ஞாயிறு, 4 நவம்பர், 2018

வல்லான் காவியம்

நாட்டுப்புற இலக்கிய வகைகளில் கதைப்பாடலும் ஒன்று.  இக்கதைப் பாடல் வாய்மொழியாக வழங்கப்பெற்று ஓலைச்சுவடிகளில் பெரும்பான்மை காணப்பெறுகின்றது.  ஏறக்குறைய 300 கதைப்பாடல்கள் ஓலைச்சுவடிகளில் காணப்பெறுகின்றன.  இவற்றில் குறிப்பிட்ட சில கதைப்பாடல்கள் மட்டுமே அச்சாகியுள்ளன.  சில அச்சாகியும் தெரியாத நிலையில் உள்ளன.  சில கதைப்பாடல்கள் அச்சேறாமல் உள்ளன.  இந்த மூன்று நிலைகளில் உள்ள கதைப்பாடல்களுக்கு இதுவரை ஒரு தெளிவான பட்டியல் இல்லை.   எனக்கு கிடைத்த தகவலின்படி வல்லான் காவியம் என்ற கதைப்பாடல் அச்சானதாகத் தெரியவில்லை.  இக்காவிய ஓலைச்சுவடி கோவை கௌமார மடாலயத்தில் ஒரு பிரதியும், தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை சுவடிகள் நூலகத்தில் ஒரு பிரதியும் இருப்பதாக அறிகிறேன்.  அபிதான சிந்தாமணி (பக்.1397)யில் வீரநாராயண விஜயம் என்ற கதையில் கதைத்தலைவனாக வல்லானைக் குறிப்பிடப்பெற்றுள்ளது.  வீரநாராயண விஜயத்தில் குறிப்பிடும் செய்தியும் வல்லான் காவியத்தில் குறிப்பிடும் செய்யும் ஒன்றாகவே இருப்பதால் இவ்விரு தலைப்பில் அமைந்த கதைகளும் ஒன்றே.  இவ்விரண்டும் அச்சானதாகத் தெரியவில்லை.  எனவே, தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறைச் சுவடிகள் நூலகச் சுவடி எண்.1585ஐ அடிப்படையாகக் கொண்டு வல்லான் காவியம் ஓர் அறிமுகம் என்ற நிலையில் இவ்வாய்வு அமைகிறது.

சுவடி அமைப்பு

தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறைச் சுவடிகள் நூலகச் சுவடி எண்.1585 - வல்லான் காவியம் 19.5செ.மீ. நீளமும், 3செ.மீ. அகலமும் கொண்ட இச்சுவடி 136 ஏடுகளைக் கொண்டு 166 விருத்தங்களையும் அதற்குண்டான உமையையும் கொண்டுள்ளது.  தெளிவான கையெழுத்தில் சுமாரான நிலையில் முழுமையுடன் காணப்படும் இச்சுவடியை எழுதியவர் தென்காரையாலூரைச் சேர்ந்த உலகுடையநகரில் வாழும் செங்குந்தர் மரபில் வந்த அருணாசலேந்திரன் குமாரர் சுதனாறுமுகக்கவி ஆவார்.  இக்காவியம் பாடியவர் கந்தப்ப நாயனார் ஆவார்.  இதனை, வல்லான் காவியச் சுவடியின் பிற்குறிப்பில் காணப்படும் செய்தியால் அறியமுடிகிறது.

"நலமான செயவருடம் புரட்டாசி மாதம்
பன்னி ரண்டு நற்றேதி யதனில்
நாடியது குருவாரம் உத்திர நட்சத்திரம்
நாட்டிதி அமாவாசையும் பிலமான லெக்கனம்
துலாத்தினிற் கூடியே பெருதுகட்சியிற் பிறந்த
பீடனா ஏகம் பநட்டுக் கட்டானவர்கள்
பேருலக கீர்த்தி கொண்டோன்
கலைமானிடன் நல்ல கந்தப்ப நாயனார்
காவியம் எழுதி வைத்தோன்"

என்னும் குறிப்பின் வழி இச்சுவடி 27.9.1894இல் கந்தப்ப நாயனாரால் பாடப்பெற்றதாக அறிகிறோம்.

வல்லான் காவியம்

"தஞ்சாவூரில் மநுநீதிகண்ட சோழன் ராச்சிய பரிபாலனம் பண்ணுகிற போது வல்லானை வணங்கி இருந்தான்" (வல்லான் சரித்திரம், சு.எண்.1585).  மநுநீதிகண்டசோழன் காலத்தை இதுவரை வரலாற்றறிஞர்கள் கண்டிலர்.  மநு - சூரிய; சூரியகுலத்துக்கு முதல்வனானோன்.  இவனுக்கு வரலாற்று மூலங்கள் இல்லையாயினும் இலக்கிய மூலங்கள் பலப்பல இருக்கின்றன.  கம்ப நாடாரின் கம்பராமாயணம், ஒட்டக்கூத்தரின் மூவருலா, வள்ளலாரின் மநுமுறைகண்ட வாசகம், செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி, சேக்கிழாரின் பெரியபுராணம் போன்ற பல இலக்கியங்களிலும் சோழர்தம் வரலாறு சொல்லும் இடங்களிலும் சோழர்குல முதல்வனாக மநுநீதிகண்ட சோழனைச் சொல்வர்.  மநுநீதிகண்ட சோழன் என்பவன் வரலாற்றுக்கும் முற்பட்ட காலத்தைச் சார்ந்தவன் எனலாம்.  எனவே, மநுநீதிகண்ட சோழன் வல்லானை வணங்கி இருந்தான் என்ற போது வல்லானும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தவன் எனலாம்.  வல்லானுக்கும் வரலாற்று ஆதாரங்கள் இதுவரை ஏதும் இல்லை.  எனவே, மநுநீதிகண்ட சோழனைப் போலவே புராண நாயகர்களாக வல்லானையும் மநுநீதிகண்ட சோழன் மகன் திரிபராந்தக சோழனையும் கொள்ளலாம்.

வல்லான் காவியம் - கதைச்சுருக்கம்

நெல்லூர்த்தேசம் சாளிகைப் பட்டனம் என்னும் இடத்தில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த போக ரெட்டியாரின் குமாரர் விக்கில்ரெட்டி என்பவர் வாழ்ந்து வந்தார்.  அவர் சோமநாத சுவாமியை வணங்கித் தவம் இருந்தார்.  சோமநாதசுவாமி அவரின் தவவலிமையைக் கண்டு அவர்முன் எழுந்தருளி, 'என்னை நினைத்துத் தவம் மேற்கொண்டதென்ன?' என்று வினவ, விக்கில்ரெட்டியானவர், 'தங்களைத் தரிச்சகவே' என்றார்.  'தரிசனம் அளித்தோம்' இனி உங்களுக்கு என்ன வேண்டும்' என சோமநாதசுவாமி கேட்க, விக்கில்ரெட்டியானவர் இந்த 56 தேசங்களும் (அங்கம், அருணம், அவந்தி, ஆந்திரம், இலாடம், யவனம், ஒட்டியம், கருசம், கலிங்கம், கன்னடம், குருகு, குடகம், குந்தளம், குரு, குலிந்தம், கூர்ச்சரம், கேகயம், கேரளம், கொங்கணம், கொல்லம், கோசலம், சகம், சவ்வீரம், சாலவம், சிங்களம், சிந்து, சீனம், சூரசேனம்,  சோழம், சோனகம், திராவிடம், துளுவம், தெங்கணம், நிடதம், நேபாளம், பாஞ்சாலம், பப்பரம், பல்லவம், பாண்டியம், புலிந்தம், போடம், மகதம், மச்சம், மராடம், மலையாளம், மாளவம், யுகந்தரம், வங்கம், வங்காளம், விதர்ப்பம் - அபிதான சிந்தாமணி, ப.890) எனக்கு அடிமையாக இருக்கவேண்டும் என்றார்.  சுவாமியும் புஷ்பவிமானம், தேர் மற்றும் வாயுவேகி, மனோவேகி, ஆகாசவேகி, சீலகாமி என்ற நான்கு பறவைகளையும் கொடுத்து எக்காலத்தும் எவராலும் அழியாத வரமும் கொடுத்து மறைந்தார்.

அதன்பின்னர் விக்கில்ரெட்டியானவர் 56 தேசங்களையும் வென்று வல்லான் (வல்லமை பொருந்தியவன்) எனப் பெயர் பெற்று வாழ்ந்து வந்தார்.  வெற்றி பெற்ற 56 தேசத்து அரசர்களும் வல்லானுக்குக் கப்பம் கட்டி வந்தனர்.

அப்போது தஞ்சாவூரில் மநுநீதிகண்ட சோழன் அரசாண்டிருந்தான்.  அவன் மனைவி கருவுற்றிருந்த நேரத்தில் மநுநீதிகண்ட சோழன் இறக்கநேரிட அவனது மந்திரி அரசாண்டு வந்தார்.  அரசன் மனைவி சில மாதங்களில் அழகான ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.  அக்குழந்தைக்குத் திரிபராந்தகன் என்று பெயர் சூட்டினர்.  சூரிய குலம் தழைத்தோங்கத்தக்க வகையில் ஆணையேற்றம், குதிரையேற்றம், ஆயுதப்பயிற்சி, வில்வித்தை போன்ற பல பயிற்சிகளிலும் தேர்ச்சி பெற்றான் திரிபராந்தகச்சோழன்.  அவன் தன்னுடைய பதினாறாவது வயதில் பட்டத்துக்கு வந்தான்.

அப்போது, வல்லானுடைய கப்பக்குதிரை தஞ்சாவூர் வந்தது.  மந்திரி, வல்லானுக்கு நாம் கப்பம் செலுத்த  வேண்டிய நிலையினை எடுத்துக் கூறினார்.  56 தேசமும் நமக்கு அடிமையாக இருக்க நாம் ஏன் அவனுக்குக் கப்பம் செலுத்த வேண்டும்.  என்னால் கப்பம் செலுத்த முடியாது, அவனையும் போரில் வென்று அடிமைப்படுத்துவேன் என்று வீரவசனம் பேசி உடனே போருக்கு ஆணையிட்டார்.  தன்னை நோக்கிப் போர்ப்படைகள் வருகின்ற செய்தியறிந்த வல்லான் தானொருவனாக வந்து மந்திரியையும் போர்ப்படைகளையும் வெற்றிகொண்டான்.  வெற்றிபெற்ற பின் வல்லான் தன் தேசம் சென்று படைகளுடன் நெல்லூர்த்தேசம் விட்டு தொண்டைநாடு கடந்து கடம்பூரில் கூடாரம் போட்டுத் தங்கியிருந்தான்.

தன் படைகள் தோற்றதையும் கடம்பூரில் வல்லான் கூடாரம்போட்டு தங்கி இருப்பதையும் கேள்விப்பட்ட திரிபராந்தகச் சோழன் வெகுண்டெழுந்தான்.  அவனை வெல்ல இனியாரும் போக இசையாததைக் கண்டு தானே போருக்குத் தலைமை வகித்துப் போவதாகவும் தீர்மானித்தான்.  அரண்மனையில் வேலை செய்துவரும் பழுவூரைச் சேர்ந்த வீரன், நாராயணன் ஆகிய இரு கைக்கோளர்களும் இச்செய்தியறிந்து அரசனிடம் வந்து, 'அரசே! இச்சிறுவனுக்காகத் தாங்கள் செல்லவேண்டாம், அடியேன்கள் சென்று வென்று வருகிறோம்.  விடைதாருங்கள்' என்றனர்.  இதனைக் கேட்ட திரிபராந்தகச் சோழன் மிக்க மகிழ்ச்சியடைந்து 'உங்களுக்குத் தேவையான பொருள்களையும் படைக்கருவிகளையும் படைகளையும் எடுத்துச் செல்லுங்கள்' என ஆணையிட்டார்.  அதற்கு அவர்கள், 'அரசே!  எங்களுக்குப் பொருளும் படைகளும் கருவிகளும் வேண்டாம்.  வீரம் செறிந்த எங்கள் கைக்கோளர் இனத்தில் எங்களைப் போல் இன்னும் பத்துப்பேர் இருக்கின்றார்கள்.  அவர்களை மட்டும் அழைத்துச் செல்ல தங்களின் ஆணைவேண்டும்' என்றனர்.  'பன்னிருவரும் போருக்குச் செல்ல அனுமதித்தோம்.  இருவர் இங்கிருக்க மற்ற பத்துப்பேர் எங்கே' என அரசர் வினவ, வீரன், நாராயணன் ஆகிய இருவரும் அவர்களின் பெயர்களையும் ஊர்களையும் கூறத்தொடங்கினர்.  காஞ்சிபுரம் ஆனையான், திருவொற்றியூர் உத்தியான், சிதம்பரம் பள்ளிகொண்டான், கடம்பூர் பின்னவன் மற்றும் கண்டியான், விருத்தாசலம் மணியம், களத்தூர் அரசன், திருவாரூர் புத்திடங்கொண்டான், தெளித்தேறு கோளாந்தகன், தஞ்சாவூர் வேம்பன் போன்றோரே அப்பத்துப்பேர் என்றனர்.

மேலும், 'அரசே! நாங்கள் கள்வரைப்போல் சென்று வல்லானை வென்று வரமாட்டோம்.  56 தேசமும் அறியத்தக்க வகையில் இன்னும் ஐந்து நாட்களுக்குள் வல்லானுடைய தலையை அறுத்து வர கைக்கோளர் இனத்தைச் சேர்ந்த பன்னிருவர் போருக்குப் புறப்பட்டுவிட்டார்கள்' என்று பரையறிவிக்க வேண்டும்' என்றனர்.  அதன்படியே திருவாரூர் ஆனையேறும் பெரும்பரையன் என்பவன் பன்னிருவரின் புகழையும் கீர்த்தையும் சொல்லி 56 தேசமும் பரை அறிவிக்கச் சென்றான்.

பன்னிரு கைக்கோளர்களும் தங்கள் தங்கள் உற்றார் உறவினரிடம் சென்று அனுமதி பெற்று சிவபெருமான், முருகன் ஆகியோரை வழிபட்டுப் பிள்ளையாரை துணைக்கழைத்துக்கொண்டு புறப்பட்டார்கள்.  புறப்படுமுன் பன்னிருவரும் ஒரு சபதம் செய்துகொண்டார்கள்.  வல்லான் தலையை அறுக்கப் புறப்படும் நம்மில் யாராவது ஒருவர் குறைந்தாலும் மற்ற பதினொரு பேரும் உயிர் துறக்கவேண்டியது.  யாரும் தங்கள் உற்றார் உறவினரோடு வந்து வாழ்தல் கூடாது என்று ஒவ்வொருவரும் தனித்தனியேயும் குழுவாகவும் சத்தியம் செய்துகொண்டார்கள்.

இதேநேரத்தில் கடம்பூரில் கூடாரம்போட்டுத் தங்கியிருக்கும் வல்லானும் அவன் மனைவியும் ஒத்த கனவுகண்டு, 'இது நல்லதல்லவே' என்று மந்திரிமார்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தபோது, கைக்கோளர் பன்னிருவர் தங்கள் தலையறுக்கப் புறப்பட்டுவிட்டார்கள் என்று வேவுகாரன் மூலம் செய்தி வந்ததும் வல்லான் கலக்கமடைகின்றான்.  இதனைக்கண்ட மந்திரிமார்கள் அப்பன்னிருவரும் வரமுடியாத அளவிற்குக் கோட்டையை எழுப்பித் தங்களைக் காப்போம் என்று ஏழுவாசல் கொண்ட ஒரு கோட்டையையும் உருவாக்கி ஒவ்வொரு வாசலிலும் முறையே காளி, குதிரை, வேட்டைநாய், புலி, கரடி, நெருப்பு, அகழி, பளிங்குத்தூண் அமைத்தனர்.  பளிங்குத்தூணின் உச்சியில் மாளிகை ஒன்றமைத்து அதில் வல்லானையும் அவன் மனைவி அனங்கவல்லியையும் இருக்கச்செய்து வாசல்தோறும் விழிப்புடனிருக்கச் செய்தனர்.

கைக்கோளர் குறிப்பிட்ட ஐந்து நாட்களில் நான்கு நாட்கள் கடந்துவிட இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும்போது வல்லானை வென்றாக வேண்டும் என்று வீரன், நாராயணன் ஆகிய இருவரும் மற்ற பத்துப் பேரைத் துரிதப்படுத்தி நடக்கச் செய்தனர்.  வரும் வழியில் ஆரணியத்தில் துர்கை காளிக்குக் காஞ்சிபுரம் ஆனையானும், முதல் கோட்டை வாசல் வீரமாகாளிக்கு திருவொற்றியூர் உத்தியானும், நாலாம் வாசல் குதிரைக்குக் கோளாந்தகனும், அஞ்சாம் வாசல் வெறிநாய்க்குத் திருவாரூர் புத்திடங்கொண்டானும், கடம்பூர் கண்டியானும், ஆறாம் வாசல் புலிக்குக் களத்தூர் அரசனும், ஏழாம் வாசல் கரடிக்குச் சிதம்பரம் பள்ளிகொண்டானும், அக்கினி ஆற்றைக் கடக்க கடம்பூர்ப் பின்னவனும், முதலை வாழும் அகழியில் விருத்தாசலம் மணியனும், பளிங்குத்தூண் ஏற தஞ்சாவூர் வேம்பனும் ஆகப் பத்துப்பேர் பலிகொண்டுவிட்ட பின்னர் வீரன், நாராயணன் ஆகிய இருவரும் பளிங்குமண்டபத்துள் பாதுகாப்பு ஏற்பாடுகள்  அத்தனையும் உடைத்தெறிந்துகொண்டு உள்ளே நுழைந்தனர்.

அப்போது, நான்கு நாட்களாகத் தூக்கமின்றி விழித்திருந்த வல்லான் அன்று உறக்கத்திலாய்ந்துவிட்டான்.  இதைக்கண்ட அவன் மனைவி அனங்கவல்லி துயருற்றாள்.  இத்தூக்கம் நன்மைக்கன்றே என அழுதுற்றிருக்கும் வேளையில் வீரன், நாராயணன் ஆகிய இருவரும் வல்லான் முன் வந்து நின்றனர்.

பலிகொண்ட பத்துப்பேர்களின் ஆவியும் வல்லானின் உடலில் புகவே உணர்ச்சியற்ற ஒரு மயக்கநிலையை எய்தியிருந்தான் வல்லான்.  இவ்விருவரையும் கண்ட அனங்கவல்லி தாங்கள் கண்ட கனவு நனவாகப் போகிறதே என்று அஞ்சி வீரன், நாராயணன் ஆகிய இருவரையும் சகோதர்களாக நினைத்துத் தாலிப்பிச்சை கேட்டு மன்றாடுகிறாள்.  அவர்களும் அன்பிற்குக் கட்டுப்பட்டு தாலிப்பிச்சை கொடுக்கின்றனர்.  இதனையறிந்த வல்லான் உடலில் உள்ள பத்துப்பேர் ஆவியும் வீரன், நாராயணன் ஆகிய இருவருக்கும் தங்கை என்றால் தங்களுக்கும் தங்கைதானே என்று வல்லான் உடலைவிட்டு நீங்குகின்றனர்.  வல்லான் விழிக்கும்போது, எங்களின் தங்கைக்குத் தாலிப்பிச்சை கொடுத்துவிட்டோம்.  இனி பயப்படவேண்டாம் என்று சொல்ல, வல்லான் மகிழ்ச்சியுற்று, வீரன், நாராயணன் ஆகிய இருவரையும் உபசரித்துத் தாங்கள் என்னைக் கொல்ல வந்த வரலாறுகளைக் கேட்டறிந்ததும் வியப்புற்று ஆணவம் அடங்கி ஒடுங்கித் தான்பெற்ற அனைத்து வரங்களையும் தன்னுடைய தங்கப் பொய்த்தலையையும் இவ்விருவருக்கும் கொடுத்துவிட்டுத் தன்தேசம் போய் விவசாயம் செய்யப் புறப்பட்டுவிட்டான்.

வாகைசூடிய வீரன், நாராயணன் ஆகிய இருவரும் தஞ்சாவூர் நோக்கிப் புறப்பட்டனர்.  இதுகேள்விப்பட்ட திரிபராந்தகச் சோழன் அவர்கள் எதிர்கொண்டு அழைக்கச் சிதம்பரத்தில் வந்து தங்கினான்.  கடம்பூரிலிருந்து வந்த இருவரும் அரசனைச் சிதம்பரத்தில் கண்டு தாங்கள் பெற்றுவந்த வல்லானின் வரங்களனைத்தையும் கொடுத்தனர்.  அரசனோ, வல்லான் தலையெங்கே என்று வினவ, வீரன் தன் தலையையறிந்து, 'இது வல்லான் தலையாகக் கொள்க' என்று ஏழடி முன் வந்து அரசனிடம் கொடுத்தான்.  இதனைக்கண்ட அரசர் இவர்களின் தியாகத்தையும் அன்புள்ளத்தையும் கண்டு வியந்து தாங்கள் கொண்டு வந்த அனைத்தையும் மிஞ்சியுள்ள நாராயணனே வைத்துத் தூய ஆட்சி செலுத்த வேண்டும் என்று கூறினார்.  அதற்கு நாராயணன் நாங்கள் எடுத்துக்கொண்ட சத்தியத்தின்படி எங்களில் நான் ஒருவனே மிஞ்சி இருக்கிறேன்.  நாங்கள் வாக்குத் தவரமாட்டோம்.  எனவே, நான் என் உற்றார் உறவினருடன் வந்து வாழமாட்டேன் என்றும் என் இனத்தவர் பதினொருவர் சென்ற அதே இடத்துக்கு நானும் செல்வேன் என்றும் சூளுரைத்துத் தன்வாளை எடுத்துத் தலையறுத்து மாய்ந்தான்.

அதன் பின்னர் திரிபராந்தகன் இவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று வீரன், நாராயணன் ஆகிய இருவரும் உயிர் துறந்த இடத்தில் ஒரு கோயிலைக் கட்டினான்.  அதற்கு வீரநாராயணப்பெருமாள் கோயில் என்று பெயரும் வைத்தான்.  கோயிலைச்சுற்றி ஏழு மதில்சுவர்களை எழுப்பி  அதற்கு வல்லானின் கோட்டை வாசல்களில் உயிர்த்துறந்தவர்களின் பெயர்களையும் வைத்தான்.  கோயிலையடுத்துக் கிடந்த ஒரு பெரிய ஏரிக்கு வீரநாராயணன் குளம் என்றும் பெயரிட்டான்.  அக்குளம் இன்று இருக்கும் வீரானம் ஏரியாக இருக்கலாம்.  தஞ்சாவூர் வரும் வழியில் வீரநாராயணபட்டனம் உருவாக்கி அதில் மக்களை வாழச்செய்தான்.   அப்பட்டனம் இன்று இருக்கும் வீரநாராயணபுரமாக இருக்கலாம்.  இவ்வாறு இக்கதை முடிவுறுகிறது.

வல்லான் காவியச் சிறப்புக்கூறுகள்

வல்லான் காவியத்தில் சில சிறப்புக் கூறுகள் காணப்பெறுகின்றன.  பன்னிரு கைக்கோளர்களின் புகழ், சபதத்தன்மை, கனவுநிலை, பலியிடல், நித்திரை கொள்பவர் யார்யார்? போன்ற இன்னோரன்ன சிறப்புக் கூறுகள் இக்காவியத்துள் அமைக்கப்பெற்றுள்ளன.  அவற்றைப் பற்றிச் சிறிது காண்போம்.

அ.  கைக்கோளர் புகழ்

வல்லான் தலையறுக்கப் புறப்பட்ட பன்னிரு கைக்கோளர்களின் பெருமையினையும் புகழினையும் பரையடிப்பவன் இரண்டு பாடல்களிலும் வல்லானின் வேவுகாரன் மூன்று பாடல்களிலும் ஆக ஐந்து பாடல்கள் வாயிலாகச் சிறப்புற இக்காவியத்துள் கூறப்பெற்றுள்ளன.  அப்பாடல்கள் பின்வருமாறு:-

"முன்புசூர வேர ருத்து முரைச ரைந்த கைக்கொளவர்
பின்பு வான்குடி யேற்றும் பெருமை யுள்ள கைக்கொளவர்
வன்பு செரிகின்ற வல்லான் மணிமுடி யிப்போ தறுக்க
` யன்பு டனேபுறப் பட்டா றென்று பரைதா னரைந்தான்" (பா.15)

"காளி தனைக்கொல் லாமல் விட்ட வருங்கைக் கொளவர்
தேளின் முனையெனும் நமனைத் திரைகொண்டகைக் கொளவர்
மீள விவநின் போது மெய்வல் லான்றலை யறுக்க
கோளெனவே புறப்பட் டாரென்று பரைகொட்டி டினனாம்" (பா.16)

எனப் பரையடிப்பவனும்,

"மன்னவனுக் கினிதான மைந்தர்களுங் கைக்கொளவர்
றென்னிலமு மரசாளு மிறையவருங் கைக்கொளவர்
தென்னவன்றன் காரியப்பே ரானவருங் கைக்கொளவர்
பன்னியிடு முத்தமிட பாவலருங் கைக்கொளவர்" (பா.32)

"உடைவாள்கொண் டருகுறையு முத்தமருங் கைக்கொளவர்
கடைவாயி லுள்வாயிற் காவலருங் கைக்கொளவர்
றடைவாகக் கரணீக ரானவருங் கைக்கொளவர்
படைசேனைத் தலைவர்களும் பாரதிபருங் கைக்கொளவர்" (பா.33)

"ஆனையுடன் பரியேறும் வாதாமுஞ் செங்குந்தர்
மேன்மையுட னொன்னலரை வெல்பவருஞ் செங்குந்தர்
கோவையணு கானாடு கொள்பவருஞ் செங்குந்தர்
மானமுடன் வீரமுடன் வாழ்பவருஞ் செங்குந்தர்" (பா.34)

என வல்லானின் வேவுகாரனும் கைக்கோளர்தம் பெருமையினைக் குறிப்பிடுகின்றார்.

ஆ.  சபதத்தன்மை

சபதம், ஒருவன் தான் வெற்றிபெறத்தக்க வகையில் சூளுரைப்பதே ஆகும்.  இச்சபதம் மூன்று நிலைகளில் அமைகிறது.  அவை குழுச் சபதம், இருவர் சபதம், ஒருவர் சபதம்  ஆகும்.  குழுச்சபதம் என்பது இரண்டுக்கும் மேற்பட்டோரால் ஒரு குழுவாகக் கூடி ஒருமித்தபடி செய்துகொள்ளும் சபதம் ஆகும்.  இச்சபதம் இரண்டு குழுக்களுக்கிடையேயும் நிகழும்.  இருவர் சபதம் என்பது இரண்டு பேருக்கும் இடையில் கருத்துவேறுபாட்டின் அடிப்படையில் நிகழ்வதாகும்.   இவ்விரு சபதங்களுள்ளும் போட்டிச் சபதம், மறுப்புச் சபதம் என மேலும் இருண்டு வகை சபதங்கள் அமையும்.  ஒருவர் சபதம் என்பது தன்னந்தனியாக  ஒருவன் இதைச் செய்து முடிப்பேன் என்று சூளுரைப்பதாகும்.  இக்சூளுரை இறைவன் முன்னும் பொதுமக்கள் முன்னும் அல்லது தனிப்பட்ட ஒருவனிடமும் நிகழும்.

குழுச்சபதம், இருவர்சபதம், ஒருவர்சபதம் ஆகிய இம்மூன்றும் உறுதிச்சபதம், தண்டனைச் சபதம் என்ற மாபெரும் பிரிவுக்குள் அடங்கும்.  தான் இதைச் செய்து முடிப்பேன் என்று எடுத்துக்கொள்ளும் சபதம் உறுதிச் சபதம் என்றும், தான் இதைச் செய்து முடிப்பேன், அப்படி இதிலிருந்து நான் வழுவுவேனாகில் நான் இதைச் செய்த பாவத்தில் போனவனாவேன் என்று தனக்குத்தானே தண்டனை விதித்துக்கொள்ளும் தண்டனைச்சபதம் என்றும் சொல்லலாம்.

வல்லான் காவியத்துள் கைக்கோளர் பன்னிருவரும் செய்துகொள்ளும் தண்டனைச் சபதத்துள் குழுச்சபதமும், பன்னிருவரும் தனித்தனியாகச் செய்துகொள்ளும் ஒருவர் சபதமும் இடம்பெற்றுள்ளன.

"குத்திர வல்லான் றன்னைக் குத்தியே தலைய றுக்க
வொத்துடன் போகும் பேரில் லொருவர்பொன் றுலகி லெல்லாஞ்
செத்துட லுய்ய வுய்ய சென்றவன் செயமு டிப்ப
சத்திய மிந்தச் சேதி தன்முன் புரிவ மென்றார்" (பா.56)

எனும் பாடல் குழுச்சபதம் செய்யப்பெற்றதைச் சுட்டும்.

பன்னிருவரும் குழுச்சபதம் செய்துகொண்ட பின்னர் தனித்தனியாகத் தன் வீர ஆயுதத்தை வைத்துத் தாண்டிச் சபதம் செய்தனர்.  சபதப்படித் தாங்கள் நடக்கவில்லையானால் தாங்கள் எப்படிப் போவோம் என்பதை ஒவ்வொருவரும் தங்களின் தனிச் சபதத்தில் கூறியுள்ளனர்.

'நன்றி குன்றுந் தீயவனாவன்' (57:3) என்று பழுவூர் வீரனும், 'சிவத்துரோகம் செய்தவனாவன்' (58:3) என்று பழுவூர் நாராயணனும், 'கற்பு மடந்தையைப் புணரும் பாவியன்' (59:3) என்று காஞ்சிபுரம் ஆணையானும், 'அன்னையைக் கொன்ற பாவியன்' (60:3) என்று திருவொற்றியூர் உத்தியானும், 'குருவினை இகழும் பாவியாகுவன்' (61:3) என்று களத்தூர் அரசனும், 'கேடணியாமற் சேறிப் பாடியதின் புலவனுக்கு' (62:3) என்று திருவாரூர்ப் புத்திடங்கொண்டானும், 'நானுற்றே கெட்டென்று நம்பினரை விதைப்பனென' (63:3) என்று கோளாந்தகனும், 'நன்மை யின்றே சமரிலவன் மடியக் கடிதேகுங் குன்னமுள்ளானென' (64:3,4) என்று சிதம்பரம் பள்ளிகொண்டானும், 'வைத்த வடக்கலம் முடமை வெவ்விய பாதகனாவேன்' (65:3) என்று கடம்பூர் பின்னவனும், 'மடமாதருடன் மைந்தன் மடியத்திய மனையிலிடும் கொடும்பாவி யாவனென' (66:3,4) என்று கடம்பூர்க் கண்டியானும், 'நாணியனை விருந்தா னறனக் கொழித்த பொல்லாதானாவன்' (67:3,4) என்று விருத்தாசலம் மணியனும், 'மன்றுதனி லோறஞ்சொல் மாபானி யாவன்' (68:3) என்று தஞ்சாவூர் வேம்பனும் தனித்தனியாகச் சபதம் செய்துகொண்டதை அறியமுடிகிறது.

இ.  கனவுநிலை

கனவு என்பது உள்மனம் புறமனத்திற்கு எச்சரிக்கை செய்வதற்காகப் பயன்படும் ஒரு கருவியாகும்.  கனவுகள் வாழ்வோடு தொடர்புடையவை.  மனிதரது உணர்வுத் தன்மையைப் பொதுவாக விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்ற மூன்று நிலைகளில் பிரிப்பர்.  விழிப்பில் உடலும் உள்ளமும் செயல்படும்.  ஆழ்ந்த உறக்கத்தில் உடலும் உள்ளமும் செயல்படாது.  ஆழ்ந்து உறக்கம் இல்லாதபோதே கனவு தோன்றும்.  இக்கனவினை இன்பக் கனவு, துன்பக் கனவு என இரண்டாகப் பிரிப்பர்.  கனவின் பயன் கருதி அவற்றை எதிர்ப்பயன் கனவு, நேர்ப்பயன் கனவு என மேலும் இரண்டாகப் பிரிப்பர்.  கனவு காணும் நேரத்தை ஒட்டி அவற்றின் பயன் - காலம் நிச்சயிக்கப்படுகிறது.  இதனைக் கனாநூல்,

"படைத்தமுதற் சாமத்தோர் ஆண்டிற் பலிக்கும் பகரி ரண்டாய்க்
கிடைத்த பிற்சாமத்திற் றிங்கள் எட்டாவதிற் கிட்டு மென்பர்
இடைப்பட்ட சாமத்து மூன்றினிற் றிங்களுண் மூன்றென்பராற்
கடைப்பட்ட சாமத்து நாட்பத்திலே பலன்கைப் பெற்றதே" (பா.2)

எனக் குறிப்பிடும்.  இக்கருத்தின் படி வல்லான் காவியத்தில்,

"கறியிரண் டொன்று துயில்போது கண்டு கனவே வெகுண்டங்கு
கறியொன்று சீறி யெழுந்தப் போதில்க் களிறின்
பரிதிப் பிடியு ணர்ந்து படர்சிங்க மிரண்டி னையும்
விறவு டனேப ணியவுடன் மிகவி றங்கி வேண்டுதலும்" (பா.22)

"அப்பரிசு கண்டி ரங்கி அரியி ரண்டு மக்கறியை
வெப்ப முடன்கொல் லாமல் விட்டேகி இட்ட கெனா
இப்பரி செல்லா முரைத்தான் எழிலனங்க வல்லி யுந்தான்
ஒப்புடனே கண்ட கனாவுரை செய்யக் கேளு மென்றார்" (பா.23)

என வல்லானும்,

"என்கழுத்தில் மங்கல நாணிப்புவியில் இற்றுவிழ
வன்புடனே தானிருவ ரஞ்சாதென வெடுத்துப்
பொன்பொலி மங்கல னாணென் கரத்தளித்துப் போய்விட்டார்
தென்புவியில் வந்துரையுந் தீதென்று தானுரைத்தாள்" (பா.24)

என அனங்கவல்லியும் கடைசி சாமத்தில் கனவு கண்டனர்.  கனவு நூலின்படி இக்கனா பத்து நாட்களுக்குள் பலிக்கவேண்டும்.  இப்படி இருக்கின்றபோது கைக்கோளர் பன்னிருவரின் சூளுரை வல்லானை நிலைகுலையச் செய்ததில் தவறொன்றுமில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஈ.  பலியிடல்

பெரும்பான்மையான கதைப்பாடல்களில் பலியிடல் பேசப்படுகிறது.  இப்பலியிடல் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.  ஒன்று, தனக்குத்தானே பலியிட்டுக்கொள்வது.  மற்றொன்று, பிறரால் பலியிடுவது.  இதில் முதல் வகையானது இன்ன காரியம் வெற்றிகொள்ள வேண்டுமானால் தான் பலிகொள்ள வேண்டும் என்னும் பொதுமை நோக்குடைய பலி;  இரண்டாவது வகையானது, தான் இன்ன காரியத்தில் வெற்றி கொள்ள வேண்டுமானால் இன்ன நிலையிலுள்ள ஒருவனை பலியிடச் செய்ய வேண்டும் என்னும் சயநல நோக்குடைய பலி.

வல்லான் காவியத்தில் பன்னிரண்டு பலிகள் நடைபெற்றுள்ளன.  இவைகள் அனைத்தும் பொதுமை நோக்குடைய பலியாகவே இருக்கின்றன.  தாங்கள் கொண்ட கொள்கையில் முன்னேற வேண்டுமானால் வழியிலுள்ள இடர்ப்பாடுகளுக்குப் பலியிடவேண்டும் என்ற நிலை வந்தபோது தானே தன் வாளால் தன் தலையறுத்துக் கொண்ட பத்துப்பேர்களின் பலியையும், அரசன் வாக்குக்காக பழுவூர் வீரன் பலிகொண்டு அறிவுறுத்தியதையும், இன வாக்குக்காக பழுவூர் நாராயணன் பலிகொண்டு இனமானம் நிலைநாட்டியதையும் சுட்டலாம்.

உ.  நித்திரைகொள்பவர் யார்?

யார் யார் எல்லாம் நித்திரைகொள்ளத் தக்கவர்கள் என்ற விவரம் இக்காவியத்தில் இடம்பெற்றுள்ளது.  நான்கு நாட்களாகப் பளிங்கு மண்டபத்தில் உறக்கமின்றி விழித்திருந்த வல்லான் ஐந்தாம்நாள் உறக்கம் கொண்டுள்ளதைக் கண்ட அவன் மனைவி அனங்கவல்லியானவள் இப்படித் தன் கணவர் உணர்வின்றி உறக்கம் கொள்கிறாறே! இந்த உறக்கம் நல்லதுக்கல்லவே! என்று கூறியவள் உறக்கம் யார் யார்க்கெல்லாம் வரும் என்று ஒரு பாடலில் கூறுகிறாள்.

"துஞ்சுதல் குறுகி னோர்கள் சேரார் காமுகர் னோயாளர்
ரஞ்சின் விரதத்தோர் களரும் பசியாள ரல்லால்
விஞ்சிய மனத்துள் ளோர்கள் வெற்புறன் பகையுள் ளோர்கள்
எஞ்சுமீ ரைந்து பேர்க்கு மிலையிலை உறக்கந் தானே" (பா.119)

என்னும் பாடலால் மேற்கூறிய பத்து வகையினரும் உறக்கம் கொள்ளாறே என்கிறாள்.  இந்தப் பத்து வகையினரில் தங்கணவரும் ஒருவராக வல்லவோ இருக்கிறார்.  இது நல்லதுக்கல்லவே என்று அனங்கவல்லி எண்ணமிடுகிறாள்.

இவ்வாறு இன்னும் சில கூறுகள் இக்காவியத்துள் இடம்பெற்றுள்ளன.  இக்காவியம் காட்டும் இடங்களும் பேர்களும் நடைமுறைக் காலத்தில் இருப்பதால் இக்காவிய ஆராய்ச்சி வளரவேண்டிய ஒன்று.  இக்காவியத்தைப் பதிப்பிக்க முயற்சி மேற்கொண்டால் வீரநாராயணப்பெருமாள் கோயில் வரலாறு, வீரானம் ஏரி, வீரநாராயணபுரம் பற்றிய தகவல்கள் தெளிவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக