தமிழிலக்கியத் தோற்றக் காலத்திலிருந்தே 'மடம்' என்னும் சொல் வழக்கிலிருந்து வருகிறது. இச்சொல்லுக்குக் கழகத் தமிழகராதி 'அறியாமை, அழகு, மென்மை, அறப்புறம், இரதம், கோயில், இணக்கம், காவடி, சத்திரம், மடமை, முனிவர் வாசம், இளமை, கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை' என்று பொருள் கூறுகிறது. எனவே, இச்சொல் கோயில், சத்திரம் என்ற இடப்பெயராகவும் வழங்கி வந்துள்ளமை புலனாகிறது.
"உலகில் உள்ள பெரும்பான்மையான இனத்தார், இறந்தவர்களைச் சுடுவதில்லை; மாறாகப் பூமியில் புதைத்துவிடுகிறார்கள். தொன்றுதொட்டு இருந்து வரும் மிகப் பழைய நாகரிக இனத்தார் எல்லாம் இவ்வாறு புதைத்தே வந்திருக்கிறார்கள்; பூமாதேவியோடு உடல் ஒன்றியிருப்பதுதான் சிறப்பு என்று கருதியதேதான் காரணம். ஆரியர்கள் மட்டும் இறந்தவர்களைச் சுடுகிறார்கள்; புதைப்பதில்லை. ஆரியர்களிலும் குழந்தைகள் இறந்தால் சுடுவதில்லை; புதைத்துவிடுகிறார்கள். கொள்ளி வைக்க ஆள் இருக்கும் போது மட்டும் எரிக்கிறார்கள்; குழந்தைகளுக்கு, வாரிசு இல்லாததால் புதைக்கிறார்கள்; சிறுகுழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே மணம் முடித்திருந்தால் அவர்களைச் சுடுகிறார்கள்; ஏனென்றால் வாரிசாகக் கணவன் வந்துவிடுகிறான் என்று சொல்லப்படுகிறது (மு.கோ. இராமண், 22.11.1984அன்று நேர்காணலில் கூறியது). ஆகப் பொதுவாகப் பார்க்கும் போது ஆரியர்கள் பிணங்களைப் புதைப்பதில்லை; எரிக்கிறார்கள். திராவிடர்கள் பிணங்களைப் புதைக்கிறார்கள் சுடுவதில்லை.
புதைப்பது வேறு; சமாதி வைப்பது வேறு. ஆரியர்கள் சமாதி வைக்க விரும்பினால், எரித்த எலும்பை எடுத்து சமாதி வைக்க வேண்டிய இடத்தில் மீண்டும் அவ்வெலும்பை ஆகம முறைப்படி எரித்து அவ்விடத்தில் சமாதி கட்டுகிறார்கள். ஆனால் திராவிடர்கள் அப்படியே பிணத்தை உட்கார்ந்த நிலையிலேயே குழியில் வைத்து மூடி சமாதி கட்டுகிறார்கள். பொதுவாகத் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களின் மேல் உள்ள மதிப்பால் உயர்வால் சமாதி கட்டுகிறார்கள். தங்கள் வீட்டில் நடக்கும் நல்ல காரியங்களுக்கு முன் பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள். இது ஒரு குடும்ப வழிபாடாகத்தான் இருக்கிறது. இது தவிர, சமுதாயத் தலைவர்களோ, ஊர்த் தலைவர்களோ, துறவிகளோ இறந்தால் அவர்களுக்குச் சமாதி கட்டி எல்லோரும் வழிபடுகிறார்கள். இவ்வகையில் பெரும்பான்மையும் ஆண்களுக்கே சமாதி வைக்கப்படுகிறது" (நெல்லை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள், ப.95). இவ்வாறு சமாதி வைத்து வழிபடும் நிலையில் அவை தெய்வமாகிறது. இதனைச் சமாதித் தெய்வங்கள் என்கிறோம்.
சமாதித் தெய்வங்கள்
மக்களுக்குத் தொண்டாற்றி இறந்தவர்களுக்கு மக்களால் எழுப்பப்படும் நினைவிடமே சமாதியாகும். இச்சமாதிப் பீடத்தின் மேல் இறந்தவரின் நினைவு கூறத்தக்க வகையில் ஏதாவதொரு குறியீட்டை வைத்து வழிபடுவர். அவ்வாறு வழிபடுவது நாட்டுப்புற மக்களிடத்து இருக்கும் இயல்பாகும். இவ்வியல்பில் ஒன்றே மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்துசமய - சைவ சமயக் கடவுள்களை வைத்து வழிபடும் முறை. சமாதிப் பீடத்தின் மேல் வைக்கப்பெறும் தெய்வத்தை அடிப்படையாகக் கொண்டு சமாதியைக் கீழ்வருமாறு பிரிக்கலாம். அவை,
அ. ஆண் சமாதியில் ஆண் தெய்வம்
ஆ. பெண் சமாதியில் பெண் தெய்வம்
இ. ஆண் சமாதியில் பெண் தெய்வம்
ஈ. பெண் சமாதியில் ஆண் தெய்வம்
உ. பலர் சமாதியில் ஆண் தெய்வம்
என்பனவாகும்.
அ. ஆண் சமாதியில் ஆண் தெய்வம்
சமுதாயம் போற்றத்தக்க - வழிபடத்தக்க வாழ்வினை வாழ்ந்த ஒரு ஆண் சமாதியின் மேல் ஆண் தெய்வமான சிவலிங்கத்தைச் சமாதிப் பீடத்தில் வைத்து வழிபடுவதையே இது குறிக்கிறது. காட்டாக, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் பொதட்டூர்பேட்டையில் இருக்கும் ஸ்ரீஇராமகிருஷ்ணானந்த சுவாமிகளின் சமாதி பீடத்தின் மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதைக் குறிக்கலாம். இதுபோல் ஏராளமான சமாதிகள் நாட்டில் அமைந்திருக்கக் காணலாம்.
ஆ. பெண் சமாதியில் பெண் தெய்வம்
சமுதாயம் போற்றத்தக்க வழிபடத்தக்க வாழ்வை வாழ்ந்த ஒரு பெண் சமாதியின் மேல் பெண் தெய்வமான அம்மனைப் சமாதிப் பீடத்தில் வைத்து வழிபடுவதையே இது குறிக்கிறது. காட்டாக, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு அருகிலுள்ள களம்பூர் என்னும் ஊரில் ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயில் அமைந்திருப்பதைக் காணலாம். சமாதி கொண்ட பெண்ணின் பெயர் மீனாட்சி என்பதால் சமாதி பீடத்தின் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்மனின் பெயரும் ஸ்ரீமீனாட்சி அம்மன் என்றே வழங்கி வருவதையும் இங்குச் சுட்டிக்காட்ட வேண்டியதாகிறது.
இ. ஆண் சமாதியில் பெண் தெய்வம்
சமுதாயம் போற்றத்தக்க வகையில் வாழ்ந்த ஒரு ஆண் சமாதியின் மேல் பெண் தெய்வம் பிரதிஷ்டை செய்து வழிபடுவதையே இது குறிக்கும்.
ஈ. பெண் சமாதியின் ஆண் தெய்வம்
சமுதாயம் போற்றத்தக்க வகையில் வாழ்ந்த ஒரு பெண் சமாதியின் மேல் ஆண் தெய்வம் பிரதிஷ்டை செய்து வழிபடுவதையே இது குறிக்கும்.
உ. பலர் சமாதியில் ஆண் தெய்வம்
சமுதாயம் போற்றத்தக்க வகையில் வாழ்ந்த ஒரு குடும்பத்து உறுப்பினர்கள் (ஆண்களும் பெண்களும்) பலரை காலந்தோறும் பல சமாதிகளாக வைத்து வழிபட்டு வந்ததை ஒரு கால கட்டத்தில் அவ்வெல்லா சமாதிகளையும் பிரித்தெடுத்து ஒரே சமாதியாக்கி அப்பீடத்தின் மேல் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடுவதையே இது குறிக்கும். காட்டாக, முன்னர்க் குறித்த களம்பூர் என்னும் ஊரில் இப்பொழுது இருக்கும் ஸ்ரீசிவானந்த அடிகளாரின் சமாதி, அவர்தம் குடும்பத்து முன்னோர்கள் பலரின் சமாதியை ஒன்றாக்கியதாகும். இச்சமாதியின் மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் இறுதிச் சமாதி அடைந்த ஸ்ரீசிவானந்த அடிகளாரின் நினைவு நாளன்று இன்றும் குருபூசை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு சமாதித் தெய்வத்தை அடிப்படையாகக் கொண்டு சமாதியை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். அதுபோல் சமாதி வைக்கும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு சமாதியை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அதாவது, ஊர் எல்லையில் வைக்கும் சமாதியை எல்லைச்சமாதி என்றும், மடத்தில் வைக்கும் சமாதியை மடத்துச்சமாதி என்றும், நடுகல் வைக்கும் சமாதியை நடுகல் சமாதி என்றும், சுமைதாங்கிக் கல் வைக்கும் சமாதியை சுமைதாங்கிச் சமாதி என்றும் பிரிக்கலாம். மடத்தில் வைக்கப்பெறும் சமாதித் தெய்வத்தை மடத்துச் சமாதித் தெய்வமென்றும் மடத்துத் தெய்வமென்றும் சொல்லலாம்.
மடத்துத் தெய்வங்கள்
மடங்கள் வழிபாட்டிடமாகவும், கல்விக் கூடமாகவும், ஓய்விடமாகவும், திருமணக் கூடமாகவும், ஊர்ச் சபையாகவும், வழிப்போக்கர்களுக்கு உணவும் உறையுளும் அளிக்குமிடமாகவும் இருந்ததையும் இருப்பதையும் இன்றும் காண்கின்றோம். இம்மடங்கள் காற்றோட்டமான இடத்திலேயே கட்டப்பெற்று இருக்கும்.
மடங்கள் வழிபாட்டிடமாக இருப்பதற்குக் காரணம் அவற்றுள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சமாதிகளே யாகும். இச்சமாதிகளை மக்கள் வழிபடுகின்றனர். "இறந்த முன்னோர் ஆற்றலும் அதிகாரமும் பெற்றவர்களாக நம்புகின்றனர் மக்கள். தவறுகளை மன்னித்துக் காப்பாற்றும் வல்லமை இறந்தவர்கள் பெற்றுவிடுவதாகவும் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையே இவர்களை வழிபடுமாறு செய்கிறது" (நாட்டுப்புறவியல் சிந்தனைகள், ப.97) என்பதால் நாட்டுப்புற மக்களின் வழிபாட்டு நம்பிக்கையை உணர முடிகிறது.
மடத்துச் சமாதிகள் இரண்டு நிலைகளில் அமைதல் உண்டு. அவை,
அ. மடத்தால் ஏற்பட்ட சமாதி
ஆ. சமாதியால் ஏற்பட்ட மடம்
என்று கொள்ளலாம்.
அ. மடத்தால் ஏற்பட்ட சமாதி
மடத்தால் ஏற்பட்ட சமாதி என்பது, ஏற்கெனவே மடத்தை ஏற்படுத்தி அவ்விடத்திலிருந்துகொண்டு சமூகப் பணிகள் ஆற்றிய ஒருவரை அவ்வூர் மக்களோ அல்லது உறவினர்களோ அவர் வாழ்ந்த அல்லது அவர் ஏற்படுத்திய இடத்திலேயே சமாதி வைத்து வழிபட்டு வருவதை இது குறிக்கும். காட்டாக, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் பொதட்டூர் பேட்டையில் ஊரின் நடுப்பகுதியில் ஸ்ரீகிருஷ்ணானந்த சுவாமிகள் மடம் இருக்கிறது. இது பரந்த நிலப்பரப்பைக் கொண்டதாக அமைந்துள்ளது. இதனுள் அமையப்பெற்றிருக்கும் கூடம் திருமணக் கூடமாகவும் கல்விக் கூடமாகவும் ஓய்விடமாகவும் இருந்து வருகிறது. இம்மடத்தைக் கட்டிக் காத்து வந்தவரே ஸ்ரீகிருஷ்ணானந்த சுவாமிகள் ஆவார்.
இவர் திருமணமான தன் மனைவியை மணநாள் அன்றே பிரிந்தவர். வாழ்வை வெறுத்துச் சமுதாயப் பணிக்கு வந்தவர். அந்நாள் கொண்டு தன் வாழ்நாள் முழுவதையும் பொதட்டூர்பேட்டை ஊரின் நன்மைக்காகவே வாழ்ந்தவர். ஊர் மக்கள் அனைவரின் உள்ளத்திலும் குடிகொண்டவர். சிவனை வழிபடு கடவுளாகக் கொண்டவர். அவர் உயிர் மறைந்தபோது ஊர் மக்கள் அனைவரும் அவருக்குச் சமாதி வைக்கத் தீர்மானித்தனர். அவர் வாழ்ந்த மடத்தின் வடக்குப் பகுதியில் அவர்தம் சமாதி வைக்கப்பெற்றது. அச்சமாதியின் மேல் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வரலாயினர். பின்னர் சமாதியைச் சுற்றிக் கோபுரம் எழுப்பினர். வெளிமண்டபத்தின் நுழைவாயிலில் வலதுபுறம் விநாயக் கடவுளையும், இடதுபுறம் முருகனையும் எதிர்ப்புறம் நந்தியையும் மேடையையும் அமைத்து முழுக்க முழுக்க ஒரு பெருந்தெய்வக் கோயிலாகவே மாற்றிவிட்டார்கள். என்றாலும், உற்சவம் மூலவருக்கே. மூலவர் சமாதியின் மேல் அமர்ந்திருக்கிறார் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இன்றும் ஸ்ரீகிருஷ்ணானந்த சுவாமிகளை மக்கள் சிவலிங்க வடிவமாகவே கண்டு வழிபட்டு வருகின்றனர்.
காலையும் மாலையும் தினசரி வழிபாடு நடைபெறுகிறது. அவ்வூரில் செங்குந்தர் இனமக்கள் அதிகமாக வாழும் இடமாகையால் மடத்துப் பூசாரியும் மடாதிபதியும் செங்குந்த இனத்தைச் சேர்ந்த ஒருவரே இதுவரை இருந்து வந்துள்ளதைக் காணமுடிகிறது. சுவாமிகளின் நினைவு நாளன்று ஊர் போற்றும் வகையில் ஊர் மக்கள் எல்லோரும் கூடி குருபூசை செய்வர். இம்மடத்தை நிர்வகிக்க நிர்வாகக் குழு ஒன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இக்குழு அவ்வப்போது தங்களது உறுப்பினர்களை மாற்றி மிகப் பொலிவுடன் செயல்பட்டு வருகிறது.
ஆ. சமாதியால் ஏற்பட்ட மடம்
சமாதியால் ஏற்பட்ட மடம் என்பது, சமுதாயம் போற்றத்தக்க வகையில் வாழ்ந்த ஒருவரை அவ்வூர் மக்களோ அல்லது உறவினர்களோ சமாதி வைத்து வழிபடுவது ஆகும். அவ்வாறு வழிபட்டு வருங்காலத்து சமாதியைச் சுற்றிலும் மண்டபங்களை அமைத்துச் சிறப்புச் செய்வதே யாகும். காட்டாக, மேற்குறித்த பொதட்டூர் பேட்டையில் இன்னொரு விதமான மடமும் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. இம்மடம் அவ்வூரின் மேற்குப் பகுதியில் அமைந்த ஆறுமுகமலை அடிவாரத்தில் பொலிவுடன் அமைந்திருக்கின்றது. அம்மடமே ஸ்ரீவிநாயகானந்த சுவாமிகளின் மடமாகும். பொதட்டூர் பேட்டை செங்குந்தர் இனத்தைச் சேர்ந்த இவர் இளமைக் கல்வியைப் பொதட்டூர் பேட்டை ஆரம்ப பாடசாலையில் பயின்றார். பின்னர் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்ற அவரின் மனம் துறவறத்தில் சென்றது. அந்நாள் தொட்டு துறவியாகவே வாழ்ந்து வந்த அவர் ஆன்மீக நெறியில் நெறிபிறழாது வாழ்ந்து வந்தார். தான் பிறந்த ஊருக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணிய அவர் ஊரின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஆறுமுக மலைக்குத் திருப்படி அமைக்க எண்ணினார். அவரின் விருப்பப்படி சென்றவிடமெல்லாம் பொருள் உதவி கிடைத்தது. படிப்படியாக திருப்படிப்பணி நடைபெற்று வந்தது. பாதி பணி முடிந்த நிலையில் சுவாமிகள் அடக்கம் ஆனார்கள். சுவாமிகளின் தொண்டை கருத்தில் கொண்ட ஊர் மக்கள் அவர்களுக்குச் சமாதி வைக்க எண்ணினர். அவர் திருப்படிப் பணியாற்றிய மலையடிவாரத்தின் வடக்குப் பகுதியில் அன்னாருக்குச் சமாதி வைக்கப்பெற்றது. சமாதியின் மேல் சிவலிங்கத்தை வைத்துப் பூசை செய்து வருகின்றனர்.
ஸ்ரீகிருஷ்ணானந்த சுவாமிகளுக்குப் பூசை நடப்பது போலவே இவருக்கும் பூசை முதலியன நடைபெற்று வருகிறது. சுவாமிகளின் தொண்டை நினைவில் கொண்ட ஊர் மக்கள் சமாதிக்கருகில் மடம் ஒன்றை நிறுவி மாலைநேரக் கல்விக்கூடமாக்கி இருக்கிறார்கள். அக்கோயிலின் மடாதிபதியே இக்கல்விக் கூடத்தை நடத்தி வருகிறார்.
இவ்வாறு மடத்தால் சமாதித் தெய்வத்தைப் பற்றியும் சமாதித் தெய்வத்தால் மடத்தைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. பொதுவாக மடத்துச் சமாதிகளின் மேல் பிரதிஷ்டை செய்யும் தெய்வம் சிவலிங்கமாகவே அமைந்திருக்கிறது. இது ஏனெனில், சமாதி அடையும் ஆணோ அல்லது பெண்ணோ அவர்கள் இறந்த பிறகு அழித்தல் கடவுளாகிய சிவனிடம் சேர்ந்து ஐக்கியமாகி விடுகிறார்கள் என்ற நம்பிக்கையில் அவன் வடிவமான சிவலிங்கத்தை வைத்துப் பூசித்து வணங்குகிறார்கள் எனலாம். மேலும், லிங்கத்தின் வடிவமைப்பும் மனிதனின் உருவமைப்பும் ஒத்திருப்பதைக் கொண்டும் இவ்வழிபாட்டு முறை அமைந்திருக்கலாம். அதாவது சிறுதெய்வ வழிபாட்டில் இறந்தவரின் சமாதியின் மேல் கல்லோ, வேலோ, வேறொரு குறியீட்டையோ வைத்து வழிபடுவர். முக்கோணம் போன்ற அமைப்பில் மாடம் வைத்து வழிபடுவது ஒன்று. இம்மாடப் பகுதியே லிங்கத்தின் தலைப்பகுதி. அதன் இடைப்பகுதியாக தளம் அமைந்து இருக்கும். அடிப்பகுதியாக தலைப்பகுதி விரிந்த நிலையில் அமைந்திருக்கும். இது நாட்டுப்புற தெய்வ வழிபாட்டில் அமைந்திருக்கும் தெய்வக் குறியீடு. இந்தத் தெய்வக் குறியீட்டின் வளர்ச்சியே சிவலிங்க வழிபாடும் அதன் வடிவமும் எனத் துணியலாம்.
மடத்துத் தெய்வம் நாட்டுப்புறத் தெய்வமா?
தமிழ்நாட்டில் வழங்கும் தெய்வங்களை இந்து சமயத் தெய்வங்கள் என்றும் திராவிட சமயத் தெய்வங்கள் என்றும் இரண்டாகப் பிரிக்கலாம். "இன்று நகரங்களிலும் கிராமங்களிலும் காணப்படும் இந்து தெய்வங்கள் விஷ்ணு, சிவன் ஆகியவர்களுடைய அவதாரங்களைப் பற்றியதே யாகும்" (நெல்லை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள், ப.9) என்று இந்து சமயத் தெய்வங்களைப் பற்றித் துளசி இராமசாமி அவர்கள் குறிப்பிடுகிறார்.
மக்களோடு இருந்து ஒன்றி வாழ்ந்தவர்கள் இறந்த பின்னர் தெய்வ நிலைக்கு உயர்ந்து அவர்களின் குலதெய்வங்களாகிறார்கள். இந்தக் குல தெய்வங்கள் சமாதித் தெய்வமாகவும், நடுகல் தெய்வமாகவும், சுமைதாங்கிக் கல்லாகவும் பரிணமிக்கின்றன. இறந்தவர்களின் வழிபாட்டு முறையே திராவிட வழிபாட்டு முறையாகும். எனவே, திராவிடத் தெய்வங்கள் என்று சொல்லப்படுவவை, வாழ்ந்து மடிந்த வாழ்வின் வழிகாட்டியாக இருந்த மனிதர்களே யாவர். இவர்கள் தாம் சிறுதெய்வங்கள்.
தமிழ்நாட்டில் நாகரிக மேம்பாட்டினாலும் பிராமணப் பண்பாட்டின் தாக்கத்தாலும் கிராமத் தெய்வ வழிபாட்டு முறைகளிலும் மாறுதல் ஏற்பட்டு இருக்கிறது (நெல்லை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள், ப.15). எனவே, திராவிடத் தெய்வம் இந்து சமயத் தெய்வமாக ஆவதும், இந்து சமயத் தெய்வம் திராவிடத் தெய்வமாக ஆவதும் இயல்பாய்ப்போய்விட்ட ஒன்று. இரண்டின் நோக்கங்கள் ஒன்றாகும் போது கலப்பு ஏற்படுவது இயல்பு. அந்நிலையிலேயே இவ்விரு தெய்வ வழிபாட்டு முறைகளிலும் கலப்பு நிகழ்ந்திருக்கிறது எனலாம். குறிப்பாக, வயிற்றுச் சூலிகள் இறந்தால் அவர்களுக்குச் சுமைதாங்கிக் கல் வைக்கின்ற வழக்கம் நாட்டுப்புற மக்களிடத்து இன்றும் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு மரபாகும். இந்தச் சுமைதாங்கிக் கல் வழிப்போக்கர்களுக்கு சுமைகளை இறக்கிவைக்கும் இடமாகவும் இளைப்பாறும் இடமாகவும் அமையும். அதுபோலத்தான் மடங்களும் வெளியூர்ப் பயணிகள் இருந்து செல்வதற்கும் உண்டு செல்வதற்கும் உகந்த இடமாக இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் மடங்கள் முன்னர்க் கூறியவாறு வேறுபல பணிகளையும் ஏற்றுக்கொள்கின்றன.
மடத்துத் தெய்வங்கள் சமாதிகளின் மேலேயே வைக்கப்பெற்றிருக்கும். சமாதி வைத்தல் நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கமாகும். சமாதிமேல் வைக்கப்பெற்ற தெய்வத்தையும் சிறுதெய்வ நிலைக்கு இறக்கியோ அல்லது சமாதியைப் பெருந்தெய்வ நிலைக்கு உயர்த்தியோ வழிபட்டு வருகின்றனர். மடத்துத் தெய்வம் பெருந்தெய்வமாக மட்டும் தனித்து வழிபடுவதில்லை. அத்தெய்வத்திற்கு சமாதியை ஒட்டியே வழிபாடு நடக்கிறது. சமாதிபெற்ற நாளே அத்தெய்வத்திற்குச் சிறப்பு நாளாகும். எனவே, மடத்துத் தெய்வங்கள் நாட்டுப்புறத் தெய்வங்கள் என்றே சொல்லலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக