சிவபெருமானுடைய பல்வேறு வடிவங்களில் அர்த்தநாரீஸ்வரர் வடிவமும் ஒன்று. வலப்பாதி ஈசனாகவும், இடப்பாதி நாரி(உமை)யாகவும் உள்ள மூர்த்தியே அர்த்தநாரீஸ்வர மூர்த்தியாகும். பிருங்கி முனிவர் கயிலைக்கச் சென்றபோது சிவபெருமானும் உமையம்மையாரும் வீற்றிருந்த நிலையில் அவ்விருவரையும் ஒருசேர வணங்காமல் ஒரு வண்டின் வடிவெய்தி சிவபெருமானை மட்டும் வலம் வந்து வணங்கினார். அது கண்ட உமா தேவியார் தவம் கிடந்து சிவபெருமானின் இடப்பாகத்தில் பாதி அளவு இடம்பெற்றார். இவ்வாறு பாதி ஆணும், மறுபாதி பெண்ணுமாக வடிவம் கொண்டிருக்கும் வடிவமே அர்த்தநாரீஸ்வரர் ஆகும். ஆணும் பெண்ணும் ஒருங்குடன் கூடி வாழ்தலாலே உயிரினங்கள் தோன்றுகின்றன என்னும் அரிய தத்துவத்தினை உணர்த்தும் வடிவமே அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகும். இவ்வடிவம் பற்றி சங்க இலக்கியம் தொடங்கி நாளது இலக்கியங்கள் வரை பலவாறாக எடுத்தோதப்பெறுவதைக் காணமுடிகிறது.
புறநானூற்று கடவுள் வாழ்த்துப் பகுதியில்,
"பெண்ணுரு ஒருதிற னாகின் றவ்வுருத்
தன்னுளக்கிக் கரக்கினுங் கரக்கும்....
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே"
என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மாதொரு பாகன், பார்ப்பதி பாகனைப் பங்கயத்தான், மங்கையைப் பாகம் வைத்தார், உமைபங்கன், மங்கையங்கோர் பாகன், நடைமட மங்கையொர் பாகம், பெண்ணினார் திருமேனியான், உமைநங்கையொடும், உமையாளை யொருபாகம், மங்கையோர் கூறுகந்த மழுவாளன், தையலாளொரு பாலுடையன், பாகமர் மொழியுமை பங்கர், பெண்ணியலுருவினர், உமையோடுடனானான், மங்கையொரு பாகம் மகிழ்ந்தான், பெண்ணோர் பாகர், மார்பிற் பெண்ணொரு பாகம் அமர்ந்தார், மங்கைய தாகமொர் பாகம், மடந்தையொர் பாகம், உமையோடொரு பாகன், மலையாளொரு பாகம், பாகம் பெண்ணும் உடையவர், தேவிபாக மாயினான், பாதி பெண்ணுரு ஆனவர், தையல் பாகமாய், இளையாளொரு பாலுடையார், மங்கைநல்லாளொரு பாகம், மங்கையை இடமுடையீருமை, மங்கை பங்கினீர் என்றெல்லாம் பல்வேறு இலக்கியங்கள் குறிப்பிடுவதைக் காணமுடிகிறது. திருவாசகத்தில் அர்த்தநாரீஸ்வரரைப் பற்றி மணிவாசகப் பெருமான் குறிப்பிடும் பாங்கை தொகுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.
சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை, திருவம்மானை, திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தௌ¢ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோணோக்கம், திருப்பொன்னூசல், அன்னைப் பத்து, குயிற் பத்து, திருத்தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி, கோயில் மூத்த திருப்பதிகம், கோயில் திருப்பதிகம், செந்திலாப் பத்து, அடைக்கலப் பத்து, ஆசைப் பத்து, அதிசயப் பத்து, புணர்ச்சிப் பத்து, வாழாப் பத்து, அருள் பத்து, திருக்கழுக்குன்றப் பதிகம், கண்ட பத்து, பிரார்த்தனைப் பத்து, குழைத்த பத்து, உயிருண்ணிப் பத்து, அச்சப் பத்து, திருப்பாண்டிப் பதிகம், பிடித்த பத்து, திரு ஏசறவு, திருப்புலம்பல், குலாப் பத்து, அற்புதப் பத்து, சென்னிப் பத்து, திருவார்த்தை, எண்ணப் பதிகம், யாத்திரைப் பத்து, திருப்படை எழுச்சி, திருவெண்பா, பண்டு ஆய நன்மறை, திருப்படை ஆட்சி ஆனந்த மாலை, அச்சோப் பதிகம் போன்ற ஐம்பத்தொரு திருப்பதிகங்களில் அறுநூற்று ஐம்பத்தாறு பாடல்கள் மாணிக்கவாசகப் பெருமானின் திருவாசகத்தில் இடம்பெற்றுள்ளன.
திருக்கோத்தும்பியில்,
"நானுமென் சிந்தையு நாயகனுக் கெவ்விடத்தோந்
தானுந்தன் றையலுந் தாழ்சடையோ னாண்டிலனேல்
வானுந் திசைகளு மாகடலு மாயபிரான்
றேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ" (15)
என்றும்,
"தோலுந் துகிலுங் குழையுஞ் சுருடோடும்
பால்வௌ¢ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ்
சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ" (18)
என்றும் எடுத்தோதுவதாக இரண்டு பாடல்கள் அமைக்கப்பெற்றுள்ளதைக் காணலாம். கீர்த்தித் திருவகவலில்,
".................................... இப்புவனியை உய்யக்
கூறுடை மங்கையுந் தானும் வந்தருளி" (25-26)
"ஏகம் பத்தின் இயல்பா யிருந்து
பாகம் பெண்ணோ டாயின பரிசு" (77-78)
"மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன்" (107)
என்றெல்லாம் சுட்டப்பெறுவதைக் காணமுடிகிறது. திருவண்டப் பகுதியில்,
"குவளைக் கண்ணி கூறன் காண்க,
அவளும் தானும் உடனே காண்க" (64-65)
"மரகதக் குவாஅன் மாமணிப் பிறக்கம்" (124)
என்றெல்லாம் குறிப்பிடுவதைக் காணமுடிகிறது. போற்றித் திருவகவலில்,
"பாகம் பெண்ணுரு வானாய் போற்றி" (152)
"பஞ்சே ரடியாள் பங்கா போற்றி" (184)
என்றெல்லாம் போற்றுவதைக் காணமுடிகிறது. திருச்சதகத்தில்,
"குரவுவார் குழல்மடவாள் கூறுடையா ளொருபாகம்" (17)
"மாதாளும் பாகத் தெந்தை" (30)
"மானன நோக்கிதன் கூறனை" (38)
"மானேர் நோக்கி உமையாள் பங்கா" (55)
"மங்கையோர் பங்க போற்றி" (65)
"மங்கை கூறவெண் ணீர போற்றி" (67)
"மைக லந்த கண்ணி பங்க" (73)
"பங்கை பங்க" (75)
"மானேர் நோக்கி உமையாள் பங்கா" (85)
"மையி லங்குநற் கண்ணி பங்கனே" (92)
"ஏல மேலுநற் குழலி பங்கனே" (94)
என்றெல்லாம் சுட்டப்பெறுவதைக் காணலாம். நீத்தல் விண்ணப்பத்தில்,
"வாருறு பூண்முலை யாள்பங்க" (3)
"திதலைச்செய் பூண்முலை மங்கை பங்கா" (41)
என்றெல்லாம் மாணிக்கவாசகர் அழைக்கக் காணலாம். திருவெம்பாவையில்,
"ஏழை பங்காளன்" (8)
"பேதை யொருபாற் றிருமேனி யொன்றல்லன்" (10)
"....................... நந்தம்மை ஆளுடையா
டன்னிற் பிரிவிலா எங்கோமான்" (16)
என்றெல்லாம் சுட்டக் காணலாம். திருவம்மானையில்,
"மாதிருக்கும் பாதியனை" (7)
"பெண்சுமந்த பாகத்தன்" (8)
"பெண்ணாளும் பாகனை" (10)
"செப்பார் முலைபங்கன்" (11)
"கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியனை" (18)
"மாதியலும் பாதியனை" (19)
என்றெல்லாம் குறிப்பிடுவதைக் காணலாம். திருப்பொற் சுண்ணத்தில்,
"மங்கை பங்கினன்" (7)
என்று குறிப்பிடுவதைக் காணலாம். திருத்தௌ¢ளேணத்தில்,
"வரையாடு மங்கைதன் பங்கொடும்வந்" (6)
"கயன்மாண்ட கண்ணிதன் பங்கன்"(11)
என்றெல்லாம் சுட்டக் காணலாம். திருச்சாழலில்,
"மலைமகளை யொருபாகம் வைத்தலுமே" (7)
என்று சுட்டக் காணலாம். திருவுந்தியாரில்,
"இளமுலை பங்கன்" (4)
"பணைமுலை பாகன்" (8)
என்றவாறு சுட்டப்பெற்றுள்ளதைக் காணலாம். திருப்பொன்னூசலில்,
"மாதாடு பாகத்தன்" (6)
"பங்குலவு கோதை" (9)
என்றவாறு அழைக்கப்பெறுவதைக் காணலாம். அன்னைப் பத்தில்,
"கண்ணஞ் சனத்தர்" (2)
"தையலோர் பங்கினர்" (9)
என்றவாறு சுட்டக் காணலாம். திருத்தசாங்கத்தில்,
"மாதாடும் பாகத்தன்" (3)
என்று சுட்டக் காணலாம். செந்திலாப் பத்தில்,
"மலைமாதொரு பாகா" (10)
என்று சுட்டுவதைக் காணலாம். அடைக்கலப் பத்தில்,
"வெருள்புரி மானன்ன நோக்கிதன் பங்க" (5)
"மாவடு வகிரன்ன கண்ணி பங்கா" (8)
என்றவாறு சுட்டுவதைக் காணலாம். ஆசைப் பத்தில்,
"பஞ்சே ரடியாள் பாகத் தொருவா" (10)
என்று சுட்டக் காணலாம். அதிசயப் பத்தில்,
"பாதி மாதொடுங் கூடிய பரம்பரன்" (2)
என்று சுட்டக் காணலாம். வாழாப் பத்தில்,
"பண்ணினேர் மொழியாள் பங்க" (5)
"பஞ்சின்மெல் லடியாள் பங்க" (6)
"பந்தணை விரலாள் பங்க" (8)
"பழுதிறொல் புகழாள் பங்க" (10)
என்றெல்லாம் குறிப்பிடக் காணலாம். அருள் பத்தில்,
"சுரிகுழற் பணைமுலை மடந்தை பாதியே" (1)
என்று சுட்டக் காணலாம். பிரார்த்தனைப் பத்தில்,
"காவி சேருங் கயற்கண்ணாள் பங்கா" (5)
"மானோர் பங்கா" (10)
என்றவாறு சுட்டக் காணலாம். குழைத்த பத்தில்,
"கொடியே ரிடையாள் கூறாவெங் கோவே" (2)
"ஏழை பங்கா" (3)
என்றவாறு சுட்டுவதைக் காணலாம். உயிருண்ணிப் பத்தில்,
"பைந்நாப்பட அரவேரல்குல் உமைபாகமதாய்" (1)
என்று சுட்டக் காணலாம். திருப்பாண்டிப் பதிகத்தில்,
"பருவரை மங்கைதன் பங்கர்" (1)
என்று சுட்டக் காணலாம். திரு ஏசறவு பதிகத்தில்,
"பண்ணார்ந்த மொழிமங்கை பங்கா" (2)
என்று சுட்டக் காணலாம். திருப்புலம்பலில்,
"கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறா" (1)
என்று சுட்டக் காணலாம். குலாப் பத்தில்,
"கொம்மை வரிமுலைக் கொம்பனையாள் கூறன்" (10)
என்று சுட்டக் காணலாம். சென்னிப் பத்தில்,
"மட்டு வார்குழல் மங்கை யாளையோர் பாகம் வைத்த வழகன்" (2)
"வேய தோளுமை பங்கன்" (5)
என்றவாறு சுட்டக் காணலாம். திருவார்த்தை பதிகத்தில்,
"மாதிவர் பாகன்" (1)
"மாதுநல் லாளுமை மங்கைபங்கன்" (8)
என்றவாறு சுட்டக் காணலாம். யாத்திரைப் பத்தில்,
"போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன்" (9)
என்று சுட்டக் காணலாம். அச்சோப் பதிகத்தில்,
"தையலிடங் கொண்டபிரான்" (3)
"மாதொருகூ றுடையபிரான்" (8)
என்றவாறு சுட்டுவதைக் காணலாம்.
ஐத்பத்தொரு பதிகங்களில் மேற்காணும் பதிகங்கள் தவிர சிவபுராணம், திருப்பூவல்லி, திருத்தோணோக்கம், குயிற் பத்து, திருப்பள்ளியெழுச்சி, கோயில் மூத்த திருப்பதிகம், கோய்ல் திருப்பதிகம், புணர்ச்சிப் பத்து, திருக்கழுக்குன்றப் பதிகம், கண்ட பத்து, அச்சப் பத்து, பிடித்த பத்து, அற்புதப் பத்து, எண்ணப் பதிகம், திருப்படையெழுச்சி, திருவெண்பா, பண்டு ஆய நான்மறை, திருப்படை ஆட்சி, ஆனந்த மாலை ஆகிய பத்தொன்பது பதிகங்களில் மாதொரு பங்கனைப் பற்றிய குறிப்பினைக் காணமுடியவில்லை. ஏனைய திருப்பதிகங்களில் ஒன்று முதல் பதினொரு வரையிலான குறிப்பினைக் காணமுடிகிறது.
முடிவுரை
பக்தி இலக்கியங்களில் - சிவபெருமானைப் பாடியவர்களில் மாணிக்கவாசகரின் பதிகங்களில் தான் மாதொரு பாகனைப் பற்றிய குறிப்புகள் அதிகமாகக் கையாளப்பெற்றுள்ளன. அறுபத்தெட்டு இடங்களில் மாதொரு பாகனைப் பற்றிய பல்வேறு செய்திகள் திருவாசகத்தில் மாணிக்கவாசகரால் சுட்டப்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது. சிவபெருமானின் வடிவங்களில் மாதொரு பாகனின் வடிவத்தையே மாணிக்கவாசகர் தம்முடைய திருவாசகத்தில் அதிகமாகக் கையாண்டுள்ளார் என்று கூறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக