ஞாயிறு, 4 நவம்பர், 2018

புலம்பெயர் மண்ணில் நான்மணிக்கடிகை

கல்வி
“குருடராச் செய்வது மம்மர், இருள்தீர்ந்த
கண்ணராச் செய்வது கற்பு”

ஒருவரை வழி தெரியாத குருடராகச் செய்வது கல்வியறிவின்மையாகும்.  குருடு நீங்கிய கண்ணுடையவராகச் செய்வது கல்வி.

“ஒருவற்குக் கற்றலின் வாய்த்த பிறவில்லை”

ஒருவனுக்கு கல்வியறிவைப் போலப் பயன்படுவன வேறொன்றும் இல்லை.

“திரியழற் காணிற்றொழுப,விறகின்
எரியழற் காணி னிகழ்ப - ஒருகுடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமைபா ராட்டு முலகு”

உலகத்தார் திரியார் எரியும் சுடரைக் கண்டால் தொழுவார்கள். விறகால் எரியும் சுடரைக் கண்டால் இகழ்வார்கள். அதுபோல ஒரு குடியிற் பிறந்த கல்லாமல் மூத்தவனை விட்டுவிட்டு, இளைஞனாயினும் கற்றானையே பாராட்டுவர்.

“ஒருவன் மதிநன்று மாசற் கற்பின்”

குற்றமறக் கற்பானாயின், ஒருவன் அறிவு நலம் பெறும்.

ஒழுக்கமுடைமை

“திருவொக்கும் தீதில் ஒழுக்கம்”

தீமை கலவாத நல்லொழுக்கம் செல்வத்தை ஒக்கும்.

“இனிய னெனப்படுவான் யார்யார்க்கே யானும்
முனியா ஒழுக்கத் தவன்”

எவரிடத்திலாயினும் வெறுக்கப்படாத ஒழுக்கத்தையுடையவன் இனிமையானவன் என்று சொல்லப்படுவான்.

சினமின்மை

“எல்லாம் வெகுண்டார்முற் றோன்றாக் கெடும்”

எல்லா நன்மைகளும் சினங்கொள்வாரிடத்துத் தோன்றாமல் கெட்டொழியும். 

“என்றும் விடல்வேண்டுந் தங்கண் வெகுளி”

தம்மிடம் உண்டாகும் சினத்தை எப்பொழுதும் நீக்குதல் வேண்டும்.

“வெல்வது வேண்டின் வெகுளி விடல்”

பிறரை வெல்ல விரும்பினால் சினத்தை விடுக.

“கெடுப்பின் வெகுளி கெடுத்து விடல்”

ஒன்றைக் கெடுக்க விரும்பினால், சினத்தைக் கெடுக்க.

நாணுடைமை

“பொறிகெடும் நாண்ற்ற போழ்தே”

ஒருவனுக்கு நாணம் என்பது நீங்கின போதே அவனது செல்வம் அழியும்.

பொய்யாமை

“பொய்சிதைக்கும் பொன்போலு மேனியை”

பொய்ம்மையான ஒழுக்கம் பொன் போன்ற நிறத்தினையுடைய அழகிய உடம்பை வாடச் செய்யும்.

“புகழ்செய்யும் பொய்ய விளக்கம்”

பொய்யாமையாகிய ஒளி எங்கும் புகழை விளங்கும்படி செய்யும்.

“உற்ற துரையாதார் செற்றாரைச் சேர்ந்தவர்”

உண்மையைச் சொல்லாதவர்கள் பகைவரை ஒப்பர்.

கள்ளாமை

“கடிய வருதலால் கள்ளாமை வேண்டும்”

கடுந்துன்பங்கள் பின்பு வருதலால், பிறர் பொருளைத் திருடாதிருத்தல் வேண்டும்.

குறிப்பறிதல்

“அகம்பொதிந்த தீமை மனமுரைக்கும், முன்னம்
முகம்போல முன்னுரைப்ப தில்”

மனத்தின் கண் தங்கிய தீமைகளை அவன் மனமே அவனுக்கு அறிவிக்கும் ஒருவன் உள்ளக் குறிப்பை அவன் முகத்தைப் போல முற்படத் தெரிவிப்பது வேறொன்றுமில்லை.

நட்பு

“பசைந்தாரிற் றீர்தலின் தீப்புகுதல் நன்று”

தம்மிடம் நம்புக் கொண்டாரினின்றும் நீங்கி உயிர்வாழ்தலைவிட தீயில் வீழ்ந்து உயிர் விடுதல் நல்லது.

“செல்லுந் திசைக்குப்பாழ் நட்டோரை யின்மை”

நண்பர்கள் இல்லாத வெளியூர்களுக்குச் செல்லுதல் பயனுடையதாகாது. நாடெங்கம் நண்பர்களை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்பது இதன் கருத்து.

“நகைநலம் நட்டார்கண் நந்தும்”

முகமலர்ச்சியின் நன்மை, நண்பர்கள்பால் சிறக்கும். அதாவது, நண்பரைக் கண்டவிடத்துத் தம் முகத்தில் தோன்றும் புன்னகையும் நன்னோக்குங் கூடிய முகமலர்ச்சி. இது உளங்கலந்த உண்மை நண்பர்கள் பாலன்றி மற்றவர்பால் அங்ஙனம் மலர்ச்சி பெறாது.

“நலமாறின் நண்பினார் நண்பு கெடும்”

உற்றுழி உதவியாகிய நலம் மாறினால், நண்பரின் நட்பியல்பு கெட்டுவிடும்.

கூடாநட்பு

“குலஞ்சிதைக்குங் கூடார்கண் கூடிவிடின்”

கெட்டவர்களோடு நட்புக் கொண்டார் குடிப்பெருமை கெடும்.


சிற்றினஞ்சேராமை

“கற்ற னொருவனும் பாடிலனே கல்லாதார்
பேதையார் முன்னர்ப் படின்”

கல்லாதவருடனும் அறிவில்லாதவருடனும் சேர்ந்தால் கல்வியறிவுடையவனும் பெருமை இல்லாதவனாவான்.

கல்லாமை

“தனக்குப்பாழ் கற்றறி வில்லா உடம்பு”

கல்வியறிவு பெறாத வெற்றுடம்பை உடையவன் பயனற்றவன்.

“குலனுங் குடிமையுங் கல்லாமைக் கீழ்ச்சாம்”

குடிப்பிறப்பும் அக்குடிக்குரிய ஒழுக்கமும் கல்லாமையின்கண் கெடும்.

“கல்லா வொருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்”

கல்வியறிவில்லாத ஒருவருக்குத் தமது வாயிலிருந்து வரும் சொல்லே கேடு தருவனவாகும்.

“இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்”

கற்கும் பருவமாகிய இளமைப் பருவத்தே கல்லாமை குற்றமுடையதாகும்.

“மக்களைக் கல்லா வளர விடல்தீது”

மக்களைக் கல்லாமல் வளரும்படி விடுதல் குற்றமாகும்.

இல்வாழ்க்கை

“மனைக்குப்பாழ் வாணுத லின்மை”

வீட்டுக்குப் பாழாவது, வாள்போலும் நெற்றியையுடைய மனையாள் இல்லாமை. அதாவது, மனைவி இல்லாத வீடு பொலிவின்றி இருக்கும்.

விருந்தோம்பல்

“கன்றூட்ட நந்துங் கறவை கலம்பரப்பி
நன்றூட்ட நந்தும் விருந்து”

கன்றை உண்பிக்க மாடு பால் சுரக்கும்.  அதுபோல, இலைலை இட்டு அன்போடு உண்பிக்க விருந்தினர் மகிழ்வர்.

பெருமை

“மனைக்கு விளக்கம் மடவார், மடவார்
தமக்குத் தகைசால் புதல்வர், மனக்கினிய
காதற் புதல்வர்க்குக் கல்வியே, கல்விக்கும்
ஓதிற் புகழ்சா லுணர்வு”

வீட்டிற்குப் பெண்டிரும், பெண்டிர்க்கு அறிவறிந்த மக்களும், மக்களுக்குக் கல்வியும், அக்கல்விக்கு உணர்வும் பெருமை தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக