புதன், 21 நவம்பர், 2018

வையாபுரிப்பிள்ளையின் படைப்பிலக்கிய அமைப்பு



            கசடறக் கற்ற கல்வியின் மேன்மையை ஆய்வுகளாகவும், எண்ண உறுத்தல்களைப் படைப்புகளாகவும் ஒருசேரச் செய்து வந்த பெருமக்கள் ஒரு சிலரே ஆவர்.  அவர்களுள் சரவணப்பெருமாளையர், த. சிவக்கொழுந்து தேசிகர், ஆறுமுக நாவலர், வடலூர் இராமலிங்க அடிகள், மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.  இவர்களுள் ஒருவராக வைத்துப் போற்றத்தக்கவரே பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை.
            வையாபுரிப் பிள்ளையவர்கள் 'கட்டுரைகள் வரைந்திருப்பதோடு, ஆராய்ச்சிகள் செய்திருப்பதோடு, கவிதைகளும் இயற்றியுள்ளார்; கதையும் எழுதியுள்ளார்' என்பார் மா.சு. சம்பந்தன் (அச்சும் பதிப்பு, ப.407).  வையாபுரியாரின் ஒன்பது சிறுகதைகளும் ஒரு நாவலும் அவரின் எண்ணத்தையும் வளர்ச்சி நிலையையும் காட்டும் கருக்கோலாக இருக்கின்றன.  வையாபுரியாரின் சிறுகதைகள் 'பாலையா' என்ற புனைபெயரில் வெளிவந்திருக்கின்றன.
            "சிறந்த புதினத்திற்கு இன்றியமையாத உறுப்புக்களாக சூழ்ச்சி அல்லது சதி, பாத்திரங்கள், உரையாடல், காலம், இடம், நடை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ காட்டப்பெற்றுள்ள வாழ்க்கைத் தத்துவம் என்பனவற்றைக் கூறலாம்.  இவை அனைத்தும் ஒரே அளவாகவோ அனைத்துமோ இருந்து தீரல் வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை.  ஒவ்வொன்றும் மிக்கும் குறைந்தும் இருப்பினும் தவறு இல்லை" (அ.ச. ஞானசம்பந்தம், இலக்கியக்கலை, ப.346).  வையாபுரிப்பிள்ளையவர்களின் பத்து கதைகளிலும் சூழ்ச்சி அல்லது சதி தவிர்த்த மேற்கூறிய அனைத்தும் வெளிப்படையாகவே அமைந்திருத்தலைக் காணமுடிகிறது.
வகைப்பாடு
            படைப்புகளை, கதையின் கருப்பொருளை மையமாகக் கொண்டும், மாந்தர்களின் பண்பு நலன்களை மையமாகக் கொண்டும், ஆசிரியரின் நடை கொண்டும், சமுதாய சரித்திர அமைப்பு கொண்டும் எனப் பலவாறு வகைப்படுத்தலாம்.  ஆனால் இவ்வகைப்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டு அமைந்துள்ளது வையாபுரிப் பிள்ளையின் கதைகள்.  இவரின் கதைகளை மூன்று நிலைகளில் வகைப்படுத்தலாம்.
                        1.  தன் கதை
                        2.  தழுவல் கதை
                        3.  பதிப்புக் கதை
என அவை அமையும்.  தன் கதையாக பேசா மடந்தை, ஓர் இரவு ஆகிய சிறுகதைகளையும் ராஜி என்னும் நாவலையும்; தழுவல் கதையாக சுசீலை, உதிர்ந்த மலர், சந்திரா பழி வாங்கியது, மத்தளக்காரன் மற்றும் பாலகோபாலன் வழக்கு ஆகிய சிறுகதைகளையும்; பதிப்புக் கதைகளாக மணிமுடி மாளிகை, ராமுவின் சுயசரிதம் ஆகிய சிறுகதைகளையும்  இவ்வகைகளுக்குள் அடக்கலாம்.
            தழுவல் கதையாக இருந்தாலும் பதிப்புக் கதையாக இருந்தாலும் அவைகள் தன்கதையில் இருந்து வேறுபடுத்திக் காட்டவும் ஆய்வு நெறிமுறையில் ஊன்றிய தன்மையை வெளிப்படுத்தவும் பிறரின் கருத்தைப் பிறருடையதாகவே காட்டவும் வையாபுரியார் ஒருபொழுதும் தவறியதில்லை.  கதை தொடங்குவதற்கு முன்னதாகவோ இறுதியிலோ கதையின் தொடக்கப் பக்க அடிப்பகுதியிலோ தழுவல் அல்லது பதிப்பு பற்றிய குறிப்பு காணமுடிகிறது.
            தழுவல் கதையாக அமைந்த 'சந்திரா பழி வாங்கியது' என்னும் சிறுகதை தென்தமிழ் நாட்டுப்புற மக்களால் வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வரும் நாட்டுப்புறக் கதையாகும்.  இக்கதையை வையாபுரியார் அவர்கள் ஆங்கிலக் கதையாசிரியர் எம்.பிரேரே அவர்களின் 'தக்காணத்துப் பண்டை நாட்கள்' என்று பொருள்படக் கூடிய நூலில் உள்ள கதையைப் படித்திருக்கிறார்.  தாம் ஆங்கில நூலில் படித்த கதையும் தென்தமிழ்நாட்டில் நாட்டுப்புறக் கதையும் ஒத்திருப்பதைக் கண்டு இக்கதையைத் தழுவல் கதையாக உருவாக்கி இருக்கலாம் என்று துணிய எண்ணமிடும்.
நடை அமைப்பு
            எந்தவொரு இலக்கியமானாலும் அதற்கென ஒரு நடையைப் படைப்பாளன் உருவாக்கிக் கொள்ளவேண்டும்.  இந்நடை படைப்பாளருக்கு இயல்பாக வரக்கூடியவை.  ஒருவரின் நடையே அவரின் இலக்கியச் செழிப்பிற்கு வித்திட்டதாக அமையும் சிறப்புடைத்து எனலாம்.  பேரா. வையாபுரிப் பிள்ளையவர்களின் நடையில் கட்டுரை மணம் கமழ்கிறது எனலாம்.  இன்றைய சிறுகதை மற்றும் நாவலாசிரியர்கள் பெரும்பாலான வழக்குச் சொற்களைத் தம் நடைக்குப் பயன்படுத்துகின்றனர்.  அவ்வகைக் கதைகள் வட்டார வழக்குத் தொடர்புடைய கதைகளாக மிளிர்கின்றன.  ஆனால் இவரின் கதைகளை அவ்வகைகளுக்கு உட்படுத்த முடியவில்லை.  இவரின் நடையில் கட்டுரைப் போக்கு இருந்தாலும் சிற்சில இடங்களில் பாத்திரங்களை உரையாட விடும்போது நாடகநிலை வெளிப்படுவதைக் காணமுடிகிறது.
"சுசீலை                                  -  யார் காத்திருக்கிறார்கள்?
அம்மணியம்மாள்                 -  யார்! இராமநாதன்.
                                                சுசீலையின் அடிவயிற்றில் நெருப்பைக் கொண்டினது
                                                போல் இருந்தது.
அம்மணியம்மாள்     -  சுந்தரி என் அண்ணாவின் குழந்தை.  இராமநாதனும்
                                       சுந்தரியும் சிறு குழந்தைகளாயிருக்கும் பொழுதே
                                       இணைபுரியாத தோழர்களா யிருந்தார்கள். 
                                       ஒருவருக்கொருவர் மிகுந்த அன்பு பாராட்டி வந்தார்கள்.
                                       இதைக்கண்டு இவருடைய பெற்றோர்களும் இருவரையும்
                                       மணமுடித்துவிட வேண்டுமென்று தீர்மானித்து விட்டார்கள்.
                                       ஆனால் சௌகரியம் வாய்க்கவில்லை; என் அண்ணா தூர
                                       தேசங்களிலே வேலையா யிருந்தார்.  இப்போதுதான்
                                       வருகிறார்" (சுசீலை, பக்.26-27)
இதுபோன்ற அமைப்பு ராஜி, சுசீலை, பேசாமடந்தை, பாலகோபாலன் வழக்கு போன்ற கதைகளிலும் காணமுடிகிறது.
            கதைமாந்தர் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் பாங்கு இவரின் நடை உத்தியில் சிறந்ததாகக் கருதலாம்.  தலைவியின் கூற்றாக வெளிப்படும் கதையில் தலைவியை இன்னாரென்று அறியாத தலைவன் தன் கூற்றாக்கும் காட்சி ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.  "ரங்கா, உன் மறுமொழியில் தான் என் உயிர் இருக்கிறது.  நீ இன்னாரென்று எனக்குத் தெரியும்.  திருவனந்தபுரத்திற்கு ஒருமுறை உன்னைப் பார்ப்பதற்கென்றே வந்தேன்.  என் தகப்பனார் அப்போது உயிரோடிருந்தார்.  உங்கள் வீட்டுக்குப் போகக்கூடாது என்பது அவருடைய கடுமையான உத்தரவு.  அவ்வுத்தரவுக்குப் பங்கம் வராமல் உன்னைப் பார்த்துத் திரும்பினேன்.  நான்கு வருஷம் ஆய்விட்டது . . . .   நான் பார்த்தது முதல் உன் முகத்தை என் மனத்திலே பிரதிஷ்டை செய்துவிட்டேன்.  என்னை உனக்குத் தெரியக் காரணமில்லை.  உன் அப்பாவோடு உடன் பிறந்த அத்தையொருத்தி உண்டென்று கேள்விப்பட்டு இருப்பாயோ என்னவோ தெரியாது.  நான் அவளுடைய ஏக புத்திரன்தான்' என்று கூறி என்னை நோக்கிக் கொண்டே நடந்தார்" (சிறுகதை மஞ்சரி, மணிமுடி மாளிகை, ப.13).  இதுபோன்ற நடை உத்தி - கூற்று மாற்றிச் சொல்லும் நடை உத்தி சில உள்ளதைக் காணமுடிகிறது.
சொல்லமைப்பு
            இக்கால இலக்கியத்திற்கு எப்படி நடையமைப்பு சிறந்திருக்கவேண்டுமோ அதே அளவிற்கு சொல்லமைப்பும் அமைந்திருத்தல் வேண்டும்.  வையாபுரிப் பிள்ளையவர்கள் இலக்கியத்தின் பாற்கொண்ட பெரும் ஈடுபாட்டின் காரணமாகவோ என்னவோ உலக வழக்குச் சொற்களைப் பெரிதும் கையாளாமல் செய்யுள் வழக்கின் இயல்பான சொற்களையே மொழிக்கலப்புடன் கையாண்டுள்ளார் எனலாம்.  இன்றைய எழுத்தாளர்களின் சொல்லமைப்பைப் பார்க்கும் போது இவர் அவர்களில் இருந்து மாறுபட்டு தனித்து நிற்கிறார்.  வையாபுரியாரின் சொல்லமைப்பில் வடமொழி மற்றும் ஆங்கிலச் சொற்களின் தாக்கம் பெரும்பாலும் காணமுடிகிறது.  "அப்பாவின் நண்பரொருவர் வந்து ஸ்டேஷனில் எங்களைச் சந்தித்தார்.  எங்கள் ஜாகைக்கு அழைத்துச் சென்றார்.  எங்களுக்கு வேண்டிய சௌகரியங்களை எல்லாம் ஏற்கனவே செய்திருந்தார்" (மணிமுடி மாளிகை, ப.3).  இந்தத் தொடரில் ஆங்கிலம் மற்றும் வடமொழிச் சொற்கள் கலந்து வந்துள்ளமை புலப்படும்.  மேலும், 'கீச்கீச்', 'திக்திக்', 'விறுவிறு', 'ஆ!', 'ஆஉறா!', 'கிரீச்' போன்ற உணர்வுச் சொற்களையும் சிற்சில இடங்களில் கையாண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கதை சொல்லும் முறை
            கதை சொல்லுதல் என்பது ஒவ்வொருவருக்கும் கை வந்த கலையாக அன்று முதல் இன்று வரை இருந்து வருகின்றது.  கதையில் நல்ல கருப்பொளும் அதை நடைபோட்டுச் செல்ல கதைமாந்தர்கள் நல்ல பண்பு உள்ளவர்களாகவும் இருந்தால் மட்டும் போதாது.  சுவைஞர் மனதில் கதை பதியும்  அளவுக்குக் கதை சொல்லும் முறை அமைந்திருக்க வேண்டும்.  பெரும்பாலான கதைகள் ஆசிரியர் வெளியில் இருந்துகொண்டும் கதைக்குள்  இருந்துகொண்டும் தானே ஒரு மாந்தராகக் கருதிக்கொண்டும் கதையைச் சொல்லுதல் என்பது ஒரு சிறந்த உத்தி.  இதனால் அவரின் (ஆசிரியர்) எண்ணத்தை முழுமையாக கதையின் மூலம் வெயியுலகுக்குக் காட்டமுடியும்.  இந்த முறையை ஆசிரியர் கூற்று என்கின்றோம்.  கதையை நடத்திச் செல்லும் முதன்மைக் கதைமாந்தர்களோ துணைக்கதைமாந்தர்களோ கூடக் கதையைச் சொல்லலாம்.  இந்த முறையை கதைமாந்தர் கூற்று என்கிறோம்.  பேராசிரியர் வையாபுரிப் பிள்ளைவர்களின் கதைகளை உற்று நோக்கும் போது பெரும்பான்மை ஆசிரியர் கூற்றாகவும் சிறுபான்மை கதைமாந்தர் கூற்றாகவும் அமைந்திருப்பதைக் காணமுடியும்.  ராஜி, பாலகோபாலன் வழக்கு, மத்தளக்காரன், சந்திரா பழி வாங்கியது, பேசாமடந்தை, உதிர்ந்த மலர், ராமுவின் சுயசரிதம், சுசீலை போன்ற கதைகள் ஆசிரியர் கூற்றாகவும்; மணிமுடி மாளிகை, ஓர் இரவு போன்ற கதைகள் கதைமாந்தர் கூற்றாகவும் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. 
முடிவுரை
            பேராசிரியர் வையாபுரிப்பிளிளை அவர்கள் பத்து கதைகள் எழுதப்பட்டிருந்தும் சமூகத்தையோ சமுதாயத்தையோ எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை.  பெரும்பாலான கதைகள் காதல் வேட்கை சார்புடையதாகவும் காதல் உணர்ச்சியைத் தூண்டக் கூடியதாகவும் அமைக்கப்பெற்றுள்ளன.  ஒரு அடிப்படை நிலை எழுத்தாளர் எழுதக்கூடிய சாதாரண கதைக்கருவைக் கொண்டே கதை பின்னப்பட்டுள்ளது எனலாம். 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக