ஞாயிறு, 4 நவம்பர், 2018

பழனிமலை வடிவேலர் பதிகம்

குன்றுதோராடும் குமரன் குடிகொண்டிருக்கும் தலங்களுள் திருவாவினன்குடி எனும் திருத்தலமும் ஒன்று.  ஞானப்பழத்தைப் பெறுதல் பொருட்டு நிகழ்ந்த நிகழ்வில் கோபித்த குமரப்பெருமான் வந்து தங்கவும், பிறகு ஔவைப்பிராட்டி கோபத்தைப் போக்கியதுவும் ஆகிய இத்தலமே இன்று 'பழனி' என்று வழங்கப்பெறுகின்றது. இத்தலத்தைப் பற்றியும் இத்தலத்தில் குடிகொண்டுள்ள குமரக்கடவுளைப் பற்றியும் காலங்காலமாக பல்வேறு வகையான நூல்கள் எழுந்துள்ளன.  குறிப்பாக பழநி அடைக்கலப்பத்து, பழநிவேலவர் வருகைப்பத்து, பழனி இரட்டைமணிமாலை, பழனிக்காதல், பழனிக் காவடிச் சிந்து, பழனிக்கிரியின் உச்சிவகுப்பு, பழனிக்கோவை, பழனி கலித்துறைமாலை, பழனி சந்தப்புகழ் வண்ணம், பழனி சுப்பிரமணியர் மாலை, பழனித் தலபுராணம், பழனித் திருப்புகழ், பழனித் திருவாயிரம், பழனி நொண்டி நாடகம், பழனிப்பத்து, பழனிப் பதிகங்கள், பழனிப் பதிகம், பழனிப் பன்னிருபதிகம், பழனிமலை வடிவேலர் பதிகம், பழனிப் பிள்ளைத்தமிழ், பழனிமலைக் குமரன்துதி,  பழனி மாதப் பதிகம், பழனிமாலை, பழனியந்தாதி, பழனியாண்டவர் அகவல், பழனியாண்டவர் ஆனந்தக்களிப்பு, பழனியாண்டவர் கலித்துறைமாலை, பழனியாண்டவர் காவடிச்சிந்து, பழனியாண்டவர் திருவிருத்தம், பழனியாண்டவர் தோத்திரம், பழனியாண்டவர் பதிகம், பழனியாண்டவர் பேரில் விருத்தம், பழனியாண்டவர் மாதப் பதிகம், பழனியாண்டவர் வண்ணம், பழனி லாலிப்பாட்டு, பழனிவடிவேலர் பள்ளு, பழனி வாரப் பதிகம், பழனி வெண்ணீற்றுப் பதிகம், பழனிவேலவர் துதி, பழனிவேலவர் தோத்திரம், பழனிவேலன் மாதாந்திர தோத்திரம், பழனிவேலன் வாரப்பதிகம், பழனி பரமசற்குரு பதிகம், பழனி மகுட ஆசிரியப் பதிகம், பழனி குமரகுருபர தேசிகப்பதிகம், பழனித்திருப்புகழ், பழனித் திருப்புகழ்ப் பதிகம், படைவீட்டுப் பதிகம், படைவீட்டுத் திருப்புகழ், பழனிமலைக் கந்தசுவாமி கலித்துறைமாலை போன்ற நூல்களெல்லாம் ஓலைச்சுவடியில் காணப்படுகின்றன.  இவைதவிர காகிதக் கையெழுத்துப்படிகள், தற்கால நூலாசிரியர்களின் பழனித்தலம் பற்றியும் பழனிமலை முருகப்பெருமானைப் பற்றியும் எழுந்த நூல்கள் பலப்பல.  இவைகள் தவிர, கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகளின் 'கந்தபுராணம்' கந்தவேளின் வரலாற்றைக் கூறுகின்றது.  மேற்கூறிய இவற்றில் 'பழனிமலை வடிவேலர் பதிகம்' எனும் நூலின் சிறப்பை மட்டும் இங்குக் காண்போம்.

பழனிமலை வடிவேலர் பதிகம்

இந்நூல் பழனிமலையில் குடிகொண்டு அருளாட்சி செய்துகொண்டு இருக்கும் முருகப்பெருமானின் வடிவ நிலைகளையும், பெருமைகளையும், அவனுக்குக் கொண்டாடப்பெறும் விழாக்களையும் பற்றிக் கூறுகின்றது.  ஆசிரிய விருத்தப் பாக்கள் பதினொன்றால் ஆனது. இந்நூலாசிரியரின் பெயர் இன்னதென்று தெரியவில்லை.  இது பாராயணம் பண்ணும் போதும், முருகனுக்குக் காவடி எடுக்கும் போதும் பாடித் துதிப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.  இந்நூற் சுவடி சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் டி.1661இல் பாதுகாக்கப்பெற்று வருகின்றது.  இந்நூலைப் பத்மாவதி அவர்கள் அந்நூலகப் பருவ இதழ்த் தொகுதி 10, பகுதி 1, 1957, பக்.63-69இல் பதிப்பித்திருக்கின்றார். இந்நூல் வேறெங்கும் வெளியிடப்பெற்றதாகத் தெரியவில்லை.  இந்நூற் பாடல்கள் ஒவ்வொன்றின் இறுதி அடியானது, 

"பழமறைசொல் லியசீலர் தொழுமவர்க ளனுகூல
பழனிமலை வடிவேலனே"  

என்று முடிகின்றது.

வேலனின் திருவுருவம்

இறைத் தத்துவங்களை விளக்குபவையே பல்வேறு வகையான இறை வடிவங்கள்.  காலந்தோறும் மக்களின் நம்பிக்கைக்குத் தக்கவாறும், நாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்றவாறும் இவ்வடிவங்கள் (உருவங்கள்) அமைந்திருக்கின்றன.  விக்கிரக வழிபாடு ஒரு காலத்தில் உலகெங்கும் பரவி இருந்தது.  தீ, மழை, காதல், போர் ஆகிய செயல்களுக்குத் தீக்கடவுள், மழைக்கடவுள், காதற்கடவுள், போர்க்கடவுள் என்று அனைத்து உலகச் செயல்களுக்கும் ஒவ்வோர் அதிதேவதை இருப்பதாகக் கருதி வழிபட்டு வந்துள்ளனர்.  இவ்வடிவங்கள், கால நிலைக்கேற்ப செப்பம் செய்யப்பெற்று அவற்றின் மீது கதைகளை உருவாக்கி நம்பிக்கையோடு வாழ்ந்தனர்-வாழ்ந்துகொண்டும் இருக்கின்றனர்.  இவ்வாறு உருவான அவ்வடிவங்களைக் காப்பதும் போற்றுவதும் பூஜிப்பதும் நம் ஒவ்வொருவருடைய கடமையுமாகும்.  தெய்வ வடிவங்களின் விளக்கங்களை உணர்ந்த சிலர் அதற்கு விளக்கங்களையும் விரிவுரைகளையும் அளிக்கின்றனர்.  சிலர் அதை அப்படியே நூலாக - பாடலாக வடித்தெடுக்கின்றனர்.  வடிவங்களின் அருமை பெருமை உணர்ந்தோர் அவற்றை வழிபடுகின்றனர்.  இவ்வகையில் முருகப் பெருமானின் தத்துவங்களைக் கொண்ட அவனது வடிவைக் கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகள்,

"அருவமு முருவு மாகி அநாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்க ளாறுங் கரங்கள்பன் னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலக முய்ய"(திருவவதார. பா.92)

என்கின்றார்.  இவ்வடிவ நிலையை விரித்து இந்நூலாசிரியர் முதற் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

காவடிப்பூசை ஏற்கும் வடிவேலன்

வடிவேலனுக்குக் காவடிப்பூசை மிகவும் சிறப்பானது.  ஒவ்வொரு ஆடி மாதக் கார்த்திகை தினத்தன்றும், தை மாதப் பூச நட்சத்திரத்தன்றும் முருகப் பெருமானுக்குக் காவடி எடுப்பதுண்டு.  முருகனுக்குச் செலுத்தப்படும் காவடிகள் பல வகையுண்டு.  அவைகளில் சர்க்கரைக் காவடி, மாங்கனிக் காவடி, நெய்க் காவடி, நீர்க்காவடி, பால் காவடி, திருநீற்றுக் காவடி, சந்தனக் காவடி, மலர்க் காவடி, கற்பூரக் காவடி, சாம்பிராணிக் காவடி, புனுகு காவடி போன்றன குறிப்பிடத்தக்க காவடிகளாகும்.  இவ்வகையான காவடிகளைப் பக்தர்கள் தோள்மீதும், முதுகின் மீதும் சுமந்து வந்து முருகப்பெருமான் வீற்றிருக்கும் தலங்களில் செலுத்துவர் என்கிறார் இந்நூலாசிரியர்(பா.5).

வடிவேலன் ஓர் மருத்துவன்

மலைகள் மூலிகைகளின் இருப்பிடங்களாகும்.  இம்மூலிகைகள் அங்கு உறையும் இறைவனின் மருந்துப் பொருள்களாகும்.  பழனிமலையில் குடிகொண்டிருக்கும் முருகப் பெருமான் பல நோய்களைத் தீர்க்கும் மருத்துவனாக விளங்குகின்றான்.  உடலுக்கு 4448 நோய்கள் வரக்கூடும் என்று சித்த மருத்துவர்கள் கணக்கிட்டுக் கூறியிருக்கின்றனர்.  இந்நோய்களுள் மக்களை எப்போதும் அடிக்கடி வாட்டுவது வயிற்றுவலி, சோகை, விப்புருதி, நீரிழிவு, காமாலை, வெண்குட்டம், கருங்குட்டம், இருமல், வாதம், குன்மன், அண்டவாதம், சயித்தியம், மகோதரம், பெருவியாதி, சூலை, தலைவலி, பவுத்திரம், முறைக்காய்ச்சல், மாரடைப்பு, சன்னி, பெரும்பாடு, மூலம், வாய்வு போன்ற நோய்களாகும்.  இந்நோய்கள் எல்லாம் முருகப் பெருமானைப் பழனி வந்து தொழுதாலே முன்பனி போல பறந்துபோகும் என்கிறார் இந்நூலாசிரியர்(பா.6).  

வடிவேலன் ஓர் காவலன்

மக்களை அச்சுறுத்தும் பேய், பிசாசு, மோகினி, குட்டிச்சாத்தான், இருளன், காட்டேறி, பாவாடையப்பன், வல்லரக்கி போன்றோரின் தாக்குதலில் இருந்தும்; ஏவல், பில்லி, சூன்யம் போன்ற வினைகளின் தாக்குதலில் இருந்தும் விடுபட பழனிமலை வடிவேலனின் திருவடி மலர்ப் பாதத்தைத் தொழுகின்றவர்களுக்கு எத்தீங்கும் வராது.  அவர்கள் எப்பொழுதும் உயர்நிலையையே அடைவர் என்கிறார் இந்நூலாசிரியர்(பா.7).

பழனிவடிவேலர் பதிகச் சிறப்புகள்

பழனிமலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானின் சிறப்புக்களை அவன் வாழும் பதிக்கும் பொருத்திக் காட்டுவது மரபு.  இம்மரபுப்படி மலைச்சிறப்பும், மாலைவளச் சிறப்பும் இப்பதிகத்தில் சுருக்கமாக-தெளிவாகக் குறிப்பிடுகின்றார் இந்நூலாசிரியர். மேலும் முருகப்பெருமானின் பண்புகளையும் விளக்கியுரைப்பது மகிழச் செய்கிறது.  அமரர்கள், முனிவர்கள், வேத நூல்கள், தரும நூல்கள், கலைகள் எல்லாம் புகழும் முதல்வனே என்பதை,

"பலவமரர் பலமுனிவர் பலசுருதி பலமிருதி
பலகலைகள் புகழப் புகழ்முதல்வனே" (பா.1:3)

என்றும், பயமென்று என்னைத்தேடி வருபவர்க்கெல்லாம் உதவுகின்றவனே என்பதை,

"பயமென் றவர்குதவு தெய்வமே யென்னுடைய
பங்கிலுறை குலதெய்வமே" (பா,2:3)

என்றும், மலைகளில் விலங்குகளின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காக்க வேட்டையாடிய வேடனே என்பதை,

"பாலாயு தங்கொண்டு விசைவேட்டை யாடிவரும்
பன்னிருகை மலைவேடனே" (பா.4:3)

என்றும், மக்களுக்கு என்றும் வரும் நோய்களுக்கெல்லாம் உன்னைநாடி வந்தால் தீர்த்து அருளாட்சி புரியும் மருத்துவனே என்பதை,

"முதல்வினை யெலாம்பருதி முன்பனிப் போலப்
பறித்தெறியு மதிகாரனே" (பா,6:3)

என்றும், கெட்ட காற்றுகளிடத்திருந்தும், செய்வினைகளிலிருந்தும் மக்களைக் காக்கும் அதிகாரனே என்பதை,

"பாகமதில் வைத்தவன் பருக்கெலாம் மேலான
பதவிதரு மதிகாரனே"(பா.7:3)

என்றும், உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் உபதேசம் சொல்லும் தேசகுருவே என்பதை,

"பசையு மிகலோக பரலோக சித்திதரும்
பரமவுப தேசகுருவே" (பா.8:3)

என்றும், பல வளங்களும் நிறைந்த திருவாவினக்குடியில் வாழ்கின்ற கந்தனே என்பதை,

"பாளைவரி கமுகுநிறை திருவா வினன்குடி
பதிகொண்டு வருகந்தனே" (பா.10:3)

என்றும் பழனிவடிவேலனின் சிறப்புக்களையும் பழனிமலையின் சிறப்புக்களையும் இந்நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.  மேலும், இந்நூலின் இறுதிப் பாடலாக முருகப் பெருமானின் வரலாற்றைச் சுருக்கமாக அமைத்திருப்பது போற்றுதற்குரிய ஒன்றாகும்(பா.11). இந்நூல் பின்வருமாறு அமைந்திருக்கும்.

நூல்
மலர்மகுட மோராறு மலர்வதன மோராறு
மலர்சுடிகை யோராறுமோ
மலர்மதிக மோராறு மலருமுடி யோராறு
மலர்பவள வாய்களாறு
மிலகுசெவி யீராறு மிலகுகுழை யீராறு
மிலகுவிழி யீராறுநீ
ளிலகுகா ல¦ராறு மிலகுபடை யீராறு
மிலகுபுய மீராறுமே. (1)

துந்துபிக ளைந்துமொலி வளரவான் மாதர்புகழ்
சோபன முழக்கம்வளரத்
தூயகலை மகளுமலை மகளுமா லத்திபல
சுற்றியவர் பத்திவளரச்
சந்திரசூ ரியதீபம் வளரத்திசா நாதர்
சாமரைசு ழற்றிவளரத்
தவமுனிவர் துதிவளர விண்ணவர்கள் பூமழை
தலைத்தலை பொழிந்துவளர
கந்திருவ ரிசைவளர நால்வேத மோதி
கண்ணணொடெண் கண்ணன்வளர  
கயிலாச நாதனும் பெரியநா யகியுமிது
கண்டுகண் காட்சிவளர
பந்திகள் வளர்த்துநீ கொலுவிருக் கையிலுனது
பணிவிடை வளர்ப்பதென்னா
பழமறைசொல் லியசீலர் தொழுமவர்க ளனுகூல
பழனிமலை வடிவேலனே. (2)

செயசண்ட மாருதப் பரியேறி யங்கையிற்
சிங்காணி விற்பிடித்து
சிறுகணை தூறவன மேறிநூ றாயிரத்
தெறுபுலிக ளலறிவீழ
முயலம்பு தைத்துவீழ மரைகள்குத் துண்டுவீழ
முட்பன்றி நட்டுவீழ
முரியானைக் குடர்க ளிடறிவிழ வேங்கைவிழ
முன்கரடி மங்கிவீழ
வெயிலுண்ட செங்குருதி பொங்கமர்ந்து மேல்மிதக்க
வொருநொடி யளவிலேவிசை
வேட்டையாடி மகிமைகள் காட்டி வருவெற்றி
வீரனுனை யன்றியுண்டோ
பயமென் றவர்க்குதவு தெய்வமே யென்னுடைய
பங்கிலுறை குலதெய்வமே
பழமறைசொல் லியசீலர் தொழுமவர்க ளனுகூல
பழனிமலை வடிவேலனே. (3)

ஆலால வட்டமயில் விசிறிசா மரைகண்
ணாடிபொன் னாடைசுக
மாந்தடி பிரம்புவலை கண்ணிபறி கச்சைமதி
யடிக்கிளிக் கூடுகச்சால்
சூலாயு தம்பரிசை வில்லம்பு முள்ளம்பு
சுரிகைகட் டாரிவாங்கு
தோள்வாளு லக்கைசக் கரமீட்டி சவளஞ்
சளிக்குநே ரிசைவல்லியம்
வேலாயு தங்கண்ட கோடாலி நாராசம்
வீசுபாசம் பாகுத்தர்
வீரபா ணங்குமர வாணர்கள் படவாணம்
விருதுதுப் பாக்கிபிண்டி
பாலாயு தங்கொண்டு விசைவேட்டை யாடிவரு
பன்னிருகை மலைவேடனே
பழமறைசொல் லியசீலர் தொழுமவர்க ளனுகூல
பழனிமலை வடிவேலனே. (4)

வடிமதுக் காவடிகள் சக்கரைக் காவடிகள்
மாங்கனிக் காவடிகள்
நெய்வார்த்த காவடிகள் பலதீர்த்த காவடிகள்
பால்வைத்தகா வடிகள் நீற்றுப்
பொடிவைத்த காவடிகள் சந்தனக் காவடிகள்
பூமலர்க் காவடிகள்
கற்பூரக் காவடிகள் சாம்பிராணி காவடிகள்
புனுகுகா வடிகள் வருவோர்
முடியெலாங் காவடிகள் தோளெலாங் காவடிகள்
முதுகெலாங் காவடிகளாய்
முக்காத வழியகல மெட்போட விடமின்றி
முக்யமலை மீதிலேறும்
படியெலாங் காவடிகள் பாவடிக ளாகயிப்
பாரெலாம் பூசைகொண்டாய். (5)

வயிற்றுவலி சோகைவிப் புருதிநீ ரிழிவுகா
மாலைவெண் குட்டமிருமல்
வாதகுன் மம்பெரு வியாதிபக் கப்பிளவை
வண்டுகடி யண்டவாதஞ்
சயித்தியம் மகோதரம் பிரமியம் சூலைகா
சங்கிராணி பாண்டி ரோகந்
தலைவலி கருங்குட்ட மிளைதுடை வாழைபடு
தாமரை கிரந்தி படுவன்
முயற்பிணி பவுத்திரம் நடுக்கலெழு ஞாயிறு
முறைக்காய்ச்சல் மாரடைப்பு
முகசன்னி சுகசன்னி குலைவலி பெரும்பாடு
மூலங்கபால வாய்வுபயித்தியம்
முதல்வினை யெலாம்பருதி முன்பனிப் போலப்
பறித்தெறியு மதிகாரனே. (6)

சாகினி கறுப்பனிரு ளன்கூளி வேதாளி
தாடகைமூ லாடவீரன்
சந்திரவீ ரன்குறளி யந்திரவீ ரன்சண்டி
தடிவீரன் வல்லரக்கி
மோகினிகள்டாகினி களிருளிடி குட்டிச்சாத்தி
முன்னடி யன்வடுகன்
சடாமுனிவன் வெட்டுணிகுத் தூணிகாட்டேறி
சாமண்டிபா வாடையப்பன்
சோகிபூ தப்பிரம்ம ரட்சைகொஷ வாண்டாதி
துரக்கைவைப் பேவல்பில்லி
சூன்யமுதல் வினையெலாம் எள்ளளவும் நிற்றாறு
துலைத்துனது திருவடிமலர்ப்
பாகமதில் வைத்தவன் பருக்கெலாம் மேலான
பதவிதரு மதிகாரனே. (7)

திசைதொறுங் கனகவேல் திசைதொறும் வௌ¢ளிவேல்
திசைதொறும் மணிப்பதக்கந்
திசைதொறும் பொற்சிவிகை திசைதொறும் பொற்கவிகை
திசைதொறும் பசுமந்தைகள்
அசையுமொரு திசையிலே குதிரைகள் விமானங்க
ளாட்டுக் கிடாய்கள்தேர்கள்
ஆனையொரு திசைபெண்கள் சோனையொரு திசையன்ப
ராடல்பா டலுமொர்திசை
இசைகிளிகள் காடைகவு தாரிப்பு றாக்கள்வெள்
ளெருதுகள் கொலைச்சாவல்
இடிசவா துப்பூனை புழுகுபூனை கள்மான்கள்
எத்திசையுமே வருமிடவே
பசையு மிகலோக பரலோக சித்திதரும்
பரமவுப தேசகுருவே
பழமறைசொல் லியசீலர் தொழுமவர்க ளனுகூல
பழனிமலை வடிவேலனே. (8)

மதிமவுலி மார்பில்விளை யாடுகம லங்கெவுரி
மடிதனி லுதைந்த கமலம்
வண்டமிழ் சங்கத்து இருந்தகம லம்பிரமன்
வந்தனைகள் செய்தகமலம்
மதிகவிதை அருணகிரி சூட்டுகம லந்தெய்வ
யானைகர வாசகமலம்
மணிபணி திருத்திப் புனைந்தகம லம்பணிசெய்
யடியர்வினை மாற்றுகமலங்
கதிரவனக் குறமங்கை தினைவனப் புற்களுங்
கற்களுமு ரைத்தகமலங்
கானமயி லேறிநட மாடுகம லஞ்சுரர்க
ணங்கள்கொண் டாடுகமலம்
பதிதனா னேனடைய வன்மன மெனுங்கரும்
பாறையில் முளைத்தலருமோ
பழமறைசொல் லியசீலர் தொழுவர்க ளனுகூல
பழனிமலை வடிவேலனே. (9)

காளையெக் காளைசின் னங்கொம்பு பூரிகரு
ணாகர்க ளந்தவளசங்
கந்துத்து துத்தாரி நாதசுர மத்தளங்
கனகதப் புத்தவண்டை
தாளமி ரண்டெ மாமிசெ கண்டிகைத்
தாளந்த டாரிபம்பை
தவுல்நடங்காரி பெரியகிடு பிடிசந்ர வளைய
மொடுங்களிடக் கைத்தட்டை
நீளமுக வீணைகின் னரிபுல்லாங் குழல்கள்நி
றைத்தகீ தங்கள்மிகவே
நெடியதிரள் கடலெனக் குமுறிவரு பவனிதரு
நின்சேர்வை யேசேர்வைகாண்
பாளைவரி கமுகுநிறை திருவாவி னன்குடி
பதிகொண்டு வருகந்தனே
பழமறைசொல் லியசீலர் தொழுமவர்க ளனுகூல
பழனிமலை வடிவேலனே. (10)

தருமிரவு யுதையமது கண்டுவை காபுரி
தனிற்கண்டு சுத்திகண்டு
தண்முகப் புனல்கண்டு நியமாதி கண்டுபின்
சரவணப் பொய்கையாடி
யிருள்பெருகு மாவினங் குடிகண்டு கயிலாயர்
அம்மைபெரி யம்மையைக்கண்
டம்பமலை கண்டதிலி டும்பன்சன்னதிகண்டு
அனேககண் காட்சிகண்டு
கருணைகண் டருள்வள்ளி தெய்வானை யைக்கண்டு
களிகண் டிருக்குமுன்றன்
கமலபா தங்கண்ட பேரொருக் காலுமக்
காலனைக் கண்டிடுவாரோ
பருதிவலி கண்டவன் வலிகண்ட தம்பிதன்
பலாக்கிரமங் கண்டதுரையே
பழமறைசொல் லியசீலர் தொழுமவர்க ளனுகூல
பழனிமலை வடிவேலனே. (11)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக