வெள்ளி, 2 நவம்பர், 2018

திருப்பரங்கிரிக் குமரனூசல் - ஓர் ஆய்வு

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரைக்கு அருகில் அமைந்த திருப்பரங்குன்றமும் ஒன்று.  இதனைத் திருப்பரங்கிரி என்றும், திருப்பரங்குன்று என்றும் வழங்குவர்.  இங்கு உறைந்திருக்கும் முருகப்பெருமானை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் முதலாவதாக வைத்து எண்ணுகிறார். திருவிளையாடற்புராணம், சீகாளத்திப் புராணம், திருப்பரங்குன்றப் புராணம், கந்தபுராணம் போன்ற பல புராணங்களில் இத்தல முருகனை எண்ணப்படுவதைக் காணும்போது, இத்தல முருகன் மீது பல இலக்கியங்கள் இருப்பது தெளிவாகிறது.  புராணங்கள் அன்றி பல சிற்றிலக்கியங் களும் இத்தல முருகன் மீது பாடப்பட்டுள்ளதைத் தமிழிலக்கிய வரலாறு சுட்டும். அவற்றுள், திருஎவ்வுளூர் இராமசாமி செட்டியாரின் 'திருப்பரங்கிரிக் குமரனூசல்' என்பதும் ஒன்று.  

இந்நூல் 'ஞானபோதினி' என்னும் இதழில் 1901ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் பக்.301-303இல் நேரிசை வெண்பாவாலான விநாயகர் காப்பு ஒன்றுடனும், எண்சீர் ஆசிரிய விருத்தம் பதினொரு பாடல்களுடனும் வெளிவந்துள்ளது.  நூலாசிரியரே இந்நூலை இவ்விதழில் வெளியிட்டுள்ளார்.  இந்நூல் வேறு எதிலும் இல்லாத காரணத்தினாலும், நூல் வெளிவந்து நூறாண்டுகளுக்கும் மேலானதாலும், இந்நூலை தமிலுலகிற்கு மீண்டும் அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு இந்நூலின் சில சிறப்புகளை வெளிப்படுத்துவதாக இவ்வாய்வு அமைகிறது.

ஊசல் - அமைப்பு

ஊசல் என்பது அசைவு, ஊஞ்சல், ஊசற் பருவம், கலம்பக உறுப்பு, தடுமாற்றம், பிரபந்த வகை போன்றவற்றைக் குறிக்கிறது.  ஊசல், ஊஞ்சல், பொன்னூசல், ஊசல் திருநாமம், ஊஞ்சற்கவிதை என்ற பெயர்கள் ஊசலைக் குறிக்கும் இலக்கியப் பெயர்களாக ஆளப்பெற்றுள்ளன.

இச்சொல், ஊஞ்சலைக் குறிக்கும் அடிப்படைப் பொருண்மையைக் கொண்டு, பின்பு அங்குமிங்கும் ஆடும் பிற நிலைகளையும் சுட்டி வருகின்றது.  சங்க காலந் தொடங்கி இச்சொல்லின் ஆட்சி நிலவி வருகிறது.

"தாழைவீழ் கயிற்று ஊசல் தூங்கி" (அகம்.20.6)
"புனத்தயல், ஊச லூர்ந்தாட" (கலி.37.13-14)

என்று அகநானூறும், கலித்தொகையும் அசைவு என்ற பொருண்மையில் ஊசல் பற்றிக் குறிப்பிடுகின்றன.  ஊசல் பாட்டுக் குறித்துச் சிலப்பதிகாரம் ஊசல் வரியில் கலித்தாழிசை யாப்பில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளன.  சிலப்பத்திகாரத்தைத் தொடர்ந்து இவ்வூசல் தனியொரு இலக்கியமாக மாணிக்கவாசகரின் திருப்பொன்னூசல் திகழ்கிறது.

தனியொரு இலக்கியமாக ஊசல் இருப்பினும், கலம்பகம், பிள்ளைத்தமிழ் போன்றவற்றில் முறையே உறுப்பாகவும், பெண்பால் பருவமாகவும் அமைந்திருக் கின்றது.  

ஊசல் - யாப்புநிலை

சிலம்பில் கலித்தாழிசையாகவும், கலம்பக உறுப்பாக அமையும்போது கலித்தாழிசையுடன் ஆசிரிய விருத்த யாப்பிலும் அமையும் ஊஞ்சற்பாட்டு, மாணிக்கவாசகரின் திருப்பொன்னூசலில் கொச்சகக் கலியாக மாறுகின்றது.  இந்நிலையில், இங்கு இடம்பெற்றுள்ள 'திருப்பரங்கிரிக் குமரனூசல்' எண்சீர் ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்துள்ளதைக் காணும்போது இவ்விலக்கியத்தின் யாப்பு வளர்ச்சி புலப்படுகிறது.

திருப்பரங்கிரிக் குமரனூசல் - சிறப்புகள்
மகுடம்

பாடல் சுவை கருதி, சிற்றிலக்கியப் பாடல்களில் பெரும்பான்மை மகுடம் வைத்துப் பாடுவது இயல்பு.  இவ்வகையில் திருப்பரங்கிரிக் குமரனூசலில்  'திருப்பரங்கி ரிக்கரசே யாடி ரூசல்' என்னும் தொடர் மகுடமாக அமைக்கப் பெற்றுள்ளது.

ஊஞ்சல் அமைப்பு

திருப்பரங்குன்ற திவ்விய மண்டபத்தில்  முருகப் பெருமான் ஆடுவதற்கான ஊஞ்சல் அமைக்கப்படுகிறது.  செம்பவளக் கால்கள் நாட்டியும், வயிரமணிக் கொடுங்கை பூட்டியும், மரகதத்தால் ஆன விட்டம் கூட்டியும், முத்துமணி வடம் பூட்டியும், கனக பீடம் இட்டும் இவ்வூஞ்சல் அமைக்கப்பட்டுள்ளது (பா.1).

வடம் ஆட்டுவோர்

திருப்பரங்குன்ற திவ்விய மண்டபத்தில் அமைக்கப்பெற்றிருக்கும் ஊஞ்சலில் முருகப்பெருமான் வீற்றிருக்கும் போது அவ்வடத்தை மலர்மகள், கலைமகள், ரதிமாதர், சசிமாதர், ஆகியோர் வடம் தொட்டு ஆட்டுகின்றனர். அப்போது, மேனகை, அரம்பை போன்றோர் கவரி வீசவும், சுரமாதர் வாழ்த்துக் கூறவும் செய்கின்றனர் (பா.2).

முருகன் பெருமைகள்

அரனுதற்கண் வந்தவர், ஆறுமுகங் கொண்டர், இரவிநிகர் மேனியர், ஈராறு தோளுடையவர், உரவர் புகழுர உடையவர், ஊழகற்றி ஆள்பவர், அந்தணர் சூழ்ந்திறைஞ்சிப் போற்றுந் திறனுடையவர், சயங்கொள் வடிவேல் கொண்டவர், சேவற் கொடி உடையவர், வயங்குசமு தாடுடையவர், வண்மயில் வாகனர், புனித வெட்சித் தாருடையவர், தயங்கிடாது அருள்சுரந்து காப்பவர், பால்வண்ணக் கோமுரைத்தவர், பவளவண்ணத் துணை நயந்தவர், மால்வண்ணர்க்கு அரசளித்தவர், வண்பொன்வண்ணர்க்கு அருள் புரிந்தவர், மேக வண்ணனின் மருகர் என்றெல்லாம் முருகப் பெருமானின் பெருமைகளை இந்நூலாசிரியர் சுட்டிச் செல்கின்றார்.

சோமன் சிரங்கொண்ட பசுபதியாகிய சிவபெருமான், சுவர்க்கப் பால் அளித்த பார்வதி தேவி, வெண்ணெய் உண்டிடும் மாமன் திருமால் ஆகியோரைப் பற்றியும் இந்நூலுள் குறிப்பிடப்பெற்றுள்ளது.

இதுபோன்று பல செய்திகள் இடம்பெற்றிருக்கும் இந்நூலின் சிறப்புணர்ந்து, அருகிக் கிடக்கும் இந்நூல் இங்குப் பதிப்பிக்கப்பெறுகிறது.

(நூல்)
விநாயகர் காப்பு - நேரிசை வெண்பா

தேசம் புகழுந் திருப்பரங்கி ரிக்குகன்ற
னூசற்பா மாலைக் குவந்தருளும் - வாசத்
திதழிபுனை யும்பெருமா னீன்றமத யானை
வதனமுறு மெம்பெருமான் வந்து.

(நூல்)

பேர்பரவுந் திவ்வியமண் டபத்தி னூடே
பிறங்குமுயர் செம்பவளக் கால்க ணாட்டி
யேர்பரவும் வயிரமணிக் கொடுங்கை மாட்டி
யிசைந்தொளிரு மரகதத்தால் விட்டங் கூட்டி
யார்பரவு முத்துமணி வடங்கள் பூட்டி
யவிர்கனக பீடமிட்ட வூசன் மீது
சீர்பரவும் பிடியொருமா னொருபான மேவத்
திருப்பரங்கி ரிக்கரசே யாடி ரூசல். (1)

செங்கமல மலர்மகளோர் வடந்தொட் டாட்டச்
சிலைநனுதற் கலைமகளோர் வடந்தொட் டாட்டச்
சங்கொளிர்கை ரதிமாதோர் வடந்தொட் டாட்டச்
சசிவதனச் சசிமாதோர் வடந்தொட் டாட்டச்
மங்கலமே னகையரம்பை கவரி வீச
வளமருவுஞ் சுரமாதர் வாழ்த்துக் கூறத்
திங்கள்பல வெனத்தரளத் தார நாலத்
திருப்பரங்கி ரிக்கரசே யாடி ரூசல். (2)

சோதிமணி முடிகளுயர் முடிகண் மேவச்
சுடர்செய்மணிக் குண்டலங்கள் செவிகண் மேவ
வேதமிலா தவிர்வலயந் தோட்கண் மேவ
விசைந்தொளிரு முத்தார மார்பின் மேவ

வோதருவீ ரக்கழல்கண் மலர்த்தாண் மேவ
வுயர்ந்தநவ வீரர்விண்ணோர் பக்க மேவத்
தீதிலாத் தமிழ்ப்பயிர்கள் செழித்து மேவத்
திருப்பரங்கி ரிக்கரசே யாடி ரூசல். (3)

நாலார ணங்களெனு மறைக ளார்ப்ப
நவமுறுதம் புருவீணை நயங்க ளார்ப்பத்
தோலாத கவிப்புலவர் பாட லார்ப்பச்
சுபமுயர்வாத் தியமாம்பல் லியங்க ளார்ப்பக்
கோலாக லத்தமரர் வாழ்த்த லார்ப்பக்
குலவியமெய் யடியவர்தோத் திரங்க ளார்ப்பச்
சேலாரும் விழியாரா லாத்தி யேந்தத்
திருப்பரங்கி ரிக்கரசே யாடி ரூசல். (4)

சோமனையொண் சிரங்கொள்பசு பதிகண் டாட
சுவர்க்கப்பா லளித்தவுமை மகிழ்வி னாட
மாமதிப்பா ரணன்றீர மேவி யாட
வாரிவெண்ணெ யுண்டிடுமோர் மாம னாடக்
கோமளமா ரமுதகும்பத் தனமார் தேவ
குஞ்சரியா மமுதனையாள் குலவி யாடத்
தேமலியும் வெட்சியந்தார் புயங்க ளாடத்
திருப்பரங்கி ரிக்கரசே யாடி ரூசல். (5)

சம்புருக மொழியுரைத்த சாமி நாத
தயாநிதியே மாநிதியே யெனச்சீ ரார்ந்த
கிம்புருடர் கருடர்வித்யா தரர்க ணாகர்
கேதமகல் பொன்னாடர் மிகக்கொண் டாடத்
தும்புருநா ரதரினிய கீதம் பாடத்
தூயரம்பை யுருப்பசிமா துடைகண் காட்டுஞ்
செம்புருவ வின்மடவா ராட னீடுந்
திருப்பரங்கி ரிக்கரசே யாடி ரூசல். (6)

நவ்விநேர் விழியாளோர் வசிய மாது
நாயகனால் வெட்டுண்ட கைதா வென்னப்
பவ்வமா ருலகினருள் மகிழ்வு நீடிப்
பரவப்பங் கேருகக்கை பாலித் தாண்ட
யவ்வனம னோன்மனியின் பாலா மேலா
யதார்த்தமிகு தெய்வானைக் கினிய லோலா
திவ்வியவண் சுனைநீர்விண் மாத ராடுந்
திருப்பரங்கி ரிக்கரசே யாடி ரூசல். (7)

அரனுதற்கண் வந்தவரே யாடி ரூசல்
ஆறுமுகங் கொண்டவரே யாடி ரூசல்
இரவிநிகர் மேனியரே யாடி ரூசல்
ஈராறு தோளுடையீ ராடி ரூசல்
உரவர்புக ழுரவுடையீ ராடி ரூசல்
ஊழகற்றி யாள்பவரே யாடி ரூசல்
திரமன்னு மந்தணர்சூழ்ந் திறைஞ்சிப் போற்றுந்
திருப்பரங்கி ரிக்கரசே யாடி ரூசல். (8)

சயங்கொள்வடி வேலுடையீ ராடி ரூசல்
தகுசேவற் கொடியுடையீ ராடி ரூசல்
வயங்குசமு தாடுடையீ ராடி ரூசல்
வண்மயில்வா கனமுடையீ ராடி ரூசல்
புயங்கள்வரை யெனவுடையீ ராடி ரூசல்
புனிதவெட்சித் தாருடையீ ராடி ரூசல்
தியங்கிடா தருள்சுரந்து காக்கு மெங்கள்
திருப்பரங்கி ரிக்கரசே யாடி ரூசல். (9)

பால்வண்ணற் கோமுரைத்தீ ராடி ரூசல்
பவளவண்ணற் றுணைநயந்தீ ராடி ரூசல்
மால்வண்ணற் கரசளித்தீ ராடி ரூசல்
வண்பொன்வண்ணற் கருள்புரிந்தீ ராடி ரூசல்
மேல்வண்ணச் சூர்தடிந்தீ ராடி ரூசல்
மேகவண்ணன் மருகென்றீ ராடி ரூசல்
சேல்வண்ண விழிமடவார் சிறக்குந் தூய
திருப்பரங்கி ரிக்கரசே யாடி ரூசல். (10)

தேறுமறை யாகமசாத் திரங்கள் வாழச்
செப்பரிய கௌமார சமயம் வாழ
வீறுதருந் திவ்யசடக் கரமும் வாழ
விபூதிருத்தி ராக்கமணி மேலாய் வாழக்
கூறுமழை முகில்வாழப் பசுக்கள் வாழக்
குறையகலந் தணர்புரியும் வேள்வி வாழச்
சீறிடா திதுபடித்தோர் கேட்டோர் வாழத்
திருப்பரங்கி ரிக்கரசே யாடி ரூசல். (11)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக