வெள்ளி, 2 நவம்பர், 2018

தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடிப்பதிப்புகள்

தமிழ்ப் பல்கலைக்கழகம் 1981ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 15ஆம் நாள் தோற்றுவிக்கப்பட்டது.  1982ஆம் ஆண்டு சனவரி திங்கள் 2ஆம் நாள் இப்பல்கலைக்கழகச் சுவடிப்புலத்தில் தலையாய துறையாக ஒலைச்சுவடித்துறை உருவாக்கப்பெற்றது.  இதன் முதல் துறைத்தலைவராக பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளையவர்களும், அதனைத் தொடர்ந்து பேராசிரியர் முனைவர் த.கோ. பரமசிவம் அவர்களும் இருந்ததற்குப் பிறகு தற்போது பேராசிரியர் முனைவர் வே.இரா. மாதவன் அவர்கள் துறைத்தலைவராக இருக்கின்றார்.  ஏற்கெனவே இத்துறைத்தலைவர்களோடு திரு.அடிகளாசிரியர், பேராசிரியர் முனைவர் சா. கிருட்டினமூர்த்தி, புலவர் ப.வெ. நாகராசன், முனைவர் சி. இலட்சுமணன் ஆகியோர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர்.  இன்று இத்துறையில் பேராசிரியர் முனைவர் வே.இரா. மாதவன், முனைவர் மோ.கோ. கோவைமணி, முனைவர் த. கலாஸ்ரீதர் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

ஓலைச்சுவடித்துறையின் நோக்கம்

உலகெங்கிலுமுள்ள தமிழ் ஓலைச்சுவடிகளைத் தேடித் தொகுத்துப் பாதுகாத்தலும் பதிப்பித்து வெளியிடுதலும் இத்துறையின் தலையாய நோக்கங்களாகும்.  கோயில்கள், திருமடங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிலும்; வைத்தியர்கள், கவிராயர்கள் ஆகியோரிடத்திலும்; தனியாரிடத்திலும்; பல்வேறு வகையிலும் சிதறிக் கிடக்கின்ற அழிந்து வரும் ஓலைச்சுவடிகளைத் தேடித் தொகுத்து அறிவியல் முறைப்படி பாதுகாத்து வருவதை இத்துறை முதற்கண் செயற்படுத்தி வருகிறது.

மேற்படி பாதுகாத்துவரும் சுவடிகளுள் இன்றியமையாத சுவடிகளைப் பதிப்பித்து ஆய்வு முன்னுரையுடனும் பல்வேறு குறிப்புகளுடனும் செம்பதிப்பாக வெளிக்கொணரும் பணியும் மேற்கொள்ளப்பெறுகிறது. இப்பணியுடன் ஏற்கெனவே வெளிவந்த நூல்களை மீண்டும் சுவடிகளுடன் ஒப்பிட்டுப் பாடவேறுபாடுகள், ஆய்வுக் குறிப்புகளுடன் செம்பதிப்புகளாக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.  இப்பணிகளுக்குத் துணை செய்யும் வகையில் சுவடி நூலகம் ஒன்றையும், அச்சு நூல்களின் நூலகம் ஒன்றையும் இயக்கி வருகிறது.   மேலும், வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சிக்கேற்ப பெறப்பட்ட ஓலைச்சுவடிகளை மின்னணுக் கருவி கொண்டு  மின்னணுப்படி எடுத்தல், அப்படிகளைப் பயன்பாட்டிற்கேற்ற வகையில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கணிப்பொறி அறிவியல் துறையுடன் இணைந்து வலைதளத்தில் வெளியிடல் போன்ற பணிகளிலும் இத்துறை ஈடுபட்டு வருகிறது.

இத்துறை தவிர இப்பல்கலைக்கழகத்தில் 24 துறைகள் இருக்கின்றன.  என்றாலும், சுவடிகளை அடிப்படையாகக் கொண்டு ஓலைச்சுவடித்துறை மட்டுமே 21 சுவடிப்பதிப்புகளை வெளியிட்டுள்ளது.  சித்த மருத்துவத்துறையில் போகர் 700 மற்றும் அகத்தியர் குழம்பு என்ற இரண்டு நூல்கள் வெளியிட்டிருந்தாலும் அவைகள் ஏற்கெனவே வெளியிட்ட பல பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டவையாகும்.  இவை சுவடிப் பதிப்பில் அடங்காதவை.

தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடிப்பதிப்புகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1. இலக்கியச் சுவடிப்பதிப்புகள்
2. இலக்கணச் சுவடிப்பதிப்புகள்
3. மருத்துவச் சுவடிப்பதிப்புகள்
4. நுண்படச் சுவடிப்பதிப்புகள்
5. சுவடி அட்டவணைகள்

1. இலக்கியச் சுவடிப்பதிப்புகள்
குறுந்தொகை (1985)

1985ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அச்சில் இருந்த எல்லா குறுந்தொகைப் பதிப்புகளையும், அப்பதிப்பாசிரியர்களுக்குக் கிடைக்காத சில சுவடிகளையும் கொண்டு பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை அவர்கள் குறுந்தொகையை ஆய்வுப் பதிப்பாக1985ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.  இப்பதிப்பில் பாடபேதங்களும், பிற்சேர்க்கைகளும் நூலுக்குச் சமமாக அமைந்துள்ளன.  இதன் சொல்லடைவு, தொடரடைவு சங்க நூலாராய்ச்சிக்கு மிகப் பயன்படும் ஒரு நல்ல கருவியாகும்.

ஆத்திசூடி உரை (1985)

மகாவித்துவான் ரா. ராகவையங்கார் அவர்களால் வரையப்பெற்ற ஆத்திசூடி அகல உரையின் காகிதச் சுவடி மகாவித்துவான் அவர்களின் குடும்பத்தாரிடமிருந்து பேராசிரியர் மு. சண்முகம்பிள்ளை அவர்களால் தனிப்பட்ட முறையில் பெறப்பட்டு அவராலேயே பதிப்பிக்கப்பெற்றுள்ளது.  ஆய்வு முகவுரை, உரையாசிரியர் வரலாறு ஆகியவற்றுடன் உரைவேறுபாடு, பாடவேறுபாடு, சொல்லடைவு ஆகியன முனைவர் சா. கிருட்டினமூர்த்தி அவர்களால் உருவாக்கப்பட்டு அனைத்துக் கூறுகளுடனும் இந்நூல் விரிவாக1985ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது.

சீவேந்திரர் சரிதம் (1985)

சீவக சிந்தாமணியின் வழிநூலாக அம்மானை யாப்பில் கதைப்பாடலாக அமைந்தது சீவேந்திரர் சரிதம் எனும் நூல்.  பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை அவர்களின் சொந்தத் தொகுப்பிலிருந்த இரு சுவடிகளின் அடிப்படையில் இப்பதிப்பு வெளிவந்தது.  தஞ்சை, சரஸ்வதிமகால் நூலகம், கேரளப் பல்கலைக்கழகச் சுவடியிலிருந்து முற்பகுதியையும், தன்னிடம் இருந்த சுவடியிலிருந்து பிற்பகுதியையும் சேர்த்து இந்த அம்மானையை 1982ஆம் ஆண்டு ஒரு பதிப்பு வெளிவந்துள்ளது.  அப்பதிப்பும் 1985ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட இப்பதிப்பிற்குப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது.  நூல் முழுமைக்கும் குறிப்புரையும், பாடவேறுபாடுகளும், நூல் முழுமைக்குமான சொல்லடைவு, சீவகன் வரலாறு ஆகியனவற்றை முனைவர் சா. கிருட்டினமூர்த்தி எழுதியுள்ளார்.  இவற்றுடன் பதிப்பாசிரியர் பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை அவர்கள் இந்நூலுக்கு  அருஞ்சொற்பொருள், செய்தி விளக்கம், இலக்கணக் குறிப்புகள், முகவுரை, சீவேந்திரர் சரிதத்தின் சில தனிக்கூறுகள் ஆகியனவற்றையும் சேர்த்து சிறந்ததொரு சுவடிப்பதிப்பாக இப்பதிப்பு அமைந்துள்ளது.

செழியதரையன் பிரபந்தங்கள் (1986)

1986ஆம் ஆண்டு வெளிவந்த ‘செழியதரையன் பிரபந்தங்கள்’ என்னும் இப்பதிப்பு நூல்  ஆறு சிற்றிலக்கியங்களின் தொகுப்பு நூலாகத் திகழ்கிறது.  இதில் கங்காரதச் செழியன் பேரில் திருவாணி வாது (104 விருத்தங்கள்), திருவேங்கடச் செழியன் நன்னெறி (43 கட்டளைக் கலித்துறைகள்), தாகந்தீர்த்த செழியன் கோவை (75 கட்டளைக் கலித்துறைகள் மட்டும் - குறை நூல்), கங்காதரச் செழியன் வண்ணம் (குறைநூல்), தாகந்தீர்த்த செழியன் பிள்ளைத்தமிழ் (103 பெரிய ஆசிரிய விருத்தங்கள்), அந்தாலந்தீர்த்த செழியதரையன் மஞ்சரி (காப்பு வெண்பா 1,  கண்ணிகள் 395, கலிவெண்பா 1) என ஆறு சிற்றிலக்கியங்கள் குறிப்புரையுடன் இடம்பெற்றுள்ளன.  அனைத்து நூல்களுக்கும் தனித்தனியாகச் சொல்லடைவு இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆறு சிற்றிலக்கியங்களின் ஈற்றில் குறிப்பிடப்பெற்றுள்ள அந்தாலந்தீர்த்தான் மஞ்சரி மூலம் மட்டும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழாய்வின் ஏழாம் தொகுதியில் 1978ஆம் ஆண்டு ஒரே ஏட்டின் துணையுடன் பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை அவர்களால் வெளியிடப்பட்டது.  இந்தத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்பிற்கு அந்தச் சுவடியுடன் அதற்கு 40 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பெற்ற மற்றொரு சுவடியும் கிடைத்தது.  தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிப்பில் உரையும் எழுதப்பட்டுள்ளது.

இந்த மஞ்சரி ஒன்றைத் தவிர ஏனைய ஐந்து சிற்றிலக்கியங்களும் முதன் முறையாக உரையுடன் இப்பதிப்பில் வெளியாகியுள்ளன.  பாட நிர்ணம், உரை, சொல்லடைவு முதலிய பதிப்புப் பணிகளைப் புலவர் ப.வெ. நாகராசன் அவர்கள் செய்துள்ளார்.  பதிப்பாசிரியர் பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை அவர்களின் விரிவான முகவுரை ஒன்று இப்பதிப்பில் இடம்பெற்றுள்ளது.
நற்றிணை மூலமும் உரையும் - எடுத்துக்காட்டுப் படிவம் (1986)

கடவுள்வாழ்த்து 1, நூற்பாடல்கள் 9 ஆகப் பத்துப் பாடல்களுக்கான நற்றிணை - எடுத்துக்காட்டுப் படிவம் ஒன்று பேராசிரியர் முனைவர் த.கோ. பரமசிவம் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 1986ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

இந்நூல் பின்வரும் 11 பகுதிகளைக் கொண்டதாக அமையத் திட்டமிடப்பட்டது.

1. தலைப்பு, பாட்டு எண், திணை - கூற்று
2. மூலம்
3. ஆசிரியர் பெயர்
4. பழங்குறிப்பு
5. பொருள்கோள் முறை
6. மரபு தழுவிய பொழிப்புரை
7. கருத்துரை
8. அருஞ்சொற்பொருள்
9. சிறப்புக்குறிப்பு (இறைச்சி, உள்ளுறை, பாடத்தேர்வுக் குறிப்புகள்)
10. மேற்கோளாட்சி
11. ஒப்புமை (பாடவேறுபாடு - ஒப்புநோக்கு அட்டவணை), தொடரடைவு, சொல்லடைவு

என்ற சிறந்த ஆய்வு முறையில் வெளியிடத் திட்டமிடப்பட்டு இத்திட்டப்பணி நிறைவுறாமல் எடுத்துக்காட்டுப் படிவத்தோடு நின்றுவிட்டது.


நான்மணிக்கடிகை மூலமும் பழைய உரையும் (2001)

1872இல் தி.க. சுப்பராயச் செட்டியாரின் புத்துரையுடன் நான்மணிக்கடிகையின் முதற் பதிப்பு வெளிவந்துள்ளது.  இது தொடங்கி பல பதிப்புகள் வெளிவந்திருந்தாலும் முழுமையான சுவடிப்பதிப்பாக அவைகள் இல்லாததினால் 2001ஆம் ஆண்டு முனைவர் வே.இரா. மாதவன் அவர்கள் நான்மணிக்கடிகை மூலமும் பழைய உரையும் என்ற நூலைத் தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடியை அடிப்படையாகக் கொண்டு பதிப்பித்துள்ளார்.  இப்பதிப்பிற்குப் பதினேழு ஓலைச்சுவடிகள் (மூலச்சுவடிகள் 9, மூலமும் உரையும் கொண்ட சுவடிகள் 8) பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஓலைச்சுவடிகளை ஒப்பிட்டு வெளியிட்ட பதிப்புகளுள் சிறப்பாகக் கருதத்தக்கது மகாவித்துவான் ரா. இராகவையங்கார் அவர்களின் பதிப்பாகும்.  இவரின் பதிப்பிலும் சில திருத்தம் பெற வேண்டிய பகுதிகள் இருப்பதை இப்பதிப்பு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.  காட்டாக, இந்நூலின் 86ஆம் பாடல்,

ஒன்றூக்கல் பெண்டிர் தொழில்நலம் என்றும்
நன்றூக்கல் அந்தண ருள்ளம் பிறன்ஆளும்
நாடூக்கல் மன்னர் தொழில்நலம் கேடூக்கல்
கேளிர் ஒரீஇ விடல்”

என்பதாகும்.  இதில் “ஒன்றூக்கல்”, “நன்றூக்கல்” என்பதில் எதுகை நயம் இருந்தாலும் பழைய உரையின் படியும், சில சுவடிகளில் காணப்படக் கூடிய தகவலின் படியும் “அறனூக்கல்” என்பதையே செம்மையான மூல வடிவமாகக் கொள்ளலாம் போன்ற பல திருத்தப் பாடங்கள் இப்பதிப்பில் இடம்பெற்றிருக்கின்றன.

இந்நூல், மூலம், பழைய உரை, பொருளுரை, கருத்துரை, விளக்கவுரை என்ற நிலையில் உரைப்பகுதி அமைய, பிற்சேர்க்கையாக செய்யுள் முதற்குறிப்பு அகராதி, நூற்பொருள் அகரவரிசை, சொல்-தொடர் அகராதி, அச்சில் வெளிவந்துள்ள நான்மணிக்கடிகைப் பதிப்பு விவரம், ஆய்விற்குப் பயன்பட்ட துணைநூல்கள் என்பனவாக இந்நூல் அமைக்கப்பெற்றுள்ளது.

சாந்தாதி அசுவமகம் (2004)

சாந்தாதி அசுவமகம் என்னும் இந்நூல் அமிர்தகவி செய்யிது முகம்மது அண்ணாவியார் என்னும் இசுலாமியப் புலவரால் பாடப்பெற்றதாகும்.  மகாபாரதக் கதையுள் ஒரு பகுதியாக விளங்கும் தருமர் நிகழ்த்திய அசுவமேதயாகத்தைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.  நாட்டுச் சருக்கம், நகரச் சருக்கம், தருமராசன் கீர்த்திச் சருக்கம், எமனாசுரன் போர்ச் சருக்கம், அனுசாளுவன் போர்ச் சருக்கம், வேள்வி ஆரம்பச் சருக்கம், நீலத்துசன் போர்ச் சருக்கம், சண்டிகை சாபநிவாரணச் சருக்கம், சுதர்மத்துசன் போர்ச் சருக்கம், சுரத்துசன் போர்ச் சருக்கம், வர்க்க தேசச் சருக்கம், புரவி பேதித்துச் சுயரூபமான சருக்கம், மதன மண்டலச் சருக்கம், மிருக வெகுமுக தேசச் சருக்கம், பப்பர வாகனன் போர்ச் சருக்கம், பரிசத்துசன் போர்ச் சருக்கம், வீரவர்மன் போர்ச் சருக்கம், சந்திரகாசன் போர்ச் சருக்கம், சமுத்திரச் சருக்கம், சயிந்தவ தேசச் சருக்கம், வேள்வி முற்றிய சருக்கம் ஆகிய 21 சருக்கங்கள் 4104 கவிகளால் ஆன இந்நூல் ஒரு காப்பியம் போல் விளங்குகிறது.

2004ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் பதிப்புரை, குறிப்புரையுடன் கூடிய நூல் பகுதி, செய்யுள் முதற்குறிப்பகராதி ஆகியவற்றுடன் அமைந்துள்ளது.  இந்நூலுக்குப் பதிப்பாசிரியராக முனைவர் த.கோ. பரமசிவம் அவர்களும், குறிப்பாசிரியராக புலவர் ப.வெ. நாகராசன் அவர்களும் செயலாற்றியுள்ளனர்.                                                                                                                                                                                                             
2. இலக்கணச் சுவடிப்பதிப்புகள்

தொல்காப்பியம்-பொருளதிகாரம்-செய்யுளியல்-இளம்பூரணம் (1985)
பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்களின் அரிய உழைப்பால் உருவான அருமையான பதிப்பு இது.  செய்யுளியல் இளம்பூரணர் உரையின் அனைத்து அச்சுப் புத்தகங்களையும், தமிழில் உள்ள பழைய யாப்பிலக்கணங்கள் எல்லாவற்றையும் நுட்பமாக ஆராய்ந்து இது உருவாக்கப்பட்டுள்ளது.  தொல்காப்பியர் செய்யுள் வெண்பா என்று தனியாக வெண்பா இனம் ஒன்றைக் கூறியுள்ளார் என்பது இப்பதிப்பு வெளிப்படுத்தும் புதிய செய்தி.  நல்ல பதிப்புரை, நூற்பாச் சொல்லகராதி, உரைப்பொருளடைவு, உதாரண மேற்கோள் அகராதி, நூற்பா முதற்குறிப்பகராதி என்றும் இன்றியமையாத கூறுகளுடன் இப்பதிப்பு 1985ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

தொல்காப்பியம்-சொல்லதிகாரம்-இளம்பூரணம் (1988)

1988ஆம் ஆண்டு தொல்காப்பியம்-சொல்லதிகாரம்-இளம்பூரணம் எனும் இந்நூல் வெளியாகியது.  1988ஆம் ஆண்டு வரை வெளியாகியிருந்த இளம்பூரணச் சொல்லதிகாரப் பதிப்புகளோடு பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்கள் அரிதின் தேடிச் சேமித்து வைத்திருந்த இரண்டு ஓலைச்சுவடிகளும் ஆராயப்பெற்றன.  அதாவது, திருப்பாதிரிப்புலியூர் தவத்திரு ஞானியார் மடத்து ஒலைச்சுவடி ஒன்றும், திருவாவடுதுறை ஆதீனத்து ஓலைச்சுவடி ஒன்றும் ஆகிய இரண்டு ஓலைச்சுவடிகளும், இதுவரை அச்சுக்கு வந்த அச்சுப்பிரதிகளையும் முதற் கருவியாகக் கொண்டு இப்பதிப்பு வெளிவந்துள்ளது.  இப்பதிப்பின் பயனைப் பற்றிப் பதிப்பாசிரியராகிய அடிகளாசிரியர் “யான் செய்த ஆராய்வால் பல பிழைகள் திருந்தின.  நூற்பாக்களுக்கும் உரைக்கும் நல்ல பாடங்கள் கிடைத்தன.  வேண்டும் குறிப்புகளை எழுதிச் சேர்த்தேன்.  உரையைப் படித்துக் கொண்டு வரும்பொழுது உரையிலும் இடைச்செருகல் இருப்பதாக உணர்ந்தேன்.  பெயரியலில் பல நூற்பாக்கட்கும் வினையியலில் சில நூற்பாக்கட்கும் எழுதப்பட்டிருந்த இளம்பூரணர் உரை எக்காரணத்தினாலோ சிதைந்து போக, சிதைந்த இடங்களில் சேனாவரையர் உரையை வைத்து யாரோ நிறைவு செய்துள்ளனர் என்னும் செய்தி புலனாயிற்று” எனக் கூறுகிறார்.

நூற்பாச் சொல்லகராதி, உரைப்பொருளடைவு, உதாரண மேற்கோள் அகராதி, நூற்பா முதற்குறிப்பகராதி ஆகிய இணைப்புகள் இப்பதிப்பின் பயன்பாட்டை மிகுவிக்கின்றன.

இலக்கணச் சூடாமணி (1990)

இதுவரை அச்சாகாத இந்த யாப்பிலக்கணம் 1990ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றது.  சுவடி நூலகத்தின் சுவடியோடு, சென்னை டாக்டர் உ.வே.சா. நூலகம், கோவை பேரூர்த் தமிழ்க்கல்லூரி ஆகிய இடங்களிலிருந்த சுவடிகளும் பதிப்பிற்குப் பயன்கொள்ளப்பெற்றன.  இப்பதிப்பிற்கு முனைவர் சா. கிருட்டினமூர்த்தி அவர்கள் குறிப்புரையாசிரியராகவும், முனைவர் த.கோ. பரமசிவம் அவர்கள் பொதுப்பதிப்பாசிரியராகவும் இருந்துள்ளனர்.

பொதுப்பதிப்பாசிரியரின் பதிப்புரையோடு நூலின் பதிப்புப் பணியை மேற்கொண்ட முனைவர் சா. கிருட்டினமூர்த்தி அவர்களின் விளக்கமான ஆய்வுரை, இயல் விளக்கக் கட்டுரைகள், நூற்பா முதற்குறிப்பகராதி, உதாரண முதல்நினைப்புக்காரிகை, அகரநிரல், நூற்செய்யுள் சொல்லகர நிரல், உரைச்சொல்-தொடர் அகரநிரல், இலக்கண மேற்கோள் அகரநிரல், இலக்கிய மேற்கோள் அகரநிரல் ஆகியன இப்பதிப்பை அணிசெய்கின்றன.

அறுவகை இலக்கணம் (1991)

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பனவற்றோடு புலமை இலக்கணமும் சேர்ந்து இந்நூலில் ஆறு வகைகள் இடம்பெறுகின்றன.  வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளால் இயற்றப்பெற்ற இந்நூல் நூலாசிரியரின் காலத்திலேயே பூவை. கல்யாண சுந்தர முதலியாரால் 1893ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பெற்றது.  அடுத்து 1978ஆம் ஆண்டு திருப்பேரூராதீன வெளியீடாக மறுபதிப்பு வந்தது.  இவ்விரண்டும் மூலம் மட்டும் அமைந்த பதிப்பாக அமைந்தன.

வண்ணச்சரபர் தம் கைப்பட எழுதிய ஓலைச்சுவடி அவருடைய வழிமுறையினரிடம் இருந்து பெற்றுவரப்பட்டு இந்தப் பதிப்பிற்கு மூல ஏடாகப் பயன்படுத்தப்பெற்றது. தெளிவான உரை, நூற்பா முதற்குறிப்பு அகர வரிசை, மேற்கோள் இலக்கண நூற்பா அகராதி, மேற்கோள் இலக்கியப் பாக்களின் அகராதி முதலியன இப்பதிப்பில் இடம்பெற்றுள்ளன.  புலவர் ப.வெ. நாகராசனின் உரையும் பதிப்புமாக இந்நூல் 1991ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றுள்ளது.

தொல்காப்பியம், பொருளதிகாரம் (செய்யுளியல் நீங்கலாக), இளம்பூரணர் உரை

தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் நீங்கலாக உள்ள இளம்பூரணர் உரையை திரு. அடிகளாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடாக 2008ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

3. மருத்துவச் சுவடிப்பதிப்புகள்
நோயும் மருந்தும் (1994)

திருவரங்கத்தைச் சார்ந்த டாக்டர் ஆர்.எஸ்.இ. இராஜன்பாபு அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறைக்கு வழங்கிய 109 சுவடிகளில் நோய்களுக்குரிய மருந்து கூறும் சுவடியும் ஒன்றாக இருக்க, அதைப் பதிப்பிற்கு எடுத்துக்கொண்டு இந்நூல் த.கோ. பரமசிவம் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 1994ஆம் ஆண்டு எட்டாம் உலகத்தமிழ் மாநாடு பதிப்புச் சுழல்நிதி வெளியீடு 14ஆவதாக வெளிவந்துள்ளது.

பாடல் வடிவில் நூல் முழுமையாக அமைந்த சுவடிகளைப் போலவே அனுபவக் குறிப்புகளாக - உரைநடை வடிவில் நோயைப் பற்றியும், மருந்தைப் பற்றியும், செய்முறைகள் பற்றியும் விளக்கும் நூல்களும் சுவடிகளும் ஏராளமாகக் காணப்படுகின்றன.  இவற்றிற்குத் தனிப்பெயர் ஏதும் இல்லாததால் இருக்கும் பொருண்மைக்கேற்ப நோயும் மருந்தும், நோய்குரிய மருந்து, மருந்து செய்முறைகள்,  ஒரு மருத்துவ நூல், மருத்துவச் செய்திகள் என்ற பொதுப் பெயரில் குறிப்பிடுவதுண்டு.  ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இச்சுவடியும் நூலாசிரியரால் பெயரிடப்பெறாத ஒரு சுவடியே யாகும்.  இச்சுவடி தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையில் பதிவு எண்.150இல் மருந்து செய்முறைகள் என்ற தலைப்பில் பதியப்பெற்றதாகும்.

இந்நூல் ஒன்பது பகுதிகளாக பதிப்பாசிரியரால் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் பதிப்பாசிரியரால் சிறு அறிமுகம் தரப்பட்டுள்ளது.

முதற் பகுதி மருந்துகளுக்கெல்லாம் அடிப்படையாக விளங்கும் மருந்துப் பொருள்களின் குணங்களை அறிவிக்கும் செய்தித் தொகுப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பகுதி, பொதுவாகவும் பரவலாகவும் காணப்படும் சுரம், பல்நோய், கண்ணோய் போன்ற நோய்களும் அவற்றுக்கு இச்சுவடியில் கூறப்பட்ட மருந்துகளும் பற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் பகுதி, சுவாச உறுப்புகள் தொடர்பாகத் தோன்றும் இருமல், காசம், பீனிசம், தலைவலி போன்ற நோய்கள் அவற்றுக்கான மருந்துகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

நான்காம் பகுதி, தோலைப் பற்றிய நோய்களான சிரங்கு, சொறி, படை போன்றவற்றையும் அவற்றுக்கான மருந்துகளையும் கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் பகுதி மகளிர் தொடர்பான இரண்டு நோய்களையும் அதற்கான மருந்துகளையும் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

ஆறாம் பகுதி, மேக வியாதிகள் பலவற்றையும் தொகுத்து அவற்றுக்குப் பரிந்துரைக்கப்பெற்ற மருந்துகளைத் தொகுத்துக் கூறுகின்ற பகுதியாக அமைக்கப்பட்டு உள்ளது.

ஏழாம் பகுதி வயிறு தொடர்பான நோய்களைத் தொகுத்து, செரியாமை, வயிற்றுவலி முதலாக - மூலம் வரை பல்வேறு நோய்களையும் அவற்றுக்கான மருந்துகளையும் முறைப்படுத்திக் காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது.

எட்டாம் பகுதி வாதம் தொடர்பான நோய்களைத் தொகுத்து அவற்றுக்கெல்லாம் இச்சுவடி பரிந்துரைக்கும் மருந்துகளை முறைப்படுத்திக் காட்டும் வண்ணம் நிறைவு செய்யப்பெற்றுள்ளது.

ஒன்பதாம் பகுதி வெட்டை, வெட்டைச்சூடு, வெட்டைப் புண், வௌ¢ளை போன்ற மந்தண நோய்களைப் பற்றிய மருந்துகளைக் கூறும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

பின்னிணைப்பாக சித்த மருத்துவ நூல்களில் கூறப்படும் மருந்துகளின் பழைய அளவைகளும் அ வற்றுக்கு நிகரான தற்கால அளவைகளும்,  மருந்து செய்முறையும் மருந்து வகைகளும், அருஞ்சொல்லடைவு, நோயும் பிணியும், மருந்தும் மருந்துப்பொருளும் போன்றன இடம்பெற்றுள்ளன.

அகத்தியர் வைத்திய காவியம் 1500 (1994)

அகத்தியர் வைத்திய காவியம் 1500 என்னும் இந்நூல் 1994ஆம் ஆண்டு எட்டாம் உலகத்தமிழ் மாநாடு பதிப்புச் சுழல்நிதி வெளியீடு 9ஆவதாக வெளிவந்துள்ளது.  இந்நூலின் பதிப்பாசிரியர் முனைவர் வே.இரா. மாதவன் ஆவார்கள்.  தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையினுடைய சுவடிகள் நூலகத்தில் உள்ள அகத்தியர் வைத்திய காவியச் சுவடிகள் ஏழு (சுவடி எண்கள்:740, 797, 1344, 1873, 2002, 2264, 2395) சுவடிகளை அடிப்படையாகக் கொண்டு சென்னை அரசினர் கீழ்த்திசைச்சுவடிகள் நூலகத்தில் உள்ள பதின்மூன்று சுவடிகளையும் ஒப்பீடு செய்யப்பெற்று வெளிவந்துள்ளது.

இந்நூல் பதிப்பாசிரியரின் பதிப்பாய்வுரை, நூல் ஆய்வு, அகத்தியர் வைத்திய காவியம் 1500 மூலம் - பொருள் அட்டவணை(பாடலெண் வரிசையில் அமைக்கப்பட்டது),  பொருள் அட்டவணை (அகரவரிசை), நூல் - மூலம் (அடிக்குறிப்புடன்), உரைவிளக்கங்கள் (நாடி இலக்கணம், நோய்கள் பிறக்கும் வகை மற்றும் குறிகுணங்கள், மருந்துப் பொருள் சுத்தி முறைகள், மருந்து செய்முறைகள், நோயும் மருந்தும், பத்தியம், நிறைகள்-அளவுகள்), பின்னிணைப்புகளாக மருந்துப்பொள்கள் அட்டவணை, நோய்கள் அட்டவணை, பாடல் முதற்குறிப்பு அட்டவணை, அருஞ்சொற்கள் அட்டவணை, அச்சுநூல் விவரம், துணைநூல்கள் என்றவாறு i-xii+1040 பக்கங்கள் கொண்ட மிகப்பெரிய ஆய்வுப் பதிப்பாக அமைந்துள்ளது.

வைத்திய சிந்தாமணி (2003)

வைத்திய சிந்தாமணி எனும் இந்நூல் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை சுவடிகள் நூலகத்தில் உள்ள சுவடியை (சுவடி எண்.799) அடிப்படையாகக் கொண்டு முனைவர் வே.இரா. மாதவன் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 2003ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு 260ஆவதாக வெளிவந்துள்ளது.  இந்நூல் 724 பாடல்களைக் கொண்டுள்ளது.  இந்நூல் ஒரு தொகுப்பு நூலாகலாம்.  “இந்நூலினுள் அமைந்த பாடல்களை நோக்குமிடத்து, அவை வெவ்வேறு நூல்களிலிருந்தும் செய்திகளைத் திரட்டித் தொகுக்கப்பட்டதாகத் தெரிகின்றது.  குறிப்பாக, அகத்தியர் நூல்களையெல்லாம் திரட்டி அளித்ததாகத் தெரிகின்றது” என்ற பதிப்பாசிரியரின் குறிப்பு இதனை மெய்ப்பிக்கிறது.  இதுபோன்று வேறு மாற்றுச் சுவடி இல்லாமையால் இந்த ஒரு சுவடியை மட்டும் முதன்மையாகக் கொண்டு பதிப்பிக்கப்பெற்றுள்ளது.

இந்நூல், பதிப்பாசிரியரின் பதிப்புரை, வைத்திய சிந்தாமணி - பொருள் அட்டவணை (அகரவரிசையில்), வைத்திய சிந்தாமணி நூல் -மூலம், வைத்திய சிந்தாமணி உரைவிளக்கங்கள், பின்னிணைப்புகளாக மருந்துப் பொருள்கள் அகர வரிசை, நோய்கள் அகர வரிசை, பாடல் முதற்குறிப்பு அகர வரிசை, அருஞ்சொற்கள் அகர வரிசை, துணை நூல்கள் என்றவாறு அமைந்துள்ளது.

தன்வந்தரி வைத்தியக் கும்மி 300 (2004)

தன்வந்தரி வைத்தியக் கும்மி எனும் இந்நூல் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை சுவடிகள் நூலகத்தில் உள்ள (சுவடி எண்.2191) சுவடியை அடிப்படையாகக் கொண்டு முனைவர் வே.இரா. மாதவன் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 2004ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீ 264ஆவதாக வெளிவந்துள்ளது.  தன்வந்தரி என்னும் ஆசிரியர் பெயரில், மருத்துவச் செய்திகள் அடங்கிய, கும்மிப்பாடல் யாப்பிலமைந்த முந்நூறு பாடல்களான நூலாக இது அமைந்துள்ளது.  ஞானப்பெண்ணே என்று ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் வைத்துப் பாடப்பெற்றுள்ளது.  காட்டாக,

“சுண்ணத்தால் வீரங்கள் பூரங்கள் காரங்கள்
சொல்லும் அறுபத்து நால்சரக்கும்
விண்ணத்தம் இல்லாமல் சிந்தூரம் பற்ப
மாய்நீறும் பாரடி ஞானப்பெண்ணே”.  (பா.14)

என்றவாறு அமைந்திருக்கிறது.

இந்நூல் பதிப்பாசிரியரின் பதிப்புரை, தன்வந்தரி வைத்தியக்கும்மி 300 பொருளட்டவணை, தன்வந்தரி வைத்தியக் கும்மி 300 நூல் - மூலமும் உரையும், பின்னிணைப்புகளாக மருந்துப் பொருள்கள் அகர வரிசை, நோய்கள் அகர வரிசை, பாடல் முதற்குறிப்பு அகரவரிசை, அருஞ்சொற்கள் அகர வரிசை, துணை நூல்கள் என்றவாறு அமைந்துள்ளது.

அகத்தியர் வைத்தியம் 300 (2009)

அகத்தியர் வைத்தியம் 300 எனும் இந்நூல் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை சுவடிகள் நூலகத்தில் சுவடி எண்.35, 2288.2, 2447ஆகிய மூன்று சுவடிகளில் முழுமையாக உள்ள சுவடி எண்.35யை அடிப்படையாகக் கொண்டு முனைவர் வே.இரா. மாதவன் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 2009ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு 348ஆவதாக வெளிவந்துள்ளது.  

இந்நூல் பதிப்பாசிரியர் உரை, பொருள் அட்டவணை, அகத்தியர் வைத்தியர் 300 மூலம், பின்னிணைப்புகளாக மருந்துப் பொருள்கள் அகர வரிசை, நோய்ப்பெயர்கள் அகர வரிசை, பாடல் முதற்குறிப்பு அகர வரிசை, அருஞ்சொற்கள் அகர வரிசை என்றவாறு அமைந்துள்ளது.

அகத்தியர் குணவாகடம் (2009)

அகத்தியர் குணவாடகம் எனும் இந்நூல் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை சுவடிகள் நூலகத்தில் உள்ள (சுவடி எண்.630) சுவடியை அடிப்படையாகக் கொண்டு முனைவர் வே.இரா. மாதவன் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 2009ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு 349ஆவதாக வெளிவந்துள்ளது.  

இந்நூல் பதிப்பாசிரியர் உரை, பொருள் அட்டவணை, அகத்தியர் குணவாகடம் மூலம், பின்னிணைப்புகளாக நோய்கள் அகர வரிசை, பாடல் முதற்குறிப்பு அகர வரிசை, அருஞ்சொற்கள் அகர வரிசை என்றவாறு அமைந்துள்ளது.

அகத்தியர் வைத்தியம் 205  (2009)

அகத்தியர் வைத்தியம் 205 எனும் இந்நூல் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை சுவடிகள் நூலகத்தில் உள்ள (சுவடி எண்.769 மற்றும் 879) இரண்டு சுவடிகளை அடிப்படையாகக் கொண்டும், மேலும் சுவடி எண்.810-2, 1682, 1709-2, 1817, 1872-1, 1883, 2167-4, 2241, 2262-2, 2265-3, 2278-11, 2294-1, 2566, 2683-1 ஆகிய பதினான்கு சுவடிகளை ஒப்பு நோக்கியும் முனைவர் வே.இரா. மாதவன் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 2009ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு 350ஆவதாக வெளிவந்துள்ளது.  

இந்நூல் பதிப்பாசிரியர் உரை, பொருள் அட்டவணை, அகத்தியர் வைத்தியம் 205¢ மூலம், பின்னிணைப்புகளாக மருந்துப் பொருள்கள் அகர வரிசை, நோய்ப்பெயர்கள் அகர வரிசை, பாடல் முதற்குறிப்பு அகர வரிசை, அருஞ்சொற்கள் அகர வரிசை என்றவாறு அமைந்துள்ளது.

அகத்தியர் சரக்கு சுத்தி 150

அகத்தியர் சரக்கு சுத்தி 150 எனும் இந்நூல் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை சுவடிகள் நூலகத்தில் உள்ள (சுவடி எண்.2153 மற்றும் 2634) இரண்டு சுவடிகளை அடிப்படையாகக் கொண்டும், மேலும் சுவடி எண்.768 மற்றும் 2145 ஆகிய இரண்டு சுவடிகளை ஒப்பு நோக்கியும் முனைவர் வே.இரா. மாதவன் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 2009ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு 351ஆவதாக வெளிவந்துள்ளது.  

இந்நூல் பதிப்பாசிரியர் உரை, பொருள் அட்டவணை, அகத்தியர் சரக்கு சுத்தி 150 மூலம், பின்னிணைப்புகளாக மருந்துப் பொருள்கள் அகர வரிசை, நோய்ப்பெயர்கள் அகர வரிசை, பாடல் முதற்குறிப்பு அகர வரிசை, அருஞ்சொற்கள் அகர வரிசை என்றவாறு அமைந்துள்ளது.

அகத்தியர் வைத்தியம் 108

அகத்தியர் வைத்தியம் 108 எனும் இந்நூல் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை சுவடிகள் நூலகத்தில் உள்ள சுவடி எண்.2168யை அடிப்படையாகக் கொண்டு முனைவர் வே.இரா. மாதவன் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 2009ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு 355ஆவதாக வெளிவந்துள்ளது.  

இந்நூல் பதிப்பாசிரியர் உரை, பொருள் அட்டவணை, அகத்தியர் வைத்தியம் 108¢ மூலம், பின்னிணைப்புகளாக மருந்துப் பொருள்கள் அகர வரிசை, நோய்ப்பெயர்கள் அகர வரிசை, பாடல் முதற்குறிப்பு அகர வரிசை, அருஞ்சொற்கள் அகர வரிசை என்றவாறு அமைந்துள்ளது.

4. மறுதோன்றிச் சுவடிப்பதிப்புகள்

கலித்தொகை நச்சினார்க்கினியர் உரை (1984)

கலித்தொகை மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும் இடையாற்று மங்கலம் வைத்தீச்சுவரையரவர்கள் குமாரரும் சென்னை பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதருமாகிய அனந்தராமையரால் நன்கு பரிசோதித்து தாம் புதிதாக எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புடன் சென்னை நோபில் அச்சுக்கூடத்தில் 1925ஆம் ஆண்டு பாலைக்கலி மற்றும் முல்லைக்கலி முதல் தொகுதியாகவும், மருதக்கலை மற்றும் முல்லைக்கலி இரண்டாம் தொகுதியாகவும் வெளிவந்துள்ளது.  இதன் மூன்றாம் தொகுதியான நெய்தற்கலி 1931ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.  இம்மூன்று தொகுதிகளின் ஒருங்கிணைந்த தொகுதியாக தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு 2ஆவதாக 1984ஆம் ஆண்டு நிழற்படப் பதிப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.


தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை (1984)

தொல்காப்பியம் சொல்லதிகாரம் செய்வச்சிலையார் உரையை கரந்தைத் தமிழ்ச்சங்கம் சுக்கில வருடம் வைகாசி மாதம் (1929) வெளியிட்டுள்ளது.  இப்பதிப்பின் மதிப்புரிமை பெற்று தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு 5ஆவதாக 1984ஆம் ஆண்டு நிழற்படப் பதிப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.

சிலப்பதிகாரம் (1985)

இளங்கோவடிகளருளிச் செய்த சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்குநல்லாருரையும் என்ற நூலை உத்தமதானபுரம் மஹாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் வே. சாமிநாதையரவர்கள் பல பிரதி ரூபங்களைக் கொண்டு பரிசோதித்து நூதனமாக எழுதிய பலவகை ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் 1892ஆம் ஆண்டு முதற் பதிப்பாக வெளியிட்டுள்ளார்.  இப்பதிப்பின் மூன்றாம் பதிப்பின் (1927) பதிப்புரிமை பெற்று தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு 28ஆவதாக1985ஆம் ஆண்டு நிழற்படப் பதிப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.

புறநானூறு மூலமும் உரையும் (1985)

புறநானூறு மூலமும் உரையும் என்ற நூலை மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் வே. சாமிநாதையரவர்களால் பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்து நூதனமாக எழுதிய பலவகை ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் 1894ஆம் ஆண்டு முதற் பதிப்பை வெளியிட்டுள்ளார்.  இப்பதிப்பின் ஆறாம் பதிப்பின் (1963) பதிப்புரிமை பெற்று தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு 37ஆவதாக 1986ஆம் ஆண்டு நிழற்படப் பதிப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.

பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும் (1986)

பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும் என்ற நூலை உத்தமதானபுரம் மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் வே. சாமிநாதையரவர்கள் பரிசோதித்து எழுதிய பலவகை ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் சார்வரி வருடம் மாசி மாதம் (1961ஆம் ஆங்கில ஆண்டு) வெளியிட்டுள்ளார்.  இப்பதிப்பின் மதிப்புரிமை பெற்று தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு 56ஆவதாக 1986ஆம் ஆண்டு நிழற்படப் பதிப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.


சீவக சிந்தாமணி (1986) 

திருத்தக்கதேவரியற்றிய சீவகசிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியருரையும் என்ற நூலை உத்தமதானபுரம் மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்திய கலாநிதி டாக்டர் வே. சாமிநாதையரவர்கள் பல பிரதி ரூபங்களைக் கொண்டு பரிசோதித்து நூதனமாக எழுதிய பலவகை ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் 1887ஆம் ஆண்டு முதற்பதிப்பை வெளியிட்டுள்ளார்.  இப்பதிப்பின் ஏழாம் பதிப்பின் (1969) பதிப்புரிமை பெற்று தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு 58ஆவதாக 1986ஆம் ண்டு நிழற்படப் பதிப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.

5. சுவடி அட்டவணைகள்
ஓலைச்சுவடிகளுக்குப் பட்டியல்கள்

முதன் முதலாக இத்துறை நூலகத்தில் 1985ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை தொகுக்கப்பெற்ற 1123 சுவடிகளுக்கு நூற்பெயர், ஆசிரியர் பெயர், நூல் செய்யுளா உரைநடையா, எத்தனை ஏடுகள் உள்ளன, முழுமையா அல்லது குறையா என்னும் விவரங்களை எழுதிக் கணிப்பொறி வழியாக ஆங்கிலத்தில் 1985ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.  இது ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகப் பொது நூலகம், கணிப்பொறி அறிவியல் துறை ஆகிய மூன்று துறைகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும்.  K.C. செல்லமுத்து, T. பத்மநாபன் மற்றும் ப.வெ. நாகராஜன் ஆகியோர் இந்நூலின் பதிப்பாசிரியர்களாவர்.

தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணை 1 முதல் 10 தொகுதிகள் உரை இடம்பெற்றுள்ள 5000 நூல்களுக்கான அகரவரிசை அட்டவணையான ‘தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடிகள் அட்டவணை’ ஒன்று அச்சிடும் நிலையில் உள்ளது.  இந்நூலினை முனைவர் மோ.கோ. கோவைமணி தயாரித்துக் கொடுத்துள்ளார்.

தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணைகள்

சுவடிவிளக்க அட்டவணையானது  நூலகக் குறிப்பு (தொடர் எண், பொருட்பகுப்பு எண்); உள்ளீடு: நூல் விவரம் (ஆசிரியர் பெயர், நூற்பெயர், பொருள், செய்யுள்/உரைநடை/செய்யுளும் உரைநடையும்); தோற்றக் கூறுகள் (ஏடுகளின் எண்ணிக்கை, ஏட்டின் அளவு - நீளம் மற்றும் அகலம், இருபக்கமும் எழுதப்பட்டுள்ளதா ஒருபக்கம் மட்டும் எழுதப்பட்டுள்ளதா, எழுத்துநிலை, சுவடியின் நிலைமை, முழுமை/குறை); சிறப்புச் செய்திகள் (நூலின் தொடக்கம், நூலின் முடிவு, முற்குறிப்பு மற்றும் பிற்குறிப்புச் செய்திகள்); பிற செய்திகள் என்றவாறு ஒவ்வொரு நூலுக்கும் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.  ஒரு தொகுதிக்கு 500 நூல்கள் என்ற விகிதாச்சார அடிப்படையில் இதுவரை 1-8 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.  1 முதல் 6 தொகுதிகள் வரை மைய அரசின் தேசிய ஆவணக் காப்பகத்தின் நல்கை பெற்று 1987ஆம் ஆண்டு 1 முதல் 4 தொகுதிகளையும், 1989ஆம் ஆண்டு 5ஆம் தொகுதியையும், 1992ஆம் ஆண்டு 6ஆம் தொகுதியையும் வெளியிடப்பட்டுள்ளது.  7 மற்றும் 8ஆம் தொகுதிகளைத் தமிழ்ப் பல்கலைக்கழகமே 2010ஆம் ஆண்டு செம்மொழி மாநாட்டு வெளியீடுகளாக வெளியிட்டுள்ளது.  9 மற்றும் 10 தொகுதிகள் அச்சிடும் நிலையில் உள்ளன.  இப்பத்துத் தொகுதிகளில் ஒவ்வொன்றின் பின்னிணைப்பாக அவ்வவ் தொகுதிகளில் இடம்பெற்ற நூல்களுக்கான ஆசிரியர் பெயர் அகரவரிசை, நூற்பெயர் அகரவரிசை, பொருட்பகுப்பு வரிசை ஆகியன முறையே இடம்பெற்றுள்ளன.

அனைத்துலகத் தமிழ் ஒலைச்சுவடிகள் அட்டவணை

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், சிதம்பரம்; மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை; ஸ்ரீவெங்கடேசுவரா பல்கலைக்கழகம், திருப்பதி; தவத்திரு சாந்திலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி, பேரூர், கோவை; கலைமகள் கல்வி நிலையம், ஈரோடு; கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை; உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை; கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், திருவனந்தபுரம்; இந்திய தேசிய நூலகம், கல்கத்தா; டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் நூலகம், சென்னை; தமிழ்ச் சங்கம், மதுரை; மகாராஜா சரபோசி சரஸ்வதிமகால் நூலகம், தஞ்சாவூர்; பிரஞ்சிந்திய நிறுவனம், பாண்டிச்சேரி; திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை; ஸ்ரீமௌனசுவாமிகள் மடம், சிதம்பரம்; கௌமார மடாலயம், சரவணம்பட்டி, கோவை; இந்திய அலுவலக நூலகம், லண்டன்; பிரிட்டிஷ் அருங்காட்சியகம், லண்டன்; ராயல் ஏசியாடிக் சொசைட்டி நூலகம், லண்டன்; எடின்பர்க் பல்கலைக்கழக நூலகம், லண்டன்; ஸ்காட்லாந்து எடின்பர்க் தேசிய நூலகம், ஸ்காட்லாந்து; கிளாஸ்கோ பல்கலைக்கழக ஹண்டேரியன் நூலகம், கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து; ஜான் ரைலாட்ஸ், மான்செஸ்டர், இங்கிலாந்து; கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக நூலகம், கேம்ப்ரிட்ஜ்; போடிலியன் நூலகம், ஆக்ஸ்போர்டு; ட்ரினிட்டி கல்லூரி, பாப்லின் நூலகம், அயர்லாந்து; பிபிலோதேகு நேஷனல், பாரிஸ், பிரான்சு; தேசிய அருங்காட்சியகம், கோபன்ஹேகன், டென்மார்க்; ராயல் நூலகம், கோபன்ஹேகன், டென்மார்க்; பிபிலோதேகா அப்போஸ்டிலிகா, வாடிகன் நகர;k, ரோம்; ஜெர்மன் ஓரியண்டல் சொசைட்டி நூலகம், ஹேல், கிழக்கு ஜெர்மனி; லூதரன் மிஷன் சர்ச் அருங்காட்சியகம், லிப்ஷிக், கிழக்கு ஜெர்மனி; மாநில மற்றும் பல்கலைக்கழக நூலகம், ஹம்பர்க், மேற்கு ஜெர்மனி; உப்சலா பல்கலைக்கழக நூலகம், உப்சலா, சுவீடன்; எதினோகிராபிகல் அருங்காட்சியகம், ஸ்டாக்ஹோம், சுவீடன்; லெனின் மாநில நூலகம், மாஸ்கோ, சோவியத் யூனியன்; லெனின்கிராடு பல்கலைக்கழக நூலகம், லெனின்கிராடு, சோவியத்யூனியன்; சோவியத் யூனியன் ஓரியண்டல் இன்ஸ்டிட்யூட் நூலகம், லெனின்கிராடு, சோவியத்யூனியன் ஆகிய 39 இடங்களிலுள்ள 21,973 தமிழ்ச் சுவடிகள் பற்றிய செய்திகள் மைய அரசின் நல்கையைக் கொண்டு தொகுக்கப்பெற்று கணிப்பொறி வழியே ரோமன் எழுத்தில் 1986ஆம் ஆண்டு உருவாக்கப்பெற்று 1991ஆம் ஆண்டு தமிழில் ஐந்து தொகுதிகளாகவும், ஆங்கிலத்தில் ஐந்து தொகுதிகளாகவும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் இடம்பெற்ற ஐந்து தொகுதிகளில் 1 முதல் 4 தொகுதிகள் வரை அனைத்துல ஓலைச்சுவடிகளுக்கான விவரங்களும், 5ஆம் தொகுதியில் முதல் நான்கு தொகுதிகளுக்கான அட்டவணையாகவும் அமைக்கப்பட்டுள்ளது  இதுபோலவே ஆங்கிலத் தொகுதிகளும் அமைந்திருக்கும்.  இவை ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகப் பொது நூலகம், கணிப்பொறி அறிவியல் துறை ஆகிய மூன்று துறைகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும்.

முடிவுரை

இதுபோன்ற பல சுவடிப் பதிப்புகள் இன்னும் வெளிவரக் கூடிய நிலையில் இருப்பதால் சுவடிப்பதிப்பு வரலாற்றில் தமிழ்ப் பல்கலைக்கழகம் நீங்கா இடம் பிடிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக