ஞாயிறு, 4 நவம்பர், 2018

புறநானூறு உணர்த்தும் அரசவாகை

தமிழர்தம் வாழ்க்கை வரலாற்றையும், அவர்களின் வீரத்திறத்தையும் விளக்கும் இலக்கியமாகத் திகழ்வது புறநானூறு ஆகும்.  இதனைத் தமிழின் புகழ் மகுடம் என்றும் சொல்லலாம்.  போரும் வீரமும் மட்டும் அல்லாமல் ஈகையும் கொடையும் இரு கண்ணென்று வாழ்ந்த ஈர மனமுடைய தமிழ்மக்களின் இறவாப் புகழ் பேசும் எழுத்து ஓவியமாகப் புறநானூறு திகழ்கின்றது.

புறத்தைப் பற்றிப் பேசும் நானூறு பாடல்கள் என்ற பொருண்மையில் இந்நூலின் பெயர் அமைந்தாலும் இவற்றுள் முந்நூற்றுத் தொண்ணூற்றெட்டுப் பாடல்களே உள்ளன.  இப்பாடல்கள் கூட முழுமையாகக் கிடைக்கவில்லை.  சில பாடல்கள் முதலடி கெட்டும், ஈற்றடி இழந்தும், இடையில் சில வரிகள் மறைந்தும் காணப்படுகின்றன.  இந்நூலைத் தமிழுலகம் இன்புறும் பொருட்டு ஏட்டுருவம் ஆக்கியவர் மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையர் ஆவார்.  கரந்தை, காஞ்சி, கைக்கிளை, தும்பை, நொச்சி, பாடாண், பெருந்திணை, பொதுவியல், வஞ்சி, வாகை, வெட்சி ஆகிய திணைகளைக் கொண்டதாக புறநானூற்றுப் பாடல்கள் அமைந்திருக்கின்றன.  இவற்றுள் வாகைத்திணைக்கு உரியனவாக 83 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.  இவ்வெண்பத்து மூன்று பாடல்களில் அரசவாகை, ஏறாண் முல்லை, சால்பு முல்லை, தாபத வாகை, பார்ப்பன முல்லை, பார்ப்பன வாகை, மறக்களவழி, மறக்களவேள்வி, மூதின் முல்லை, வல்லாண் முல்லை ஆகிய பத்துத் துறைகள் இடம்பெற்றிருக்கின்றன.  அவற்றுள் அரசவாகைப் பாடல்கள் குறித்து இக்கட்டுரை அமைகிறது.

அரசவாகை

மாந்தர்களுக்கு உரிய ஓதல், ஈதல், வேள்வி ஆகிய மூன்றுடன் அரசர்க்கே உரியனவான படையெழுச்சியும், மக்கட்காவலும் (குடியோம்பல்) ஆகிய இரண்டு இயல்புகளுடன் மேலோங்கல் 'அரசவாகை' ஆகும்.

இடைக்குன்றூர்கிழார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றி நான்கு பாடல்களும் (76-79), குறுக்கோழியூர்க்கிழார் மாந்தரஞ்சேரலிரும்பொறையைப் பற்றி இரண்டு பாடல்களும் (20,22), பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றி ஒரு பாடலும் (17) ஆக மூன்று பாடல்களும், ஐயூர் மூலங்கிழார் உக்கிரப் பெருவழுதியைப் பற்றி ஒரு பாடலும் (21), தாமப்பல் கண்ணனார் சோழன் நலங்கிள்ளி பற்றி ஒரு பாடலும் (43), வெண்ணிக்குயத்தியார் கரிகால் பெருவளத்தான் பற்றி ஒரு பாடலும் (66), பொருந்தில் இளங்கீரனார் மாந்தரஞ்சேரலிரும்பொறை பற்றி ஒரு பாடலும் (53), ஔவையார் அதியமான் நெடுமானஞ்சி பற்றி ஆறு பாடல்களும் (93,94,98-100,104), குடபுலவியனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பற்றி ஒரு பாடலும் (19), கல்லாடனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பற்றி இரண்டு பாடல்களும் (23,25), கோவூர்கிழார் சோழன் நலங்கிள்ளி பற்றி மூன்று பாடல்களும் (31,33,44), மாரோக்கத்து நப்பசலையார் கருவூர் முற்றியிருந்தான் பற்றி ஒரு பாடலும் (42), மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன் பற்றி ஒரு பாடலும் (174) ஆக இரண்டு பாடல்களும், ஐயூர் முடவனார் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழி பற்றி ஒரு பாடலும் (51), மருதனிளநாகனார் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி பற்றி ஒரு பாடலும் (52), பொருந்திலிளங்கீரனார் மாந்தரஞ்சேரல் மாடலன் மதுரைக்குமரனார் சேரமான்குட்டுவன் கோதை பற்றி ஒரு பாடலும் (54), சோழன் இலவந்திசைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி பற்றி ஒரு பாடலும் (61), ஏனாதி திருக்கிள்ளி பற்றி ஒரு பாடலும் (167) ஆக மூன்று பாடல்களும், சாத்தந்தையார் சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி பற்றி இரண்டு பாடல்களும் (81,82), வடவண்ணக்கன் பெருஞ்சாத்தனார் வன்மலையன் பற்றி ஒரு பாடலும் (125), கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனார் பிட்டங்கொற்றன் பற்றி ஒரு பாடலும் (68), மாங்குடி மருதனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பற்றி ஒரு பாடலும் (26) ஆகப் பதினெட்டு அரசர்களைப் பற்றிப் பதினெட்டுப் புலவர்கள் பாடிய 36 அரசவாகைப் பாடல்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன.

இவ்வாறு காணப்படக்கூடிய அரசவாகைப் பாடல்களில் அரசர்தம் வீரத்தை மட்டும் பேசுவனவாக பத்தொன்பது பாடல்களும் (19, 21, 23, 31, 52, 53, 66, 76, 77, 78, 79, 81, 82, 93, 98, 99, 100, 104, 167), கொடையைப் பற்றிப் பேசுவனவாக இரண்டு பாடல்களும் (168,174), கொடையையும் வீரத்தையும் பேசுவனவாக நான்கு பாடல்களும் (33,54,94,25), வீரம், கொடை மற்றும் குடியோம்பல் ஆகிய மூன்றையும் பேசுவதாக ஒரு பாடலும் (42), வீரமும் அருளும் பற்றிப் பேசுவனவாக நான்கு பாடல்களும் (25,37,51,61), வீரம், ஈகை, செங்கோல், அறிவு, முயற்சி பற்றிப் பேசுவனவாக மூன்று பாடல்களும் (17,20,22), அறச்செயல் பற்றி ஒரு பாடலும் (26), பிழைபொறுக்கும் தனி நிகழ்ச்சியைப் பற்றி இரண்டு பாடல்களும் (43,44) எனப் பாடப்பெற்றிருக்கின்றன.

இவ்வாறு அமைந்திருக்கும் முப்பத்தாறு பாடல்களிலும் வீரம் முதன்மையிடம் பெறுகின்றது.  வீரத்தோடு பிற இயல்புகள் பேசும்போது வீரமே தலைமை யிடம் பெறுவதையும் இப்பாடல்கள் வழி உணரமுடிகிறது.

வீரம்

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் வீரத்தன்மையை உணர்த்துவனவாக புறநானூற்றில் ஆறு பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன (17,23,76-79).  அதாவது, வேடர்க்குப் பாதுகாப்பாகவும், புலிக்கப் பகையாகவும் உள்ள அடார்க் கல்லினைப் போன்று பாண்டியன் நெடுஞ்செழியனின் மார்பு பகைவர்களுக்கு எமனாகவும்(17), மண் சுமக்க முடியாத அளவுக்குப் படைகொண்ட மன்னனிடம் பகை கொண்ட மன்னர்களின் நிலையும் அவர்களின் நாடும் எவ்வாறெல்லாம் பாழ்பட்டுள்ளதையும் (23), சேர, சோழ வேந்தர்கள் மற்றும் ஐம்பெரும் வேளிர்கள் ஆகிய எழுவரையும் தான் ஒருவனாக நின்று வெற்றி பெற்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் தன்னிகரில்லா வீரத்தையும் (76), வெற்றிக் களிப்பில் இறுமாப்பு கொள்ளாத தன்னடக்கத்தினையும் (77), பகைவர்களைப் பகைநாடு சென்று வெற்றிகொள்ளும் வலிமையையும் (78), பறையொலி முன் செல்ல யானைபோல் வீரநடை போட்டு முன்னே செல்லும் பேராற்றல் மிக்கவனாகவும் (79) புறநானூற்றுப் புலவர்கள் இவனின் வீரத்தைப் பாடியிருக்கின்றனர்.

கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியின் வீரத்தன்மையை ஐயூர் மூலங்கிழார், ஆழமான அகழியையும், உயர்ந்த மதிற்சுவரையும், உச்சி மாடங்களையும், நிறைந்த காடுகளையும் கொண்டிருந்த வேங்கை மன்னனின் கானப்பெரெயிலைத் தன்னுடையதாக்கிக் கொண்டமையால் தன்பெயருக்கு முன் அவ்வெற்றிச் சின்னத்தை வீரச்சின்னமாக ஏற்றிக் கொண்டதைப் பாடியிருக் கின்றார் (21).

சோழன் நலங்கிள்ளியின் போராற்றலையும் வீரத்தையும் கண்டு பகை மன்னர்களின் தூக்கம் பாழாய்ப்போனது பற்றிக் கோவூர் கிழாரும் (31), பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியின் போராற்றலையும் வீரத்தையும் புகழும் மருதன் இளநாகனார், உன்னை எதிர்ப்பவர்களின் நாடு காடாகிவிடுமே என்கின்றார் (52).

சேரமான் மாந்தரஞ் சேரலிரும்பொறையின் வீரச் சிறப்பைக் கபிலர்தான் பாடவேண்டுமென்பதில்லை.  உன்னுடைய வீரத்தை நாங்களும் பாடுவோம் என்று பொருந்தில் இளங்கீரனார் பாடுகிறார் (53).  இதனைப் பார்க்கும்போது வீரம்மிக்க மன்னனின் புகழைப் பாடுவதற்குப் புலவர்கள் சிலர் மட்டுமே இருந்த நிலையையும், அந்நிலை இழந்தபோது வேறு புலவர்கள் பாடத் துணிந்ததையும் காணும்போது மன்னனின் வீரத்திறன் வெளிப்படுதலைக் காணமுடிகிறது.

கரிகாலனுக்கும் சேரலாதனுக்கும் இடையே நடந்த வெண்ணிப்போரில் கரிகாலன் வெற்றி பெற்றாலும் புறப்புண் பட்டமைக்காக நாணி, வடக்கிருந்து உயிர்விட்ட சேரலாதனின் புகழ் உன் புகழைவிட உயர்ந்தது என்று வெண்ணிக்குயத்தியார் பாடுவதால் (66) வீரத்தின் தன்மை வெற்றி என்பதிலிருந்து தோற்றோனின் நேர்மையிலும் இருக்கின்றது என்பதை இப்பாடல் உணர்த்துகின்றது.

சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளியின் படை வலிமையையும் போராற்றலையும், மற்றோர் நிகழ்த்திய விரைவையும் சாத்தந்தையார் (81) குறிப்பிடுகின்றார்.

அதியமான் நெடுமான் அஞ்சியின் வீரத்தை ஔவையார் ஐந்து பாடல்களில் குறிப்பிட்டிருக்கின்றார் (92,98-100,104). அதாவது, எதிர்த்தவர் எல்லாம் வீழ்ந்துபட, நீ விழுப்புண் பெற்றுவிட்டாய், இனி வெல்லுவதற்கு போரில்லாதவனே (93) என்றும், அதியமானின் படையைக் கண்டாலே பகைவர் அஞ்சுவர் (98) என்றும், பரணர் பாடும் புகழைப் பெற்றவனே (99) என்றும், பகைவரைத் தீயெழப் பார்த்த கண்களின் செந்நிறம், தன் அன்பு மகனைப் பார்த்தும் மாறாத் தன்மை கொண்டவனே (100) என்றும், இளையவன் இவன் என்றவர்க்கு வெற்றியில் சிக்கலாக்கியவனே (104) என்றும் அதியமானின் வீரத்தைப் பாராட்டியிருக்கின்றார்.  

கொடை

கொடை கொடுப்பது அரசர்களிடம் பேரளவில் காணப்படும்,  போர்க் களத்தில் கொடை கொடுத்தலைக் களவழி, களவேள்வி ஆகிய இரு துறைகள் விளக்கும்.  தனியான வீரவுணர்வைவிட கொடையோடு கூடிய வீரவுணர்வு எல்லோராலும் பாராட்டப்படுவதும் புலவர்களால் பாடப்பெறுவதும் ஆகும்.  இந்நிலையில் பாடப்பெற்ற பாடல்கள் புறநானூற்றில் இருபாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன (168,174).

பிட்டங்கொற்றன் என்னும் சேரமான் கோதையின் படைத்தலைவனானவன் தான் போரிட்டுப் பெற்ற செல்வங்களை இரவலர்க்குக் கொடுத்து மகிழ்பவன் என்று அவனின் கொடைத் தன்மையைக் கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார் (168) குறிப்பிடுகின்றார்.  முள்ளூர் சோழன் தான் இழந்த நாட்டை மலையமான் முடிக்காரி பகை மன்னரிடம் போரிட்டு மீட்டு முள்ளூர் சோழனுக்குக் கொடையாகக் கொடுத்தான் என்பதை மாரோக்கத்து நப்பசலையார் (174) குறிப்பிடுகின்றார்.

கொடையும் வீரமும்

கொடையும் வீரமும் அமைந்த அரசவாகைப் பாடல்கள் புறநானூற்றில் நான்கு உள்ளன (33,54,94,125).  தென்பாண்டி நாட்டின் ஏழரண்களையும், காவலையும் அழித்த சோழன் நலங்கிள்ளியானவன் வெற்றியின் வெளிப்பாடாக அங்குத் தன்னுடைய சின்னத்தை நிறுவி, விழா எடுத்து வெற்றிப் பொருள்களைக் கொடையாக வழங்கியதைக் கோவூர் கிழார் குறிப்பிடுகின்றார் (33).  தன்னிடம் வந்தவர்க்கு இல்லை என்னாது கொடுக்கும் வள்ளல், பகை வேந்தர்க்கும் கொடுக்கும் தன்னிகரில்லாத வள்ளல் என்று சேரமான் குட்டுவன் கோதையின் வள்ளல் தன்மையை 54ஆம் பாடலும், நண்பர்களுக்கு அன்பனாகவும், வம்பர்களுக்குக் கொடியவனாகவும் காட்சி தருபவன் அதியமான் நெடுமான் அஞ்சி எனத் 94ஆம் பாடலும், நண்பரும் பகைவரும் போற்றுதலுக்குள்ளான மலையமான் திருமுடிக்காரியின் வீரத்தையும் கொடைத்தன்மையையும் 125ஆம் பாடலும் எடுத்துரைக்கின்றன.

வீரம், கொடை, குடியோம்பல்

சோழன் கிள்ளிவளவனின் வீரத்தன்மையையும், கொடைத் திறத்தையும், குடியோம்பும் முறையையும் 42ஆம் பாடல் எடுத்துரைக்கக் காணலாம்.

வீரம், கொடை, செங்கோல்

நாட்டுமக்கள் எல்லோரும் ஒன்றுகூடி நின்னைப் போற்றிப் புகழவும், தீமைகளை ஒழித்து செங்கோல் நெறிமுறை வழுவாது இவ்வுலகாண்டவர் பெருமைகளைக் காத்தவனே! தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனிடம் சிறைபடும் முன் உன்னால் தோற்கடிக்கப்பட்டவர்கள் உன் அருளைப் பெற்று தோற்றவர்தம் நாட்டை வழங்கியதையும், உன்னை எதிர்த்தவர்கள் வருந்த நேரும் என்பதால் உன் வீரத்திற்கு அடிபணிந்தார்கள் என்பதை தோற்ற மன்னன் ஒருவனின் வீரத்தையும் கொடையையும் செங்கோல் தன்மையையும் 17ஆம் பாடல் குறிப்பிடுகின்றது.

வீரமும் அருளும்

போரிட வல்ல செழியன் கைவேல், எளியவர்களின் கண்ணீரைக் காணும்போது அவர்களுக்காக இரங்கித் தன் கொலைத் தொழிலைச் செய்யாது விடும் பாண்டியன் நெடுஞ்செழியனின் வீரவுணர்வையும் இரக்க மனத்தையும் கல்லாடனார் 25ஆம் பாடல் மூலம் விளக்குகின்றார்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் போரிட்டு பகைநாட்டை அழிக்கும் வல்லமையும், புறாவின் துயர் நீக்கும் கொடைத் தன்மையையும் 37ஆம் பாடல் மூலம் மாறோக்கத்து நப்பசலையார் விளக்குகின்றார்.  

பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் பெருவழுதியோடு பகை கொண்ட மன்னர் புற்றீசல்போல் பெருந்துன்பத்தில் சாவார் என்றும், திறை கொடுக்கும் மன்னர்களுக்கு இவனைப்போல் அருள்பவர் இல்லை என்றும் 51ஆம் பாடல் விளக்குகின்றது. 

சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னியிடம் பகை கொண்டவர்கள் தப்ப முடியாது என்றும், அவனைப் பணிந்து வாழ்பவர்களுக்கு அவனைப்போல் அருள்பவர் யாரும் இருக்கமுடியாது என்றும் 61ஆம் பாடல் விளக்குகின்றது.

சோறாக்கம் அடுப்பின் வெம்மையும், சூரியனின் வெம்மையும் தவிர வேறு வறுமைத் துன்பம் இன்றி செங்கோல் நடத்தும் வேந்தனே! மன்னன் நலமே மக்கள் நலமென்றும் மக்கள் நலமே மன்னன் நலமென்றும் நாட்டில் நிலைநாட்டி வீர மறவர்களோடு பரந்த நிலப்பரப்பைத் தனதாக்கிக் கொண்டவனே! என்று யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் புகழ் பேசப்படுகின்றது (20).  மேலும் ஒரு பாடல் (22) இவனின் வீரத்தையும் அருளையும் 'எவர்க்கும் வாரி வழங்கும் வள்ளல் என்றும், அவனைப் பாடிய புலவர் அடுத்தவரை அண்டாத அளவுக்குக் கொடையளிப்பவன் என்றும், வாளின்றி உறங்கும் வீரர்களை வலிய யானைகள் கூடத் துன்புறுத்த எண்ணாத வீரத்தன்மையையும் வளப்பெருமை யினையும் பெற்றவன் என்றும்' குறிப்பிடுகின்றது.

அறமும் வேள்வியும்

பாண்டியன் நெடுஞ்செழியன் பகைவரோடு வீரப்போர் புரிந்தபோது அவன் பொருட்டு வீர மரணம் அடைந்த வீரர்களுக்குக் களவேள்வி செய்து, கற்றவரும் மற்றவரும் கொண்டாடத்தக்க வகையில் அறச்செயல்கள் பல செய்தவன் என்று அவனின் அறத்தோடு கூடிய வேள்விச் செயலை 26ஆம் பாடல் எடுத்துரைக் கின்றது.

புலவர் இடித்துரைத்தல்

நலங்கிள்ளியின் தம்பி சோழன் மாவளத்தான் தாமப்பல் கண்ணனாரோடு வீணே சினங்கொள்ள புலவரைக் காயும் உன் குடிப்பிறப்பையே நான் ஐயுறுகிறேன் என்று அவர் கூறியதும், தன் தவறுக்கு வருந்தி அவன் நாணி நின்ற தன்மையைக் கண்டு அவர் அவனின் வீரத்தன்மையைப் புகழ்வதாக 43ஆம் பாடலும், நலங்கிள்ளி ஆவூர்க் கோட்டையை முற்றுகையிட, அவனுக்கஞ்சி மதிற்கதவைத் தாழிட்டுக் கொண்டு மறைந்திருந்த சோழன் நெடுங்கிள்ளியின் செயலை இடித்துரைப்பதாக 44ஆம் பாடலும் அமையப்பெற்றிருக்கின்றன.

இவ்வாறாக புறநாநூற்றில் அரசவாகைப் பாடல்கள் அரசனின் கொடை, வீரம், குடியோம்பல், அருளுதல், அறச்செயல் போன்ற அரசர்தம் தன்மைகளை விளக்குவனவாக அமையப்பெற்றிருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக