வெள்ளி, 2 நவம்பர், 2018

நாட்டாரின் பதிப்புத்திறன்

பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழாசிரியராகப் பணிபாற்றிப் பல நூறு மாணவர்களுக்குக் குருவாகத் திகழ்ந்தவர் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள்.  அறுபது ஆண்டுகளே (கி.பி.1884 - 1994) தமிழுலகில் வாழ்ந்தாலும் தமிழுலகம் உள்ள வரை நிலைபெற்று வாழும் சிறப்பினைப் பெற்றவர்.  தமிழாசிரியராகவும், வரலாற்றாசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும், உரையாசிரியராகவும் தமிழுலகில் வீறுநடை போட்டவர் கவிஞராகவும் திகழ்ந்திருக்கின்றார் என்பது அதிகம் அறியப்பெறாத ஒரு செய்தியாகும்.

தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்கி கீழ்க்கணக்கு நானாற்பதில் கார் நாற்பாது (1923), களவழி நாற்பது (1924) ஆகியவற்றிற்கும்; பிற்கால நீதி நூல்களில் ஆத்திசூடி (1950), கொன்றைவேந்தன் (1949), வெற்றிவேற்கை, மூதுரை, நல்வழி (1950), நன்னெறி (1952) ஆகியவற்றிற்கும்; திருவிளையாடற் புராணம் (மதுரைக் காண்டம் - 1927, கூடற் காண்டம் - 1928, திருவாலவாய்க் காண்டம் - 1931), சிலப்பதிகாரம் (1942), அகநானூறு (களிற்றியானைநிரை - 1943, மணிமிடைபவளம் - 1944, நித்திலக் கோவை - 1944), மணிமேகலை (1946) ஆகியவற்றிற்கும் நாட்டார் அவர்கள் உரைவரைந்து பதிப்பித்திருக்கின்றார்.

இவ்வுரைப் பதிப்புகளன்றி வேளிர் வரலாற்று ஆராய்ச்சி (1915), நக்கீரர் (1919), கபிலர் (1921), கள்ளர் சரித்திரம் (1923), கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் (1926), சோழர் சரித்திரம் (1928) ஆகிய வரலாற்று ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.  மேலும், தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச்செல்வி ஆகிய மாத இதழ்களின் வழி பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்.  இக்கட்டுரைகளின் தொகுப்பாகக் கட்டுரைத் திரட்டு - பாகம் 1 (1940), கட்டுரைத் திரட்டு பாகம் - 2(1951 மறுபதிப்பு), நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஆய்வுக் கட்டுரைகள் (1994) ஆகிய திரட்டு நூல்கள் வெளிவந்திருக்கின்றன.  நாட்டார் அவர்கள் கவிஞராகவும் திகழ்ந்திருக்கின்றார் என்பதற்கு அவரின் வைகறை நினைவு, தமிழன்னை வாழ்த்து, கருவூர் ஒன்பான் மணிமாலை, பஞ்சரத்தினம், வள்ளுவர் கலித்துறை ஆகிய கவிதைகள் எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன.

I. பதிப்புலகில் நாட்டார்

சுவடியிலுள்ளவற்றை இன்றைய காகிதத்தில் அச்சினால் பதிப்பிக்கப்பெற்றதைப் பழைய பதிப்பு, திருத்தப் பதிப்பு, ஆராய்ச்சிப் பதிப்பு என மூன்று வகைகளாகப் பாகுபடுத்தலாம்.  

சுவடியிலுள்ள எழுத்தமைதியை அவ்வாறே ஏற்றுக்கொண்டு - ஏட்டில் உள்ளவாறே அச்சில் பதிப்பித்ததைப் 'பழைய பதிப்பு' என்பர்.  அதாவது, பாடல் அதன்கீழ் உரை என்ற பிரிப்பு முறையால் மட்டும் வேறுபட்டுக் காணப்படும்; பாடல் அடிகளாகவோ அடிகள் சீர்களாகவோ பிரித்துக் காட்டப்பெறாத நிலையில் மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியில்லாமலும் ஒற்றை இரட்டைக் கொம்புகளுக்கு வேறுபாடில்லாமலும் அச்சிடுதல் எனலாம்.

மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியிட்டும், ஒற்றை இரட்டைக் கொம்புகளுக்கு வேறுபாடு காட்டியும் பொருள் தெளிவுக்கு நிறுத்தக் குறியீடுகளைப் பயன்படுத்தியும் வரியமைப்புகள், சீர் அமைப்புகளை உருவாக்கியும் இன்றைய அச்சு வடிவில் பதிப்பிப்பதைத் 'திருத்தப் பதிப்பு' என்பர்.  அதாவது, நூலில் காணும் ஐயங்களை நீக்கிப் பொருள் தெளிவு ஏற்படவும், படிப்பவர்கள் தாமே பாடத்தை உறுதிசெய்து கொள்வதற்காக எல்லாப் பிரதிகளிலும் காணப்படும் பாடவேறுபாடுகளைக் குறிப்பதுவும், பாடல்கள் உரைகள் எனத் தனித்தனியாகப் பிரிப்பதுவும் போன்ற அமைப்புகளைத் திருத்தப் பதிப்பு எனலாம்.

பல சுவடிகளை ஆய்ந்து, சிறந்த பாடத்தைத் தேர்ந்து சந்திகளைப் பிரிப்பதும், தெளிவுரை, குறிப்புரை, கருத்துரை, பதவுரை, விரிவுரை போன்ற அமைப்புகளுடன் நூலின் முழுத் தன்மையையும் ஆய்ந்து நூலில் காணப்படும் சிறப்புச் செய்திகள், நூலாசிரியர், உரையாசிரியர், பாட்டுடைத் தலைவர் ஆகியோர் வரலாறுகள், பாட்டு முதற்குறிப்பகராதி, அருஞ்சொற்பொருள் அகரநிரல், பதிப்பு வரலாறுள் போன்ற அமைப்புகளுடைய பதிப்பை 'ஆராய்ச்சிப் பதிப்பு' என்பர்.

பழைய பதிப்பு, திருத்தப் பதிப்பு, ஆராய்ச்சிப் பதிப்பு ஆகிய மூன்று வகைப் பதிப்புகளில் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் பதிப்புகள் அனைத்தும் மூன்றாவது வகையான ஆராய்ச்சிப் பதிப்பைச் சேர்ந்தவையாகத் திகழ்கின்றன.  இவரின் இப்பதிப்புகளை 'உரைப் பதிப்புகள்' என்றும் கூறுவர்.

அ.  உரைப்பதிப்பின் தேவை 

நாட்டார் அவர்கள் தம்முடைய உரைப்பதிப்புகளுக்குச் (களவழி நாற்பது தவிர) சுவடிகளை ஆதாரமாகக் கொள்ளாமல் தமக்கு முன்னர் வெளியிட்ட அச்சுப் புத்தகங்களையே மூலமாகக் கொண்டிருக்கின்றார்.  இப்புத்தகங்களில் பதிப்பாசிரியர்கள், உரையாசிரியர்கள் கொண்ட பாடமும் திருத்தமும் பிழைபட இருப்பதைக் கண்டவர், அப்பதிப்புகளுக்கெல்லாம் ஒரு திருத்தமான ஆராய்ச்சிப் பதிப்பு, மக்களுக்குத் தேவைப்படும் நிலையில் அமையக் கூடிய உரைப்பதிப்பின் தேவையை உணர்கின்றார்.  இதன் பயனாகத்தான் இவர்தம் உரைப்பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.

நாட்டாரது உரைப்பதிப்பில் முன் வரைந்த உரையாசிரியர்கள் எவ்வெவ்விடங்களில் ஒன்றுபடுகின்றனர், எவ்வெவ்விடங்களில் வேறுபடுகின்றனர் என்பதை எடுத்துக்காட்டி வேறுபடும் இடங்களில் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று நூலாசிரியரின் பாடத்தை நிலைநிறுத்தவும் செய்திருக்கின்றார்.

சிலப்பதிகாரத்திற்கு உ.வே. சாமிநாதையர் அவர்கள் 1892, 1920, 1927ஆம் ஆண்டுகளில் முறையே முதல் மற்றும் திருத்தப் பதிப்புகளைக் கொடுத்துள்ளார்.  மூன்றாவது பதிப்பு குறித்து உ.வே. சாமிநாதையர் அவர்கள், "இதன் இரண்டாம் பதிப்பு 1920ஆம் வருஷத்தில் வெளியாயிற்று.  அதன்பின்பு செய்துவந்த ஆராய்ச்சியால் இதன் மூலமும் உரை முதலியனவும் சில திருத்தங்களைப் பெற்றுள்ளன.

இந்நூலைக்கொண்டு வேறு நூல்களையும், அவற்றைக்கொண்டு இதனையும் ஆராய்ந்து உண்மை காண்டற்குக் கருவியாக மூலத்திலும் உரையிலும் காணப்பட்ட பல விஷயங்களும் தொகையகராதி முதலியனவாக முதற்பதிப்பில் அதன் முகவுரையின் பின்னர்ப் பதிப்பிக்கப்பெற்றிருந்தன.  அப்பால் அவைகளையும், மூலத்திலும் இருவகை உரைகளிலும் காணப்பட்டு முன்பு பதிப்பிக்கப்பெறாமலிருந்த அரும்பதங்களையும், அருந்தொடர்களையும், சில உவமான உவமேயங்களையும், பழைய செய்திகளையும் வழக்கங்களையும் ஒருங்கு சேர்த்து ஒரே அகராதியாக நூலின் பின் 'அரும்பத முதலியவற்றின் அகராதி' என்னும் பெயருடன் பதிப்பிக்கலானேன்.  இவ்வகராதியில் சில அரும்பதங்களுக்கு உரையும் எழுதப்பெற்றிருக்கிறது.  இந்நூற் பகுதிகளை ஒத்த பிற நூற்பகுதிகளும், இந்நூற்பகுதிகள் மேற்கோளாக வந்துள்ள இடங்களும் அவ்வப் பக்கங்களின் கீழே அடிக்குறிப்பாகப் பதிப்பிக்கப்பெற்றுள்ளன.  முதற்பதிப்பில் 'என' என்று கொண்ட ஆசிரியப்பாக்களின் இறுதியசை அப்பால் 'என்' என்று கொள்ளப்பட்டது" (சிலப்பதிகாரம், மூன்றாம் பதிப்பின் முகவுரை, ப.8) என்பதைக் காணும் போது ஒரு பதிப்பாசிரியரே ஒரு நூலுக்கு மூன்று பதிப்புகளைக் கொணர்ந்து திருத்தப் பாடங் கொண்டமை புலப்படுகின்றது.  

ஐயர் பதிப்பில் பாடங்கள் தெளிவடைந்து இருக்கும் என்று விட்டுவிடாமல் அவர் பதிப்புகளையும் அவருக்கு முந்திய பதிப்புகளையும் ஆய்ந்து நாட்டார் அவர்கள் உ.வே.சா. பதிப்பிற்குப் பிறகும் திருத்தப் பதிப்புடன் உரை ஒன்று வேண்டுவதன் அவசியத்தை உணர்த்துகின்றார்.  இதனை நாட்டார் அவர்கள், "இந்நூலின் (சிலப்பதிகாரம்) மூலமும் உரைகளும் ஐயரவர்களால் பதிப்புத் தோறும் திருத்தம் பெற்றுள்ளவேனும், அவை பின்னும், திருத்தவேண்டிய நிலையில் இருந்தன" என்றவர், தாம் எழுதிய சிலப்பதிகார உரையில் தாம் மேற்கொண்ட நிலையினைப் பின்வருமாறு விளக்கிக் கூறுகின்றார்.

"இவ்வுரையின்கண், மூலத்தின் இன்ன பகுதிக்கு இது பொருள் என்று தேடி இடர்ப்படா வண்ணம் சொற்களைக் கிடந்தவாறே கொண்டுகூட்டின்றித் தனி மொழியாகவும் தொடர் மொழியாகவும் ஏற்ற பெற்றி எடுத்தமைத்துப் பொருள் கூறப் பெற்றுளது; அரும்பதவுரை யாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் வேறுபடக் கொண்ட பாடங்களையும், பொருள்களையும் சீர்தூக்கிப் பார்த்து ஏற்பன கொள்ளப்பெற்றுள; ஒரோ வழி அவ்வேறுபாடுகளையும், உரையின் சிறந்த பகுதிகளையும் எடுத்துக் காட்டுதலும், பொருந்தாதனவெனத் தோன்றியவைகளைக் காரணங் காட்டி மறுத்தலும் செய்யப்பெற்றுள; அவ்வுரைகளால் விளக்கம் பெறாதன விளக்கவும் பெற்றுள; இன்றியமையாத இலக்கணங்களும் மேற்கோள்களும் ஆண்டாண்டுக் காட்டப்பெற்றுள" (சிலப். முகவுரை) என்கிறார்.

"உழைமுத லாகவும் உழையீ றாகவும்
குரல்முத லாகவுங் குரல¦ றாகவும்
அகநிலை மருதமும் புறநிலை மருதமும்
அருகியல் மருதமும் பெருகியல் மருதமும்
நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி" (சிலப்.8:37-41)

என்னும் சிலப்பதிகார வரிகளுக்கு நாட்டார் தரும் விளக்கம் உரைப்பதிப்பின் தேவையை உணர்த்துகின்றது.

ஆ.  நாட்டாரின் உரைப்பதிப்புகள்

நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் பல்வேறு வகையான உரைப் பதிப்புகளைத் தமிழுலகிற்குக் கொடையாகத் தந்துள்ளார்.  இவரின் உரைப்பதிப்புகள் சங்க இலக்கியம், கீழ்க்கணக்குகள், காப்பியங்கள், புராணம் மற்றும் பிற்கால நீதி நூல்கள் என்று அமைந்திருக்கின்றன.  அதாவது, சங்க இலக்கியத்தில் அகநானூறுக்கும், ஐம்பெருங்காப்பியங்களில் இரட்டைக் காப்பியங்கள் என்று வழங்கப்பெறும் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலைக்கும்(முதல் 26 காதைகளுக்கு மட்டும்), கீழ்க்கணக்கு நூல்களில் கார் நாற்பது மற்றும் களவழி நாற்பதிற்கும், பிற்கால நீதி நூல்களில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், உலகநீதி, நறுந்தொகை, மூதுரை, நல்வழி, நன்னெறி ஆகியவற்றுக்கும், பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்திற்கும் நாட்டார் அவர்கள் சிறந்த உரை வரைந்திருக்கின்றார்.  
   
1.  அகநானூறு

ஐந்து திணைக்குரிய ஒழுக்கங்களை 400 பாடல்களால் பாடப்பெற்றது அகநானூறு.  இதுவொரு தொகுப்பு நூலாகும்.  இதனை 142 புலவர்கள் பாடியிருக்கின்றனர்.  இந்நூலின் முதற் அச்சுப்பதிப்பு 1920ஆம் ஆண்டு இரா. இராகவையங்கார் அவர்களால் வெளியிடப்பெற்றுள்ளது.  இதன் மறுபதிப்புகள் 1923, 1935ஆம் ஆண்டுகளில் முறையே வெளிவந்துள்ளது.  அதன் பிறகு 1926ஆம் ஆண்டு கோபாலையங்கார் அவர்கள் களிற்றியானை நிரையை மட்டும் வெளியிட்டுள்ளார்.  இவ்விரு பதிப்புகளைக் கொண்டு நாட்டார் அவர்கள் தம்முடைய சொற்பொருளுரையுடன் 1943, 1944, 1944ஆம் ஆண்டுகளில் முறையே களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக் கோவை ஆகியவற்றுக்கு உரை வரைந்துள்ளார்.  இவ்வுரைகளை முறையே கழகம் வெளியிட்டுள்ளது.  இவ்வுரையினை நாட்டார் அவர்கள் கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளையின் உறுதுணையோடு செய்திருக்கின்றார்.  இவ்வுரைப் பதிப்பானது, "செய்யுட்களைப் பதம் பிரித்து, முதலில் தெளிவாகத் தலைப்புக் கொடுத்துப் பின்பு பொருள் செல்லும் நெறிக்கு ஏற்ப முறைப்படுத்திப் பதவுரை கண்டு, அதன்மேல் முடிபும் விளக்கவுரையும் எழுதி, உள்ளுறை புலப்படுத்தி, மேற்கோள் இடங்களை விளக்கி, உரிய அடிக்குறிப்புகளுடன் இவ்வுரை தெளிந்து செல்கின்றது" என்பர் (மு. சாசிவிசுவநாதன், அகநானூறு, பதிப்புரை, 1923).

நாட்டார் உரையின் தனிச்சிறப்பு என்னவென்றால் பாடற்பொருளுக்குத் தக்கவாறு பாடல் வரிகளை முன்பின்னாகப் பிரித்து ஆற்றொழுக்காகப் பொருள் செல்லுமாறு உரைவரைவதைக் கைவரப்பெற்றவர்.  காட்டாக,

"திதலை மாமை தளிர்வனப் பழுங்கப்
புதலிவர் பீரின் எதிர்மலர் கடுப்பப்
பசலை பாய்ந்த நுதலே னாகி
எழுதெழில் மழைக்கண் கலுழ நோய்கூர்ந்
தாதி மந்தியின் அறிவுபிறி தாகிப்
பேதுற் றிசினே காதலந் தோழி
காய்கதிர் திருகலிற் கனைந்துகால் கடுகி
ஆடுதளி ரிருப்பைக் கூடுகுவி வான்பூக்
கோடுகடை கழங்கின் அறைமிசைத் தாஅம்
காடிறந் தனரே காதலர் அடுபோர்
வீயா விழுப்புகழ் விண்டோய் வியன்குடை
ஈரெழு வேளிர் இயைந்தொருங் கெறிந்த
கழுவுள் காமூர் போலக்
கலங்கின்று மாதவர்த் தெளிந்தவென் னெஞ்சே" (அகம்.135)

என்னும் பரணரின் பாடலுக்கு நாட்டார் அவர்கள் முதல் ஆறு வரிக்கான பொருளை இறுதியிலும் ஏனைய இறுதிவரையுள்ள வரிகளுக்குப் பொருளை முதலிலும் தந்துள்ளார்.  இப்பாடலின் நாட்டார் உரை பின்வருமாறு: -

"(சொ.ள்.) 6. காதலந் தோழி - காதலையுடைய அழகிய தோழியே! 7-10. காதலர் - நம் காதலர், காய்கதிர் திருகலின் - காயிம் ஞாயிறு தாக்குதலால், ஆடுதளிர் இருப்பை - அசையும் தளிரினையுடைய இருப்பை மரத்தின், கூடு குவி வான் பூ - இதழ் குவிந்த வௌ¢ளிய பூக்கள், கோடு கடை கழங்கின் - யானை மருப்பினாற் கடைந்து செய்த கழக்கினைப் போன்று, அறைமிசைத் தாஅம் - பாறைமீது பரவிக் கிடக்கும், காடு இறந்தனரே - காடு கடந்து சென்றனர் ஆதலின், 10-14. அவர் தெளிந்த என் நெஞ்சு - அவரைப் பிரியாரென்று தெளிவுற்றிருந்த என்மனம், அடுபோர் வீயா விழுப்புகழ் - அடும் போரினையும் நீங்காத சிறந்த புகழினையும், விண்தோய் வியன்குடை - வானை அளாவிய பெரிய குடையினையுமுடைய, கழுவுள் - கழுவுள் என்பானுடையதும், ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த - பதினான்கு வேளிர் ஒருங்கு கூடித் தாக்கியதுமாகிய, காமூர்போல - காமூரைப்போல, கலங்கின்று - கலங்கா நின்றது;

1-6. திதலை மாமை தளிர் வளப்பு அழுங்க - தேமலுடன் கூடிய எனது மாமை நிறமும் தளிர்போலும் அழகும் கெட்டொழிய, புதல் இவர் பிரின் எதிர்மலர் கடுப்ப - புதர்களிற் படர்ந்த பீர்க்கினது புதிய மலரையொக்க, பசலை பாய்ந்த நுதலேன் ஆகி - பசலை பரந்த நெற்றியை யுடையேன் ஆகி, எழுது எழில் மழைக்கண் கலுழ - ஓவியம் வல்லார் பார்த்து எழுதுதற்குரிய அழகிய குளிர்ந்த கண் அழ, நோய் கூர்ந்து - துன்பம் பெருகி, ஆதிமந்தியின் அறிவு பிறிதாகி - ஆதிமந்திபோல அறிவு திரிந்து, பெதுற்றிசின் - யான் மயங்கியுளேன்" என்னும் உரை அமைப்பைப் பார்க்கும் போது பொருளுக்குத் தகுந்தாற்போல் வரியை மாற்றிப் படிக்கும் நிலையை உருவாக்குகின்றார் எனலாம்.

2.  கார் நாற்பது

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகிய நான்கையும் நானாற்பது என்று அழைப்பர்.  இவற்றில் கார் நாற்பது, களவழி நாற்பது ஆகிய இரண்டிற்கும் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் உரை வரைந்திருக்கின்றார்.

மதுரைக் கண்ணங்கூத்தனாரின் 'கார் நாற்பது' வேந்தர்க்குத் துணையாகப் போர்புரியச் சென்ற தலைமகன் தலைமகளிடத்து 'கார் காலத்து மீண்டு வருவேன்' எனக் கூறிச் சென்றவன் காலத்தின் வரவில்லை.  இதன் நிமித்தமாக தலைவி தோழியிடம் கூறுவதாகவும், தலைவன் பாங்கனிடம் கூறுவதாகவும் இந்நூல் அமைந்துள்ளது.  இந்நூற்குப் பழைய பொழிப்புரை ஒன்றுண்டு.  அது 28-39 வரையுள்ள பாடல்களுக்குக் கிடைக்கவில்லை.  காலந்தோறும் இந்நூற்குப் பல உரைகள் எழுந்திருக்கின்றன.  இவற்றில் பி.எஸ். இரத்தினவேலு முதலியாரின் விருத்தியுரை பலராலும் பாராட்டப்பெற்றது.  நாட்டார் அவர்கள் இப்பதிப்பையும் வேறுசில பதிப்புகளையும் கொண்டு 1923ஆம் ஆண்டு ஓர் உரைப்பதிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.  இவ்வுரை பதவுரையும் விளக்கவுரையுமாக அமைந்துள்ளது.  ஒவ்வொரு பாடலின் பொருளுக்குத் தகுந்தவாறு உள்தலைப்பு கொடுத்தும் பாடவேறுபாடுகள் அடிக்குறிப்பாகக் கொடுத்தும் இருக்கின்றார்.  நூலின் இறுதியில் செய்யுள் முதற்குறிப்பு அகராதி தரப்பெற்றுள்ளது.

3.  களவழி நாற்பது

நானாற்பதில் ஒன்றாக விளங்கும் களவழி நாற்பதைப் பொய்கையார் இயற்றியிருக்கின்றார்.  இந்நூல் செங்கட்சோழனது போர்க்கள வெற்றியைப் பாடுவதாக அமைந்துள்ளது.  இந்நூலுக்குப் பழைய பொழிப்புரையும் சோடசவதானம் சுப்பராயச் செட்டியார் பதவுரையும் உண்டு.  இப்பதிப்புகளையும் வேறு சில சுவடிகளையும் கொண்டு நாட்டார் அவர்கள் களவழி நாற்பதிற்கு 1924ஆம் ஆண்டு உரை வரைந்திருக்கின்றார்.  இதே ஆண்டு இவ்வுரையைக் கழகம் வெளியிட்டுள்ளது.

இந்நூற்கு உரைவரைந்ததின் நோக்கத்தை நாட்டார் அவர்கள், "இந்நூற்குப் பழையவுரை யொன்றுண்டு.  அது செய்யுட் பொருளைப் பொழிப்பாக வெடுத்துரைப்பது; விசேடக் குறிப்பு யாதும் கொண்டிராதது.  மற்ற இதற்குச் சோடசாவதானம் சுப்பராயச் செட்டியாரவர்களால் பதப்பொருளும், இலக்கணக் குறிப்புகளுமாக எழுதப்பெற்ற உரையொன்றுண்டு.  அதிலுள்ள இலக்கணக் குறிப்புகள் பெரும்பாலும் இக்காலத்துக்கு வேண்டப்பெறாதனவாயும், வழுவுள்ளனவாயும் தோன்றின.  பதப்பொருளும் பலவிடத்துத் தவறான பாடத்தின் மேலெழுந்தும், மூலத்தோடு மாறுபட்டும் வழுவியிருந்தமை புலனாயிற்று.  இவ்வேதுக்களாற்றான் நல்லிசைப் புலவர் செய்யுட்கு உரைகாணும் திறன் ஒரு சிறிதும் வாய்க்கப்பெறாத யானும் இதற்கோர் உரை  யெழுதுமாறு நேர்ந்தது.  என் சிற்றறிவிற்கெட்டியவாறு பழைய பொழிப்புரையை முற்றிலும் தழுவிப் பதப்பொருள் கூறியும், இன்றியமையாத மேற்கோள்களும், இலக்கணங்களும் காட்டியும் இவ்வுரையின் வகுத்தமைக்கலானேன்.  பல சுவடிகள் பார்த்துப் பாடவேற்றுமையுங் காட்டப்பெற்றுள்ளது" (ந.மு.வேங்கடசாமி நாட்டார், களவழி நாற்பது, முகவுரை, பக்.7-8) என்கின்றார்.  பழைய பதிப்புகளில் நேர்ந்த பிழைகளைக் களைவதற்கு இவர்தம் பதிப்பு உதவியிருக்கின்றது எனலாம்.

மேலும், புறத்திரட்டில் 'களம்' குறித்த பத்து பாடல்களில் 9 பாடல்கள் 'களவழி நாற்பது' எனும் நூலில் இடம்பெற்றிருக்கின்றது.

"படைப்பொலிதார் மன்னர் பரூஉக்குடர் மாந்திக்
குடைப்புறத்துத் துஞ்சு மிகலன் - இடைப்பொலிந்த
திங்கறிற் றோன்று முயல்போலுஞ் செம்பியன்
செங்கண் சிவந்த களத்து" (புறத்திரட்டு, பா.1428)

எனும் பாடல் மிகைப்பாடல் என்று பலர் சேர்த்திருக்கின்றனர்.  ஆனால் நாட்டார் அவர்களின் உரைப்பதிப்பில் இப்பாடலை விடுத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

4.  சிலப்பதிகாரம்

"அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" (சிலப். பதிகம், 55-57) 

என்ற மூன்று காரணங்களுக்காக எழுந்ததே சிலப்பதிகாரம்.  இச்சிலப்பதிகாரத்திற்கு அரும்பதவுரை, அடியார்க்கு நல்லாருரை என்ற இரண்டு பழைய உரைகள் உண்டு.  அரும்பதவுரையானது, அருஞ்சொற்களின் பொருளை மட்டும் புலப்படுத்தி ஒரோவழி முடிவும் மேற்கோளும் காட்டிச் செல்வதாகும்.  அடியார்க்கு நல்லாருரையானது, முற்கூறிய அரும்பதவுரையைப் பெரும்பாலும் தழுவிச் சென்றும், சிலவிடத்துப் பதவுரையும் சிலவிடத்துப் பொழிப்புரையுமாகச் சென்றும், சொல்நயம், பொருள் நயங்களையும் அணிகளையும் இனிது புலப்படுத்தி, இலக்கணமும் மேற்கோளும் காட்டி விரிவாகச் செல்வதாகும்.

இப்பழைய உரைகள் இருந்த போதிலும் புகார்க்காண்டத்தை முதன்முதலில் மூலப் பதிப்பாக ஸ்ரீநிவாஸராகவாசாரியார் அவர்களால் வெளியிடப்பெற்றிருக்கின்றது.  அதன் பின்னர் சோடசவதானம் சுப்பராய செட்டியார் அவர்கள் 'புகார்க்காண்டம் உரையுடன்' வெளியிட்டிருக்கின்றார்.  அதற்கும் பிறகு நூல் முழுமைக்கும் திருந்திய பதிப்பாக உ.வே. சாமிநாதையர் அவர்கள் அரும்பதவுரையையும் அடியார்க்கு நல்லாருரையையும் தம்முடைய குறிப்புரையையும் சேர்த்து 1892ஆம் ஆண்டு வெளியிட்டு இருக்கின்றார்.  இதன் மறுபதிப்புகள் ஐயர் காலத்திலேயே 1920, 1927இல் வெளிவந்திருக்கின்றன.  ஐயர் அவர்களின் பதிப்பிற்குப் பிறகும் உரையில் திருத்தம் பெறவேண்டுவதன் தேவையை உணர்ந்த நாட்டார் அவர்கள் சிலப்பதிகாரம் முழுமைக்கும் உரை வரைந்திருக்கின்றார்.  இவ்வுரைப் பதிப்பு 1942ஆம் ஆண்டு வெளிவந்திருக்கின்றது.

இவ்வுரைப் பதிப்பில் ஐயர் அவர்கள் கொண்ட பாடங்களில் நாட்டார் சில இடங்களில் வேறுபடுகின்றார்.  காட்டாக, 

"கிளைவழிப் பட்டன ளாங்கே கிளையும்" (சிலப்.அரங்.77)

என்ற வரிக்கு நாட்டார், "விளரிக்குத் துத்தம் அம்முறையே ஐந்தாவதாகலின் கிளை வழிப்பட்டனள் என்றார்.  கிளையும்-இளியும்; குரலுக்கு இளி ஐந்தாவதாகலின் அதனைக் கிளையென்னும் பெயராற் கூறினார்; அன்றி, இளி யென்பதே எழுதுவோராற் கிளையெனத் திரிபுற்ற தெனலுமாம்.  அரும்பத வுரையாசிரியர் சொற்களை எஞ்சாதெடுத்துப் பொருள்கூறி முடிக்குங் கடப்பாடுடையரல்லர்; மற்று, அடியார்க்கு நல்லாரே அங்ஙனம் உரைக்குங் கடப்பாட்டினர்.  ஆயின், அவர் எக்காரணத்தானோ இசைப்பகுதியில் முன்னவருரைத்தவற்றையே தாமும் உரைத்து, மூலத்திலுள்ள சொற்கள் பலவற்றிற்குப் பொருளும் முடிபும் தெரிக்காது போயினர்" (ந.மு.வே., சிலப். அரங். ப.79) என்று கூறுவதிலிருந்து நாட்டாரின் பாடத்தெளிவு புலப்படும்.

மேலும், சிலப்பதிகார உரைப்பதிப்பில் தாம் மேற்கொண்ட விதம் குறித்து நாட்டார் அவர்கள், "மூலத்தின் இன்ன பகுதிக்கு இது பொருள் என்று தேடி இடர்ப்படாவண்ணம் சொற்களைக் கிடந்தவாறே கொண்டுகூட்டின்றித் தனி மொழியாகவும் தொடர்மொழியாகவும் ஏற்ற பெற்றி எடுத்தமைத்துப் பொருள் கூறப் பெற்றுளது; அரும்பதவுரை யாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் வேறுபடக் கொண்ட பாடங்களையும், பொருள்களையும் சீர்தூக்கிப் பார்த்து ஏற்பன கொள்ளப்பெற்றுள; ஒரோவழி அவ்வேறுபாடுகளையும், உரையின் சிறந்த பகுதிகளையும் எடுத்துக் காட்டுதலும், பொருந்தாதனவெனத் தோன்றியவைகளைக் காரணங் காட்டி மறுத்தலும் செய்யப்பெற்றுள; அவ்வுரைகளால் விளக்கம் பெறாதன விளக்கவும் பெற்றுள; இன்றியமையாத இலக்கணங்களும் மேற்கோள்களும் ஆண்டாண்டுக் காட்டப்பெற்றுள" (மேற்படி, முகவுரை) என்று கூறுவதிலிருந்து நாட்டாரின் உரைத்திறன் புலப்படும்.

5.  மணிமேகலை

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையைச் சீத்தலைச் சாத்தனார் இயற்றினார்.  இரட்டைக் காப்பியங்களில் இரண்டாவதாக வைத்துப் போற்றப்பெறுவது.  'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்' என்னும் அறக்கருத்தினை மையமாகக் கொண்டு பௌத்த சமயக் கருத்துகளை நிலைநாட்டுவது.  இந்நூல் பழையவுரை எதனையும் பெற்றிருக்கவில்லை.  இக்காப்பியத்தை 1981ஆம் ஆண்டு திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளை அவர்களால் மூலம் மட்டும் வெளியிடப்பெற்றுள்ளது.  இப்பதிப்பில் பல பிழைகள் இருப்பதைக் கண்ட உ.வே. சாமிநாதையர் அவர்கள் இப்பதிப்பு நூலுடன் மேலும் பத்து சுவடிகளைக் கொண்டு தாமே உரை வரைந்து பாடவேறுபாடு காட்டி 1898ஆம் ஆண்டு முதற்பதிப்பைக் கொண்டுவந்துள்ளார்.  இதன் மறுபதிப்புகள் 1921, 1931இல் வெளிவந்திருக்கின்றன.  உ.வே. சாமிநாதையர் பதிப்பித்த மணிமேகலை உரைப்பதிப்பைக் கொண்டு நாட்டார் அவர்கள் மேலும் பல திருத்தங்களுடன் உரை வரைந்துள்ளார்.

இதில் பதிகம் முதல் வஞ்சிமாநகர் புக்க காதை வரையுள்ள முதல் 26 காதைகளுக்கு நாட்டார் அவர்களும், அதற்குப் பிறகுள்ள நான்கு காதைகளுக்கு ஔவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்களும் உரை வரைந்திருக்கின்றனர்.  இவ்வுரைப் பதிப்பைக் கழகம் 1985ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கின்றது.  செல்லூர்க்கிழார் செ.ரெ. இராமசாமிப்பிள்ளை அவர்களின் ஆராய்ச்சி முன்னுரையுடனும், உரையாசிரியர்களின் அருஞ்சொற்பொருள் அகரவரிசையுடனும் இந்நூல் பதிப்பிக்கப்பெற்றிருக்கின்றது. நாட்டாரின் உரைப்பகுதியில் பாடவேறுபாடுகள் 9ம், ஔவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்களின் உரைப்பகுதியில் பாடவேறுபாடுகள் 28ம் அமைந்திருப்பதைப் பார்க்கும் போது உ.வே. சாமிநாதையர் பாடத்தைப் பெரும்பாலும் நாட்டார் தழுவியே உரை செய்திருக்கின்றார் என்பது புலப்படுகின்றது.  இவ்வுரை பதவுரையாகவும் விளக்கவுரையாகவும் தேவையான இடங்களில் இலக்கணக் குறிப்புகளும் பெற்று விளங்குகின்றது.

6.  திருவிளையாடற்புராணம்

சிவபெருமானின் திருவிளையாடல்களை எடுத்துரைக்கும் வகையில் செல்லிநகர்ப் பெரும்பற்றப்புலியூர் நம்பியின் 'திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்' , இலம்பூர் வீமநாத பண்டிதரின் 'கடம்பவன புராணம்', வாயற்பதி அனதாரியப்பனின் 'சுந்தர பாண்டியம்', பரஞ்சோதி முனிவரின்  'திருவிளையாடற் புராணம்' ஆகிய நூல்கள் எழுந்திருக்கின்றன.  திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தைப் பழைய திருவிளையாடற் புராணம், நம்பி திருவிளையாடற் புராணம், வேம்பத்தூரார் திருவிளையாடற் புராணம் என்றெல்லாம் அழைப்பர்.  நம்பியின் திருவிளையாடற் புராணத்திற்கும் பரஞ்சோதியாரின் திருவிளையாடற் புராணத்திற்கும் வேறுபாடுகள் பல உண்டு.  இவ்வேறுபாடுகளை நாட்டார் அவர்கள் தம்முடைய பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராண உரையின் பதிப்பு முகவுரை (பக்.8-9)யில் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.

பரஞ்சோதியாரின் திருவிளையாடற் புராணத்திற்கு இராமலிங்க சுவாமி பிள்ளை அவர்கள் 1801ஆம் ஆண்டு ஓர் உரை எழுதி இருப்பதாகத் தெரிகின்றது.  இவ்வுரையே இந்நூலுக்கு முதல் உரையாகவும் அமைகின்றது.  அடுத்து, யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்கள் மூலப் பகுதியை மட்டும் வெளியிட்டிருக்கின்றார்.  இப்பதிப்புகளைத் தொடர்ந்து சோடசாவதானம் சுப்பராயச் செட்டியாரின் உரையுடனும், ஈக்காடு இரத்தினவேலு முதலியார் அவர்களின் பொழிப்புரையுடனும், இராமசாமிப் பிள்ளை என்னும் ஞானசம்பந்தம் பிள்ளை அவர்களின் மதுரைக்காண்ட பொழிப்புரையுடனும் என இந்நூற்கு உரைப்பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.  இப் பதிப்புகளைக் கொண்டு நாட்டார் அவர்கள் மதுரைக் காண்டம் (1927), கூடற் காண்டம் (1928), திருவாலவாய்க் காண்டம் (1931) என மூன்று காண்டங்களுக்கும் உரை எழுதியுள்ளார்.  இவ்வுரையைக் கழகம் முறையே  வெளியிட்டுள்ளது.

இவர்தம் உரைப்பதிப்பு எவ்வாறமைந்துள்ளது என்பதை நாட்டார் அவர்களே, "மூலத்தின் வேறுபட்ட பாடங்களுட் சிறந்ததெனத் தோன்றுவதை அமைத்துக் கொண்டு பிறவற்றைப் பாடபேதமாக அமைத்திருக்கின்றேன்.  இந்நூல் செய்யுட்களின் இடர்ப்பட்ட சொற்பொருள் முடிபுகளை ஒழுங்குபடுத்துவது, இன்றியமையாதவும் ஒத்த கருத்துள்ளவுமாகிய பிற நூன் மேற்கோள்களை யெடுத்துக்காட்டி விளங்கவைப்பது முதலியவற்றில் எவ்வளவு அருமுயற்சியெடுத்துக் கொண்டிருக்கவேண்டும் என்பதும், இவ்வுரை எவ்வளவு திருத்தம் பெற்றுள்ளதென்பதும் நடுநிலை முதலிய உயர்குணங்களுடையராய் ஒத்து நோக்கும் அறிவுடையாரெவர்க்கும் நன்கு புலனாமாகலின்" (மதுரைக் காண்டம், முகவுரை, ப.14) என்று கூறுகின்றார்.

"வேத வந்தமுந் துளக்கற மெய்ப்பொருள் விளங்கும்
நாத வந்தமுங் கடந்ததோர் நடுநிலைப் பொருளின்
பாத வந்தனைப் பத்தியின் பாலராய்ப் பயில்வோர்
மாத வந்தரு பயனெனத் தழைத்தபல் வளனும்" (மதுரை, திருநகர்.97)

என்னும் பாடலுக்கு நாட்டார் அவர்கள் பின்வருமாறு உரை கூறுகின்றார்.

"(இ-ள்.) வேத அந்தமும் - வேத முடிவையும், துளக்கு அற - கலக்கமின்றி, மெய்ப்பொருள் விளங்கும் - மெய்ப்பொருள் விளங்குதற் கேதுவாகிய, நாத அந்தமும் - நாத முடிவையும், கடந்தது - கடந்ததாகிய, ஓர் - ஒப்பற்ற, நடுநிலைப் பொருளின் - நடுநிலைப் பொருளாகிய இறைவனுடைய, பாதம் - திருவடிகளை, வந்தனை - வணங்குதலையுடைய, பத்தியின் பாலராய்ப் பயில்வோர் - அன்பின் பகுதியை யுடையவராய் ஒழுகுவார்க்கு, மாதவம் தருபயன் என - அச்சிவ புண்ணியந் தருகின்ற பயன் தழைப்பதுபோல், பல் வளனும் தழைத்த - பல வளங்களும்(அங்கு) தழைத்தன எ-று.

வேத அந்தம் - உபநிடதம்.  நாத அந்தம் - நாத தத்துவத்தின் முடிபு; நாதம் - தத்துவங்க ளெல்லாவற்றினும் தலையாயது; நாத தத்துவத்தைத் தரிசித்தவர்க்கு மெய்ப்பொருள் விளங்கு மென்பார்.  'மெய்ப்பொருள் விளங்கு நாதவந்தம்' என்றார்; விளங்கு மென்பதனை இடைநிலை விளக்காகக் கொண்டு வேத வந்தமும் என்பதனோடும் இயைத்துரைத்தலுமாம்.  இறைவன் பாச ஞானம் பசு ஞானங்களைக் கடந்தவ னென்பார் வேத வந்தமும் நாத வந்தமும் கடந்த என்றார்.  நடுநிலைப் பொருள் - எள்ளினுள் எண்ணெய்போல எங்கும் கலந்துள்ள பொருள்.  தழைத்த: அன்பெறாத பலவின்பால் முற்று" என்பதனால் நாட்டாரின் உரைத்தன்மை வெளிப்படுகிறது.

7.  ஆத்திசூடி

பிற்கால ஔவையாரால் இயற்றப்பெற்றது ஆத்திசூடி.  இது, மிக்க  இளம் பருவத்தினர்க்கு மனதில் உயர்ந்த நீதிகளைப் பதியவைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மிகச்சிறிய சொற்றொடர்களால் இயற்றப்பெற்றுள்ளது.  இந்நூல் தொடக்கநிலை கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பாடமாக இருந்தும், இருந்துகொண்டும் இருக்கின்றது.  1869ஆம் ஆண்டு H.W. லாரி அவர்களால் இந்நூலின் மூன்றாம் பதிப்பு வெளிவந்துள்ளது.  அதுதொடங்கி இன்றுவரை 100க்கும் மேற்பட்ட பதிப்புகள் மூலமாகவோ மூலமும் உரையுமாகவோ இந்நூல் வெளிவந்திருக்கின்றது.  இந்நிலையில் நாட்டார் அவர்களின் ஆத்திசூடி உரை 1950ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

"ஆத்திசூடி உரைப்பதிப்புகள் வேறு பல இருப்பினும், இப்பதிப்பு மூலபாடம் தனியே சேர்க்கப்பெற்றும், பதவுரையும் பொழிப்புரையும் திருத்தமாக எழுதப்பெற்றும் சிறந்து விளங்குவது காணலாம்" (ந.மு.வே., ஆத்திசூடி, முகவுரை, ப.4) என்ற கருத்துப்படி ஆத்திசூடி மூலப் பகுதி தனியாகவும், மூலமும் உரையும் தனியாகவும் என முறையே இவர்தம் பதிப்பில் அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது.  இவரது ஆத்திசூடி உரைக்கு ஓர் சான்று, 

"93. மெல்லினல்லாள் தோள்சேர்
(பத.) மெல் - மெல்லிய, இல் - (உன்) மனையாட்டியாகிய, 
     நல்லாள் - பெண்ணுடைய, தோள் - தோள்களையே, சேர் - பொருந்து,
(பொழி.) பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் சேர்ந்து வாழு.
  'மெல்லியா டோள் சேர்' என்றும் பாடம்" 

என்றவாறு இவர்தம் உரை அமைந்திருப்பதைக் காணலாம்.

8. கொன்றைவேந்தன்

ஆத்திசூடியைப் போல இதுவும் இளம் வளதினர் கற்கவேண்டிய நீதிகளை உணர்த்துவது.  இதனையும் பிற்கால ஔவையார் தான் இயற்றியிருக்கின்றார்.  மிகச் சிறிய சொற்றொடரால் ஆத்திசூடி அமைய, மிகப் பெரிய சொற்றொடரால் கொன்றை வேந்தன் அமைந்துள்ளது.  பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைத் தொல்காப்பியம் - செய்யுளியல் உரையில் மேற்கோளாகக் காட்டப்பெற்ற சிறப்பினைப் பெற்றது.  1868ஆம் ஆண்டு H.W. லாரி அவர்களால் இந்நூலின் மூன்றாம் பதிப்பு வெளிவந்துள்ளது.  அதுதொடங்கி இன்றுவரை 100க்கும் மேற்பட்ட பதிப்புகள் மூலமாகவோ உரையுமாகவோ இந்நூல் வெளிவந்திருக்கின்றது.  இந்நிலையில் நாட்டார் அவர்களின் கொன்றைவேந்தன் உரை 1949ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

ஆத்திசூடியைப் போலவே கொன்றைவேந்தனும் மூலப்பகுதி தனியாகவும் மூலமும் உரையும் தனியாகவும் என முறையே இவர்தம் பதிப்பில் அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது.  இவரது கொன்றைவேந்தன் உரைக்கு ஓர் சான்று,

"3. இல்லற மல்லது நல்லற மன்று.

(பத.) இல்லறம் - (மனையாளொடு கூடிச் செய்யும்) இல்லறமானது, நல்அறம் - நல்ல அறமாகும், அல்லது - இல்லறமல்லாத துறவறமானது, அன்று - நல்ல அறமன்றாகும்.

(பொழி.) வீட்டிலிருந்து மனைவியுடன் கூடிச் செய்யும் இல்லறமே நல்லறமாகும்; துறவறம் நல்லதன்று.  (இல்லறம் எளிதிற் செய்யத் தகுந்தது.  துறவறம் எளிதிற் செய்யக் கூடாதது.)"  என்றவாறு இவர்தம் உரை அமைந்திருப்பதைக் காணலாம்.

9.  உலகநீதி

உலகநாதனாரின் 'உலகநீதி' எனும் நூல் யாவரும் கடைபிடிக்கவேண்டிய சிறந்த நீதிகளை உணர்த்துவது.  இது, பெரும்பாலும் பேச்சுவழக்கு நடையிலேயே அமைந்திருக்கின்றது.  1868ஆம் ஆண்டு H.W. லாரி அவர்களால் மூன்றாம் பதிப்பு வெளிவந்துள்ளது.  அதுதொடங்கி இன்றுவரை இந்நூல் 100க்கும் மேற்பட்ட பதிப்புகள் மூலமாகவோ மூலமும் உரையுமாகவோ வெளிவந்திருக்கின்றது.  இந்நிலையில் நாட்டார் அவர்களின் உலகநீதி உரை 1949ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

உலகநீதியில் அமைந்துள்ள ஒவ்வொரு தொடரின் இறுதியிலும் 'வேண்டாம்' என்பது 'வேண்டும்' என்பதன் எதிர்மறையாக இடம்பெற்றிருக்கின்றது.  இதனைச் சிலர் 'வேண்டாம்' என்பதை 'வேண்டா' என்று மகர ஒன்று(ம்) நீக்கிப் பதிப்பித்திருக்கின்றனர்.  ஆனால் நாட்டார் அவர்கள் மகர ஒற்று சேர்த்து 'வேண்டாம்' என்றே உரை கண்டிருக்கின்றார். "ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்" என்பதனால் இதனை உணரலாம்.

இந்நூலுக்கு நாட்டார் அவர்கள் பதவுரையும் பொழிப்புரையும் என இருவேறு உரைகளைத் தந்துள்ளார்.  மேற்காணும் வரிக்கு நாட்டார் அவர்கள், 

"(ப.ரை) ஓதாமல் - (நூல்களை) கற்காமல், ஒருநாளும் - ஒருபொழுதும்,
இருக்கவேண்டாம் - (நீ) வாளா இராதே.

(பொ.ரை) எக்காலத்திலும் இடைவிடாது கல்வி கற்க வேண்டும்" என்கின்றார்.

10) நறுந்தொகை

அதிவீரராம பாண்டியரின் நறுந்தொகை என்னும் வெற்றிவேற்கையானது பழந்தமிழ் நூல்களிலுள்ள நீதிக் கருத்துகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. 1868ஆம் ஆண்டு H.W. லாரி அவர்களால் மூன்றாம் பதிப்பு வெளியிடப்பெற்றுள்ளது.  அது தொடங்கி இன்றுவரை 100க்கும் மேற்பட்ட பதிப்புகள் மூலமாகவோ மூலமும் உரையுமாகவோ இந்நூல் வெளிவந்திருக்கின்றது.  இந்நிலையில் நாட்டார் அவர்கள் 1924ஆம் ஆண்டு நறுந்தொகையின் உரை வெளிவந்துள்ளது.

ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகியவற்றைப் போலவே நறுந்தொகையும் மூலப்பகுதி தனியாகவும், மூலமும் உரையும் தனியாகவும் என முறையே இவர்தம் உரை அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.  நறுந்தொகை உரைப்பதிப்பின் தன்மையை நாட்டார் அவர்கள், "இதிலுள்ள நீதிகளெல்லாம் தொன்னூல்களிற் காணப்படுவனவேயெனினும், ஒரு சில புறநானூறு, நாலடியார் முதலியவற்றின் செய்யுள்களோடு சொல்லினும் பொருளினும் பெரிதும் ஒற்றுமையுற்று விளங்குகின்றன.  அவை உரையில் அங்கங்கே காட்டப்பட்டுள்ளன.  இந்நூல் முன் பலரால் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது.  அப்பதிப்புக்கள் ஒன்று ஒன்றனோடு பெரிதும் வேறுபட்டுள்ளன.  அவற்றிற் காணப்படும் பாடவேறுபாடுகள் எண்ணிறந்தன.  வாக்கியங்களின் முறையும் பலவாறாகப் பிறழ்ச்சியடைந்துள்ளது.  'அதனால்' என்பது போலுஞ் சொற்கள் தனிச்சீராக வேண்டாத இடங்களிலெல்லாம் வைக்கப்பட்டுள்ளன.  இப்பதிப்பில் இவை பலவற்றையும் கூடிய வரையில் திருத்தம் செய்து, இன்றியமையாத பாடவேறுபாடுகளையும் காட்டி, பதவுரை, பொழிப்புரைகளுடன் சிறப்புக் குறிப்புகளும் திருந்த எழுதியிருப்பது காணலாகும்.  'வாழிய நலனே வாழிய நலனே' என்னும் வாக்கியம் சில பதிப்புகளில் ஓரியைபுமின்றி நூலின் நடுவே வைக்கப்பட்டுள்ளது.  ஒரு பதிப்பில் அஃது இறுதியில் அமைக்கப்பட்டுள்ளது.  இப்பதிப்பிலும் அங்ஙனமே வாழ்த்தினை இறுதியில் அமைத்துளேம்" என்று கூறுவதைக் காணலாம்.

11.  மூதுரை

ஔவையாரின் மூதுரை என்னும் வாக்குண்டாமானது பல நூல்களில் அமைந்த நீதிக்கருத்துகளின் சாரமாக அமைந்துள்ளது.  1868ஆம் ஆண்டு H.W. லாரி அவர்களால் மூன்றாம் பதிப்பு வெளிவந்துள்ளது.  அதுதொடங்கி இன்றுவரை 100க்கும் மேற்பட்ட பதிப்புகள் மூலமாகவோ மூலமும் உரையுமாகவோ இந்நூல் வெளிவந்து இருக்கின்றது.  இந்நிலையில் நாட்டார் அவர்கள் 1925ஆம் ஆண்டு மூதுரைக்கு ஓர் உரை வரைந்து கழகம் வாயிலாக வெளியிட்டிருக்கின்றார்.  இவ்வுரைப் பதிப்பை நாட்டார் அவர்கள் பதவுரை, கருத்துரை என்ற முறையில் அமைத்திருக்கின்றார்.  ஒவ்வொரு பாடலுக்கும் பொருளுக்கேற்றவாறு 'பாடற்றலைப்பு' கொடுத்திருக்கின்றார்.  இறுதியில் பாட்டு முதற்குறிப்பு அவரவரிசை, அருஞ்சொற்கள், மூதுரை முத்துக்கள் இடம்பெற்றிருக்கின்றன.

"அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும்" (மூதுரை, பா.4)

என்னும் பாடலை தொல்காப்பிய உரையாளர்கள் வெண்பாவின் இடையிலும் முச்சீரடி வரும் என்பதற்கு மேற்கோளாகக் காட்டிய சிறப்பினைப் பெற்றது இந்நூல் என்று தம்முடைய முகவுரையில் நாட்டார் அவர்கள் குறிப்பிடுகின்றார்.


12.  நல்வழி

ஔவையாரின் நல்வழியானது பல பெரிய நீதி நூல்களில் இடம்பெற்றிருக்கக் கூடிய நீதிக்கருத்துக்களை எடுத்தியம்புகின்றது.  இதிலுள்ள செய்யுட்கள் பல மெய்ந்நூல்களின் முடிந்த கருத்துகளை விளம்புவனவாக அமைந்துள்ளன.  1868ஆம் ஆண்டு H.W. லாரி அவர்களால் இந்நூலின் மூன்றாம் பதிப்பு வெளிவந்துள்ளது.  அதனைத் தொடர்ந்து பல பதிப்புகள் இன்றுவரை வெளிவந்துகொண்டிருக்கின்றன.  இந்நிலையில் நாட்டார் அவர்கள் நல்வழி உரை 1950ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

இவ்வுரைப் பதிப்பை நாட்டார் அவர்கள் பதவுரை, கருத்துரை என்ற முறையில் அமைத்திருக்கின்றார்.  ஒவ்வொரு பாடலுக்கும் பொருளுக்கேற்றவாறு 'பாடற்றலைப்பு' கொடுத்திருக்கின்றார்.  நூலின் தொடக்கத்திலேயே பாட்டு முதற்குறிப்பு தரப்பெற்றுள்ளது.  இவரின் வேறு எந்த உரைப்பதிப்பிலும் இல்லாத அமைப்பு இது.

13.  நன்னெறி

சிவப்பிரகாசரின் நன்னெறியானது இன்றியமையாத நீதிகளை அழகிய உவமைகளுடன் எளியவர்க்கும் விளங்கும்படி இயற்றப்பெற்றதாகும். H.W. லாரி அவர்களால் 1868ஆம் ஆண்டு மூன்றாம் பதிப்பாக வெளிவந்துள்ளது.  அதுதொடங்கி இந்நூல் பல பதிப்புகளைப் பெற்றுள்ளது.  இந்நிலையில் நாட்டார் அவர்களின் நன்னெறி உரை 1952ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.  நாட்டார் அவர்கள் இந்நூலாசிரியரின் திறத்தை, "உவமைகளெல்லாம் யாவராலும் அறியப்பட்டனவாகவும், உவமேயங்களுடன் மிக்க பொருத்த முள்ளனவாகவும் அமைந்து, கற்போர்க்கு வியப்பும் மகிழ்ச்சியும் விளைப்பனவாகும்.  மக்களின் உடலுறுப்புகளாகிய கண் முதலியவற்றின் இயல்புகளை ஒன்பது பாக்களிலும், ஞாயிறு, திங்கள், கடல், காற்று முதலிய இயற்கைப் பொருள்களையும் நெல், வாழை, பசு முதலிய பயிற்சி மிக்க பொருள்களையும், வேறு பல பாக்களிலும் உவமையாக அமைத்திருப்பது இளைஞர்கட்குக் கல்வி பயில்விப்பதில் இவ்வாசிரியர்க்குள்ள திறப்பாட்டை நன்கு விளக்காநிற்கும்" (ந.மு.வே., நன்னெறி, முகவுரை, ப.6) என்று கூறுகின்றார்.  இவ்வுரைப் பதிப்பை நாட்டார் அவர்கள் பதவுரை, கருத்துரை என்ற முறையில் அமைத்திருக்கின்றார்.  ஒவ்வொரு பாடலுக்கும் பொருளுக்கேற்றவாறு 'பாடற்றலைப்பு' கொடுத்திருக்கின்றார்.  இறுதியில் செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை இடம்பெற்றுள்ளது.

ஆக, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் மேற்காணும் 13 நூல்களுக்கும் பதவுரை, பொழிப்புரை, விரிவுரை, விளக்கவுரை, கருத்துரை என்றவாறெல்லாம் உரை வரைந்து சிறந்த உரையாசிரியராகத் திகழ்ந்திருக்கின்றார் என்றால் அது மிகையாகாது.  மேலே குறிப்பிட்ட நீதிநூல்கள் அவ்வப்போது வெவ்வேறு பதிப்பாசிரியர்களால் கொத்தாகவும், திரட்டாகவும் வெளிவந்திருக்கின்றன.

இ.  சிறப்புக் கூறுகள்

நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களின் உரைப்பதிப்புகளில் பல்வேறு வகையான சிறப்புக் கூறுகள் பொதிந்துகிடக்கின்றன.  கால ஆராய்ச்சி, பாடற்றலைப்பு, மேற்கோள் அமைப்பு, மேற்கோள் நூல்கள், முற்பதிப்பின் தன்மை சுட்டுதல், பாடத் திருத்தம், இருபொருள் சுட்டுதல், முன் வந்ததைச் சுட்டுதல், உறவு முறைகளைச் சுட்டுதல், வேற்றுரை நூல் சுட்டுதல், ஆய்வுப் போக்கு, ஒரே நூலில் மீண்டும் வரும் தொடர்கள், இலக்கணக் குறிப்புகள் எனப் பல்வேறு வகைகளில் இவரின் சிறப்புக் கூறுகள் அமைந்திருக்கின்றன.

1.  கால ஆராய்ச்சி

ஒரு நூல் எந்தக் காலத்தைச் சார்ந்தது என்பதைத் தக்க சான்றுகளுடன் நாட்டார் அவர்கள் நிறுவுகின்றார்.  இலக்கியச் சான்றுகளை வைத்துக்கொண்டு நல்வழி என்னும் நூல் எந்தக் காலத்தைச் சார்ந்ததாக இருக்கும் என்று நிறுவுகின்றார்.   நல்வழி என்னும் நூல் கி.பி.9ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என்பதை நாட்டார் அவர்கள், "இந்நூலின்கண் (நல்வழி) திருவைந்தெழுத்தும், திருநீறும் சிறப்பாக எடுத்தோதப்படுவதும், இறுதிச் செய்யுளில் திருக்குறள், திருநான்மறை முடிவு, தேவாரம் முதலிய சைவத் திருமுறைகள் என்னும் இவையெல்லாம் ஒத்த கருத்துடையன எனக் கூறப்படுவதும் பிறவும் ஆக்கியோரின் சமயத்தையும், உண்மை நூலுணர்வையும் புலப்படுத்துவனவாகும்.  மூவர் தமிழை எடுத்தோதியதிலிருந்து இந்நூல் தோன்றிய காலம் 9ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகுமென்பதும் விளக்கமாம்" (நல்வழி, முன்னுரை, ப.3) என்று நிறுவுகின்றார்.  மேலும், இவரின் வரலாற்று ஆராய்ச்சி நூல்களான நக்கீரர், கபிலர், கள்ளர் சரித்திரம், சோழர் சரித்திரம் ஆகியன கால ஆராய்ச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன.  இவ்வரலாற்றாராய்ச்சி நூல்களைப் பற்றிப் பின்னர் இடம்பெறும் 'ஆய்வுலகில் நாட்டார்' என்னும் பகுதியில் விரிவாக ஆராயப்பெறும்.

2.  பாடற்றலைப்பு

நாட்டாரின் நீதிநூற் கொத்தில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை ஆகிய மூன்றும் முறையே 'அறம்செய விரும்பு' , 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' , 'எழுத்தறி வித்தவன் இறைவ னாகும்' என்ற தொடர்கள் பாடலாக அமைந்திருப்பது போல, மூதுரை, நல்வழி, நன்னெறி ஆகிய மூன்று நூல்களுக்கும் பாடற்றலைப்பு கொடுத்துள்ளார்.  உரைப்பகுதியில் (நீதிநூற் கொத்து) ஒரு நூலின் பாடற் பகுதியே தலைப்பாக அமைந்திருப்பதையும், பாடற் பொருளுக்கேற்றவாறு நாட்டார் அவர்களால் உருவாக்கப்பெற்ற புதிய பாடற்றலைப்பு அமைந்திருப்பதையும் காணமுடிகின்றது.

பயன் கருதாது அறஞ்செய்க, நல்லவர்க்குச் செய்த உதவி, இளமையில் வறுமை, மேன்மக்கள் இயல்பு, காலமறிந்து நடத்தல், மானம் இழந்து வாழாமை, அறிவு செல்வம் குணம், நல்லார் தொடர்பின் நலம், தீயார் தொடர்பின் தீமை, நல்லவரால் எல்லார்க்கும் நலம், துணைவலிமை வேண்டும், உருவமும் குணமும், அறிவற்றவனின் இழிவு, போலி அறிவின் புன்மை, தீயோர்க்கு உதவுதல் கேடு தரும், அடக்கத்தின் சிறப்பு, உண்மை உறவினர், தாழ்ந்தாலும் மேன்மக்களே சிறந்தவர், ஆசையால் பயனில்லை, மருந்தும் உடன் பிறப்பும், மனையாளில்லாத மனை, ஊழின் வலிமை, நல்லார் சினமும் பொல்லார் சினமும், குணமும் தொடர்வும், கரவுடையவர் ஒளிந்தே நிற்பர், அரசனும் அறிஞனும், பல்வகைக் கூற்றங்கள், கெட்டாலும் மனவிரிவு குறையார், நிலையில்லாத வாழ்வு, அறவோர் அருள் உள்ளம் என முறையே மூதுரைப் பாடல்களுக்குப் பாடற்றலைப்புகள் அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது.

நன்மையே செய்க, ஈயாமையின் இழிவு, ஈதலின் சிறப்பு, காலம் நோக்கிச் செய்க, கவலையுறுதல் கூடாது, பேராசை கூடாது, ஞானிகள் பற்றற்றிருப்பர், மரியாதையே தேடத்தக்கது, குடிப்பிறந்தார் இல்லை எனமாட்டார், இட்டு உண்டு இரும், பசி கொடியது, உழவின் உயர்வு, விலக்க இயலாதன, மானமே உயிரினும் சிறந்தது, திருவைந்தெழுத்தின் சிறப்பு, வியத்தகு விழுப்பொருள், தீவினையே வறுமைக்கு வித்து, இடிப்பார்க்கு ஈவர், பேரின்பம் நாடாப் பேதைமை, பரத்தையரால் செல்வம் பாழாம், வஞ்சனை இல்லார்க்கு வாய்க்கும் நலம், பாவிகளின் பணம், வழக்கோரஞ் சொன்னவர், மனை பாழ், வாழ்க்கை மாண்பு ஐந்து, வரவறிந்து செலவிட வேண்டும், பசி வந்திடப் பத்தும் பறக்கும், எல்லாம் இறை செயல், மனவமைதி வேண்டும், கொடையாளருக்கு எல்லாம் உறவினர், விதியின் தன்மை, நல்லன நான்கு, செல்வ நிலையாமையறிந்து உதவுக, வன்சொல்லும் இன்சொல்லும், பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை, உரைப்பினும் பேதை உணரான், பிறர்மனை விரும்பாமை, வீடடைவார்க்கு விதியில்லை, இறைவனுடன் இரண்டற்று நில், முப்பது ஆண்டிற்குள் முதல்வனை அறி, ஒத்த கருத்தமை ஒண்தமிழ் நூல்கள் என முறையே நல்வழிப் பாடற்றலைப்புகள் அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது.

முகமன் எதிர்பாராமல் உதவுக, வன்சொல்லும் இனிதாதல் உண்டு, இனிய நெறியறிந்து பெறுக, செல்வம் பயன்படுத்துவார்க்கே உரியது, நட்பிற் பிரியாமை நன்று, காதலர் ஒருமை, கல்விச் செருக்கு விடுக, சினத்தைக் காத்துக் கொள்க, சார்பின் வலி, தன்னலங் கருதாமை, புலன்களால் வரும் புன்மை, உடம்பில் உயிர் அமைப்பு, அன்பின் உதவுக, செல்வச் செருக்கு விடுக, அன்பில்லார்க்குச் செல்வம் பயனில்லை, மேலோர் அன்புடையார்க்குத் தாமே உதவுவர், வறுமையிலும் உதவி, இன்சொல், நற்குணம், பிறர் துன்பங்கண்டு உள்ளங் கசிதல், அறிவிலார் செருக்கு அறிஞர்முன் அடங்கும், பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை, மனவுறுதி நெகிழலாகாது, கீழோர் பிறர் குற்றமே பேசுவர், கீழோர் சேர்க்கை ஆகாது, கல்விப் பெருமை கருதுக, கைம்மாறு கருதாது உதவுக, வெறுப்பிலும் உதவுவர் மேலோர், இடுக்கண் அஞ்சாது உதவுக, காலத்தில் அறஞ்செய்க, பிறர் துயரந் தாங்குக, மெய்யுணர்ந்து உதவுக, பெரியோர் போற்றுதல் வேண்டார், பெரியோர் பழிக்கு அஞ்சுவர், மேன்மக்கள் நல்லோரை விரும்புவர், தக்கார்க்கே உதவி செய்க, தற்புகழ்ச்சியால் தாழ்வு அடைபவர், தக்கார் தொடர்பு நலம்பெருக்கும், தகாதார் தொடர்பில் தீமை உள்ளது, தக்காரைப் போற்றிக் கொள்க என முறையே நன்னெறிப் பாடற்றலைப்புகள் அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது.

இவற்றையெல்லாம் காணும்போது நீதிநூற் கருத்துக்களைத் தெளிவுபடுத்த நாட்டார் கொண்ட முயற்சிகளில் இதுவும் ஒன்றாகத் திகழ்கின்றது என்றால் அது மிகையாகாது.  காட்டாக, 

"நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொற் கேட்பதுவும் நன்றேஎ - நல்லார்
குணங்க ளுரைப்பதுவும் நன்றே அவரோ
டிணங்கி யிருப்பதுவும் நன்று" (மூதுரை, பா.8)

என்னும் பாடலுக்கு "நல்லார் தொடர்பின் நலம்" என்ற பாடற்றலைப்பு கொடுத்திருப்பது நீதிநூற் கருத்துக்களில் நாட்டாருக்குள்ள ஈடுபாட்டை உணர்த்துகின்றது எனலாம்.

14. மேற்கோள் அமைப்பு

இலக்கிய, இலக்கண உரையாசிரியர்கள் உரைப்பகுதியில் பிற நூல்களின் ஒப்புமைப் பகுதிகளை மேற்கோள்களாகச் சுட்டுவது இயல்பு.  'என்றார் பிறரும்' , 'என்பன போல' , 'எனவும் கூறுவன காண்க' என்று உரையாசிரியர்கள் மேற்கோள் சுட்டும் இடத்தைச் சுட்டுவர்.  நாட்டாரின் உரைப்பதிப்புகளில் 'என்னும் கோவையாரால் உணர்க' , 'என்பது திணைமாலை நூற்றைம்பது' , 'என்னும் நற்றிணையானும் அறிக' , 'எனக் குறுந்தொகையும் .... எனப் புறநானூறும் கூறுதல் காண்க' , 'என்று திருவாசகம் கூறுதல் காண்க' , 'எனச் சிவஞானசித்தி கூறுவது காண்க' ஆகிய தொடர்கள் நூற்பெயரைச் சுட்டிய மேற்கோள்களாக அமைந்திருக்கின்றன.  காட்டாக, 

"ஆர்ப்பெழுந்த ஞாட்பினு" (களவழி நாற்பது, பா.17) எனத் தொடங்கும் பாடலுக்குள் நாட்டார் அவர்கள், "சாறு - விழா; இதனைச் 'சாறுதலைக் கொண்டென' என்னும் புறப்பாட்டானும், 'சாறயர்களத்து' என்னும் முருகாற்றுப்படையானும் அறிக.  கார்த்திகை நாளில் நிரை நிரையாக விளக்கிட்டு விழாக் கொண்டாடும் வழக்கம் மிக்கிருந்தது.  இதனை 'குறுமுயன் மறுநிறங் கிளர மதிநிறைந், தறுமீன் சேறும் அகலிருள் நடுநாள், மறுகுவிளக் குறுத்து மாலை தூக்கிப் - பழவிறன் மூதூர்ப் பலருடன் துவன்றிய, விழவுபட னயர வருகதி லம்ம' என்னும் அகப்பாட்டானறிக.  'துளக்கில்கபா ல¦ச்சரத்தான் றொல்கார்த் திகைநாள் ..... விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்' என்பது திருநெறித் தமிழ்மறை.  கார்த்திகைக்கு மலையில் விளக்கிடுவது 'குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன' என்று சிந்தாமணியிற் கூறப்பெற்றுள்ளது" என்ற உரையால் உணரலாம்.

'என்னும் பதிற்றுப்பத்தும் அதன் உரையும் நோக்குக' , 'என்னும் சிந்தாமணியின் உரையை நோக்குக' ஆகிய தொடர்கள் உரைநூற்பெயரைச் சுட்டிய மேற்கோள்களாக அமைந்திருக்கின்றன.  காட்டாக, "யானைமேல் யானை" (களவழி நாற்பது, பா.8) எனத் தொடங்கும் பாடலுக்குள் நாட்டார் அவர்கள், "மாய்ப்ப - மறைக்க; இஃது இப் பொருட்டாதலை 'களிறு மாய்க்குங் கதிர்க்கழனி' என்னும் மதுரைக்காஞ்சியடி உரையானறிக" என்றதால் உணரலாம்.

'என்பர் நச்சினார்க்கினியர்' , 'என்றும் கூறுவர் இளம்பூரணர்' , 'பரிமேலழகர் உரைத்த உரையானறிக' ஆகிய தொடர்கள் உரையாசிரியர்களின் பெயரைச் சுட்டிய மேற்கோள்களாக அமைந்திருக்கின்றன.  காட்டாக, "இளையரு மீர்ங்கட்" (கார்நாற்பது, பா.22) எனத் தொடங்கும் பாட்டுக்குள் நாட்டார் அவர்கள், "இளநலம் என்புழி நலம் வடிவுமாம்.  வளம் வருவாயாதலை 'வயத்தக்காள் வாழ்க்கைத்துணை' என்பதற்குப் பரிமேலழகர் உரைத்த உரையானறிக" என்று குறிப்பிடுவதால் உணரலாம்.  இவையன்றி, 'இதனைக் காண்க' , 'என வருவதுங் காண்க' , 'என வருதல் காண்க' , 'என்றாராகலின்', 'என்பதிற்போல' , 'என்றார்', 'என்றார் பிறரும்' , 'என' , 'எனவும்'  என்று சுட்டப்பெறும் தன்மையையும் காணமுடிகின்றது.

சிற்சில இடங்களில் மேற்கோள் பாடல்கள் எடுக்கப்பெற்ற நூல்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் பாடலைமட்டும் குறித்துச் சென்றிருக்கின்றார்.  திருவிளையாடற் புராணம் - இந்திரன் பழிதீர்த்த படலத்தின் 65ஆவது பாடலுக்கு உரை கூறுமிடத்து, 

"குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்த லரிது" 

என்பவாகலின் விளைத்தலோடும் ஆகியென்றார்.  மாசுணம் - பெரும்பாம்பு.  இவ்வரலாறு, 

"ஏந்திய கொள்கையார் சீறி னிடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்"

என்பதற்கு எடுத்துக்காட்டாதல் காண்க" என்றும்; சிலப்பதிகாரம் வழக்குரை காதை (வரி.9-15)க்குப் பொருள் கூறப்புகும் நாட்டார் அவர்கள் "தான் பெருந்தேவி யாகலான், அப் பெருமிதந் தோன்ற, யாம் உணர்த்தும் என்றாள்.  பெருந்தேவியைத் தம் பிராட்டி எனவும் வழங்குவர்.  முன்னர்க் கூறியவற்றையே மீட்டுங் கூறினாள், அவற்றாற் றுன்பம் வருமென்பதனை உணர்த்துதற் பொருட்டு; என்னை? 'கூறியது கூறினுங் குற்ற மில்லை, வேறொரு பொருளை விளக்கு மாயின்' என்பவாகலான்" என்றும் கூறுவதிலிருந்து இது எந்த நூற்பாடல் என்று யூகிக்க வேண்டிய நிலையையும் உருவாக்கித் தருகின்றார்.

திருவிளையாடற் புராணம், கார் நாற்பது, களவழி நாற்பது ஆகியவற்றின் உரைப் பகுதிக்குள் இடம்பெறும் மேற்கோள்கள் நூற்பெயரை மட்டும் பெற்று பாடலெண் பெறாமல் இருப்பதைக் காண்கின்றோம்.  ஆனால், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றின் உரைப் பகுதிக்குள் இடம்பெறும் மேற்கோள்கள் மேற்கோள் எண் பெற்று அடிக்குறிப்பில் விளக்கம் பெற்றிருப்பதைக் காண்கின்றோம்.  இந்நிலைகளைப் பார்க்கும் போது காலத்திற்கேற்ப நாட்டார் அவர்களும் மேற்கோள் சுட்டும் தன்மையில் மாறுபட்டு நின்றிருக்கின்றார் என்பது தெளிவாகின்றது.

4.  மேற்கோள் நூல்கள்

நாட்டார் அவர்களின் உரைகளில் பல்வேறு வகையான நூல்களில் இருந்து மேற்கோள்கள் காட்டப்பெற்றிருக்கின்றன.  ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி ஆகியவற்றையும்;  ஐஞ்சிறு காப்பியங்களில் நீலகேசி, சூளாமணி ஆகியவற்றையும்; இதிகாசங்களில் கம்பராமாயணம், வில்லிபாரதம் ஆகியவற்றையும்; சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றையும்; பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும்; இலக்கண நூல்களில் தொல்காப்பியம், கல்லாடம், திவாகரம், வீரசோழியம், சூடாமணி நிகண்டு, பிங்கள நிகண்டு, இறையனார் அகப்பொருள், புறப்பொருள் வெண்பா மாலை, பன்னிருபாட்டியல், நைடதம், நன்னூல் ஆகியவற்றையும்; புராண நூல்களில் பெரியபுராணம், பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணம், திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், பிரபுலிங்கலை, தணிகைப் புராணம், சோணசைல புராணம், கந்தபுராணம், சேக்கிழார் புராணம் ஆகியவற்றையும்; திருமுறைகளில் தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருக்கோவையார், திருவிசைப்பா ஆகியவற்றையும்; சாத்திர நூல்களில் சிவஞான சித்தியார், திருக்களிற்றுப்படியார் ஆகியவற்றையும்; பிற காப்பியமான பெருங்கதையையும்; உரைகளில் தொல்காப்பியம் - இளம்பூரணம், தொல்காப்பியம் - நச்சினார்க்கினியம், தொல்காப்பியம் - பேராசிரியம், இறையனார் களவியற் சூத்திர உரை, திருக்குறள் பரிமேலழகர் உரை, இறையனார் அகப்பொருள் உரை ஆகியவற்றையும்; சிற்றிலக்கியங்களில் கலிங்கத்துப்பரணி, விக்கிரமசோழனுலா ஆகியவற்றையும்; பிற்கால நீதிநூல்களில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், உலகநீதி, மூதுரை, நல்வழி, நன்னெறி, நறுந்தொகை, அறநெறிச்சாரம், நிதிநெறி விளக்கம் ஆகியவற்றையும்; பிறவகை நூல்களில் மதிவாணன் நாடகத் தமிழ்நூல், கனா நூல், புறப்பாட்டு, இராம நாடகம், பட்டினத்தார் பாடல்கள், தனிப்பாடல்கள், திருவள்ளுவ மாலை, திருவள்ளுவப் பயன் ஆகியவற்றையும் நாட்டார் அவர்கள் தம்முடைய உரைகளில் மேற்கோள்களாகக் காட்டிடப்பெற்ற நூல்களாகும்.  இவற்றையெல்லாம் பார்க்கும் போது நாட்டாரின் அறிவுத்திறனும் நூற்புலமையும் தெற்றென விளங்குவதை உணரலாம்.

5.  முற்பதிப்பின் தன்மையைச் சுட்டுதல்

நாட்டார் அவர்கள் தமக்கு முன் பதிப்பிக்கப்பெற்ற பல பதிப்புகளை ஒப்பு நோக்கி அவற்றின்கண் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை உணர்ந்து சிறந்த பாடங்களைத் தேர்ந்தெடுப்பதில் கைகண்டவர்.  வேறு நூல்களில் மிகுதியாகக் காணப்படக்கூடிய, இடைச்செருகலான பகுதிகளைக் கூட நாட்டார் அவர்கள் அடிக்குறிப்பாகக் காட்டியிருப்பது அவர்தம் பதிப்பு நெறியைச் சுட்டுகின்றது எனலாம்.  காட்டாக, ஆத்திசூடியில் 'கோதாட்டொழி' என்பதன் பின் துன்பத்தை நீக்கு என்ற பொருளில் 'கௌவை யகற்று' என்பது சில பதிப்புகளில் இடம்பெற்றிருக்கின்றது. இதை நாட்டார் அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் அடிக்குறிப்பில் காட்டியிருக்கின்றார்.  மேலும், சில பதிப்புகளில் தொடர்கள் முன்-பின்னாகச் செல்லும் விதத்தையும் சுட்டிச் செல்கின்றார்.

"பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர்" (நறுந்தொகை, 18)

"சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர்" (நறுந்தொகை, 19)

ஆகிய இரண்டும் சில பதிப்பில் 'சிறியோர்' என்பது முன்னும் 'பெரியோர்' என்பது பின்னும் காணப்படுகின்றன என்று முற்பதிப்புகளில் காணக்கூடிய அமைப்பைத் தம்முடைய உரைப்பதிப்புகளில் காட்டிச் செல்கின்றார்.

6.  பாடத்திருத்தம்

பல பதிப்புகளைக் கண்ணுற்ற நாட்டார் அவர்கள் தவறான பாடத்தைத் திருத்தம் செய்வதும், இருக்கின்ற பாடம் இதுவாக இருந்தால் சிறப்பாக இருக்குமென்றும் கூறும் இடங்கள் இவர்தம் பதிப்புகளில் காணமுடிகின்றது.  காட்டாக, 

"மன்றுபறித் துண்ணேல்" (ஆத்திசூடி, 23)

என்பது நீதிமன்றத்திலே இருந்துகொண்டு இலஞ்சம் வாங்கி வாழாதே என்று பொருள்படும்.  ஆனால், "மண்பறிந் துண்ணேல்" என்று பாடமிருந்தால் பிறர் நிலத்தைக் கவர்ந்து வாழாதே என்பதாகும் என்று கூறுகின்றார்.  மேலும்,

"எழுக்க டந்ததோ ளுருத்திர வுலகமென் றியாரும்"

எனத் திருவிளையாடற் புராணம் திருநகரச் சிறப்பு 100:1இல் வருவதை "உருத்திர னுலகம்" எனப் பாடங் கொள்ளுதல் சிறப்பு என்றும் கூறுகின்றார்.

7.  இருபொருள் சுட்டும் தன்மை

ஒரு தொடருக்கு - ஒரு பாடலுக்கு ஒருபொருள் என்று அமையாமல் இருவேறு பொருள்களைச் சுட்டிக்காட்டும்  போக்கை நாட்டாரின் உரைகளில் காணமுடிகின்றது.  அவற்றுள் சில நுகர்வோம்.

"ஙப்போல் வளை" (ஆத்திசூடி, 15) என்பதற்கு

அ. ங என்னும் எழுத்தானது தான் பயனுடையதாயிருந்து பயனில்லாத ஙா முதலிய தன் வருக்க எழுத்துக்களைத் தழுவிக் கொள்ளுதல் போல, நீ பயனுடையவனாயிருந்து உன் இனத்தார் பயனில்லாதவராயினும் அவரைத் தழுவிக்கொள்.
ஆ.  ஙா முதலிய பதினோரெழுத்தும் எந்தச் சொல்லிலும் வருவதில்லை.  ஙகரத்தின் பொருட்டே அவற்றையும் சுவடியில் எழுதுகிறார்கள்.  இனி இதற்கு ஙகரவொற்றானது அகரவுயிர் ஒன்றையே தழுவுவது போல நீ ஒருவனையே தழுவு என மாதர்க்குக் கூறியதாகவும் பொருள் சொல்லலாம் என்றவாறும்;

"காப்பது விரதம்" (ஆத்திசூடி, 33) என்பதற்கு

அ.  பிற உயிர்களுக்குத் துன்பஞ் செய்யாமல் (அவற்றைக்) காப்பாற்றுவதே தவமாகும்.
ஆ.  தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமற் செய்வதே விரதம் என்றவாறும்;

"சொக்க ரென்பவ ரத்தம் பெறுவர்" (கொன்றைவேந்தன், 35) என்பதற்கு

அ.  பொருளுடையவர் அறமும் இன்பமும் ஆகிய மற்றைப் பேறுகளையும் பெறுவர்.
ஆ. முயற்சியுடையவர் பொருள் பெறுவர், களங்கமற்றவர் நல்வழியை அடைவர் என்றவாறும்;

"துடியாப் பெண்டிர் மடியி னெருப்பு" (கொன்றைவேந்தன், 41) என்பதற்கு

அ.  கணவர்க்குத் துன்பம் வந்தபோது மனம் பதையாத மகளிர், அவர் வயிற்றில் நெருப்பாவர்.
ஆ.  மடியில் நெருப்பு என்பதற்கு உடையிற் கட்டிய நெருப்பையொப்பர் என்றவாறும்;

"நிற்கக் கற்றல் சொற்றிறம் பாமை" (கொன்றைவேந்தன், 50) என்பதற்கு

அ.  நிலைபெறக் கற்றலாவது சொல்லுஞ் சொல் தவறாமையாம்.  கற்றவர்கள்
பயனின்றி யொழியாது நிலைபெறும் சொற்களைச் சொல்லுதல் வேண்டும்.
ஆ.  சொல் திறம்பாமை என்பதற்கு வாக்குறுதியிற் பிறழாதிருத்தல் என்றவாறும்;
"நல்லிணக்கம் இல்லாரோ டிணங்க வேண்டாம்" (உலகநீதி, 2:2) என்பதற்கு
அ.நல்லிணக்கம் இல்லார் என்றமையால், தீயவரின் இணக்கமுடையவரென்று கொள்க.
ஆ.  நட்பிற்குரிய நல்ல பண்பில்லாதவர்களுடன் நட்புச் செய்யவேண்டும்
என்றவாறும்;

"கண்ணழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்" (உலகநீதி, 9) என்பதற்கு

அ.  பிறர் செய்யும் நற்காரியத்தை தடுக்கவேண்டாம்.
ஆ.  சேர்ந்திருப்போரைப் பிரிக்கவேண்டாம் என்றவாறும்;

"கல்லின் மேலிட்ட கலம்" (மூதுரை, 15:4) என்பதற்கு

அ.  கல்லின் மேலே போடப்பட்ட மட்கலம் போல
ஆ.  கல்லின் மேலிட்ட கலம் என்பதற்குக் கல்லின் மேலே தாக்கிய மரக்கலம் என்றவாறும்;

"இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று சாலும்" (நல்வழி, 31) என்பதற்கு
அ.  இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று.  இலக்கண வழுக்களையுடைய
செய்யுளினும் (அஃதில்லாத) வழக்கு நல்லது.
ஆ. பழுதுடைய பாடலைக் காட்டிலும் பாடல் கலவாத வெற்றிசையே சிறப்பு
என்றவாறும்நாட்டார்அவர்கள் இருபொருளனவாக உரைவரைந்திருப்பது
அவரின் உரைத்திறனை வெளிப்படுத்துகின்றது எனலாம்.

8.  முன் வந்திருத்தலைச் சுட்டுதல்

ஒரே நூலில் தொடர்புடைய கருத்துக்கள் பலவிடங்களில் வருவனவற்றையும் நாட்டார் அவர்கள் தம்முடைய உரைப்பதிப்பில் சுட்டிச்சென்றிருக்கின்றார்.  காட்டாக,

"கொம்பர்த் தும்பி குழலிசை காட்டப்
பொங்கர் வண்டினம் நல்லியாழ் செய்ய
வரிக்குயில் பாட மாமயில் ஆடும்
விரைப்பூம் பந்தர் கண்டுளஞ் சிறந்தும்" (மணிமேகலை,19:57-60)

என்னும் பாடலடிகளுக்கு உரை வரையுமிடத்து, 

'குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட, 
மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய, 
வெயினுழை பறியாக்குயினுழை பொதும்பின், 
மயிலா டரங்கின்' (மணிமேகலை, 4:3-6) 

என முன்னர் வந்திருத்தல் அறியற்பாலது எனக் குறிப்பிடுகின்றதை உணரலாம்.

9.  உறவு முறைகளைச் சுட்டுதல்

நாட்டாரின் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றின் உரைப்பதிப்புகளில் இடம்பெறக்கூடிய காப்பிய மாந்தர்களின் உறவுமுறைகளை உரைப் பகுதிக்குள் பல்வேறு இடங்களில் சுட்டிச் செல்கின்றார்.  அதாவது, 

இருநிதிக்கிழவன்  -  மாசாத்துவான் (சிலப்.1:34)
இளங்கோவேந்தன்-  நெடுஞ்செழியனுக்கு இளங்கோவாகிய வேந்தன்
            (சிலப்.16:193)
சாலினி -  வேட்டுவ மகளாகிய தேவராட்டி (சிலப்.12:7)
சித்திராபதி -  மாதவியின் நற்றாய் (மணி.பதி.35)
வயந்தமாலை -  மாதவியின் தோழி (மணி.பதி.36)
மாதவி         -  மணிமேகலையின் தாய் (மணி.பதி.36)
மணிமேகலை -  கோவலனுக்கு நாடகக் கணிகையாகிய மாதவி 
                    வயிற்றில் பிறந்தவள்; இக்காப்பியத்தின் தலைவி 
                    (மணி.பதி.44)
சம்பாதி -  கழுகரசன்; சடாயுவினுடன் பிறந்தவன் (மணி.3:53)
கௌசிகன் -  சுதமதியின் தந்தை (மணி.7:112)
செங்குட்டுவன் -  இளங்கோவடிகளின் தமையன் (மணி.26:77)

என்றவாறு காப்பிய மாந்தர்களின் உறவு முறைகளை விளக்கியுரைக்கின்றார்.

10.  ஆய்வுப் போக்கு

நாட்டார் அவர்களின் உரைப்பதிப்பானது வினாவிடையாகவும், ஒப்பீடாகவும், திருத்தப் பாடமாகவும் எனப் பல நிலைகளில் அமைந்திருக்கின்றது.  புகார்க்காண்டம் வேனிற் காதையில் அகநிலை மருதம், புறநிலை மருதம், அருகியின் மருதம், பெருகியின் மருதம் என்ற நான்கினைப் பற்றி விளக்கம் கூறும் பகுதியின் அடிக்குறிப்பில் இவை நான்கும் பழைய பதிப்புகளில் பிழைபட்டிருந்தவை.  ஓர் அறிஞரால் திருத்தப்பட்டன (தமிழ்ப்பொழில், துணர் 17, ப.70).  சிறுபான்மை ஈண்டு எம்மாலும் திருத்தப்பட்டன என்று சுட்டித் தாம் செய்த திருத்தத்திற்குக் காரணம் உரைக்கின்றார்.

மதுரைக்காண்டம் வஞ்சினமாலையில் இறுதியாக உள்ள 'பொற்பு' என்று தொடங்கும் வெண்பா இளம்புலவர் யாராலோ எழுதிச் சேர்க்கப்பெற்றது.  பொருட் சிறப்பில்லாதது என்று எடுத்துரைக்கின்றார்.

மதுரைக்காண்டம் அழற்படு காதையில் சில பகுதிகளுக்கு உரை வரையவில்லை.  இதனை நாட்டார் அவர்கள் [  ] இக்குறியீட்டினுட்பட்ட ஐந்து பகுதிகள் கந்தியார் போலும் ஒருவரால் பாடி இடைமடுக்கப்பட்டன ஆகலின், அவற்றிற்கு உரை எழுதப்படவில்லை என்று கூறுகின்றார்.  "குறியீட்டுக்குட்பட்ட பகுதிகளில் ஒருசொற்கேனும் அவரெழுதிய அரும்பத உரையாசிரியர் பொருள் காணப்படாமையானும்  அவை இளங்கோவடிகள் இயற்றியன அல்ல என்பதும், பின்னுள்ள யாரோ ஒருவரால் இயற்றப் புகுத்தப்பட்டன ஆகுமென்பதும் நன்கு துணியப்படும்" என்று இயம்புதல் மூலம் இவரது கண்டு துணியும் ஆற்றலைத் தெளிவாக உணரலாம்.

அரும்பத உரையாசிரியர் கருத்துகளை 53 இடங்களுக்குக் குறையாமல் எடுத்தாண்டும், ஒரு சில இடங்களில் மறுத்தும், உரை கண்டுள்ள நாட்டார் அவர்கள் அடியார்க்கு நல்லார் கருத்துகளை 51 இடங்களுக்குக் குறையாமல் எடுத்தாண்டும் பல இடங்களில் அவர் உரையை மறுத்தும் தமது உரையைச் செம்மையாக்கி உள்ளார்.  பொதுவாக, நாட்டார் அவர்களின் உரையில் அரும்பதவுரையாசிரியரின் கருத்தை மறுத்தல் என்பது குறைவாகவும், அடியார்க்கு நல்லாரின் கருத்தை மறுத்தல் என்பது அதிகமாகவும் இருப்பதைக் காணமுடிகின்றது.

ஊர்காண் காதையில், "வேற்றுப்புலம் படர ஓசனிக்கின்ற" (சிலப்.14:124-125) என்ற வரிகளுக்கு விளக்கம் தருமிடத்து, "ஓரோர் தேயங்கட்கு ஓரொரு காலம் மாறி நிகழ்தலின் வேற்றுப் புலம் படர வென்றார் என்னும் அடியார்க்குநல்லார் உரை தமிழ்கூறு நல்லுலகத்திற்கு பொருந்துவதன்று" என்று மறுத்தவர் அவ்விடத்திருந்தும் அகலவென்பார் "வேற்றுப் புலம் படர" என்று விளக்கம் தருகின்றார்.

"சத்தி யாய்ச்சிவ மாகித் தனிப்பர
முத்தி யான முதலைத் துதசெயச்
சுத்தி யாகிய சொற்பொருள் நல்குவ
சித்தி யானைதன் செய்யபொற் பாதமே" (திருவிளை.காப்பு, 1)

எனும் பாடலுக்கு நாட்டார் அவர்கள் சிறந்த ஆய்வுரை ஒன்றை வழங்கியுள்ளார்.  அதாவது, "மதுரையம்பதி, சக்திபீடம் அறுபத்து நான்கனுள் முதன்மையதாகலானும், அருளாகிய சத்தியை உணர்ந்தே சிவத்தை உணரவேண்டும் என்ப ஆதலானும், இந்நூலாசிரியர்க்கும் பராசத்தியார் காட்சிதந்து இதனைப் பாடுமாறு அருள்புரிந்தன ராதலானும் சத்தியார் எனத் தொடங்கப்பெற்றது" என்ற ஆய்வுரையைத் தருகின்றார்.

"ஏழண் டியற்றியோர் ஈரா றாண்டிற்
சூழ்கழன் மன்னற்குக் காட்டல் வேண்டி" (சிலப்.3:10-11)

என்னும் அரங்கேற்று காதை வரிகளில் இடம்பெற்றிருக்கும் 'மன்னர்' என்பதற்கு நாட்டாரின் ஆய்வுரை சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.  'மன்னன்' என்பது சோழன் கரிகாற்பெருவளத்தானைக் குறிக்கின்றது என்று அரும்பதவுரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் உரைக்க நாட்டார் அவர்கள் கரிகாலன் அல்ல சோழ மன்னன் ஒருவன் என்று எடுத்தியம்புகின்றார்.  அதாவது, "ஈண்டுக் கரிகாலன் என்று பெயர் கூறப்பட்டமையானும், 

"செருவெங் காதலின் திருமா வளவன் .......
புண்ணியத் திசைமுகம் போகிய வந்நாள்" (சிலப்.5:90-94)

என இந்திரவிழவூரெழுத்த காதையிலும்,  

"மன்னன் கரிகால் வளவன்நீங் கியநாள்
இந்நகர் போல்வதோர் இயல்பின தாகி" (மணி.1:39-40)

என மணிமேகலை யுள்ளும் கரிகாலன் வடதிசைக்கட் படையெடுத்துச் சென்றமை கூறப்பட்டிருத்தலன்றி, நிகழ்காலத்தில் வைத்து அவன் யாண்டுங் கூறப்படாமையானும், மதுரைக் காண்டத்திறுதிக் கட்டுரையில் பாண்டியன் நெடுஞ்செழியனையும், வஞ்சிக் காண்டத்திறுதிக் கட்டுரையில் சேரன் செங்குட்டுவனையும் கிளந்தோதும் அடிகள் புகார்க் காண்டத் திறுதிக் கட்டுரையில் சோழனொருவனையும் பெயர் குறித்துக் கூறாமையானும் கரிகாலன் அப்பொழுதிருந்தானென்று துணிதல் சாலாதென்க" (ந.மு.வே., சிலப்பதிகாரம், ப.50) என்கின்றார்.

11.  ஒரே நூலில் மீண்டும் வரும் தொடர்கள்

ஒரு நூலில் வந்த தொடர் மீண்டும் அதே நூலில் வேறொரு இடத்தில் வருவனவற்றையும், பொருள் தொடர்பாக மீண்டும் மீண்டும் ஒரே நுலில் வருவனவற்றையும் கூட நாட்டார் அவர்கள் தம்முடைய உரைப்பதிப்புகளில் சுட்டிச் செல்கின்றார்.

"ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன்" (சிலப்.பதி.42) என்பது
"ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன்" (சிலப்.அழற்படு.155) என்பதும்;

"வாரொலி கூந்தல்நின் மணமகன் றன்னை" (சிலப்.பதி.50) என்பது
"வாரொலி கூந்தல்நின் மணமகன் தன்னை" (சிலப்.கட்டுரை.173) 

என்பதும்;

"முடியுடை வேந்தர் மூவ ருள்ளும்" (சிலப்.10:கட்.1) என்பது
"முடிகெழு வேந்தர் மூவ ருள்ளும்" (சிலப்.23:கட்.1) என்பதும்

என வந்த தொடரே மீண்டும் வந்துள்ளமையைப் பல இடங்களில் சுட்டிச்செல்லும் நாட்டார் அவர்கள், பொருள் தொடர்பாக அமைந்த தொடர்களையும் அவர் சுட்டிச் சென்றிருக்கின்றார்.

"அல்லை யீதல்லை யீதென மறைகளு மன்மைச்
சொல்லி னாற்றுதித் திளைக்குமிச் சுந்தர னாடற்" 
(திருவிளை. கடவுள்வாழ்த்து, 29:1-2)

மறைகள் அண்மைச் சொல்லினாற் கூறி இளைத்தலை இவ்வாசிரியரே, 

"பூதங்க ளல்ல பொறியல்ல வேறு புலனல்ல உள்ள மதியின்
பேதங் களல்ல விவையன்றி நின்ற பிறிதல்ல வென்று பெருநூல்
வேதங் கிடந்து தடுமாறும் வஞ்ச வெளியென்ப கூடன் மறுகிற்
பாதங்க ணோவ வளையிந்த னாதி பகர்வாரை யாயு மவரே"
(திருவிளை. கூடற்.10:1)

என்று குறிப்பிடுவதைச் சுட்டிக்காட்டுகின்றார்.  இவ்வாறு நாட்டார்தம் உரைப்பதிப்புகளில் இத்தன்மை வெளிப்பட்டிருப்பதைக் காணமுடிகின்றது.

12.  இலக்கணக் குறிப்புரைத்தல்

பழைய உரையாசிரியர் மரபில் நின்று, நாட்டார் அவர்கள் பல இடங்களில் சொற்களுக்கும் பாடல்களுக்கும் இலக்கணக் குறிப்புத் தந்துள்ளார்.  பொருள் மயக்கம் ஏற்படாமல் இருக்க, தேர்ந்த பொருள் இதுவென உணர்த்த உரையாசிரியர்கள் இலக்கணக் குறிப்புத் தருவதை மரபாகக் கொண்டுள்ளனர்.  இவ்வடிப்படையிலேயே நாட்டார் அவர்களின் உரைப்பதிப்புகளில் இலக்கணக் குறிப்புகள் அமைந்திருக்கின்றன.

i.  அணியிலக்கணம்

"புண்ணி யம்புரி பூமிபா ரதில்வரு போகம்
நண்ணி யின்புறு பூமிவா னாடென்ப நாளும்
புண்ணி யம்புரி பூமியு மதில்வரு போகம்
நண்ணி யின்புறு பூமியு மதுரைமா நகரம்"

என்னும் பரஞ்சோதியாரின் திருவிளையாடற் புராணத் திருநகரச் சிறப்பின் பாடல் 103இல் சொல்லும் பொருளும் முன் வந்தனவே பின்னும் வருதலின் இது சொற்பொருட் பின்வருநிலையணி என்கின்றார்.

"எழுக்க டந்ததோ ளுருத்திர புலகமென் றியாரும்
வழுத்த நின்றவீர் நகர்வயி னும்பரின் மாண்ட
விழுத்த கும்பல செல்வமும் வியந்துபார்த் துள்ளத்
தழுக்க றாமையா லின்னமு மமரர்கண் ணுறங்கார்"

என்னும் பரஞ்சோதியாரின் திருவிளையாடற் புராணத் திருநகர்ச்சிறப்பின் பாடல் 100இல் அமரர்க்கு இயல்பான கணுறக்க மின்மையைப் பொறாமையால் வந்ததெனக் கவி தன்கருத்தை யேற்றிக் கூறுதலின் இது தற்குறிப்பேற்ற அணி என்கின்றார்.

"கடம்பின், குழல்செய் வண்டு" (திருவிளை. திருநகர்.95:2-3) 

என்பது கடம்பிலுள்ள வண்டினைக் கடம்பின் வண்டு என்றார்.  ஆகலின் இது தொடர்புயர்வு நவிற்சியணி என்று கூறுகின்றார்.

ii.  பகுதிப்பொருள் விகுதி(அது)

"ஊக்கமது கைவிடேல்" (ஆத்திசூடி, 6)
"குணமது கைவிடேல்" (ஆத்திசூடி, 36)
"தானமது விரும்பு" (ஆத்திசூடி, 55)

iii.  ஆகுபெயர்

"வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்" (உலகநீதி, 1) -  'வாகு'
"மாற்றானை யுறவென்று நம்பவேண்டாம்" (உலகநீதி, 3) -  'உறவு'
"வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரியவேண்டாம்"(உலக.6)-  'வாய்'
"கண்ணழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்" (உலகநீதி, 9) -  'கண்'

iv.  தம், தன் சாரியை

"பொருவார்தம் போர்க்களத்திற் போக வேண்டாம்" (உலக.7) -  'தம்'
"செய்தநன்றி யொருநாளும் மறக்க வேண்டாம்" (உலக.8) -  'தன்'

v.  பிற வகை

சுழியா -  செய்யா என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்(நறுந்.77) 
ஒழிவது -  வியங்கோள் (நறுந்.77)
ஞயம் -  நயம் என்பதன் போலி (ஆத்தி.17)
வாழ்த்தாய் -  முன்னிலை ஏவலொருமை வினைமுற்று (உலக.1)
ஓடும் -  பெயரெச்சம் (உலக.8)
சென்றோர் -  வினைப்பெயர் (சிலப்.10:220)
இந்நெறிக்கு -  உருபு மயக்கம் (சிலப்.10:64)
உயிர்த்தனன் -  முற்றெச்சம் (சிலப்.13:45)
எள்ளும் -  உவமவுருபு (மணி.பதி.1)
அனரசு -  இடைப்போலி (டண15:44)
வீடலியான் -  வினைத்திரிசொல் (மணி.19:32)
செய்தவத்தாட்டியை - இன்னிலையிற் படர்க்கை (மணி.23:64)
தீயழல் -  ஒஐ பொருளிருசொல்; கொடிய அழலுமாம் (மணி.2:53)
இடவயின் -  வயின் ஏழனுருபின் பொருட்டு (மணி.15:4)
இதனொடு -  உருபு மயக்கம் (மணி.13:55)
கொண்டாங்கு -  இதில் 'ஆங்கு' என்பது அசை (மணி.பதி.16)
கொண்டீங்கு -  இதில் 'ஈங்கு' என்பது அசை (மணி.பதி.19)

என்ற நிலைகளிலெல்லாம் இலக்கண விளக்கங்களை நாட்டார் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

ஈ.  பாடவேறுபாடுகள்

பழமையான சுவடிகளைச் செப்பம் செய்து இக்காலத் தேவைக்கேற்ப வெளியிடுவதும், வெளிவந்த சுவடிப்பதிப்புகளுக்குத் தக்க உரை வரைந்து பாடத் தெளிவுடன் வெளியிடுவதும் பதிப்புப் பணியின் ஒரு கூறாகும்.  நூலாசிரியரை விட உரையாசிரியர்கள் சிறந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.  மூலநூலாசிரியர் கூறாத கருத்துகளைக் கூட உரையாசிரியர்கள் பொருள்கண்டு விளக்கிவிடுகின்றனர்.  மேலும் படியெடுப்பவர்களால் நேர்ந்த பிழைகளைக் கூட உரையாசிரியர்கள் தங்களின் உரைத் திறனால் அவற்றைக் களையும் போக்குடையவர்கள்.  இறையனார் களவியல் உரை தொடங்கி இன்றுவரை பல உரையாசிரியர்கள் தமிழுலகில் வலம் வந்துகொண்டு இருக்கின்றனர்.  உரையாசிரியர்களை இலக்கிய உரையாசிரியர்கள், இலக்கண உரையாசிரியர்கள், காப்பிய உரையாசிரியர்கள், சமயநூல் உரையாசிரியர்கள், தத்துவ உரையாசிரியர்கள், மருத்துவ நூல் உரையாசிரியர்கள் என்று இவர்களின் வகைகளைப் பெருக்கிக்கொண்டே போகலாம்.  ஒன்றுக்கும் மேற்பட்ட வகைகளில் உரை வரைந்த உரையாசிரியர்களும் உண்டு. இவ்வகையில், சிவஞானமுனிவர் இலக்கணம், காப்பியம், தத்துவம் ஆகியவற்றுக்கும்; நச்சினார்க்கினியர் இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றுக்கும்; ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் இலக்கியம், காப்பியம், புராணம், நீதிநூல்கள் ஆகியவற்றுக்கும் உரைகள் வரைந்திருப்பதைக் காணலாம்.

நான்கு வகையான உரைப்பதிப்புகளைத் தந்த நாட்டார் அவர்கள் ஏனையோர் பதிப்புகளில் காணப்படக் கூடிய பாடவேறுபாடுகளை அடிக்குறிப்பாகவும், எனவும் பாடம், என்பதும் பாடம், என்றும் பாடம், எனப் பாடம் என்றவாறாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்.  இவர் பெரும்பாலும் (களவழி நாற்பது மட்டும் சுவடிகளை வைத்துப் பாடவேறுபாடு காட்டியிருக்கின்றார்) அச்சு நூல்களுக்கிடைய காணப்படக்கூடிய பாட வேறுபாடுகளையே காட்டுகின்றார்.  இவ்வகையில் இவரது பதின்மூன்று உரைப்பதிப்புகளில் 1368 பாடவேறுபாடுகள் சுட்டப்பெற்றுள்ளன.  சுவடி மற்றும் அச்சு நூல்களில் பாடவேறுபாடு சுட்டுதல் எவ்வளவு கடினம் என்பதை மு.கோ. இராமன் அவர்கள், "பதிப்பிக்க எடுத்துக்கொள்ளும் ஏடு நூலாசிரியன் கையாண்ட மூலச்சுவடியாக இருக்க வாய்ப்பில்லை.  அது வழி வழியாகப் பலர், பலகாலத்தில் பிரதி செய்த பிரதிகளில் ஒன்றாகவே இருக்கும்.  அதில் அவ்வப்பொழுது எழுதுவோரால் ஏற்படும் பிழைகளும் பாட பேதங்களும் பல இருக்க வாய்ப்புண்டு.  இப்போது அதைப் பதிப்பிப்பதற்காகப் படி எடுக்கையில், ஏட்டில் இருக்கும் எழுத்து முறைகளை அறியாததாலும், யாப்பு-பாட்டியலில் ஆழ்ந்த புலமை இன்மையாலும், ஏட்டில் உள்ள எழுத்தை வேறோர் எழுத்தென மயங்கிப் பிரதி செய்வதாலும் பல பிழைகள் நேரிடுகின்றன.  ஏட்டில் இருந்தாலாவது ஒருவகையில் இவ்விதம் இப்பகுதி இருக்கலாம் என ஊகிக்க இடம் உண்டு.  அச்சிடப்பெற்ற நூலில் அவ்விதம் ஊகிக்கவும் இயலாது" (சுவடியியல் பயிற்சி கையேடு, ப.7) என்று கூறுகின்றார்.

அச்சுநூற் பதிப்புகளைக் கொண்டே நாட்டார் அவர்கள் இவ்வளவு பாட வேறுபாடுகளைக் காட்டித் திருத்தம் செய்திருக்கின்றார் என்றால் அவரின் புலமையை என்னவென்று சொல்வது.  இவரது உரைப்பதிப்புகளில் காணப்படக் கூடிய பாட வேறுபாடுகளின் வகைகள் பலவாகும்.  அவற்றுள் சில மட்டும் இங்கே காண்போம்.

1.  பாடலாசிரியர் பெயர் வேறுபாடு

நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் அகநானூறுக்குச் சிறந்த உரைப்பதிப்பைத் தந்துள்ளார்.  இந்நூல் 142 புலவர்களால் பாடப்பெற்றது என்றும், மூன்று பாடல்களுக்குப் பாடலாசிரியர் பெயர் தெரியவில்லை என்றும் நாட்டார் கூறுகின்றார்.  இப்பாடலாசிரியர் பெயர்களில் ஏற்படக்கூடிய மாற்றங்களை தம்முடைய உரைப்பதிப்பில் நாட்டார் தெளிவாக்கியிருக்கின்றார்.  இவ்வகையில் 47 பாடலாசிரியர்களின் பெயர்கள் திருத்தம் பெற்றிருக்கின்றன.  இனி வரும் குறிப்புகளில் தொடக்கமாக வனவன நாட்டாருடைய பாடமாகவும் அடுத்ததாக வருவன ஏனையோருடைய பாடமாகவும் கொள்ளல் வேண்டும்.  அகநானூற்றுப் பாடலாசிரியர்களின் பெயர்களில் பாடவேறுபாடு பின்வருமாறு அமையும்.

உலோச்சனார்  -  பொருந்தில் உளங்கீரனார் (20)
நல்வெள்ளியார்  -  நல்லொளியார் (32)
வெள்ளியாடியனார் - வெண்வட்டியார், வேளாவட்டனன் (29)
குன்றியனார்  -  சேரமானந்தையார் (41)
குடவாயிற் கீரத்தனார்  -  உறையூர்ச் சல்லியங் குமரனார் (44)
வண்ணப்புறக் கந்தரத்தனார்  -  வண்ணப்புறக் கல்லாடனார் (49)
கருவூர்ப் பூதஞ்சாத்தனார்  -  கருவூர்ப்பூதனார் மகனார் கொற்றனார் (50)
பெருந்தேவனார்  -  கடுகு பெருந்தேவனார் (51)
நொச்சி நியமங்கிழார்  -  மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் 
கொற்றனார்(52)
மாற்றூர்கிழார் மகனார் கொற்றங்கொற்றனார் 
                                -  நொச்சிநியமங்கிழார் (54)
செல்லூர்க் கோசிகன் கண்ணனார் -  செயலூர்க் கோசங் கண்ணனார் (66)
நோய்பாடியார்  -  நொய்ப்பாடியார் (67)
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்  -  நக்கீரர் (80)
ஈழத்துப் பூதன் தேவனார்  -  ஏறத்துப் பூதன் தேவன் (88)
மாமூலனார்  -  ஔவையார், குடவுழுந்தனார் (97) 
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங்கூத்தன்  
                                      -  மதுரைப்பாலாசிரியன் (102)
உறையூர் முதுகூத்தனார்  -  முதுகூற்றனார் (137)
காவன் முல்லைப் பூதரத்தனார்  -  காவன்முல்லை மழுக்கரத்தனார்,
  காவலன்முல்லைப் பூக்கரத்தனார்,
  காவன்முல்லைப் பூச்சாத்தனார் (151)
முள்ளியூர்ப் பூதியார்  -  முன்னியூர் வழுதியார் (173)
செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார்
- செல்லூர் இளம்பொன்சாத்தன் கொற்றன்,
   உறையூர் இளம்பொன் வாணிகன் சாத்தன் கொற்றன் (178)
கருவூர்க் கண்ணம்பாளனார்  - கருவூர்க் கண்ணம்பாணனார்,
     கண்ணன் பரணனார் (180)
பொதும்பில் கிழான் வெங்கண்ணனார்  -  வெங்கண்ணன் (192)
உலோச்சனார்  -  நக்கீரர் (200)
ஆவூர்க்கிழார் மகனார் கண்ணனார்  -  ஆவூர்கிழார் மள்ளனாகனார் (202)
தாயங் கண்ணனார்  -  தையங் கண்ணனார், இதையங் கண்ணனார் (213)
ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்
-  ஆவுர்கிழார் மகன் பெருஞ்சாத்தன் (224)
பேயனார்  -  கழார்க்கீரன் எயிற்றியார் (234)
கொடியூர்கிழார் மகனார்  -  குடிக்கிழார் மகனார் (243)
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
-  மதுரை மருதங்கிழார் மகனார் வெண்ணாகனார் (247)
நக்கண்ணையார் - திண்பொற்கோழிக் காவிதிமகன் கண்ணனார் 
நக்கணன்(252)
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்  -  கபிலர் (254)
இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார்  - இருங்கோக் 
  கண்ணனார்(279)
விற்றூற்று மூதெயினனார்  -  முத்தூற்று மூதெயினனார் (288)
வடமவண்ணக்கண் பேரிசாத்தனார்  -  பெருஞ்சாத்தன் (305)
கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்  -  கருவூர்கதப்பிள்ளைச் 
சாத்தனார்(309)
மதுரைப்பண்டவாணிகன் இளந்தேவனார்  
- மதுரைப்பண்டவாணிகன் ஈழன்றேவனார் (328)
உறையூர் முதுகூத்தனார்  -  உறையூர் கூற்றனார் (329)
மதுரைக் கூத்தனார்  -  மதுரைக் கடாரத்தனார், மதுரைக் கோடரத்தனார், 
     மதுரைக் கந்தரத்தனார் (334)
நரைமுடி நெட்டையார்  -  நிரைமுடி நெட்டையார் (339)
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
- மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார் (344, 353)
அஞ்சியத்தை மகள் நாகையார்  - அஞ்சிலாந்தை மகள் நாகையார்,
அஞ்சிலாந்தை மகனார் (352)
தங்காற் பொற்கொல்லனார்  -  தங்கால் முடக்கொற்றனார், 
     தங்கால் முடக்கோவனார் (355)
மதுரை மருதவிளநாகனார்  -  மதுரை மருதங்கண்ணனார் (358)
இடையன் சேந்தங் கொற்றனார்  -  இடையன் செங்கொற்றனார் (375)
மாறோக்கத்துக் காமக்கனி நப்பாலத்தனார்  
-  மாறோகம் காமக்கனி நப்பாலத்தனார் (377)
ஒக்கூர் மாசாத்தியார்  -  குடவாயிற் கீரத்தனார் (384)
காவனி முல்லைப் புதனார்  -  பூதத்தனார் (391)
2.  உருபு வேறுபாடு
"அணிநகர் சாந்தி செய்வது குறித்தான்
அண்ணலா ரறிந்திது செய்வார்" (திருவிளை. 3:41:4)
வேறு: "அணிநகர் சாந்தி செய்வது குறித்தான்
அண்ணலா ரறிந்தது செய்வார்"

இங்கு அறிந்திது, அறிந்தது என்ற இரண்டும் ஒருபொருள் தருகின்றது.  அண்ணலார் அறிந்து இது செய்வார் என்பதும், அண்ணலார்அறிந்து அது செய்வார் என்பதும் 'இது' . 'அது' என்றும் வேற்றுமை உருபான் வேறுபடுவதை அறியலாம்.  செய்யவேண்டியதை அறிந்ததன் பின் செய்வதை விட, செய்யவேண்டுவதை அறிந்து செய்வது தான் சிறந்தது என்று பாடங்கொண்டு 'அறிந்திது' என்பதே சிறந்த பாடமாகக் கொண்டுள்ளார் நாட்டார் அவர்கள்.

"விழுமி தாகிய விதியினும் விலக்கினு மடியைத்
தழுவு தொடர்கண் மைந்தர்கள் சாதகர் பாசங்"                                                                                                                                 (திருவிளை.திருநகர்.90)
வேறு: "விழுமி தாகிய விதியினும் விலக்கினு மடியில்
தழுவு தொண்டர்கண் மைந்தர்கள் சாதகர் பாசங்"  

இங்கு அடியை, அடியில் என்ற இரண்டும் சிவபெருமானது திருவடியைச் சுட்டுகின்றது.  இத்தொடரை அடுத்து வரும் 'தழுவு' என்றதைப் பார்க்கும்போது, சிவபெருமானின் திருவடியில் தழுவு என்று சொல்வதை விட சிவபெருமானின் திருவடியைத் தழுவு என்று சொல்வதே பொருத்தமுடையதாகத் தோன்றுகின்றது.  எனவே, நாட்டார் அவர்கள் 'அடியை'  என்ற பாடத்தைத் தெரிவுசெய்திருக்கின்றார்.

3.  உருபு மிகை

"சித்திரப் படத்துட்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து" (சிலப்.1:7:1)
வேறு: "சித்திரப் படத்துட்புக்குச் செழுங்கோட்டு மலர்புனைந்து" 
இங்குக் கோட்டின், கோட்டு என்ற இரண்டில் 'இன்' என்னும் உருபு மிக்கிருக்கின்றது.  கோடு என்றால் யாழ் என்பது பொருள்.  கோட்டின் மலர், கோட்டு மலர் என்பன முறையே யாழின் மலர் என்றும், யாழ் மலர் என்றும் ஆவதைக் காணலாம்.  யாழ் மலர்புனைந்து என்பதைவிட யாழின் மலர்புனைந்து என வருதலே சிறந்தது.  அதனால்தான் நாட்டார் அவர்கள் 'கோட்டின்' என்ற உருபு ஏற்ற பாடத்தைக் கொண்டுள்ளார் போலும்.  இதேபோல, 

அளவை நீடாது  -  அளவையினீடாது (அகம்.254:18)
தனிமையானே  -  தனிமையினானே (அகம்.294:16)
அரசனது பொருள்  -  அரசனருள் பொருள் (திருவிளை.30:12:2)
கற்பின் மிக்கெழு  -  கற்பு மிக்கெழு (திருவிளை.44:30:1)
பொற்பின் மிக்குள  - பொற்பு மிக்குள (திருவிளை.44:30:4)

போன்றவையும் இடம்பெற்றிருப்பதைச் சுட்டிச்செல்கின்றார்.

4.  ஒருமை - பன்மை வேறுபாடு

உழந்திவை  -  உழந்திது (திருவிளை.17:9:3)
காண்பான்  -  காண்பார் (திருவிளை.23:15:4)
புரிவது  -  புரிவன (திருவிளை.திருநகர்.15:4)

5.  அன் - அர் வேறுபாடு

நந்தன் வெறுக்கை  -  நந்தர் வெறுக்கை (அகம்.251:5)
களைந்தார்  - களைந்தான் (திருவிளை.3:31:4)
மீனவர்  -  மீனவன் (திருவிளை.4:14:4)
மீனவன்  -  மீனவர் (திருவிளை.50:20:4)
வானவன்  -  வானவர் (திருவிளை.49:28:2)

6.  ஆண்பால் - பெண்பால் வேறுபாடு

இவளிது செயலே  - இவனது செயலே (அகம்.158:18)
மேலான் ஒற்றி  -  மேலாள் ஒற்றி (அகம்.263:7)
எவ்வமாற்றுவான்  -  எவ்வமாற்றுவாள் (திருவிளை.திருநாட்.2:3)

7.  சுட்டுச்சொல் வேறுபாடு

அந்த  -  இந்த  (திருவிளை.திருநகர்.109:1)
இதன் பெருமை  -  அதன் பெருமை (திருவிளை.தலவி.5:5)
அதனை  -  இதனை (திருவிளை.1:27:3)
இதுகொண்டு  -  அதுகொண்டு (திருவிளை.31:13:2)

8.  பொருள் வேறுபாடு

சினமிகு முருகன்  -  சீர்மிகு முருகன் (அகம்.59:11)
கொழுமுகை யவிழ  -  கொழுமுகையுடைய (அகம்.217:9)
பிறந்ததற் கொண்டும்  -  பிறந்ததற் கொன்றும் (அகம்.219:8)
வாங்குசினை மலிந்த  -  வாங்குசினை கொய்த (அகம்.221:7)
பண்பில் வாழ்க்கை  - அன்பில் வாழ்க்கை (அகம்.245:6)
யாங்காகுவள் கொல்தானே  -  யாங்காகுவல் கொல்யானே (அகம்.260:11)
பலாஅற் கையர்  -  பலராக் கையர் (அகம்.265:18)
பாஅயப்புது  -  பராஅயபுது (அகம்.266:2)
பெரும்படை  -  பசும்படை (அகம்.309:10)
வனைகழை  -  விளைகழை (அகம்.309:13)

9.  சொல் மிகுதி

நுடங்க வெழுந்தெழுந்து  -  நுடங்க எழுந்து (அகம்.28:9)
எயினன்  -  வண்மை யெயினன் (அகம்.181:7)
என் மயங்கினர்  -  என் மயங்கினர் நம் (அகம்.293:14)
வெள்ளறிவுரையிற் குற்றம் 
                    - வெள்ளறிவுரைசொற் குற்றம் (திருவிளை.கட.26:2)

10.  எழுத்து இடமாற்றம்

சிவலிங்கமொன்று முள  -  சிவலிங்கமுமொன்றுள (திருவிளை.தலவி.1:4)

11.  சொல் இடமாற்றம்

மனுமுறை நெறியின்  -  மனுநெறி முறையின் (வெற்றி.75:3)
வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால்
தனிச்சிலம்பு அரற்றுந் தகைமையள்
-  இடக்காற் றனிச்சிலம் பரற்றினும் வலக்காற்
    புனைகழல் சுட்டுந் தகைமையள் (சிலப்.2:23:9-10)

ஏந்தித், தாம்பூங் கோதை ஊதுவண் டிரீஇ
மென்பிணி யவிழ்ந்த அரைநாள் இரவிவண்
நீவந் ததனினும்
-  ஏந்தி, மென்பிணி யவிழ்ந்த தாம்பூங்
         கோதை, ஊது வண்டிரிய வழிப்பணை
   முயங்கிய, நீவந் ததனினும் (அகம்.298:11-14)

12.  தொடர் இடமாற்றம்

அடுக்க நின்றகுண் டோதர னகட்டிடை வடவை
மடுக்க வுன்னினா னதுவந்து வயிற்றெரி பசியாய்த்
தொடுக்க வாலமுண் டாங்குடல் சோர்ந்து
-  அகட்டிடை யழலை யிடுக்கண் செய்திடு
   வடவைபோ லெரிவுற நினைத்தான் துடைக்கு
   மால முண்டாங்குடன் சோர்ந்து (திருவிளை.7:10:1-3)
சிந்தத் தருக்கழிந் தச்சந் தோற்றற்
குரியகா ரணத்தா னாம முக்கிர வரும னென்பார்
-  சித்தத் தக்க காரணமே யன்றி
   உரியதன் பெயர்க்கு மேற்பவுக் கிரவரும னென்றான் 
(திருவிளை.11:26:3-4)

13.  குறில் நெடில் வேறுபாடு

இருவகிர் ஈருளின்  -  இருவகிர் இருளின் (அகம்.294:8)
நீடிய வேய்படு  -  நீடிய வெய்படு (அகம்.295:3)
தோன்று குயிலெழுத்து  -  தொன்று குயிலெழுத்து (அகம்.297:8)
படத்துட்  -  படாத்துட் (சிலப்.1:7:1)
இன்றோள் தாராய்  -  ஈன்றோட்டாராய் (அகம்.165:8)
மறமிகு  -  மாமிகு (அகம்.197:7)
கரவல்  -  காவல் (அகம்.298:18)
மரந்தை  -  மாந்தை (அகம்.376:18)
தெற்றுவதாயிற்  -  தேற்றுவதாதயிற் (அகம்.387:17)

14.  எழுத்துத் திரிதல்

ஓரினத்தின் எழுத்திற்குள் மாற்றம் பெறுவது எழுத்துத் திரிபு என்பர்.

கொக்கின நிரை  -  கொக்கின் நிரை (அகம்.120:3)
உறுகண் மழவர்  -  உறு கணமழவர் (அகம்.121:11)
கள்வன்  -  களவன் (அகம்.235:11;  246:2)
நல்குவர  -  நல்குவர் (அகம்.357:12)
அருளின்றி  -  அருளின்று (அகம்.235:16)
வலத்தன்மை  -  வலித்தன்மை (அகம்.243:11)
நறுவிரை  -  நறுவரை (அகம்.269:9)
நீங்கி  -  நீங்க (அகம்.345:1)
நனைந்த  -  நினைந்த (அகம்.351:11)
பசந்து தோன்ற  -  பசந்து தோன்றி (திருவிளை.22:27:4)
நோக்கா  -  நோக்கி (திருவிளை.22:28:4)
மிலைந்து  -  மலைந்து (அகம்.182:1)

15.  எழுத்து மிகுதி

இகழ்ந்தேன்  -  இழந்தேன் (மணி.13:81)
பொருதுகளத் தொழிய  -  பொருகளத் தொழிய (அகம்.199:20)
மடக்கிக் கிளையொடு  -  மடக்கிளையொடு (அகம்.248:3)

16.  எழுத்துக் குறைவு

அறியுமாயின்  -  அறியுநமாயின் (அகம்.243:12)
கொண்டன் மாமலை  -  கொண்டகன் மாமலை (அகம்.262:17)
துஞ்சி இன்றும்  -  துஞ்சினை யின்றும் (அகம்.296:4)
ஆகொள்  -  ஆடுகொள் (அகம்.372:11)
பல்சினை உதிர்வை  -  பல்சினை யுதிர்பவை (அகம்.393:6)
காமனற்றேவியும்  -  காமன்றன்றேவியும் (திருவிளை.26:3:3)

17.  ஒற்று மிகுதி

கண்ணீருள் நனைந்து  -  கண்ணீரு நனைந்து (திருவிளை.6:19:3)
குடர்கொண்டு  -  குடர்கொடு (களவழி, 34:3)
நெறிப்படு  -  நெறிபடு (திருவிளை.திருநகர்.105:3)
நாகநாட்டு  -  நாகநாடு (திருவிளை.1:3:3)
மனித்த வேடம்  -  மனித வேடம் (திருவிளை.30:39:4)
நூற்று நூறு  -  நூறு நூறு (திருவிளை.50:22:1;  50:28:1-4)


18.  ஒற்றுக்குறைவு

படிவமாகி  -  படிவமாக்கி (திருவிளை.கடவுட்.8:1)
பெரிய அம்மா  -  பெரியள் அம்மா (அகம்.198:12)
பலபாராட்ட  -  பலர் பாராட்ட (அகம்.254:2)
நீராசனக்கலம்  -  நீராஞ்சனக்கலம் (திருவிளை.5:142:4)
உவப்புற  -  உவர்ப்புற (திருவிளை.திருநகர்.53:1)
நெறிகொடு  -  நெறிக்கொடு (திருவிளை.1:35:2)

19.  'ய' மிக்கும் குறைந்தும் வருதல்

உயர்நிலைய  -  உயர்நிலை (கார்.38:1)
துவன்றிய  -  துவன்றி (அகம்.141:10)
வெரீஇய  -  வெரீஇ (அகம்.141:19)
தைஇய  -  தைஇ (அகம்.181:17)
நீவிய  -  நீவி (அகம்.283:1)
படப்பை நண்ணி  -  படப்பை நண்ணிய (அகம்.146:4)
நசைஇ  -  நசைஇய (அகம்.327:9)

20.  எழுத்து மயக்கம்

க - த :  கண் கமழ்  -  தண் கமழ் (அகம்.153:17)
  கோடு தோய்  -  தோடு தோய் (அகம்.166:15)
  மாடத் தெழுதணி  -  மாடக்கெழுதணி (அகம்.167:14-15)
  விரவுமொழிக் கட்டூர்  -  விரவுமொழித்தகட்டூர் (அகம்.212:14)
  மாதருங் கொடுத்திட  -  மாதருந்தொடுத்திட (திருவிளை.10:3:3)
  விடுவகை  -  விடுவதை (திருவிளை.26:35:3)
ண - ந :  வெண்ணுனை  -  வெந்நுனை (அகம்.109:7)
  மாணகர்  -  மாநகர் (124:6)
ண - ன :  துணிகொள  -  துனிகொள (அகம்.119:15)
  பணைத்தாள்  -  பனைத்தாள் (அகம்.373:3)
  வட்டவாண்  -  வட்டவான் (திருவிளை.16:24:1)
  எண்ணாவஞ்ச  -  என்னாவஞ்ச (திருவிளை.39:26:3)
  பணிந்து  -  பனிந்து (திருவிளை.40:67:4)
த - க :  சூத்தம்  -  சூக்கம் (திருவிளை.மூர்த்திவி.22:2)
  உடனாத  -  உடனாக (திருவிளை.மூர்த்திவி.30:1)
  தடம்பொழில்  -  கடம்பொழில் (திருவிளை.மூர்த்திவி.34:3)
த - ந :  நிலைத்த  -  நிலைந்த (அகம்.175:15)
  குளகருத்த  -  குளகருந்த (அகம்.217:2)
  நிமிர்த்து வரும்  -  நிமிர்ந்து வரும் (திருவிளை.4:10:2)
  விருத்தூண்  - விருந்தூண் (திருவிளை.11:33:3)
  ஏகுதற்கு  -  ஏகுநர்க்கு (அகம்.283:8)
த - ற :  புனன்மலி புதவிற்  -  புனன்மலி புறவிற் (அகம்.326:11)
  சாத்தினார்  -  சாற்றினார் (திருவிளை.மூர்த்திவி.4:4)
ந - த :  சினந்திருந்தார்  -  சினத்திருந்தார் (உலக.3:3)
  களைந்தொழிந்த  -  களைந்தொழித்த (அகம்.24:2)
  பையணந்தன்ன  -  பையணர்த்தன்ன (அகம்.154:6)
  நெகிழ்ந்த  -  நெகிழ்த்த (அகம்.169:13)
  தெளிந்த  -  தெளித்த (அகம்.214:9)
  சிதர்ந்தவை போல  -  சிதர்த்தவை போல (அகம்.304:2)
  கனையெரி நிகழ்ந்த  -  கனையெரி திகழ்ந்த (அகம்.379:19)
ந - ன :  செந்நெறி  -  சென்னெறி (திருவிளை.3:32:1)
  மாநிறப்  -  மானிறப் (அகம்.319:1)
  பூணநூல்  -  பூணனூல் (திருவிளை.11:27:4)
ம - ப :  தமனிய  -  தபனிய (திருவிளை.தலவி.23:2)
ய - ப :  முகமன் செய்யத்  -  முகமன் செப்பத் (திருவிளை.15:35:3)
ர - ள :  நீராழி  -  நீளாழி (திருவிளை.32:17:1)
ர - ற :  சேரலர்க்கு  -  சேரலற்கு (அகம்.209:14)
  ஊரல் அவ்வாய்  -  ஊறலவ்வாய் (அகம்.326:1)
  இவனுந்தேருங்  -  இவனுந்தேறும் (திருவிளை.39:10:1)
ல - வ :  வரலரி தென்னாய்  -  வரவரி தென்னாய் (அகம்.217:12)
ல - ழ :  குத்திப் புகலொடு  -  குத்திப் புகழொடு (அகம்.251:17)
  தழைக்கூட்டு  -  தலைக்கூட்டு (அகம்.383:8)
ழ - ள :  கண்ணோக்கொழிக்கும்  -  கண்ணோக்கொளிக்கும் (அகம்.234:8)
  மறைகழி  -  மறைகளி (திருவிளை.17:13:4)
ழ - ற :  மழவர்  -  மறவர் (அகம்.309:2)
ள - ண :  மாசௌ¢ளி  -  மாசெண்ணி (திருவிளை.17:36:3)
ள - ல :  ஒன்றிற் கொள்ளாய்  - ஒன்றிற் கொல்லாய் (அகம்.123:14)
  தளைமாற்றி  -  தலைமாற்றி (அகம்.366:3)
  வள்ளுகிர்  -  வல்லுகிர் (அகம்.362:5)
  வேட்டாள்  -  வேட்டால் (திருவிளை.11:9:1)
  கண்டாவளி  -  கண்டாவலி (திருவிளை.21:18:1)
ள - ழ :  மூள்கிய  -  மூழ்கிய (அகம்.234:4)
  முளைவளர்  -  முழைவளர் (அகம்.332:1)
ள - ன :  இளமழை  -  இனமழை (அகம்.198:17)
  உள்ளி  -  உன்னி (அகம்.377:12)
ற - த :  கறீஇ  - கதீஇ (அகம்.337:14)
ற - ர :  இறங்க  -  இரங்க (அகம்.194:8)
  நிறம்பார்த்தொடுங்கிய  -  நிரம்பா தொடுங்கிய (அகம்.332:3)
  கூறாத்  -  கூராத் (திருவிளை.38:6:1)
ற - ன :  தோற்றி  -  தோன்றி (களவழி, 19:2)
ன - ண :  தன்கடல்  -  தண்கடல் (அகம்.13:1)
  துனைதரு தண்கார்  -  துணைதரு தண்கார் (அகம்.85:13)
  கனைவிசை  -  கணைவிசை (அகம்.121:13)
  தான் புனல்  -  தண் புனல் (அகம்.216:2)
  பனைமருள்  -  பணைமருள் (அகம்.238:5)
  பனியலை  -  பணியலை (அகம்.272:6)
  வானிலாச்  -  வாணிலாச் (திருவிளை.திருநகர்.59:3)
  நன்பன்றனை  -  நண்பன்றனை (திருவிளை.42:25:3)
  நன்பகற்போது  -  நண்பகற்போது (திருவிளை.திருநகர்.4:57:4)
ன - ந :  எஞ்சினான்மறை  -  எஞ்சிநான்மறை (திருவிளை.திருநகர்.83:4)
  புழுக்கி னெய்க்கனி  -  புழுக்கி நெய்க்கனி (அகம்.136:1)
  தினையென நோனாது  -  தினையென னோனாது (அகம்.348:11)
  கரையிலானிரை  -  கரையிலாநிரை (திருவிளை.திருநகர்.60:2)
  பஞ்சினாண்  -  பஞ்சிநாண் (திருவிளை.திருநகர்.83:3)
ன - ள :  தருமார் மன்னர்  -  தருமார் மள்ளர் (அகம்.67:12)
  மான  -  மாள  (திருவிளை.5:98:3)
ன - ற :  முன்பகல்  -  முற்பகல் (களவழி, 1:3)
  பின்பகல்  -  பிற்பகல் (களவழி, 1:3)

இதுபோன்ற இருபது வகைகளில் நாட்டார் அவர்கள் தம்முடைய உரைப்பதிப்புகளில் பாடவேறுபாடுகள் சுட்டிச் செல்கின்றதைக் காண்கின்றோம்.  இவரின் 1368 பாடவேறுபாடுகளையும் தனியாய்வாகச் செய்யும் திறன் பெற்றது.  இவ்வகைகள் அன்றி மேலும் பல வகைகளாகப் பகுத்துப் பாடவேறுபாடுகளைக் காணும் நிலையில் இவர்தம் உரைப்பதிப்புகளில் அமைந்துள்ள பாடவேறுபாடுகள் திகழ்கின்றன.

முடிவுரை

நாட்டாரின் உரைப்பதிப்புகள் வெளிவந்த நிலையைப் பார்க்கும் போது நாட்டார் காலத்தில் வெளிவந்தவை (அகநானூறு, கார் நாற்பது, களவழி நாற்பது, சிலப்பதிகாரம், திருவிளையாடற்புராணம், நறுந்தொகை, மூதுரை), நாட்டார் காலத்திற்குப் பின் வெளிவந்தவை (மணிமேகலை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், உலகநீதி, நல்வழி, நன்னெறி) என்று பிரித்துக் காணலாம்.  இந்நிலையைப் பார்க்கும்போது நாட்டாரின் உரைகள் வேறு என்னென்ன எழுதிவைத்திருக்கின்றார் என்று பார்க்கவேண்டியுள்ளது.  தற்பொழுது அவரின் மகன் தஞ்சை-நடுக்காவேரியில் வாழ்ந்து வருகின்றார்.  அவரை அணுகிய போது தந்தையாரின் உரைப்பதிப்புகள் சிலவும் கடிதங்கள் பலவும் வெளிராமல் இருக்கின்றன என்கின்றார்.  இவற்றையும் பெற்று வெளியிட்டால் தமிழுலகில் நாட்டாரின் பரப்பு விரிவடையும் எனலாம்.

கழக வெளியீடுகள் எதுவும் சுவடிப்பதிப்புகள் இல்லை என்ற ஒரு கருத்து பொதுவாக நிலவுகின்றது.  "கழகம் வெளியிட்ட பழந்தமிழ் இலக்கண இலக்கியங்கள் யாவும் ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு ஆய்வு வெளியிடப்பெறவில்லை என்பது உண்மை.  ஆனால், அவை முன்னமே வெளிவந்துள்ள மூலப்படிகளையும் உரைப்படிகளையும் திருத்தப்பாடங் கண்டு புத்துரை விளக்கங்கள் எழுதி வெளியிடப்பட்டவையாகும்" (வ. சுப்பையாபிள்ளை, செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 45, ப,556).  ஆனால் நாட்டார் அவர்கள் சுவடிகளை ஆதாரமாகக் கொண்டு களவழி நாற்பதுக்குப் பாடத்திருத்தம் செய்ய அவற்றைக் கழகம் வெளியிட்டிருக்கின்றது.   இதனைக் காணும்போது இக்கருத்து நாட்டார் அவர்களால் பொய்யாகின்றது எனலாம்.

'பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால் கொண்டவர் ஆறுமுக நாவலர்; சுவர் எழுப்பியவர் தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் சாமிநாத ஐயர்' என்று திரு.வி.க. குறிப்பிடுவார்.  நாட்டார் அவர்களின் 13 உரைப்பதிப்புகளையும் உற்று நோக்கும் போது உ.வே.சா. அமைத்த நிலையத்தை நாட்டார் அவர்கள் அலங்காரம் செய்து பொலிவடையச் செய்திருக்கின்றார் என்றால் அது மிகையாகாது.

ஒரு சிறந்த பதிப்பாசிரியர் தம்முடைய பதிப்பில் என்னவெல்லாம் செய்திருப்பாரோ அத்தனை அமைப்பு முறைகளையும் நாட்டார் அவர்கள் தம்முடைய உரைப்பதிப்புகளில் செய்து காட்டியிருக்கின்றார்.  இதனால் பதிப்புலகில் இவர் ஓர் அணையா விளக்காகத் திகழ்கின்றார் என்றால் அதுவும் மிகையாகாது.

அருஞ்சொற்பொருள் அகராதி, இலக்கணக் குறிப்புகள், மேற்கோள்விளக்கப் பாடல்கள் எனச் சிறப்பாகக் குறிப்பிடுவனவற்றைப் பின்னிணைப்பாகக் கொடுக்காமல் உரைக்குள்ளேயே சுட்டிச் சென்றிருப்பது ஒரு குறையாகவே தோன்றுகின்றது.

ஒரு பதிப்பு மட்டும் கண்ட நூல்கள் பல இருக்க, நாட்டாரின் உரைப் பதிப்புகள் மட்டும் மீண்டும் மீண்டும் மறுபதிப்புகள் தோன்றிக்கொண்டே இருப்பதைப் பார்க்க முடிகின்றது.  ஒரு பதிப்பு மிகச்சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்றால் அது எத்தனை மறுபதிப்புகளைப் பெற்றிருக்கின்றது என்று பார்க்கவேண்டும்.  இந்நிலையில் நாட்டாரின் உரைப்பதிப்புகள் பெரும்பாலும் மறுபதிப்புகள் பெற்றவையே.  எனவே, அவர் பதிப்புலகில் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றார் என்று கூறினால் அது வெறும் புகழ்ச்சியல்ல.

ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்
  1.  அகநானூறு-களிற்றியானை நிரை, ந.மு.வே.(உரை), கழகம், 1943
  2.  அகநானூறு-மணிமிடைபவளம், ந.மு.வே.(உரை), கழகம், 1944
  3.  அகநானூறு-நித்திலக்கோவை, ந.மு.வே.(உரை), கழகம், 1944
  4.  ஆத்திசூடி, ந.மு.வே.(உரை), கழகம், 10ஆம் பதிப்பு, 1979
  5.  உலகநீதி, ந.மு.வே.(உரை), கழகம், 9ஆம் பதிப்பு, 1977
  6.  களவழி நாற்பது, ந.மு.வே,(உரை), கழகம், 6ஆம் பதிப்பு, 1975
  7.  கார் நாற்பது, ந.மு.வே.(உரை), கழகம், 6ஆம் பதிப்பு, 1981
  8.  கொன்றைவேந்தன், ந.மு.வே.(உரை), கழகம், 12ஆம் பதிப்பு, 1980
  9.  சிலப்பதிகாரம், உ.வே.சா.(பதி.), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை, நிழற்படப்பதிப்பு, 1985
  10. சிலப்பதிகாரம், ந.மு.வே.(உரை), கழகம், 2ஆம் பதிப்பு, 1999
  11. சுவடியியல் பயிற்சி கையேடு, மு.கோ. இராமன், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை, 1982
  12. திருவிளையாடற்புராணம் - மதுரைக்காண்டம், ந.மு.வே.(உரை), கழகம், 1927
  13. திருவிளையாடற்புராணம் - கூடற்காண்டம், ந.மு.வே.(உரை), கழகம், 1928
  14. திருவிளையாடற்புராணம் - திருவாலவாய்க்காண்டம், ந.மு.வே.(உரை), கழகம்,  1931
  15. ந.மு.வேங்கடசாமி நாட்டார் கருத்தரங்க மலர், ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை, 2002
  16. நல்வழி, ந.மு.வே(உரை), கழகம், 10ஆம் பதிப்பு, 1980
  17. நறுந்தொகை, ந.மு.வே.(உரை), கழகம், 16ஆம் பதிப்பு, 1981
  18. நன்னெறி, ந.மு.வே.(உரை), கழகம், 8ஆம் பதிப்பு, 1979
  19. மணிமேகலை, உ.வே.சா.(பதி.), உ.வே.சா. நூல்நிலையம், சென்னை, 7ஆம் பதிப்பு, 1981
  20. மணிமேகலை, ந.மு.வே.(உரை), கழகம், 1985
  21. மூதுரை, ந.மு.வே.(உரை), கழகம், 19ஆவது பதிப்பு, 1981




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக