தொன்று தொட்டு வளர்ந்துவரும் நாகரிகம் பண்பாடு மற்றும் சமூகப் பழக்கவழக்கங்கள் நாள்தோறும் தோன்றி அழிந்து வருவதைக் காணமுடிகிறது. இவ்வாறான சமூகப் பழக்கவழக்கங்களில் ஒன்றே 'பிடியரிசி'.
பிடி
ஏலம், ஒட்டகம், கவரி, யானையிவற்றின் பெண், கரமுட்டி, கிரகிப்பு, கைப்பிடி, கைப்பணம், நம்பிக்கை, நால்விரல் கொண்ட அளவு, பற்றுகை, படியெண்னேவல், பெலன் என்றவாறு தமிழ்மொழி அகராதி 'பிடி' என்னும் சொல்லுக்குப் பொருள் கூறும். இச்சொல் தமிழிலக்கியங்களில் பெரும்பான்மை பெண்யானையையே குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதைக் காணலாம். இங்குப் பிடி என்பது 'கைப்பிடி' அளவாகக் கொள்ளவேண்டும்.
அரிசி
இதுவொரு தானிய வகை. நெல்லினின்று உமி நீக்கிய பகுதி. சங்க இலக்கியந் தொடங்கி அரிசி என்னும் சொல்லாட்சி நிலவி வருகின்றது.
பிடியரிசி
பிடியரிசி என்பதில் நிலைமொழியான 'பிடி'யைத் தனியே நோக்கின் மேற்காணும் பல பொருள்களைத் தருவதாக அமையும். ஆனால், வருமொழியான 'அரிசி'யைத் தனியே நோக்கினும் பிற சொல்லுடன் புணர்ந்து நோக்கினும் ஒரே பொருளைத் தருவதாக அமையும். இப்படி வெவ்வேறு பொருளைத் தருவதாக அமையும் பிடியும், ஒரே பொருளைத் தருவதாக அமையும் அரிசியும் புணர்ந்து (பிடி + அரிசி = பிடியரிசி) பிடியரிசி என்னும் இச்சொல் அமைகிறது.
பிடியும் அரிசியும் சங்க இலக்கியந்தொட்டு பல்வேறு இலக்கியங்களில் தனித்தனியாக இச்சொல்லாட்சி வழக்கத்தில் இருந்தாலும் இவ்விரு சொல்லின் புணர்நிலையில் பிடியரிசி என்ற சொல்லாட்சி இலக்கியங்களில் இடம்பெறாமை இங்குக் குறிப்பிடத்தக்க ஒரு செய்தியாகும்.
'பிடியரிசி' என்னும் சொல் மக்களிடையே பரவலாக இன்றுவரை பேசப்பட்டுவரும் சொல்லாகும். 'பிடியரிசி' என்பது 'தருமஞ்செய்ய அள்ளிவைக்கும் அரிசி'யைக் குறிப்பதாகும். இவ்வரிசியை எடுத்து வைக்கும் பானைக்குப் 'பிடியரிசிப்பானை' என்று பெயரிட்டு அழைத்து வருகின்றனர். 'பிடியரிசி'யும், 'பிடியரிசிப்பானை'யும் பெருவழக்காக மக்களிடத்துப் பயின்று வருவது குறித்தும் இவற்றின் பயன்பாடு பல்வேறு இடங்களில் வேறுபடுவது குறித்தும் இக்கட்டுரை ஆராய்கின்றது.
பிடியரிசியும் பிடியரிசிப்பானையும்
சமையலுக்குத் தேவையான அரிசியை எடுத்த பிறகு அவ்வரிசியில் இருந்து ஒரு கைப்பிடி அளவு தனியாக ஒரு பானையில் போடப்படும் அரிசியின் பெயரே 'பிடியரிசி' என்றும், அவ்வரிசி போடப் பயன்படுத்தும் பானையின் பெயரே 'பிடியரிசிப்பானை' என்றும் அழைப்பர். ஒவ்வொரு முறையும் சமையலுக்கு அரிசியை எடுக்கும் போதும் பிடியரிசிப்பானையில் ஒரு கைப்பிடி அரிசி போடுவதைப் பன்னெடுங்காலமாக மக்கள் வழக்கத்தில் கொண்டிருந்தனர்.
முன்னூட்டிப் பின்னுண்ணும் பழக்கம்
மக்கள் எச்செயலைச் செய்யும் முன் ஒரு பொதுச்செயலைச் செய்வதைப் பழக்கமாகக் கொண்டு இருக்கின்றனர். உணவு உண்ணும் முன் பிறர்க்கு உணவு அளித்து உண்ணும் பழக்கத்தையும் மக்கள் கொண்டிருக்கின்றனர். உண்பதற்கு முன் செய்யும் பணிகளைத் திருமூலர்,
"யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே" (திருமந்திரம், 252)
என்று வரையறுக்கின்றார். இவ்வாறு உண்ணும் முன் இறைவர்க்குப் பச்சிலை கொடுத்தாலும், பசுவிற்குப் புல் கொடுத்தாலும், உண்ணும் உணவில் கைப்பிடி அளவு கொடுத்தாலும் இம்மூன்றும் இல்லாதபோது யாவர் மனமும் துன்புறுத்தாதிருந்தாலும் யாவர்க்கும் அறமாகக் கருதப்படும் என்கின்றார். தமது அடுத்த பாடலில் திருமூலர் யார்க்கு அறம் அளிக்க வேண்டும் என்று வரையறை செய்கின்றார். அப்பாடல் பின்வருமாறு:
"அற்றுநின் றார்உண்ணும் ஊணே அறன்என்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்றுநின்று ஆங்கொரு கூவல் குளத்தினில்
பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே" (திருமந்திரம், 253)
என்ற பாடலால் பற்றற்ற ஞானியினர்க்கு அறம் அளித்தல் வேண்டும் என்கிறார். இவர்தம் கருத்தை அடியொற்றிச் சிறுத்தொண்ட நாயனார் அவர்கள் திருமுடித்தரித்த அடியார் தமக்கு முன்னூட்டிப் பின்னுண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் எனலாம். இதனைக் கீழ்வரும் பாடல் உணர்த்தும்,
"நறைஇதழித் திருமுடியார் அடியாரை நாடோறும்
முறைமையினில் திருவமுது முன்னூட்டிப் பின்னுண்ணும்
நிறையுடைய பெருவிருப்பால் நியதியா கக்கொள்ளும்
துறைவழுவா வகையொழுகுந் தூயதொழிற் றலைநின்றார்"
(பெரியபுராணம், சிறுத்தொண்டர்., பா.13)
என்பதால் பழங்காலத்தில் முன்னூட்டிப் பின்னுண்ணும் பழக்கம் வழக்கத்தில் இருந்தது எனலாம். உணவு உண்ணும் முன் அடியார் யாரேனும் ஒருவருக்குத் திருவமுதூட்டி உண்டால் இறைவர்க்குத் திருவமுது படைத்ததாகக் கருதி முன்னூட்டிப் பின்னுண்ணும் வழக்கத்தை முன்னோர்கள் கொண்டிருந்தனர். பெருவழக்காக இருந்த இவ்வழக்கம் - நாள்தோறும் கடைபிடித்து வந்த இவ்வழக்கம் வாரத்திற்கு ஒருநாள் என்றும், மாதத்திற்கு ஒருநாள் என்றும் குறையத் தொடங்கிய நிலையையும் காண்கின்றோம். அதாவது, பல கிராமங்களில் சிவனடியார்களுக்குக் கிராம மக்கள் வாரச் சாப்பாடு, மாதச் சாப்பாடு என்று முறைவைத்து உணவு வழங்கும் வழக்கம் இருந்ததையும் சில கிராமங்களில் இவ்வழக்கம் இன்றும் இருப்பதையும் காண்கிறோம்.
'போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து' என்பது பழமொழி. மனிதர் போதும் போதும் என்று சொல்லக் கூடியது உணவு. ஒருவனின் மனம் நிறைவு பெற்று போதுமென்று சொன்னால் வழங்கியவரின் மனமும் மகிழும். ஆனால் வேறெந்த பொருளையோ பணத்தையோ கொடுத்தாலும் வேண்டும் வேண்டும் என்றே வேண்டுவர். அதனால் கொடுப்பவரின் மனம் நிறைகொள்ளாது. இதனாலேயே தானத்தில் சிறந்தது அன்னதானம் என்றனர்.
காலவோட்டத்தில் சிக்குண்ட மனிதன் காலச் சுழற்சிக்குத் தக்கவாறு தன்னுடைய வாழ்க்கைச் சுழற்சியையும் மாற்றிக்கொண்டுவிட்டான். உணவு பெறுவதைப் பெருமையாகக் கொண்ட காலத்தில் உணவு வழங்கப்பெற்றது. இன்று, அவ்வாறு உணவு பெறுவதைவிட பணமாகவோ பொருளாகவோ பெற்றுக்கொள்ளும் சூழ்நிலைக்கு மனிதன் வந்துவிட்டான். இந்தச் சூழ்நிலையில் இவ்வழக்கம் அழியத் தொடங்கியது எனலாம்.
ஒன்றின் அழிவில் பிறிதொன்று தோன்றும் என்பது அறிவியல் உண்மை. இவ்வழக்கம் தேய வேறொரு வழக்கமாக பிடியரிசிப் பழக்கம் மக்களிடையே பெருவழக்கானது எனலாம். நாள்தோறுமோ, வாரந் தோறுமோ, மாதந்தோறுமோ உணவை அடியார்க்கு வழங்க இயலாதவர்கள் தினமும் ஒரு கைப்பிடி அரிசியை எடுத்து வைத்துச் சமைத்து வந்தனர். இவ்வழக்கமே 'பிடியரிசி'ப் பழக்கம் என்பர். இவ்வழக்கத்தை ஊக்கப்படுத்தியவர் காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார் சுவாமிகள் ஆவார். இவரின் ஆதரவால் இப்பழக்கம் மக்களிடையே பரவலாக்கப்பட்டு இன்று தேயத்தொடங்கி வருகிறது எனலாம்.
பிடியிரிசியின் பயன்பாடுகள்
தினந்தோறும் சமைப்பதற்குமுன் தருமஞ் செய்வதற்காக எடுத்துவைக்கும் பிடியரிசியானது பின்வரும் நிலைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர்.
அ. கோயிலுக்குப் பிடியரிசி
ஆண்டுக்கொருமுறை ஆண்டு முழுவதும் சேர்ந்த பிடியிரிசியில் இடையிடையே வேறு தர்ம காரியங்களுக்குச் செலவழித்தது போக மீதியுள்ள பிடியரிசியைக் கோயிலுக்குக் கொடுப்பர். கோயிலின் முக்கியத் திருவிழாக் காலங்களில் அன்னதானம் வழங்குவதற்கும், கோயில் பணியாளர்கள் கோயிலிலேயே மடப்பள்ளியில் சமைத்துண்பதற்கும், கோயில் நிவேத்தியம் பண்ணுவதற்கும் இப்பிடியரிசி பயன்படுத்தப்படுகின்றது.
ஆ. மடத்திற்குப் பிடியரிசி
ஆண்டுக்கொரு முறை ஆண்டு முழுவதும் சேர்ந்த பிடியிரிசியில் இடையிடையே வேறு தர்ம காரியங்களுக்குச் செலவழித்தது போக மீதியுள்ள பிடியரிசியை மடத்துக்குக் கொடுப்பர். மடத்தின் முக்கியத் திருவிழாக் காலங்களில் (குருபூசை) அன்னதானம் வழங்குவதற்கும், தினந்தோறும் வழிப்போக்கர்கள் மற்றும் அடியார்களுக்கு அமுது வழங்குவதற்கும், கோயில் பணியாளர்கள் கோயிலிலேயே சமைத்துண்பதற்கும், கோயிலில் நிவேத்தியம் பண்ணுவதற்கும் இப்பிடியரிசி பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, பொதட்டூர்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ணானந்தா மடாலயத்தில் இப்பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளதைக் காணமுடிகிறது.
இ. பிச்சைக்குப் பிடியரிசி
வறுமையினால் வாடும் மக்கள் தங்கள் வறுமையைப் போக்க வேறுவழி இல்லாத போது பிச்சை எடுப்பதுண்டு. இப்பிச்சையில் அரிசிப் பிச்சையும், பொருட் பிச்சையும், பணப் பிச்சையும் அடங்கும். அரிசிப் பிச்சை போடுபவர்கள் பிடியரிசியில் இருந்தே பிச்சை போடுவர்.
ஈ. நேர்த்திப் பிச்சையில் பிடியரிசி
மக்கள், வேண்டுதலுக்காகப் பிச்சை எடுப்பதுண்டு. இதனை நேர்த்திப் பிச்சை என்பர். இந்நேர்த்திப் பிச்சை கேட்கும் போது பிடியரிசிப் பானையில் சேர்ந்திருக்கும் பிடியரிசியிலிருந்து எடுத்துவந்து போடுவர். குறிப்பாக, குழந்தை நலம்பெற வேண்டியோ, கணவன் நலம்பெற வேண்டியோ, தன்னுயிரான பிறிதொருவர் நலம்பெற வேண்டியோ தனியொரு பெண்ணோ அல்லது குடும்பத்தாரோ அனைவருமோ குறிப்பிட்ட நாளில் நேர்த்திப் பிச்சை எடுப்போம் என்று கூறிக்கொள்வர். குறிப்பிட்ட நாளில் குடும்பத்தார் அனைவரும் இல்லம் நீங்கி கோயிலை நாடுவர். இரவும் பகலும் மூன்று நாள்கள் கோயிலிலேயே தங்குவர். அக்கோயிலைச் சுற்றியுள்ள ஏழு ஊர்களில் தினந்தோறும் நேர்த்திப் பிச்சை எடுத்துவந்து அன்று இரவு அப்பிச்சை அரிசியில் சமைத்து உண்டு கோயில் திண்ணையிலேயே படுத்துக்கொள்வர். இவர்கள் நேர்த்திப்பிச்சை எடுக்கும் போது அரிசி கொடுப்பவர்கள் பிடியரிசியையே கொடுப்பர்.
உ. அடியார்க்குப் பிடியரிசி
அடியார்கள் தனக்காகவும் பிறருக்காகவும் வீடுதேடி வந்து அரிசி வாங்கிச் செல்வர். அடியார்கள் இறைத்தொண்டராகவும் பொதுநலத் தொண்டராகவும் என இருவகையினர் உண்டு. இறைத்தொண்டர்கள் தனக்காகவும் தான் நடத்தும் அறச்சாலைக்காகவும் அரிசி வாங்கிச் செல்வர். பொதுநலத் தொண்டர்கள் தனக்காக இல்லாமல் தன்னால் நிறுவப்பட்ட நிறுவனம் வறுமையில் செயலிழந்துவிடாமல் இருப்பதற்காக நிறுவனத் தலைவர் அரிசி பெறுவதும் வழக்கத்தில் இருந்துள்ளதைக் காணமுடிகிறது. குறிப்பாக, சிறுகோயில்களை நிருவகிக்கும் இறைத்தொண்டர்கள் வீடு தேடி வருவர். அவ்வாறு அவர்கள் வரும் போது 'அம்மா பிச்சை' என்று கேட்பதில்லை. தாம் வருகின்றோம் என்பதற்கு அடையாளமாக இறைவனைக் குறித்துப் பாட்டு பாடிக்கொண்டு வருவர். இல்லில் வசிப்போர் இறையடியார் பிச்சைக்கு வந்திருக்கிறார் என்று குறிப்பால் உணர்ந்து பிடியரிசியைக் கொண்டுவந்து போடுவர். அப்போது இறையடியவரிடம் ஆசிபெற்றும் செல்வர். அதுபோல், பொதுநலத் தொண்டர்களும் அரிசிகேட்டு வருவர். யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்கள் தாம் நிறுவிய 'வித்தியாநுபாலன அச்சுக்கூடம்' வறுமையில் உழன்றபோது அவ்வச்சுக்கூடப் பணியாளர்களுக்காக நாவலர் அவர்கள் அரிசிப்பிச்சை எடுத்ததையும் வரலாறு கூறும்.
ஊ. தெய்வவிழா நாளில் பிடியரிசி
தெய்வவிழா நாளில் பிடியரிசியானது கோயில் அன்னதானத்திற்காகவும், பிறருக்காகவும் என இருநிலைகளில் கொடுப்பர்.
1. தெய்வவிழா நாளில் கோயிலுக்குப் பிடியரிசி
சிறுதெய்வ விழாக்கள் கொண்டாடும் போது கோயில் அன்னதானத்திற்காக அரிசி கொடுப்பர். இவ்வரிசியைப் பிடியரிசியில் இருந்தே கொடுப்பர். இவ்வரிசி கோயில் நிருவாகிகளால் பெறப்பட்டு அன்னதானம் செய்யப்படுகிறது.
2. தெய்வவிழா நாளில் பிறர்க்குப் பிடியரிசி
சிறுதெய்வ விழா நாளில் சிலர் படைப்பதற்காக வேடமிட்டு அரிசி வேண்டுவர். இவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று அரிசியும் பருப்பும் பணமும் பெறுவர். இவ்வாறு பெறும் அரிசி, பருப்பு மற்றும் பணம் ஆகியவற்றைக் கொண்டு தெய்வத்திற்குப் பொங்கலிட்டுப் படையல் செய்வர். குறிப்பாக, பொதட்டூர்பேட்டையில் 'கெங்கையம்மன் திருவிழா' ஆண்டுதோறும் வைகாசி மாத முதல் வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். அன்று பலர் பிச்சை எடுத்து பொங்கல் வைப்பதுண்டு. காலையில் எழுந்தவுடன் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு வேடமிட்டு 'சொம்பு' (சிறுகுவளை) எனும் பாத்திரத்தைக் கொடுத்து 'கெங்கம்மா ஜாத்திரை யாரம்மா வீட்டிலே' என்று கேட்பர். இவ்வாசகத்தினைக் கேட்டதும் வீட்டிலுள்ளோர் பிடியரிசியைக் கொண்டுவந்து போடுவர். பிறகு இவற்றை இவர்கள் இவ்வரிசி கொண்டு பொங்கலிட்டு தெய்வத்திற்குப் படைப்பர். இன்றோ, இவ்வழக்கம் தெய்வத்திற்குப் படைப்பது என்று குறுகி பணம் பெறுவதையே நோக்கமாகக் கொண்டு சிறியவர் முதல் பெரியவர் வரை வேடமிட்டுப் பிச்சை எடுக்கும் நிலை உருவாகி வருகின்றது.
எ. குடும்பத் தெய்வவிழா நாளில் பிடியரிசி
1. குடுத்பத் தெய்வவிழா நாளில் கோயிலுக்குப் பிடியரிசி
இது, ஒரு குடும்பத்தில் குலதெய்வ வழிபாட்டின் போது நிகழ்த்தப்பெறும் அன்னதான நிகழ்ச்சிக்குக் கொடுப்பதாகும். கோயில் நிருவாகிகள் அக்கோயிலைக் குலதெய்வமாகக் கொண்ட வீடுகள் தோறும் சென்று அன்னதானத்திற்காக அரிசி பெற்றுவருவர். அரிசி கொடுப்பவர்கள் பிடியரிசியிலிருந்தே அரிசியைக் கொடுப்பர். இவ்வழக்கம் பிடியரிசிப் பழக்கம் உள்ள பல கிராமங்களில் இன்றும் காணலாம்.
2. குடும்பத் தெய்வவிழா நாளில் தனக்காகப் பிடியரிசி
குலதெய்வ வழிபாட்டின்போது சிலர் கோயில் அன்னதானம் அன்றி தாங்களாகவே தனியாக அன்னதானம் செய்வர். இவ்வாறு அன்னதானம் செய்வதற்குப் பயன்படுத்தும் அரிசி பிடியரிசியாகும். இப்பிடியரிசி போதாதபோது வீட்டரிசியையும் உடன் சேர்த்துக்கொள்வர். பள்ளிப்பட்டு வட்டாரத்தில் உள்ள பெருமாநல்லூர் என்னும் கிராமத்தில் வீற்றிருக்கும் 'பெருமாநல்லூராள்' என்னும் சிறுதெய்வத்திற்கு அத்தெய்வத்தைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை சிறப்பு வழிபாடு நடத்துவர். அவ்வழிபாட்டின் போது நடைபெறும் மேற்கொள்ளும் அன்னதான நிகழ்ச்சிகளுக்குப் பிடியரிசியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஏ. தெய்வவிழா நாளில் பிடியரிசிப்படையல்
ஆண்டுக்கொருமுறை கொண்டாடும் தெய்வவிழா நாளில் வீட்டில் படைக்கும் சோற்றுக்கு இவ்வரிசியைப் பயன்படுத்துவர். குறிப்பாக, பொதட்டூர்பேட்டையில் ஆடி மாதத்தில் வரும் கார்த்திகைத் திருநாளன்று முருகனுக்குக் காவடி எடுக்கும் வழக்கம் உண்டு. இவ்வழக்கம் குமரனைக் கடவுளாக ஏற்றுக்கொண்டோர் அனைவரும் ஆடிக்கிருத்திகை அன்று காவடி எடுத்து வழிபடுவர். இவ்வூரில், பெரும்பாலானோர் காவடி எடுப்பர். காலை எழுந்தவுடன் காவடியைச் சுத்தம் செய்து அலங்காரம் செய்வர். முருகனுக்குப் படைப்பதற்காக ஆண்டு முழுவதும் சேர்ந்த பிடியிரிசியை எடுத்துச் சோறாக்கிப் படைப்பர். படைத்த பின் இச்சோற்றையெல்லாம் பிறர்க்குக் கொடுத்துவிடுவர். மீதும் இருப்பின் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு அருகில் உள்ள முருகர் தலத்திற்குச் செல்வர். அங்கு ஆடிப்பாடி விளையாடிவிட்டி அங்குள்ளவர்களுடன் இக்கட்டுச் சோற்றைப் பங்கிட்டு உண்டு மகிழ்வர்.
ஐ. வறுமைக் காலத்தில் தானே பயன்படுத்துவர்
குடும்பம் வறுமையில் தவிக்கும் போது, தான் சமைக்கப் பிடியரிசியில் அரிசியை அளந்து எடுத்துப் பயன்படுத்துவர். பிறகு அரிசி வந்தவுடன் எடுத்த அரிசிக்கும் கூடுதலாகச் சேர்த்துப் பிடியரிசியில் போட்டுவிடுவர்.
இதுபோன்ற இன்னோரன்ன நிகழ்ச்சிகளுக்காகப் பிடியரிசியை மக்கள் பயன்படுத்துகின்றனர். நாடு வறுமையில் திகழ்ந்த போது சங்கராச்சாரியார் அவர்களால் இப்பிடியரிசித் திட்டம் நாடோறும் பரவிடச் செய்தார். தானே சீடர்களுடன் கிராமம் கிராமமாக, தெருத் தெருவாக, வீடு வீடாகச் சென்று அரிசியைச் சேகரித்திருக்கிறார் என்ற செய்தி இத்திட்டம் பரவலாக்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றது. இப்பரவலாக்கத் திட்டம் இன்று குறையத் தொடங்கிவிட்டது என்றே கூறலாம்.
கிராமங்களில் வாழ்வோர், நகரை நோக்கிவரத் தொடங்கிவிட்டனர். கிராமங்கள் நகரங்களாகும் நிலையில் கிராமப் பழக்கங்கள் இன்று மறையத் தொடங்கியுள்ளன. மேலும், பொருளாதாரச் சீர்கேடும் நம்தம் பழக்க வழக்கங்கள் மறைய காரணமாக இருக்கின்றன.
ஆண்டுக்கொருமுறை தானியங்களை வாங்கிவைக்கும் பழக்கம் இன்று குறுகி மாதத்திற்கும் நாளுக்கும் என அமையத் தொடங்கிவிட்டது. வாங்கும் தானியத்தின் அளவு குறுகிவிட்டதாலும் வாங்கும் தானியம் தனக்கே போதாததாலும் பிறர்க்காகச் சேர்த்துவைக்கும் வழக்கம் குறையத் தொடங்கிவிட்டது எனலாம். 'தனக்கு மிஞ்சியதே தானம் தர்மம்' என்ற வாக்குப்படி மக்கள்தொகைப் பெருக்கத்தின் காரணமாகவும் விலைவாசி உயர்வின் காரணமாகவும் பற்றா வருமானத்தின் காரணமாகவும் பழைய பழக்கவழக்கங்கள் அழியத் தொடங்கிவிட்டன எனலாம். கிராமங்களில் இருந்து நகரை நோக்கி வந்த மக்களிடம் இப்பழக்கம் அற்று நகர வாழ்க்கைக்குத் தகுந்தவாறு தங்களை மாற்றிக் கொள்வதாலும் கிராம மக்கள் நகரத்தில் இப்பழக்கத்தினை விடுத்திருக்கின்றனர். இப்படியே இன்னும் இரண்டு தலைமுறைகள் சென்றால் நம்தம் பழைய பழக்கவழக்கங்கள் மண்ணோடு மண்ணாய் மக்கி அழுகி அடையாளம் தெரியாமல் போய்விடும் என்று உறுதியாகக் கூறலாம்.
இப்பிடியரிசித் திட்டம் கிராமம் மட்டுமல்ல நகரங்களில் மீண்டும் கொண்டு வந்தால் மக்கள் மனதில் அறம்செய்யவேண்டும் என்ற உணர்வு எழும். அதனால் மனம் சீர்பெறும்; வாழ்வும் நலம்பெறும் என்பதில் ஐயமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக