வெள்ளி, 2 நவம்பர், 2018

தொடக்கக்கால இதழியலும் சட்டங்களும்

இதழின் தொடக்கக் காலம் முதல் 19ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவில் நிலவிய இதழியலும் அதற்கான சட்டங்களும் குறித்து இக்கட்டுரை ஆராய்கின்றது.  தொன்றுதொட்டே  நம்மிடம் இதழியல் அனுபவம் தோன்றி இருக்கின்றது எனலாம்.  கூட்டுக் குடும்பமாக மனிதர்கள் வாழ்ந்த காலத்திலிருந்தே தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள பல்வேறு வகையான உத்திகளைக் கையாண்டுள்ளனர்.  அதாவது, மனிதன் தன்னுணர்ச்சியின் உந்துதலால் உணர்ச்சியொலியாலும், போலியொலியாலும், குறிப்பொலியாலும், சீழ்க்கை யொலியாலும் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்கச் செய்தான்.  மேலும், பறையறைவித்தும், மணியடித்தும், புகையெழுப்பியும், தீ அம்புகளை வானத்தில் எறிந்தும் ஓரிடத்தில் நடப்பதை சுற்றுவட்டாரத்து மக்களுக்கு அறிவிக்கச் செய்தான்.  இப்படியாக ஆதிமனிதனின் இதழியல் உத்தி இருந்ததை அறிகின்றோம்.

மொழியை உருவாக்கிய மனிதன், அம்மொழியை நிலைநிறுத்த வரிவடித்தைக் கண்டுபிடித்தான்.  இவ்வரிவடிவத்தைக் கொண்டு பல செய்திகளைக் கல்வெட்டாகவும், செப்பேடாகவும், ஓலைச்சுவடியாகவும் உருவாக்கத் தலைப்பட்டான்.  இதற்காக எழுதுபொருள்களையும் எழுதப்படு பொருள்களையும் கண்டுபிடித்தான்.  எழுது பொருள்களாகக் கோரைப்புல், களிமண், மூங்கில் பத்தை, பட்டுத்துணி, மரப்பட்டை, பனையோலை, கல், செப்புத்தகடு, தங்கத்தகடு, வௌ¢ளித்தகடு, தோல் போன்றவற்றையும்; எழுதப்படு பொருள்களாகத் தடித்த கூர்மையான நாணல் குச்சி, செடிகொடிகளின் இலைச் சாறு, மிருகத்தின் குருதி, கூர்மையான இரும்புக் கருவி, தங்க ஊசி, வௌ¢ளி ஊசி, செம்பூசி, தூரிகை, உளி போன்றவற்றையும் கண்டுபிடித்திருக்கின்றான்.

இதழியலின் தந்தை

"ரோம் நாட்டை ஆண்ட ஜீலியஸ் சீசர் கி.மு.60இல் அரண்மனைச் செய்திகளை 'ஆக்டா டைர்னா' (Acta Diurna - அன்றாட நடவடிக்கை)  என்ற பெயரில் எழுதி பொது இடங்களில் வைத்தார்.  அவர் போரிட்டுக் கொண்டிருந்த பொழுது, போர்ச் செய்திகளைத் தலைநகருக்கு அனுப்பிவைத்தார். இதனால் சீசரை 'இதழியலின் தந்தை' என்று அழைக்கின்றனர்.  ஆனால், சிலர் சீசருக்கு முன்பே கி.மு.106இல் சிசரோ பிறப்பு-இறப்பு விவரங்களை எழுதித் தனது அரண்மனைக்கு முன்னால் பலரும் பார்க்க அறிவித்தாரென்றும், ஆதலால் அவரையே இதழியலின் முன்னோடியாகக் கருத வேண்டுமென்றும்"(இதழியல் கலை, மேற்கோள், பக்.40-41)  குறிப்பிடுவர்.  கி.பி.3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அசோகர் கல்வெட்டுக்களில் தம் ஆணைகளையும் அறிவுரைகளையும், புத்தரின் கொள்கைகளையும் பொறித்திருக்கின்றார்.  எனவே இவற்றினைப் பார்க்கும் போது "இந்திய மாமன்னர் அசோகர் தான் இதழியலின் தந்தை" (இதழியல்,ப.x) என்று பேராசிரியர் சூ. இன்னாசி அவர்கள் குறிப்பிடுகின்றார்.  இவர்களின் கூற்றுகளைப் பார்க்கும் போது உலக இதழியலின் தந்தையாக சிசரோவையும், இந்திய இதழியலின் தந்தையாக மாமன்னர் அசோகரையும் குறிப்பிடலாம்.

இதழியலின் தோற்றுவாய்  

கி.பி.105இல் மல்பெரி மரப்பட்டையிலிருந்து சாய்லன் என்ற சீனாக்காரர் முதன் முதலாக காகிதம் செய்வதைக் கண்டுபிடித்தார்.  உலக மக்கள் காகிதம் செய்யும் கலையைக் கற்றுச் சென்றனர்.  கி.பி.1041இல் பிசெங் என்ற சீனாக்காரர் களிமண்ணில் எழுத்துக்களைச் செய்து சுட்டு, தகடு சுத்தி, கடினப்படுத்தி, அச்சிடும் முறையைக் கண்டுபிடித்தார்.  அதன் பின்பு அச்சுக் கலையில் ஒரு புரட்சி ஏற்பட்டது எனலாம்.  கி.பி.1450இல் ஜான் கூடன்பர்க் என்ற ஜெர்மானியர் முதன் முதலில் அச்சுப்பொறியினைக் கண்டுபிடித்தார். காகிதமும் அச்சுப்பொறியும் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு தாள்களின் வழியேயான இதழியலின் வளர்ச்சி தொடங்குகின்றது எனலாம்.  இந்தியாவில் கி.பி.1556இல் அச்சுக்கலையின் தோற்றம் பெற்றிருந்தாலும இதழியலின் தொடக்கம் சற்று தாமதமாகத்தான் தோன்றியிருக்கின்றது.  ஏனெனில் இதற்கு ஆங்கிலேயரின் அடக்குமுறை ஆட்சியும் தங்கள் மதத்தை மட்டும் பரப்பவேண்டும் என்ற அவாவும் மேலோங்கி நின்றதுமே இதற்குக் காரணம் எனலாம்.

கி.பி.1768இல் வில்லியம் போல்ட்ஸ் என்னும் ஆங்கிலேயர் செய்தி இதழ் ஒன்றைத் தொடங்குவதற்கு விருப்பம் கொண்டு, கல்கத்தா நகரின் ஓரிடத்தில் "பொது மக்களுக்குக் கல்கத்தா நகரின் செய்திகள் இல்லாதது வணிகத்திற்கும் சமுதாயத்திற்கும் பெரிய இழப்பாகும்.  ஒவ்வொரு இந்தியனுக்கும் அது இன்றியமையாதது.  அச்சுத்தொழில் அறிந்தவர்கள், அச்சகத்தை நடத்துபவர்கள் ஆகியோருக்கு நான் ஊக்கமளிக்கத் தயாராக இருக்கிறேன்" (தமிழ் இதழியல்,ப.25) என்று தட்டி ஒன்றில் எழுதி வைத்தாராம்.  இதனைக் கண்ட ஆங்கில அரசு வில்லியம் போல்ட்ஸ்சை நாடு கடத்தியிருக்கின்றது. கி.பி.1780வரை இந்தியாவி லிருந்த ஐரோப்பியர்கள் இங்கிலாந்தி லிருந்து கப்பல் மூலம் வந்துசேரும் இதழ்களையே நம்பியிருந்தனர்.  இவ் இதழ்கள் இங்கிலாந்தில் வெளியாகி ஒன்பது முதல் பன்னிரண்டு மாத இடைவெளிக்குப் பிறகே இந்தியா வர நேர்ந்தது.  இக்குறையினைப் போக்கும் விதத்தில் ஜேம்ஸ் அகஸ்டஸ் உறிக்கி என்பவர் கி.பி.1780இல் கல்கத்தாவில் 'பெங்கால் கெசட்டி' என்னும் மாத இதழைத் தொடங்கினார்.  இவ்விதழ் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.

தொடக்க கால இதழின் போக்கு

பெங்கால் கெசட்டி ஆங்கில அரசு அதிகாரிகளின் முறையற்ற செய்திகளைக் கண்டித்து எழுதியது.  குறிப்பாக, இந்தியத் தலைமை ஆளுநர் வாரன்கேஸ்டிங், இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி எலிஜா இம்பே ஆகியோரைத் தாக்கி எழுதியது.  இதன் காரணமாக இப்பத்திரிகை ஆட்சியாளரின் எதிர்ப்புக்கு உள்ளானது.  இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பெங்கால் கெசட்டில் வெளிவந்த செய்திகளை ஆதாரமாகக் கொண்டு அவ்வரசைச் சாடினர்.  இதனால் ஜேம்ஸ் அகஸ்டஸ் உறிக்கிக்கு இந்தியாவில் இருந்த ஆங்கில அரசு அதிகாரிகள் பல தொல்லைகளைக் கொடுக்கத் தொடங்கினர்.  இந்தியாவில் முதல் இதழ் ஆசிரியரே வழக்கு மன்றம், அடிதடி, அச்சுறுத்தல், சிறைச்சாலை, தண்டம், நாடுகடத்தல் ஆகிய கொடுமைகளை எல்லாம் சந்திக்க நேர்ந்தது.

ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டஸ் உறிக்கி அவர்கள் அச்சகம் நடத்துவதற்காகவும் இதழ் வெளியிடுவதற்காகவும் காப்பீட்டுத் தொகையாக ரூபாய் எட்டாயிரத்தை ஆங்கில அரசுக்குச் செலுத்தியிருக்கின்றார்.  ஆங்கில அரசு அதிகாரிகளைப் பழித்து எழுதியமைக்காக ரூ.500 அபராதமும் நான்கு மாத சிறைத் தண்டனையும் பெற்றிருக்கின்றார்.  சிறைக்குச் சென்றபோதும் உறிக்கி அவர்கள் பெங்கால் கெசட்டைத் தம் போக்கிலேயே வெளியிட்டார்.  இதனால் மீண்டும் அவருக்கு ஆங்கில அரசு ரூ.5000 அபராதத் தொகை விதித்தது.  அப்படியும் அவர் தம் போக்கிலிருந்து மாறாததால் கி.பி.1782இல் பெங்கால் கெசட் இதழின் அச்சுப்பொறிகளும் எழுத்துக்களும் பறிமுதல் செய்யப்பெற்று அச்சகம் மூடப்பெற்று முத்திரை வைக்கப்பெற்றிருக்கின்றது.

உறிக்கியின் இதழ் ஆங்கில அரசு அதிகாரிகளின் குறைகளையே சுட்டிக் காட்டியது என்று குற்றம் சாட்டப்பெற்றது.  என்றாலும், அவருக்குப் பின் தொடங்கிய ஆங்கிலேயர்களின் இதழ்களும் உறிக்கியின் போக்கினையே கடைபிடித்தன.  கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவாகத்தினர் மற்றும் அதிகாரிகளின் உல்லாச வாழ்க்கையினையும், அவர்களுடைய ஒரு சார்பு போக்கினையும், தங்களைச் சார்ந்து இல்லாதவர்கள் மீது அவர்கள் விடுத்த கொடுமைக் கணைகளையும் வெறுத்த கம்பெனிப் பணியாளர்கள் தங்கள் மனக்குமுறலை வெளிக்காட்ட இதழ்களைப் பயன்படுத்திக் கொண்டனர். என்றாலும் உறிக்கிக்கு ஏற்பட்ட கொடுமை தங்களுக்கு நேரா வண்ணம் பார்த்துக்கொண்டனர்.

இதழ்களின் போக்கும் சட்டங்களும்

கி.பி.1812இல் கிறித்துவத் தமிழரால் சென்னையில் 'மாசத்தினச் சரிதை' என்னும் இதழ் நடத்தப்பெற்றிருக்கின்றது.  ஒரு மாதத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கால முறைப்படி செய்து மாத முடிவில் தினசரிச் செய்தியாக இவ்விதழ் வெளியிட்டது.  இவ்விதழ் வெளியிட்ட அச்சுக்கூடத்தின் மூலம்தான் கி.பி.1812இல் 'திருக்குறள் மூலமும் நாலடியார் மூலமும்' என்னும் முதல் சுவடிப் பதிப்பு நூல் வெளிவந்திருக்கின்றது.  இவ்விதழின் இதழ்ப் பகுதிகள் எதுவும் இன்று கிடைக்கவில்லை என்றாலும் இதழ் இருந்தமைக்கான சான்று நமக்குக் கிடைத்திருக்கின்றது எனலாம்.

இந்நிலையில் கி.பி.1818இல் வில்லியம் பட்டர்வொர்த் பெய்லியின் 'தணிக்கைச் சட்டம்' நடைமுறைக்கு வந்தது.  "அரசாங்கத்தில் நடைமுறைச் செயல்களுக்குத் தடையாகும் வகையில் வெளியிடப்படும் செய்திகளைத் தடுப்பதும், பொதுமக்களிடையில் அரசாங்கத்தைப் பற்றிய தவறான கருத்துகளைப் பரவச் செய்யும் வகையில் வெளியிடப்படும் செய்திப் பகுதிகளைத் தடுப்பதும், சமய உணர்வு காரணமாக எவர்க்குள்ளும் வேறுபாடுகள் வளர்ந்துவிடக் கூடாது என்று கருத்தாகப் பார்த்துக் கொள்வதும், இந்திய மக்களின் உணர்வுகள் பாதிக்காத வகையில் இயங்கச் செய்வதும், எங்கும் அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதுமே தணிக்கை முறையின் கடமைகளாக இருந்தன.  இம்முறையில் இதழாசிரியர்கள் பொதுவான தங்கள் பகுதிவாழ் மக்களின் பிரச்சனைகள் பற்றி விவாதிப்பதற்கும் சிந்திப்பதற்கும் தடைசெய்யப்படவில்லை" (மேற்கோள், இந்திய இதழ்கள், ப.162).

இச்சட்டத்தை முழுமையாக உணர்ந்து கொண்ட இந்தியர்கள் சமுதாய சீர்திருத்தம், சமய மறுமலர்ச்சி போன்ற சிந்தனையில் ஈடுபட்டு எழுதலாயினர். இதனால் ஆங்கிலேயர் மனங்கோணாததைக் கண்டவர்கள் ஆங்கிலேயரைத் தாக்காமல் தங்கள் மதத்தைப் பற்றியும் சமயத்தைப் பற்றியும் பரப்புவதற்கு இதழ்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.  சிலர், ஆங்கிலக் கல்வியைப் பெறுவதிலும் ஆங்கில ஆட்சியியல் பற்றி அறிவதிலும் ஆர்வம் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் ஆங்கிலேயரை அரவணைத்து இதழ்களை நடத்திச் சென்றிருக்கின்றனர்.  இன்னும் சிலரிடம் நம்மை ஏன் அவர்கள் ஆளவேண்டும், எங்கிருந்தோ வந்தவர்கள் நம்மைத் தாழ்த்துவதா, காலங்காலமாய் நம்முடைய சமயமாக இருந்துவரும் இந்து சமயத்தையும் அதன் நோக்கங்களையும் அறிவுரைகளையும் வந்தவர்கள் பழிப்பதா என்பன போன்ற எண்ணங்கள் மக்களிடையே உருவாயின.  அக்கால இதழ்கள் இக்கருத்துக்களை மக்களிடையே எடுத்துச் சென்றன.  வெளியாரின் உறவு நீக்கமே நம்மைக் காக்கும் என்னும் கருத்தினை அவை மக்களிடையே படிப்படியாக ஊட்டின.  ஆங்கிலேயரை வெளியேற்றிவிட வேண்டும் என்னும் உணர்வின் எல்லைக்கு அவை செல்லவில்லை என்றாலும் தங்களுக்கிடையே உரிமைவேண்டும், தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ள வகை காணவேண்டும் என்று மக்களைத் தூண்டின.  இந்நிலையில்,

  1823  பிரெஞ்சு இந்திய அரசு நிர்வாக ஆவணம், புதுவை
1829  சுஜநரஞ்சனி, பெங்களூர்
1831  தமிழ் மேகசின், சென்னை
1832  புனித ஜார்ஜ் கெசட்டு, சென்னை
1833  இராசவிருத்தி போதினி, சென்னை
1835  மெட்ராஸ் கிரானிகல், சென்னை
1835  சத்திய தூதன், சென்னை
1835  மதராசு செர்னல் ஆப் லிட்டரேச்சர் அண்டு சயின்சு, சென்னை
1838  புதுவை நடுநிலை, புதுவை
1838  இந்திய ஞாயிறு, புதுவை
1838  விருத்தாந்தி, சென்னை
1840  பால தீபிகை, நாகர்கோவில்
1840  பொதுஜன பிரசாரணி, சென்னை
1841  ஜன சிநேகன், சென்னை
1842  சுவிசேச பிரபல விளக்கம், நாகர்கோவில்
1842  வர்த்தமான தரங்கிணி, சென்னை
1842  அரோரா, சென்னை
1847  திராவிட தீபிகை, சென்னை
1847  நற்போதகம், திருநெல்வேலி
1848  பாலியர் நேசன், பாளையங்கோட்டை
1849  நற்போதகம், திருநெல்வேலி
1849  சிறுபிள்ளையின் நேசத்தோழன், பாளையங்கோட்டை
1849  தரங்கை நேசன், சென்னை
1850  உதய நட்சத்திரம், சென்னை
1854  கிறிஸ்து மார்க்க விளக்கம், மதுரை
1855  தினவர்த்தமானி, சென்னை
1856  அரசிதழ்கள் (சென்னை, தென்னார்க்காடு, தஞ்சாவூர், திருச்சி, 
              மதுரை, சேலம், திருநெல்வேலி, கோவை ஆகிய மாவட்டங்கள்)
1856  விவேக விலாசம்,
1856  சத்திய துவஜம்
போன்ற இதழ்கள் வெளிவந்திருக்கின்றன. இவற்றில் பெரும்பான்மையான இதழ்கள் ஆங்கிலேயரைச் சாடாமல் தான் உண்டு தன் சமயம் உண்டு என்று செல்வதையும், ஆங்கிலேயரின் கூற்றுக்கு மறுப்பு கூறாமல் அவர்களின் கருத்துக்களை அரவணைத்துச் செல்வதையும் தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தன.  இவ் இதழ்களுக்கிடையே சில இதழ்கள் ஆங்கிலேயரை நாட்டைவிட்டு வெளியேற்றிவிட வேண்டும் என்ற ஆதங்கத்தோடும் வெளிவந்திருக்கின்றன.  இக்கால கட்டத்தில் வெளிவந்த இதழ்களின் நோக்கங்களைக் கண்ட ஆங்கில அரசு கி.பி.1857ஆம் ஆண்டு 'வாய்ப்பூட்டுச் சட்டம்' ஒன்றைக் கொண்டுவந்தது.  

இச்சட்டத்தின்படி, "நேராகவோ, மறைபொருளாகவோ, குறிப்பாகவோ, உட்கருத்தாலோ வேறு எந்த விதத்தாலோ சில செயல்களை எழுப்பக்கூடிய எதையும் வெளியிடலாகாது."  அதாவது, இந்தியர்கள் எவரும் இதழ்களை உரிமையோடு நடத்தமுடியாத சூழ்நிலை உருவாகிவிட்டது.  ஆகவே, இந்தியர்களால் அரசியல் இதழ்களை நடத்தமுடியவில்லை.  இருப்பினும், சிலர் இலக்கியம்-சமயம்-சமூகம் ஆகிய கெடுபிடியற்ற துறைகளில் தங்கள் எண்ணங்களைச் செலுத்தி இதழ்களை நடத்தத் தொடங்கினர்.  இந்நிலையில்,

1860  அமிழ்த வசனி, திருச்சிராப்பள்ளி
1860  விவேக சிந்தாமணி, சென்னை
1860  கதா மஞ்சரி, சென்னை
1861  தேசோபகாரி, நெய்யூர்-குமரி மாவட்டம்
1861  சத்திய தீபம், சென்னை
1861  ஜனோபகாரப் பத்திரிகை, கள்ளிக்கோட்டை
1864  தத்துவ போதினி, சென்னை
1865  விவேக விளக்கம், சென்னை
1866  கலாவர்த்தினி, சென்னை
1867  சித்தாந்த ரத்னாகரம், சென்னை
1867  சன்மார்க்க விவேக விருத்தி, வடலூர்
1867  தேசாபிமானி, சென்னை

போன்ற இதழ்கள் வெளிவந்திருக்கின்றன.  கி.பி.1864ஆம் ஆண்டு வெளிவந்த தத்துவபோதினி இதழின் நோக்கம் குறித்து 7.5.1864ஆம் இதழ்ப் பகுதியில் "நாம் நம்முடைய மதம் முழுமையும் கூண்டோடு கைலாசத்துக்குச் செலுத்த அன்னிய மதத்தார் பலவாறாய் முயற்சி செய்யும் இக்காலத்தில் நம்முடைய மதத்தை நிலை நிறுத்துவதற்காக என்னதான் செய்யலாகாது.

நம்முடைய மதத்தில் ஓரெழுத்துந் தெரியாது, தெளிவாய் அச்சிடப்பட்ட கிறிஸ்து மத புஸ்தகங்களைக் கண்டும் பாதிரிகளுடைய ஆதாரமற்ற தூஷணைகளைக் கேட்டுமல்லவோ நம்முடைய சிறுவர்கள் மதிமயங்கிப் போகிறார்கள்.

இச்சமயத்தில் நாம் அசிரத்தையாயிருப்பது நியாயமா, தர்மமா, கடவுளுக்குத்தான் இஷ்டமா?

வேதார்த்தங்களை வெளிப்படுத்துவதற்கு இன்னும் பல «உறதுக்களுளவாயினும் இது ஒன்றே போதுமானதாயிருக்கிறது.

இதுதவிர, நமது தேசத்தாருக்குப் பிரயோஜனமாகும் பொருட்டு, பிரகிருதி சாஸ்திரம், பதார்த்த விக்கியான சாஸ்திரம், ராஜிய தந்திர சாஸ்திரம் முதலிய விஷயங்களில் இங்கில¦ஷ் நூல்களின் பொருள்களைக் கூடிய வரையில் சங்கரகித்து, இந்தப் பத்திரிகை மூலமாய் நம்முடைய ஜனங்களுக்குத் தெரிவிக்க நிச்சயித்திருக்கிறோம்.

கடைசியாக நம்முடைய ஏற்பாடுகளிலும் ஆசாரங்களிலும், சாஸ்திரத்திற்கும் யுக்திக்கும் முற்றும் விரோதமாயும், நம்முடைய க்ஷேமத்திற்கும் விருத்திக்கும் உறானியாயும் உள்ளவைகளைக் குறித்தும் பிரசங்கிக்கப்படும்.

நம்முடைய பாஷையில் வசன காவியமில்லாத குறையையும் கூடிய வரையில் பரிபூர்த்தி செய்ய நாங்கள் நிச்சயித்திருக்கிறோம்.

இந்தப் பத்திரிகையின் ஸ்வரூபத்தையும், உத்தேசியத்தையும் பிரயோஜனத்தையும், நன்றாய்த் தேர்ந்து, நம்முடையவர்கள் தகுந்தபடி இதை ஆதரிப்பார்களாகில், இதை பிரகிருதத்தில் யோசித்தவாறு மாதத்துக்கொருதர மாத்திரமின்றி இரண்டு அல்லது மூன்று தரம் பிரசுரம் செய்ய நிச்சயித்திருக்கின்றனம்" என்று பத்திரிகாசிரியர் குறிப்பிடுவதிலிருந்து அக்கால இதழின் போக்கு வெளிப்படுவதைக் காணலாம்.

இவ்விதழைத் தொடர்ந்து கி.பி.1866ஆம் ஆண்டு 'கலாவர்த்தினி' என்னும் இந்து சமய மாத இதழ் சென்னையிலிருந்து வெளிவந்துள்ளது.  இவ்விதழில் இந்து மத சித்தாந்தம், விரத மகிமைகள், புராணம், தர்க்கம், தமிழ் வைத்திய சாஸ்திரம், வான சாஸ்திரம், சங்கப்புலவர் வரலாறு போன்றவை இடம்பெற்றிருக்கின்றன.  இந்தக் காலகட்டத்தில் மீண்டும் ஒரு இதழ்ச்சட்டம் கி.பி.1867ஆம் ஆண்டு கொண்டுவரப் பெற்றுள்ளது. இச்சட்டத்தின்படி அச்சகம் வைத்திருப்பவர் நீதிபதி ஒருவர் முன் உறுதிமொழிப் பத்திரம் கொடுக்கவேண்டும்.  அச்சக உரிமையாளரும் பதிப்பாளரும் அச்சு வெளியாகும் இடங்களை அரசுக்கு அறிவிக்கவேண்டும்.  அச்சிட்ட இதழ்களின் இரண்டு படிகளை அரசுக்கு அளிக்கவேண்டும். தவறுகின்றவர்களுக்கு ரூ.2000ம் தண்டம் அல்லது ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கப்படும் என்கின்றது.  இச்சட்டம் கொண்டு வந்ததற்குப் பிறகு இந்தியர்கள் பலர் அச்சகங்களையும் இதழ்களையும் தொடங்கினர் என்றே சொல்லலாம்.

1868  சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புச் சுருக்கம், சென்னை
1869  சூரியோதம்
1870  நேடிவ் பப்ளிக் ஒபினியன்
1870  சத்திய தீபம், சென்னை
1870  சர்வ ஜன மனோரஜ்சனி
1870  பிரம்ம தீபிகை, சென்னை
1870  விவேக விளக்கம், சென்னை
1871  ஆந்திர பாசா சஞ்சீவினி, சென்னை
1871  சுகிர்த வசனி, சென்னை
1871  போல¦சு வீக்லி சர்குலர், சென்னை
1871  வர்த்தமான தரங்கிணி, சென்னை
1872  வியவகார தரங்கிணி, சென்னை
1873  தேச பூசணி, சென்னை
1874  திருவாங்கூர் அபிமானி, நாகர்கோவில்
1877  சித்தாந்த சங்கிரகம்  

போன்ற பொதுஜன இதழ்களும்,

1868  முதலாயிரம், சென்னை
1870  மகாபக்த விஜயம், சென்னை
1870  கதா சிந்தாமணி, சென்னை
1872  உண்மை விளக்கம், சென்னை
1876  மச்ச புராணம், சென்னை
1877  வால்மீகி இராமாயண வசனம், சென்னை
1877  திருவாய்மொழி, சென்னை
1877  பராசுர சுமிருதி, சென்னை 

போன்ற நூலிதழ்களும் வெளிவந்துள்ளன.  1870இல் முதல் மருத்துவ இதழான 'அகத்தியர் வர்த்தமானி' சென்னையிலிருந்து வெளிவந்துள்ளது. சமய இதழ்களாக, 

1870  பிரம்ம தீபிகை, சென்னை
1870  விவேக விளக்கம், சென்னை
1870  ஞானபாநு, சென்னை
1877  பழநி தல விநோதம் 

போன்றவை வெளிவந்துள்ளன.

இவ்வாறு இந்தியர்கள் பொதுஜன, சமய, மருத்துவ, இலக்கிய இதழ்களை வெளியிட்டு வரலாயினர்.  கி.பி.1878ஆம் ஆண்டு 'இந்தியமொழி இதழ்ச்சட்டம்' (The Vernacular Press Act)  ஒன்றை லிட்டன்பிரபு அவர்கள் கொண்டுவந்துள்ளார். இச்சட்டத்தின்படி, இதழ்கள் குறிப்பிட்ட தொகையைப் பிணையாகக் (Deposit) கட்டவேண்டும்.  அரசாங்கத்தின் மீது வெறுப்பு உண்டாகுமாறு எழுதக்கூடாது. இனம், மதம், சாதி இவற்றின் அடிப்படையில் கலவரத்தைத் தூண்டும் முறையில் செய்திகள் வெளியிடக்கூடாது.  நீதிபதி அல்லது காவல்துறை அதிகாரியிடம் உறுதிமொழிப் பத்திரம் எழுதிக் கொடுக்கவேண்டும்.  இவ்விருவருக்கும் இதழ்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரம் உண்டு.  இந்நடவடிக்கைகளை எதிர்த்து வழக்குமன்றம் போகமுடியாது.  இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு முதலில் எச்சரிக்கையும், மீண்டும் தொடர்ந்தால் பிணையத்தொகை இழப்பும், அதனையும் தொடர்ந்தால் அபராதத் தொகையையோ அல்லது சிறைத்தண்டனையோ விதிக்கப்படும் என்ற கடுமையான சட்டத்தினால் மக்கள் அரசியல் இதழ் நடத்துவதை விட்டுவிட்டு அரசாங்க எதிர்ப்பு இல்லாத துறைகளில் இதழ்களை வெளியிடத் தலைப்பட்டனர்.  இந்நிலையில்,

1878  மகாபாரத வசனம்
1878  பாகவத புராண வசனம்
1878  குருபரம்பரா பிரபாவம்
1880  மார்க்கண்டேய புராணம்
1880  திருப்பாவை
1880  முதலாயிர வியாக்கியானம்
1881  பரதத்துவப் பிரகாசிகை
1881  தேவாரப் பதிகத் திருமுறைகள்
  1881  பெரிய திருமொழி
1882  இயல்பா-முதல் திருவந்தாதி
1882  நாலாயிரதிவ்விய பிரபந்தம்
1882  முதலாயிரம்
1883  பகவத் விஷயம்
1883  நாச்சியார் திருமொழி
1883  திருவிளையாடற் புராணம்
1883  பெரிய புராணம் உரையுடன்
1884  கூர்ம புராணம்
1884  பெரிய புராணம் உரையுடனும் விளக்கங்களுடனும்

போன்ற நூலிதழ்களை வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்தியிருக்கின்றனர் எனலாம்.  இதனால்  நூல்களை வெளியிட்ட பெருமையையும்  இதழ்கள் அடைந்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல.

இப்படியாக ஆங்கில அரசின் அடக்குமுறை இதழியல் சட்டங்களால் மக்களின் உள்ளக்குமுறலில் இருந்த சுதந்திர வேட்கை மறைமுகப் பத்திரிகைகள் மூலம் வெளிப்படலாயின.  விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசபக்தர்களைத் திரட்டும் கருவியாக பல இதழ்கள் தோன்றியிருக்கின்றன.  இவ்வாறு உருவான இதழ்களைத் தடுக்க ஆங்கில அரசு பல்வேறு வகையான அடக்குமுறைகளைக் கையாண்டுள்ளது.  "அச்சகங்கள் வைத்திருப்பவர்கள் இதழ்கள் நடத்த முன்வந்தாலோ உதவி செய்தாலோ அவர்களது உடைமைகள் பறிக்கப்படுவதுடன் உயிர்களும் பறிக்கப்படும்" என்று தமக்கெதிராக இதழ் நடத்துபவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது.

சுதந்திரம் நமது பிறப்புரிமை என்று கொண்ட மக்கள் ஆங்கில அரசுக்குத் தெரியாமல் பல இதழ்களை நடத்தியுள்ளனர்.  "பிரிட்டிஷ் ஆதிக்கத்தினால் கடுமையாகச் சுரண்டப்பட்ட ஜமைக்கா மக்கள் தங்களது பத்திரிகைகளை இரகசியமாக உருவாக்கிக் கொண்டனர்.  இப்படி வெளியான ஜமைக்கா பத்திரிகைகளின் வரலாறு சுவையானது. பகலில் விவசாயிகளாக பணியாற்றுகின்றவர்கள் இரவில் அச்சக ஊழியர்களாக மாறி பத்திரிகைகளை உருவாக்கினர்.  இப்படி உருவாக்கப்பட்ட பத்திரிகைகளை தபால் மூலம் அடுத்த ஊர்களுக்கு அனுப்புவதில்லை.  விவசாய காரியங்களுக்காக வெளியூர் செல்பவர்கள் பத்திரிகைகளைக் கொண்டுபோய்க் கொடுப்பார்கள்.  அவர்கள் படித்த பிறகு அதே பத்திரிகையைப் பக்கத்து ஊருக்கு அனுப்பி வைப்பார்கள்.  இப்படி ஒரே பத்திரிகை பல ஊர்களுக்குப் பயணம் செய்யும்" (உலகப் பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும், ப.100) என்ற ஜமைக்கா மக்களின் போக்கில் இந்திய இதழ்கள் பல மறைமுகமாக வெளிவந்து சுதந்திர வேட்கையைத் தூண்டின எனலாம்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு கி.பி.1954ஆம் ஆண்டு Delivery of Books Act  கொண்டுவரப்பெற்றது.  இச்சட்டத்தின்படி இந்தியாவில் உள்ள சில முக்கிய நூலகங்களுக்கும் Registrar of Booksக்கும் ஒவ்வொரு படி அனுப்பிவைக்க வேண்டும் என்று விதிக்கப்பெற்றது.  இதன்படி கொல்கத்தா நேஷனல் நூலகம், மும்பை மைய நூலகம், சென்னை கன்னிமாரா நூலகம், நியூடெல்லி பொதுநூலகம் மற்றும் அந்தந்த மாநில Registrar of Booksக்கும் அனுப்பிப் பதிவு செய்திடவேண்டும்.  இச்சட்டத்தின் தொடர்ச்சியாக கி.பி.2002ஆம் ஆண்டு இச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப் பெற்றுள்ளது.  அதாவது, மேலே குறிப்பிட்ட ஐந்து இடங்களோடு நியூடெல்லியிலுள்ள பாராளுமன்ற நூலகத்திற்கும் ஒரு படி அனுப்பிவைக்க வேண்டும் என்று இந்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தொடக்கக் காலத்தில் இருந்த இதழியல் சட்டங்களால் இந்தியர்கள் எல்லாத் துறைகளிலும் இதழ்களை நடத்த வாய்ப்பில்லாமை புலப்படுகின்றது.  என்றாலும் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு கெடுபிடி நிறைந்த ஆங்கிலேயரின் இதழியல் சட்டங்கள் துணைசெய்திருக்கின்றன என்று கூறினால் அது மிகையல்ல.

ஆய்வுக்குப் பயன்பட்டவை

  1. இதழியல், சூ. இன்னாசி & மா. எட்வர்ட் சாலமோன் ராஜா, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1995
  2. இதழியல் கலை, மா.பா. குருசாமி, குரு-தேமொழி, திருச்செந்தூர், ஆறாம் பதிப்பு, ஜூலை 1999
  3. இந்திய இதழ்கள், மா.ரா. இளங்கோவன், பூங்கொடி பதிப்பகம், சென்னை, 1998
  4. உலகப் பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும், லேனா தமிழ்வாணன்(பதி,), மணிமேகலைப் பிரசுரம், சென்னை, 1987
  5. தத்துவ போதினி-மாத இதழ், 7.5.1864
  6. தமிழ் இதழியல், மு.அ. முகம்மது உசேன், அற்புதா பதிப்பகம், கும்பகோணம், 1989




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக