ஞாயிறு, 4 நவம்பர், 2018

மோடி ஆணவத்தில் வரலாற்றுக் குறிப்புக்கள்

தஞ்சையில் முதல் மகாராஷ்டிர மன்னராக சத்ரபதி சிவாஜியின் சகோதரர் ஏகோஜி என்கிற வெங்கோஜி கி.பி.1676இல் முடிசூட்டிக்கொண்டார்.  இவருடைய மூன்று மைந்தர்களான சஹஜி, சரபோஜி, துக்கோஜி முறையே ஒருவர்பின் ஒருவராக இத்தஞ்சையை அரசுபுரிந்துள்ளனர். அவர்கள் காலத்தில் மோடி எழுத்தில் எழுதப்பெற்ற அரசு ஆவணங்களைத் தமிழ்ப்படுத்தி மூன்றாகப் பிரித்து முதல் இரண்டு பகுதிகளைச் சென்னையிலும், மூன்றாவது ஒதுக்கப்பட்ட பகுதிகளைத் தஞ்சை சரஸ்வதிமகால் நூலகத்திலும் பாதுகாத்து வருகின்றனர்.  இவற்றில் முதல் 52 கட்டு எண்களில் உள்ள செய்திகளைப் புலவர் வீ. சொக்கலிங்கம் அவர்கள் தஞ்சை சரசுவதிமகால் நூலக வெளியீடான "The Journal of The Tanjore Maharaja Serfoji's Sarasvati Mahal Library"இல் தொகுதி 16, 17, 19, 20, 21, 33, 34, 35, 36 ஆகிய ஒன்பது தொகுதிகளில் நாணயங்கள், கப்பல் செய்திகள், கோயில்கள், உத்தரவுகளும் பொதுச் செய்திகளும், அணிகலன்கள், மரச்சாமான்கள் முதலிய சாமான்கள், போர்ச்செய்திகளும் அல்லா பண்டிகையின் வரலாறும் போன்ற தலைப்புகளில் வெளிவந்துள்ளன.  இவற்றிலிருந்து தமிழக வரலாற்றுக்கும் தமிழக மக்களின் பண்பாட்டுக்கும் அன்றைய வாழ்க்கை நடைமுறைகளை எடுத்துக்காட்டும் முகத்தான் இக்கட்டுரை அமைகிறது.

தொப்பரங்கட்டிப் பிள்ளையார்

தொப்பரங்கட்டிப் பிள்ளையார் என்ற சொல் 'தொப்பைக்கு ஆரங்கேட்ட பிள்ளையார்' என்பதன் திரிபாகும்.  இப்பிள்ளையார் தஞ்சை நாணயக்காரச் செட்டித் தெருவின் கிழக்கே உயர்ந்த இடத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார். இவரைப் பற்றி ஒரு சுவையான செவிவழிச் செய்தி ஒன்றுண்டு.

தஞ்சைப் பெரியகோயிலில் பிரகதீசுவரைச் சமைக்க, மாமன்னர் இராஜராஜ சோழன் நருமதை நதி தீரத்தத்திலிருந்து கல் கொண்டு வந்தான்.  தஞ்சைக்கு வடக்கே கிட்டத்தட்ட ஒரு கல் தொலைவிலுள்ள வெண்ணாற்றங்கரைப் பகுதிக்கு வரும்போது,  அக்கல் அதற்குமேல் நகராமல் ஓரிடத்தில் தங்கிவிட்டது.  விசனமுற்ற மாமன்னர் இராஜராஜ சோழன் அருகிலிருந்த பிள்ளையாரை வேண்ட, பிள்ளையார் அக்கல்லினைப் பெரிய கோயில் இருக்குமிடத்திற்குக் கொண்டு வந்து வைத்தார் என்றும்,  இதுகண்டு மகிழ்ந்த மாமன்னன் பிள்ளையாரை வணங்கி, "எனது நன்றிக்கு அறிகுறியாக யாது செய்தல் வேண்டும்" என்று வினவ, அதற்குப் பிள்ளையார் "என் தொப்பைக்கு ஓர் ஆரம் வேண்டும்" என்று வேடிக்கையாகக் கூறினாராம்.  மாமன்னனும் அவ்வாறே நல்கி அவரை உயர்ந்ததோர் நல்லிடத்திலமைத்து, விமானங்கட்டி வழிபட்டான் என்பர்.

ஆவு சாகேப்

கணவனோடு வாழ்க்கை நடத்தும் பெண்களைச் திருமதி, ஸ்ரீமதி, சுமங்கலி, சௌபாக்கியவதி என்றும்,  கணவன் இழந்தவளைக் கைம்பெண், அமங்கலி, விதவை என்றும் அழைப்பர்.  மராட்டிய மன்னர்கள் கணவனை இழந்த அமங்கலியை 'மாதுஸ்ரீ ஆவு சாகாப்' என்று அழைத்து இருக்கின்றனர்.  இவ்வழக்கம் மன்னர் சரபோஜி காலத்தில் நிலவி இருப்பதை அவருடைய ஆவணம் எடுத்துக்காட்டுகிறது.  அதாவது, மன்னர் சரபோசியின் தந்தை காலமான பிறகு 'பாயி சாகேப்' என்று அழைக்கப்பெற்ற அவரின் தாயாரை 'மாதுஸ்ரீ ஆவு சாகேப்' என்று அழைக்கப்பட்டிருக்கின்றார்.  மன்னர் சரபோஜியின் தாயான பாயி சாகேப் என்ற ஆவு சாகேப் பெயரில் தஞ்சைக்கு அருகாமையில் உள்ள பள்ளியகரம் கடைத்தெரு (திருவையாறு நெடுவழி)க்கு மேற்கே 'ஆவு சாகேப் சத்திரம்' ஒன்றுண்டு.  'மாதுஸ்ரீ ஆவு சாகேப்' என்ற பெயரில் தஞ்சை கலைக்கூடத்தில் சுமார் ஐந்தரையடி உயரமுள்ள உலோகச் சிலையொன்று முக்காடிட்ட திருக்கோலத்தோடு கையேந்திய வண்ணம் இருக்கிறது.  இவ்விரு சான்றுகளையும் பார்க்கும் போது மன்னர் சரபோஜி காலத்தில் சுமங்கலிகளை 'பாயி' என்றும், அமங்கலிகளை 'ஆவு' என்றும் அழைத்திருந்தது தெரியவருகிறது (ஆவணம் எண்.21).

மராட்டியரின் சாலைப்பணி

மராட்டியர்கள் தஞ்சையைச் சுற்றி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை ஒரு ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.  கி.பி.1854ஆம் ஆண்டு எழுதப்பெற்ற ஆவணம் ஒன்றில் (ஆவணம் எண்.22) துர்முகி வருஷம் (கி.பி.1836) தஞ்சை வெண்ணாற்றங்கரைக்கும் தஞ்சைக் கோட்டை வடக்கு வாயிலுக்கும் உள்ள நெடுவழிச் சாலையையும், வெண்ணாறு வடவாறு முதலான ஆறுகளில் பாலங்களையும் அமைத்து மக்களின் பயன்பாட்டிற்காக விடப்பட்ட செய்தி அறியமுடிகிறது.

மராட்டியரின் நீதிமுறை

மராட்டிய மன்னர்கள் தஞ்சை ஆட்சி செய்தபோது, பெரிய மற்றும் சிறிய தவறு செய்த மக்களுக்குத் தக்க நீதி வழங்கியுள்ளனர் என்பது சில ஆவணங்கள் வழி அறியமுடிகிறது. 

லயனில் இரண்டு பேர்கள் திருடியிருக்கிறார்கள். இதனை அறிந்த கும்பினியார் கும்பினியிலிருந்து அவர்களைச் சாவடியில் கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள்.  அவர்களுக்குச் சர்க்காரின் உத்தரவுப்படி ஆசாமி 1க்கு ஒவ்வொரு வீதிக்கு வந்ததும், பெரம்பினால் முழங்காலுக்கு அடியில் ஆறு அடிகளை அடித்து, நாலு வீதிகளிலும் தண்டோரா போட்டு இரண்டு பேர்களையும் வெளியில் விட்டுவிடவேண்டியது என்பதே அவர்கள் பெற்ற தண்டனையாகும் (ஆவணம் எண்.45:152).

கீழா நெல்லியிலிருந்த பெண்கள், தங்களுடைய சனங்கள், நடங்குடியின் காட்டின் வழியில் சிற்சில இடங்களில் ஆட்களிருந்தார்கள்.  அவர்களில் ஒரு பெண்ணும், மூன்று ஆண்களுமிருந்தார்கள்.  அவர்களைக் கொல்ல வேணுமென்று திருடர்கள் வந்தார்கள்.  அவர்களில் ஒரு திருடனுடைய தலையை வெட்டிக்கொண்டு வந்ததற்காக ஒரு பெண்ணுக்கு இனாம் துப்பட்டி 1க்கு எட்டரை பணம் கொடுக்கப்பட்டுள்ளது (ஆவணம் எண் 45:157).

முத்துவீரு என்னும் கம்மாளன் கூலிக்காரன்; வௌ¢ளி வேலை செய்ததில், வௌ¢ளியை உருக்கும்பொழுது, கரியையும் செம்பையும் சேர்த்து, உருக்க வைத்திருக்கும் வௌ¢ளியில் போடும் போது, ஒரு இடத்தில் நடக்கும் சமாசாரத்தைப் பார்த்து வேறிடத்தில் சொல்லுகிற காவளா என்பவன் பார்த்ததில் ஒரு விராகனிடை செம்பிருந்ததால், அந்தக் குற்றத்திற்காக மேற்படியாரிடமிருந்து அபராதம் 6 பணம் வாங்கப்பட்டுள்ளது (ஆவணம் எண் 45:161).

எத்திக்கட்டியின் கீழே 16 கம்பத்தின் தூண் ராட்டிணத்திற்கு வேலைக்கு வராமலிருந்த தேவதாசிகளுக்கு சுமார் 78 தேங்காய்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது (ஆவணம் எண் 45:161).

களிமேட்டின் வீராயி என்பவள், வடக்கலங்கத்தில் வெங்கடாசலத்தினுடைய வீட்டில் சொம்பு ஒன்றைத் திருடினாள்.  அவளைச் சாவடியில் வைத்திருக்கிறது.  அவளை நான்கு வீதிகளிலும், தண்டோராவுடன் சுற்றி, அச்சொம்பை அவள் கழுத்தில் கட்டி, ஒவ்வொரு வீதிக்கும் பிரம்பால் 3 அடி அடித்து, 3 வாசல்களையும் காட்டி, கோட்டைக்கு வெளியே அனுப்பவும்.  சொந்தக்காரனுக்குச் சொம்பைக் கொடுப்பதற்கும் உத்தரவு ஆனது (ஆவணம் எண்.45:162).

மாதே கட்டுபாவாவுக்குப் பதிலாக சொக்கலிங்கம் என்பவன், கோபுரத்தின் மேல் 3வது அங்கணத்தில், ஆயுதங்கள் வகையறாவின் வேலையைச் செய்யாமல் பேசிக் கொண்டு இருந்தானல்லாமல், 2,3 இடங்களில் ஒன்றுக்குப் போயும், வெற்றிலை போட்டுக் கொண்டு எச்சில் துப்பினதையும் பார்த்தும் ஜாக்கிரதை செய்யாமல் இருந்த குற்றத்திற்காக அபராதம் 12 துட்டு (ஆவணம் எண் 45:165).

அரண்மனைப் பணியாளர் நிலை

அரண்மனையில் பணிபுரியும் ஊழியர்கள் உடல் நலக் குறைவு காரணமாக விடுப்பு எடுத்த பின், அவர்களின் ஊதியம் பிடித்தம் செய்ததையும், அதை மீளப் பெற ஊழியர் முறையிடுவதையும் காணும்போது அந்நாளைய அரண்மனை ஊழியரின் சம்பள நிலையை உணரமுடிகிறது.  இராமசாமி ஆசாரி என்பவர் தனக்கு உடல் நலமின்றி மருத்துவ விடுப்பில் இருந்தபோது, அவருக்கு பதிலாக மாற்றொருவரை நியமித்து, அவர்க்குத் தேவையான ஊதியத்தினை, மருத்துவ விடுப்பில் இருந்த இராமசாமி ஆசாரியாரின் ஊதியத்தில் பிடித்தம் செய்தனர்.  இந்நிலையில் தன்னுடைய சம்பளத்தில் பிடித்தம் செய்ததைத் தரவேண்டும் என்று மகாராஜாவுக்கு இராமசாமி ஆசாரி விண்ணப்பம் செய்திருக்கின்றார் (ஆவணம் எண்.46).  

மற்றொரு ஊழியரான இராமசாமி நாயக்கன் என்பவர் தன்னுடைய மகன் கல்யாணத்திற்காக அனுமதியுடன் விடுப்பில் சென்றிருக்கின்றார்.  அந்த நாட்களில் இவர் நோய்வாய்ப்பட்டிருக்கின்றார்.  அதனை அரண்மயையாரிடம் தெரியப்படுத்தி இருக்கின்றார்.  பின்னர், வேலையில் சேர கார்க்கோனாகிய மேலதிகாரியை அனுமதி கேட்டபோது அவர் மறுக்க, மகாராசாவுக்கு உருக்கமான கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.  வயதான காலத்தில் உணவுக்கு வழியில்லாமல் உலுப்பையாவது தரவேணுமாய்க் கேட்கிறார்.  உலுப்பை என்பது, ஒருவரின் சாப்பாட்டிற்கு வேண்டியதைப் பரம ஏழைகளுக்கு நாள்தோறும், அன்ன சத்திரங்களிலிருந்து வழங்கும் சாப்பாட்டுப்படி (DA) ஆகும் (ஆவணம் எண் 48). 

அணை பழுது பார்க்கும் முறை

வேற்று அரசர்களின் படையெடுப்பில் உடைபட்ட அணைகளைக் கட்டும் முறை இவ்வாவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஒரு அணை உடைந்தால் அதனை எப்படி மறுசீரமைப்பு செய்யலாம் என்ற கட்டிடத் தொழில்நுட்பத்தை இவ்வாவணம் எடுத்துக்காட்டுகிறது.  அதாவது, உடைப்பில் யானைகளை நிறுத்தி அவைகளுக்கு இடையில் முளையடித்து, மூங்கில்களை வைத்துக் கட்டி, மண்ணை வெட்டிப்போட்டு, அணை உயர உயர, யானைகளை அப்புறப்படுத்தி அணையைச் சரிசெய்திருக்கின்றனர் (ஆவணம் எண் 48). 

போர்க்காலங்களில் கடவுளர் நிலை

போர் நிகழும் காலங்களில் போர் நிகழும் இடங்களில் உள்ள கடவுளர்களை போர் நிகழாத ஓரிடத்திற்கு இடம்மாற்றி, அக்கடவுளர்களுக்கு நித்திய பூஜைகளுக்காக பணம் ஒதுக்கி அபிஷேகம் செய்து வந்துள்ளனர்.  இதுபோன்றதொரு செய்தி மோடி ஆவணம் ஒன்றில் (ஆவணம் எண்.26) காணமுடிகிறது.  

கி.பி.1780ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த துளஜா மகாராஜாவின் காலத்தில் ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் முதலான பகுதிகளில் 'ஹைதர் நாயக்கர்' என்பவர் படையெடுத்திருந்தார். அதனால் விருத்தாசலம் என்னும் திருமுதுகுன்றத்தினின்று விருத்தாம்பிகை, பாலாம்பிகையுடன் பழமலைநாதரும், ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து நித்தியேசுவர சுவாமியும், மாயூரத்திலுள்ள அபயாம்பிகை சமேத மயூரநாத சுவாமி கோயிலில் வந்து தங்கியுள்ளனர்.  அதுகாலை அத்தெய்வங்களுக்குப் பூசை நிவேதனங்களுக்காகத் தஞ்சை அரண்மனையார் நாள் ஒன்றுக்கு பதினைந்து பணம் கொடுத்து வழிபட்டு வந்தனர்.  அவ்வாறே, காட்டுமன்னார்குடியிலுள்ள ஸ்ரீஇராஜகோபால சுவாமி கும்பகோணத்தை அடுத்துள்ள பந்தணைநல்லூரில் உள்ள கரம்பனை தோளியம்மை சமேத பசுபதீச்சுரர் கோயிலில் வந்து தங்கியிருந்தார்.  அதுகாலை தஞ்சை அரண்மனையார் நாள் ஒன்றுக்கு ஐந்து பணம் வீதும் கொடுத்து வழிபட்டு வந்தனர் என்பது புலனாகின்றது.

பணத்திற்கு மக்களைப் பெறுதல்

தனக்குப் பிள்ளை இல்லாத தம்பதிகள் பிறருடைய பிள்ளைகளை இலவசமாகவோ விலைகொடுத்தோ பெற்று வளர்ப்பதுண்டு.  இவ்வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.  தன்னுடைய வாழ்நாள் கன்னிகாதானம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் கொள்கையாக நிலைத்திருந்திருக்கிறது.  இதனாலேயே தனக்குப் பெண் இல்லாவிட்டாலும், ஒரு பெண்ணை விலைக்கு வாங்கியாவது கன்னிகாதானம் செய்திருக்கின்றனர்.  இச்செய்தியை இவ்வாவணம் (ஆவணம் எண்.45) வெளிப்படுத்துகிறது. கி.பி.1844ஆம் ஆண்டில் தஞ்சை மன்னர் சிவாஜி சத்ரபதி அவர்கள் கன்னிகாதானம் செய்வதற்குப் பெண் 1க்கு ரூபாய் 15ம், பிள்ளை 1க்கு ரூ.20ம் கொடுத்து வாங்கப்பெற்ற செய்தியை அறியமுடிகிறது.

மிளகு அபிஷேகம்

பழங்காலங்களில் மழை பெய்யவில்லை என்றால் ஒரு வகையான சடங்குகளும், மழை பெய்து ஓயவில்லை என்றால் ஒரு வகையான சடங்குகளும் மக்கள் செய்திருக்கின்றனர்.  வான் பொய்த்த காலத்து பலவிதமான வழிபாடுகள் நடத்தி மழை பெய்யச் செய்திருக்கின்றனர்.  அந்தணர்கள் கூடியிருந்து 'வருண ஜெபம்' செய்து வேண்டி மழையை வருவிப்பர்.  இதுவொரு வகை.  மற்றொரு வகை, 'கொடும்பாவி கட்டி இழுத்தல்' ஆகும்.  அதாவது நாட்டில் மிகமிகக் கொடியவன் ஒருவன் இருந்தால், அவனால் மழை தடைபடும் என்ற நம்பிக்கையில், அருவருக்கத்தக்க கொடியன் ஒருவனின் உருவத்தை களிமண்ணினால் செய்து, அதனைப் பாடையில் கிடத்தி முச்சந்தியில் வைத்து தப்பட்டை கொட்ட, ஆண்களும் பெண்களும் கூடி ஒப்பாரி சொல்லி அழுவர். இம்முறை இன்றும் வழக்கில் உள்ளது.

மழை பெய்யவில்லை என்றால் தஞ்சைப் பகுதியில் தஞ்சைப் பெரியகோயில் நந்திக்கு மிளகு அபிஷேகம் செய்து மழையை வருவித்திருக்கின்றனர்.  கி.பி.1775ஆம் ஆண்டு நந்தியம்பெருமானுக்கு மூன்று நாள் மிளகு அபிஷேகம் செய்யப்பட்டதையும் (ஆவணம் எண்.138:65:3), மன்னர் இரண்டாம் சரபோஜி (கிபி.1798-1833) காலத்தில் 1811 மற்றும் 1827ஆம் ஆண்டுகளில் தஞ்சைப் பெரியகோயில் நந்தியம்பெருமானுக்கு மிளகு அபிஷேகம் செய்யப்பட்டதையும் (ஆவணம் எண்.123:12:5; 59:1:2) அறியமுடிகிறது.

பொறியாளர் சிதம்பரம் பிள்ளை

கி.பி.1775ஆம் ஆண்டு ஆங்கிலேயர் அலுவலகத்தில் கணக்கராக இருந்தவர் பொறியாளர் திரு.சிதம்பரம் பிள்ளை.  இவர் தஞ்சைப் பகுதியில் பல நற்செயல்கள் செய்ததை இவ்வாணம் குறிப்பிட்டுள்ளதைக் காணமுடிகிறது.  அதாவது, தஞ்சைப் பகுதியில் நந்தவனங்கள் அமைத்தது, தண்ணீர்ப் பந்தல்கள் ஏற்படுத்தியது, கொள்ளுக் கஞ்சிச் சாவடிகளைத் தோற்றுவித்தது, கிணறுகளை வெட்டுவித்தது, பசுக்கள் நீரருந்தப் பெரியதாக மூன்று தொட்டிகளைக் கட்டுவித்தது போன்ற நற்செயல்களைச் செய்திருக்கின்றார்.  மேலும் தஞ்சை மேல வீதியில் உள்ள ஐயன் குளத்தின் வடகரையில் ஒரு கோயிலும் கட்டியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது (ஆவணம் எண்.16).

இவ்வாறு பல செய்திகள் இக்குறிப்புகளில் இருப்பதைக் கண்டெடுத்தால் தமிழக வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் வலுவூட்டும் சூழலை உருவாக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக