வெள்ளி, 2 நவம்பர், 2018

தேவமாதா அம்மானை

      காலத்தின் மாற்றத்திற்கு ஏற்பவும் சமுதாய மக்களின் தேவைக்கு ஏற்பவும் மக்களின் மனநிலைக்கு ஏற்பவும், புலவர்களின் புலமைத் திறத்திற்கு ஏற்பவும் பல்வேறு இலக்கிய வகைகள் தோன்றுகின்றன.  அவற்றுள், ஒரு வகையாக நாட்டுப்புற இலக்கிய வகையில் அம்மானைக் கதைப்பாடல் தோன்றி, மக்களின் உணர்வுகளையும், பல்வேறு கூறுகளையும் எடுத்துக் காட்டுகின்றது.

    நாடறிந்த நல்ல கதைகளே மிகுதியாகக் கதைப்பாடல்களின் பாடு பொருளாக அமைகின்றன.  மக்களின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சகுணங்கள், இறைநம்பிக்கை போன்ற பல்வேறு கூறுகளையும் எடுத்தியம்பு வனவாக கதைப்பாடல்கள் விளங்குகின்றன.  அந்த நிலையில் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தேவமாதா அம்மானையின் கூறுகளை எடுத்துக் கூறும் வகையில் இவ்வியல் அமைகின்றது.

சுவடி அமைப்பு

தேவமாதா அம்மானை என்னும் இச்சுவடி தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையில் சு.எண்.830இல் அமைந்திருக்கின்றது.  இது 38 செ.மீ. நீளமும், 3 செ.மீ. அகலமும் கொண்டு 136 ஏடுகள், 172 பக்கங்களைக் கொண்டுள்ளது. அறுசீர் விருத்தத்தால் ஆன காப்புப் பாடல் ஒன்றும், 3249 அம்மானை வரிகளையும் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.  தெளிவான கையெழுத்தில் அமைந்த இச்சுவடி பிழைகள் மலிந்து காணப்படுகின்றன.  பக்கத்திற்கு இரண்டு பத்திகளும், பத்திக்கு 6 அல்லது 7 வரிகளும் கொண்டுமைந்துள்ளது.  பல ஏடுகள் பழுதடைந்து முழுமையானதாக இச்சுவடி அமைந்துள்ளது.  இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

ஏட்டினை எழுதத் தொடங்குவதற்கு முன் ஏடு எழுதுவதற்குப் பதமான நிலையில் அமைந்துள்ளதா என்று சோதனை செய்யும் முகத்தான் சுவடியின் வலது ஓரத்தில் ஹரி ஓம், குரு வாழ்க, குருவே துணை போன்ற தொடர்கள் எழுதுவதற்கு முன் பிள்ளையார்சுழி இடுவது வழக்கம்.  இப்பிள்ளையார் சுழி எதற்காக எனில், ஏடு எழுதுவதற்குப் பக்குவமாக இருக்கிறதா என்பதை சரிபார்க்கவே. இவ்வாறு இடும் பிள்ளையார்சுழிகள் போன்ற சரிபார்க்கும் குறியீடுகள் சமயச் சுவடிகளில் சமயக் குறியீடுகளாக இடப்படுவதும் உண்டு.

இவற்றைக் கொண்டு பார்க்கும்போது கிறிஸ்துவச் சமயச் சுவடியான தேவமாதா அம்மானையின் முதல் ஏட்டின் வலப்புறத்தில் சிலுவைச் சின்னத்தையும் (ட்), அநாதியே நம, மரியே துணை போன்ற தொடர்களையும் காணமுடிகிறது.  மேலும்,

இதுபோன்ற குறியீடுகளும் இச்சுவடியின் ஏட்டில் அமையப் பெற்றிருப்பதைப் பார்க்கமுடிகிறது.  இந்தக் குறியீடுகளானது தந்தை மகன் தூய ஆவியினையோ அல்லது பிதா சுதனிஸ்பிரித்து சாந்துவின் அருளால் இதைக் குறிப்பதாகவோ அமையும்.

முற்குறிப்பு

தேவமாதா அம்மானைச் சுவடியின் தொடக்க ஏட்டில்,
“அந்தநம் புவியும் யாவும் அனைத்தையும் படைத்த சோதி
யெந்தையாம் பரனை யீன்ற ஈரில்லா கன்னி மரியின்
சுந்தர சரித்தி ரத்தைத் தூயநற் கதையைப் பாடி
இந்தமா நிலத்தில்ச் சேசு இறந்தநற் சிலுவை காப்பு”

என்னும் அறுசீர் விருத்த யாப்பால் அமைந்த பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.  இப்பாடல், உலகத்தைப் படைத்த சோதியாம் இறைவனை இம்மண்ணில் ஈன்றவள் கன்னி மரியாள்.  அந்த இறைவனுடைய தாயின் சரித்திரத்தைக் கதையாகப் பாட சிலுவையைக் காப்பாக வைத்துப் பாடுகின்றார் ஆசிரியர்.

பொதுவாக அம்மானைப் பாடல்களில் கணபதியைக் காப்பாக வைத்துப் பாடுவார்கள்.  ஆனால் இந்நூலில் சிலுவையைக் காப்பாக வைத்துப் பாடப் பெற்றுள்ளது.  தேவகுமாரனின் தாயாக மரியாள் இருப்பதாலும், இயேசுவின் ஒவ்வொரு நிலைக்கும் பக்க பலமாக அவரின் தாய் இருப்பதாலும் இந்நூல் தேவமாதா அம்மானை எனப் பெயர் பெற்றது போலும்.  கடவுளின் அருளால் ஒரு மகனைப் பெண் பெறுவதால் தூய மரியாள் என அழைக்கப்படுகின்றாள்.

பிற்குறிப்பு

தேவமாதா அம்மானைச் சுவடியின்  இறுதி ஏட்டில், “மரியே உன்னடக்கலம்.  நந்தன வருஷம் கார்த்திகை மாதம் 1ந்தேதி சண்டமங்கலத்தில் இருக்கும் 48, மெக்கேலுடையான் மகன் சந்தியாருக்கு தேவமாதா அம்மானை எழுதி முடிந்தது முற்றும்.  மேற்படி அம்மானை எழுதினது மேற்படியூர் மேற்படி மரிய சரியாபிள்ளை சவரிமுத்துப் பிள்ளை கையச்சரம்” என்னும் பிற்குறிப்புச் செய்தி இடம்பெற்று உள்ளது.  இச்சுவடியை நந்தன வருடம் காத்திகை மாதம் 1ந்தேதி சந்தியாருக்கு சவரிமுத்துப்பிள்ளை எழுதிக் கொடுத்திருக்கின்றார் என்பது இக்குறிப்பு மூலம் அறியமுடிகிறது.

தேவமாதா அம்மானை - கதைச்சுருக்கம்

கலிலேய நாட்டில், நாசரேத் என்னும் ஊரில் தாவிதின் குலத்தில் சுவக்கீன், அன்னமாள் என்னும் தம்பதியினர் இல்லறம் நடத்தி வந்தனர்.  திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆன பின்பும் அவர்களுக்குக் குழந்தைப்பேறு இல்லை.  எனவே, இறைவனிடம் வேண்டி, இறையருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது.  அதற்கு மரியாள் என்று பெயரிட்டுச் செல்லமாக வளர்த்து வந்தனர்.  அந்நாட்டு வழக்கப்படி குழந்தையை மூன்றாம் வயதில் கோயிலில் காணிக்கையாகக் கொடுத்துவிட வேண்டும்.  அம்முறைப்படி  மரியாளையும் அவர்கள் பெற்றோர் கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுத்துவிட்டனர்.  அது முதல் 12 வயது வரை ஆலயத்தி லேயே வளர்ந்து வந்தாள்.

அவள் பருவம் அடைந்ததும், மணம் முடித்து வைக்குமாறு கோயில் குருவிற்கு இறைவன் கட்டளையிட்டார்.  அதன்படி கோயில் குருவானவர் அந்நாட்டில் இருந்த திருமணமாகாத வாலிபர்கள் அனைவரும் ஒரு தடியை ஏந்தி கோயிலுக்கு வருமாறு ஆணையிட்டார்.  அப்படி வந்த வாலிபர்களில் சூசையும் ஒருவர்.  கோயில் குருவானவர் யாருடைய தடியானது துளிர்த்துள்ளதோ அவருக்கு மரியாவை மணம் முடித்துத் தருவதாகக் கூறினார்.  இறையருளால் சூசையின் தடி துளிர்த்திருந்ததால், மரியாவுக்கும் சூசைக்கும் மண ஒப்பந்தத்தை முடித்து வைத்தார்.

அவர்கள் நாசரேத்தூரில் தனியாக வாழ்ந்து வந்தனர்.  இருவரும் கன்னிமை விரதம் மேற்கொண்டு உடன் பிறந்தார் போல் வாழ்ந்து வந்தனர்.  ஒருநாள் மரியாள் தனித்து இருந்து செபம் செய்யும்போது கபிரியேல் என்னும் வானதூதன் அவள் முன் தோன்றி, மங்கள வார்த்தை கூறினார்.  தூய ஆவியால் அவர் கருவுறுவாள் எனவும், அவர்களுடைய உறவினரான எலிசபெத்து (இசபேல்) கருவுற்று இருப்பதாகவும், மலடி எனப்படும் அவளுக்கு இது ஆறாம் மாதம் எனவும் கூறி கடவுளால் ஆகாதது எதுவும் இல்லை என்று கூறினார்.

இதை அறிந்த பின் மரியாள் எலிசபெத்தின் ஊருக்கப் பயணமானார்.  எலிசபெத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தாள். மரியாவின் வாழ்த்தினைக் கேட்டதும் எலிசபெத்தின் வயிற்றில் உள்ள குழந்தை அகமகிழ்வால் துள்ளியது.  மரியாவைப் பெண்களில் பேறு பெற்றவள் என எலிசபெத்து வாழ்த்தினாள்.  அங்கு மரியாள் மூன்று மாதம் தங்கிப் பணிவிடைகள் செய்தபின் தம் ஊருக்கு வந்து சேர்ந்தாள்.

மரியாள் கருவுற்று இருந்ததைக் கண்ட சூசை அவள்மீது ஐயம் கொண்டு, ஒதுக்கிவிட எண்ணியபோது வானதூதன் அவருக்குத் தோன்றி மரியாள் கருவுற்று இருப்பது இறையருளால்.  எனவே, அவளை ஏற்றுக் கொள்ளத் தயங்க வேண்டாம் எனக் கூறி மறைந்தார்.  இதற்குப் பின் சூசை ஐயம் நீங்கி மரியாளுடன் வாழ்ந்தார்.

அப்போது உரோமை ஆண்ட அரசன் தன் நாட்டுக் குடிமக்களின் தொகை யைக் கணக்கிட விரும்பினான்.  அதனால் ஒவ்வொருவரும் தம் முன்னோரின் ஊருக்குச் சென்று தம் பெயரைப் பதிவு செய்து கொள்ளுமாறு ஆணையிட்டான்.  அதன்படி, சூசையும் கற்பவதியான மரியாளும் பெத்லகேம் என்னும் ஊருக்குப் பயணமானார்கள்.  அங்குச் சென்ற அவர்களுக்குத் தங்குவதற்கு விடுதிகளில் இடம் கிடைக்கவில்லை.  ஆதலால் அந்நகருக்குப் புறத்தே மலையிலிருந்த மாட்டுக் குடிலில் தங்கினர்.

அன்று நள்ளிரவில், எவ்வகை நோக்கீடும் இன்றி மரியாள் பாலனைப் பெற்றெடுத்தாள்.  அவர்கள் தங்கியிருந்த மலைக்கு அருகில் இடையர்கள் ஆடுகள் மேய்த்துக் கொண்டு இருந்தார்கள்.  அவர்களுக்கு வானதூதர்கள் அறிவிக்க அவர்கள் பாலனை வந்து பணிந்தனர்.

கீழ்த்திசை ஞானிகள் மூன்று பேர் விண்மீன் வழிகாட்ட பாலனை வந்து பணிந்தனர்.  அவர் ஏரோது மன்னனிடம் மீட்பர் பிறந்துள்ளார் என அறிவித்தார்.

குழந்தை யூதர்களின் முறைப்படியே கோயிலுக்கு எடுத்துச் சென்று இயேசு எனப் பெயரிட்டு மோசே சட்டப்படி முதல் குழந்தையைக் காணிக்கையாகக் கொடுத்து, அதற்குப் பதில் ஒரு சோடி புறாவினைத் தந்து காணிக்கையாக்கினர்.  அப்போது அங்கு வந்த முதியவர் சீமோன் இயேசுவின் பாடுகளை முன்னறிவித்து, மரியாவின் மனத்தை வியாகுல வாள் ஊடுருவும் என்று கூறினார்.  அதைக் கேட்டு, மரியாள் மனம் நொந்தார்.  பனுவேலின் மகள் என்னும் முதிய விதவை அன்னாள் (மாமாள்) அங்கு வந்து இயேசுவை வணங்கி, உலக மீட்பர் என்று அறிக்கை இட்டார்.  அதன்பின் சூசையும் மரியாளும் குழந்தை இயேசுவுடன் நாசரேத் தூருக்கு வந்து வாழ்ந்து வரலாயினர்.

கீழ்த்திசை ஞானிகள் வந்து சொன்ன செய்தியினைக் « கட்ட ஏரோது மன்னன் பாலனைக் கொல்ல ஏற்பாடு செய்தான்.  அதன் பேரில் 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளைக் கொல்ல ஆணையிட்டான்.  வானதூதன் மூலம் இதை அறிந்த சூசையும், மரியாளும் இயேசுவைத் தூக்கிக் கொண்டு எகிப்து நாட்டுக்குச் சென்றார்கள்.  ஏரோது இறந்த பின்பு நாசரேத்தூருக்குத் திரும்பி வந்தனர்.

பாங்கு விழாவுக்காக எருசலேசம் சென்ற போது சிறுவன் இயேசுவைக் கோயிலில் விட்டுவிட்டு உறவினர் மத்தியில் தேடினார்கள்.  அங்கு இல்லாமல் போகவே தேடிக்கொண்டு வருந்தினர்.  மீண்டும் இருவரும் எருசலேசம் கோயிலுக்குச்¢ சென்றுபோது, மூன்றாம் நாள் மறைநூல் அறிஞர் மத்தியில் இயேசுவைக் கண்டு மகிழ்ந்தனர்.  பின் நாசரேத்தூரில் தங்கி வாழ்ந்து வந்தனர்.  சூசை இறந்த பின்பு இயேசுவை வளர்க்கும் பொறுப்பு மரியாள் மீது விழுந்தது.

இயேசுவுக்கு முப்பது வயது முடிவுற்ற போது அவர் அருளப்பரிடம் தண்ணீரால் ஞானஸ்தானம் பெற்று மலைக்குச் சென்று நாற்பது நாள் கடுந்தவம் செய்து பேய்ச் சோதனைகளை வென்று வீடு திரும்பினார்.  பின்னர், கானான் ஊரில் மரியின் உறவினர் வீட்டில் திருமணம் ஒன்று நடந்தது.  அதற்கு இயேசுவும், அவர் தாயும் சென்றிருந்தனர்.  அங்கு விருந்தினருக்குப் பரிமாறும் ரசம் தீர்ந்துபோக, மரியாள் மகனை மன்றாடினாள்.  எனவே, தாயின் மன்றாட்டினால் தண்ணீரை ரசமாக மாற்றித் தன்னுடைய முதல் புதுமையைச் செய்தார்.

பின் இயேசு சீடர்களைச் சேர்த்துக் கொண்டு பல ஊர்கள் சென்று போதனையும், புதுமைகளும் செய்து வந்தார்.  மூன்று ஆண்டுகள் போதனை செய்த பின்பு, ஒரு நாள் தம் தாயை அணுகி, மக்களை மீட்கத் தாம் பாடுபட வேண்டும் என்ற இறைவனின் திட்டத்தைக் கூறி, தாயாரிடம் அனுமதி கேட்டார்.  அப்போது தாய்பட்ட மனவேதனைக்கு அளவில்லை.  ஆயினும் இறைவன் சித்தத்திற்கு இசைந்தார்.

அனுமதி பெற்ற பின் தன் சீடருடன் செபம் செய்து கொண்டு இருந்தபோது யூதர்கள் வந்து இயேசுவைப் பிடித்தார்கள்.  அவரை பிலத்துவிடம் கொண்டு சென்று சாலமோன் கட்டிய ஆலயத்தை இடித்து மூன்று நாளில் கட்டுவதாகவும், பல காரணங்கள்   கூறி சிலவைச் சாவிற்கு கையளிக்குமாறும் கூறினார்கள்.  இயேசுவிடம் குற்றம் காணாத பிலத்து அவரை விடுவிக்க முயன்றும் முடியாமல் போகவே, சிலுவையில் அறைந்து கொல்ல அனுமதி அளிக்கின்றார்.

இந்த நிகழ்வுகளை எல்லாம் யோவான் (சுவானி) என்பவர் மரியாவிடம் விளக்கமாக அறிவிக்கின்றார்.  தன் மகன் படும் வேதனையான பாடுகளை காண்பதற்கு மனவேதனையோடு புறப்பட்டார்.  இயேசு சிலுவை சுமந்து செல்லும் பாதை நெடுகிலும் மக்கள் கண்டு அழுதனர்.  வெரேனிக்கா என்ற பெண் துணிவுடன் ஒரு சீலையால் அவரின் முகத்தைச் சென்று துடைத்தபோது இயேசுவின் முகம் அதில் பதிகின்றது.  இயேசு சிலுவையின் சுமையால் வேதனைப்பட்டபோது அவருக்கு உதவியாக சிலவை சுமக்க சீமோன் என்பவரையும் கல்வாரி மலை நோக்கி கூட்டிச் சென்றார்கள் யூதர்கள்.

கல்வாரி மலையை அடைந்ததும் அவரை மூன்று ஆணி கொண்டு சிலுவையில் அறைந்து, இரு பக்கமும் இரு கள்வர்களையும் அறைந்தார்கள்.  பல வேதனைபட்ட இயேசு வௌ¢ளிக்கிழமை நண்பகல் வேளையில் தம் உயிரை கையளித்தார்.  மகனின் சாவைக் கண்ட தாய் துடித்து அழுதாள்.  யோவான், நிக்கோ, தேமு முதலியவர்கள் இயேசுவைச் சிலுவையில் இருந்து இறக்கிப் புதிய கல்லறை ஒன்றில் அடக்கம் செய்தனர்.

மூன்றாம் நாள், இயேசு உயிர்த்து மாதாவுக்கும், மரிய மதலேனாளுக்கும், அப்போஸ்தலர்களுக்கும் காட்சி கொடுத்தார்.  எட்டாம் நாள் புனித தோமையா ருக்குக் காட்சி கொடுத்தார்.  அப்போது, மாதா அப்போஸ்தலர்களுடன் சென்னாக் கொலுமனையில் தங்கியிருந்தார்.

இயேசு நாற்பதாம் நாள் விண்ணகம் சென்ற பின் பத்து நாள் கழித்து, தூய ஆவி மரியாள் மீதும், அப்போஸ்தலர்கள் மீதும் அக்கினி நாக்கு வடிவில் இறங்கி வந்தார்.  தூய ஆவியைப் பெற்ற அப்போஸ்தலர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு வேதம் போதிக்கச் சென்றனர்.  யோவான் மட்டும் எருசலேமிலேயே தங்கி மாதாவுக்கு உதவிகள் செய்து வந்தார்.

அப்போஸ்தலர்களில் ஒருவராகிய இஸ்பானியா நாட்டில் வேத போதகம் செய்து வந்தபோது, ஒரு நாள் மாலை எபிரே என்னும் பெயருடைய ஆற்றங் கரையில் தம் சீடருடன் தனித்திருந்து மாதாவைத் தியானித்து மன்றாடியபோது, மாதா வான்வழியாக அங்குச் சென்று ஒரு தூணிலிருந்து காட்சியளித்தார்.

மாதாவுக்கு விண்ணகம் செல்ல விருப்பம் தோன்றியது.  இறைவனை வேண்டினார்.  விண்ணிலிருந்து ஒரு தூதன் வந்து தோன்றினான்.  தாம் மரணம் அடைவதற்கு முன், பன்னிரு சீடர்களையுங் காணவேண்டுமென்று விருப்பந் தெரிவித்தார்.  தோமையார் தவிர மற்றவர்கள் வந்து சேர்ந்தனர்.  அவர்களுக்கு ஆசிர்வாதம் அளித்து எந்த நோயும் இன்றி மாதா இறந்தார்.  அப்போது அவருக்கு வயது அறுபது.  அவரைப் புதிய ஒரு கல்லறையில் மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.

மூன்று நாள் கழித்து தோமையார் இந்தியாவில் இருந்து வந்து சேர்ந்தார்.  அன்னையின் கல்லறைக்குச் சென்று அவரது உடலைக் காணவேண்டும் என்று கூறினார்.  எனவே, கல்லறையைத் திறந்தனர்.  அங்கே உடலை மூடியிருந்த போர்வை மட்டுமே இருந்தது.  அன்னையின் உடல் இல்லை.  அவர் உடலுடன் விண்ணகம் எடுத்துச் செல்லப்பட்டார் என வானதூதர் அறிவித்தார்.

மாதா விண்ணகம் சென்ற பின் பல புதுமைகளை மண்ணகத்தில் செய்தார்.  அதில் இரண்டு மட்டும் இங்குக் கூறப்படுகிறது.

கொலோன் என்னும் நகரில் மாதாவின் பக்தன் ஒருவன் இருந்தான்.  அவன் மற்றொருவனுடன் வாதம் செய்தபோது அவனைக் கொன்றுவிட்டான்.  பக்தன் தன் தவறை எண்ணி வருந்தினான்.  ஆனால், இறந்தவனின் உறவினர்கள் பழிக்குப்பழி வாங்கத் திட்டமிட்டனர்.

ஒருநாள், பக்தன் கோயிலுக்குள் சென்றதைக் கண்டு அவர்களும் கோயிலுக்குள் நுழைந்தனர்.  அவன் அன்னையின் திருவுருவுக்கு முன்னே நின்று மனமுருகி மன்றாடிக் கொண்டு இருந்தான்.  அவனுடைய சொற்கள் பூக்களாய்ச் சொரிந்தன.  அன்னை அவன் எதிரில் இருந்துகொண்டு அப்பூக்களை எடுத்து அவனுக்கு முடியாகச் சூட்டிக் கொண்டிருந்தார்.  பக்தனைக் கொல்ல வந்தவர்கள் இக்காட்சியைக் கண்டு நடுங்கி அவன் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினர்.

பிரான்சு நாட்டில், தோமினிக்கு என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார்.  அவர் இறை வார்த்தைகளை நாள்தோறும் எடுத்துச் சொன்னாலும் அவற்றை கேட்பவர்கள் இல்லையென்று வேதனைப்பட்டு மாதாவிடம் முறையிட்டார்.  மாதாவும் அவர்முன் தோன்றி, செபமாலை ஒன்றைக் கொடுத்து அதனைச் செபிக்குமாறு கட்டளையிட்டார்.  தோமினி செபமாலை செபிப்பதைக் கண்ட மற்றொரு குரு அவரை ஏளனஞ் செய்தார்.

தோமினியும் அவருடைய சீடர்களும் வேறு ஊருக்குச் செல்லும்போது ஆறு ஒன்று குறுக்கிட்டது.  அதைக்கடக்க வழிதெரியாமல் அவர்கள் திகைத்தனர்.  தோமினி ஆற்றின்மீது சிலுவை அடையாளம் வரைந்தபின் அனைவரையும் ஆபத்தின்றி அடுத்த கரைக்குக் கூட்டிச் சென்றார்.  அங்கு ஒரு பூங்காவில் தங்கினர்.

அவர்கள் அன்னையை நோக்கி மன்றாடியபோது அன்னை வானவருடன் தோன்றி அங்கிருந்த மலர்களைப் பறித்து முடியாகக் கட்டி, தோமினிக்கும் மற்றவர் களுக்கும் அணிவித்தார்.  தோமினியைப் பழித்த குருவும் முடிபெற விரைந்து வந்தார்.  அன்னை அவரை நோக்கி செபமாலையை அவர் பக்தியோடு செபித்தால் முடி கிடைக்கும் ன்று சொல்லிவிட்டு மறைந்தார்.  அது முதல் அவரும் செபமாலை சொன்னதோடு பிறரையும் சொல்லச் செய்தார்.

நூலின் நோக்கம்

தேவமாதா அம்மானை கிறிஸ்துவச் சமயத்தின் கூறுகளை எடுத்துக் கூறுவதாகக் காணப்படுகிறது.  கத்தோலிக்கத் திருச்சபையில் வழங்கி வந்த தேவ தாயின் வரலாற்றைப் பின்பற்றி இந்த நூல் இயற்றப்பெற்றுள்ளது.  இதனைப்

“பொன்னாரு ரோமை பொதுச்சமையில்த் தீட்டிவைத்த
நன்னிதி வாசகத்தை நான்சிறிது தானெடுத்து
பாடத் துணிந்தேன் பராபரனே உன்கிருபை”     (வரி.20-22)

என்ற இப்பாடல் வரிகள் உணர்த்தக் காணலாம்.

கிறிஸ்¢துவச் சமயத்தின் நம்பிக்கைகள், இயேசு கிறிஸ்துவின் போதனைகள், தேவ தாயின் பிறப்பு, வளர்ப்பு, இயேசுவின் பிறப்பு, அவரின் புதுமைகள், பாடுகள் ஆகியவற்றை மக்கள் அறிந்த வகையில் கதைப்பாடலாக இவ்வம்மானையில் கூறப்பட்டுள்ளது.

“சுருதி தனைவரைந்து துய்யசுவி சேஸகரில்
கருதிய சிஷ்டமுனி கற்றவனு மத்தேயு
ஆதியா தீட்டும் அதிகார மானதிலே
சோதியருள் கொண்டு தொகுத்தெழுதி வைத்தபடி”     (வரி.44-47)

என்ற வரிகள் நசரேயவெனும் பட்டணத்தில் சுவக்கீன் அன்னமாள் என்பவருக்கு மகளாக மரியாள் பிறந்ததையும், சூசைக்கும் மரியாவுக்கும் மண ஒப்பந்தம் செய்த நிகழ்வையும், மத்தேயு நற்செய்தி அடிப்படையில் செய்திகள் கூறப்பட்டுள்ளன என்பதை விளக்குகின்றது.

இயேசுவின் பிறப்பும், பாடுகளும், உயிர்ப்பும், நிகழ்வுகளும் உலூக்காஸ் என்ற நற்செய்தியாளர் கூறிய படி அந்த நற்செய்தியின் செய்திகளை மையமாகக் கொண்டு இவ்வம்மானையில் எழுதப்பட்டுள்ளது.  இதனை,

“உற்றகணக் கணஉ லூக்கவானஞ் சொன்னபடி
பெற்ற குமாரனுக்குப் பீர்லத்துணி பொதிந்து
கற்தொட்டி லான கனமாடு ஆடருந்தும்”                                  (வரி.721-723)

என்ற வரிகள் உணர்த்தக் காணலாம்.

அம்மானை கதைப்பாடலின் பொதுக் கூறுகள்

அம்மானைக்கென சில பொதுக்கூறுகள் அமைந்திருக்கின்றன.  அவற்றுள், சில தேவமாதா அம்மானையிலும் இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.  அதாவது,

1. வாய்மொழியாக வழங்கப்படுவது
2. பாட்டாகப் பாடப்படுவது
3. கதையின் நிகழ்ச்சிப் போக்கு
4. மரபுகள்
5. உவமைகள்
6. இயற்கை இறந்த நிகழ்ச்சிகள்
7. கதை கூறும் முறை

போன்ற பொதுக்கூறுகள் இவ்வம்மானையில் இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.

வாய்மொழியாக வழங்கப்படுவது

இவ்வம்மானை தொடக்க கால முதல் கொண்டே வாய்மொழியாகவே மக்கள் மத்தியில் வழங்கப்பட்டு வந்துள்ளது.  குறிப்பாக, கிறிஸ்தவச் சமயத்தினரிடையே அதிகமாக பேசப்பட்டு வந்துள்ளது.

பாட்டாகப் பாடப்படுவது

அம்மானை, பாட்டாகப் பாடப்படுவதாகும். இவ்வம்மானை பாட்டாகப் பாடப்பெற்றிருப்பதை,

“புண்ணிய மாமரியாள் பூதலத்திலே நடந்த
தன்மச் சரித்திரத்தைத் தாரணியில் யான்பாட”   (வரி.12-13)

“நன்னிதி வாசகத்தை நான்சிறிது தானெடுத்து
பாடத் துணிந்தேன் பராபரனே உன்கிருபை”          (வரி.21-22)

“நாவிற் தரித்து நமஸ்கரித்து நாதனருள்
பாவில்ப் பறித்திடவே  பல்லோருங் கேட்டருளீர்”  (வரி.42-43)

போன்ற வரிகளால் இக்கதை பாடலால் பாடப்பெற்றதை உணர்த்துகின்றது.

3. கதையின் நிகழ்ச்சிப் போக்கு

கதைப்பாடல் கேட்டு மகிழவேயன்றி கற்று மகிழத்தக்கதல்ல.  எனவே, கேட்போர் நினைவில் நிற்கும் வண்ணம் ஒரே வருணனை அல்லது சிறப்பான செய்தி போன்றவற்றைத் திரும்பத் திரும்பக் கூறப்படும் முறை அம்மானை இலக்கியங்களில் காணப்படக்கூடிய ஒன்று.  கேட்போர் ஒருமுறை கேட்கத் தவறினாலும் மறுமுறை கேட்டு மகிழ இம்முறையைப் பின்பற்றுகின்றனர்.

ஒரு நிகழ்வை முதலில் கூறிவிட்டு பின்பு அதை விரிவாக விளக்கும் கதை நிகழ்ச்சிப் போக்கு இம்வம்மானையில் அமைந்திருக்கின்றது.

“அன்னை வயிற்றில் அருள்கோலந்¢ தானெடுக்க
வாரோம் நாமென்று மதுரகன்னி தம்மிடத்தில்
கூறுங் கபிரியலாங் கோவான சம்மனசை
ஏக திரித்துவமாய் என்றுமுகி யாதிருப்போன்
போக விடுத்தார் புவிமீதி லம்மானை”                                      (வரி.293 - 297)

என்ற வரிகள் கபிரியேல் தூதன் மரியாவிடம் சென்று கடவுளின் மகன் உன் வயிற்றில் மனுவாகப் பிறப்பார் என்பதைக் கூறுவதாக அமைந்துள்ளது.  இந்நிகழ்வு இவ்வம்மானையின் பிறிதொரு இடத்தில் விரிவாகக் கூறப்பட்டு உள்ளது.  இதுபோல் பல தொடர்கள் அமைந்துள்ளமையை இவ்வம்மானை முழுதும் காணமுடிகிறது.

4. மரபுகள்

சில வழக்கியல் மரபுகள் பல அம்மானைக் கதைப்பாடல்களில் பொதுவாகக் காணப்படுகின்றன.  அவை,

அ. விருந்து படைப்பதாகக் காட்டுவது.
ஆ. ஓலை எழுதுவதாகவும், அதை அனுப்புவதாகவும் 
அமைந்தது.
இ. காட்டின் வளத்தையும், அதைக் கடந்து செல்லும் 
நிலையையும் பேசுவது

போன்ற நிகழ்வுகள் அம்மானைப் பாடல்களில் மரபுகளாக இருப்பதுண்டு.  இவ்வம்மானையில் ஓலை எழுதுவதும், அதை அனுப்புவதுமான மரபு சொல்லப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

“ஒத்தவி யானு வென்ம்போன் ஓங்கஒரு குடைக்கீழ
இத்தரை யெல்லாம் ராசாங்கம் பண்ணுகையில்
தன்பெருமை காண தரைமுழுதும் பேரெழுதி
இன்ப வரிவங்க இங்கிவனுஞ் சம்மதித்து
மாமணிய காரையும் வல்ல கணக்கரையும்
தாமிச மில்லாமல்த் தானெழுதி வாருமென்று
எங்கும் முரசறைந்து எப்பதிக்கும் மோலையிட்டு” (வரி 656 - 662)

என்ற வரிகள் ஓலை விடுக்கும் செய்தியை உணர்த்தக் காணலாம்.

5. உவமைகள்

எளிய மக்கள் அறிந்த உவமைகள் அம்மானையில் அமைந்திருக்கும்.  எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் இவ்வுவமைகள் அமைந்திருக்கும்.

“விண்தோண்டி யுண்டான மேலாஞ்சு மாறுகளிலும்
மண்தோண்டி யுண்டான மானிடர்கள் தங்களிலும்
எண்ணிக்கைக் குள்ளடங்கா ஏகாந்த ராசகன்னி
பெண்ணுக்கு மிக்கழகு பேரான லெட்சணமும்
சேடித்துப் பார்த்துச் செகந்தோன்றி யின்றளவும்
கூடப் பிறந்திறந்த கோதையர்க ளானாலும்
இன்னம் பிறக்கும் எழில்மடவர் தங்களிலும்
அன்னை மரியாள் அழகெடுக்கப் போறதில்லை
இப்படிக் கொத்த ராசகுலக் கன்னியரை
ஒப்பிட்டுப் பார்க்க உகமை யொன்றுங் காணாது” (வரி 550 - 559)

என்ற வரிகள் மரியாளின் அழகிற்கு விண்ணில் உள்ள சம்மனசுகளிலும், மண்ணில் உள்ள மானிடர்கள் ராச கன்னியர்கள் போன்றவர் அழகுகளிலும் இருந்து மிகுந்த அழகு பெற்றுத் திகழ்கின்றவள்.  இதனைச் சொல்வதற்கு உவமையே இல்லை என்று ஆசிரியர் கூறுகின்றார்.

6. இயற்கை இறந்த நிகழ்ச்சிகள்

அம்மானைப் பாடலில் இயற்கை இறந்த நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.  இவை கேட்போரை ஈர்த்துச் சுவையைப் பெருக்குகின்றன.  புராண வகையைச் சார்ந்த அம்மானைகளில் மைய நிகழ்ச்சிகள் அனைத்தும் இயற்கை இறந்தவை யாக அமைந்திருக்கும்.  வானுலகிற்குச் செல்வதும், இறைவனோடு உரை யாடுவதும் மிக எளிய காட்சிகளாகக் காட்டப்படுகின்றது.  இந்நிலையில் இவ்வம்மானையில்,

“நித்தியனைப் பெற்ற நிறைஞானக் கற்புடையாள்
விண்ணம் பரந்திருந்து மேலுலகோர் தான்ஞ்சூடி
எண்ணப் படாத்தவ ஏந்திழையார் தன்னுடனே
தண்டலையில் தோண்டித் தருவில் மலர்பரித்து” (வரி 3185 - 3189)

என்ற வரிகள் மாதா விண்ணகம் சென்றதையும், அவரை நினைத்து மன்றாடும் போது மண்ணில் தோன்றி காட்சி தருவதையும் விளக்குகின்றது.

இதுபோன்று பல இயற்கை இறந்த நிகழ்ச்சிகள் இவ்வம்மானையில் காணப்படுகின்றன.

7. கதை கூறும் முறை

அம்மானை, கதைப்பாடலாக அமைந்திருப்பதால் கதை கூறும் உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.  தொடரமைப்பானது ஆசிரியர் தன்முன் நிற்பவருடன் கதை சொல்லும் பாங்கு வெளிப்படுகின்றது.

சிறப்புக் கூறுகள்
1. நகரச் சிறப்பு

யூதேய நாட்டின் சிறப்பும், நசரேத்து என்னும் ஊரின் சிறப்பும் இவ்வம்மானையில் கூறப்பட்டுள்ளது.  இந்தக் கதையானது யூதேய நாட்டில் கலிலேய தேசத்தில் நசரேத்து என்னும் ஊரில் நடந்ததாகக் கூறப்படுகிறது.  இதனை,

“சொற்பெரிய ஓதேய தோற்றுங் கலிலேயவெனும்
சிறக்குங் கலிலேய தேசத்தில்ச் சேந்தபதி
நறைக்கம் நசரேய வெனும் நாமமுள்ள பட்டணத்தில்” (வரி 50 - 52)

என்ற வரிகள் இவற்றினை விளக்கக் காணலாம்.

இந்தப் பட்டணம் பெரும்புகழ் பெற்று அக்காலத்தில் திகழ்ந்து, கற்று அறிந்த நல்ல ஞானிகளையும், பல செல்வங்களையும், வளமைகளையும் பெற்று இருந்துள்ளது.  யூதேய நாட்டின் தலைசிறந்த பட்டணமாக நசரேத்து இருந்து உள்ளது.  செருசலை தேவாலயமும் இங்குத்தான் காணப்படுகின்றது.  இதனை,

“நீதியுங் காரணமும் நீன்ற பெரும்புகழும்
வீதியுங் கோபுரமு மிக்கநவ மானதுவும்
முன்னோர் வளமைகளு மூதரிந்தோர் செய்திருந்த
நன்னிதி யான நடைக்கைகளுஞ் சொல்லரிது
இப்பெரிய பட்டணத்தில் ஏத்துமிசரே கிளையில்” (வரி 53 - 57)

என்ற வரிகள் நகரச் சிறப்பைத் தெளிவாக விளக்கக் காணலாம்.

2. துன்ப வெளிப்பாடு

ஒவ்வொருவரின் வாழ்விலும் துன்பம் என்பது இருந்தே வருகின்றது.  மனிதர்களின் மனநிலையில் அது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை இவ்வம்மானையில் ஆசிரியர் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.

“ஏற்றம் வயது 
இரண்டரைக் குள்ளான்
தோற்றுங் குழந்தைகளைத் 
தொண்டையறு மென்றுசொன்னான்”

என்ற வரிகள் இரண்டரை வயதிற்குள் உள்ள குழந்தையைத் தொண்டை அறுத்து சாவிற்கு ஒப்படைக்குமாறு துன்பமான ஆணையிட்டதைக் சுட்டுகின்றது.

தான் பெற்ற குழந்தைக்குத் தன்னுடைய கண்ணிற்கு எதிரே துன்பம் நடப்பதைக் காண்டு தாயின் உள்ளம் துடிக்கும் நிலையை,

“அன்னை யன்னையென்று பிள்ளை அஞ்சியழத் தாயார்கள் தான்
என்னே முன்னே கொல்லுமென்று ஈனமுரச் சொல்லிடுவார்
ஒன்பது மாதம் உதிரத்தே வைத்திருந்த
இன்பமுள்ள தாய்மார் இறங்கா திருப்பார்களோ
ஆவென் றலரிடுவார் ஆகடியமென்று சொல்லிடுவார்
கோவென்று கையுசத்திக் கூந்தல் பறித்திடுவார்
பாலொழுகுங் கொங்கையிலே பட்டுரெத்த மாரோட
காலொழுகக் கண்ணொழுக கண்ணோடு கண்ணைவைப்பார்”
                                                                                                      (வரி 1116 - 1120)

என்ற வரிகள் இவற்றை உணர்த்தக் காணலாம்.

இயேசுவிற்குச் சிலுவைச் சாவு கொடுத்தவுடன் தேவ தாயின் உள்ளம் அடைந்த வேதனையினை,

“எண்ணத்துக் கெட்டாது ராசகன்னிப் பட்டதுயர்
ஏங்கியுயிர் கலித்தாள் என்மகனே யென்றழுதாள்
தாங்கியிவ ளுயிரை தர்ப்பரன் காரா திருந்தால்
ஓங்கிஉயிர் விடவும் உள்ளதெல்லாம் எனக்கிடவும்
ஆங்கரும மல்லவென்று ஆருரைக்கப் போறார்கள்
விண்டலமும் மண்டலமும் மேவியொன்றாய்ச் சொன்னாலும்
கண்டரியக் கூடாது கன்னிகையார் பட்டதுக்கம்
மாமதி வல்லோர் வசனித்த சொற்படியே
தாமதியாதே யூதர்தன் மகனைக் கொல்லுமுதல்
ஏங்கிச் சலிதிது இருவிழியும் நீரோட”                                    (வரி 1863 - 1872)

என்ற வரிகள் மகனைக் கொல்லும் முன்னே அவரைப் பார்க்கவேண்டும் என்று இரண்டு கண்களிலும் நீரோட மாரியாள் பட்ட துயரம் தெரிகின்றது.

தன் மகன் சிலுவை சுமந்து சென்ற போதும், சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட்ட போதும் அந்தத் தாய் பட்ட துன்பம் சொல்லுவதற்கு இல்லை என விளக்குகின்றார் ஆசிரியர்.

3. இன்ப வெளிப்பாடு

இன்பமும் துன்பமும் வாழ்க்கையில் நிகழக்கூடிய இரு முக்கியக் கூறுகள்.  இன்பம் மகிழ்வான சூழ்நிலையில் வெளிப்படுவதாகும்.  மலடி என்று அனைவராலும் கூறப்பட்ட சுவக்கின் அன்னமாள் இறையருளால் ஒரு மகவைப் பெறுகின்ற போது, பெற்ற மகிழ்ச்சியானது இன்ப வெளிப்பாடாக வெளியா கின்றது.

“தேங்கும் புவிதனக்கு தேவகன்னி தானுதித்தாள்
மிக்கவிடி வேரானாள் மேலான சூரியனும்
இக்கணந் தோன்றும் எனவே மகிழ்ந்தெவரும்” (வரி 140 - 141)

என்ற வரிகள் புவி மீது தேவகன்னி உதித்ததாள் உண்டான மகிழ்வைக் காட்டுகின்றது.

“மன்னன் ரவிகுலத்தோர் வாழ்த்தினார் மங்களங்கள்
வானோருள் மகிழ்ந்தார் மண்ணுலகத்தோர் புகழ்ந்தார்” (வரி 261 - 262)

என்ற வரிகள் மகிழ்வான வேளையில் இறைவனைப் புகழ்ந்து வாழ்த்தினார் என்பதை விளக்குகின்றது.

இயேசு பிறந்த போதும் வானவர் மகிழ்வான கீதம் பாடி அவரை உலக மீட்பர் என்றும், கடவுளின் மகன் என்றும் வாழ்த்தினார் என்பது தெளிவாகின்றது.

4. யூத முறைகள்

யூதக் குலத்தில் பல முறைகள் (சட்டங்கள்) இருப்பினும் இங்கு முதல் குழந்தை கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தலும், பாங்குத் திருவிழாவின் போது ஒரு குற்றவாளியை விடுவிப்பதும் பெரிதும் முறையாகச் செய்யப்பட்டு வந்ததை இவ்வம்மானையின் மூலம் அறியலாம்.

“என்று மிறையேலெனுங் கிளையி லுள்ளவர்கள்
பெற்றமுதல் மகவும் பேராமுதல் பலனும்
உற்றாதிக் கீய்ந்து உடமை கொண்டு மீள்வர்கள்
அந்த முறைப்படியே ஆதிகர்த்தன் தாயாரும்” (வரி 950 - 953)

என்ற வரிகளில் முதல் மகனான இயேசு பாலனைக் கோயில் காணிக்கையாகக் கொடுத்தனர் என்பது விளங்குகின்றது.  

குற்றவாளியை விடுப்பது குறித்தும் இவ்வம்மானை  கூறுகின்றது.

“செப்பியே உங்கள் திருநாள் முறைப்படியே
தப்பாமலோர் குற்ற வாளிதனை விடுத்து
ஒங்கள் சபையில் ஒழுக்கம் வழுவாமல்” (வரி 1696 - 1698)

என்ற வரிகள் இதனை உணர்த்தக் காணலாம்.

5. செபமாலை

கிறிஸ்துவச் சமயத்தில் மாதாவின் பேரில் பக்தி கொண்டு இருப்பவர்கள் இந்தச் செபத்தால் ஆன மாலையைச் சொல்லிக் கொண்டு வருவார்கள்.  அனுதினமும் சொல்லிப் போற்றுவார்கள்.  பூக்களால் தொடுக்கப்பட்டது பூமாலை போன்று செபத்தால் தொடுக்கப்படுவது செபமாலை ஆகும்.

இவ்வம்மானையில் செபமாலையை எவ்வாறு செபிப்பது, செபிப்பதால் என்ன பயன் கிடைக்கும் என்ற செய்திகளும், பதினைந்து காரணங்களும் குறித்து விளக்கியுள்ளதைக் காணமுடிகிறது.  ஒவ்வொரு பத்து மணிகளுக்கும் ஒரு காரணம் சொல்லி வருதல் வேண்டும். அந்தப் பதினைந்து காரணமும் திருவிவிலியத்தின் மையக் கருத்தினை ஒட்டி அமையும்.  திருவிவிலியக் கருத்துக்களின் அடிப்படையில் தேவமாதா அம்மானையில் பதினைந்து காரணமும் கூறப்பெற்றுள்ளது.   இதனை,

“அங்கையி லேந்தி அரியசெப மாலைதன்னை
பங்காய் விளங்கும் பதினஞ்சு காரணமும்” (வரி 3036 - 37)

என்ற இவ்வரிகளால் உணரமுடிகின்றது.  

முதல் காரணம்

கபிரியேல் தூதன் மங்கள வார்த்தை கூறியது.

இந்தக் கபிரியேல் தூதன் கடவுளாம் தந்தையின் கட்டளைப்படி மண்ணிற்கு வந்து கன்னியான மரியாளுக்கு மகிமையான வார்த்தை கூறியதைத்தான் முதல் காரணம் கூறுகின்றது.  இதனை,

“காபிரிய லென்னுங் கனபேருடைய தூதன்
மாபிரிய மாக மனுவுருவந் தானெடுத்து
துய்ய கவசமிட்டுச் சோதிதிகழ் கச்சைகட்டி
சென்னி முடியணிந்து சீரா யிடையழுத்தி
வன்னமுகில் மீதெழுந்து வானோர் புடைசூழ
காகங்க ளெண்ணரிய காஞ்சனவிண் மண்ணுமொய்க்க
கீதங்கள் சொல்லி கிளர்நசரை மாநகரில்
வந்தார் மரியகன்னி வாழ்ந்திருக்கும் மாளிகையிற்
சந்தோஷமா யிறைவன் றானே பிறப்பதற்கு” (வரி 326 - 335)

என்ற வரிகள் மூலம் அறியமுடிகிறது.

இரண்டாவது காரணம்

தேவமாதா எலிசபெத்தைச் சந்தித்தது.

தன் உறவினரான எலிசபெத் குழந்தை பெறும் நிலையினை இழந்து மலடி என்று அனைவராலும் கூறப்பட்டு மனம் நொந்தவர்.  அப்படி துன்பம் அடைந்த வருக்குக் கடவுள் குழந்தைச் செல்வத்தை அளித்த மகிழ்வான செய்தியைக் கேட்டு, அவளைக் காண மலை நாட்டிற்குச் சென்றதைத் தான் இரண்டாவது காரணம் காட்டுகிறது.  இதனை,

“சொன்னா ரதுவிருக்கத் தூயவிச பேல்மனைக்கு
தேவன் திருத்தாயார் சென்றடைந்த வேளையிலே
தாவுபில வரத்தின் சந்தோஷஞ் சொல்லரிது
அன்னை வரவுகண்டு அவளுடன் இயபேலும்
உன்னித் தழுவி உவப்பாய் வினவலுமே” (வரி 455 - 459)

என்ற வரிகள் மூலம் அறியமுடிகிறது.

மூன்றாவது காரணம்

இயேசு பிறந்தது.

உலகினை மீட்பதற்கு இறைமகன் மனித உருவெடுத்து கன்னி மரியாள் வயிற்றில் பிறந்த செய்திகளை மூன்றாவது காரணம் உணர்த்துகின்றது.  இதனை,

“பேதைமார்க் குள்ளே பிறவியெனுந் துன்பமின்றி
வாதையும் நோவும் வருத்தமு மில்லாமல்
அற்புதனு மானிடனும் ஆண்டவனைப் பெற்றவுடன்
சம்மனசு வொன்று சடுதிக்கரத் தேந்தி
அம்மை மரியவுட அங்கைதனித் தான்ங்கொடுக்க
வாங்கி மகனை மகிழ்ந்தே மனங்குளிர்ந்து
பாங்கு நிறைந்த பரம சந்தோஷத்துடனே
எத்தனை யானந்தம் இவளடைந்தா ளென்பதற்கு
புத்தியுண்டோ சொல்லப் புவியில்ப் புலவருக்கு” (வரி 712 - 720)

என்ற வரிகள் மூலம் அறியமுடிகிறது.

நான்காவது காரணம்

இயேசுவைக் கோயிலில் காணிக்கையாகக் கொடுத்தது.

யூதக் குலத்தில் பிறக்கின்ற முதல் குழந்தையை மோசேயின் சட்டப்படி கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுத்தல் வேண்டும்.  இதன்படி இயேசு பாலனையும் கோயிலில் காணிக்கையாகக் கொடுத்தனர்.  இதனை,

“பெற்ற முதல்மகவும் பேரா முதல்ப்பலனும்
உற்றாதிக் கீய்ந்து உடமைகொண்டு மீள்வர்கள்
அந்த முறைப்படியே ஆதிகர்த்தன் தாயரும்
சந்ததி யூதர் தனிமரபிலுள்ள வளரல்
ஈன்ற இடத்தில் இருந்துச் சுருதிமொழிப் படியே
தேவபதி புகுதல் செய்கரும மென்று சொல்லி
ஆவணஞ் செய்வதற்கு அன்னையுஞ் சூசையும்
கர்த்தனை யேந்திக் கனகதேவா லயத்தை
சித்தங் களிக்கச் சிறந்துவந்தா ரம்மானை” (வரி 951 - 960)

என்ற வரிகள் மூலம் அறியமுடிகிறது.

ஐந்தாவது காரணம்

12 வயதில் இயேசுவைக் கோயிலில் காணாமல் போய்க் கண்டு பிடித்தது.
யூதக் குலத்தில் பாங்குத் திருவிழாவின் போது தேவாலயத்திற்குச் சென்று இறைவழிபாட்டில் கலந்து கொள்ளுவார்கள்.  அதுபோன்றே 12 வயது நிரம்பிய இயேசுவையும் கூட்டிக்கொண்டு சூசையும் மரியாவும் கோயிலுக்குச் சென்றபோது சிறுவன் காணாமல் போய்விட அவனைக் கற்றறிந்த குருக்கள் மத்தியில் கண்டதை ஐந்தாவது காரணமாகக் கூறப்படும்.  இதனை,

“அன்றல்ல மூன்றுதினம் ஆதரவாய்த்  தேடலுற்றார்
தேடி யலுத்துத் திருமகனைக் காணாமல்
நாடிய துக்கம் நராக்குறைக்கக் கூடாது
எண்ணிக்கைக் குள்ளடங்கா ஏகாத்துஞ் சலிப்புடனே
புண்ணியக் கோயில்சென்று புக்கினா ரம்மானை
தேவ பதியில்ச் சிறந்த குருக்களோடு
கோவானந் தவிதுக்குமார னெனவந்தவரும்
ஆகமம் பேசி அவரவர்கள் தம்மைவென்று
யேக மணமாயிருக்கு மந்த வேளையிலே
கண்டாளே எப்போதுங் கற்பழியாக் கன்னிகையும்” (வரி 1185 - 1194)

என்ற வரிகள் மூலம் அறியமுடிகிறது.

ஆறாவது காரணம்

இயேசு பூங்காவனத்தில் இரத்த வியர்வை சிந்தியது.

தன்னுடைய பாடுகளை முன்னறிந்த இயேசு, தாயிடம் அனுமதி பெற்று வனத்தில் சென்று இறைவனிடம் செபிக்கும்போது, தன்னுடைய பாடுகளைக் குறித்து மிகுந்த வருத்தம் கொண்டு இருந்தார்.  அப்போது அவருடைய இரத்தம் வியர்வையாகச் சிந்தியதை இக்காரணம் உணர்த்துகின்றது.  இதனை,

“எல்லாரு போனோம் இலங்கு மலர்க்காவில்
சொல்லாரும் வல்ல சுருதிக் கிறையவனார்
தந்தையைப் போற்றித் தவஞ்செய்யும் வேளையிலே
வந்த சலிப்பாலே வாருதியில் நீரெனவே
மிக்கவுடல் செங்குருதி வேர்த்தோட ஆறாகி
தக்கோனுக் கிந்தச் சலிப்பகன்று போம்படிக்கு” (வரி 1468 - 1472)

என்ற வரிகள் மூலம் அறியமுடிகிறது.

ஏழாவது காரணம்

இயேசுவை கற்றூணில் கட்டி அடித்தது.

இயேசுவை யூதாசு காட்டிக் கொடுத்தவுடன் அவரை ஏரோது முன்னிலை யில் கொண்டு சிலுவைச் சாவிற்குக் கையளிக்க எண்ணிய யூதக்குல குருமார்கள் கற்றூணில் வைத்து அடிக்க ஆணையிட்டு அடித்ததை ஏ££வது காரணம் உணர்த்துகின்றது.  இதனை,

“கயிமுழந்தா னீன்றக் கற்றூணில்த் தான்சேர்த்து
மெயிமுழந்தாள் பொறுக்க மேனியெங்குஞ் சோரிசிந்த
கையான திர்யூதர் கைக்கூலி வாங்கினவர்
அய்யா யிரத்துக் கதிக மடித்தார்கள்” (வரி 1708 - 1711)

என்ற வரிகள் மூலம் அறியமுடிகிறது.

எட்டாவது காரணம்

இயேசுவுக்கு முள்முடி சூட்டியது.

கற்றூணியில் அடித்த பின்பு அவரைத் துன்புறுத்தும் வகையில் முள்ளைக் கொண்ட முடிகளைப் புனைந்து அவருக்குச் சூட்டியதை எட்டாவது காரணம் உணர்த்துகின்றது.  இதனை,

“மேட்டி லிருத்தி விளங்கிய செங்கோ லெனவே
காட்டில் வளர்பச்சை சுழலமூங்கினைக் கொடுத்து
எண்ணு மெழுமுள் ளெழுபத்தி ரெண்டதினால்
பண்ணி யொருமுடியைப் பதித்தார் திருத்தலையில்” (வரி 1724 - 1727)

என்ற வரிகள் மூலம் அறியமுடிகிறது.

ஒன்பதாவது காரணம்

இயேசு சிலுவை சுமந்து சென்றது.

தன்னுடைய பாடுகளின் உயர் நிலையாகச் சிலுவை சுமந்து, கபால மலைக்கு வேதனையோடு சென்றதனை ஒன்பதாவது காரணம் உணர்த்துகின்றது.  இதனை,

“தோளில்ச் சிலுவை யேத்தித் தொல்புவியில்க் கள்ளருடன்
நாளில்ப் படிந்தநகர் கோட்டைக் கப்பாலே
கல்லே குவிந்த கபாலமலை யானதுவே” (வரி 1808 - 1810)

என்ற வரிகள் மூலம் அறியமுடிகிறது.

பத்தாவது காரணம்

இயேசு சிலுவையில் உயிர்விடுதல்.

இறைமகனானவர் மனித உருவெடுத்து உலகில் பிறந்து பல புதுமைகள் செய்து மக்கள் கையினால் பாடுபட்டு சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டு மனித குலம் மீட்பு அடையும் பொருட்டு சிலுவையில் உயிர் விட்டதனை இக்காரணம் உணர்த்துகின்றது.  இதனை,

“என்சருவேசு பரனே என்னை நெகிழ்வானேன்
உன்ம்பார மாக உகந்தேத்துக் கொள்ளு மென்று
கூப்பிட்டுச் சொல்லிக் குலவுந் தலைசாய்த்து
முப்பிட்ட ஏனவ முதுபிழையைப் போக்கத் துடித்து
பங்குனி மாதம் பவரனை பாசுஸ்குலையில்
செங்கதிரோன் மத்திசத்தில் சேரவௌ¢ளி வாரமதில்
துஞ்சினா ராத்துமத்தான் தூய அபிராமடியில்
மிஞ்சினோர் தம்மிடத்தில் மேவியதே யம்மானை
தேவ சுவாபம் திருவுடலி லாத்துமத்தே” (வரி 2272 - 2280)

என்ற வரிகள் மூலம் அறியமுடிகிறது.

பதினோராவது காரணம்

இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தது.

இயேசு இறந்தவுடன் அவரைச் சிலுவையில் இருந்து இறக்கி யூத முறைப்படி அடக்கம் செய்தார்கள்.  கல்லறையில் மூன்று நாள் இருந்து மூன்¢றாம் நாள் உயிருடன் எழுந்தார் என்பதை உணர்த்துவது இக்காரணமாகும்.  இதனை,

“ஞாயிறு வாரம் நடுச்சாமம் பின்நேரம்
அயறு முன்னோர் அறிந்தெழுதி வைத்தபடி
முப்பத்து மூன்று முதுநடிகை சென்றபின்பு,
செப்பத் துடனிருந்து தேர்ந்த வரப்பிலத்தால்
கல்லறையின் முத்திரையுங் காத்திருந்த சேவுகரும்
எல்லை கடவாமல் ஏங்கினாப் போலிருக்க
ஆற்றுமுந் சென்று அரிய உடலை யெடுத்து” (வரி 2677 - 2683)

என்ற வரிகள் மூலம் அறியமுடிகிறது.

பன்னிரண்டாவது காரணம்

இயேசு விண்ணேற்றம் ஆனது.

உயிர்த்த இயேசு தன்னுடைய சீடர்களுக்கும், தாய்க்கும் காட்சிக் கொடுத்த பின்பு நாற்பது நாள் இங்கு உலகில் இருந்துவிட்டு விண்ணகம் சென்றதை இக்காரணத்தின் மூலம் அறியலாம்.  இதனை,

“எண்ணஞ்சு நாளும் இந்தாளுந் தோயாமல்
வண்ணஞ் சிறந்திருக்கும் வானத்தி லேரியபின்” (வரி 2709 - 2710)

என்ற வரிகள் மூலம் அறியமுடிகிறது.

பதின்மூன்றாவது காரணம்

மாதாவின் மீதும் அப்போஸ்தலர் மீதும் தூய ஆவி இறங்கி வருதல்.

நாற்பதாம் நாள் விண்ணகம் சென்ற இயேசு தன்னுடைய தந்தையின் வலப்பக்கம் வீற்றிருந்து கொண்டு உலக மக்களைப் பாதுகாக்கத் தூய ஆவியான வரை மாதாவின் மீதும் அவருடைய சீடர்கள் மீதும் அனுப்பியதை இக்காரணம் விளக்குகின்றது.  இதனை,

“வானேறி கர்த்தன் மகிமைப் பிதாவுடைய
ஆனவலப் பாகம் அருகே  நிறைந்திருந்து
ஏகதிரித் துவத்தின் இஸ்பிரித்து சாந்து தன்னை
நேசமுடைய சுற்ற சீஷரிடத்தே விடுத்தார்” (வரி 2713 - 2716)

என்ற வரிகள் மூலம் அறியமுடிகிறது.

பதிநான்காவது காரணம்

மாதா விண்ணேற்றம் சென்றது.

இயேசு இறந்த பின்பு மாதாவும் சீடர்களுடன் இருந்து வேதம் போதிக்க உதவி செய்து வந்தார்கள்.  அவர்கள் தம்முடைய 60ஆவது வயதில் இறந்தார்.  அவருடைய உடலைத் தக்கராகம் பாடி புகழ்ச்சியுடன் அடக்கம் செய்தனர்.  சீடர்களில் தோமையார் மட்டும் வரவில்லை.  மற்ற அனைவரும் அன்னையின் திருவுடலைக் கண்டனர்.  தோமையார் வேதம் போதிக்கச் சென்று வருவதில் கால தாமதம் ஆனதில் மூன்று நாள் கழித்து வந்தார்.  அன்னையின் உடலைக் காண சென்றபோது அங்கு உடல் இன்றி இருப்பதையும், அவர் விண்ணகம் சென்ற தையும் இக்காரணம் உணர்த்துகின்றது.  இதனை,

“சம்மனசு மாரும் சகலரும் போற்றி செய்ய
தம்மையும் ஈன்றவளைத் தானுயிர்ப் பித்தாரெனவே
எண்ணியே கொண்டு ராயப்பர் முன்னாக
விண்ணிலே கண்ணோர்க்கு மெயித்தவித்தார் பார்த்தார்கள்”
                                                                                         (வரி 2954 - 2957)
என்ற வரிகள் மூலம் அறியமுடிகிறது.

பதினைந்தாவது காரணம்

மாதா விண்ணக, மண்ணக அரசியாக முடி சூட்டப்படுதல்.

விண்ணகம் சென்ற மாதாவிற்கு மண்ணுலகத்தின் மீதும் விண்ணுலகத்தின் மீதும் அதிகாரம் கொடுத்து புதுமை செய்ய அருள் செய்ததைப் பதினைந்தாவது காரணம் உணர்த்துகின்றது.  இதனை,

“தேவ சுபாபம் சிறந்ததொரு முப்பேரும்
ஆவது சொல்லியபின் ஆறிரண்டு வௌ¢ளியதாய்
தேக்கரிய கன்னிக்கிச் சித்திரமுடி தான்ஞ்சூட்டி” (வரி 2992 - 2994)

என்ற வரிகள் மூலம் அறியமுடிகிறது.

இந்தப் பதினைந்து காரணங்கள் சொல்லி 153 மணிகளைச் செபிப்பதன் மூலம் தேவ மாதாவின் பரிவும் ஆசிர்வாதமும் கிடைக்கும் என்பது இங்குக் கூறப்படும் புதுமைகள் மூலம் அறியமுடிகிறது.

இவ்வாறு போற்றி வேண்டிக் கொண்டதால் வந்த துன்பம் நீங்கி நல்வாழ்வு பெற்றதையும், மற்றவருக்கு எடுத்துக்காட்டான வாழ்வு அமைந்ததையும் இவ்வம்மானை விளங்குகின்றது.  தேவமாதா பல புதுமைகள் (அதிசயங்கள்) செய்த போதிலும் செபமாலையன் பயன் விளக்கும் இரண்டு கதைகள் மட்டுமே இவ்வம்மானையில் குறிப்பிட்டிருப்பது நோக்கத்தக்கதாகும்.

இவ்வம்மானையில் அம்மானைக்கான பொதுக்கூறுகளும், சிறப்புக் கூறுகளும் அமையப்பெற்றாலும், பதிப்பு என்ற நிலையில் பார்க்கும் போது சுவடிக்கும் அச்சு நூலுக்கும் மிகுந்த வேறுபாடு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  நாட்டுப்புற இலக்கிய வடிவம் என்பதால் இவற்றில் வட்டார வழக்குச் சொற்களும் மிகுதியாகக் கலந்துள்ளன.  இவ்வட்டார வழக்கினால் எழுத்துக்களில் மயக்கமும் மாற்றமும் நிகழ்ந்து பொருள் மாறுபாட்டிற்கு வழிகாட்டி உள்ளதை இப்பதிப்பாய்வில் களையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக