காலங்காலமாக இறைவனைப் பற்றியும் அவன் நினைவிலேயே வாழ்ந்த இறையடியவர்களைப் பற்றியும் பல்வேறு கால கட்டங்களில் பலப்பல நூல்கள் தனித் தனியாக எழுந்துள்ளன. அதன்பின்னர், இறைவனையும் இறையடியவரையும்; இறையடியவர்களையும் பொதுமறை நூல்களையும் இணைத்துப் பலப்பல நூல்கள் எழுந்துள்ளன. இவ்வகையில், முருகேசர் முதுநெறி வெண்பா மற்றும் வடமலை வெண்பா (ஈசானிய மடம் இராமலிங்க சுமாமிகள்), இரங்கேச வெண்பா (பிறைசை சாந்தக் கவிராயர்), சோமேசர் முதுமொழி வெண்பா (சிவஞான முனிவர்), சிவசிவ வெண்பா (சென்னமல்லையர்), திருத்தொண்டர் வெண்பா (புழலை திருநாவுக்கரசு முதலியார்), முதுமொழி மேல்வைப்பு (கமலை வௌ¢ளியம்பலவாண முனிவர்), திருக்குறள் குமரேச வெண்பா (ஜெகவீர பாண்டியன்) போன்ற குறள்விளக்க வெண்பா நூல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், இறையடியவர்களையும் உலகப் பொதுமறை நூலான திருக்குறளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நிலையில் கயிலைக் குமாரபாரதியின் 'திருத்தொண்டர்மாலை' அமைந்துள்ளது. இந்நூல், சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பருவஇதழ்த் தொகுதி 3, பகுதி 1, 1950, பக்.39-52இல் வெளிவந்துள்ளது.
திருத்தொண்டர்மாலை
திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறையடியாரைத் தொகைப்படுத்தினார். அவ்வடியார்களை நம்பியாண்டார் நம்பி அவர்கள் அந்தாதியாக அருளிச்செய்தார். இவ்விரு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு சேக்கிழார் சுவாமிகள் 'திருத்தொண்டர் புராணம் அல்லது பெரியபுராணம்' என்னும் நூலைப் பாடியருளினார். பெரியபுராணம் முற்றும் கற்றோர் புராணக் கருத்துகளை நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டி உமாபதி சிவாச்சாரியார் அவர்கள் 'பெரியபுராணச் சாரம்' என்றொரு நூலினை அருளிச்செய்தார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகளால் தொடங்கப்பெற்ற திருத்தொண்டர் வரலாற்றுப் பாதையில் பல இலக்கிய வடிவங்கள் தோன்றின. இவற்றில் மேற்குறிப்பிட்டவை தவிர திருத்தொண்டர் அகவல், திருத்தொண்டர் அடிமைத் திறம், திருத்தொண்டர் சதகம், மாதவசிவஞான முனிவரின் திருத்தொண்டர் திருநாமக்கோவை, திருத்தொண்டர் போற்றித் திருவகவல் மற்றும் கயிலைக் குமாரபாரதியாரின் திருத்தொண்டர்மாலை ஆகிய நூல்கள் இடம்பெறுகின்றன. காலங்காலமாக இறையடியவர்களையும் அவர்களின் வரலாற்றைக் கதைவடிவாகவும் மக்கள் நாளும் போற்றி வந்தார்கள் என்பதை-ஒரு செய்தி பல வடிவங்களில் பரிணாமம் அடைந்துள்ளதை மேற்கண்ட நூல்களின் வளர்ச்சியால் அறியலாம். மேலும், ஒருவருடைய வரலாற்றைத் தொகையாகவும், அந்தாதியாகவும், புராணமாகவும், தோத்திரப் பாவாகவும், போற்றித் திருவகவலாகவும் கண்டு களித்த தமிழ் மக்களுக்குக் கயிலைக் குமாரபாரதி அவர்கள் பொதுமறை நூலான திருக்குறளோடு திருத்தொண்டர்தம் வரலாறுகளை ஒப்பிட்டுத் 'திருத்தொண்டர்மாலை'யைப் பாடி இருப்பது தேனோடு சேர்ந்த தினை போல் இனிக்கத்தான் செய்கிறது.
இந்நூல் 104 வெண்பாக்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு செய்யுளின் முதலிரண்டடிகள் திருத்தொண்டர்தம் வரலாற்றையும் இறுதி இரண்டடிகள் அத்திருத்தொண்டர் வரலாற்றிற்குப் பொருத்தமான திருக்குறளையும் வைத்துள்ளார் ஆசிரியர். இந்நூலாசிரியரின் காலம் தெரியவில்லை. இருப்பினும் இவர்தம் நூலில் அமைந்துள்ள பாயிரத்துள்,
"தூண்டா விளக்கருள்செய் தொண்டர்த் தொகையின் நம்பி
யாண்டா ரந்தாதி முறையினன் பானோர்"
என்றும்,
"தூயதிருத் தொண்டர்த் தொகைதந்து சுந்தரர்தாம்
ஆயிரு ஞாலத்தோரை வாழ்வித்தார்"
என்றும் கூறுவதால் திருத்தொண்டத் தொகைக்கும், திருத்தொண்டர் திருவந்தாதிக்கும் பிற்பட்ட நூல் என்பது புலனாகும். மேலும், இந்நூல் திருத்தொண்டர் திருவந்தாதியின் பாடல் முறைவைப்பிலேயே அமைந்துள்ளது. இந்நூலாசிரியர், திருநாவுக்கரசருக்கும் திருஞானசம்பந்தருக்கும் திருவந்தாதியில் இரண்டிரண்டு பாடல்கள் பாடியிருக்க இந்நூலில் ஒவ்வொருவருக்கும் ஐந்தைந்து பாடல்கள் என முறையே பாடியிருக்கின்றார். மேலும் கோச்செங்கோட் நாயனார், நமிநந்தியடிகள் நாயனார், அமர்நீதி நாயனார் ஆகியோர்களுக்கும் இரண்டிரண்டு பாடல்கள் என முறையே பாடியிருக்கின்றார். ஏனைய திருத்தொண்டர் (சுந்தரர் தவிர) ஒவ்வொருவருக்கு ஒரு பாடல் வீதம் பாடியிருக்கின்றார். சுந்தரருக்கு மட்டும் இருபது பாடல்கள் பாடியிருக்கின்றார்.
திருத்தொண்டர் திருவந்தாதியில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வரலாறு கூறும் பாடல்கள் நூல் முழுவதும் ஆங்காங்கு விரவி வருவதுபோல் கயிலைக் குமாரபாரதி அவர்களும் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வரலாற்றை நூல் முழுவதும் நம்பியாண்டார் நம்பி அமைத்த பாடல் அமைப்பு முறையிலேயே அமைத்துள்ளார். இந்நிலையில் பதின்மூன்று குறட்பாக்கள் இடம்பெற்றுள்ளன. திருவந்தாதியும் மாலையும் பாடலெண்ணிக்கையில் வேறுபட்டிருந்தாலும் திருவந்தாதிச் செய்தி களையே திருக்குறளோடு ஒப்பிட்டு இந்நூலாசிரியர் திருத்தொண்டர்மாலையை யாத்துள்ளார் எனலாம். மேலும், இவர் எடுத்துக்காட்டாகக் கூறப்படும் ஒரு குறள் மட்டும் திருவள்ளுவருடையதாகத் தெரியவில்லை. அதாவது, விறன்மிண்ட நாயனாரைக் குறிப்பிடுமிடத்து,
"உருவு சுடற்போற் சொலினுஞ் செறார்
அரச் சொல்லொல்லை யுணரப்படும்"
எனும் பாடல் இடம்பெற்றுள்ளது.
குறள்நெறித் திருத்தொண்டர்கள்
திருத்தொண்டர் மலையில் இடம்பெற்றுள்ள குறள்கள் முப்பால் அமைப்பினைக் கொண்டுள்ளன. இந்நூலில் இடம்பெற்றுள்ள (பாயிரம் 3ம் நூல் 101ம்) 104 பாடல்களில் முதலும் இறுதியும் விறன்மிண்ட நாயனார் பாடலும் தவிர்த்த ஏனைய 101 பாடல்களிலும் 101 வகையான குறட்பாக்களை எடுத்தாண்டுள்ளார் இந்நூலாசிரியர்.
"அகர முதல வெழுத்தெல்லாம்; ஆதி
பகவன் முதற்றே யுலகு"
எனும் திருக்குறளைத் தில்லை மூவாயிரவர்க்கு எடுத்துக்காட்டாகக் காட்டியிருக்கின்றார். இப்பாடல் நீங்க ஏனைய 100 திருக்குறளும் நாயன்மார்களுக்காக எடுத்துக்காட்டி இருக்கின்றார் எனலாம். இவற்றில் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலுக்கான குறட்பாக்கள் மிகுதியாகவும்; காமத்துப்பாலுக்கான குறட்பாக்கள் குறைவாகவும் இடம்பெற்றுள்ளன. திருத்தொண்டர்களின் வாழ்க்கையில் அவர்களின் புகழை எடுத்துரைக்கும் முக்கியமான - முத்தாய்ப்பான நிகழ்ச்சியை மைமாகக் கொண்டு அவ்வடியவர்க்கு உகந்த திருக்குறளை இந்நூலாசிரியர் கையாண்டுள்ளார். அதன் அமைப்பினைப் பின்வருமாறு சுட்டலாம். இங்கு வரிசையெண்- நாயன்மார்கள் பெயர்-திருக்குறள் அதிகாரம்-(குறளெண்) என முறையே அமைக்கப் பெற்றிருக்கின்றது.
1. திருநீலகண்ட நாயனார் - நீத்தார் பெருமை (24)
2. இயற்பகை நாயனார் - இரவு (1057)
3. மாறன் நாயனார் - விருந்தோம்பல் (85)
4. மெய்ப்பொருள் நாயனார் - மெய்யுணர்தல் (355)
5. அமர்நீதி நாயனார் - நடுவு நிலைமை (118), ஊழ் (376)
6. எறிபத்த நாயனார் - நீத்தார் பெருமை (29)
7. ஏனாதிநாத நாயனார் - சான்றாண்மை (986)
8. கண்ணப்ப நாயனார் - அன்புடைமை (79)
9. குங்கிலியக்கலைய நாயனார் - இடுக்கண் அழியாமை (624)
10. மானக்கஞ்சாற நாயனார் - ஈகை (228)
11. அரிபாட்டாய நாயனார் - ஈகை (230)
12. ஆனாய நாயனார் - வினைசெயல்வகை (675)
13. பரவையார் - வாழ்க்கைத் துணைநலம் (53)
14. மூர்த்தி நாயனார் - அன்புடைமை (72)
15. முருக நாயனார் - அறன்வலியுறுத்தல் (38)
16. உருத்திரபசுபதி நாயனார் - ஈகை (226)
17. திருநாளைப்போவார் - தெரிந்து தெளிதல் (505)
18. திருக்குறிப்புத்தொண்டர் - குறிப்பறிதல் (703)
19. கண்டேச நாயனார் - ஊழ் (375)
20. திருநாவுக்கரசு நாயனார் - மெய்யுணர்தல் (359, 352),
கல்வி (393), துறவு (349),
இன்னாசெய்யாமை (320),
21. குலச்சிறை நாயனார் - அடக்கமுடைமை (125)
22. பெருமிழலைக்குறும்பநாயனார் - பிரிவாற்றாமை (1158)
23. காரைக்காலம்மையார் - வினைத்திட்பம் (667)
24. அப்பூதியடிகள் - நட்பு (785)
25. திருநீலநக்க நாயனார் - மருந்து (948)
26. நமிநந்தியடிகள் நாயனார் - வினைத்திட்பம் (666)
27. திருஞானசம்பந்த நாயனார் - புகழ் (236), துறவு (348),
பகைத்திறம் தெரிதல் (872),
பெரியாரைப் பிழையாமை (894),
ஊக்கம் உடைமை (595)
28. ஏயர்கோன் கலிக்காமர் - மானம் (968)
29. திருமூல நாயனார் - ஆள்வினை உடைமை (620)
30. தண்டியடிகள் நாயனார் - வினைத்திட்பம் (664)
31. மூர்க்க நாயனார் - அறன் வலியுறுத்தல் (32)
32. சோமாசிமாற நாயனார் - சுற்றம்தழால் (528)
33. சாக்கிய நாயனார் - கூடா ஒழுக்கம் (279)
34. சிறப்புலி நாயனார் - விருந்தோம்பல் (90)
35. சிறுத்தொண்ட நாயனார் - ஈகை (224)
36. கழற்றறிவார் நாயனார் - ஒற்றாடல் (582)
37. கணநாத நாயனார் - செய்ந்நன்றியறிதல் (101)
38. கூற்றுவ நாயனார் - கடவுள் வாழ்த்து (7)
39. பொய்யடிமை இல்லாதபுலவர் - கடவுள் வாழ்த்து (2)
40. புகழ்ச்சோழ நாயனார் - தீவினையச்சம் (202)
41. நரசிங்கமுளையரையர் - பெருமை (980)
42. அதிபத்த நாயனார் - ஒப்புரவறிதல் (218)
43. கலிக்கம்ப நாயனார் - பெண்வழிச் சேறல் (905)
44. கலிய நாயனார் - கல்லாமை (408)
45. சத்தி நாயனார் - அடக்கமுடைமை (127)
46. ஐயடிகள் காடவர்கோன் - கல்வி (399)
47. கணம்புல்ல நாயனார் - வினைத்திட்பம் (669)
48. காரி நாயனார் - கல்வி (397)
49. நின்றசீர்நெடுமாற நாயனார் - செங்கோன்மை (543)
50. வாயிலார் நாயனார் - மெய்யுணர்தல் (357)
51. முனையடுவார் நாயனார் - ஒப்புரவறிதல் (212)
52. கழற்சிங்க நாயனார் - செங்கோன்மை (541)
53. இடங்கழி நாயனார் - பொருள்செயல் வகை (757)
54. செருத்துணை நாயனார் - அவை அஞ்சாமை (726)
55. புகழ்த்துணை நாயனார் - ஆள்வினை உடைமை (619)
56. கோட்புலி நாயனார் - செங்கோன்மை (549)
57. பத்தராய்ப்பணிவார் நாயனார்- அன்புடைமை (80)
58. பரமனையே பாடுவார் - கடவுள் வாழ்த்து (5)
59. சித்தத்தைச் சிவன்பால்வைத்தார் - துறவு (350)
60. திருவாரூர்ப் பிறந்தார் - குடிமை (959)
61. முப்பொழுதுந் திருமேனித்தீண்டுவார்- கடவுள் வாழ்த்து (6)
62. முழுநீறு பூசிய முனிவர் - அறன் வலியுறுத்தல் (33)
63. அப்பாலும் அடிச்சார்ந்தார் - மெய்யுணர்தல் (356)
64. பூசலார் நாயனார் - கடவுள் வாழ்த்து (3)
65. மங்கையர்க்கரசியார் - காலம் அறிதல் (490)
66. நேச நாயனார் - அறன் வலியுறுத்தல் (36)
67. கோச்செங்கட்சோழ நாயனார்- உட்பகை (890), தவம் (266)
68. திருநீலகண்டசோழ நாயனார் - கல்லாமை (409)
69. சடைய நாயனார் - மக்கட்பேறு (61)
70. இசைஞானி நாயனார் - மக்கட்பேறு (69)
71. சுந்தரமூர்த்தி நாயனார் - ஒப்புரவறிதல் (211), நீத்தார் பெருமை (28),
வினைத்தூய்மை (659), துறவு (349),
இடுக்கண் அழியாமை (622),
கேள்வி (411, 412), பெருமை (972, 978),
நட்பு ஆராய்தல் (795), பழைமை (807),
குறிப்பறிதல் (1100), தவம் (265),
அலர் அறிவுறுத்தல் (1146), கல்லாமை (401),
புகழ்ச்சி மகிழ்தல் (1102), புலவி (1302),
நட்பு (786, 789), இனியவை கூறல் (95).
இவ்வமைப்பினைப் பார்க்கும்போது அறத்துப்பால் 22 அதிகாரங்களிலிருந்து 50 குறட்பாக்களும்; பொருட்பால் 30 அதிகாரங்களிலிருந்து 47 குறட்பாக்களும்; காமத்துப்பால் 5 அதிகாரங்களிலிருந்து 5 குறட்பாக்களும் என 57 அதிகாரங்களிலிருந்து 101 குறட்பாக்களை இந்நூலாசிரியர் எடுத்தாண்டிருக்கின்றார் என்பது தெரிகின்றது. இவற்றினைப் பார்க்கும் போது இந்நூலாசிரியர் திருத்தொண்டர்களின் அருட்செயல்களை அறத்துப்பாலின் வழியாகவும் பொருட்பாலின் வழியாகவும் மட்டுமே பெரும்பான்மை பார்த்திருக்கின்றார் என்பது தெரிகின்றது. எனவே, திருத்தொண்டர்களின் வரலாற்றில் அறமும் பொருளும் மிகுதியாக இருப்பது இதன்மூலம் தெளிவாகின்றது.
ஒவ்வொரு அதிகாரத்திற்குள்ளும் இடம்பெற்ற நாயன்மார்களும் அவர்களுக்கான திருக்குறளும் எவ்வாறமைந்துள்ளன என்பதைப் பின்வருமாறு சுட்டலாம். இங்குத் திருக்குறள் அதிகார வரிசை எண் - அதிகாரப் பெயர் - நாயன்மார்கள் பெயர் - (குறளெண்) என முறையே அமைக்கப்பெற்றிருக்கின்றது.
1. கடவுள் வாழ்த்து - கூற்றுவ நாயனார் (7)
பொய்யடிமை இல்லாத புலவர் (2)
பரமனையே பாடுவார் (5)
முப்பொழுதுந் திருமேனித் தீண்டுவார் (6)
பூசலார் நாயனார் (3)
தில்லை மூவாயிரவர் (1)
3. நீத்தார் பெருமை - திருநீலகண்ட நாயனார் (24)
எறிபத்த நாயனார் (29)
திருநாவுக்கரசு நாயனார் (28)
4. அறன்வலியுறுத்தல் - முருக நாயனார் (38)
மூர்க்க நாயனார் (32)
முழுநீறுபூசிய முனிவர் (33)
நேச நாயனார் (36)
6. வாழ்க்கைத்துணைநலம் - பரவையார் (53)
7. மக்கட்பேறு - சடைய நாயனார் (61)
இசைஞானி நாயனார் (69)
8. அன்புடைமை - கண்ணப்ப நாயனார் (79)
மூர்த்தி நாயனார் (72)
பத்தராய்ப்பணிவார் நாயனார் (80)
9. விருந்தோம்பல் - மாறன் நாயனார் (85)
சிறப்புலி நாயனார் (90)
10. இனியவை கூறல் - சுந்தரமூர்த்தி நாயனார் (95)
11. செய்ந்நன்றியறிதல் - கணநாத நாயனார் (101)
12. நடுவு நிலைமை - அமர்நீதி நாயனார் (118)
13. அடக்கமுடைமை - குலச்சிறை நாயனார் (125)
சக்தி நாயனார் (127)
21. தீவினையச்சம் - புகழ்ச்சோழ நாயனார் (202)
22. ஒப்புரவறிதல் - அதிபத்த நாயனார் (218)
முனையடுவார் நாயனார் (212)
சுந்தரமூர்த்தி நாயனார் (211)
23. ஈகை - மானக்கஞ்சாற நாயனார் (228)
அரிபாட்டாய நாயனார் (230)
உருத்திரபசுபதி நாயனார் (226)
சிறுத்தொண்ட நாயனார் (224)
24. புகழ் - திருஞானசம்பந்த நாயனார் (236)
27. தவம் - கோச்செங்கட்சோழ நாயனார் (266)
சுந்தரமூர்த்தி நாயனார் (265)
28. கூடாஒழுக்கம் - சாக்கிய நாயனார் (279)
32. இன்னா செய்யாமை - திருநாவுக்கரசு நாயனார் (320)
35. துறவு - திருநாவுக்கரசு நாயனார் (349)
திருஞானசம்பந்த நாயனார் (348)
சித்தத்தைச் சிவன்பால் வைத்தார் (350)
சுந்தரமூர்த்தி நாயனார் (349)
36. மெய்யுணர்தல் - மெய்ப்பொருள் நாயனார் (355)
திருநாவுக்கரசு நாயனார் (359, 352)
அப்பாலும் அடிச்சார்ந்தார் (356)
38. ஊழ் - அமர்நீதி நாயனார் (376)
கண்டேச நாயனார் (375)
40. கல்வி - திருநாவுக்கரசு நாயனார் (393)
ஐயடிகள் காடவர்கோன் (399)
காரி நாயனார் (397)
41. கல்லாமை - கலிய நாயனார் (408)
திருநீலகண்டசோழ நாயனார் (409)
42. கேள்வி - சுந்தரமூர்த்தி நாயனார் (411, 412)
49. காலம் அறிதல் - மங்கையர்க்கரசியார் (490)
51. தெரிந்து தெளிதல் - திருநாளைப் போவார் (505)
53. சுற்றம்தழால் - சோமாசிமாற நாயனார் (528)
55. செங்கோன்மை - கழற்சிங்க நாயனார் (541)
கோட்புலி நாயனார் (549)
நின்றசீர்நெடுமாற நாயனார் (543)
59. ஒற்றாடல் - கழற்றறிவார் நாயனார் (582)
60. ஊக்கம் உடைமை - திருஞானசம்பந்த நாயனார் (595)
62. ஆள்வினை உடைமை - திருமூல நாயனார் (620)
புகழ்த்துணை நாயனார் (619)
63. இடுக்கண் அழியாமை - குங்கிலியக்கலைய நாயனார் (624)
சுந்தரமூர்த்தி நாயனார் (622)
66. வினைத்தூய்மை - சுந்தரமூர்த்தி நாயனார் (659)
67. வினைத்திட்பம் - காரைக்காலம்மையார் (667)
நமிநந்தியடிகள் நாயனார்(666)
தண்டியடிகள் நாயனார் (664)
கணம்புல்ல நாயனார் (669)
68. வினைசெயல்வகை - ஆனாய நாயனார் (675)
71. குறிப்பறிதல்(பொ.) - திருக்குறிப்புத்தொண்டர் (703)
73. அவை அஞ்சாமை - செருத்துணை நாயனார் (726)
76. பொருள்செயல் வகை - இடங்கழி நாயனார் (757)
79. நட்பு - அப்பூதியடிகள் (785)
சுந்தரமூர்த்தி நாயனார் (786, 789)
80. நட்பு ஆராய்தல் - சுந்தரமூர்த்தி நாயனார் (795)
81. பழைமை - சுந்தரமூர்த்தி நாயனார் (807)
88. பகைத்திறம் தெரிதல் - திருஞானசம்பந்த நாயனார் (872)
89. உட்பகை - கோச்செங்கட்சோழ நாயனார் (890)
90. பெரியாரைப்பிழையாமை - திருஞானசம்பந்த நாயனார் (894)
91. பெண்வழிச் சேறல் - கலிக்கம்ப நாயனார் (905)
95. மருந்து - திருநீலநக்க நாயனார் (948)
96. குடிமை - திருவாரூர்ப் பிறந்தார் (959)
97. மானம் - ஏயர்கோன் கலிக்காமர் (968(
98. பெருமை - நரசிங்கமுளையரையர் (980)
சுந்தரமூர்த்தி நாயனார் (972, 978)
99. சான்றாண்மை - ஏனாதிநாத நாயனார் (986)
106. இரவு - இயற்பகை நாயனார் (1057)
110. குறிப்பறிதல்(கா.) - சுந்தரமூர்த்தி நாயனார் (1100)
111. புகழ்ச்சி மகிழ்தல் - சுந்தரமூர்த்தி நாயனார் (1102)
115. அலர் அறிவுறுத்தல் - சுந்தரமூர்த்தி நாயனார் (1146)
116. பிரிவாற்றாமை - பெருமிழலைக்குறும்ப நாயனார் (1158)
131. புலவி - திருநாவுக்கரசு நாயனார் (1302)
என அமைந்திருப்பதைக் காணலாம். பொதுவாகக் கடவுள் வாழ்த்தில் ஆறு குறட்பாக்களையும்; மெய்யுணர்தலில் ஐந்து குறட்பாக்களும்; அறன் வலியுறுத்தல், வினைத்திட்பம் மற்றும் ஈகை ஆகிய மூன்று அதிகாரங்களில் முறையே நான்கு குறட்பாக்களும்; நீத்தார் பெருமை, அன்புடைமை, ஒப்புரவறிதல், துறவு, கல்வி, கல்லாமை, செங்கோன்மை, பெருமை ஆகிய எட்டு அதிகாரங்களில் முறையே மூன்று குறட்பாக்களும்; மக்கட்பேறு, விருந்தோம்பல், அடக்கமுடைமை, தவம், ஊழ், கேள்வி, ஆ,ள்வினை உடைமை, பொருள்செயல் வகை, நட்பு ஆகிய ஒன்பது அதிகாரங்களில் முறையே இரண்டு குறட்பாக்களும்; வாழ்க்கைத் துணைநலம், இடுக்கண் அழியாமை, இனியவை கூறல், செய்ந்நன்றி அறிதல், நடுவு நிலைமை, தீவினையச்சம், புகழ், கூடா ஒழுக்கம், இன்னா செய்யாமை, காலம் அறிதல், தெரிந்து தெளிதல், சுற்றம் தழால், ஒற்றாடல், ஊக்கம் உடைமை, வினைத்தூய்மை, வினைசெயல்வகை, மன்னரைச் சேர்ந்தொழுகல், குறிப்பறிதல்(பொ.), குறிப்பறிதல்(கா.) அவை அஞ்சாமை, நட்பு ஆராய்தல், பழைமை, பகைத்திறம் தெரிதல், உட்பகை, பெரியாரைப் பிழையாமை, பெண்வழிச் சேறல், மருந்து, குடிமை, மானம், சான்றான்மை, இரவு, புணர்ச்சி மகிழ்தல், அலர் அறிவுறுத்தல், பிரிவாற்றாமை, புலவி ஆகிய முப்பத்தைந்து அதிகாரங்களில் முறையே ஒரு குறட்பாவும் அமைந்திருக்கக் காணலாம்.
மேலும், இவற்றின் உட்கூறுகளைப் பார்க்கும் போது திருக்குறளின் இல்லறவியலிலிருந்து 22ம், அரசியலிலிருந்து 20ம், பாயிரத்திலிருந்து 13ம், துறவறவியலிலிருந்து 12ம், அமைச்சியலிலிருந்து 9ம், நட்பியலிலிருந்து 10ம், குடியியலிலிருந்து 7ம், களவியலிலிருந்து 3ம், ஊழியல், கூழியல் மற்றும் கற்பியலிலிருந்து முறையே 2ம் என இயல் வைப்பு முறையில் திருக்குறட் பாக்கள் இந்நூலில் எடுத்தாளப் பெற்றுள்ளன. இதனைப் பார்க்கும் போது இல்லறம் மற்றும் அரசியல் ஆகிய இரண்டு இயல்களில் உள்ள குறட்பாக்கள் பெரும்பங்கும்; அதற்கடுத்த நிலையில் பாயிரம், துறவறம், அமைச்சியல், நட்பியல், குடியியலை விளக்கிச் சிறுபான்மை ஊழியல், கூழியல் மற்றும் களவியலைக் கொண்டுமுள்ளது எனலாம்.
அறன் வலியுறுத்தும் திருத்தொண்டர்கள்
சிவபெருமானை அடைவதற்குரிய வழிகளுள் சிறந்தது சிவனடியார்க்கு அமுதூட்டி வழிபடுதலேயாகும். இவ்வழியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் இளையான்குடி மாறன் நாயனார், சிறுத்தொண்ட நாயனார், இயற்பகை நாயனார் மற்றும் மூர்க்க நாயனார் ஆகியோர்களைக் குறிப்பிடலாம். அடியார்களுக்கு முன்னூட்டிப் பின்னுண்ணும் நியதியைக் கொண்ட இவர்களுள் மூர்க்கரின் அறச்செயலைக் குமாரபாரதி அவர்கள்,
"உருளாய மும்பொன்னு தவுதன்மூர்க் கர்க்கே
பொருளாய் மற்றவர்க்கே போக்கு - மருளாம்,
அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை
மறத்தினூஉங் கில்லை கேடு" (திருத்தொண்டர்மாலை, பா.44)
என்கின்றார். 'ஒருவனுக்கு அறம் செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை; அதனைச் செய்யாமையின் மேற்பட்ட கேடும் இல்லை' எனும் கருத்தினைக் கூறும் திருவள்ளுவரின் 'அறத்தினூஉங்' (குறள்.32) எனத் தொடங்கும் குறள் மூர்க்க நாயனாரின் அறச்செயலைச் சுட்டுகின்றது. இவர் அடியவர்க்கு முன்னூட்டிப் பின்னுண்ணும் நியதியைப் பெற்றவர். செல்வம் மிக்கிருந்த காலத்து தம் செல்வம் உள்ளவரை நேர்வழியில் இந்நியமத்தினைச் செய்து வந்தார். அச்செல்வம் அழிந்தபோது நியமத்தில் குறையொன்றும் நேர்ந்திடக் கூடாது என்று தாம் முன்னர்ப் பழகியிருந்த சூதாட்டம் இப்போது அவருக்குக் கை கொடுத்தது. வறுமைக் காலத்தில் சூதாடிப் பெற்ற வருமானத்தில் தொடர்ந்து இறைத்தொண்டு செய்து வரலானார். சூது என்பது ஐம்பெரும் பாதகங்களுள் ஒன்று என்றாலும் அதனைப் பயன்படுத்தும் நிலையில் நற்சூதாகும் தன்மையும், அதுவே வீடுபேற்றிற்கு வழியாகும் நிலையும் உண்டாக்கும் என்பதை மூர்க்கரின் வரலாறு நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. சூது ஆடுதல் கேடு என்றாலும் விளையும் பொருள்களைச் சிவனுக்கும் அவனது அடியவர்களுக்கும் பயன்படுத்துவதால் அச்சூதும் நற்சூதாகி இன்பம் பயக்கும் என்கிறார் குமாரபாரதி. அறன் வலியுறுத்தும் திருத்தொண்டர்களாகக் குமாரபாரதி அவர்கள் மூர்க்கரைத் தவிர முருகனார், நேசர், நீறணிவார் ஆகியோர்களையும் குறிப்பிடுகின்றார்.
ஈகை சுட்டும் திருத்தொண்டர்கள்
வறுமையும் துன்பமும் வந்த காலத்திலும் திருத்தொண்டினை விடாது செய்பவர்களே திருத்தொண்டர்கள். இவ்வகையில் - ஈகைத் தன்மையில் சிறுத்தொண்ட நாயனார், மானக்கஞ்சாற நாயனார், உருத்திரபசுபதி நாயனார், அரிவாட்டாய நாயனார் ஆகியோர்களை உட்படுத்துகின்றார் கயிலைக் குமாரபாரதி அவர்கள். இவர் அரிவாட்டாய நாயனாரைக் குறிப்பிடுமிடத்து,
"போயகமா மாவடுவும் புண்ணியர் வாயிற்கொளவே
'தாயர்' களத்தூறு வடுத்தான் கொண்டார் - வீயாரோ
சாதலி னின்னாத தில்லை யினித்தூஉம்
ஈதலி யையாக் கடை" (திருத்தொண்டர்மாலை, பா.14)
என்கிறார் குமாரபாரதி. 'சாதலின் மிக்க துன்பம் இல்லை, அதுவும் இனிதாம், இரந்து வந்தார்க்குக் கொடுத்தல் முடியா இடத்து' எனும் கருத்தினைக் கூறும் திருவள்ளுவரின் 'சாதலி னின்னாத' (குறள்.230) எனத் தொடங்கும் குறள் அரிவாட்டாய நாயனாரின் ஈகைத் தன்மையைச் சுட்டுகின்றது. கூலி நெல்லினுள்ளும் தாம் பெற்ற சிறந்த செந்நெல்லை இறைவரது திருவமுதுக்காக்கித் தாழ்ந்த கார்நெற் கூலி கொண்டு தாம் உண்டு வாழ்ந்த நாயனாரது ஈகைச் செயல் உலகை உய்விக்க வந்த சிறந்த சான்றாகும்.
மக்கட்பேறு உணர்த்தும் திருத்தொண்டர்கள்
நன்மக்கட் பேறடைதல் இல்லற இன்பத்தின் பேரெல்லை எனலாம். திருத்தொண்டிற்காகவே மகவை ஈன்ற தம்பதியரையும் நாம் நாயன்மார்கள் வரிசையில் வைத்துப் போற்றுகின்றோம். இந்நிலையில் சைவசமய முதல்வராகக் கருதப்பெறும் ஆளுடையபிள்ளை என்று வழங்கும் சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றெடுத்த சடைய நாயனார் - இசைஞானி நாயனார் ஆகியோர்களைக் குறிப்பிடலாம். இவர்களை,
ஆம்பற்றி னாற்'சடைய' ராலால சுந்தரரைத்
தாம்பெற்ற பேறே தவப்பேறே - யோம்பில்,
"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற" (திருத்தொண்டர் மாலை, பா.90)
உற்ற 'விசைஞானி'தா னோங்குபுகழ்ச் சுந்தரைப்
பெற்றதிலு மன்புமிகப் பெற்றானே - முற்றறிவால்
"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்
சான்றோ னெனக்கேட்ட தாய்" (திருத்தொண்டர் மாலை, பா.91)
எனும் பாடல்களால் குமாரபாரதி அவர்கள் சுட்டுகின்றார்.
அதாவது, ஒருவன் பெறும் பெறுகளுள் சிறப்புடையது நன்மக்களைப் பெறுதலாகும். தமக்கென்று இன்றி உலகு உய்யும்படி நன்மக்களைப் பெறுதல் என்பது அதனினும் மிகவும் சிறப்புடையது ஆகும். இறைவனின் தூதராகவும், சேரமானின் தோழராகவும் இருந்த சுந்தரரை இவ்வுலகு உய்ய மகவாகப் பெற்று ஈந்த பெருமையையுடைய சடைய நாயனாரைத் திருவள்ளுவர் 'பெறுமவற்றுள்' எனத் தொடங்கும் குறட்பாவிற்கு எடுத்துக்காட்டாக விளக்குகின்றார்.
ஒருதாய், தான் பெற்ற மகனை அறிவுடையோர் பாராட்டும்போது கிடைக்கும் மகிழ்ச்சியானது பெற்றபோது இருந்த மகிழ்ச்சியைவிட பன்மடங்கு அதிகரிக்கும் என்பர். சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றெடுத்த தாய் இனைஞானி அம்மையார் எனும் இசைஞானி நாயனார் ஆவார். சுந்தரரின் அறிவுத்திறனைக் கேள்வியுற்று மிக்க மகிழ்வெய்திய இசைஞானி நாயனாரைத் திருவள்ளுவர் 'ஈன்றபொழுதிற்' எனத் தொடங்கும் குறட்பாவிற்கு எடுத்துக்காட்டாக விளக்குகின்றார்.
ஆகச் சடைய நாயனாரின் தவப்பேறால் பெற்றெடுத்த ஆளுடைய பிள்ளையை அறிவுடையோ ரெல்லாம் அவரைச் சுந்தரமூர்த்தி நாயனாராக்கிப் பாராட்டுவதைக் கேள்வியுற்ற இசைஞானி நாயனாரின் மகிழ்ச்சி ஆகியவற்றைக் குமாரபாரதியவர்கள் 'பெறுமவற்றுள்' , 'ஈன்றபொழுதிற்' எனத் தொடங்கும் குறட்பாக்களின் மூலம் முறையே விளக்கிச் சென்றிருக்கின்றார். நன்மக்கட்பேறு சிறப்புற்றிருந்ததால்தான் திருத்தொண்டர் வரலாற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் (சடைய நாயனார், இசைஞானி நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார்) இடம்பெற்றிருக்கின்றனர் என்றால் அதுமிகையாகாது. இதுபோல் ஒரு அமைப்பு வேறெந்த திருத்தொண்டர்தம் குடும்பத்திலும் இல்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
நடுநிலை உணர்த்தும் திருத்தொண்டர்
இறைவன், துறவி வடிவு தாங்கி, அமர்நீதி நாயனாரிடம் 'நாம் நித்தியகன்மம் முடித்து வருகிறோம். இந்தக் கோவணத்தைப் பத்திரப்படுத்திவைக்க'வெனக் கட்டளையிட்டுச் செல்கின்றார். நாயனாரும் இறையடியவரின் கோவணவத்தை வீட்டில் பத்திரப்படுத்தி வைக்கச் சிவமூர்த்தி மாயையால் அதை மறைத்தனர். சிவமூர்த்தி சிறிது நேரம் கழித்து குளித்துமுடித்து மழையில் நனைந்தவராய் அடியவரிடம் வந்து முன் தாம் கொடுத்துச் சென்ற கோவணவத்தைக் கேட்கின்றார். கோவணம் காணாது போனதைக் கூறாமல் புதிய கோவணம் கொடுப்பதாகக் கூற, என்னுடைய பழைய கோவணமே வேணும் என்று துறவி கூற, அமர்நீதியார் சங்கடத்துக்குள்ளாகின்றார். அப்போது துறவியார் என்பழைய கோவணத்திற்கு ஈடாக உம்முடைய புதிய கோவணம் இருப்பின் யான் பெற்றுக்கொள்கின்றேன் என்ன, அடியவரும் தம்மில்லில் உள்ள புதிய கோவணத்தைத் துலாக்கோலில் வைக்கின்றார். கோல் சமனாகவில்லை. தம்மிடமுள்ள பொன் பொருள் அனைத்தையும் ஈடாக வைக்கின்றார். அப்போதும் கோல் சமனாகவில்லை. அடியவர்க்குத் தாம் பெரும்பிழை இழைத்துவிட்டோம் என்பதை உணர்ந்த அமர்நீதியார் மனைவி மற்றும் மைந்தருடன் தாமும் சேர்ந்து துலாக்கோலில் ஏறி நிற்க கோல் சமனாகின்றது. இச்செய்தியைக் குமாரபாரதியவர்கள் 'சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல்' எனும் திருவள்ளுவரின் வாக்கிற்கு அமர்நீதி நாயனாரின் வாழ்க்கையை எடுத்துக்காட்டியிருக்கின்றார். அப்பாடல் பின்வருமாறு:
நிரம்புபொருள் சேயோட 'மர்நீதர்' மனையாளோ
டரன் கோவணத்தட்ட தனேரிருந்தார் - "சமஞ்செய்து
சீர்தூக்குங் கோல்போ லமைந்ததொரு
பாற்கோடாமை சான்றோர்க் கணி". (திருத்தொண்டர்மாலை, பா.7)
ஆள்வினை உடைமை உணர்த்தும் புகழ்த்துணையார்
செருவிலி புத்தூரில் சிவமறையவர் குலத்தைச் சேர்ந்தவர் புகழ்த்துணை நாயனார். இவர் நாடோறும் சிவபெருமானுக்குச் சரார்த்தப் பூசை செய்து வருபவர். அக்காலத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது. பஞ்சத்திற்கு ஆட்பட்ட புகழ்த்துணையார் உடலில் சக்தியற்று உடல் இளைத்தவராய் ஆனார். ஒருநாள் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய முற்பட்டபோது அபிஷேக கலயத்தைச் சிவபெருமான் தலைமுடியிலிருந்து கை நழுவ விட்டுவிட்டுத் தானும் மூர்ச்சித்து விழுந்துவிடுகின்றார். அவ்வேளையில், சிவபெருமான் புகழ்த்துணையாரின் கனவில் தோன்றி, 'அன்பரே! உன்னுடைய உடல் தளர்ச்சியையும் பொருட்படுத்தாமல் எமக்குப் பூசை செய்யவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் செயலாற்றிய உம்மை உலகுக்கு எடுத்துக்காட்ட இதுவொரு வாய்ப்பாக எடுத்துக்கொள். உம்முடைய திருப்பணி தொடர பஞ்சம் நீங்கும் வரை நாடோறும் பீடத்தடியில் ஒரு பொற்காசு வைப்போம். அவற்றை எடுத்து கவலை போக்கிப் பூசை செய்வீராக' என்று கூறி மறைந்தனர். கனவில் கண்டது நனவில் நிறைவேற புகழ்த்துணையார் பஞ்சமதை உணராமல் சிவபூசையைத் தொடர்ந்து செய்து முத்திபெற்றார் என்பர். இவர்தம் வாழ்க்கையைத் திருவள்ளுவரின் 'தெய்வத்தால் ஆகாது எனினும்' எனும் குறட்பாவிற்குக் குமாரபாரதியவர்கள் எடுத்துக்காட்டாக்கி இருக்கின்றார். அப்பாடல் பின்வருமாறு:
வற்கடம் வந்தூண்போய் மெய்வாடிய 'புகழ்த்துணை'க்கை
நற்கலசம் வீழவரனார் கொடுத்தார் - பொற்காசு,
"தெய்வத்தா லாகா தெனினும், முயற்சிதன்
மெய்வருந்தக் கூலி தரும்". (திருத்தொண்டர்மாலை, பா.73)
அவை அஞ்சாமை சுட்டும் செருத்துணையார்
இறைவனது திருமுன்றினில் திருப்பணிகள் செய்தலும், காலந்தோறும் சேர்ந்து சிவனை வழிபடுதலும் சிறந்த சிவதருமங்களாகும். சிவனுக்கோ சிவனைச் சார்ந்தவர்களுக்கோ இழுக்குகள் நேரிடும்போது அவற்றைத் தட்டிக் கேட்காமல் வாளாயிருப்பார்களாயின் அவர்கள் சிவ அபராதம் பெற்றவர்களாவர். பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடின்றி சிவ அபராதம் கொடுத்தவர்தான் செருத்துணை நாயனார். இவரைக்,
"கருத்தனணி பூவைக் கழற்சிங் கன்றேவி
யருத்தி யின்மொகர்ந்தாண் மூக்கரிந்தார் - செருத்துணையார்
வாளோடெண் வன்கண்ண ரல்லார்க்கு நூலோடே
னுண்ணவை யஞ்சு பவர்க்கு" (திருத்தொண்டர்மாலை, பா.72)
என்கின்றார் குமாரபாரதி. 'பல நாளும் தாம் வாளொடு பயின்று போந்தனரேனும் என்ன பயன்? பகை வந்து உற்ற இடத்து அவ்வாளினால் பணிகொள்ளும் தறுகண்மை உடையரல்லாதார்க்கு; மற்று அப்படியே சிலர் பல நாளும் நூலோடு பயின்று போந்தாரேனும் என்ன பயன்? அந்நூலைத் தாம் எதிர்விடுத்து இன்புறாது கல்விக்குரிய சான்றோர் குழாத்தை அஞ்சமவர்க்கு' எனும் கருத்தினைக் கூறும் திருவள்ளுவரின் 'வாளோடென்' (குறள்.726) எனத் தொடங்கும் குறள் செருத்துணை நாயனாரின் அவை அஞ்சாமையைச் சுட்டுகின்றது. அதாவது, ஒருநாள் அரசரது பட்டத்து உரிமைத் தேவி திருவாரூர் இறைவனது திருக்கோயில் பூமண்டபத்தின் பக்கம் விழுந்த புதுப்பூவை எடுத்து மோந்ததனைக் கண்ட செருத்துணையார், அது பொருக்காது அரசியார் செய்த சிவ அபராதத்துக்காக வேகமாகச் சென்று கருவி கொண்டு அவளது மூக்கினை அரிந்தார் என்கிறார் சேக்கிழார் பெருமான். இத்தொண்டே இவரை உலகறியச் செய்தது எனலாம்.
இறையடியவர்களின் திருத்தொண்டுகள் பலவாகும். ஒரு அடியவரின் வரலாற்றிலேயே பல தன்மைகளைக் காணமுடியும். குறிப்பாக, சிறுத்தொண்ட நாயனாரிடம் அறன்வலியுறுத்தும் தன்மையையும், விருந்தோம்பும் தன்மையையும், ஈகைத் தன்மையையும் காண்கின்றோம். இவற்றில் ஏதாவதொன்று சிறுத்தொண்டரை மிக்கிருக்கச் செய்யும் செயலாகும். இங்குக் கயிலைக் குமாரபாரதி அவர்கள் சிறுத்தொண்டரின் ஈகைத் தன்மையை எடுத்துக் காட்டுகின்றார். இதுபோல், அடியவர்களின் சிவத் தன்மைகள் பலப்பல இருப்பினும் குமாரபாரதி அவர்கள் திருவள்ளுவரின் திருக்குறள் கருத்துக்களோடு இணைத்துப் பார்க்கும் போது இரு அடியவர்க்கும் ஒரே தன்மை வந்துற்றாலும் இவ்விருவரில் வேறுபட்ட மற்றொரு தொண்டின் சிறப்பைக் கொண்டு இந்நூலில் விளக்குவதை நூல் முழுக்கக் காணமுடிகிறது. இந்நூல் உரையுடன் தனிப்பதிப்பு நூலாக வெளிப்படின் திருத்தொண்டர்தம் வரலாறும் திருக்குறளும் பெற்ற சிறப்பினை அடையாளம் காட்டமுடியும் என்பதில் ஐயமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக