சனி, 3 நவம்பர், 2018

மெய்க்கீர்த்திகள்



              மன்னருடைய ஆணைகள், ஊர் மன்றங்களில் நடைபெறும் செயல்கள், இலக்கியம், இலக்கணம், புராணம், மருத்துவம், சோதிடம், சாதகம் போன்றன முதலில் ஓலைகளில் எழுதினர். இவைபிடிபாடுகள்எனவும், ‘ஓலைப்பிடிபாடுகள்எனவும் கூறினர்.  இவ்வாறு ஓலைகளில் எழுதப்பட்டவை அழியக் கூடியவை; இவற்றைத் திருத்தி எழுதி வைக்க முடியும்.  அழிவதையும் திருத்துவதையும் தடுக்க வன்மையான பொருள்களில் எழுதி வைக்கும்  செயல் மேற்கொள்ளப்பட்டது.  இச்செயல்களால் உருவானவையே செப்பேடுகளும் பிற உலோகத் தகடுகளில் எழுதப்பட்ட செய்திகளுமாகும்.  இச்செப்பேடுகளும் போர்ச் செயல் போன்றவற்றால் அழிவுறுகின்றன என்பதைஈவ்வூரிரண்டின் செப்பேடு மறக்கேட்டில் இழந்து போயின  என்பதால் விளங்குகிறது. எனவே, வன்மையான பொருளில் எழுதி வைத்தல் என்னும் முறை கல்லுக்குத் தாவியது.

      அரசாணைகளும் அறச்செயல்களும் நிலையாக இருக்க வேண்டும் என்பது தமிழர் குறிக்கோள்அவை ஒரே இடத்தில் முடக்கி வைக்கும் நிலையில் அமைந்து விடக்கூடாது என்று கருதியதால்பலரும் அறிய வேண்டும் என்பதால் கல்லில் பொறித்து பலரும் காணுமாறு கோயிலின் ஒருபுறத்தே நட்டு வைத்தனர்கற்கோயில்கள் இல்லாத போது பாறைகள், குன்றுகள் போன்றவற்றில் பொறித்துப் பலரும் காண வழிசெய்திருந்தனர்.

    இக்கல்வெட்டுகளில் அரசு ஆணைகள், கொடைகள்¢ அறச்செயல்கள், மறச்செயல்கள் போன்றன தமிழ், தெலுங்கு, கன்னடம், வடமொழி, பிராக்கிருதம் முதலிய பல மொழிகளில் பொறிக்கப்பெற்றன.  சில இருமொழிகள் கலந்து எழுதப்பெற்றுள்ளன.  தனியே தமிழ் மொழியில் ஆன கல்வெட்டுகளில்  கூடக் கிரந்த எழுத்துக்களால் எழுதப்பட்டவை  பல. வடமொழிச் சொற்கள் கலந்தவை மிகப்பல. பல செய்யுள் நடையில் அமைந்துள்ளன. சில உரைநடையில் உள்ளன. சில செய்யுளும் உரையுமாகக் கலந்தும் காணப்படுகின்றன.

       பெயர் அடிப்படையிலான கல்வெட்டுகளைப் பொருள், இடம், எழுத்து, மொழி, மன்னர் குலம், மன்னர் பெயர், ஊர், கிடைத்த இடம், இருக்கும் இடம், இடமும் செய்தியும் என்றவாறு பத்து வகைகளாகப் பிரிக்கலாம்.   அதுபோல், கல்வெட்டில் காணும் பொருளின் அடிப்படையில் கொடைக்  கல்வெட்டுகள், இலக்கியக் கல்வெட்டுகள், வரலாற்றுக் கல்வெட்டுகள், சமயக் கல்வெட்டுகள், வாழ்க்கைக் கல்வெட்டுகள், அரசியல் கல்வெட்டுகள், போலிக் கல்வெட்டுகள் என ஏழு வகைகளாகப் பிரிக்கலாம்.

 இத்தகு கல்வெட்டுகளைஅமைப்பு அடிப்படையில் இரண்டு நிலைகளாக்கலாம்.  ஒன்று, மெய்க்கீர்த்திகள்; மற்றொன்று, மெய்க்கீர்த்தியல்லாத பிற கல்வெட்டுகள் எனலாம்.  அம்மெய்க்கீர்த்திகளின் இலக்கிய வளங்களையும், இலக்கண அமைதிகளையும், சிறப்புக் கூறுகளையும் இக்கட்டுரை எடுத்துரைக்க இயன்றவரை முயற்சிக்கிறது.

மெய்க்கீர்த்தி

        மன்னனது உண்மையான புகழை உள்ளது உள்ளபடியே எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி  எனப்படுகிறது.  அதாவது உண்மையான புகழுக்குரிய காரணமாகிய குணங்கள் செய்கைகள் போன்றவைற்றை எடுத்துக்கூறுவது எனலாம்.

                “மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே”                                                                                                                                                      (தொல்.பொருள்.87)

என்பதற்கு  நச்சினார்க்கினியர், “மெய்ப்பெயராவன - பாட்டுடைத் தலைவர் பெயரும் நாடும் ஊரும் முதலியனவாம்என்று உரை கூறுகின்றார். மெய்ப்புகழ் பாடும் மரபில் பாடப்பெற்றுக் கல்வெட்டுகளில் அமைந்த பகுதிகள் மட்டும் பிற்காலத்தே அர்த்தநாரீ வடிவில் பெயர் பெற்றுவிட்டனர்.  தமிழ்ச்சொல் ஒன்றும் வடசொல் ஒன்றுமாகக் கலந்து மெய்க்கீர்த்தி எனும் சொல் அமைந்துள்ளது. இத்தொடர் தமிழ்க் கல்வெட்டுப் பகுதிகளில் காணப்படவில்லை.   பாட்டியல் நூல்களே இச்சொல்லை அறிமுகப்படுத்துகின்றன.  அவை மெய்க்கீர்த்திமாலை என்ற ஒரு இலக்கியம் இருந்ததை எடுத்துக்காட்டுகிறது.  சிற்றிலக்கிய வகைகள் 97இல் ஒன்றாகவும் இம்மெய்க்கீர்த்தியைக் காட்டுகிறது.

                சில இடங்களில் தற்புகழ்ச்சி தேவையாகிறது.  அரசவைக்கு எழுதும் கடிதம், பேரவையில் ஏற்படும் சொற்போர், தன் எதிரி பழிக்கும் நேரம் போன்ற இடங்களில் இத்தற்புகழ்ச்சி மிகுதியாகப் பேசப்படல்  வேண்டும்.  அவ்விடங்களில் தன்னைப் புகழ்தல் இல்லாத நிலை இருக்குமானால் அதுவே பெருங்குற்றமாகிவிடுதலும் உண்டு.  செய்தக்க செய்யாமை யானும் கெடும்என்பது வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு.  எனவே, மன்னவர்தம் புகழுக்குரிய குணங்களையும் செயல்ளையும் எடுத்துக் கூறி நிலைநிறுத்த வேண்டும் என்ற மரபு மன்னர்களாலும் புலவர்களாலும் பெரிதும் போற்றி தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

                மன்னர்கள் பல நாடுகளை வென்று தங்கள் தங்கள் நாடுகளை விரிவுபடுத்த வேண்டும் என்று விரும்பியது போலவே புகழ் மாலைகளைப் பெறவும் விரும்பியுள்ளனர்.  வெற்றித் தூண்களை ஆங்காங்கு நாட்டித் தம் புகழ் பரப்பியுள்ளனர்.  வெற்றிபெற்ற நாடுகளிலேயே வெற்றி விழாக்கள் கொண்டாடியுள்ளனர். இவ்வகையான சிறப்புகளைக் குறித்துப் புகழ் மாலைகளுக்குப் பரிசுகள் பல கொடுத்துச் சிறப்பித்துள்ளனர்.  புகழை விரும்புவதும், புகழை எடுத்துக் கூறுவதும் பாடுவதும் ஆகிய மரபு சங்க காலத்திற்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டது எனலாம்.  இத்தகைய நிலைகளிலேயே பல இலக்கியங்களும் இலக்கணங்களும் பலப்பல தோன்றியுள்ளன.

            இத்தகைய நோக்கங்களாலும் செயல்களாலும் பேரரசர்களும், குறுநில மன்னர்களும் வள்ளல்களும் புகழ்ந்து பாடப்பெற்றுள்ளனர்.  இவ்வாறு பாடப்பெற்ற புகழுரைகளையும் பிறவற்றையும் நிலைபெறச் செய்ய விரும்பிய மன்னரும் பிறரும் அவற்றைக் கற்களில் பொறித்து வைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.  இவ்வாறு தமிழில் தோன்றிய கல்வெட்டுகள் மெய்க்கீர்த்திகளாகவே தோன்றியுள்ளன என்று கூறலாம்.

              நாடு காக்கும் பணியில் ஈடுபட்டு, வீரச்செயல் பலபுரிந்து, பெரும் புகழ் பெற்ற வீரர்களுக்கு நடுகல் நடப்பட்டுள்ளது.  அக்கற்களிலே அவர்தம் புகழ் பொறிக்கப்பட்டுள்ளது.  மறவனது புகழை நிலைபெறச் செய்த அக்கல்லினைத் தெய்வமாக்கி வாழ்த்தப்பட்டுள்ளது.  நடுகற்களில் பொறிக்கப்பட்ட வீரர்தம் பெயரும் பீடும் முதலான புகழ்த் தொடர்கள் நாளடைவில் நீட்டி வரையப்பெறும் நிலையை அடைந்துள்ளன.  அவையே  கல்வெட்டுகள் ஒழுங்காக, முறைப்படுத்தப்பெற்ற காலத்தில் மெய்க்கீர்த்தி என்ற பெயரைப் பெற்றுள்ளன எனலாம்.

            மெய்க்கீர்த்தியின் தொடக்கக் காலமாகப் பல்லவர் மெய்க்கீர்த்தியைக் குறிப்பிடுவர்.  பல்லவர் காலக் கல்வெட்டுகள் பல தமிழில் காணப்படுகின்றன. அவற்றில் மெய்க்கீர்த்தி போன்ற சிறப்புப் பகுதி வடமொழியிலேயே அமைந்துள்ளன.  அவற்றை அடுத்த நிலையில் பாண்டியருடைய மெய்க்கீர்த்திகள் கி.பி.768முதல் விரிவான நிலையில் தமிழில் காணப்படுகின்றன. 

மெய்க்கீர்த்தி இலக்கணம்

                சீர்நான் காதி இரண்டடித் தொடையாய்
                வேந்தன் மெய்ப்புகழ் எல்லாம் சொல்லியும்
                அந்தத்து அவன்வர லாறு சொல்லியும்
                அவளுடன் வாழ்கெனச் சொல்லியும் மற்றவன்
                இயற்பெயர்ப் பின்னர்ச் சிறக்க யாண்டெனத்
                திறப்பட உரைப்பது சீர்மெய்க் கீர்த்தி        (பன்னிரு பாட்டியல், நூ.198)

என்பதால் மன்னனின் உண்மைப் புகழைப் பாடுவது மெய்க்கீர்த்தி என்றும்,  முடிவில் அவன் வரலாறு அமைய வேண்டும் என்றும், பேரரசியாகிய துணைவியுடன் வாழ்க என்று உரைத்தல் வேண்டும் என்றும், மன்னவன் இயற்பெயரைச் சுட்டுதல் வேண்டும் என்றும்,  அவனுடைய ஆட்சி ஆண்டுகள் வளர்க எனக் கூறுதல் வேண்டும் என்றும்  மெய்க்கீர்த்தியின் இலக்கணத்தைப் பன்னிருபாட்டில் எடுத்துரைக்கிறது.

மெய்க்கீர்த்திகளின் உள்ளடக்கம்

  பாண்டிய மன்னர்களில் பராந்தகன் நெடுஞ்சடையன் அளித்த வேள்விக்குடிச் செப்பேடு, சீவரமங்கலச் செப்பேடு, சின்னமனூர்ச் சிறிய செப்பேடு ஆகிய மூன்றிலும் உள்ள மெய்க்கீர்த்திகளை முதலில் தோன்றிய மெய்க்கீர்த்திகளாக அறியமுடிகிறது.  அவற்றுள் வேள்விக்குடிச் செப்பேட்டில் காணப்படும் மெய்க்கீர்த்திப் பகுதி, பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி முதலாக ஆண்டு வந்த பாண்டிய குலத்தை அழித்துத் தமது ஆட்சியை நிறுவியவர் களப்பிரர்.  அக்களப்பிரரை அழித்துப் பாண்டிய நாட்டை மீட்டவன் கடுங்கோன் என்று தொடங்கி அவனது சிறப்பினைக் கூறுகிறது.  தொடர்ந்து கடுங்கோன் மகன் அவனி சூளாமணி முதலாகச் செழியன் சேந்தன், சிரீமாறவர்மன், கோச்சடையன், தேர்மாறன் போன்ற பாண்டிய மன்னர் அறுவரின் செயல்களும் புகழும் முறையாகக் கூறிச் செல்லுகிறது.  இறுதியாக நெடுஞ்சடையனின் புகழை முறைப்படுத்திக் கூறுகிறது.  அதாவது அவனது படை, படைத்திறம், வீரம், வெற்றி, சிறப்புப் பெயர்கள் போன்றவற்றை முறைப்படுத்திக் கூறுகிறது.

        அடுத்த நிலையில் பராந்தக வீர நாராயணனின் திருமங்கலம், சோமாசிக் குறிச்சி  செப்பேடு, மெய்க்கீர்த்திப் பகுதி, மிக நீண்டு அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. பாண்டியர் குல மரபு விளக்கு முகத்தால் திருமால், பிரமன், அத்திரி ஆகியோரின் சிறப்புகளைக் கூறி அத்திரி மகன்  சந்திரன் என்றும், அவன் வழி வந்த புதன், புரூரவன் ஆகிய பாண்டிய மன்னர் நாடாண்டனர் என்றும் விளக்கிப் பாண்டியர் குலம் சந்திர குலம் என்பதை நிறுவுகிறது.  பாண்டியரின் குலகுருவாக அகத்தியைனைக் கூறி, அகத்தியனது சிறப்பு பலப்பட கூறிச்  செல்லுகிறது. மேலும் பாண்டியரின் சிறப்புச் செயல்களாகத் திருவிளையாடல் புராணச் செய்திகள் பலவற்றையும் தொகுத்து உணர்த்துகிறது.  இறுதியாக மெய்க்கீர்த்திக்கு உரியனவாகிய வீர நாராயணனின் பிறப்பு, போர்ச்செயல், வெற்றி, அறச்செயல்கள் போல்வன அம்மெய்க்கீர்த்தியுள் இடம்பெற்றுள்ளன.

                பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய மெய்க்கீர்த்திகள் முன்னோர் செய்திகள் அனைத்தையும் பெற்றிருந்தாலும் ஓரளவு சுருங்கிய வடிவம் பெற்றுவிட்டன எனலாம்.  வீர நாராயணனின் செப்பேடு பாண்டியர் குலச் சிறப்பினை ஏறத்தாழ ஐம்பது அடிகளுக்கு மேல் விளக்கிச் செல்கிறது. ஆனால் பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய இராசசிம்மன், வீரபாண்டியன்  ஆகியோருடைய செப்பேடுகளான சின்னமனூர் பெரிய செப்பேடும், சிவகாசிச் செப்பேடும் சுமார் பத்து வரிகளுக்குள் அச்செய்திகளைச் சுருக்கித் தருகின்றன.

 திருவொடுந்தெள் ளமிர்தத்தொடுஞ் செங்கதிரொளிக் கௌஸ்துபத்தொடும்
   அருவிமதக் களிறொன்றொடுந் தோன்றி அரனவிர் சடைமுடி
   வீற்றிருந்த வெண்திங்கள் முதலாக வெளிப்பட்டது;
   பொருவருஞ்சீர் அகத்தியனைப் புரோகிதனாகப் பெற்றது

என்பதாக சின்னமனூர்ச் செப்பேடு அமைவதைக் காணலாம்.  பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் சோழ நாட்டை ஆண்ட பிற்காலச் சோழர் காலத்தில்தான்மெய்க்கீர்த்திகள்என்ற பெயருக்கேற்ப உண்மையான வடிவம் பெற்றுள்ளன எனலாம்.  முதலாம் இராசராசன் காலத்திலிருந்துதான் அரசனது போர் வெற்றிகள், ஆட்சிச் சிறப்பு, கொடை முதலியவற்றைக் கூறும் மெய்க்கீர்த்திகள் விரிவாகக் கூறப்பட்டு வந்தன” (தென்னிந்திய தமிழ்ச் சாசனங்கள், .10) என்பதால் அறியலாம்.  முதலாம் இராசராசன் தன் பகை மன்னர்களாகிய சேரர் மீது பாடப்பெற்ற பதிற்றுப்பத்தின் பதிகங்களைக் கண்டு அவ்வாறே முதன் முதலில் தனக்கும் மெய்க்கீர்த்தி அமைத்துக் கொண்டான் என்று கொள்ளுவது பொருந்தும் என்கிறார் பூ. சுப்பிரமணியம் (மெய்க்கீர்த்திகள், .17).  பிற சோழ மன்னர்கள் அதனைப் பின்பற்றி மேலும் விரிவடையச் செய்துள்ளனர்.

    போர்ச்செய்திகள் பல புறநானூற்றில் சுருக்கமாக அமைந்துள்ளன.  அவையே பதிற்றுப்பத்தில் நீண்டு அமைந்துள்ளது போல் சோழர் மெய்க்கீர்த்திகளுள் முற்கால மெய்க்கீர்த்திகள் சுருக்கமாகவும், பிற்கால  மெய்க்கீர்த்திகள் விரிந்தும் அமைந்துள்ளன.

                வேங்கை நாடும் கங்க பாடியும்
                தடிகை பாடியும் நுளம்ப பாடியும்...
                இரட்ட  பாடி ஏழரை இலக்கமும்
                திண்திறல் வென்றித் தண்டாற் கொண்ட

என்பன போன்று மெய்க்கீர்த்தி  என்ற பெயருக்கேற்ப உண்மைச் செய்திகள் மட்டும் சிறப்புச் சொற்கள் எவையும் கலக்காமல் எழுதப்பட்ட நிலை முதலாம் இராசராசன் மெய்க்கீர்த்தியில் காணப்படுகிறது.  இதுவே பிற்காலத்து இலக்கணம் அமைக்கவும் அடிப்படையாக இருந்துள்ளது எனலாம்.  ஒவ்வொரு அரசனுடைய மெய்க்கீர்த்தியும் ஒவ்வொரு வகையான தொடக்க அடியினைக் கொண்டு அமைந்துள்ளது.  தொடக்க அடியினைப் பார்த்தவுடன் இது இந்த மன்னனின் மெய்க்கீர்த்தி என்று கூறமுடியும்.  இந்த நிலையிலிருந்து வளர்ந்து இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், வீர ராசேந்திரன், குலோத்துங்கன் போன்ற பல மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் இரண்டு, மூன்று  வகையான தொடக்க அடிகளை உடையனவாய் அமைந்துள்ளன.  அதேபோல ஆட்சி ஆண்டுகள் அதிகமாகும் நிலையில் மெய்க்கீர்த்திகளும் நீண்ட வடிவம் பெற்றுள்ளன.

   சோழப் பேரரசில் நிலவிய பெரும் போர்ச் செயல்கள் முதலாம் குலோத்துங்கனது ஆட்சியோடு முடிவடைவதை மெய்க்கீர்த்திகளின் வழி அறியமுடிகிறது.  விக்கிரமசோழன் காலத்து மிகுதியான போர்ச் செயல்கள் காணப்படவில்லை.  அவனை அடுத்து அரசாண்ட இரண்டாம், மூன்றாம் குலோத்துங்க சோழர்கள், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன் போன்ற மன்னர்களின் ஆட்சியில் போர்ச்செயல் எதுவுமே இல்லாத நிலை வெளிப்படுகிறது.  எனவே அம்மெய்க்கீர்த்திகள் மன்னரது பிற சிறப்புச் செயல்களைத் தாங்கியுள்ள நிலையில் முழுமையாக மாற்றம் பெற்று விடுகின்றன.   முழுமையான இலக்கியமாகவே மாறிவிடுகின்றன. 

மெய்க்கீர்த்திக் கொள்கைகள்

              மெய்க்கீர்த்திக் கொள்கைகளை இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம்.  ஒன்று, இலக்கணங்களுக்கு ஏற்ப மெய்க்கீர்த்திகளில் அமைந்துள்ள கொள்கைகள்.  இவற்றை மெய்க்கீர்த்தி இலக்கியத்திற்குரிய சிறப்புக் கொள்கைகள் என்று கூறலாம்.  இந்நிலையில் உண்மைப்புகழ், வரலாறு, துணைவி, இயற்பெயரும் சிறப்புப் பெயரும், ஆண்டு, அடியும் தொடையும், உரைநடை என்ற ஏழு தலைப்புகளைச் சுட்டலாம்.  இரண்டு, பிற இலக்கியங்களுக்கு ஏற்ப மெய்க்கீர்த்திகளில் காணப்பெறும் கொள்கைகள். இவற்றைப் பொதுக் கொள்கைகள் என்று கூறலாம்.  இந்நிலையில் அணிநலம், மன்னர்சிறப்பு, இயற்கை வளமும் ஆட்சி முறையும், தொடக்கம், குறிப்புச் சொல், இலக்கண அமைதி, புராணக் கருத்து, மொழிநடை என்ற எட்டு தலைப்புகளைச் சுட்டலாம்.  இத்தலைப்புகளை முழுமையாக ஆராயின் விரிந்த நூலாக்கலாம். பேராசிரியர் பூ. சுப்பிரமணியம் அவர்கள் தம்முடைய மெய்க்கீர்த்திகள் என்னும் நூலில் இவற்றைப் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார்.  இங்குக் காட்டுக்கு ஒன்றிரண்டை மட்டும் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

அரசுமுறை

      மன்னர்கள் ஆட்சியில் மக்கள் நலமே பெரிதும் போற்றப் பெற்றன;  மன்னவன் மக்களுக்காக இறைவனை வணங்கினான்;  பகை மன்னர் பணிந்தனர்; பிற மன்னர் அளித்த திறைப் பொருள்கள் குவிந்தன; போர்க்களத்திலிருந்து கவர்ந்து வந்த பெரும் பொருள்கள் குவிக்கப்பெற்றன; அவை மக்களுக்கு வாரி வழங்கப்பெற்றன என்பன போன்ற அரசுமுறைச் செய்திகள் மெய்க்கீர்த்திகளில் பரவலாகக் கூறப்பெற்றுள்ளன.  இதனைக்,

                குலவலயத்து உயிர்ளைப் பெற்றதாயினும் பேணி” 
                                                                                       (முதலாம் இராசேந்திரன் மெய்க்.)

                அம்மையும் அப்பனுமாய் அனைத்துயிர்க்கும்
                இம்மைப் பயனும் மறுமைக்கு உறுதியும்
                மேம்பட நல்கி வீற்றிருந் தருளிய                       (ராசேந்திரன் மெய்க்.)

                மன்பதை புரக்க மணிமுடி புனைந்து
                சங்கர சரண பங்கயம் சூடி
                சிவநெறி ஓங்கச் சிவார்ச்சனை புரிந்து       
                                                                                       (பராக்கிரம பாண்டியன், மெய்க்.)

                கொங்கர் கலிங்கர் கோசலர் மாளுவர்...
                பல்லவர் முதலிய பார்த்திவர் எல்லாம்
                உறைவிடம் அருள்என்று ஒருவர்முன் ஒருவர்
                முறைமுறை கடவ                                                             (சுந்தர.மெய்க்.)

போன்ற மெய்க்கீர்த்தி வரிகளால் உணரலாம்.

கலைகள்

    மன்னர்கள் முத்தமிழ் வளர்த்தனர்; பிறவாகிய அனைத்துக் கலைகளுக்கும் ஆதரவு அளித்தனர்;  தாங்களும் பல கலைகளையும் உணர்ந்திருந்தனர் என்பனவும் உண்மைப் புகழ்களாகவே கூறப்பெறுகின்றன.

                இன்னமு தாகிய இயலிசை நாடகம்
                மன்னி வளர மணிமுடி சூடி     

என்று குலசேகர பாண்டியன் மெய்க்கீர்த்தி கூறுகிறது.

கொடுமை

           கலகம் விளைவித்த பகைவர்களை அடக்க, அழிக்கப் பகைவர்களுக்குப் பல கொடுமைகள் அக்காலப் போர்முறைகளில் சிறந்த ஒன்றாகக் கருதி அதற்கென இலக்கணமும் வகுக்கப்பட்டன. 

     இயங்குபடை யரவம் எரிபரந் தெடுத்தல்                      (தொல்.பொருள்.நூ.63)

எனத் தொல்காப்பியம் எடுத்துரைக்க,

                அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்-
                தாமாய்ந் தனரே குடைதுளங் கினவே...
                பெண்டிரும், பாசடகு மிசையார்  பனிநீர் மூழ்கார்-
                மார்பகம் பொருந்தி யாங்கமைந் தனரே                    (புறம்.62)

என்று அவ்விலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக புறநானூற்றுப்பாடல் விளக்கமாக அமைவதைக் காணலாம்.  இதேபோல்,

                வடிநெடு வாளும் வயப்பெரும் புரவியும்
                தொடிநெடுந் தோளுமே துணைஎனச் சென்று
                சேரனும் தானையும் செருகளத்து ஒழிய       
                                                                                                (சுந்தரபாண்டியன் மெய்க்.)

                அவன் சிரத்தினை அறுத்து
                அவன் ஒருமகள் ஆகிய இருகயன் தேவி
                நாகலை என்னும் தோகையஞ் சாயலை
                முகத்தொடு மூக்கு வேறாக்கி (வீரராசேந்திரன் மெய்க்.)

போன்ற மெய்க்கீர்த்திகள் வெற்றி கொண்டவர்கள் தோற்றவர்க ளுடையவர்களை எவ்வாறெல்லாம் கொடுமை செய்துள்ளனர் என்பதை உணர்த்துகின்றதைக் காணலாம்.

திறை பெறல்

              ஒரு நாட்டின் மீது படையெடுத்த மன்னன் அந்நாட்டு அரசனை வென்று அந்நாட்டைத் தன் ஆட்சிக்கு உட்பட்டதாகச் செய்கிறான்.  ஆனால் ஆட்சிப் பொறுப்பை அம்மன்னனிடமே ஒப்படைத்துத் தனக்கு அந்நாட்டு வருமானத்தில் ஒரு பகுதியைத் திறையாகச் செலுத்தச் செய்து திரும்புகிறான்.  வெற்றியுடன் திரும்பி வரும்போது திறைப்பொருள்கள் பலவற்றுடன் தன் நாட்டிற்குத் திரும்பி வருகிறான்.  அப்பொருள்களை அவனே வலியப் பறித்து வருவதும் உண்டு; தோற்ற மன்னர்கள் அஞ்சி திறைப்பொருள்கள் பலவற்றை வரிசைப்படுத்திக் கொடுத்து அனுப்புவதும் உண்டு. இவ்விரு வகைக்கும் மெய்க்கீர்த்திகளில் சான்றுகள் பல உண்டு.

                முதலாம் குலோத்துங்கன் மெய்க்கீர்த்தியானது,
                பழிஇகந்து கொடுத்த புகழின் செல்வியும்
                வாளார் உண்கண் மடந்தையர் ஈட்டமும்
                மீளாது கொடுத்த வெங்கரி நிரையும் கைக்கொண்டு

என்று குறிப்பிடுவதால் உணரலாம்.  இவ்வாறு கவரப்பட்ட பொருள்களும், திறை செலுத்தப்பட்ட பெரும்பொருட் குவியல்களும் ஆலயத் திருப்பணிகளுக்கும், வீரர் மற்றும் மறையவர் முதலிய சுற்றத்தவருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டும்  உள்ளன.

துணைவி

              பல மெய்க்கீர்த்திகளில் மன்னர் தேவியருடன் வீற்றிருக்கும் காட்சிகள் மிக அழகுற உவமை நயங்களோடு கூறப்பட்டுள்ளன.  பெரும்பாலான மெய்க்கீர்த்திகளில்உலக முழுதுடையாளொடும் வீற்றிருந்தருளியஎன்னும் தொடரும் இதே பொருளில்புவன முழுதுடையாளொடும வீற்றிருந்தருளிய...’ என்பது போன்ற தொடர்களும் காணப்படுகின்றன.  பொதுவாக அவனி முழுதுடையாள், உலக முழுதுடையாள், உலக முடையாள், திரிபுவன முழுதுடையாள், புவன முழுதுடையாள் என்ற பெயர்களே சோழர், பாண்டியர் ஆகிய அனைத்து மன்னர்களின் மெய்க்கீர்த்திகளிலும் தேவியர்களின் பெயர்கள் சுட்டப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

பிற மன்னரின் தேவியர்

                பகை மன்னரின் தேவியர் பலர் வெற்றிபெற்ற மன்னவர்களால் சிறை பிடிக்கப்பட்டு தம் தேவியர்க்குக் குற்றேவல் செய்ய வைத்துள்ளனர்.  இதனை,

                வடபுல வேந்தர் மணிப்புயம் பிரியா
                இலங்கிழை அரிவையர் தொழுதுநின் றேத்தும்
                உலக முழுதுடை யாளொடும்

என்று மாறவர்ம சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தி குறிப்பிடுகிறது.

ஆண்டும் ஆட்சியாண்டும்

         சிறக்க யாண்டுஎனத் திறம்பட உரைப்பது மெய்க்கீர்த்தியாகும் என்பது இலக்கணம்.  அவ்விலக்கணத்திற்கு ஏற்ப அனைத்து  மெய்க்கீர்த்திகளிலும் ஆண்டுகள் குறிக்கப்பெற்றிருக்கும்.  பெரும்பாலான மெய்க்கீர்த்திகளில் அன்று ஆண்ட அந்நாட்டு மன்னனது ஆட்சியாண்டே குறிக்கப்பட்டிருக்கும்.  சில மெய்க்கீர்த்திகளில் சக ஆண்டு, கலியுக ஆண்டு, கொல்லம் ஆண்டு போல்வனவும் குறிக்கப்பட்டிருக்கும்.  மேலும் ஆண்டோடு வருஷப் பெயர், மாதம், கிழமை, நட்சத்திரங்களைக் குறிப்பிடும் முறையும் காணமுடிகிறது.  குறிப்பாக,

                சகாத்தம் 1471இன்மேல் செல்லாநின்ற சவுமிய
                வருஷம் ஆனிமாதம் 13ஆம் தேதி சோம
                வாரமும் பிரதமையும் பெற்ற மூல நட்சத்திரத்து நாள்
என்று சதாசிவதேவ மகாராயரின் மெய்க்கீர்த்தியில் காணப்படுவதைக் காணலாம்.

யாப்பு நெறி

       மெய்க்கீர்த்திகள் நான்கு முதலாகிய சீர்களையுடைய அடிகளால் அமைய வேண்டும்; ஆசிரியம் விரவிய சொற்சீரடிகளாற் பாடப்படவேண்டும்; சொற்சீரடி என்னும் கட்டுரைச் செய்யுளால் அமைய வேண்டும்; இரண்டடி ஒரு தொடையாய் அமையவேண்டும்  என்பர்.  இரண்டு சீரானும் மூன்று சீரானும் ஐந்து சீரானும் ஆறுசீர் முதலிய பல சீரானும் அடிகள் வருமாயினும் நாற்சீரடியே சிறப்புடைய அடியாகும்.  இவற்றை அளவடி, நேரடி என்பர்.  சிறுபான்மை வஞ்சியடியும் வருதல் உண்டு.  இவற்றுள் அகவலோசையமைந்த மெய்க்கீர்த்திகளே மிகுதியாகக் கிடைத்துள்ளன.  ஒருசில கலியோசையாலும் தூங்கலோசையாலும் அமைந்துள்ளன.  சிறுபான்மை  வஞ்சியோசையும் இடம்பெற்றுள்ளன.

  மெய்க்கீர்த்திகளில் பெரும்பான்மையாக எதுகைத் தொடையும் சிறுபான்மையாக முரண்தொடை, இயைபுத்தொடை, மோனைத்தொடை ஆகியவையும் அமைந்துள்ளன.

          மூவசைச் சீர்கள் எட்டினுள் தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்கனி, கூவிளங்கனி ஆகிய நான்கு சீர்களே இலக்கியங்களின் தொடக்கமாக அமைய வேண்டும் என்பது தமிழ் இலக்கணக் கொள்கை.  இதற்கேற்ப மெய்க்கீர்த்திகளின் முதற் சீர்கள் அமைந்துள்ளன. காட்டாக, பூமன்னு, பூமாது, பூமாலை என்ற தேமாங்காய் சீர் அமைப்பிலும்; கடல்சூழ்ந்த, திருமன்னி, திருமாதர், புகழ்சூழ்ந்த என்ற புளிமாங்காய் சீர் அமைப்பிலும்; அமிர்தகிரணன், திருடந்தையும் என்ற கருவிளங்கனி சீர் அமைப்பிலும்; சந்திரனது, பூமடந்தையும், பூமருவிய, பூமலர்வளர் என்ற கூவிளங்கனி சீர் அமைப்பிலும் மெய்க்கீர்த்திகளின் தொடக்கம் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.

                அதுபோலவே ஈரசைச் சீர்கள் நான்கினுள்ளும் கருவிளம், கூவிளம் ஆகிய இரண்டு சீர்கள் மட்டுமே இலக்கியங்களின் தொடக்கமாக அமைய வேண்டும் என்பது தமிழ் இலக்கணக் கொள்கை.  இதற்கேற்ப மெய்க்கீர்த்திகளின் முதற் சீர்கள் அமைந்துள்ளன.  காட்டாக, திருமகள், திருவளர், திருவொடுந் என்ற கருவிளம் சீர் அமைப்பிலும்; திங்களேர், பூதல, பூமலர், வீரமே என்ற கூவிளம் சீர் அமைப்பிலும் மெய்க்கீர்த்திகளின் தொடக்கம் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.

                இவ்வாறு  கல்வெட்டுகளில் காணப்படும் உண்மைத் தொடர்களாகிய மெய்க்கீர்த்திகள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.  தமிழிலக்கியத் தரம் வாய்ந்த இம்மெய்க்கீர்த்திகள் வரலாற்றுக்கு உண்மை விளக்குவனவாக இருந்தாலும் இலக்கியத்தரத்தோடு இவ்வுண்மைகளை எடுத்துரைப்பது வியக்கத்தகும் போக்காகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக