உன்னதமானது மனித வாழ்க்கை. உயிரினங்களில் பகுத்தறியும் ஆறாவது அறிவு மனிதனுக்குத்தான் உண்டு. ஆறாவது அறிவு செயல்படும்போதுதான் மனிதன் மனிதனாக வாழ்கின்றான். இதற்கிடையில் ஏற்படும் 'இன்ப-துன்பங்களுக்கு ஆறாவது அறிவைச் சரியாகப் பயன்படுத்தாததே காரணம்' என்று கூறும் யோகிராஜ் வேதாத்ரி மகரிஷி அவர்களின் வாழ்க்கை குறித்த சில சிந்தனைகளை இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.
இயற்கையில் மனிதன்
இயற்கை நிகழ்த்தும் ஒவ்வொரு நிகழ்வும் மனித வாழ்க்கைக்குப் பாடமாகத் திகழ்கின்றது. இயற்கையில் காணப்படக்கூடிய ஒவ்வொன்றின் அசைவிலும் மனித வாழ்க்கைக்குத் தேவையான தத்துவக் கருத்துக்கள் இடம்பெற்றிருக்கின்றன. இரவு பகல் மாறிமாறி வருவது வாழ்வில் இன்பதுன்பங்கள் மாறிமாறி வரும் என்பதையும், வளர்பிறை தேய்பிறை போன்று வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் அமையும் என்பதையும், ஒரு வித்து செடியாகி மரமாகி பூத்துக் காய்த்து உதிர்ந்து மீண்டும் வித்தாவது மனிதனின் தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி மீண்டும் தோற்றம் போன்றவற்றிற்குக் குறியீடாக அமைகின்றன. இயற்கையில் நிகழக்கூடிய அனைத்து செயல்களும் மனிதனுடைய வாழ்க்கையில் நிகழக்கூடியதே என்பதை மகரிஷி அவர்கள், "முற்றறிவாக உள்ளது இயற்கை, மனிதனானவன் இயற்கையின் ஒரு பகுதி. பகுதி அறிவிலிருந்து முற்றறிவை நோக்கி உயர்ந்து கொண்டே இருக்கும் ஒரு தத்துவந்தான் மனிதன்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும், இயற்கையானது மனிதனுக்கு அறிவின் பெருக்கத்திற்குரிய பாடங்களைத் தந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு இயக்கமும், ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு அனுபோகமும் மனிதனுக்கு இயற்கையின் இரகசியத்தை, பெருமையை, மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கிறது" (வாழ்க்கை மலர்கள், ப.6) என்று மனிதனை இயற்கையின் ஒரு உறுப்பாகவே காண்கின்றார்.
மனித வாழ்க்கை
பொதுவாக மனித வாழ்க்கை பல்வேறு தரப்பட்ட மக்களின் செயல்பாடுகளால் மாறுபட்டமைகின்றது. ஒவ்வொருவரின் வாழ்விலும் சிக்கல்கள் தோன்றுகின்றன. சிக்கலை விடுவிடுக்கும் வழி தெரியாமல் பலருடைய வாழ்க்கை கேள்விக்குறியாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம்? ஆறறிவு படைத்த மனிதன் ஏன் சில நேரங்களில் மிருகமாக மாறுகின்றான்? துன்பமே காணாமல் இன்பமாக வாழ முடியாததற்கு என்ன காரணம்? வாழ்க்கையின் தத்துவம் என்ன? தம்முடைய கடமை என்ன? போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரியாமல்தான் பலர் இடர்ப்படுகின்றனர். இவ்விடர்ப்பாட்டை களைந்தால் இன்பம் தானாக வரும். இவ்வினாக்களுக்கு மகரிஷி அவர்கள் "வாழ்க்கை மலர்கள்" என்னும் நூலில் தக்கவாறு பதிலளித்துள்ளார்.
ஆறறிவு படைத்த மனிதன் தன் அறிவுத்திறனை உணராமல், பகுத்தறிவின் மயக்கத்தில் செயல்படுவதினால் துன்பத்திற்கு ஆளாக நேரிடுகின்றான். இதனை மகரிஷி,
"மனிதனிடம் தன்னிலையை அறியத்தக்க ஆறாவது அறிவுநிலை கூடியுள்ள போதும் அவன் உடல் ஐயுணர்வு உயிர்கள் மூலமே பரிணாம வரிசையில் தோன்றியதால் ஆறாவது அறிவு வளர்ச்சிபெறும் வரையில் ஐயுணர்வு மயக்கத்தில்தான் வாழ்ந்து வருகிறான். இந்த நிலையில் உணர்ச்சி மயமாகிப் புரியும் செயல்களின் விளைவாகப் பலவிதச் சிக்கல்களை வாழ்வில் ஏற்படுத்திக் கொண்டு துன்பங்களை அனுபவிக்கின்றான்" என்கின்றார்.
அறிவு குறைவதினால் இயற்கையின் உண்மையும் கடமையும் தடுமாறுகின்றது. இத்தடுமாற்றமே வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன. இதனை மகரிஷி,
"அறிவின் குறைபாட்டினால் இயற்கை நியதி தெரிவதில்லை. செயல் விளைவுத் தத்துவம் புரிவதில்லை.
தவறு செய்தால் இன்றோ, நாளையோ, அறிவிற்கோ, உடலுக்கோ துன்பம் விளையும் என்பது தெரிவதில்லை. இத்தகைய அறியாமையால் செய்த தவறுகளின் காரணமாகப் பெருக்கிக் கொள்ளும் துன்பங்களே வியாதிகளாகவும், வாழ்க்கைச் சிக்கல்களாகவும் நம்முன் எழுந்து நிற்கின்றன.
அறிவின் குறைபாட்டால் சமுதாய ஒழுங்கமைப்பு விதிகள் புரிவதில்லை. பலர் இணைந்த கூட்டுறவு வாழ்வு எனும் சமுதாயத்தின் பராமரிப்புக்கும், காப்புக்கும் மேம்பாட்டுக்குமான விதிமுறைகளை அறியாமல் அல்லது அவமதித்து, அதன் விளைவாகச் சந்திக்கும் துன்பங்கள் தாம் வாழ்க்கைச் சிக்கல்களாக மாறுகின்றன"(ப.15) என்கின்றார்.
சிக்கலான வாழ்க்கையிலிருந்து விடுபட மனம் அமைதி பெறவேண்டும் என்று சிக்கலிலிருந்து விடுபட வழி காணுகின்றார். இவ்வமைதி எவ்வாறு அமையும் என்பதை,
"குடும்ப அமைதியைப் பெற, சலனமில்லாததும், விசாலமானதுமான மனம் வேண்டும். எதையும் தாங்கும் இதயம் என்பார்களே அது இங்கேதான் வேண்டும். பொறுமை, சகிப்புத்தன்மை இவை எல்லையின்றித் தேவையாகும். எவ்வளவு பெரிய குழப்பமானாலும் பொறுமை ஒன்றினாலேயே வெற்றி கண்டுவிடலாம்.
பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமையும், பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும். அதேபோல் பிறர் கூறும் கடுஞ்சொற்களையும், அவை சொல்லப்படாதது போல் பாவித்து ஒதுக்கிவிடவேண்டும். அப்போதுதான் அமைதி பிழைக்கும்" (ப.59) என்று மகரிஷி கூறுகின்றார்.
மனிதனின் கடமை
உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் சில முக்கிய கடமைகள் உண்டு. அக்கடமைகளைச் செயலாற்றும் விதம் கொண்டே அவை உலக வரலாற்றில் பதிவு செய்யப்படுகின்றன. மனிதனும் அவ்வாறுதான் பதிவு செய்யப்படுகின்றான். பொதுவாக, மனிதனைத் தனக்காக வாழ்பவன், குடும்பத்திற்காக வாழ்பவன், சுற்றத்தாருக்காக வாழ்பவன், ஊராருக்காக வாழ்பவன், உலகத்தாருக்காக வாழ்பவன் என்று அவனது கடமைகளை எல்லையாகக் கொண்டு ஐந்து வகைகளாகப் பிரிப்பர். ஆனால், மகரிஷி அவர்கள் இவ்வைந்து மனிதக் கடமைகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்துகின்றார். இவர்கள் வேறுவேறானவர்கள் அல்ல; எல்லாம் ஒருவரே என்கின்றார்.
'தாம், குடும்பம், சுற்றம், ஊரார், உலகம்' ஆகிய ஐந்தும் மனிதனுக்குடைய கடமைகள் என்று மகரிஷி குறிப்பிடுகின்றார். இவ்வைந்து வகையான கடமைகளில் முக்கியத்துவமான கடமை எது, முக்கியத்துவம் இல்லாத கடமை எது என்றும் பாகுபடுத்துகின்றார். அதாவது, "இந்த ஐவகையையும் அவரவர்கள் ஆற்றலுக்கும், வயதிற்கும், அறிவிற்கும் தக்கவாறு உயர்த்திக் கொண்டே போகலாம். ஆனால், முதல் முக்கியத்துவம் உடலில் இருக்கவேண்டும். இரண்டாவதாகக் குடும்பம், பிறகு சுற்றம், ஊரார், உலகம் என்று இவ்வாறு விரிய வேண்டும்" (ப.79) என்கின்றார்.
ஒருவன் தன்னுடைய கடமை எது என்று முதலில் உணரவேண்டும். தன்னுடைய கடமையில் தவறாது நெறிபிறழாது இருக்கவேண்டும். இவ்வாறு இருப்பவனால்தான் பிற வகை கடமைகளைச் சரிவர செய்யமுடியும். அதாவது, தன்னுடைய கடமையை உணர்ந்தவனால்தான் குடும்பத்தின் கடமையை உணரமுடியும். தன்னுடைய கடமையையும் குடும்பத்தின் கடமையையும் உணர்ந்தவனால்தான் சுற்றத்தாரின் கடமையை உணரமுடியும். தன்னுடைய கடமையையும், குடும்பத்தின் கடமையையும், சுற்றத்தாரின் கடமையையும் உணர்ந்தவனால்தான் ஊராரின் கடமையை உணரமுடியும். தன்னுடைய கடமையையும், குடும்பத்தின் கடமையையும், சுற்றத்தாரின் கடமையையும், ஊராரின் கடமையையும் உணர்ந்தவனால்தான் உலகத்தாரின் கடமையை உணரமுடியும். ஆக, முதலில் தன்னையும் அடுத்தே பிறவற்றையும் உணர்ந்து செயல்படவேண்டும்.
மனிதன் தன்னுடைய கடமைகளைச் செயற்படுத்த அவனுக்குத் தக்க அறிவு வேண்டுவது அவசியம். அறிவுசால் ஒருவனால் மட்டுமே தாம் எடுத்த காரியத்தை செவ்வனே செய்துமுடிக்க முடியும். மகரிஷி அவர்கள் அறிவுத்திறனை ஐந்து வகைகளாகப் பாகுபடுத்தியிருக்கின்றார். அவை,
'இயற்கை அறிவு (Instinct), நுண்மாண் நுழைபுலனறிவு (Perspicacity), உள்ளுணர்வு (Intution), தேர்ந்த அறிவு (Knowledge), மெய்யறிவு (wisdom)' (ப.80) என்கின்றார். மேலும் மனிதனுடைய குணத்திற்கு ஏற்ப அறிவை ஐந்து பருவங்களாகப் பாகுபடுத்திப் பார்க்கின்றார். அதாவது,
- மனிதனாகப் பிறந்தும், தான் மனித இனம் என்று அறிந்துகொள்ள முடியாத நிலை
- மனிதனென்று அறிந்தும் மனிதனாக நடந்துகொள்ளத் தெரியாத நிலை
- மனிதனாக வாழ்த்தெரிந்தும் அதுவரையில் அறியாமையால் ஏற்பட்ட பழக்கங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியாமலும் தெரியாமலும் உணர்ச்சி, ஆராய்ச்சி என்ற இருவகைப் போட்டிகளுக்கிடையே வாழும் நிலை
- அறிவும் செயலும் ஒன்றுபட்டு மனிதன் மனிதனாகவே வாழும் நிலை
- தான் நெறியோடு வாழ்ந்தும், தெளிவற்றவர்களால் தனக்கும் சமுதாயத்திற்கும் விளையும் கேடுகளை நீக்கித் தன்னைப் போல் உலக மக்கள் அனைவரும் நெறியறிந்து வாழும் சூழ்நிலைகளை உருவாக்க முனைந்து செயலாற்றும் நிலை' (ப.91) என்கின்றார். இதனால் மகரிஷியின் அறிவு தொடர்பான எண்ணம் வெளிப்படுவதை உணரமுடிகிறது.
மனிதன் தன்னுடைய வாழ்க்கை எவ்வாறு அமைந்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள அவனது வாழ்வோடு ஒட்டிய செயல்களில் இருந்தும், அவனது உடல்நலத்திலிருந்தும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளிலிருந்தும், வெளிவட்டாரப் பழக்கவழக்கங்களிலிருந்தும், அறிவியல் சிந்தனைகளிலிருந்தும் உணரமுடியும். இக்கருத்தை மகரிஷி அவர்கள், 'வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், வாழ்வாங்கு வாழ வேண்டுமானால், ஒவ்வொரு மனிதனுக்கும் ஐந்து துறைகளிலே அறிவுவேண்டும். அவை அறிவு, சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், விஞ்ஞானம் ஆகிய ஐந்தும் வாழ்க்கைத் தத்துவங்கள்' என்று குறிப்பிடுகின்றார்.
வாழ்க்கைச் சமநிலை
வாழ்க்கைச் சமநிலை எய்த வேண்டுமாயின் குடும்ப உறுப்பினர்களின் மனநிலைகள் ஒருமித்து இருக்கவேண்டும். குறிப்பாக, கணவன்-மனைவி ஆகியோரிடையேயான உறவு நட்புறவாக, பாச உறவாக அமையவேண்டும். குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே விட்டுக்கொடுக்கும்/ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இருந்தால் தாழ்வு மனப்பான்மை தானாக நீங்கும். தன்னை அறிந்தவனால்தான் தன்னோடு வாழும் மனைவி, மக்கள், சுற்றம், ஊரார், உலகத்தார் ஆகியோரை உணரமுடியும். இந்நிலை எய்தும்போதுதான் வாழ்க்கை சமநிலைபெறும். இதனை மகரிஷி அவர்கள், "உலகெங்கும் ஆண்கள் மேலோங்கவும் பெண்கள் கீழாக மதிக்கப் பெறவும் ஒரு சந்தர்ப்பம் இருந்தது.
காலத்தால் அந்தச் சந்தர்ப்பம் போன பிறகு கூட, வழக்கத்தை ஒட்டி, பழக்கத்தை ஒட்டி அதே ஆதிக்க மனப்பான்மை ஆண்களுக்கு ஏற்பட்டுத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. ஒரு சமுதாயம் திருந்த வேண்டுமானால் இந்தக் குறைபாடுகள் நீங்கத்தான் வேண்டும். அந்தக் குறைபாடுகளை நீக்கிக் கொள்வதற்கு ஒரு சாரார் மட்டும் - ஆண்கள் மட்டுமோ அல்லது பெண்கள் மட்டுமோ முயன்றால் போதாது. இரண்டு பேர்களுமே அந்தக் குறைபாடுகளை உணரவேண்டும். அவற்றை முறையாகப் போக்கிக் கொள்ளுகின்ற விருப்பம் அவர்களுக்கு வரவேண்டும்" (ப.22) என்று கூறுகின்றார்.
முடிவுரை
இதுபோன்ற வாழ்க்கைக்கு உகந்த உன்னதமான கருத்துக்களை மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார். இங்கு உரைத்தவை குறைவே எனினும், அவர்தம் வாழ்வியல் சிந்தனைகள் மிகப்ப பல உண்டு. அவர்கள் ஒரு வாழ்வியல் களஞ்சியமாகத் திகழ்கின்றார். "வாழ்க வளமுடன்" என்ற சொல் அவரது வேத வாக்காக இருப்பதால், இச்சொல்லே பல்வேறு வாழ்வியல் சிந்தனைகளைத் தோற்றுவிக்கின்றதென்பது உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக