கசடறக்
கற்ற கல்வியின் மேன்மையை ஆய்வுகளாகவும், எண்ண உறுத்தல்களைப் படைப்புகளாகவும் ஒருசேரச்
செய்து வந்த பெருமக்கள் ஒரு சிலரே ஆவர். அவர்களுள்
சரவணப்பெருமாளையர், த. சிவக்கொழுந்து தேசிகர், ஆறுமுக நாவலர், வடலூர் இராமலிங்க அடிகள்,
மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்களுள் ஒருவராக வைத்துப் போற்றத்தக்கவரே பேராசிரியர்
ச. வையாபுரிப்பிள்ளை.
வையாபுரிப்
பிள்ளையவர்கள் 'கட்டுரைகள் வரைந்திருப்பதோடு, ஆராய்ச்சிகள் செய்திருப்பதோடு, கவிதைகளும்
இயற்றியுள்ளார்; கதையும் எழுதியுள்ளார்' என்பார் மா.சு. சம்பந்தன் (அச்சும் பதிப்பு,
ப.407). வையாபுரியாரின் ஒன்பது சிறுகதைகளும்
ஒரு நாவலும் அவரின் எண்ணத்தையும் வளர்ச்சி நிலையையும் காட்டும் கருக்கோலாக இருக்கின்றன. வையாபுரியாரின் சிறுகதைகள் 'பாலையா' என்ற புனைபெயரில்
வெளிவந்திருக்கின்றன.
"சிறந்த
புதினத்திற்கு இன்றியமையாத உறுப்புக்களாக சூழ்ச்சி அல்லது சதி, பாத்திரங்கள், உரையாடல்,
காலம், இடம், நடை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ காட்டப்பெற்றுள்ள வாழ்க்கைத் தத்துவம்
என்பனவற்றைக் கூறலாம். இவை அனைத்தும் ஒரே அளவாகவோ
அனைத்துமோ இருந்து தீரல் வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. ஒவ்வொன்றும் மிக்கும் குறைந்தும் இருப்பினும் தவறு
இல்லை" (அ.ச. ஞானசம்பந்தம், இலக்கியக்கலை, ப.346). வையாபுரிப்பிள்ளையவர்களின் பத்து கதைகளிலும் சூழ்ச்சி
அல்லது சதி தவிர்த்த மேற்கூறிய அனைத்தும் வெளிப்படையாகவே அமைந்திருத்தலைக் காணமுடிகிறது.
காதல்
கொள்கை
"ஆணும்
பெண்ணுமாய்க் கூடி வாழும் வாழ்வுக்கு அடிப்படையாய் இருப்பது காதலும் காமமுமே. எல்லாக் காலத்து இலக்கியங்களிலும் எல்லா நாட்டு
இலக்கியங்களிலும் இவ்விரண்டும் அளவுக்கதிகமாகவே பேசப்பட்டு வந்துள்ளன" (விடுதலைக்கு
முன் புதிய தமிழ்ச் சிறுகதைகள், ப.100). வையாபுரிப்
பிள்ளையவர்களின் காதல் உறவினர், தெரிந்தவர், அறிமுகமானவர் என்ற முறையிலேயே வளர்ந்துள்ளது. மேலும், அவரின் கதைகளில் காமமும் இடம்பெற்றுள்ளது. இளம்பருவ வேட்கை காரணமாக எழும் இளம்பருவக் காதல்
அனுபவங்களை மணிமுடி மாளிகையில் சீனிவாசன் - ரங்கநாயகி ஆகியோர்க்கிடையேயும், ராமுவின்
சுய சரிதத்தில் இராமஸ்சுவாமி - பத்மாவுக்கிடையேயும் காட்டுகின்றார்.
வேட்கைக்கு
முக்கியத்துவம் கொடுக்காமல் அன்பு ஒன்றே காதலின் அடிப்படை என்பதை பேசாமடந்தையில் கோபு
- சுகுணா காதலையும், ஓர் இரவில் சோமு - பங்கஜத்தின் காதலையும், பாலகோபாலன் வழக்கில்
பாலகோபாலன் - சுந்தரி காதலையும், ராஜியில் நாராயணசாமி - ராஜி மற்றும் வரதராஜ அய்யங்கார்
- ருக்கு ஆகியோரின் காதலையும் குறிப்பிடுகின்றார்.
பொருந்தாக்
காதலை (காமத்திற்பாற்பட்ட) உதிர்ந்த மலரில் சதக்அலி - சுரைதா மீது கொண்ட காதலை - காமத்தைக்
குறிப்பிகின்றார். எவ்வகைப்பட்ட காதலாயினும்
வெற்றியைப் பெறுதல் வேண்டும் என்னும் வையாபுரியாரின் காதற்கொள்கை தெளிவாகத் தெரிகிறது.
புரட்சிப்பெண்
அடக்கு
முறையில் வெளிப்பாடும் மனவேதனையின் எல்லைக் கோடுமே புரட்சி. வையாபுரிப் பிள்ளையவர்களின் புரட்சிப்பெண் பாரதி, பாரதிதாசன் படைத்த புதுமைப் பெண்ணைப் போல் முழுவதும்
மாறி வெளியுலகிற்கு வரவில்லை. தன் மனதுக்குள்ளேயே
குமுறிக் குழம்பிக் கொண்டிருக்கும் வேதனையை அவ்வப்போது திடீரென்று வெளிப்படுத்தும்
நிலையிலேயே இருக்கிறார்கள். அதைவிட்டு வெளியுலகிற்கு
வர மறுத்து அடங்கி ஒடுங்குகின்றனர்.
அறுபது
வயதான சதக்அலி சுரைதாவை மூன்றாவது மனைவியாக்கித் தன் வேட்கையைத் தணித்துக்கொள்ள விரும்புகிறார். சுரைதாவின் தந்தை பணத்துக்கு மயங்கி சதக்அலிக்குத்
தன் ஒரே மகளை மணம்முடிக்க வாக்குத் தருகிறார்.
இதைக் கேள்விப்பட்ட சுரைதா, "சதக்அலி பெரிய தனவந்தராகவும் புத்திசாலியாகவும்
இருக்கலாம். ஆனால் அவர் எனக்குத் தாத்தா அல்லவா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! குழந்தையாகிய நான்
எப்படி அறுபது வயது கிழவரைக் கலியாணம் செய்து கொள்வது?" (உதிர்ந்த மலர், ப.56)
என்று இந்தப் பேச்சோடு நின்றுவிட்டு பின் சதக்அலியின் வஞ்சகக் செயலால் சுரைதாவின் காதலன்
மாளும் போது அவ்விடத்திலேயே சுரைதாவும் தன் உயிரை மாய்த்துக்கொள்கிறாள். எந்தவொரு புரட்சியையும் தன்னந்தனியாகவும் அமைதியாகவுமே
செயல்படுத்தவேண்டும் என்னும் காந்திய சிந்தனையில் ஆசிரியர் மூழ்கியவராகக் காணப்படுகிறார்.
பெண்களைப்
பற்றிய எண்ணம்
'ஆவதும்
பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே' என்ற கூற்றை மெய்ப்பிக்கிறார் வையாபுரியார். பேசாமடந்தையில் சுகுணா கோபுவை உருவாக்குகிறாள். சந்திரா பழி வாங்கியதில் சந்திரா மதுரை நகரையே எரித்து
சாம்பலாக்குகிறாள். பெரும்பாலான பெண் மாந்தர்கள்
அனைவரும் தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டை பேணிக்காப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு சில மாந்தர்களின் வாயிலாக காலவோட்டத்தின் பின்னணியில்
சமூகம் எவ்வாறு மாறுபாடு அடைந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டத் தவரவில்லை. காலமாறுபாட்டிற்கு ஏற்றவாறு பெண்கள் சமுதாயத்தில்
ஏற்பட்ட பாதிப்பையும் ஆங்காங்குச் சுட்டித் தமிழர்தம் பண்பாட்டை மறந்த நிலையையும் சுட்டிக்காட்டுகிறார்.
மனித
உள்ளுணர்வு
மனிதனுடைய
உள்ளுணர்வு எப்போதும் இயங்கிக்கொண்டே இருப்பதில்லை. ஏதாவதொன்றின் தூண்டுதலே அதன் இயக்கத்திற்கு அடிப்படைக்
காரணமாக அமையும். தன்னால் ஆவது ஒன்றுமில்லை;
எல்லாம் இறைவன் செயலே என்று விட்டுவிடாமல், முயற்சி செய்தால் எல்லாம் வல்ல இறைவனையும்
காணலாம் என்னும் குறிக்கோள் கொண்டிருத்தல் ஒவ்வொருவரின் கடமையாகும். வையாபுரியார் கோபுவின் உள்ளுணர்வை சுகுணாவின் மூலம்
தட்டி எழுப்புகிறார். அறிவுள்ள கோபு பேச்சாற்றல்
அற்றிருப்பதைச் சுகுணா அறிந்து, கோபுவைத் தூண்டுகிறாள். பின்னர் கோபு 'பிரசங்கமாரி' என்னும் பட்டம் பெறும்
அளவிற்குத் தன்னுடைய பேச்சாற்றலை வளர்த்துக்கொள்கிறான். மனிதனுடைய உள்ளுணர்வு வெளிப்படும் போதுதான் அவனுடைய
உண்மையான ஆற்றலும் திறனும் வெளிப்படும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
விருந்தோம்பல்
பன்நெடுங்காலமாகத்
தமிழர்களின் தனிச்சிறப்புப் பெற்றது விருந்தோம்பல். இவ்விருந்தோம்பல் இலக்கியங்களிலும் முறையாகச் சொல்லப்பட்டு
வருகிறது. உற்றார் உறவினர் என்ற வேறுபாடின்றி
விருந்தோம்புதல் என்பது தமிழருக்கு உரிய தனிச் சிறப்பம்சமாகும். பேராசிரியர் வையாபுரியார் தம்முடைய படைப்புகளில்
விருந்தாம்பல் தன்மையை மிகத் தெளிவாக, பரவலாக எடுத்துச் சொல்லிச் செல்கிறார்.
மணிமுடி
மாளிகையில் இராமநாதன் மற்றும் இரங்கநாயகிக்கு விலாசாட்சியும், விசாலாட்சிக்கு இராமநாதனும்,
இராமநாதன் இரங்கநாயகி மற்றும் சீனிவாசனுக்கு ஜலஜாவின் தந்தை கொடுக்கும் விருந்தும்; ராஜியில் சௌந்தரத்தம்மா மற்றும் நாராயணசாமிக்கு
இராமையர் கொடுக்கும் விருந்துகளும், நாராயணசாமி கோபாலையங்கார் குடும்பத்துக்குக் கொடுக்கும்
விருந்தும்; நாராயணசாமிக்குக் கோபால அய்யங்கார், உறர்ட்டி, வரதராஜ அய்யங்கார் போன்றோர்
கொடுக்கும் விருந்துகளும் விருந்தோம்புதல் முறையைச் சுட்டுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது பேராசிரியர் வையாபுரிப்
பிள்ளையவர்கள் விருந்தோம்புதலைப் பாராட்டி வந்துள்ளார் என்பது தெளிவாகிறது.
இதுபோன்ற
கருத்துகள் ஒத்தும் மாறுபட்டும் இருக்கக் காணலாம். காலவோட்டம் எவ்வளவு வேகமாக ஓடுகிறதோ அதற்குத் தக்கவாறு
மனிதனுடைய உணர்வும் எண்ணங்களும் மாறுபடும்.
இக்கதை சிலப்பதிகாரக் கதைக்கருவைக் கொண்டிருந்தாலும் வளர்ந்து வரும் சமுதாய
மாற்றத்தில் இக்கதைப் பின்னலும் அதன் பின்னணியும் மாறுபட்டு, சமுதாய வளர்ச்சிக்குத்
தக்கவாறு அமைக்கப்பட்டுள்ளது எனலாம்.
முடிவுரை
வையாபுரிப்பிள்ளை
அவர்கள் பத்துக் கதைகள் எழுதப்பட்டிருந்தும் சமூகத்தையோ சமுதாயத்தையோ எண்ணிப் பார்த்ததாகத்
தெரியவில்லை. பெரும்பாலான கதைகள் காதல் வேட்கை
சார்புடையதாகவும் காதல் உணர்ச்சியைத் தூண்டக் கூடியதாகவும் அமைக்கப்பெற்றுள்ளன. ஒரு அடிப்படை நிலை எழுத்தாளர் எழுதக்கூடிய சாதாரண
கதைக்கருவைக் கொண்டே கதை பின்னப்பட்டுள்ளது.
தம் கதைகளில் கொள்கை உடையவர்களைக் காட்டத் தவரவில்லை. என்றாலும், இறுதியில் அவர்களையும் வழுவாக்கிவிடுகிறார். இவற்றையெல்லாம் உற்று நோக்கும் போது வையாபுரியார்
அவர்கள் கதாசிரியர் என்ற அளவில் பெரிய வெற்றி பெற்றார் என்று சொல்வதற்கில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக