா முதற்குறிப்பகராதி இடம்பெற்றுள்ளது.

ஆ. உரைப் பதிப்புகள்

தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்புகள் மரபுரைப் பதிப்புகளாகவும், புத்துரைப் பதிப்புகளாகவும் வெளிவந்திருக்கின்றன.  

i. மரபுரைப் பதிப்புகள்

தொல்காப்பியம் முழுமைக்குமான மரபுரைப் பதிப்புகள் எதுவும் ஒரே தொகுதியாக இதுவரை வெளியாகவில்லை.  தொல்காப்பிய அதிகாரங்களைத் தனித்தனியே பிரித்து ஒவ்வொரு அதிகாரத்திற்கும் தனி மரபுரைப் பதிப்புகளும், ஒரு அதிகார இயல்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இயல்களை சேர்த்த மரபுரைப் பதிப்புகளும், தொல்காப்பியப் பொருளதிகார உரையாசிரியர் உரைக்கேற்ற மரபுரைப் பதிப்புகளும் வெளிவந்திருக்கின்றன.  ஏற்கெனவே குறிப்பிட்டது போல் தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினர்க்கினியர் ஆகியோரின் பழைய உரைகளே இதுவரை நமக்குக் கிடைத்துள்ளன.  இவற்றில் இளம்பூரணரின் பொருளதிகார உரை மட்டுமே முழுதும் கிடைத்துள்ள நிலையில் ஏனைய இருவரின் உரைகளில் முதல் ஐந்து இயல்கள் மற்றும் செய்யுளியளுக்கு நச்சினார்க்கினியரும், பின் நான்கு இயல்களுக்குப் பேராசிரியரும் கொண்ட உரைகளே கிடைத்துள்ளன.  இந்தவாறான உரை அமைப்புக்குத் தக்கபடியும் மரபுரைப் பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. 

இந்நிலையில், முதல் ஐந்து இயல்களுக்கு நச்சினார்க்கினியமும் பின் நான்கு இயல்களுக்குப் பேராசிரியமும் கொண்ட மரபுரைப் பதிப்பு வெளிவந்திருக்கின்றது.

இளம்பூரணர் உரைப் பதிப்புகள் பொருளதிகார உரை முழுதும், அகத்திணையியல் புறத்திணையியல் சேர்ந்த உரைப்பதிப்புகள், களவியல் கற்பியல் பொருளியல் சேர்ந்த உரைப்பதிப்புகள், மெய்ப்பாட்டியல் உவமவியல் செய்யுளியல் மரபியல் சேர்ந்த உரைப்பதிப்புகள், செய்யுளியல் உரைப்பதிப்பு போன்ற ஐந்து நிலைகளில் வெளிவந்திருக்கின்றன. 

பேராசிரியர் உரைப்பதிப்புகள் மெய்ப்பாட்டியல் உவமவியல் செய்யுளியல் மரபியல் சேர்ந்த உரைப்பதிப்பாக வெளிவந்திருக்கின்றன.  

நச்சினார்க்கினியர் உரைப்பதிப்புகள் அகத்திணையியல் புறத்திணையியல் களவியல் கற்பியல் பொருளியல் சேர்ந்த உரைப்பதிப்புகள், அகத்திணையியல் புறத்திணையியல் சேர்ந்த உரைப்பதிப்புகள், களவியல் கற்பியல் பொருளியல் சேர்ந்த உரைப்பதிப்புகள், செய்யுளியல் மட்டுமான பதிப்புகள் போன்ற நான்கு நிலைகளில் வெளிவந்திருக்கின்றன.  

இருவரின் மரபுரைப் பதிப்பு

சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் 1885(பார்த்திப ஆண்டு, ஆவணி மாதம்)ஆம் ஆண்டு சென்னை, வித்தியாநுபாலன யந்திரசாலையின் வழியாக "தொல்காப்பியம் - நச்சினார்க்கினியம் முற்றும்" என்று பதிப்பித்துள்ளார்.  தொல்காப்பிய மரபுரைப் பதிப்பில் இதுவே முதல் பதிப்பாகத் திகழ்கிறது.  தொல்காப்பியர் வரலாறு, தொல்காப்பிய வரலாறு, தொல்காப்பிய உரைகள் பற்றிய குறிப்பு, அந்நாளில் தொல்காப்பியக் கல்வி இருந்த நிலை, தமக்கு ஏடுகளை நல்கிய பெருமக்களைப் பற்றிய குறிப்பு, பாடங்களைத் தீர்மானிப்பதில் தாம் பட்ட இடர்ப்பாடு, நூலைப் பதிப்பிப்பதில் நேரும் பல சிக்கல்கள் முதலியவற்றைத் தம்முடைய பதிப்புரையில் சி.வை.தா. குறிப்பிட்டுள்ளார்.  சி.வை.தா. அவர்களின் கருத்துப்படி இப்பதிப்பு தொல்காப்பியப் பொருளதிகாரம் முழுமைக்கும் நச்சினார்க்கினியரின் உரை என்றே பதிப்பித்துள்ளார்.  ஆனால், பின்னாளில் ரா. ராகவையங்கார் அவர்கள் சி.வை.தா. அவர்கள் குறிப்பிடும் பின் நான்கு இயல்களின் உரைகள் நச்சினார்க்கினியருடையது அல்ல.  அவை பேராசிரியரின் உரைகள் என்று செந்தமிழ்¢ தொகுதி 1, பகுதி 1 மற்றும் செந்தமிழ் தொகுதி 2, பகுதி 11இல் தெளிவுபடுத்தியுள்ளார்.  அதற்குப் பிறகு இப்பதிப்பின் பின் நான்கு இயல்களின் உரைகளைப் பேராசிரியர் உரை என்றே பின்னோர் பதிப்பித்திருக்கின்றனர்.  ஆக, இருவர் மரபுரையும் ஒரே தொகுப்பாக வெளிவந்த பதிப்பாக இப்பதிப்பு திகழ்ந்தது எனலாம்.

இளம்பூரணரின் மரபுரைப் பதிப்புகள்
பொருளதிகாரப் பதிப்பு

1921இல் அகத்திணையியல், புறத்திணையியல் இளம்பூரணத்தையும், 1933இல் களவியல், கற்பியல், பொருளியல் இளம்பூரணத்தையும், 1935இல் மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் இளம்பூரணத்தையும் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் பதிப்பித்துள்ளார்.  இம்மூன்று பதிப்புகளையும் இணைத்த பொருளதிகார இளம்பூரணம் முழுதும் கொண்ட பதிப்பாக 1936ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார்.  அடிக்குறிப்பில் நூற்பா பாடவேறுபாடுகள், உரைவேறுபாடுகள், மேற்கோள் பாடல்களில் காணப்பெறும் பாடவேறுபாடுகள், தேவையான இடங்களில் சிறு விளக்கங்கள் போன்றவற்றைப் பெற்று இப்பதிப்பு வெளியாகியுள்ளது. பக்க எண்கள் மற்றும் நூற்பா எண்கள் தமிழ் வடிவில் தரப்பெற்றுள்ளன.  இப்பதிப்புரையில் 1933 மற்றும் 1935ஆம் ஆண்டுகளில் வெளிவந்த நூல்களுக்குப் பதிப்பாசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை என்பதை 1936ஆம் ஆண்டில் வெளிவந்த பதிப்பில் வ.உ.சி. அவர்களே குறிப்பிட்டுள்ளார்.

"முதலில் எழுத்ததிகாரத்தை ஒரு புத்தகமாகவும், பின்னர் பொருளதிகாரத்தின் அகத்திணையியலையும், புறத்திணையியலையும் ஒரு புத்தகமாகவும் அச்சிட்டு வெளிப்படுத்தினேன்.  அச்சமயம் யான் சென்னையை விட்டுக் கோயமுத்தூர் முதலிய வெளியூர்களுக்குச் சென்று அவ்வூர்களில் வசிக்க நேர்ந்தது.  அதனால் இளம்பூரணர் பொருளதிகாரத்தின் பிந்திய இயல்களை அச்சிட்டு முடிக்க இயலாமற் போய்விட்டது.

சில வருடங்களுக்குப் பின், தமிழ்த் தொன்னூல்களின் ஏட்டுப் பிரதிகளைப் பலவிடங்களில் தேடிப் பெற்றுப் பரிசோதித்துக் கொண்டு வருந் தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) ஆசிரியர் திரு.எஸ். வையாபுரிப் பிள்ளை (பி.ஏ.,பி.எல்.) அவர்களின் நட்பு எனக்குக் கிடைத்தது.  அவர்களிடம் இளம்பூரணப் பொருளதிகாரத்தின் பிந்திய இயல்களை அச்சிட இயலாமலிருக்கிற நிலைமையைத் தெரியப்படுத்தினேன்.  என் உண்மைத் தேசாபிமானத்தையும் பாஷாபிமானத்தையும் கண்டு, அவ்வியல்களை அச்சிடுதல் சம்பந்தமான ஆசிரியர் வேலைகளைத் தாமே செய்வதாகப் பிள்ளையவர்கள் வாக்களித்தார்கள்.

மேற்கூறிய இயல்களின் காயிதக் கையெழுத்துப் பிரதிகளையும், திரு.த. கனகசுந்தரம் பிள்ளையவர்களின் பொருளதிகார ஏட்டுப் பிரதியையும், திரு. வையாபுரிப் பிள்ளையவர்களுக்கு அனுப்பினேன்.  அவர்கள் காயிதப் பிரதிகளை ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கிக் காயிதப் பிரதியிற் கண்ட வழுக்கள் முதலியவற்றைக் களைந்தும், அச்சுத்தாள் (புரூவ்)களைச் சரிபார்த்துத் திருத்தியும், மேற்கோட் செய்யுள்களில் நூற்பெயர் முதலியவற்றைத் துலக்கியும், முதலில் களவியல், கற்பியல், பொருளியல் இம்மூன்றையும் அச்சிடுவித்து ஒரு புத்தகமாக்கித் தந்தார்கள்.  இப்போது ஏனைய இயல்களையும் புத்தக வடிவில் வெளிவரச்செய்தார்கள்.  இவ்வேழு இயல்களுக்கும் பெயரளவில் பதிப்பாசிரியன் யான்; உண்மையிற் பதிப்பாசிரியர் திரு. வையாபுரிப் பிள்ளையவர்களே" (மேற்கோள், தொல்காப்பியப் பதிப்புகள், மு. சண்முகம் பிள்ளை(கட்டுரை ஆசிரியர்), தமிழாய்வு, தொகுதி 8, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1978 என்பதிலிருந்து தெரிகிறது.  இளம்பூரணம் முழுமையும் வெளியான இப்பொருளதிகாரப் பதிப்பிற்கு வ.உ.சிதம்பரம் பிள்ளையும்¢ எஸ். வையாபுரிப் பிள்ளையும் என்று இப்பதிப்பின் முகப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்தும் புலனாகிறது.  இப்பதிப்பு பொருளதிகாரத்திற்கு இளம்பூரணம் முழுதும் வந்த முதல் பதிப்பாகத் திகழ்கிறது.

பொருளதிகார இளம்பூரணம் முழுதும் கொண்ட பதிப்பாக 1953ஆம் ஆண்டு சென்னை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது.  ஏற்கெனவே வெளிவந்த இளம்பூரணரின் பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இம்முழுமையான உரைப்பதிப்பினைக் கழகம் வெளியிட்டுள்ளது.  அடிக்குறிப்பாக நச்சினார்க்கினியர், பேராசிரியர் கொண்ட பாடங்களைப் பாடவேறுபாடுகளாகவும், உரைப்பாட வேறுபாடுகளாகவும் காட்டப்பெற்று,  மேற்கோள் பாடல்களுக்கும் பாடவேறுபாடுகள் காட்டப்பெற்றுள்ளன.  முக்கிய பெயர்களும் குறிப்புகளும் தடித்த எழுத்தில் அமைத்துத் தரப்பெற்றுள்ளது.  நூல், நூற்பா முதற்குறிப்பகராதி, மேற்கோள் செய்யுள் முதற்குறிப்பு அகர வரிசை போன்றன இடம்பெற்றுள்ளன.  இதன் மறுபதிப்புகள் 1956, 1961, 1967, 1969, 1974, 1977 மற்றும் 1986ஆம் ஆண்டுகளில் கழகம் வெளியிட்டுள்ளது.  

கோவை, சாதனா பதிப்பகத்தார் தொல்காப்பியப் பொருளதிகார இளம்பூரணத்தை 2000ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளனர்.

தொல்காப்பியப் பொருளதிகார இளம்பூரணத்தை 2005ஆம் ஆண்டு கௌமாரீஸ்வரி அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு சென்னை, சாரதா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்.

அகத்திணையியல் மற்றும் புறத்திணையியல் பதிப்புகள்

1920ஆம் ஆண்டு அகத்திணையியல் மற்றும் புறத்திணையியல் சேர்ந்த இளம்பூரணத்தை கா. நமச்சிவாய முதலியார் அவர்கள் சென்னை, காக்ஸ்டன் பிரஸ் மூலமாக பதிப்பித்துள்ளார்.  இப்பதிப்பில் பதிப்புரை, சூத்திர முதற்குறிப்பு, நூல் மேற்கோள் செய்யுள் முதற்குறிப்பு, மேற்கோள் நூல் முதற்குறிப்பு, பிழைதிருத்தம் போன்றன முறையே அமைந்துள்ளன.

1921ஆம் ஆண்டு அகத்திணையியல் மற்றும் புறத்திணையியல் சேர்ந்த இளம்பூரணத்தை வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் பதிப்பித்துள்ளார்.  அடிக்குறிப்பில் நூற்பா பாடவேறுபாடுகள், உரைவேறுபாடுகள், மேற்கோள் பாடல்களில் காணப்பெறும் பாடவேறுபாடுகள், தேவையான இடங்களில் சிறு விளக்கங்கள் போன்றவற்றைப் பெற்று இப்பதிப்பு வெளியாகியுள்ளது. பக்க எண்கள் மற்றும் நூற்பா எண்கள் தமிழ் வடிவில் தரப்பெற்றுள்ளன.

சென்னை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஏற்கெனவே வெளிவந்த பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு 1953ஆம் ஆண்டு பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல் இளம்பூரணத்தை வெளியிட்டுள்ளது.  பொருளடக்கம் மற்றும் பிழை திருத்தங்களுடன் இப்பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதன் மறுபதிப்புகளாக 1956, 1961, 1967, 1969, 1974, 1977, 1982, 1986, 2000ஆம் ஆண்டுகளில் வெளிவந்துள்ளது.

பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு சென்னை முல்லை நிலையத்தார் தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் மற்றும் புறத்திணையியல் இளம்பூரணத்தை 1995ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளனர்.  இதன் மறுபதிப்புகள் 1997, 1999 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் வெளிவந்துள்ளன.

அகத்திணையியல், புறத்திணையியல், களவியல் மற்றும் கற்பியல் பதிப்புகள்

தொல்காப்பியப் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல் சார்ந்த இளம்பூரணத்தை கோ. இளவழகன் அவர்களால் புலவர் இரா. இளங்குமரனின் வாழ்வியல் விளக்கத்துடனும், தி.வே. கோபாலையர் மற்றும் ந. அரணமுறுவர ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டும் சென்னை தமிழ்மண் பதிப்பகத்தின் வழி 2003ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

களவியல், கற்பியல் மற்றும் பொருளியல் பதிப்புகள்

1933ஆம் ஆண்டு களவியல், கற்பியல், பொருளியல் சேர்ந்த இளம்பூரணத்தை வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் சென்னை, வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்திருலு அண்ட் சன்ஸ் வாயிலாகப் பதிப்பித்துள்ளார்.  அடிக்குறிப்பில் நூற்பா பாடவேறுபாடுகள், உரைவேறுபாடுகள், மேற்கோள் பாடல்களில் காணப்பெறும் பாடவேறுபாடுகள், தேவையான இடங்களில் சிறு விளக்கங்கள் போன்றவற்றைப் பெற்று இப்பதிப்பு வெளியாகியுள்ளது. பக்க எண்கள் மற்றும் நூற்பா எண்கள் தமிழ் வடிவில் தரப்பெற்றுள்ளன.

சென்னை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஏற்கெனவே வெளிவந்த பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு களவியல், கற்பியல், பொருளியல் சேர்ந்த இளம்பூரணத்தை 1953ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. இதன் மறுபதிப்புகளாக 1956, 1961, 1967, 1969, 1974, 1977, 1982, 1986, 2000ஆம் ஆண்டுகளில் வெளிவந்துள்ளது.

பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு சென்னை முல்லை நிலையத்தார் தொல்காப்பியம் பொருளதிகாரம் களவியல், கற்பியல், பொருளியல் இளம்பூரணத்தை 1995ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளனர்.  இதன் மறுபதிப்புகள் 1997, 1999 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் வெளிவந்துள்ளன.

மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல் மற்றும் மரபியல் பதிப்புகள்

1935ஆம் ஆண்டு மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் சேர்ந்த இளம்பூரணத்தை வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் சென்னை, வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்திருலு அண்ட் சன்ஸ் வாயிலாகப் பதிப்பித்துள்ளார்.  அடிக்குறிப்பில் நூற்பா பாடவேறுபாடுகள், உரைவேறுபாடுகள், மேற்கோள் பாடல்களில் காணப்பெறும் பாடவேறுபாடுகள், தேவையான இடங்களில் சிறு விளக்கங்கள் போன்றவற்றைப் பெற்று இப்பதிப்பு வெளியாகியுள்ளது. பக்க எண்கள் மற்றும் நூற்பா எண்கள் தமிழ் வடிவில் தரப்பெற்றுள்ளன.

சென்னை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஏற்கெனவே வெளிவந்த பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் சேர்ந்த இளம்பூரணத்தை 1953ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. இதன் மறுபதிப்புகளாக 1956, 1961, 1967, 1969, 1974, 1977, 1982, 1986, 2001ஆம் ஆண்டுகளில் வெளிவந்துள்ளது.

பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு சென்னை முல்லை நிலையத்தார் தொல்காப்பியம் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் இளம்பூரணத்தை 1996ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளனர்.  இதன் மறுபதிப்புகள் 1997, 1999 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் வெளிவந்துள்ளன.  சூத்திர முதற்குறிப்பகராதி மூன்று பகுதிக்கும் (1-2 இயல்கள், 3-5 இயல்கள், 6-9 இயல்கள்) ஒன்றாகத் தரப்பட்டுள்ளது.  முதலில் பகுதி எண்ணும்,அடுத்து நூற்பா எண்ணும் தரப்பட்டுள்ளது.  இதேபோல் மேற்கோள் அகராதியும் அமைந்துள்ளது.

பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் பதிப்புகள்

தொல்காப்பியப் பொருளதிகாரம் பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் சார்ந்த இளம்பூரணத்தை கோ. இளவழகன் அவர்களால் புலவர் இரா. இளங்குமரனின் வாழ்வியல் விளக்கத்துடனும், தி.வே. கோபாலையர் மற்றும் ந. அரணமுறுவர ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டும் சென்னை தமிழ்மண் பதிப்பகத்தின் வழி 2003ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

செய்யுளியல் பதிப்பு

தொல்காப்பியப் பொருளதிகார செய்யுளியல் இளம்பூரணத்தை 1985ஆம் ஆண்டு அடிகளாசிரியர் அவர்கள் தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகம் வாயிலாகப் பதிப்பித்துள்ளார்.  இப்பதிப்பில் செய்யுளியலுக்குரிய இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவரின் உரைகளுடம் ஒப்பிடப்பெற்றுள்ளன.  தமிழில் செய்யுளிலக்கணங்களைக் கூறும் யாப்பருங்கல விருத்தியுரை, காரிகையுரை, வீரசோழியவுரை, நேமிநாத உரை, வெண்பாப்பாடியலுரை, இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், சிதம்பரப் பாட்டியலுரை, முத்துவீரியம் போன்ற நூல்களின் துணைகொண்டு பல செய்திகளைப் பதிப்பாசிரியர் அடிகளாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்.  பதிப்பாசிரியரின் தன் விளக்கத்தை எல்லா நூற்பாக்களிலும் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.  அடிக்குறிப்பில் நூற்பா பாடவேறுபாடுகள், உரைப் பாடவேறுபாடுகள் அமைத்து, பதிப்புரை, மேற்கோள் நூல் சுருக்க விளக்கம், நூல், நூற்பாச் சொல்லகராதி, உரைப் பொருளடைவு, மேற்கோளகராதி, நூற்பா முதற்குறிப்பகராதி போன்றன முறையே அமைத்துப் பதிப்பித்துள்ளார்.

நச்சினார்க்கினியரின் மரபுரைப் பதிப்புகள்
பொருளதிகார முதல் ஐந்து இயல் பதிப்புகள்

திரிசிரபுரம் எஸ். கனகசபாபதிப் பிள்ளை அவர்கள் தொல்காப்பியப் பொருளதிகார முதல் ஐந்து இயல்களின் நச்சினார்க்கினியத்தை சென்னை, சாது அச்சுக்கூடம் வாயிலாக 1934ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார்.  இப்பதிப்பில், ஓலைப் பிரதிகளுடன் பரிசோதித்துத் தெளிவுற உரை முதலியவற்றை அமைத்துக் கொடுத்தவர் எஸ். வையாபுரிப் பிள்ளை ஆவார்.  மன்னார்குடி இயற்றமிழாசிரியர் திரு.ம.நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்களின் அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளும் திருத்தங்களும் இப்பதிப்பில் இடம்பெற்றுள்ளன.

சி. கணேசையர் அவர்கள் சுன்னாகம், திருமகள் அழுத்தகம் வாயிலாக தொல்காப்பியப் பொருளதிகார முதல் ஐந்து இயல்களுக்கான நச்சினார்க்கினியத்தை  1948ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார்.  பதிப்பாசிரியர் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்பு நோக்கிய திருத்தங்களும், எழுதிய உரை விளக்கக் குறிப்புகளும் இப்பதிப்பில் இடம்பெற்றுள்ளன.  நூற்பா பாடவேறுபாடுகள், உரைப்பாடவேறுபாடுகள், உரை விளக்கக் குறிப்புகள், பொருத்தமான இளம்பூரணர் உரை போன்றன அடிக்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.  இப்பதிப்பில், முகவுரை, உரையாசிரியர் வரலாறு, சிறப்புப் பாயிரம், பிழைதிருத்தம், நூல், சூத்திர முதற்குறிப்பகராதி, உதாரண அகராதி, அரும்பத முதலியவற்றின் அகராதி போன்றன முறையே அமைக்கப்பெற்றுள்ளன.

சென்னை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பொருளதிகார முதலிரு இயல்களின் நச்சினார்க்கினியத்தை 1947ஆம் ஆண்டு வெளியிட்டதையும், 1950ஆம் ஆண்டு களவியல், கற்பியல், பொருளியல் நச்சினார்க்கினியம் வெளியிட்டதையும் இணைத்து 1966ஆம் ஆண்டு தொல்காப்பியம் பொருளதிகாரம் முதல் ஐந்து இயல்களை வெளியிட்டுள்ளது.  முன்னுரை, நூல், சூத்திர முதற்குறிப்பகராதி என்ற நிலையில் இப்பதிப்பு அமைந்துள்ளது.  நூற்பா 14 புள்ளி எழுத்திலும், உரை 12 புள்ளி எழுத்திலும், மேற்கோள் பாடல்கள் 10 புள்ளி எழுத்திலும் அச்சிடப்பெற்றுள்ளது.  அடிக்குறிப்பில் நூற்பா பாடவேறுபாடுகள், உரைப்பாட வேறுபாடுகள், மேற்கோள் பாடல்களின் பாடவேறுபாடுகள் போன்றன இடம்பெற்றுள்ளன. 

  இதன் மறுபதிப்புகள் 1967, 1968, 1969, 1970, 1976, 1977ஆம் ஆண்டுகளில் வெளிவந்துள்ளன.

தொல்காப்பியப் பொருளதிகாரப் முன் ஐந்து இயல்களுக்கான நச்சினார்க்கினியத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இரு தொகுதிகளாக 1986ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளது.  இப்பதிப்பில் கு. சுந்தரமூர்த்தி அவர்களின் விளக்கவுரை இடம்பெற்றுள்ளது.  இவ்விளக்க உரையானது ஒவ்வொரு நூற்பாவிற்கும் நச்சினார்க்கினியர் உரைக்கும் பின்பு அமைந்துள்ளது.  அடிக்குறிப்பில் பாடவேறுபாடுகள் சுட்டப்பெற்றுள்ளன.  இறுதியில் நூற்பா முதற்குறிப்பகராதி இடம்பெற்றுள்ளது.

அகத்திணையியல் மற்றும் புறத்திணையியல் பதிப்புகள்

பவானந்தம் பிள்ளை அவர்கள் 1916ஆம் ஆண்டு நச்சினார்க்கினியரின் உரையில் அகத்திணையியல் மற்றும் புறத்திணையியல் சேர்ந்த பதிப்பை சென்னை, மினர்வா அச்சுக்கூடத்தின் வழி பதிப்பித்துள்ளார்.  இப்பதிப்பில், முன்னுரை, பதிப்புரை ஏதுமின்றி நூற்பா பாடவேறுபாடுகள், உரைப்பாட வேறுபாடுகள், மேற்கோள் பாடல்கள் அனைத்திற்கும் பாடவேறுபாடுகள் காட்டியுள்ளார்.

சென்னை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பொருளதிகார முதலிரு இயல்களின் நச்சினார்க்கினியத்தை 1947ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.  முன்னுரை, நூல், சூத்திர முதற்குறிப்பகராதி என்ற நிலையில் இப்பதிப்பு அமைந்துள்ளது.  நூற்பா 14 புள்ளி எழுத்திலும், உரை 12 புள்ளி எழுத்திலும், மேற்கோள் பாடல்கள் 10 புள்ளி எழுத்திலும் அச்சிடப்பெற்றுள்ளது.  அடிக்குறிப்பில் நூற்பா பாடவேறுபாடுகள், உரைப்பாட வேறுபாடுகள், மேற்கோள் பாடல்களின் பாடவேறுபாடுகள் போன்றன இடம்பெற்றுள்ளன.  இப்பதிப்பின் மறுபதிப்புகள் 1955, 1963, 1966, 1970, 1975ஆம் ஆண்டுகளில் வெளிவந்துள்ளன.

தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் மற்றும் புறத்திணையியல் சார்ந்த நச்சினார்க்கினியத்தை கு. சுந்தரமூர்த்தி அவர்களின் விளக்கவுரையுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1986ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

தொல்காப்பியப் பொருளதிகாரம் அகத்திணையியல் மற்றும் புறத்திணையியல் சார்ந்த நச்சினார்க்கினியத்தை கோ. இளவழகன் அவர்களால் புலவர் இரா. இளங்குமரனின் வாழ்வியல் விளக்கத்துடனும், தி.வே. கோபாலையர் மற்றும் ந. அரணமுறுவர ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டும் சென்னை தமிழ்மண் பதிப்பகத்தின் வழி 2003ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

களவியல், கற்பியல் மற்றும் பொருளியல் பதிப்புகள்

பவானந்தம் பிள்ளை அவர்கள் 1916ஆம் ஆண்டு  நச்சினார்க்கினியரின் உரையில் களவியல், கற்பியல் மற்றும் பொருளியல் சேர்ந்த பதிப்பை சென்னை, லாங்க்மென்ஸ் கிரீன் அண்டு கம்பெனி வழி பதிப்பித்துள்ளார்.  இப்பதிப்பில், முன்னுரை, பதிப்புரை ஏதுமின்றி நூற்பா பாடவேறுபாடுகள், உரைப்பாட வேறுபாடுகள், மேற்கோள் பாடல்கள் அனைத்திற்கும் பாடவேறுபாடுகள் காட்டியுள்ளார்.

சென்னை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பொருளதிகாரக் களவியல், கற்பியல், பொருளியல் நச்சினார்க்கினியத்தை 1950ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.  பதிப்புரை, நூல், சூத்திர முதற்குறிப்பகராதி என்ற நிலையில் நூல் அமைந்துள்ளது.  அடிக்குறிப்பில் நூற்பா பாடவேறுபாடுகள், உரைப் பாடவேறுபாடுகள், மேற்கோள் பாடல்களின் பாடவேறுபாடுகள், இறையனார் களவியல் உரைப்பகுதிகள், சிறு விளக்கங்கள் போன்றன இடம்பெற்றுள்ளன.  இதன் மறுபதிப்புகள் 1958, 1966, 1969, 1972, 1977ஆம் ஆண்டுகளில் வெளிவந்துள்ளன.

தொல்காப்பியம் பொருளதிகாரம் களவியல், கற்பியல், பொருளியல் சார்ந்த நச்சினார்க்கினியத்தை கு. சுந்தரமூர்த்தி அவர்களின் விளக்கவுரையுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1986ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

தொல்காப்பியப் பொருளதிகாரம் களவியல், கற்பியல், பொருளியல் சார்ந்த நச்சினார்க்கினியத்தை கோ. இளவழகன் அவர்களால் புலவர் இரா. இளங்குமரனின் வாழ்வியல் விளக்கத்துடனும், தி.வே. கோபாலையர் மற்றும் ந. அரணமுறுவர ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டும் சென்னை தமிழ்மண் பதிப்பகத்தின் வழி 2003ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

களவியல் பதிப்பு

தொல்காப்பியம் களவியல் நச்சினார்க்கினியத்தை சென்னையில் உள்ள காந்தளகம் 2000ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

செய்யுளியல் பதிப்புகள்

ரா. ராகவையங்கார் அவர்கள் 1917ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடு 10ஆவதாக செய்யுளியல் நச்சினார்க்கினியத்தைப் பதிப்பித்துள்ளார்.  இப்பதிப்பே செய்யுளியலுக்கான நச்சினார்க்கினியர் உரையின் முதல் பதிப்பாகத் திகழ்கிறது.  இதில் நச்சினார்க்கினியர் உரையுடன் இளம்பூரணர் உரையும் அடிக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது.  மேலும், அடிக்குறிப்பில் பாடவேறுபாடுகள், மேற்கோள் விளக்கப் பாடல்களுக்குத் தேவையான இடங்களில் விளக்கமும், உரைப்பாட வேறுபாடுகளும் இடம்பெற்றுள்ளன.  நூலின் இறுதியில் நூற்பா முதற்குறிப்பகராதியும் பிழை திருத்தமும் அமைக்கப்பெற்றுள்ளது.  

தொல்காப்பியப் பொருளதிகார செய்யுளியல் நச்சினார்க்கினியத்தைச் சென்னை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1965ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.                    கு. சுந்தரமூர்த்தி அவர்களின் விளக்கவுரையுடன் இப்பதிப்பு அமைந்துள்ளது. ரா. ராகவையங்காரின் மறுபதிப்பாக இப்பதிப்பு வெளிவந்துள்ளது.  பதிப்புரை, ஆராய்ச்சி முன்னுரை, நூல், சூத்திர முதற்குறிப்பு அகரவரிசை, செய்யுளியல் விளக்கவுரை போன்றன முறையே அமைக்கப்பெற்றுள்ளன.  அடிக்குறிப்பில் பாடவேறுபாடுகள், மேற்கோள் இலக்கிய இடங்கள், மேற்கோள் இலக்கியப் பாடவேறுபாடுகள், மேற்கோள் முதற்குறிப்பாகத் தந்தவற்றின் முழுப்பாடல்கள் போன்றன இடம்பெற்றுள்ளன.

தொல்காப்பியப் பொருளதிகாரம் செய்யுளியல் நச்சினார்க்கினியத்தை கோ. இளவழகன் அவர்களால் புலவர் இரா. இளங்குமரனின் வாழ்வியல் விளக்கத்துடனும், தி.வே. கோபாலையர் மற்றும் ந. அரணமுறுவர ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டும் சென்னை தமிழ்மண் பதிப்பகத்தின் வழி 2003ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

பேராசிரியரின் மரபுரைப் பதிப்புகள்

பவானந்தம் பிள்ளை அவர்கள் 1917ஆம் ஆண்டு  பேராசிரியரின் உரையில் மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல் மற்றும் மரபியல் சேர்ந்த பதிப்பை சென்னை, லாங்க்மென்ஸ் கிரீன் அண்டு கம்பெனி வழி பதிப்பித்துள்ளார்.  இப்பதிப்பில், முன்னுரை, பதிப்புரை ஏதுமின்றி நூற்பா பாடவேறுபாடுகள், உரைப்பாட வேறுபாடுகள், மேற்கோள் பாடல்கள் அனைத்திற்கும் பாடவேறுபாடுகள் காட்டியுள்ளார்.

சென்னை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1951ஆம் ஆண்டு பொருளதிகார இறுதி நான்கு இயல்களுக்கான பேராசிரியத்தை வெளியிட்டுள்ளது.  இதன் மறுபதிப்புகள் 1959, 1966, 1969, 1972, 1975ஆம் ஆண்டுகளில் வெளிவந்துள்ளன.

திரிசிரபுரம் எஸ். கனகசபாபதி பிள்ளை அவர்கள் தொல்காப்பியப் பொருளதிகாரப் பின்நான்கு இயல்களின் பேராசிரியத்தை சென்னை, சாது அச்சுக்கூடம் வாயிலாக 1935ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார்.  இப்பகுதியை ஏட்டுப் பிரதியுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து, திருத்தம் செய்தவர் பி.எஸ். உயர்தரக் கலாசாலைத் தமிழாசிரியர் வே. துரைசாமி ஐயர் ஆவார்.  மன்னார்குடி இயற்றமிழாசிரியர் திரு.ம.நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்களின் அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளும், திருத்தங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

சி. கணேசையர் அவர்கள் சுன்னாகம், திருமகள் அழுத்தகம் வாயிலாக தொல்காப்பியப் பொருளதிகாரப் பின் நான்கு இயல்களுக்கான பேராசிரியத்தை 1943ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார்.  பதிப்பாசிரியர் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்பு நோக்கிய திருத்தங்களும், எழுதிய உரை விளக்கக் குறிப்புகளும் இப்பதிப்பில் இடம்பெற்றுள்ளன.  நூற்பா பாடவேறுபாடுகள், உரைப்பாடவேறுபாடுகள், உரை விளக்கக் குறிப்புகள், பொருத்தமான இளம்பூரணர் உரை போன்றன அடிக்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.  இப்பதிப்பில், முகவுரை, உரையாசிரியர் வரலாறு, சிறப்புப் பாயிரம், பிழைதிருத்தம், நூல், சூத்திர முதற்குறிப்பகராதி, உதாரண அகராதி, அரும்பத முதலியவற்றின் அகராதி போன்றன முறையே அமைக்கப்பெற்றுள்ளன.

தொல்காப்பியர் பொருளதிகாரப் பின் நான்கு இயல்களுக்கான பேராசிரியத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1985ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளது.  இப்பதிப்பில் கு. சுந்தரமூர்த்தி அவர்களின் விளக்கவுரை இடம்பெற்றுள்ளது.  இவ்விளக்க உரையானது ஒவ்வொரு நூற்பாவிற்கும் நச்சினார்க்கினியர் உரைக்கும் பின்பு அமைந்துள்ளது.  அடிக்குறிப்பில் பாடவேறுபாடுகள் சுட்டப்பெற்றுள்ளன.  இறுதியில் நூற்பா முதற்குறிப்பகராதி இடம்பெற்றுள்ளது.

மெய்ப்பாட்டியல் மற்றும் உவமவியல் பதிப்புகள்

தொல்காப்பியப் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல் மற்றும் உவமவியல் சார்ந்த பேராசிரியத்தை கோ. இளவழகன் அவர்களால் புலவர் இரா. இளங்குமரனின் வாழ்வியல் விளக்கத்துடனும், தி.வே. கோபாலையர் மற்றும் ந. அரணமுறுவர ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டும் சென்னை தமிழ்மண் பதிப்பகத்தின் வழி 2003ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

செய்யுளியல் மற்றும் மரபியல் பதிப்புகள்

தொல்காப்பியப் பொருளதிகாரம் செய்யுளியல் மற்றும் மரபியல் சார்ந்த பேராசிரியத்தை கோ. இளவழகன் அவர்களால் புலவர் இரா. இளங்குமரனின் வாழ்வியல் விளக்கத்துடனும், தி.வே. கோபாலையர் மற்றும் ந. அரணமுறுவர ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டும் சென்னை தமிழ்மண் பதிப்பகத்தின் வழி 2003ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

ii. ஆராய்ச்சிக்காண்டிகையுரைப் பதிப்புகள்

பல ஆண்டுகள் தஞ்சைக்கு அடுத்துள்ள கரந்தை  தமிழ்ப் புலவர் கல்லூரியில் தொல்காப்பியம் பயிற்றுவித்த அனுபவத்தினாலும், தாம் தெளிவாகத் தொல்காப்பியத்தைப் பயின்ற காரணத்தினாலும் எல்லா உரையாசிரியன்மாரின் கருத்துக்களும் உட்கொண்ட ஒரு புத்துரையாக காண்டிகையுரையை பாவலரேறு ச. பாலசுந்தரனார் தொல்காப்பியம் முழுமைக்கும் எழுதியுள்ளார்.  எழுத்ததிகாரம் ஆராய்ச்சிக் காண்டிகையுரையை 1988ஆம் ஆண்டும், சொல்லதிகாரம் ஆராய்ச்சிக்காண்டிகையுரையை 1988ஆம் ஆண்டும் தஞ்சை தாமரை வெளியீட்டகம் வழி வெளியிட்டுள்ளார்.  அதன் பிறகு பொருளதிகார இயல்களை மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.  இவர் பழைய உரையாசிரியன்மார் கொண்ட பாடங்களைப் பின்பற்றினாலும் சில இடங்களில் வேறுபடுகின்றார்.  இந்நூலுக்கு ஆராய்ச்சி முன்னுரை எழுதிய தி.வே. கோபாலையர் அவற்றில் பட்டியலிட்டுக் காட்டுகின்றார்.  அதாவது, எழுத்ததிகாரத்தில் 14 பாடவேறுபாடுகளையும், சொல்லதிகாரத்தில் எட்டு பாடவேறுபாடுகளையும், பொருளதிகாரத்தில் இரண்டு பாடவேறுபாடுகளையும் ஏற்படுத்தியிருப்பதைக் குறிப்பிடுகின்றார்.  

அகத்திணையியல், புறத்திணையியல் ஆராய்ச்சிக் காண்டிகையுரை

1989ஆம் ஆண்டு தொல்காப்பியப் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல் ஆராய்ச்சிக் காண்டிகையுரையை தஞ்சை தாமரை வெளியீட்டகம் வழி வெளியிட்டுள்ளார்.  இந்நூலுக்கான ஆய்வு முன்னுரையைத் தி.வே. கோபாலையர் எழுதியுள்ளார்.  இதில் பதிப்பாசிரியரின் தமிழ் உணர்வையும், உரைத் தெளிவையும் பல இடங்களில் பாராட்டியுள்ளார்.  குறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல் ஆராய்ச்சிக் காண்டிகையுரை

1989ஆம் ஆண்டு தொல்காப்பியப் பொருளதிகாரக் களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல் ஆராய்ச்சிக் காண்டிகையுரையை தஞ்சை தாமரை வெளியீட்டகம் வழி வெளியிட்டுள்ளார்.  இந்நூலுக்கான ஆராய்ச்சி முன்னுரையைத் தி.வே. கோபாலையர் எழுதியுள்ளார்.  இதில் பதிப்பாசிரியரின் தமிழ் உணர்வையும், உரைத் தெளிவையும் பல இடங்களில் பாராட்டியுள்ளார்.  குறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்யுளியல், மரபியல் ஆராய்ச்சிக் காண்டிகையுரை

1991ஆம் ஆண்டு தொல்காப்பியப் பொருளதிகாரச் செய்யுளியல், மரபியல் ஆராய்ச்சிக் காண்டிகையுரையை தஞ்சை தாமரை வெளியீட்டகம் வழி வெளியிட்டுள்ளது.

iii. புத்துரைப் பதிப்புகள்

தொல்காப்பியப் பழைய உரைகளின் கடினத்தை உணர்ந்த தமிழறிஞர்கள் மாணவர்களின் நலன் கருதியும், பொதுமக்களுக்கு எளிதாக புரிய வைக்கவேண்டும் என்ற எண்ணத்திலும் பலர் தொல்காப்பியத்திற்குப் புத்துரைகள் எழுதியிருக்கின்றனர்.  

தொல்காப்பியப் புத்துரைப் பதிப்புகள்

தொல்காப்பியம் முழுமைக்கும் புலியூர் கேசிகன் அவர்கள் எளிமையான தெளிவுரை ஒன்றை எழுதியுள்ளார்கள்.  இதனை சென்னை, அருணா பப்ளிகேஷன்ஸ் 1961ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.  இதன் மறுபதிப்புகளை சென்னை, பாரி நிலையம் 1964, 1967, 1970, 1975, 1980, 1986ஆம் ஆண்டுகளில் வெளியிட்டுள்ளது.  இது மக்கள் பதிப்பாகத் திகழ்கின்றது.

தொல்காப்பியம் முழுமைக்கும் சொ. சிங்காரவேலன் அவர்கள் எளிய உரை ஒன்றை எழுதியுள்ளார்.  இது ஒரே தொகுதியாக 1988ஆம் ஆண்டு மயிலாடுதுறையிலிருந்து வெளிவந்துள்ளது.  இதில் 1602 நூற்பாக்களுக்கும் தொடரெண் கொடுக்கப்பட்டுள்ளது.  ஈற்றில் நூற்பா முதற்குறிப்பகராதி நூல் முழுமைக்கும் பொருளதிகாரப் பதிப்பில் கொடுக்கப்பெற்றுள்ளது.  இப்பதிப்பை சென்னை, சைவ சிந்தாந்த நூற்பதிப்புக்கழகம் 1998ஆம் ஆண்டு எழுத்ததிகாரம் மற்றும் சொல்லதிகாரம் ஒரு தொகுதியாகவும், பொருளதிகாரத்தை ஒரு தொகுதியாகவும் என இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது.  இதன் மறுதிப்புகள் 2006ஆம் ஆண்டு வெளிவந்துள்ளன.  பொருளதிகாரப் பதிப்பின் ஈற்றில் நூல் முழுமைக்குமான நூற்பா முதற்குறிப்பகராதி கொடுக்கப்பெற்றுள்ளது.

எழுத்துப்படலம் மற்றும் சொல் படலம் ஆகியன ஒரு தொகுதியாகவும், பொருள் படலம் ஒரு தொகுதியாகவும் எனத் தொல்காப்பியம் முழுமைக்கும்  இரண்டு புத்துரைகளை 1994ஆம் ஆண்டு சென்னை, இராமலிங்கர் பணிமன்றம் வாயிலாக டாக்டர் நா. மகாலிங்கம் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.  இதன் ஆராய்ச்சியாளர்களாக மு. இராமலிங்கம் மற்றும் பகீரதன் ஆகியோர் இருந்திருக்கின்றனர்.  மூன்றாவதாக அமைந்த பொருள் படலத்தில் தொல்காப்பியரின் இயல் வைப்பு முறை முற்றிலும் மாற்றியிருக்கிறது.  அதாவது, அகத்திணையியலை ஐந்தாவது இயலாகவும், புறத்திணையியலை ஆறாவது இயலாகவும், களவியலை ஏழாவது இயலாகவும், கற்பியலை எட்டாவது இயலாகவும், பொருளியலை ஒன்பதாவது இயலாகவும், மெய்ப்பாட்டியலை முதலாவது இயலாகவும், உவமவியலை இரண்டாவது இயலாகவும், செய்யுளியலை நான்காவது இயலாகவும், மரபியலை மூன்றாவது இயலாகவும் மாற்றியமைக்கப்பெற்றுள்ளது.  மேலும், பொருளதிகார நூற்பாக்கள் தாறுமாறாக இடம் மாற்றப்பட்டும், திரிக்கப்பட்டும், சேர்க்கை பெற்றும், விடுகை பெற்றும் அமைக்கப்பட்டுள்ளது.  அறிஞர்கள் இடையே முற்றிலும் வரவேற்பைப் பெறாத ஒரு புத்துரைப் பதிப்பாக இது திகழ்கிறது.

தொல்காப்பியம் முழுமைக்கும் பேராசிரியர் ச.வே. சுப்பிரமணியம் அவர்களின் தெளிவுரையைக் கையடக்கப் பதிப்பாக சென்னை, மணிவாசகர் பதிப்பகம் 1998ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.  இதன் எட்டாம் பதிப்பு 2006ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.  இது, ஒரு பக்கத்தில் நூற்பாவும் அந்நூற்பாவுக்கு இணைப் பகுதியில் மறுபக்கத்தில் தெளிவுரையும் அமைத்து வெளிவந்த எளிமையான தெளிவுரைப் பதிப்பாகத் திகழ்கிறது.  நூற்பாப் பகுதியில் மூன்று அதிகாரங்களுக்கான தொடர் நூற்பா எண்ணும், தெளிவுரைப் பகுதியில் ஒவ்வொரு இயல் நூற்பா எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.  நூற்பா முதற்குறிப்பு அகராதியில் மூன்று அதிகாரங்களுக்கான நூற்பா எண் கொடுக்கப்பட்டுள்ளது.

தொல்காப்பியக் கொடுமுடியார் உரையை சென்னை, திருக்குறள் பதிப்பகம் எழுத்து மற்றும் சொல்லை ஒரு பகுதியாகவும், பொருளை ஒரு பகுதியாகவும் ஆக இரண்டு பகுதிகளாக 2001ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
தமிழண்ணல் அவர்களின் உரையை சென்னை, மணிவாசகர் பதிப்பகம் சொல்லதிகாரத்தை 2003ஆம் ஆண்டும், எழுத்ததிகாரத்தி 2005ஆம் ஆண்டும், பொருளதிகாரத்தை 2005ஆம் ஆண்டும் வெளியிட்டுள்ளது.

ஞா. மாணிக்கவாசகம் அவர்களின் தொல்காப்பியம் மூலமும் விளக்கவுரையும் என்ற புத்துரைப் பதிப்பை சென்னை, உமா பதிப்பகம் 2006ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

அகத்திணையியல் பதிப்பு

இளவழகனார் என்று அழைக்கப்படும் தி.சு. பாலசுந்தரம் பிள்ளை அவர்கள் பொருளதிகாரம் ஒவ்வொரு இயலுக்கும் ஒரு எளிமையான விளக்க நூலாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதத் தொடங்கி அகத்திணையியலை மட்டும் எழுதி முடித்திருப்பது தெரிகிறது.  இந்நூல், இன்ப ஒழுக்கம் அல்லது அகத்திணையியல் விளக்கம் என்ற பெயரில் செவ்வாய்ப்பேட்டை, தமிழ்நெறி விளக்கப் பதிப்பகத்தின் வழி 1938ஆம் ஆண்டு கையடக்கப் பதிப்பாக வெளியிட்டிருக்கின்றார்.  இது, அகத்திணையியல் நூற்பாக்கள், அகத்திணையியல் உரை, அகத்திணையியல் கருத்துகள், உயர்ந்த இன்ப வாழ்க்கை, அகத்திணையியலால் அறியப்படுகின்ற தமிழ்நாட்டுக் குறிப்புகளில் சில, அகத்திணையியல் அகராதி போன்ற நிலையில் அமைந்துள்ளது.  இறுதியில் அகத்திணையியலுக்குச் சொல்லகராதி தரப்பட்டுள்ளது.

நாவலர் சோமசுந்தர பாரதியார், பழைய உரைப்பகுதிகள் சிற்சில இடங்களில் தமிழ் இலக்கிய இலக்கண வழக்கிற்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் பொருத்தமற்ற வகையில் இருத்தலைக் கண்டு தமிழ் வழக்கத்திற்கு ஏற்ப ஓர் புத்துரை எழுத முற்பட்டுள்ளார்.  பல காலம் ஓதியும் ஓதுவித்தும் சிந்தித்துத் தெளிவுற்று அகத்திணையியலுக்கு ஒரு புத்துரை எழுதியுள்ளார். இப்புத்துரை 1942ஆம் ஆண்டு பசுமலையில் வெளியிடப்பெற்றுள்ளது.  பொதுநிலையில் கருத்து, பொருள், குறிப்பு என்ற நிலையில் சோமசுந்தரபாரதியார் விளக்கம் தந்திருக்கின்றார்.  மேலும், பழைய உரையாசிரியன்மார் கொண்ட மேற்கோள் பாடல்களை விடுத்து அவ்விடத்திற்கு உகந்த சங்க இலக்கியம் முதலானவற்றிலிருந்து தேர்ந்தெடுத்து மேற்கோள் பாடல்களாகத் தந்துள்ளார்.  இறுதியில் சூத்திர முதற்குறிப்பகராதியும், மேற்கோள் நூல்களின் அகராதியும் இடம்பெற்றுள்ளன.  இதற் மறுபதிப்பு 1964ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

புறத்திணையியல் புத்துரைப் பதிப்பு

நாவலர் சோமசுந்தர பாரதியார், பழைய உரைப்பகுதிகள் சிற்சில இடங்களில் தமிழ் இலக்கிய இலக்கண வழக்கிற்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் பொருத்தமற்ற வகையில் இருத்தலைக் கண்டு தமிழ் வழக்கத்திற்கு ஏற்ப ஓர் புத்துரை எழுத முற்பட்டுள்ளார்.  பல காலம் ஓதியும் ஓதுவித்தும் சிந்தித்துத் தெளிவுற்று புறத்திணையியலுக்கு ஒரு புத்துரை எழுதியுள்ளார். இப்புத்துரை 1942ஆம் ஆண்டு பசுமலையில் வெளியிடப்பெற்றுள்ளது.  பொதுநிலையில் கருத்து, பொருள், குறிப்பு என்ற நிலையில் சோமசுந்தரபாரதியார் விளக்கம் தந்திருக்கின்றார்.  மேலும், பழைய உரையாசிரியன்மார் கொண்ட மேற்கோள் பாடல்களை விடுத்து அவ்விடத்திற்கு உகந்த சங்க இலக்கியம் முதலானவற்றிலிருந்து தேர்ந்தெடுத்து மேற்கோள் பாடல்களாகத் தந்துள்ளார்.  இறுதியில் சூத்திர முதற்குறிப்பகராதியும், மேற்கோள் நூல்களின் அகராதியும் இடம்பெற்றுள்ளன.  இதற் மறுபதிப்பு 1964ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

மெய்ப்பாட்டியல் புத்துரைப் பதிப்பு

நாவலர் சோமசுந்தர பாரதியார், பழைய உரைப்பகுதிகள் சிற்சில இடங்களில் தமிழ் இலக்கிய இலக்கண வழக்கிற்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் பொருத்தமற்ற வகையில் இருத்தலைக் கண்டு தமிழ் வழக்கத்திற்கு ஏற்ப ஓர் புத்துரை எழுத முற்பட்டுள்ளார்.  பல காலம் ஓதியும் ஓதுவித்தும் சிந்தித்துத் தெளிவுற்று அகத்திணையியலுக்கு ஒரு புத்துரை எழுதியுள்ளார். இப்புத்துரை 1942ஆம் ஆண்டு பசுமலையில் வெளியிடப்பெற்றுள்ளது.  பொதுநிலையில் கருத்து, பொருள், குறிப்பு என்ற நிலையில் சோமசுந்தரபாரதியார் விளக்கம் தந்திருக்கின்றார்.  மேலும், பழைய உரையாசிரியன்மார் கொண்ட மேற்கோள் பாடல்களை விடுத்து அவ்விடத்திற்கு உகந்த சங்க இலக்கியம் முதலானவற்றிலிருந்து தேர்ந்தெடுத்து மேற்கோள் பாடல்களாகத் தந்துள்ளார்.  இறுதியில் சூத்திர முதற்குறிப்பகராதியும், மேற்கோள் நூல்களின் அகராதியும் இடம்பெற்றுள்ளன.  இதன் மறுபதிப்பு 1964ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

பொருளதிகார முதல் ஆறு இயல்களுக்கான புத்துரைப் பதிப்பு

புலியூர் கேசிகனைப் போன்றே புலவர் குழந்தை அவர்களும் தொல்காப்பியம் பொருளதிகாரம் முதல் ஆறு இயல்களுக்கான உரையை எழுதியுள்ளார்.  இக் குழந்தையுரையை ஈரோடு, வேலா பதிப்பகம் 1968ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.  இவர் உரையின் தன்மை பற்றி மு. சண்முகம் பிள்ளை அவர்கள், "தொல்காப்பிய நூற்பாக்களின் வைப்புமுறையையும் இவர் மாற்றியமைத்துள்ளார்.  'பொருளியல்' என்னும் பழைய தலைப்பை விடுத்து, 'பொதுவியல்' எனப் புதியதோர் இயல் வகுத்து, அதனை அகத்திணையியலை அடுத்து இரண்டாவதாக அமைத்துள்ளார்.  எவ்வெவ் வகையில் நூற்பாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன என்னும் விவரமும் தந்துள்ளார்.

"இடம் மாறியும் மிகச் சேய்மை நிலையிலும் உள்ள சூத்திரங்களையெல்லாம் அவை இருக்க வேண்டிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.  களவு கற்பியல்களின் வழுவமைக்கும் பொருளியல் சூத்திரங்கள் அவ்வவ்வியல்களில் ஆங்காங்கே சேர்க்கப்பட்டுள்ளன.  மரபியலில் உள்ள நாற்பான் மரபுச் சூத்திரங்கள் முதலியவற்றை 1. நாற்பான் மரபு, 2. கூற்று, 3. கேட்போர், 4. வாயில்கள், 5. கூறுதல், 6. வழுவமைதி, 7. வழக்கு, 8. முறைப்பெயர் என்னும் தலைப்புக்களிற் சேர்த்து, பொதுவியல் என்னும் பெயரில் அவ்வியலை அகத்திணையியலை அடுத்து வைக்கப்பட்டுள்ளது" என்று இயல்களையும் நூற்பாக்களையும் தாம் கருதிய புதுநோக்கில் அமைத்து இவர் உரை காண்கிறார்.  மூல பாடங்களிலும் சிற்சில இடங்களில் மாறுதல் செய்துள்ளார்.  பழைய மரபு வழிக் கருத்திற்கு மாறுபட்டு இக்காலச் சமூக அறிவியல் நோக்கிற்கேற்பப் புதுக்கருத்துக்களையும் அங்கங்கே புகுத்தியுள்ளார்.  எனவே, இவருடைய உரையைப் புரட்சிப் புத்துரை என்று கூறுதல் பொருத்தமாகும்" ('தொல்காப்பியப் பதிப்புகள்', தமிழாய்வு, தொகுதி 8, பக்.50-51) என்று கூறுவதால் இப்பதிப்பின் தன்மை வெளிப்படுகிறது.

செய்யுளியல் புத்துரைப் பதிப்பு

தொல்காப்பியப் பொருளதிகாரச் செய்யுளியலை அடிப்படையாகக் கொண்டு யாப்பு, பாட்டியல் தொடர்பான செய்திகளைக் கூறும் 27 மரபிலக்கண நூல்களின் நூற்பாக்களைத் தொகுத்து வகைப்படுத்திய பேராசிரியர் ச.வே. சுப்பிரமணியம் அவர்கள் இதனை இலக்கணத்தொகையில் 'தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல்' என்ற பகுதியில் அமைத்து சென்னை, தமிழ்ப் பதிப்பகம் வழி 1978ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

தொல்காப்பியப் பொருளதிகாரச் செய்யுளியலில் எழுத்து, அசை, சீர், ஓசை, தளை, அடி, தொடை எனும் ஏழு உறுப்புகள் தொடர்பான 60 நூற்பாக்களைத் தொகுத்து ஆபிரகாம் அருளப்பன் அவர்கள் புத்துரை ஒன்றைத் தந்துள்ளார்.  இப்புத்துரை தொல்காப்பிய யாப்பு - பொருளதிகாரம் - உறுப்பியல் உரையுடன் என்று 1968ஆம் ஆண்டு பாளையங்கோட்டை அருள் அச்சகம் வெளியிட்டுள்¢ளது.  இதில் பொருள் தெளிவு பெறவும், ஒப்புமைக்காகவும் யாப்பருங்கல விருத்தியினை அடியொற்றிப் பல்காயம், நற்றத்தம், சங்க யாப்பு முதலியவற்றிலிருந்தும், காக்கைப்பாடினியம், சிறுகாக்கைப்பாடினியம் முதலியவற்றினின்றும் மேற்கோள் காட்டப்பெற்றுள்ளது.  பழைய உரையாசிரியர்களான இளம்பூரணர் மற்றும் பேராசிரியர் உரைகளைத் தேவைக்கேற்ப அங்கங்கே பயன்படுத்தப்பெற்றுள்ளது.  
இ. ஒப்பியல் பதிப்புகள்

மர்ரே பதிப்பின் அடிச்சுவடிட்டில் உருவாகி வெளிவந்ததாக க.ப. அறவாணன் மற்றும் தாயம்மாள் அறவாணன் அவர்கள் சென்னை, பாரி நிலையம் வழியாக 1975ஆம் ஆண்டு வெளியிட்ட தொல்காப்பியக் களஞ்சியம் திகழ்கின்றது.  இப்பதிப்பு முழுமையும் இளம்பூரணர் கொண்ட எண் வரிசையே நூற்பாக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.  ஒவ்வோர் அதிகாரத்திற்கும் இளம்பூரணர் கொண்ட எண் வரிசை நூற்பாத் தொடக்கத்திலும், இயல் முறை எண் வரிசை நூற்பா இறுதியிலும் தரப்பெற்றுள்ளன.  அடிக்குறிப்பில் தொல்காப்பியத்திற்கு ஒத்த கருத்துடைய இலக்கண நூற் சூத்திரங்கள் இடம்பெற்றுள்ளன.  குறிப்பாக, அவிநயம், இறையனார் களவியல், வீரசோழியம், நேமிநாதம், நன்னூல் போன்ற 19 இலக்கண நூல்களில் தொல்காப்பியரோடு ஒத்த கருத்துக்கள் அடிக்குறிப்பில் ஒப்பிட்டுக் காட்டப்பெற்றுள்ளன.  இயன்ற இடங்களில் இணையான சமஸ்கிருத நூல் சான்றுகளும் சுட்டப்பெற்றுள்ளன.  நூலின் இறுதியில் 'தொல்காப்பிய - நன்னூல் ஒப்பியல்' என்னும் ஒரு பகுதியும் இணைக்கப்பெற்றுள்ளது.  இந்நூலின் பிற்சேர்க்கையாக தொல்காப்பியப் பாடவேறுபாடு, நூற்பா அளவு, மூன்றதிகாரத்திற்கும் ஒருசேர அமைந்த நூற்பா முதற்குறிப்பகராதி போன்றன அமைக்கப்பெற்றுள்ளன.

ஈ. மொழிபெயர்ப்புப் பதிப்புகள்

தொல்காப்பியப் பொருளதிகாரம் முழுமைக்கும் மலையாளத்தில் தொல்காப்பியம் முழுமைக்கும் மொழிபெயர்ப்புப் பதிப்பு வெளியாகியுள்ளது.  ஆனால், ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு இதுவரை முழுமையாக வெளிவந்ததாகத் தெரியவில்லை.  முதல் ஐந்து இயல்களுக்கு மட்டுமே ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு வெளிவந்துள்ளது.  

தொல்காப்பியம் முழுதும்

தொல்காப்பியம் முழுவதையும் மா. இளையபெருமாள் மற்றும் எஸ்.ஜி. சுப்பிரமணிய பிள்ளை ஆகிய இருவரும் இணைந்து 1961ஆம் ஆண்டு மலையாள மொழியில் மொழிபெயர்த்து உரைக்குறிப்புடன் வெளியிட்டிருக்கின்றனர்.  இதனைத் தொடர்ந்து எழுத்தச்சன் என்பார் தொல்காப்பியத்தை மலையாளத்தில் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாகிய Annals of the Oriental Research என்ற ஆய்விதழில் 1960 முதல் 1966 வரை மொழிபெயர்த்துள்ளதாகத் தெரிகிறது.  இதே இதழில் மாரியப்ப பட் என்பவர் தொல்காப்பியத்தைக் கன்னடத்தில் 1963ஆம் ஆண்டு மொழிபெயர்த்துள்ளதாகத் தெரிகிறது என்று ச.வே. சுப்பிரமணியம் அவர்கள் தன்னுடைய தொல்காப்பியப் பதிப்புகள் என்னும் நூலில் (பக்.34-35) குறிப்பிடுகின்றார்.

அகத்திணையியல் 

ஆர். வாசுதேவ சர்மா அவர்கள் அகத்திணையியலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1933ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

வீ.ப.கா. சுந்தரனார் அவர்களின் அறிமுக உரையுடன் நிர்மல் செல்வமணி அவர்கள் தொல்காப்பிய அகத்திணையியலை நாகர்கோயில் சோபிதம் பதிப்பகத்தின் வழி 1989ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.  இவர் ஒரு ஆங்கிலப் பேராசிரியர்.  தொல்காப்பியத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் பயனாக இம்மொழிபெயர்ப்பைச் செய்துள்ளதாகத் தெரிகிறது.  இந்நூல் ஆங்கில மொழிபெயர்ப்பும் தமிழ் மூலமுமாக அமைந்துள்ளது.  அடிக்குறிப்பில் ஆங்காங்கே தேவையான விளக்கங்கள் அமைக்கப்பெற்றுள்ளன.

அகத்திணையியல் மற்றும் களவியல்

ஈ.எஸ். வரதராஜ ஐயர் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்புடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அகத்திணையியல் மற்றும் களவியல் - தொகுதி 1 பதிப்பை 1948ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.  நூற்பா, தமிழில் சிறு விளக்கம், ஆங்கிலத்தில் விளக்கங்கள் போன்றன முறையே அமைக்கப்பெற்றுள்ளன.  மேற்கோள் பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பெற்றுள்ளது.  இறுதியில் சூத்திர முதற்குறிப்பகராதியும், Tolkappiyam Porul - Words and Subject Index  என ஆங்கிலத்திலும் தரப்பெற்றுள்ளன.  இதன் இரண்டாம் பதிப்பு 1987ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

கற்பியல் மற்றும் பொருளியல்

ஈ.எஸ். வரதராஜ ஐயர் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்புடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கற்பியல் மற்றும் பொருளியல் - தொகுதி 2 பதிப்பை 1948ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.  நூற்பா, எழுத்துப் பெயர்ப்பு, தமிழில் சிறு விளக்கம், ஆங்கிலத்தில் விளக்கங்கள் போன்றன முறையே அமைக்கப்பெற்றுள்ளன.  மேற்கோள் பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பெற்றுள்ளது.  இறுதியில் சூத்திர முதற்குறிப்பகராதியும், Tolkappiyam Porul - Words and Subject Index  என ஆங்கிலத்திலும் தரப்பெற்றுள்ளன.  இதன் இரண்டாம் பதிப்பு 1987ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

உ. எழுத்துப்பெயர்ப்புப் பதிப்புகள்

பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் அவர்களின் எழுத்துப் பெயர்ப்பை சென்னை, குப்புசாமி சாஸ்திரி ரிசர்ச் இன்ஸ்டிடுயூட்டானது தொல்காப்பியம் முழுவதையும் (எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் மூன்று பகுதிகள்) என வெளியிட்டுள்ளது.  எழுத்ததிகாரத்தை 1930ஆம் ஆண்டும், சொல்லதிகாரத்தை 1945ஆம் ஆண்டும், பொருளதிகாரத்தில் அகத்திணையியல் மற்றும் புறத்திணையியலை 1949ஆம் ஆண்டும், களவியல், கற்பியல் மற்றும் பொருளியலை 1952ஆம் ஆண்டும், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல் மற்றும் மரபியலை 1956ஆம் ஆண்டும் வெளியிட்டுள்ளது.

இப்பதிப்பில் தமிழில் நூற்பாக்கள் தரப்பெற்று, அதனைத் தொடர்ந்து எழுத்துப் பெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, கருத்துச் சுருக்கம், விளக்கம் என்ற நிலையில் அமைந்திருக்கின்றன.  அடிக்குறிப்பில் பாடவேறுபாடுகள், பழைய உரையாசிரியர்களான இளம்பூரணர், நச்சினார்க்கினியர் போன்றோரின் உரைகளையும் இணைத்துக் காட்டப்¢பெற்றுள்ளன.  சில இடங்களில் சமஸ்கிருதத்தோடு ஒப்புமைப்படுத்தப்பெற்ற பகுதிகளையும் இப்பதிப்பில் காணமுடிகிறது.

ஊ. மொழிபெயர்ப்பும் எழுத்துப்பெயர்ப்பும் கொண்ட பதிப்பு
அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல்

ஈ.எஸ். வரதராஜ ஐயர் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்புடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1948ஆம் ஆண்டு வெளியிட்ட இரண்டு பகுதிகளையும் இணைத்து அகத்திணையியல், களவியல், கற்பியல் மற்றும் பொருளியல் பதிப்பை 1995ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.  1948ஆம் ஆண்டு வெளியிட்ட அகத்திணையியல் மற்றும் கற்பியல் பதிப்பில் நூற்பாவுக்கு எழுத்துப் பெயர்ப்பு இல்லை. அப்பதிப்பை அப்படியே இந்நூலின் தொடக்கத்தில் கொடுக்கப்பெற்றுள்ளது.  அடுத்து அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் ஆகிய நான்கு இயல்களுக்கும் நூற்பா, நூற்பா எழுத்துப் பெயர்ப்பு, தமிழில் சிறு விளக்கம், ஆங்கிலத்தில் விளக்கங்கள் போன்றன முறையே அமைக்கப்பெற்றுள்ளன.  மேற்கோள் பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுக்கப்பெற்றுள்ளது. 

இந்நூலின் பொருளடக்கமானது Social Life of the Tamil, Agttinai Iyal, The Administration, Customs and Beliefs-kalaviyal, Agattinai Iyal, Kalaviyal, Karpiyal, Poruliyal, சூத்திர முதற்குறிப்பகராதி, உதாரணச் செய்யுள் முதற்குறிப்பகராதி என்றவாறு அமைந்துள்ளது.  

எ. உரைவளப் பதிப்புகள்
அகத்திணையியல் உரைவளப் பதிப்புகள்

தொல்காப்பியப் பொருளதிகார உரைவளப் பதிப்பில் முதலாவதாக வெளிவந்தது மு. அருணாசலம் பிள்ளை மற்றும் மு. முத்துச்சாமிப்பிள்ளை ஆகியோர் தொகுத்த அகத்திணையியல் உரைவளப் பதிப்பே ஆகும்.  இதனை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மு. முத்துச்சண்முகம் பிள்ளை மற்றும் த.வே. வீராசாமி ஆகியோர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 1975ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.  இப்பதிப்பில் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சோமசுந்தர பாரதியாரின் புத்துரை, மு. அருணாசலம் பிள்ளை அவர்களின் ஆய்வுரை ஆயன இடம்பெற்றுள்ளன.  மேலும், தொல்காப்பிய நூற்பா முதற்குறிப்பு விளக்கம், உரைவளமும் ஆய்வு¬யும், உ¬மேற்கோள் வரிசை, பிழைதிருத்தம் ஆகியன முறையே அமைக்கப்பெற்றுள்ளன.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து தொல்காப்பிய உரைவளப் பதிப்பை வெளியிட்ட பெருமை சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தையே சாரும்.  இந்நிறுவனத்தின் வழி 1991ஆம் ஆண்டு ஆ. சிவலிங்கனாரைக் கொண்டு அகத்திணையியல் உரைவளப் பதிப்பை வெளியிட்டுள்ளது.  இப்பதிப்பில், நூற்பா, ஆங்கில மொழிபெயர்ப்பு, ஒத்த பிறநூற் செய்திகள், மரபுரைகள், புத்துரைகள், உரைவளப் பதிப்பாசிரியர் கருத்துகள் போன்றன கொடுக்கப்பெற்றுள்ளன.  தேவையான இடங்களில் அடிக்குறிப்பில் விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளன.  முன்பகுதியில் பொருட் சுருக்கம் இடம்பெற்றுள்ளது.  பின்னிணைப்பாக, சுருக்க விளக்கம், பிழை திருத்தம், பயன்பெற்ற நூல்கள், நூற்பா முதற்குறிப்பகராதி, சொற்றொடர் அகராதி முதலியன இடம்பெற்றுள்ளன.

இதேபோல் ஏனைய இயல்களுக்கான உரைவளப் பதிப்புகளை மேற்கூறிய இரு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.  அவை பின்வருமாறு:

புறத்திணையியல் உரைவளப் பதிப்புகள்

  1. க. வெள்ளைவாரணனார், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1983
  2. ஆ. சிவலிங்கனார், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1996
  3. களவியல் உரைவளப் பதிப்புகள்
  4. க. வெள்ளைவாரணனார், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1983
  5. ஆ. சிவலிங்கனார், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1994
  6. கற்பியல் உரைவளப் பதிப்புகள்
  7. க. வெள்ளைவாரணனார், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1983
  8. ஆ. சிவலிங்கனார், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1993
  9. பொருளியல் உரைவளப் பதிப்புகள்
  10. க. வெள்ளைவாரணனார், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1983
  11. ஆ. சிவலிங்கனார், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1994
  12. மெய்ப்பாட்டியல் உரைவளப் பதிப்பு
  13. க. வெள்ளைவாரணனார், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1986
  14. உவமவியல் உரைவளப் பதிப்பு
  15. க. வெள்ளைவாரணனார், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1985
  16. செய்யுளியல் உரைவளப் பதிப்புகள்
  17. க. வெள்ளைவாரணனார், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1989
  18. ஆ. சிவலிங்கனார், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1997
  19. மரபியல் உரைவளப் பதிப்புகள்
  20. க. வெள்ளைவாரணனார், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1984
  21. கு. பகவதி, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1981.


ஏ. பிறநிலைப் பதிப்புகள்

தொல்காப்பியத்தின் சிறப்பினையும் வளத்தினையும் எடுத்துரைப்பதாக மு. இராமலிங்கனார் என்று அழைக்கப்படும் வடலூரனாரின் தொல்காப்பிய வளம் (தொல்காப்பிய மூலம்) அமைந்துள்ளது.  இந்நூல் திருச்சியிலிருந்து 1969ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.  எழுத்துப்படலம், சொற்படலம், பொருள் படலம் என மூன்று படலங்களாக இந்நூல் அமைந்துள்ளது.  இந்நூலில் தொல்காப்பிய மூலம் முழுமையும் தரப்பெற்றுள்ளது.  பொருள் படலத்தில் முதலில் நூற்பா எண்ணும், இறுதியில் தொடர்ச்சியாக அடி எண்களும் குறிக்கப்பட்டுள்ளது.  எல்லா இயல்களிலும் இறுதியில் 'நூல் விளக்கம்' என்னும் பகுதி அமைக்கப்பெற்றுள்ளது.  நூலின் இறுதியில் 'தொல்காப்பிய வளம்' என்னும் தலைப்பில் பல்வேறு ஆய்வுக் கருத்துகள் கொண்ட பகுதி அமைக்கப்பெற்றுள்ளது.  இடையிடையே ஆங்கிலத்திலும் தொல்காப்பிய விளக்கம் தரப்பெற்றுள்ள ஒரு பதிப்பாகத் திகழ்கிறது.

நிறைவுரை

தொல்காப்பியப் பதிப்புகளில் எழுத்ததிகாரத்திற்கும் சொல்லதிகாரத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பு பொருளதிகாரத்திற்கு உண்டு.  எழுத்ததிகாரப் பதிப்புகளும் சொல்லதிகாரப் பதிப்புகளும் இணைந்தோ தனித்தனியாகவோ இயல்கள் சேர்ந்த பதிப்புகளாகவே இருக்கின்றன.  ஆனால், பொருளதிகாரப் பதிப்புகளை உற்று நோக்கும் போது பொருளதிகார இயல்கள் இணைந்த பதிப்புகளாகவோ, இயல்கள் பிரிந்த பதிப்புகளாகவோ, ஒன்றுக்கும் மேற்பட்ட இயல்கள் இணைந்த பதிப்புகளாகவோ இருப்பதைக் காணமுடிகிறது.  மேலும், ஓலைச்சுவடிப் பதிப்புகள் (மூலப்படிப் பதிப்புகள், உரைப்படிப் பதிப்புகள்), அச்சுநிலைப் பதிப்புகள் (மூலப் பதிப்புகள், உரைப் பதிப்புகள் - மரபுரைப் பதிப்புகள், ஆராய்ச்சிக்காண்டிகையுரைப் பதிப்புகள், புத்துரைப் பதிப்புகள்), ஒப்பியல் பதிப்புகள், மொழிபெயர்ப்புப் பதிப்புகள், எழுத்துப்பெயர்ப்புப் பதிப்புகள், மொழிபெயர்ப்பும் எழுத்துப்பெயர்ப்பும் கொண்ட பதிப்பு, உரைவளப் பதிப்புகள், பிறநிலைப் பதிப்புகள் போன்று தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்புகள் வளர்ந்த நிலையைப் பார்க்கும் போது மக்கள் மத்தியில் தொல்காப்பியத்தின் இருப்பிடம் தௌ¢ளத் தெரிகிறது.


துணை நூல்கள்

  1. அனைத்துலகத் தமிழ் ஒலைச்சுவடிகள் அட்டவணை 1-5 தொகுதிகள், கா.செ. செல்லமுத்து, ப.வெ. நாகராசன் மற்றும் த. பத்மநாபன் (பதி.), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1991.
  2. 'தொல்காப்பியப் பதிப்புகள்', மு. சண்முகம் பிள்ளை, தமிழாய்வு தொகுதி 8, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1978,
  3. தொல்காப்பியப் பதிப்புகள், முனைவர் ச.வே. சுப்பிரமணியன், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1992.
  4. தொல்காப்பிய மூலம் பாடவேறுபாடுகள் - ஆழ்நோக்காய்வு, கே.எம். வேங்கடராமையா, ச.வே. சுப்பிரமணியன் மற்றும் ப.வெ. நாகராசன் (பதி.), பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம், திருவனந்தபுரம், 1996.

குறிப்பு: 
கட்டுரைப் பகுதிக்குள் தொல்காப்பியப் பதிப்புகள் விவரம் முழுமையாகத் தரப்பட்டுள்ளதால் துணைநூற்பட்டியல் விரிவஞ்சி விடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக