ஞாயிறு, 4 நவம்பர், 2018

பண்பில் உயர்ந்த புலவர்

    தமிழை யார் மதிக்கிறார்களோ, யார் போற்றுகிறார்களோ, யார் வளர்க்கிறார்களோ அவர்களே தமிழர்கள்.  பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் வளர்ப்பால், வளந்த விதத்தால், வாழ்ந்த மற்றும் வாழும் முறையால் தமிழராக வாழ்ந்து வருபவர் புலவர் ப.வெ. நாகராசன் அவர்கள்.  
நான் 1988ஆம் ஆண்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை நடத்திய சுவடியியல் பயிற்சி பெற வரும் போது புலவர் ப.வெ.நா. அவர்கள் தொழில்நுட்ப உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டு இருந்தார்.  தொழில்நுட்பப் பணியாளர் என்றாலும் சுவடியியல் துறையில் மிகுந்த ஆர்வமும் தேர்சியும் பெற்று எங்களுக்குச் சுவடிப்பயிற்சி அளித்ததைக் கண்டு இவர் சிறந்த கல்வியாளராகக் காணப்பட்டார். இப்பயிற்சியினைத் தொடர்ந்து 1989ஆம் ஆண்டு முதல் ஓலைச்சுவடித்துறையில் ஆய்வு உதவியாளராகப் பணியில் சேர்ந்தேன்.  அதுமுதல் புலவர் ப.வெ.நா. அவர்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.  இன்று வரை அவரிடம் நல்ல முறையில் நட்பு பாராட்டி வருகின்றேன்.   

ஓலைச்சுவடித்துறையில் தவழும் குழந்தையாக நுழைந்த எனக்கு அவரின் செயற்பாடுகள் என்னை மிகவும் ஈர்த்தது.  அவரிடம் உள்ள நல்ல குணங்களைப் பின்வருமாறு பட்டியலிடலாம்.

  • யாங்கனும் தன்னை நாடி வருபவருக்கு நேரங்காலம் பாராது கல்வியில் உதவி செய்வபவர்.
  • யாப்பியல் சந்தேகங்களை உரிய முறையில் தக்காருக்குத் தக்க வகையில் புரியவைப்பவர்.
  • யாருக்கும் இன்னல்கள் தராதவர்.
  • யாரையும் மறைவில் இகழாதவர். 
  • யார் தவறு செய்யினும் நேரிலேயே சுட்டிக் காட்டுபவர்.
  • யாராகிலும் தமிழை இகழ்ந்தால் அங்கேயே தர்க்கம் செய்து தமிழின் பெருமையை நிலைநாட்டுபவர்.
  • யாருக்கு எவ்வயதினர்க்கு எவ்வகை திறமைகள் இருந்தாலும் அதைத் தக்க இடத்தில்  வெளிக்கொணரச் செய்து வெளிப்படையாக பாராட்டி மகிழ்பவர்.
  • யார் பணியானாலும் கல்விப்பணியெனில் முன்னின்று வழிநடத்துபவர்.
  • யாவரும் போன்றும் எளியவர்; பழக இனியவர்; பண்பாளர்.
  • “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என வாழ்பவர்.

இப்படியாக வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம்.  இவர் நல்ல யாப்பியல் கவிஞர்.  நல்ல உரையாசிரியர், நல்ல பதிப்பாசிரியர்.  கல்லூரிப் பட்டங்கள் எதுவும் பெறாமல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி தமிழறிஞர்கள் யாவர் உள்ளத்திலும் நிலையாக இருப்பிடங்கொண்டு, தமிழிலக்கியங்களை அச்சேற்றி தமிழுக்குச் செம்மொழி தகுதி வருவதற்குப் பல்லாற்றானும் தமிழப்பணி செய்து வலம் வந்தவர் மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதையர் அவர்கள்.  அவரின் அடிச்சுவட்டில் புலவர் ப.வெ.நா. அவர்களும் வாழ்ந்து வருகிறார்.  அதனால்தான் அன்னாருக்குத் தமிழுலகம் ‘திரிபு மடக்கு தெளிவுரை வல்லார், தேவார மணி, சுவடியியற் கலைமணி, சைவத் தமிழ்ச்செல்வர் போன்ற பட்டங்களையும், பொன்மனச் செம்மல் கே.ஆர். பாண்டுரங்கன் மற்றும் திருவாவடுதுறை ஆதின ‘கச்சியப்ப முனிவர்’ போன்ற விருதுகளையும் பெற்றதோடு சிரவையாதீனப் பெரும்புலவராகத் திகழ்வது அவரின் தமிழ்ப்பணிக்குக் கிடைத்த மகத்தான பேறு.  மேலும், புலவர் ப.வெ.நா. அவர்களின் பவள விழாவினை சிரவையாதீனத் தலைவர் தவத்திரு குமரகுரபர சுவாமிகளே முன்னின்று நடத்துவது அவருக்குக் கிடைத்த பட்டங்களையும் விருதுகளையும் விட சிறந்தது.  அவரின் புலமைக்கும் உரைத்திறனுக்கும் அவர் கொண்ட உரைப்பகுதி ஒன்றை சுட்டிக் காட்டின் விளங்கும்.

தவத்திரு கந்தசாமி சுவாமிகளின் மருதமலை அலங்காரம் பாடல் எண்.14க்குப் புலவர் ப.வெ.நா. அவர்கள், 

உன்னையொப் பாம்உயர்வு உள்ளாரும் எந்த உலகிடத்தும்
என்னையொப் பாம்இழிவு உள்ளாரும் இன்று;இவ் விருவகையால்
தன்னையொப் பாநிலை பெற்றனம் யாம்;இந்தத் தன்மையினால்
அன்னையொப் பாய்!உகந்து என்னையொப் பாய்!மரு தாசலனே! 
                                                                                            (மருதலை அலங்காரம், பா.14)

எனும் பாடலுக்குப் பின்வருமாறு உரைவிளக்கம் தருகின்றார்.

“இத்தகைய சுவாமிகள் (தவ.கந்தசாமி சுவாமிகள்) பரம்பொருளைப் பற்றி, முருகப் பெருமான் உயர்வு அற உயர்நலம் உடையவன்; எல்லாப் பெருமைகளையும் சென்று அடையாது இயல்பாகவே பெற்று விளங்குபவன்; எனவே இணையற்றவன்” என எண்ணுகிறார்.  தொடர்ந்து தன்னைப் பற்றிச் சிந்திக்கும் பொழுது, “உயிர் ஆகிய நான் மிகச் சிறிய வாழ்நாளை உடையவன்; என் அறிவு குறைவுடையது; என்உடல் பிணிகளுக்கு இடமானது; தேடிச் சோறு தினந்தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி புலன்களின் வழியே உழன்று என் வாழ்நாளை வீணாக்கிக் கொண்டிருக்கிறேன்; என்னைவிடத் தாழ்ந்தவர்கள் எங்குமே இருக்கமாட்டார்கள்; கடையரிலும் கடையனாகிய நான் கீழ்மையில் இணையற்றவன்” எனத் தோன்றுகிறது.  இந்த மாறுபட்ட இருநிலைகளினிடையே இணையற்ற தன்மையாகிய ஒருமையைக் கவியுள்ளம் கண்டுவிடுகிறது.  உடனே அன்புள்ளம் சம உரிமை கோருகிறது” என்ற தவ.கந்தசாமி சுவாமிகளின் கருத்தை அழகாக எடுத்து விளக்கியவர், இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை இரத்தினாசலம் சந்நிதி முறையீடு 67இல் “இறைவனே! என் மனம் கட்டுப்பாட்டிற்கு அடங்குவதில்லை.  புலன்களின் வழியே சென்று வினைகளைப் பெருக்கி முடியாத பிறவியலைகளை உண்டாக்குகிறது.  என் மனம் தான் அப்படி என்றால் உன் உள்ளமும் உன்வசத்தில் இல்லை. அது உயிரின் பக்குவம் இருவினைப் பிணிப்பு முதலியவற்றைப் பற்றி எண்ணாமல் பெருங் கருணையால் உன்னையும் மீறி மெய்யடியார்களை நோக்கு ஓடுகிறது.  இங்ஙனம் நமக்கு அடங்காத உள்ளத்தைப் பெற்ற நாமிருவரும் ஓர் இனம் ஆகிவிட்டோம்” என்ற கருத்தையும் எடுத்துக்காட்டி மேற்காணும் பாடலுக்கு அழகூட்டி இருப்பது அவரின் திறனுக்கு எடுத்துக்காட்டாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக