ஞாயிறு, 4 நவம்பர், 2018

நூலிதழ்கள் ஒரு பார்வை

தமிழில், தொடக்க காலத்தில் நூல் பதிப்பானது இதழ்கள் வழியே தொடங்கி பின்னர் தனி நூலாக்கம் பெற்றதைப் பதிப்பு வரலாறு உணர்த்தும். 1897ஆம் ஆண்டு இதழ்கள் வழியே பதிப்புப் பணி தொடங்கியது.  1897ஆம் ஆண்டு உண்மை விளக்கம் அல்லது சித்தாந்த தீபிகை எனும் மாத இதழானது ‘திருவானைக்கா உலா’ எனும் நூலைப் பதிப்பு செய்துள்ளது.  இதற்கு 85 ஆண்டுகளுக்கு முன்னதாக 1812இல் மாசத்தினச்சரிதை எனும் மாத இதழ் நடத்திய அச்சகம் வழியே திருக்குறள் முதன் முதலாக வெளிவந்திருக்கிறது.  இவைகள் தனித்தனி நூல்களாக பகுதி பகுதியாக இதழ்களில் வெளிவந்து பதிப்பு வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன.

இவையல்லாமல், நூல்களுக்கென்றே ஒரு தனி இதழைத் தொடங்கி அந்நூல் பகுதி பகுதியாக வெளிவந்து, நூல் முற்றுப் பெற்றவுடன் அவ்விதழ் நிறைவு பெற்றதையும் பதிப்பு வரலாறு உணர்த்துகின்றது.  இவ்வாறு வெளிவந்த இதழ்களை நூலிதழ் எனலாம்.  இந்நூலிதழ், நூற்பெயரிலமைந்த நூலிதழ், பொதுப்பெயரிலமைந்த நூலிதழ், மொழிபெயர்ப்பு நூலிதழ் என மூன்று நிலைகளில் வெளிவந்திருப்பதைக் காணமுடிகிறது.  

உண்மை விளக்கம், உபதேச காண்டம், கந்தபுராணம், கம்பராமாயணம், காசி காண்டம், காஞ்சிப்புராணம், குசேலோபாக்கியாநம், கூர்ம புராணம், சிவ இரகசிய காண்டம், சிவஞான சித்தியார், சிவஞானபோதம், சீகாளத்தி புராணம், சூதசங்கிதை, திருஅருட்பா, திருக்குறட் குமரேச வெண்பா, திருக்குறள், திருத்தொண்டர் புராணம், தேசிகப்பிரபந்தம், தேவாரம், நந்தமண்டபல சதகம், நல்லாப்பிள்ளையார் பாரதம், நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம், பட்டினத்தார் புராணம், பட்டினத்துப் பிள்ளையார் பாடற்றிருமுறை, மச்ச புராணம், மார்க்கண்டேய புராணம், விநாயகர் புராணர், வில்லிபாரதம், ஸ்காந்த புராண கீர்த்தனை போன்ற நூற்பெயரிலமைந்த நூலிதழ்களைச் சுட்டலாம்.  

இதிகாச மஞ்சரி, இந்துஜனபூஷணி, உபநிஷதார்த்த தீபிகை, கம்ப நாடார், சக்கரவர்த்தி, சன்மார்க்க ப்ரதர்சினி, சித்தாந்த ஞானபோதம் போன்ற பொதுப்பெயரிலமைந்த நூலிதழ்களைச் சுட்டலாம்.

அத்யாத்ம ராமாயணம், ஆத்ம ராமாயணம், ஆநந்த ராமாயணம், இருக்கு வேதம், கதா மஞ்சரி, பாகவதம், மகாபாரதம், விசுவ கர்ம புராணம், வியாச பாரதம் போன்ற மொழிபெயர்ப்பு நூலிதழ்களைச் சுட்டலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக