ஞாயிறு, 4 நவம்பர், 2018

பதினோராம் திருமுறையில் யாப்பு

பதினோராம் திருமுறையில் பன்னிரண்டு ஆசிரியர்களின் நாற்பத்தொரு இலக்கியங்கள் இடம்பெற்றிருக்கின்றன.  இவற்றில் பல இலக்கியத் தோற்றுவாயாக அமைந்திருக்கின்றன.  இவ்விலக்கியங்களில் அமைந்திருக்கக் கூடிய யாப்பும் இத்தன்மைத்தே யாகும்.  யாப்பில் மாற்றம், யாப்பில் புதுமை, யாப்பில் பழமை, யாப்பு நிலை போன்ற நிலைகளில் யாப்பமைப்பு இவ்விலக்கியங்களில் அமைந்திருப்பதை இங்குக் காணலாம்.

யாப்பில் மாற்றம்
அ. வெண்டளை மாற்றம்-ஐகாரக்குறுக்கம்

பதினோராம் திருமுறையில் காய்ச்சீர் இருக்கவேண்டிய இடத்தில் கனிச்சீரும் நாற்சீரும் இடம்பெற்றிருக்கின்றன.

"கவ்வைக் கடிபிடிக்கும் காதன்மையால் - செவ்வை"
(திருஈங்கோய்மலை எழுபது, 35:2)

"தேயத்ததுவே செம்பொற் செழுஞ்சடைமேற் சேர்வித்து
வாய்த்திமையோர் தம்மையெல்லாம் வான்சிறையிற்"
(போற்றித் திருக்கலிவெண்பா,27)

"தானவர்கட் காற்றாது தன்னடைந்த நன்மைவிறல்
வானவர்கள் வேண்ட மயிலூரும்"  (மேலது, 31)

"கொலைபுரியா நீர்மையவாய்க் கொம்புவளைத் தேந்தி
மலையு மரவடிவங் கொண்டாங்"
                            (ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை,15)

"புகழ்வாருந் தன்மையதாய்ப் பூதலத்துள் ஓங்கி
நகழ்கிடங்குஞ் சூழ்கிடப்ப நேரே" (மேலது, 26)

"பெற்றிடலாம் என்றிருந்த நம்மிலும் பேதையர்கள்
மற்றுளரோ என்று வகுத்துரைப்பார்" (மேலது, 136)

"வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்துச்
சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டைஒண்கட்"
                    (திருக்கயிலாய ஞானவுலா, 41)

இவற்றில் காதன்மையால், தம்மையெல்லாம், நன்மைவிறல், நீர்மையவாய், தன்மையதாய், பேதையர்கள், கெண்டைஒண்கட் போன்ற சீர்கள் காய்ச்சீராக இல்லாததை உணரலாம்.  இச்சீர்களில் இருக்கக் கூடிய ஐகாரத்தைக் குறுக்கமாக எண்ணில் காய்ச்சீர் வரும். எனவே இவ்விடங்களில் யாப்பினை அலகிடும் போது ஐகாரத்தைக் குறுக்கமாக அலகிட்டுக் கொள்ளவேண்டுவது தெரிகின்றது.

ஆ. வெண்டளை மாற்றம்-எழுத்தை விடுத்தல்

பதினோராம் திருமுறையில் சேரமான்பெருமாள் நாயனாரின் திருக்கயிலாய ஞானவுலாவும், நம்பியாண்டார் நம்பியின் ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலையும் நேரிசை வெண்பா யாப்பில் அமைந்திருக்கின்றன. வெண்பாவிற்குள் கனிச்சீர் இடம்பெறக் கூடாது.   ஆனால், 

"வஞ்சியும் வேயும் வளர்தா மரைமொட்டும்
மஞ்சில்வரு மாமதிபோல் மண்டலமும்"(திருக்கயிலாய ஞானவுலா, 114)

"ஆடும் இறைவன் அமரர்குழாம் தற்சூழ
மாட மறுகில் வரக்கண்டு" (மேலது, 192)

"குடைபலவுஞ் சாமரையுந் தொங்கல்களுங் கூடிப்
புடைபரந்து பொக்கம் படைப்ப" 
(ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை, 116)

போன்ற பாடல்களில் மஞ்சில்வரு, அமரர்குழாம், தொங்கல்களும் என்ற சொற்கள் கனிச்சீராக அமைந்திருக்கின்றன.  இவற்றில் முறையே ல், ர், ல் ஆகிய எழுத்துக்களை விடுத்து அலகிட்டால் காய்ச்சீர் வரும்.  எனவே, இவ்விடங்களில் யாப்பினை அலகிடும் போது எழுத்தை விடுத்து அலகிட்டுக் கொள்ள வேண்டுவது தெரிகின்றது.

யாப்பில் புதுமை

ஆளுடையபிள்ளையார் திருத்தொகை 65 வௌ¢ளடிகளினால் ஆன கலிவெண்பா ஆகும்.  இதன் முதல் 40 அடிகளில் பெரும்பாலான கண்ணிகள் தனிச்சொல் பெற்றும் ஒருசில தனிச்சொல் பெறாதும் வந்துள்ளன.  41-60ஆம் அடிகள் தனிச்சொல் பெறாது வந்துள்ளன.  இறுதியடி முச்சீராக முடியாமல் நாற்சீராக முடிந்திருக்கின்றது.  அவ்வாறு முடியினும் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்பனவற்றுள் ஒரு வாய்ப்பாட்டினைக் கொண்டு முடிந்திருந்தால் மண்டிலக் கலிவெண்பா என்று கூறலாம்.  ஆனால் ஈற்றுச்சீர் "அழகிதே" என்ற கருவிளச்சீர் பெற்று முடிந்துள்ளது.  ஆதலால் இதைக் கலிவெண்பாவின் ஒருவகை என்று கூறலாம்.  கலிவெண்பா யாப்பின் வரலாற்றில் நம்பியாண்டார் நம்பி அவர்கள் இப்படியொரு புதுமை செய்தது பின்னால் வந்தவர்களினால் பெரிதும் தழுவிக் கொள்ளப்பட்டது எனலாம்.  பாரதியாரின் கண்ணன் பாட்டில் கண்ணன் என் சேவகன், குயில்பாட்டு ஆகியவற்றில் அளவொத்த வௌ¢ளடிகள் வந்து ஈற்றடி முச்சீரில் முடியாது நாற்சீரினால் முடிந்து நிற்பதைக் காணலாம்.

கட்டளைக் கலித்துறையினைத் "திருவிருத்தம்" என்று கூறும் மரபும் பதினோராம் திருமுறையில் காணமுடிகின்றது. இவ்வமைப்பு திவ்விய பிரபந்தத்திலும் காணலாம்.  "ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்" என்னும் நூல் கட்டளைக் கலித்துறை யாப்பிலானது.  ஆனால் இந்நூலுக்கு நம்பியாண்டார் நம்பி அவர்கள் இட்ட பெயர் வித்தியாசமாக இருப்பதைக் காணலாம்.

மும்மணிக்கோவையில் மூன்று வகையான யாப்பில் வகைக்குப் பத்துப் பாடல்கள் வீதம் முப்பது பாடல்கள் இருக்கவேண்டும்.

"அகல்வெண் பாக்கட் டளைக்கலித் துறையும்
முறையே தொகைபெற முப்ப தடுக்கி
அந்தாதித் தொடை யாகச் செய்வது
மும்மணிக் கோவையா மொழியுங் காலே" (முத்துவீரியம், நூ.1045)

என்பது விதி.  ஆனால், நக்கீரரின் திருவலஞ்சுழி மும்மணிக்கோவையில் அகவல் 5, வெண்பா 5, கட்டளைக் கலித்துறை 5 எனப் 15 பாடல்கள் மட்டும் அமைந்திருக்கின்றன.  முப்பது என்ற பாடல் வரையறையைப் பாதியாகக் குறைத்துப் பாடியிருப்பது நோக்கத்தக்கது.

இரட்டைமணிமாலையில் இரண்டு வகையான யாப்பில் வகைக்குப் பத்துப் பாடல்கள் வீதம் இருபது பாடல்கள் இருக்கவேண்டும்.

"இருபஃ தந்தா தித்துவெண் பாவும்
கட்டளைக் கலித்துறை யுங்கலந் துரைத்தல்
இரட்டை மணிமாலை யென்மனார் புலவர்" (முத்துவீரியம், நூ.1049)

என்பது விதி.  ஆனால், கபிலரின் சிவபெருமான் திருவிரட்டை மணிமாலையில் நேரிசை வெண்பா 19. கட்டளைக் கலித்துறை 18 என 37 பாடல்கள் அமைந்திருக்கின்றன.  இருபது என்ற பாடல் வரையறை இங்கு ஏறத்தாழ இருமடங்காகி இருப்பது நோக்கத்தக்கது.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுந்த பன்னிரு பாட்டியல் தான் முதன்முதலில் பாட்டியல் நூல்களுக்கான இலக்கணம் கூறுகின்றது.  இவற்றில் கூறப்பெற்ற மும்மணிக்கோவை மற்றும் இரட்டைமணிமாலைக்கு உரிய இலக்கணத்திற்குப் பதினோராம் திருமுறையில் அமைந்திருக்கக் கூடிய  நக்கீரரின் திருவலஞ்சுழி மும்மணிக்கோவை மற்றும் கபிலரின் சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை ஆகியவற்றிற்கான யாப்பு மாறி இருப்பதை உணரமுடிகின்றது.

திருஈங்கோய்மலை எழுபது என்பதில் இடம்பெற்றுள்ள 70 நேரிசை வெண்பாக்களும் அகரவரிசையில் பாடப்பெற்றிருக்கின்றன.  இது யாப்பியல் வரலாற்றில் ஒரு புதுமையாகும்.  ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய அகரவரிசை நீதிநூல்கள் தோன்றுவதற்கு முன்னமே பக்திப் பாடல்களை அகரவரிசையில் பாடும் முயற்சி மேற்கொள்ளப் பெற்றமைக்கு பதினோராம் திருமுறையில் இடம்பெற்றிருக்கக் கூடிய இந்நூல் சான்றாகத் திகழ்கின்றது.

யாப்பில் பழமை

ஆசிரியத்தில் நெடிலடி அமைத்துப்பாடும் வழக்கம் சங்க இலக்கியங்களில் காணக்கூடிய ஒன்று.  இந்நிலை பதினோராம் திருமுறை இலக்கியங்களிலும் அமைந்திருப்பதைக் காணலாம்.

அ. நேரிசை ஆசிரியத்தில் நெடிலடி

"கொடியேன் உள்ளங் கொண்ட சூழலுங் கள்ளக்"
  (திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, 10:4)

"மூவோம் மூன்று பயன்பெற் றனமே, நீஅவன்" (மேலது, 13:4)

"வானர மகளிர் வான்பொருள் பெற்றனை, அவரேல்" (மேலது, 13:8)

"கண்ணில் காண்பதெவ் வுலகினுங் காண்பன எல்லாம்"
  (கோயில் நான்மணிமாலை, 24:16)

ஆ. நேரிசை ஆசிரியம் தனிச்சொல்லுடன் நெடிலடி

"சடையே, நீரகந் ததும்பி நெருப்புக் கலிக்குமே
மிடறே, நஞ்சகந் துவன்றி அமிர்து பிலிற்றுமே
வடிவே, முளிஎரி சுவைஇத் தளிர்தயங் கும்மே
அடியே, மடங்கல்மதஞ் சீறி மலர்பழிக் கும்மே
அஃதான், றினையஎன் றறிகிலம் யாமே முனைதவத்"
(சிவபெருமான் திருமும்மணிக்கோவை, 4:1-5)

"வண்ணம், ஐஞ்சுதலை இவைஇப் பவள மால்வரை
மஞ்சுமி விலகிப் பகல்செகுக் கும்மே
என்னைப், பழமுடைச் சிறுகலத் திடுபலி பெய்வோள்
நெஞ்சகம் பிணிக்கும் வஞ்சமோ உடைத்தே
அஃதான்று, முளையெயிற்றுக் குருளை இன்றுயில் எடுப்ப" (மேலது, 7:1,3,5)

இ. நிலைமண்டில ஆசிரியத்தில் நெடிலடி

ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவையில் 4ஆவது பாடலில் 2, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21 ஆகிய வரிகள் நெடிலடி பெற்றிருக்கின்றன.  மேலும் 10ஆம் பாடலில் 6ஆம் வரியும்; 13ஆம் பாடலில் 5, 9ஆம் வரிகளும்; 16ஆம் பாடலில் 2, 4, 6, 8ஆம் வரிகளும்; 22ஆம் பாடலில் 7ஆம் வரியும்; 28ஆம் பாடலில் 4, 6ஆம் வரிகளும் நெடிலடிகளாக அமைந்திருக்கின்றன.

ஈ. நேரிசை ஆசிரியம் தனிச்சொல் பெற்ற நிலைமண்டிலம்
"சிரமே, விசும்பு போத உயரி இரண்டசும்புபொழி யும்மே
கரமே, வரைத்திரண் முரணிய விரைத்து விழும்மே
புயமே, திசைவிளிம்பு கிழியச் சென்றுசெறிக் கும்மே
அடியே, இடுந்தொறும் இவ்வுல கம்பெய ரும்மே
ஆயினும், அஞ்சுடர்ப் பிழம்பு தழீஇ
நெஞ்சகத் தொடுக்குமோ நெடும்பனைச் சூரே"
                          (மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை, 22)

இதுபோன்ற யாப்பமைப்பு சங்க இலக்கியங்களில் ஆங்காங்கு விரவி வந்திருப்பதைப் பதினோராம் திருமுறையாசிரியர்கள் கையாண்டிருப்பது பாராட்டுக்குரியது.

யாப்பு நிலை

பதினோராம் திருமுறையில் இடம்பெற்றிருக்கக் கூடிய இலக்கியங்கள் இரண்டு வகையான யாப்பு நிலைகளைப் பெற்றிருக்கின்றன.  அதாவது, ஒரே வகையான யாப்பில் அமைந்த இலக்கியங்கள் என்றும், ஒன்றுக்கும் மேற்பட்ட யாப்பில் அமைந்த இலக்கியங்கள் என்றும் கூறலாம்.  இவற்றை முறையே தனியாப்புப் பெற்றவை என்றும், விரவிய யாப்புப் பெற்றவை என்றும் முறையே கூறலாம்.

1. தனியாப்புப் பெற்றவை
அ. நேரிசை வெண்பா

அற்புதத் திருவந்தாதி (101 பாடல்கள்), சேத்திரத் திருவெண்பா (24 பாடல்கள்), கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி (100 பாடல்கள்), திருஈங்கோய்மலை எழுபது (70 பாடல்கள்), கார் எட்டு (8 பாடல்கள்), சிவபெருமான் திருவந்தாதி-கபிலர் (100 பாடல்கள்), சிவபெருமான் திருவந்தாதி-பரணதேவர் (100 பாடல்கள்) ஆகிய ஏழு நூல்கள் நேரிசை வெண்பாவால் ஆனவை.

ஆ. கலிவெண்பா

கலிவெண்பாவில் நேரிசைக் கலிவெண்பா, இன்னிசைக் கலிவெண்பா என்ற இரண்டு வகைகள் தனித்தனியாகவும் இணைந்தும் பதினோராம் திருமுறையில் இடம்பெற்று இருக்கின்றன.  நேரிசைக் கலிவெண்பாவில் சேரமான்பெருமாள் நாயனாரின் 'திருக்கயிலாய ஞானவுலா' (197 பாடல்கள்) மற்றும் நக்கீரரின் 'போற்றித் திருக்கலிவெண்பா' (45 பாடல்கள்)வும்; நேரிசைக் கலிவெண்பாவும் இன்னிசைக் கலிவெண்பாவும் இணைந்த இலக்கியமாக நம்பியாண்டார் நம்பியின் 'ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை' (65 வெள்ளடிகள்)யும் அமைந்திருப்பதைக் காணலாம்.

இ. நேரிசை ஆசிரியம்

திருவாலவாயுடையாரின் 'திருமுகப் பாசுரம்' (1 பாடல்) என்னும் ஒரு நூல் மட்டும் 12 வரிகள் கொண்ட நேரிசை ஆசிரியம் ஆகும்.  இதன் ஈற்றசை ஏகாரமாகத் திகழ்கின்றது.

ஈ. இணைக்குறளாசிரியம்

பதினோராம் திருமுறையில் இருக்கக் கூடிய ஆறு நூல்கள் இணைக்குறள் ஆசிரியமாகத் திகழ்கின்றன.  அதாவது, 55 அடிகள் கொண்ட திருவெழு கூற்றிருக்கையில் குறளடி (11, 38) மற்றும் சிந்தடி (3, 4, 8, 9, 14, 17, 29, 45, 54)யும், 67 அடிகள் கொண்ட பெருந்தேவபாணியில் குறளடி (38) மற்றும் சிந்தடி (63)யும், 100 அடிகள் கொண்ட கோபப் பிரசாதத்தில் குறளடி (11, 77, 83, 92) சிந்தடி (10, 99) மற்றும் நெடிலடி (49)யும், 158 அடிகள் கொண்ட நக்கீரரின் திருக்கண்ணப்ப தேவர் திருமறத்தில் குறளடி (81, 113, 119, 140, 153, 154) சிந்தடி (97, 98, 112, 127, 128, 136, 157) மற்றும் நெடிலடி (2, 3, 4, 5, 25, 31, 73, 108, 139, 143, 152)யும், 38 அடிகள் கொண்ட கல்லாடதேவரின் திருக்கண்ணப்பதேவர் திருமறத்தில் குறளடி (23) மற்றும் சிந்தடி (36)யும், திருமுருகாற்றுப்படையில் சிந்தடி (112, 113, 316)யும் பெற்று இணைக்குறள் ஆசிரியமாகத் திகழ்கின்றன.

உ. ஆசிரிய விருத்தம்

காரைக்காலம்மையாரின் 'திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகம்' (1-11 பாடல்கள்) மற்றும் 'மூத்த திருப்பதிகம்' (1-11 பாடல்கள்) ஆகியவை அறுசீர் பெற்ற ஆசிரிய விருத்தமாகவும்; நம்பியாண்டார் நம்பியின் 'திருநாவுக்கரசு தேவர் திருவேகாதச மாலை'யில் முதற்பாடல் 16சீர்கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாகவும்; 2, 3, 5, 6, 7, 8 ஆகிய பாடல்கள் எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாகவும்;  4, 11 ஆகிய பாடல்கள் எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாகவும்;  8, 10 ஆகிய பாடல்கள் பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாகவும் அமைந்திருக்கின்றன.

ஊ. கட்டளைக் கலித்துறை

நேரசையை முதலாகக் கொண்டு தொடங்கும் அடி 16 எழுத்துக்களையும், நிரையசையை முதலாகக் கொண்டு தொடங்கும் அடி 17 எழுத்துக்களையும் பெற்றவற்றைக் கட்டளையடிகள் என்பர்.  இக்கட்டளையடிகள் கலித்துறை யாப்புடன் இயையும் போது கட்டளைக் கலித்துறை என்றாகின்றது.  இந்நிலையில் பதினோராம் திருமுறையில் சேரமான்பெருமாள் நாயனாரின் 'பொன்வண்ணத் தந்தாதி' (101 பாடல்கள்), பட்டினத்துப் பிள்ளையாரின் 'திருவேகம்பமுடையார் திருவந்தாதி' (100 பாடல்கள்), நம்பியாண்டார் நம்பியின் 'கோயில் திருப்பண்ணியர் விருத்தம்' (89 பாடல்கள்), ஆளுடைய பிள்ளையார் 'திருச்சண்பை விருத்தம்' (11 பாடல்கள்) ஆகிய நான்கு நூல்கள் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்திருக்கின்றது.

2. விரவிய யாப்புப் பெற்றவை
அ. நேரிசை வெண்பா

திருவிரட்டைமணிமாலை (2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20), திருவாரூர் மும்மணிக்கோவை (2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29), திருவலஞ்சுழி மும்மணிக்கோவை (2, 5, 8, 11, 14), மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை (1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19), சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை (1, 3, 5, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31, 33, 35, 37), சிவபெருமான் திருமும்மணிக்கோவை (2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29), மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை (2, 5, 8, 11, 14, 17, 20, 23), கோயில் நான்மணிமாலை (1, 5, 9, 13, 17, 21, 25, 29, 33, 37), திருக்கழுமல மும்மணிக்கோவை (2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29), திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29), திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை (1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19), ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை (2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29), ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் (2, 44) போன்ற 13 நூல்களில் நேரிசை வெண்பாக்கள் விரவி வந்திருக்கின்றன.  மேலும் நூற்பயன் என்ற நிலையில் திருவெழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, நக்கீரரின் திருக்கண்ணப்பதேவர் திருமறம் போன்ற நூல்களில் முறையே ஒவ்வொரு நேரிசை வெண்பாவும் திருமுருகாற்றுப் படையின் ஈற்றில் பத்து நேரிசை வெண்பாக்களும் இடம்பெற்றிருக்கின்றன.

ஆ. நேரிசை ஆசிரியம்

திருவாரூர் மும்மணிக்கோவை (1, 7, 10, 13, 16, 19, 22, 25, 28), திருவலஞ்சுழி மும்மணிக்கோவை (1, 4, 7, 10, 13), சிவபெருமான் திருமும்மணிக்கோவை (1, 4, 7, 10, 13, 16, 19, 22, 28), மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை (1, 7, 13, 22), கோயில் நான்மணிமாலை (4, 8, 16, 20, 24, 36, 40), திருக்கழுமல மும்மணிக்கோவை (10, 13, 16, 19, 25, 28), திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28), திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது (1, 2, 3, 4, 5, 6, 7, 9), ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை (19, 25), ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் (37) போன்ற பத்து நூல்களில் நேரிசை ஆசிரியம் விரவி வந்திருக்கின்றன.

இ. இணைக்குறளாசிரியம்

திருவாரூர் மும்மணிக்கோவை (4), சிவபெருமான் திருமும்மணிக்கோவை (25), மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை (4, 10, 16, 19), கோயில் நான்மணிமாலை (28, 32), திருக்கழுமல மும்மணிக்கோவை (1, 4, 7), திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது (10), ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை (7) போன்ற ஏழு நூல்களில் இணைக்குறளாசிரியம் விரவி வந்திருக்கின்றன.

ஈ. நிலைமண்டில ஆசிரியம்

கோயில் நான்மணிமாலை (12), திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது (8, 10), ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை (1, 4, 10, 13, 16, 22, 28) போன்ற மூன்று நூல்களில் நிலைமண்டில ஆசிரியம் விரவி வந்திருக்கின்றன.

உ. ஆசிரிய விருத்தம்

கோயில் நான்மணிமாலையில் எழுசீர் (19, 27) எண்சீர் (3, 7, 31, 35) பன்னிருசீர் (23) பதினாறுசீர் (11, 39) ஆகிய ஆசிரிய விருத்தங்களும் சந்தவிருத்தமும் (15); ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகத்தில் அறுசீர் (10, 12, 15, 28, 31) எழுசீர் (5, 18, 22, 27) எண்சீர் (4, 8, 14, 16, 17, 19, 20, 21, 23, 24, 25, 29, 32, 33, 34, 35, 39, 48) பதின்சீர் (9, 44) பன்னிருசீர் (6, 7, 30, 36, 43) பதினான்குசீர் (11) ஆகிய ஆசிரிய விருத்தங்களும் இவ்விரு நூல்களில் விரவி வந்திருக்கின்றன.

ஊ. கட்டளைக் கலித்துறை

திருவிரட்டைமணிமாலை (1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19), திருவாரூர் மும்மணிக்கோவை (3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30), திருவலஞ்சுழி மும்மணிக்கோவை (3, 6, 9, 12, 15), மூத்தநாயனார் திருவிரட்டைமணிமாலை (2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20), சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை (2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36), மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை (3, 6, 9, 12, 15, 18, 21), கோயில் நான்மணிமாலை (2, 6, 10, 14, 18, 22, 26, 30, 34, 38), திருக்கழுமல மும்மணிக்கோவை (3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30), திருநாரையூர் விநாயகர் திருவிரட்டைமணிமாலை (2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20), ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை (3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30), ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் (3) போன்ற பதின்மூன்று நூல்களில் கட்டளைக் கலித்துறை விரவி வந்திருக்கின்றன.

எ. கலிப்பா, கலித்தாழிசை, கலிவிருத்தம், வஞ்சித்துறை, மருட்பா

ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகத்தில் 41ஆவது பாடல் நேர் அசையில் தொடங்கும் பாதி அடிக்குப் பதினோரெழுத்துக் கொண்ட கட்டளைக் கலிப்பாவாகவும்; முதற் பாடல் ஒருபோகு கொச்சகக் கலிப்பாவாகவும்; 26ஆவது பாடல் கலித்தாழிசையாகவும்; 13, 46, 47ஆம் பாடல்கள் கலிவிருத்தமாகவும்; 38, 39ஆம் பாடல்கள் வஞ்சித்துறையாகவும்; 42ஆவது பாடல் முதலிரண்டடிகள் வௌ¢ளடியாகவும் ஈற்றிரண்டடிகள் எழுசீர் ஆசிரியமாகவும் அமைந்த மருட்பாவாகவும் விரவி வந்திருக்கின்றன.  

இவ்வாறு பதினோராம் திருமுறையில் மேற்காணும் முறைகளில் யாப்பமைப்பு அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக