பக்தி என்பது, இறைப்பொருளைப் பற்றிக்கொள்ளவேண்டும் என்று மனித மனம் முயல்கின்ற முயச்சியாகும். பரம்பொருளைப் பற்றி நின்று அதனுடன் இரண்டறக் கலந்து அனுபவிக்க நினைப்பதே உண்மையான பக்தியாகும். இப்பக்தி, தான் இறைவன் என்ற இரண்டிலும் ஓர் ஒருமை ஏற்பட்டதாக, உணர்கின்ற உணர்வேயாகும். எனவே, அது உண்மைச் சமயத்தின் உயிர் நாடி என்றும், சமய வாழ்வு என்பதன் உள்ளீடும், வடிவும் அதுவாகும் என்றும் கூறுவர்.
நகை, அழுகை, இளிவரள், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்னும் எட்டையும் மெய்ப்பாடு என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இதனைப் பேராசிரியர், "மெய்ப்பாடு என்பது பொருட்பாடு. அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி, ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தாற்குப் புலப்படுவதோர் ஆற்றான் வெளிப்படுதல்" என்கின்றார். உண்மை அன்பை அளந்தறியவதற்கு அளவுகோளாக இம்மெய்ப்பாடு (Emotional behaviour) இருந்தது என்பர். திருவள்ளுவர்,
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்" (குறள்.71)
என்ற குறள் மூலம் அன்பின் திறத்தைத் தெளிவுபடுத்துகின்றார். உள்ளத்து உணர்ச்சிகளுக்கும் மெய்வேறுபாடுகளுக்கும் இடையே மிகுந்த தொடர்பு இருப்பதை உளவியலார் ஏற்றுக்கொள்கின்றனர்.
ஓர் உயிர் உணர்ச்சிவசப்படும் பொழுது அகத்தே இன்ப துன்பங்களுக்கு ஆட்பட்டுவிடுதல், அதன் விளைவாக புறத்தே மெய்யில் சில மாற்றங்களைக் காணலாம். அதாவது, உடலில் சலனம், முகத்தில் மாற்றம், வியர்வை தோன்றுதல், இரத்த அழுத்த மாறுதல்கள் முதலிய உடலியல் வேறுபாடுகள் தோன்றுதல் இயல்பு. இவற்றின் வழி ஒருவரின் இயற்கைப் பண்புகள் அனைத்தும் மாறுபட்டுக் காணப்படுதல் மனித இயல்பு என்பது புலப்படும்.. இம்மனித இயல்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள் அடியவர்கள். சமய அனுபவம் கிடைக்காத வரை இவர்களும் நம்மைப் போன்றே சாதாரண மனிதர்களாகத்தான் இருந்தார்கள். சமய அனுபவம் கிடைக்கப்பெற்ற பிறகு இவர்கள், மனிதச் செயல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டுத் திகழ்ந்திருக்கின்றார்கள். இவர்கள் நான், எனது எனப்படும் அகங்கார மமகாரங்களை அறவே போக்கியவர்களாக வாழ்ந்திருக்கின்றார்கள். பெரியபுராணத்துள் வரும் அடியார்களெல்லோரும் 'தொண்டு செய்தல், சிவபெருமானை முழுமுதற் பொருளாக ஏற்றுக்கொள்ளுதல், தன்னலத்தை அடியோடு துறந்துவிடல், பிறர் பொருட்டாக வாழ்தல், அச்சம் என்பதை வாழ்விலிருந்து அகற்றுதல், தம் குறிக்கோளுக்காக உயிரைவிடச் சித்தமாயிருத்தல் என்பவற்றில் ஒரே இயல்புடையவர்களாய் இருத்தல்' என்று அடியார்களின் இயல்பை அ.ச. ஞானசம்பந்தம் குறிப்பிடுவார்.
இறைவனை வழிபடுபவர்கள் ஏதாவதொரு காரணத்தை முன்னிட்டு வழிபடுவது இயல்பு. ஆனால், நாயன்மார்கள் இறைவனிடம் எந்தவொரு எதிர்பார்ப்பையும் நோக்காமல் இறைவனை அன்போடு வழிபட்டவர்களாகத் திகழ்ந்திருக்கின்றார்கள். அதனால்தான் அவர்களுக்குச் செம்பொன்னும் ஓடும் ஒன்றாகவே தெரிந்திருக்கின்றது. நோயுற்ற உள்ளத்தைப் பெறாதவர்கள் நாயன்மார்கள். அதனால்தான் அவர்கள் இறைவனிடம் அன்பு ஒன்றையே செலுத்தியிருந்தனர். இவ்வன்பு வைத்திருப்பதினால் தங்களிடம் உள்ள அனைத்தும் இறைவன் சொத்து என்று நினைத்திருந்தனர். அவனின்றி ஓரணுவும் அசையாது என்ற மந்திரத்தைத் தலைமை மந்திரமாகக் கொண்டிருந்தனர். அன்பே வடிவான சிவபெருமானை ஏற்றுக்கொண்ட சிவத்தொண்டர்கள், சிவத்தொண்டினைத் தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். இறைவன் வழிகாட்டுதலின் மூலம் செயற்படுத்தும் இவர்களின் செயல்கள் அனைத்தும் அறச்செயல்கள் என்றே கருதப்பெற்று போற்றப்பெற்றன. இந்நிலையில், எறிபத்தர், இயற்பகையார், கோட்புலியார், சிறுத்தொண்டர் போன்ற நாயன்மார்கள் தங்கள் வாழ்நாளில் நடத்தப்பெற்ற கொலைச் செயலின் தன்மையை விளக்கும் முகமாக இக்கட்டுரை அமைகிறது.
எறிபத்தர்
சோழ நாட்டில் கருவூர் என்னும் திருப்பதியில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் பதிபதீசரைத் தினமும் வழிபட்டு வருவோராய் இருந்தார் எறிபத்தர். இப்பதிபதீசருக்குத் தினமும் சிவகாமியாண்டார் என்பவர் அன்று பூத்த மலர்களைக் கைப்படாது கொய்து பூக்கூடையில் இட்டு கோலிற்றாங்கி வந்து சாத்துவது வழக்கம். ஒருநாள் இவ்வாறு செய்து வரும் வேளையில் எதிர்ப்பட்ட மதங்கொண்ட யானை கோலிற்றாங்கி வந்த பூக்கூடையைச் சிதறச் செய்தது. இதனைக் கண்ட சிவகாமியாண்டார் சிவதா சிவதா என்று இறைவனை நோக்கி அறைகூவி முறையிட்டார். அவ்வழியில் வந்த எறிபத்தர் நடந்தவற்றைக் கேள்விப்பட்டு பூக்கூடையைச் சிதறச்செய்த யானையையும், யானைப்பாகர் இருவரையும், குத்துக்கோற்காரர் மூவரையும் தன்னுடைய வாளால் வெட்டி வீழ்த்தினார்.
யானையும், யானைப் பாகர்களும், குத்துக்கோற்காரர்களும் வெட்டுப்பட்ட செய்தி அறிந்த மன்னர் கோபங்கொண்டு நால்வகைச் சேனையுடன் யானை வெட்டுண்ட களத்தை அடைகின்றார். அங்கு மழுவேந்திய சிவனடியாரைத் தவிர வேறு எவரும் இல்லாததைக் கண்ட மன்னர், இப்பாதகச் செயலைச் செய்தவர் எவர் என்று வினவ? இம்மழுவேந்திய சிவனடியாரே என்று கூறுகின்றனர். இதனைக் கேட்ட மன்னர் தாம் தவறு இழைத்து விட்டோம். கேடு நிகழ்ந்திருக்காமல் இச்சிவனடியார் இப்பாதகச் செயலைச் செய்திருக்கமாட்டார் என்று உணர்ந்து நால்வகைச் சேனைகளையும் பின்வாங்கச் செய்து தான் மட்டும் அச்சிவனடியாரிடம் சென்று வினவுகின்றார். நடந்தவற்றைக் கேள்விப்பட்டு, இத்தவற்றுக்கு ஒருவகையில் தானும் காரணம் என்பதை எடுத்துக்கூறி, என்னையும் என் வாளால் என் தலையைக் கொய்யுமாறு சிவனடியாரை வேண்டுகின்றார். சிவனடியார் மன்னரின் வாளை வாங்கிக் கொண்டு, தாம் தவறு இழைத்துவிட்டோம் என்று தன்னுடைய தலையைத் தாமே அரிந்துகொள்ள முற்படும் போது மன்னர் தடுத்து நிறுத்துகின்றார்.
இங்கு எறிபத்தர் எண்ணியது இறைவனுக்குச் சாத்த வேண்டிய மலரை யானை சிதைக்க, அவ் யானையை முறையாகச் செலுத்த இயலாத யானைப் பாகர்கள் மற்றும் குத்துக்கோல்காரர்கள் ஆகியோரை மழுவால் வெட்டியது இறைவன் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடே என்றாலும், உண்மையில் எறிபத்தருக்கு உலக இயல்பில் நாட்டமில்லாததையே இச்செயல் காட்டுகிறது. யானைக்கு மதம் பிடித்தால் பாகனென்ன? குத்துக்கோல்காரனென்ன?
மன்னர் வந்து, எனது ஆட்சியில் பூக்கூடையைச் சிதைக்க வைத்த யானையைத் தெருவில் உலவவிட்டது தனது தவறு என்று கூறி, யானை செய்த தவறுக்குத் தன்னையும் ஒரு குற்றவாளியாகக் கருதிய மன்னனைக் கண்டதும், எறிபத்தர் தாம் தான் அவசரப்பட்டு தவறு இழைத்துவிட்டோமோ என்று எண்ணி தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொள்ள முயல்வதையும், தவறுக்குத் தொடர்பே இல்லாத மன்னவர் தண்டனை அடைய வேண்டும் என்று முயற்சிப்பதையும் பார்க்கும் போது மன்னருக்குச் சிவனடியார் மீது இருந்த மதிப்பையும் அவர்களின் செயல்பாட்டில் தவறு இருக்காது என்ற நம்பிக்கையும், தனது செயலால் யாரோ ஒருவரின் செயலுக்குத் தண்டனை வேண்டும் என்று மன்னர் கூறும்போது தன்னிலை உணர்ந்த சிவனடியாரின் தன்னுணர்ச்சியையும் இக் கூற்றுக்கள் வெளிப்படுத்துகின்றன. எப்படியாகிலும், இறை அன்பில் நிகழ்ந்த எச்செயலும் தவறு இல்லை என்பதை இவ்விருவருடைய கூற்றுக்களும் நிற்க, எறிபத்தர் செய்தது கொலையல்ல, இறைவன் மீது கொண்ட பக்தியின் வெளிப்பாட்டால் எழுந்த கோபப் பயனே. இக்கோபம் சுயநலக் கோபமன்று. இறைவன் மீது கொண்ட அன்பின் மிக்கால் எழுந்தது. இக்கொலையை வீரத்தின் சார்பாய் எழுந்தது என்றோ, சுயநலதிற்காக எழுந்தது என்றோ கூறமுடியாது.
இயற்பகையார்
சிவனடியார்கள் தன்னிடம் உள்ளதைக் கேட்டால் உடன் கொடுக்கும் இயல்புடையவராய் இயற்பகையார் சோழநாட்டின் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்திலகராய் வாழ்ந்துவந்தார். ஒருநாள், சிவபெருமான் சிவனடியார் வேடம் பூண்டு இயற்பகையார் இல்லம் புகுந்து, நான் வேண்டுவது உம்மால் தரமுடியுமா என்று வினவ, என்னிடம் உள்ளது எதுவாயினும் கேட்பீராகில் அடியேன் தர சித்தமாயிருக்கிறேன் என்கின்றார். நான் உன்னிடம் உள்ளதையே கேட்கிறேன். மறுக்கக் கூடாது என்று கூறி, எனக்கு உன் இல்லக்கிழத்தி வேண்டும் என்று கூற, மறுமொழி கூறாது, அடியேன் பிழை நேராத வண்ணம் அடியவர் என்னிடம் உள்ளதையே கேட்டுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. என் மனைவி உமக்குக் கொடுக்கிறேன் என்கின்றார் இயற்பகையார். கணவனின் செயற்பாட்டில் சிறு பிழையும் நேரக்கூடாது என்று உண்மையாக வாழ்ந்து வரும் அம்மங்கையர் திலகமோ சிவனடியார் பின் செல்லத் தயாராகின்றாள். உற்றார் உறவினர் இச்செயலைக் கண்டித்து, இயற்பகையாரை எதிர்கொள்ள வருகின்றனர். இந்நிலையில் இவர்களை முன் நடக்கச் செய்து பின் தொடர்ந்த இயற்கையார் எதிர்த்த அனைவரையும் தம்முடைய கை வாளால் வெட்டி வீழ்த்தி, சிவனடியாரையும் அம்மையாரையும் எல்லை கடக்க உதவுகின்றார்.
இச்செயல் இயல்புக்கு மாறானது. தனது மனைவியை இன்னொருவருக்கு விட்டுக்கொடுப்பது என்பதும், அவனுடன் செல்லுவதற்கு எல்லை வரை பாதுகாப்பாய் செல்வது என்பதும், அவர்களைத் தடுத்தவர்களைக் கொலை செய்வது என்பதும் சாதாரண மனிதராய் நின்று செய்யக் கூடியது அன்று. இறையடியவர்கள் மனதில் எல்லாம் அவன் கொடுத்தவை. அவனுக்கு இன்றி ஏதும் நமக்கில்லை என்ற தத்துவத்தை அடிமனதில் கொண்டிருப்பதினால் குலவிழுக்கு நேருமே என்று கூட எண்ணாமல் மனைவியை சிவனடியாருக்குக் கொடுத்த பாங்கு தன்னுணர்ச்சி கடந்த நிலையினை வெளிப்படுத்துகிறது எனலாம்.
கோட்புலியார்
சோழர் படைப்பிரிவின் சேனாதிபதியாக கோட்புலியார் திகழ்ந்தார். வீரத்தில் சிறந்த கோட்புலியாருக்கு மன்னர் பல வெகுமதிகளைக் கொடுத்தார். அவ்வெகுமதிகளில் பெரும்பகுதி சிவன் கோயிலில் திருவமுது படி பெருகச் செய்யும் திருப்பணிக்கு ஒதுக்கினார். அந்நாளில் போர் மூண்டது. அப்போருக்குத் தலைமை தாங்கும் பொறுப்பினைப் பெற்ற கோட்புலியார், சிவனுக்கமுது படிக்காகும் நெல்லினைக் கூடு கட்டிவைத்துத், தம் சுற்றத்தார்க்கெல்லாம் அவர்களுக்குத் தேவையான நெல்லினைத் தனித்தனியே கொடுத்து சிவனுக்கமுது படி நெல்லினைப் பாதுகாக்கும் படிச்செய்து போர்முனை சென்றார். சில நாளில் பஞ்சம் மேலிட, சுற்றத்தார் அனைவரும் சிவனுக்கமுது படிக்காகும் நெல்லினைச் செலவு செய்துவிடுகின்றனர். போரில் வெற்றி சூடி திரும்பும் வழியில் இச்செய்தியினைக் கேள்விப்பட்ட கோட்புலியார், சென்றவர்களுக்கும் வெகுமதி கொடுப்பதாக அழைத்து தந்தை, தாய், உடன்பிறந்தார், சுற்றத்தார், அமுது உண்ண இசைந்தார், அமுதுபடி யுண்ணாது அமுதுபடியுண்ட தாயாரின் முலைப்பாலினை உண்ட பசுங்குழவி என்று வித்தியாசம் பாராமல் அனைவரையும் தன் கைவாளால் வெட்டிக் கொலை புரிகின்றார்.
போர்க்களத்தில் பல உயிர்களைக் கொன்றவர்க்கு இச்செயல் பெரிதல்ல. என்றாலும், தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பர். தன்னுடைய தசைக்கு உற்றவர்களையே கொலை செய்திருப்பதைப் பார்க்கும் போது கோட்புலியாரால் அந்நேரத்தில் தன்னுணர்ச்சி அற்றவராகத் தான் இருந்திருக்க முடியும். இறைவனுக்குப் படியமுதுக்குச் சேர்த்த நெல்லை அமுதாக்கி உண்டதை கோட்புலியாரால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. சிவன் சொத்து குல நாசம் என்பர். இம்முதுமொழிக்கு இவரின் செயல் விடையாக அமைகிறது. சாராண மக்களின் நிலையில் இருந்த குடும்பத்தினரின் செயற்பாட்டால் எவ்விதக் குறைபாடும் இல்லை. இல்லாதுற்ற வற்காலத்தில், உண்டியலை உடைத்து தற்காத்துக் கொள்வது தானே மனித இயல்பு. இவற்றிக்கு இவர்கன் என்ன விதிவிலக்கா என்ன? இருப்பினும் திருவமுது படியைச் செலவு செய்தது, தனது கொள்கையையும் எண்ணத்தையும் இறையன்பையும் குறைக்க நேர்ந்த சதியாக எண்ணிய கோட்புலியாருக்கு இச்செயல் கொலைச் செயலாகத் தோன்றவில்லை. உலக இயல்பை மறந்து, இறையன்பு ஒன்றை மட்டுமே உயர்ந்ததாக எண்ணி தன்னுணர்ச்சி அற்றதன் விளைவே இச்செயல் எனலாம்.
சிறுத்தொண்டர்
சோழ நாட்டில் திருச்செங்காட்டங்குடியில் திருவெண்காட்டு நங்கையை மணம் புரிந்து நாள்தோறும் சிவனடியார்களை முறைமைப்படி முன்னர்த் திருவமுதூட்டிப் பின்னரே தாம் உண்ணும் நிலையில் வழுவாது கைக்கொண்டு ஒழுகி வந்தவர் பரஞ்சோதியார். இவருக்குச் சீராளன் என்றொரு திருமகன் பிறந்தார். இவரது திறத்தை உலகறியச் செய்ய, ஒருநாள் சிவனடியார் எவரும் ஊரில் திரியாராய் ஆக்கி, சிறுத்தொண்டரின் திருவமுதுச் சேவைக்கு இடர்ப்பட வைத்து அலயவிட்டார். பின்னர், சிவபெருமான் மிக்க பசியுடையவராய்த் திருச்செங்காட்டங்குடி வந்தேகினார். சிவனடியார் சிறுத்தொண்டர் இல்லம் தேடி வந்து சென்றதை அறிந்த சிறுத்தொண்டர் இல்லம் வந்து பசியாறிச் செல்ல குருந்தமரத்தடியில் இருக்கும் அடியாரை வணங்கி வரவேற்கிறார்.
சிவனடியாரின் பசிக்குத் தக்க உணவைச் சமைத்துத் தருவதாக வாக்களித்த சிறுத்தொண்டரிடம் 'நாம் உண்பது நரப்பசு. ஒரு குடிக்கு ஒரு மகனாய் ஐந்து வயது உள்ளவனாய் உறுப்பில் மறு இல்லாதவனாய் உள்ள மகனைத் தம்முள் உவந்து தாய் பிடிக்கத் தந்தை அரிந்து சமைத்த கறி நாம் உண்பது' என்கின்றார். சிவனடியாரின் கட்டளைப்படி வேறெவரும் அவ்வாறு இசையார் என்பதை அறிந்து, திருவெண்காட்டாளிடம் கூறி, பள்ளிக்குச் சென்ற சீராளனை அழைத்துவந்து அடியார் பணித்தவாறே கறி சமைத்து பறிமாறும் போது, சிறுத்தொண்டரையும் உடன் உண்ண அழைக்க அதையும் சிறுத்தொண்டர் ஏற்கிறார்.
இங்குச் சிறுத்தொண்டர் தாம் கொண்ட கொள்கையில் சிறிதும் வழு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கண்ணுங் கருத்துமாய் இருந்த தன்மை வெளிப்படுகிறது. இன்னல் நேர்ந்தவிடத்து இன்னலுக்கு மருந்தாய் தம் மகன் திகழ்ந்தான் என்பதை எண்ணிப் பெருமகிழ்வுறுகின்றார். மகன் கறி சமைத்த பெற்றோராய் பரஞ்சோதியார் - திருவெண்காட்டு நங்கையார் திகழ்கின்றனர். உலகியல் வாழ்க்கையில் நிகழ்த்த முடியாத ஒன்றை இத்தம்பதியினர் செய்த செயற்பாட்டை என்னென்று சொல்வது. தம் குலக்கொடிக்கு ஒரு மகவைத் தவமிருந்து பெற்றெடுத்துவிட்டு, தவமுனிக்கு நரப்பசு வாக்கித் தம் கையாளே பிடித்து - அரிந்து - சமைத்து - உண்ண அமரும் நிலையினை எந்தவொரு தன்னுணர்ச்சி கொண்ட தகப்பனும் தாயும் செய்யமாட்டார்கள். இவர்களுக்குத் தன்னுணர்ச்சி என்பது சற்றும் இல்லாராய் விளங்கியிருந்தலினாலேயே இச்செயலைச் செய்யமுடிந்தது.
எதிரிகளால் தன் நாட்டு மக்களுக்கு ஆபத்து நேரிடும் காலத்தில் மன்னர், அவ்வெதிரிகளைப் போர்க்களத்தில் கொன்று குவிப்பதும், நல்லாட்சி வழங்குவதும் அவனது அறமாகும். இங்கு நிகழ்த்தப்பெறும் கொலைகளைக் கொலை என்று கூறுவதில்லை. அவனது வீரத்தின் தன்மையை இப்போர்க்கள நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது. பொதுநலன் கருதி செய்யப்பெறும் உயிர்க்கொலைகளை வீரம் அல்லது அறக்கொலை என்றும், சுயநலத்திற்காகச் செய்யப்பெறும் உயிர்க்கொலைகளைக் கொலை என்றும் பாகுபடுத்திக் காணலாம். நாயன்மார்களின் வரலாற்றில் சுயநலத்திற்காக எந்தக் கொலையும் நிகழ்த்தவில்லை. அதே சமயம் பொதுநலத்திற்காகவும் எந்தக் கொலையும் நிகழ்த்தவில்லை. இறைவன் மீது கொண்ட மிகுந்த அன்பின் பயனாய், தன்னிலை உணராமல் செய்யப்பட்ட கொலைகளாகவே இவைகள் நிகழ்ந்திருக்கின்றன. இக்கொலைகளை வீரம் என்றோ, அறக்கொலை என்றோ கூறமுடியாது. அதையும் தாண்டி ஓர் கொலைச்செயலை நாயன்மார்கள் செய்திருக்கின்றனர். இக்கொலை தனக்கொப்பில்லாததோர் கொலையாகும். அதாவது, தன்னுணர்வு அற்ற நிலையில் செய்யப்படும் கொலையாகும். இக்கொலைக்கு யாரையும் ஒப்பாக்க முடியாது.
நிறைவுரை
எறிபத்தர், இயற்பகையார், கோட்புலியார், சிறுத்தொண்டர் ஆகிய நால்வரின் வாழ்க்கையில் நடந்த கொலைச் செயல்களைப் பார்க்கும் போது, இவர்கள் தங்களுக்காகவோ, பொது நலனுக்காகவோ இக்கொலைச் செயல்களைச் செய்யவில்லை என்பது தெளிவு. ஆனால், இறைவன் மீது கொண்ட அன்பின் காரணமாகவும், அவன் நிமித்தமாகக் கொண்ட கொள்கையின் காரணமாகவும், அக்கொள்கையில் இருந்து வழுவாமல் இருக்கும் பொருட்டு எல்லாம் அவனுடைய சொத்து, அவனடியவர் கேட்டுக்கும் போது அவனுக்கன்றி வேறுயாருக்கு என்ற மனப் பக்குவத்தை அடைந்து, அப்பக்குவத்தினால் - இறையுணர்ச்சினால் செய்யப்படும் தன்னுணர்வற்ற கொலைச் செயலை அறமென்றும் சொல்ல முடியாது, கொலை என்றும் சொல்லமுடியாது. இவ்விரு நிலையினையும் தாண்டி மூன்றாவது ஒரு நிலையினைக் குறிப்பிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக