பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் பல்வேறு வகையான பா வடிவங்கள் பழையனவும் புதியனவுமாக அமைந்திருக்கின்றன. ஆனந்தக் களிப்பு, காவடிச் சிந்து, சிந்து, கண்ணி, கும்மி, தாலாட்டு, நொண்டிச் சிந்து, சிந்துக்கண்ணி போன்ற சிற்றிலக்கிய வடிவங்களையும் பல புதிய இசைப்பாட்டு மெட்டுக்களையும் தம்முடைய பாடல்களில் அமைத்துப் பாடியவர் பாவேந்தர். அவர்தம் பாடல்களில் பழைய பா வகைகளையும் பல்வேறு இடங்களில் அமைத்துக் காட்டியிருக்கின்றார். இப் பாடல்களில் அமைந்த பா வகைகளைப் பற்றியும் அவ்வவற்றின் இனங்களைப் பற்றியும் இங்குக் காணலாம்.
1. பா வகைகள்
ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா எனப் பா நான்கு வகைப்படும். ஆசிரியப்பா - நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா என நான்காகவும்; வஞ்சிப்பா - இன்னியற் வஞ்சிப்பா, குறளடி வஞ்சிப்பா, விரவியற் வஞ்சிப்பா, இன்னியற் சிந்தடி வஞ்சிப்பா, விரவியற் சிந்தடி வஞ்சிப்பா என நான்காகவும்; வெண்பா - குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா என ஐந்தாகவும்; கலிப்பா - ஒத்தாழிசைச் கலிப்பா, கலிவெண்பா, கொச்சகக் கலிப்பா, உறழ்கலிப்பா என நான்காகவும் பிரிக்கப்பெற்றிருக்கின்றன.
இவ்வாறமைந்த பா வகைகளில் பாரதிதாசன் அவர்கள் நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, பஃறொடை வெண்பா, கலி வெண்பா, கொச்சகக் கலிப்பா ஆகிய பா வகைகளில் தம்முடைய பாடல்களை அமைத்திருக்கின்றார்.
அ. நேரிசை ஆசிரியப்பா
ஈற்றயலடி மட்டும் முச்சீராக அமைந்த பாடல் 'நேரிசை ஆசிரியம்' ஆகும். இது கீழெல்லை 3 அடியாகவும் மேலெல்லை 1000 அடியாகவும் கொண்டது என்பர். ஆனால் வள்ளல்பெருமானின் 'அருட்பெருஞ்ஜோதி அகவல்' 1594 அடிகள் கொண்ட இலக்கியமாக இன்று விளங்குவதைக் காணும்போது இதன் அடி வரையறை மீறப்பட்டது தெரிகின்றது. பாவேந்தர் அவர்கள் தன்மான உலகு, புரட்சிக்கவி, வீரத்தாய், சிரித்தமுல்லை, தமிழ்க்கனவு, மூடத்திருமணம், உலகம் உன்னுடையது, வியற்வைக்கடல், எமனை எலி விழுங்கிற்று, சுதந்திரம், பெற்றோர் இன்பம், திருமணம், கருத்துரைப்பாட்டு-தலைவன் கூற்று & தலைவி கூற்று, சிறுத்தையே வெளியில் வா, தீவாளியா?, அறம் செய்க, குழந்தை, தொழில், குழந்தைப் பள்ளிக்கூடம் தேவை, குடியானவன், இசைபெறு திருக்குறள், கடற்மேற்குமிழிகள், அன்பன் வந்தால் அப்படி, நாட்டியல் நாட்டுவோம், தோழனே!, உன்னிடம் சொல்வேன், புத்தர் புகன்றார், இது...கலை, கடன்பட உடன்படேல், நிலையானது புகழ் ஒன்றே, சாவதற்கு மருந்து உண்டோ, மாணவர் ஒற்றுமை, குரங்கிலிருந்து மனிதனா? வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும், முனையிலே முகத்து நில், வாழ்க திராவிடம் போன்ற தலைப்புகளில் நேரிசை ஆசிரியப்பாவைத் தந்திருக்கின்றார். காட்டாக,
"படைமறவர் உண்டார், படுக்கை சார்ந்தார்
இடைவாளம் ஈந்த அமுதுபோல் ஒருகுரல்
காதிற் புகுந்தது மறவர்
யாதெனக் கருத்தில் ஏற்கலா யினரே" (கடற்மேற் குமிழிகள்,காட்சி.17)
என்பதைக் குறிப்பிடலாம்.
ஆ. இணைக்குறள் ஆசிரியப்பா
முதலடியும் இறுதியடியும் நாற்சீரடியாகவும் இடையில் வருவன இருசீரடி, முச்சீரடி முதலியனவாகவும் அமைதல் இணைக்குறள் ஆசிரியப்பா ஆகும். பாவேந்தர் அவர்கள் புதுநெறி காட்டிய புலவன், இனப்பெயர், கடற்மேற் குமிழிகள், அகத்தியன் விட்ட புதுக்கரடி, நல்லமுத்துக் கதை, புரட்சித் திருமணத் திட்டம், மகளே வாழ்க, ஏன் நரைக்கவில்லை போன்ற தலைப்புகளில் இணைக்குறள் ஆசிரியப்பாவைத் தந்திருக்கின்றார்.
இ. நிலைமண்டில ஆசிரியப்பா
எல்லா அடிகளும் அளவடியினதாய் வருவன நிலைமண்டில ஆசிரியப்பா ஆகும். பாவேந்தர் அவர்கள் வீரத்தாய், மயில், குழந்தை மணத்தின் கொடுமை, பாரததேவி வாழ்த்து போன்ற தலைப்புகளில் நிலைமண்டில ஆசிரியப்பாவைத் தந்திருக்கின்றார். காட்டாக,
"பொன்னிறக் கதிர்வினை நன்செயிற் புத்தொளி
வடிவமர் அன்னாய், நின்னெழில் வாழ்க!
கணுவகல் கரும்பின் இனியநற் சாறும்!
கதலியும் செந்நெலும் உடையைநீ வாழ்க!
தென்றலின் குளிரும் தேன்சுவைப் பழமும்
நன்றியல் சோலை நலத்தினாய் வாழ்க!
வானுயர் பனிமலை வண்புனர் கங்கையென்
றுலகெலாம் உரைக்கும் பெரும்புகழ் உடையைநீ
முப்பது கோடியர் முனிவராய் வீரராய்ப்
பெற்றிடும் தேவிநீ வீறுகொள் பெற்றியாய்,
கலிப்பகை வென்றே தலைநிமிர் குன்றனாய்,
கடையுகம் முற்றினும் திறல்கெடாக் காளிநீ
அறமெனும் வயிரக் குலிசத் தோளுடை
அன்னைநீ வாழ்க! அன்னைநீ வாழ்கவே!"
என்னும் பாரததேவி வாழ்த்துப் பாடல் அமைந்திருப்பதைக் காணலாம்.
ஈ. குறள் வெண்பா
"குறுவெண் பாட்டிற் களவேழ் சீரே" (தொல். பொருள். செய். நூ.151:2)
"ஈரடி வெண்பாக் குறள்" (யாப்பருங்கலக் காரிகை,23)
எனக் குறள் வெண்பாவிற்கு இலக்கணம் சுட்டுகின்றனர். இந்நூற்பாக்களின் படி குறள் வெண்பாவானது ஈரடியில் ஏழுசீர் கொண்டு அமையும் என்பது தெரிகின்றது. பாவேந்தர் அவர்கள் தம்முடைய 'வீரத்தாய்'க் காவியத்தில் இரண்டு குறள் வெண்பாக்களைத் தந்திருக்கின்றார். இவ்விரண்டு குறள் வெண்பாக்களும் 'சேனாபதி' கூற்றாக இக்காவியத்தில் இடம்பெற்று இருக்கின்றன. அவை,
"அவ்விதமே யாகட்டும் ஐயன்மீர்! போசனத்தைச்
செவ்வையுற நீர்முடிப்பீர் சென்று"
எனவும்,
"இன்னலெலாம் நேர்க! இனியஞ்சப் போவதில்லை
மன்னன்மக னைப்பார்ப்போம் வா"
எனவும் அமைந்திருப்பதைக் காணலாம்.
உ. சிந்தியல் வெண்பா
சிந்தியல் வெண்பாவை யாப்பருங்கலம் 'சிந்து' என்றும், யாப்பருங்கலக் காரிகை 'சிந்தியல்' என்றும் குறிப்பிடுவதைக் காணமுடிகின்றது. இதனை நேரிசைச் சிந்தியல், இன்னிசைச் சிந்தியல் என மேலும் இரண்டாகப் பகுத்துக் காண்பர். பாவேந்தர் அவர்கள் நேரிசைச் சிந்தியல் வெண்பாவை 'வந்தே மாதரம்' என்ற தலைப்பில் பாரததேவி வாழ்த்தாக அமைத்திருக்கின்றார். அப்பாடல் பின்வருமாறு:-
"சொல்வாய்ந்த பாரதத்தைத் தோளில் அறங்காக்க
வில்லாய்ந்த என்றன் விறல்நாட்டைக் - கல்லாய்ந்த
மண்ணிலுமமர்ந் தாளென்று வாழ்த்து"
என அமைந்திருப்பதைக் காணலாம்.
ஊ. நேரிசை வெண்பா
நான்கடி கொண்டு, இரண்டாம் அடியின் இறுதிச்சீர் தனிச்சொல் பெற்று, ஒரு விகற்பத்தானும் இரு விகற்பத்தானும் அமைவது நேரிசை வெண்பா ஆகும். தனிச் சொல்லால் இணைக்கப்பெற்ற இரண்டு குறள்நேரிசை வெண்பாக்களால் ஆனது என்றும் கூறுவர். இதனால் இதனை 'இருகுறள் நேரிசை வெண்பா' என்பாரும் உண்டு. பாவேந்தர் அவர்கள் கடற்மேற் குமிழிகள் (11 பாடல்கள்), அவன் வராதபோது (5 பாடல்கள்), கதர் இராட்டினப் பாட்டு (2 பாடல்கள்), விநாயகர் காப்பு (1 பாட்டு), ஸ்ரீஷண்முகன் வண்ணப்பாட்டு (1 பாட்டு) என இருபது நேரிசை வெண்பாக்களைத் தம்முடைய பாடல்களில் அமைத்திருப்பதைக் காணலாம். காட்டாக,
"சீர்மணக்குந் தென்மயில் வெற்பிற் றிருமுருகன்
பேர்மணக்கும் பாட்டிற் பிழையகல - ஓர்மணக்கு
எத்தனப்பன் நற்களிற்றி னைப்பதத்தி னைத்துதிப்பன்
எத்தனப்ப டிக்குவெற்றி எற்கு!" (விநாயகர் காப்பு)
என்னும் பாடலைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
எ. பஃறொடை வெண்பா
"பாதம் பலவரின் பஃறொடை வெண்பா" (யாப்.62)
"துன்னும் அடிபல வாய்ச்சென்று நிகழ்வ பஃறொடையாம்" (காரிகை,26)
என்னும் நூற்பாக்களின் உரையால் நான்கடி மிக்க பன்னீரடி வரை ஒரு விகற்பத்தானும் பல விகற்பத்தானும் பாடப்பெறுவது 'பஃறொடை வெண்பா' என்பர். ஆனால் பாரதிதாசன் அவர்கள் பன்னீரடிக்கும் மேலே இவ்வகையின் அடியளவை உயர்த்திச் சென்றிருப்பதைப் பார்க்க முடிகின்றது. 'சஞ்சீவி பர்வதத்தின் சாரல்' முழுவதும் பஃறொடை வெண்பா அமைந்திருக்கின்றது. மேலும், புரட்சிக்கவி, வீரத்தாய் ஆகியவற்றுள்ளும் பஃறொடை வெண்பாவின் அடியளவு நீண்டிருப்பதைக் காணமுடிகின்றது. ஆகப், பஃறொடை வெண்பா பன்னீரடியின் அடியளவினின்று மாறுபடும் என்பதற்கு இவர்தம் பாடல்கள் பல சான்று பகர்கின்றன. இவையன்றி, கதவு பேசுமா? தேன்கவிகள் தேவை, செந்தமிழ்ப் பாட்டு, கடற்மேற் குமிழிகள், அமிழ்து எது?, புரட்சித் திருமணத் திட்டம், சிரிப்பே குத்தகைச் சீட்டு, பள்ளிக்குப் போகும் புள்ளிமான், இன்றைக்கு ஒத்திகை, பச்சைக்கிளி, அன்னைக்கு ஆடை வளர்க ஆகிய தலைப்புகளில் பஃறொடை வெண்பா அமைந்திருப்பதைக் காணலாம். காட்டாக,
"காதல் துரத்தக் கடிதுவந்த வேல்முருகன்,
ஏதும் உரையாமல் இருவிரலை வீட்டுத்
தெருக்கதவில் ஊன்றினான் 'திறந்தேன்' என்றோர்சொல்
வரக்கேட்டான். 'ஆஆ மரக்கதவும் பேசுமா?
என்ன புதுமை' எனஏங்க, மறுநொடியில்
சின்னக் கதவு திறந்து ஒலியோடு
தன்னருமைக் காதலியின் தாவுமலர்க் கைநுகர்ந்தான்!
புன்முறுவல் கண்டுள்ளம் பூரித்தான், 'என்னேடி
தட்டுமுன்பு தாழ்திறந்து விட்டாயே' என்றுரைத்தான்.
விட்டுப் பிரியாதார் மேவும்ஒரு பெண்நான்
பிரிந்தார் வரும்வரைக்கும் பேரை, தெருவில்
கருமரத்தாற் செய்த கதவு" (கதவு பேசுமா?)
என்னும் பாடலைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
ஏ. கலிவெண்பா
கலிப்பாவின் வகைகளில் ஒன்றே 'கலிவெண்பா'. இதனை வெண்கலிப்பா, கலிவெண்பா என இரண்டாகப் பிரிப்பர். அதாவது, வெண்டளையினால் வந்து ஈற்றடி மூன்று சீரினால் அமைவதைக் வெண்கலிப்பா என்றும், அயல்தளைகளும் விரவி வந்து ஈற்றடி மூன்று சீரினால் அமைவதைக் கலிவெண்பா என்றும் கூறுவர். பாரதிதாசன் பாடல்களில் வெண்டளையும் அயல்தளைகளும் விரவி வந்த 'கலிவெண்பா' ஒன்று 'கடற்மேற் குமிழிகள்' என்னும் கவிதை நாடகத்துள் இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது. அப்பாடல் பின்வருமாறு:-
"பூக்காரியின் மகளைப் பூங்காவில் நம்பிள்ளை
நோக்கிய நோக்கின் நிலையினைநான் - போய்க்கண்டேன்
கீழ்மகளைப் பிள்ளைமனம் கிட்டிற்றா? அல்லதவள்
தாழ்நிலையி லேயிரக்கம் தட்டிற்றா? - வாழ்வில்
தனக்குநிக ரில்லாத் தையல்பால் பிள்ளை
மனத்தைப் பறிகொடுக்க மாட்டான் - எனினும்,
தடுக்கு தவறும் குழந்தைபோல் காளை
துடுக்கடைந்தால் என்செய்யக் கூடும்? - வெடுக்கென்று
வையத் திறலுக்கென் அண்ணன் மகளைமணம்
செய்துவைத்தால் நல்லதெனச்' செப்பினாள் - துய்யதென்று
மன்னன் உரைத்தான்; மகனை வரவழைக்கச்
சொன்னான்; தொடர்ந்தாள் அம்மாது".
ஐ. கொச்சகக் கலிப்பா
தரவு, சுரிதகம் போன்ற உறுப்புக்கள் முதலும் முடிவுமாக வருதல் இன்றி இடையிடையே வருதல் 'கொச்சகக் கலிப்பா' ஆகும். இக்கொச்சகக் கலிப்பாவை ஐந்து வகைகளாகச் சுட்டிக் காட்டுவர் யாப்பியலார். அதாவது, தரவு தனித்து வருதல், தரவு இரட்டித்து வருதல் (தரவிணை வருதல்), சில தாழிசைகள் வருதல், பல தாழிசைகள் வருதல், கலிப்பாவிற்குச் சொல்லப்பெற்ற உறுப்புக்கள் மயங்கி வருதல் ஆகிய ஐந்து வகைகளில் கொச்சகக் கலிப்பா அமையும் என்று அவிநயனார் கூறுவார். இவ் ஐந்தில் பாரதிதாசன் அவர்கள் 'தரவிணைக் கொச்சகக் கலிப்பா' வகையைக் கையாண்டிருக்கின்றார். 'காலைப்பத்து', 'இராப் பத்து' ஆகிய இரண்டு தலைப்புகளில் அமைந்த பாடல்களில் தரவிணைக் கொச்சகத்தினைப் பாரதிதாசன் அவர்கள் கையாண்டு இருக்கின்றார். இப்பாடல்களில் இரண்டு பஃறொடை வெண்பாக்கள் தரவாக அமைந்திருக்கின்றன. அதனால் இப்பாடல்களைத் 'தரவிணைக் கொச்சகக் கலிப்பா' என்றும் கூறலாம்.
2. பாவினம்
ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பாக ஆகிய நான்கு வகைப் பாவிற்கும் முறையே மூன்று இனங்கள் (தாழிசை, துறை, விருத்தம்) அமைந்து இருக்கின்றன. அதாவது, ஆசிரியப்பாவில் ஆசிரியத்தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரியவிருத்தம் என்ற மூன்றும்; வஞ்சிப்பாவில் வஞ்சித்தாழிசை, வஞ்சித்துறை, வஞ்சிவிருத்தம் என்ற மூன்றும்; வெண்பாவில் வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம் என்ற மூன்றும்; கலிப்பாவில் கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம் என்ற மூன்றும் அமைந்திருக்கின்றன. இவ்வாறமைந்த பா இனங்களில் பாரதிதாசன் அவர்கள் ஆசிரியவிருத்தம், கலித்துறை, கலிவிருத்தம் ஆகியவற்றில் தம்முடைய பாடல்கள் சிலவற்றை அமைத்திருக்கின்றார்.
அ. ஆசிரியவிருத்தம்
ஓரடியில், நான்குசீர் பெற்று வந்தது அளவடி ஆசிரியவிருத்தம் என்றும்; ஐந்துசீர் பெற்று வந்தது நெடிலடி ஆசிரியவிருத்தம் என்றும்; அறுசீர் முதலாகப் பெற்று வருவதைக் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் என்றும் குறிப்பிடுவர். பாரதிதாசன் அவர்கள் அளவடி ஆசிரியவிருத்தம், அறுசீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம், எண்சீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம், பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம், பதினான்குசீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் ஆகியவற்றில் தம்முடைய பாடல்களை அமைத்திருக்கின்றார். "கூவாய் கருங்குயிலே" என்பதில் அளவடி ஆசிரியவிருத்தப் பாக்கள் ஏழினைக் கொடுத்திருக்கின்றார். காட்டாக,
"எங்கள் திருநாட்டில் எங்கள்நல் ஆட்சியே
பொங்கிடுக வாய்மை பொலிந்திடுக என்றேநீ
செங்கதிர் சீர்க்கையால் பொன்னள்ளிப் பூசியே
கங்குல் நிகர்த்த கருங்குயிலே கூவாயே" (கூவாய் கருங்குயிலே, பா.1)
என்னும் பாடலைக் குறிப்பிடலாம்.
வீரத்தாய், எந்நாளோ?, பத்திரிகை, யாத்திரை போகும் போது, தொழுதெழுவாள், பன்னீர் செல்வம், கடற்மேற் குமிழிகள், புரட்சித் திருமணத் திட்டம், இன்பம், பாரீஸ் விடுதலை விழா, காதற் கடிதங்கள் போன்ற தலைப்புகளில் அமைந்த பாடல்களில் சிலபல பாடல்கள் அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களாகவும்; புரட்சிக்கவி, வீரத்தாய், உதயசூரியன், எழுதாக்கவிதை, காதலைத் தீய்ந்த கட்டுப்பாடு, தமிழ் வளர்ச்சி, பெண்களைப் பற்றிப் பெர்னாட்ஷா, எழுச்சியுற்ற பெண்கள், தவிப்பதற்கோ பிள்ளை?, உலக ஒற்றுமை, மாண்டவன் மீண்டான், முன்னேறு, உலகப் பண்பாட்டு, தமிழ்நாட்டிற் சினிமா, புத்தகசாலை, வீரத்தமிழன், உன்னை விற்காதே!, தென்றல், மெய்யன்பு, மகாகவி, திருப்பள்ளி எழுச்சி, தமிழனுக்கு வீழ்ச்சியில்லை, தமிழர்களின் எழுதுகோல், கற்பனை உலகில், நாடகம் சினிமா நிலை, கடற்மேற் குமிழிகள், பேசுதற்குத் தமிழின்றிக் காதலின்பம் செல்லுமோ?, எது கவலை?, புத்தர் புகன்றார் இல்லை! , மிடிமை தீரக் கடமை புரிவீர்!, என் கருத்தில்..... தீவாளியா? போன்ற தலைப்புகளில் அமைந்த பாடல்களில் சிலபல பாடல்கள் எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களாகவும்; 'ஸ்ரீசிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம்' என்னும் தலைப்பில் அமைந்த பாடல் பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாகவும்; 'அயல்மனை விரும்பியவன் பட்டபாடு' என்னும் தலைப்பில் அமைந்த பாடல் பதினான்குசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தமாகவும் அமைந்திருப்பதைக் காணலாம்.
ஆ. கட்டளைக் கலித்துறை
ஐந்துசீர் பயின்ற அடி நான்கு வருவது 'கலித்துறை' ஆகும். கலித்துறையின் ஒவ்வோர் அடியும் எழுத்தெண்ணி அமைக்கும் நிலையில் 'கட்டளைக் கலித்துறை' எனப் பெயர் பெறுகின்றது. செய்யுளின் முதற்கண் நிரையசை வந்து ஓரடியில் பதினேழு எழுத்து அமைவதும், செய்யுளின் முதற்கண் நேரசை வந்து ஓரடியில் பதினாறு எழுத்து அமைவதும் கட்டளைக் கலித்துறையின் அமைப்பாகும். இவ் இருவகைக் கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாரதிதாசன் அவர்கள் படைத்துள்ளார். 'இருப்பினும் பொல்லா நெஞ்சினள்' என்பதில் முதற்கண் நிரையசை கொண்டு விளங்கும் நான்கு பாடல்களையும், 'வள்ளுவர் வழங்கிய முத்துக்கள்' என்பதில் முதற்கண் நேரசை கொண்டு விளங்கும் ஐந்து பாடல்களையும் அமைத்திருக்கின்றார்.
"இழையினும் மெல்லிடை யாள்;கயற் கண்ணினாள்; ஏற்றிடுசெங்
கழையினும் இன்மொழி யாள்;வள்ளைக் காதினாள்; காரிருள்செய்
மழையினும் கன்னங் கருங்குழ லாள்;என் மனம்நலிந்து
நுழையினும் ஏற்காத நெஞ்சினாள்! என்ன நுவலுவதே?" (பா.1)
என 'இருப்பினும் பொல்லா நெஞ்சின'ளில் நிரையசை கொண்டு வருவதையும்,
"தௌ¢ளு தமிழ்நடை, சின்னஞ் சிறிய இரண்டடிகள்,
அள்ளு தொறுஞ்சுவை உள்ளுந் தொறும்உணர் வாகும்வண்ணம்
கொள்ளும் அறம்,பொருள் இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவ னைப்பெற்ற தாற்பெற்ற தேபுகழ் வையகமே" (பா.1)
என 'வள்ளுவர் வழங்கிய முத்துக்கள்' என்பதில் முதற்கண் நேரசை கொண்டு வருவதையும் காணலாம்.
இ. கலிவிருத்தம்
நான்குசீர் பயின்று வரும் அளவடி நான்கினால் அமைவது 'கலிவிருத்தம்' ஆகும். பாவேந்தர் அவர்கள் 'பூசணிக்காய் மகத்துவம்' என்ற தலைப்பில் மட்டும் ஒரு பாடல் தந்திருக்கின்றார். அப்பாடல் பின்வருமாறு அமைந்திருக்கக் காணலாம்.
"மெய்வண்ண வீடுகட்ட உனைத்தொங்க விடுகின்றார்கள்;
செய்வண்ண வேலைசெய்து திருமாடம் முடிக்கின்றாய்நீ
பொய்வண்ணப் பூசணிக்காய்! கறியுனைச் செய்துண்டேன்உன்
கைவண்ணம் அங்குக்கண்டேன் கறிவண்ணம் இங்குக்கண்டேன்!"
முடிவுரை
பாவேந்தர் தம்முடைய பாடல்களில் பயன்படுத்திய பா வகைகளையும் பா இனங்களையும் உற்று நோக்கும் போது யாப்பியலில் அவருக்கிருந்த ஈடுபாடு தெற்றென விளங்குவதைக் காணமுடிகின்றது. பா வகைகளில் நேரிசை ஆசிரியப் பாவையும் பஃறொடை வெண்பாவையும் அதிக இடங்களில் பயன்படுத்தி இருக்கின்றார். பா இனங்களில் ஆசிரிய விருத்தங்களை (அறுசீர், எண்சீர்) அதிக இடங்களில் பயன்படுத்தி இருக்கின்றார். புத்திலக்கிய வகைகளிலும் புதுப்பாட்டு வகைகளிலும் ஈடுபாடு கொண்டு பாவேந்தராகப் போற்றப்பெறும் பாரதிதாசன் அவர்கள் யாப்பியலில் வல்லவராக இருந்திருக்கின்றார் என்பது தெரிகின்றது. யாப்பியலில் தேர்ச்சியில்லாத புதுக்கவிகள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை. பாவேந்தரின் புதுக்கவிகள் வெற்றிபெற்றதற்கு யாப்பியல் அறிவே ஒரு காரணம் என்று சொல்வதில் பிழையொன்றுமில்லை.
ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்
- பாரதிதாசன் கவிதைகள், பாரதிதாசன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, மறுபதிப்பு 1994.
- யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்-முதற் பாகம் பகுதி 1&2, சோ.ந. கந்தசாமி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1989.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக