ஞாயிறு, 4 நவம்பர், 2018

படைப்புலகில் நாட்டார்

பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழாசிரியராகப் பணிபாற்றிப் பல நூறு மாணவர்களுக்குக் குருவாகத் திகழ்ந்தவர் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள்.  அறுபது ஆண்டுகளே (கி.பி.1884 - 1994) தமிழுலகில் வாழ்ந்தாலும் தமிழுலகம் உள்ள வரை நிலைபெற்று வாழும் சிறப்பினைப் பெற்றவர்.  தமிழாசிரியராகவும், வரலாற்றாசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும், உரையாசிரியராகவும் தமிழுலகில் வீறுநடை போட்டவர் கவிஞராகவும் திகழ்ந்திருக்கின்றார் என்பது அதிகம் அறியப்பெறாத ஒரு செய்தியாகும்.

தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்கி கீழ்க்கணக்கு நானாற்பதில் கார் நாற்பாது (1923), களவழி நாற்பது (1924) ஆகியவற்றிற்கும்; பிற்கால நீதி நூல்களில் ஆத்திசூடி (1950), கொன்றைவேந்தன் (1949), வெற்றிவேற்கை, மூதுரை, நல்வழி (1950), நன்னெறி (1952) ஆகியவற்றிற்கும்; திருவிளையாடற் புராணம் (மதுரைக் காண்டம் - 1927, கூடற் காண்டம் - 1928, திருவாலவாய்க் காண்டம் - 1931), சிலப்பதிகாரம் (1942), அகநானூறு (களிற்றியானைநிரை - 1943, மணிமிடைபவளம் - 1944, நித்திலக் கோவை - 1944), மணிமேகலை (1946) ஆகியவற்றிற்கும் நாட்டார் அவர்கள் உரை வரைந்திருக்கின்றார்.

இவ்வுரைகளன்றி வேளிர் வரலாற்று ஆராய்ச்சி (1915), நக்கீரர் (1919), கபிலர் (1921), கள்ளர் சரித்திரம் (1923), கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் (1926), சோழர் சரித்திரம் (1928) ஆகிய வரலாற்று ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.  மேலும், தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச்செல்வி ஆகிய மாத இதழ்களின் வழி பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்.  இக்கட்டுரைகளின் தொகுப்பாகக் கட்டுரைத் திரட்டு - பாகம் 1 (1940), கட்டுரைத் திரட்டு பாகம் - 2(1951 மறுபதிப்பு), நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஆய்வுக் கட்டுரைகள் (1994) ஆகிய திரட்டு நூல்கள் வெளிவந்திருக்கின்றன.  நாட்டார் அவர்கள் கவிஞராகவும் திகழ்ந்திருக்கின்றார் என்பதற்கு அவரின் வைகறை நினைவு, தமிழன்னை வாழ்த்து, கருவூர் ஒன்பான் மணிமாலை, பஞ்சரத்தினம், வள்ளுவர் கலித்துறை ஆகிய கவிதைகள் எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன.  தமிழாசிரியராகவும், நூலாசிரியராகவும், உரையாசிரியராகவும் நாட்டாரைக் கண்டவர்கள் அவரை யாரும் கவிஞராகப் பார்த்ததில்லை.  இவண், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரைக் கவிஞராகக் காண்குவன்.  படைப்புலகில் நாட்டாரின் இருக்குமிடம் குறித்து இங்குக் காண்போம்.

கவிஞர்களான உரையாசிரியர்கள்

தமிழுலகில் காலங்காலமாக விளங்கிய உரையாசிரியர்கள் பலரும் கவிஞர்களாகத் திகழ்ந்திருக்கின்றனர் என்பது வரலாற்றுண்மை.  குறிப்பாக, மழவை மகாலிங்கையர் (மழவைச் சிங்காரச் சதகம்), முகவை இராமாநுசக் கவிராயர் (பார்த்தசாரதி மாலை, வரதராசப் பெருமாள் பதிற்றுப்பத்தந்தாதி), சரவணப்பெருமாளையர் (நான்மணி மாலை, குளத்தூர்ப் புராணம்), சு. சபாபதி முதலியார் (திருக்குளந்தை வடிவேலர் பிள்ளைத்தமிழ், மதுரை மாலை, திருப்பரங்குன்றத்தந்தாதி), யாழ்ப்பாணம் சபாபதி நாவலர் (சிதம்பரநாத புராணம், திருச்சிற்றம்பல யமக அந்தாதி, திருவிடைமருதூர் பதிற்றுப்பத்தந்தாதி, மாவையந்தாதி), திருமயிலை சண்முகம் பிள்ளை (திருமுல்லை வாயிற்புராணம், திருமயிலை உலா, கபால¦சர் பஞ்சரத்தினம்), இரா. இராகவையங்கார் (பாரி காதை, புவி எழுபது, தொழிற் சிறப்பு, திருவடி மாலை), மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் (கயற்கண்ணி மாலை), வெ.ப. சுப்பிரமணிய முதலியார் (அகலிகை வெண்பா, கோம்பி விருத்தம், நெல்லைச் சிலேடை வெண்பா), மு. கதிரேசச் செட்டியார் (சுந்தரவிநாயகர் பதிகம், வீர விநாயகர் மாலை, பதிற்றுப்பத்தந்தாதி), அறிஞர் மு.கோ. இராமன் (மதுரகவி இராமாயண வெண்பா) போன்றவர்கள் தங்கள் திறனைக் கவிதைகளில் வெளிப்படுத்தி இருப்பதைக் காணமுடிகிறது.  இவர்களில் ஒருவராக வைத்து எண்ணத் தக்கவர் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும் ஆவர்.  நாட்டார் அவர்கள் வைகறை நினைவு, தமிழன்னை வாழ்த்து, கருவூர் ஒன்பான் மணிமாலை, பஞ்சரத்தினம், வள்ளுவர் கலித்துறை ஆகிய ஐந்து கவிதை நூல்கள் படைத்திருக்கின்றார்.

வைகறை நினைவு

'வைகறை நினைவு' எனும் நூல் 91 அகவலடி கொண்ட நிலைமண்டில ஆசிரியப்பாவால் ஆனது.  3.1.1924ஆம் நாள் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தன்னுடைய மாணவர்களை நினைத்து அதிகாலையில் எழுதியதாகும்.  ஆசிரியரும் மாணாக்கரும் எப்படி இருக்கவேண்டும் என்பதை எழுத்தில் காட்டாமல் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் நாவலர்.  விடுமுறைக் காலத்தில் மாணவ நண்பர்கள் சிலநாள் தமதூருக்குச் சென்றிருந்த காலத்தில் ஆசிரியராகிய நாவலர் அவர்கள் மாணவர்களின் பிரிவினை ஆற்றாது தம்முள்ளக் கிடக்கையைக் கவிதையாகத் தந்துள்ளார்.  நாட்டார் அவர்கள் ஆசிரியர் - மாணவர் என்ற நிலையன்றி தோழமையுணர்வோடு இருந்திருக்கின்றார்.  மாணவர்களோடு தான் எப்படியெல்லாம் இருந்தேன் என்பதை, 

"யானவ ரிருக்கை யெய்துவ; லன்னார்
ஆனவகை யென்னி ளடைந்து காண்குறுவர்; 
சேர்ந்துண்டி கொள்வேம், சேர்ந்து விளையாடுவேம்;
நேர்ந்திடு மின்ப துன்பங்க ளெல்லாம்
ஒருவர்க் கொருவ ருசாவுவம் அவருள்
மருவு நுண்ணறி வாளரும் யானும்
வானநூல் எண்ணூல் மன்னுமெய் யுணர்வுநூல்
ஏனவும் பேசி யிருநிலந் தன்னில்
'நுண்ணறிவி னாரோடு கூடி நுகர்வுடைமை
விண்ணுலகே யொக்கும் விழைவிற் றால்'எனும்
தொல்லோர் கட்டுரைச் சுவைதெரிந் திடுவாம்" (வரி.25-35)

என்று நாவலர் அவர்களே குறிப்பிடுகின்றார்.  மாணவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை நாவலர் அவர்கள்,

"மற்றிந் நாளின் வகைமையோ வென்னில்,
மாணவ ரென்பால் மதிப்பு நனியுடையர்,
காணவு மடக்கங் காட்டுவர், மணையில்
உடனிருப் பதனுக் கஞ்சி யொடுங்குவர்,
தொடர்பு வேறிலர்; சொற்றிடில் யானும்
பள்ளியி லவர்க்குப் பல்கலைக் கழகம்
தௌ¢ளி விதித்தநூல் செப்புத லன்றிப்
பிறிது தொடர்பிலாப் பெற்றிய னாவேன்" (வரி.42-49)

என்று குறிப்பிடுகின்றார்.  மாணவ நண்பர்கள் இல்லாமல் தாம் எவ்வாறெல்லாம் இடர்ப்பட நேரிட்டது என்பதை நாவலர் அவர்கள்,

"நல்லொழுக் கருகினன், நலந்திகழ் தூய்மை
ஒல்லுமா றில்லேன், நோன்புக ளுஞற்றேன்,
மெய்யுணர் வுறுகிலன், மேதகு பூசனை
செய்யுமா றறியேன், ஆயினும் சீர்த்த
அன்பே யமையுமென் றிருந்தேன் அதுவும்
வன்பே யாகி முடிதலின், வள்ளுவர்
'அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க்
கென்புதோல் போர்த்த வுடம்'பெனும் படியான்
உயிரிலி யானேன் ஓ!ஓ! கொடியதே!!" (வரி.66-74)

என்கின்றார்.  இவற்றையெல்லாம் காணும்போது அன்று ஆசிரியர்-மாணவர் உறவுநிலை எப்படி இருந்தது என்பதைப் படம்பிடித்துக் காட்டுகின்றார்.  மேலும் இவரே 'ஆசிரியரும் மாணாக்கரும்' (செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 11, பரல் 5, 1933) என்ற கட்டுரையையும் எழுதி தம்முள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழன்னை வாழ்த்து

'தமிழன்னை வாழ்த்து' என்பது ஆறு பாடல்களாலானது.  தமிழின் சிறப்பையும் பெருமையையும் பலவாறாக இப்பாடல்கள் வழி சுட்டிச் செல்கின்றார்.  அப்பாடல்கள் எளிமையும் தெளிவும் கொண்டதால் அவற்றை அவ்வாறே இங்குத் தருதல் சாலத்தகும்.

1.  திருவுமிகு செந்தமிழாம் தேமலர்தான் எப்பொழுதும்
   முருகுவிரித் தொளிரும் மூவுலகும் அம்மானை
   முருகுவிரித் தொளிரும் மூவுலகும் ஆமாயின்
   அருமைமிகு வானவரும் அணிவரோ அம்மானை
   அங்கொன்றைத் தாரனும் முன்அன்பு வைத்தானம்மானை.

2.  தேங்கு சுவையிற் கவினிற் றிகழ் பழமையில் மிகுந்த
   பாங்கின் உயர்மொழிநம் பைந்தமிழ் காணம்மானை
   பாங்கின் உயர்மொழிநம் பைந்தமிழே யாமாயின்
   ஆங்கிலத்திற் பொருள மிகவே அளிக்குமோ வம்மானை
   அகத்தும் புறத்தும் அளித்திடுமே அம்மானை

3.  எவ்வுலகினோடு மனத்தெண்ணுவன செந்தமிழின்
   அவ்வை அருளால் அளித்திடுங்காண் அம்மானை
   அவ்வை அருளால் அளிக்குமே யாமாயின்
   செவ்விய சிந்தாமணி நேர் செப்புகமே அம்மானை
   சிந்தாமணி தருவான் தெய்வமன்றோ வம்மானை

4.  வள்ளுவரே சாற்றுகின்றார் மன்று தமிழ் மாண்பனைத்தும்
   ஔ¢ளியசீர் நால்வருமே யுரைக்கின்றார் அம்மானை
   தௌ¢ளியசீர் நால்வருமே யுரைக்கின்றார் ஆமாயின்
   எள்ளலிலா அம்மை அழகு இயைபுறுமோ அம்மானை
   இருந்தமிழ் யாப்புணரின் வனப்பெல்லாங் காணம்மானை

5.  குன்றா வண்டமிழாலும் குலத்தாலும் குறுமுனிவன்
   தென்றிசையே உயர்ந்ததெனச் சேர்ந்தனன் காணம்மானை
   தென்றிசையே உயர்ந்ததெனச் சேர்ந்தனன் என்றாமாயின்
   அன்றவன் மற்றையரின் அடைந்ததெவ னம்மானை
   அம்ம குடமுனி யாகும் பேறடைந்த னம்மானை

6.  அன்றாலின் கீழிறைவன் அழகிய செந்தமிழ் மணப்ப
   தென்றே தென்திசை நோக்கி யிருந்தனன் காணம்மானை
   என்றே தென்திசை நோக்கி யிருந்தனன் என்றாமாயின்
   மன்றேயும் ஆரியத்தின் வழக்கெவன் காணம்மானை
   வழக்கிழந்தே யன்றோ வடக்கிருந்த தம்மானை

எனும் பாடல்கள் தமிழின் பெருமையை நாவலர் அவர்கள் உலகுக்குணர்த்தும் விதத்தினைக் காணமுடிகின்றது.

கருவூர் ஒன்பான் மணிமாலை

'கருவூர் ஒன்பான் மணிமாலை' என்னும் நூல் காப்பு வெண்பா ஒன்றும், நூல் ஒன்பது கட்டளைக் கலித்துறையாலும் அமைந்து நூற்பயன் கட்டளைக் கலித்துறை ஒன்றும் வெண்பா ஒன்றும் ஆக 12 பாடல்களாலானது.  இந்நூல் கருவூரில் கோயில் கொண்டுள்ள பசுபதீசுவரர் மீது பாடப்பெற்றதாகும்.  சிற்றிலக்கிய வகைகளில் 'நவமணிமாலை' என்பதையே நாட்டார் அவர்கள் 'ஒன்பான் மணிமாலை' எனத் தமிழ்ப் படுத்தியிருக்கின்றார்.  ஒன்பது செய்யுட்கள் கொண்டு வருதலால் இந்நூல் இப்பெயர் பெற்றது என்பர்.  வெண்பா முதல் பிற பாவும் இனமும் கலந்தோ அல்லது ஆசிரிய விருத்தங்களாலோ ஒன்பது பாடல்களால் துதிப்பொருள் மீது அல்லது பிற பொருள் மீது அந்தாதித்து முடியப்பெறுவது இவ்விலக்கியமாகும்.

இந்நூலில் கருவூரில் கோயில் கொண்டிருக்கும் பசுபதீசுவரரின் புகழ் பலாவாறாகப் பேசப்படுகின்றதைக் காணலாம்.  குறிப்பாக, கருவூரில் கோயில் கொண்டுள்ள பசுபதீசுவரனைச் சொல்லவும் தொழவும் நினையவும் செய்தாலே போதும் துன்பங்கள் யாவும் விலகிவிடும் என்பதை நாவலர்,

"நிலநீ ரெரிவளி வான் ஞாயிறுமதி நீடுமுயிர்
பலவும் முடலாவுறை தருவான் படைப்பாதி யைந்தும்
நிலவும் திருநடத் தெந்தை கருவூர் நிமலனதாள்
சொலவும் தொழவும் நினையவும் போயினந் துன்பங்களே" (பா.1)

எனும் பாடலால் குறிப்பிடுகின்றார்.  கருவூர் நகரில் முசுகுந்தன் தங்கிச் சிவ மூர்த்தத்தைப் பிரதிட்டை செய்ததையும், அங்கணமாமுனியின் தவத்தைச் சிவபெருமான் கலைத்து காட்சி கொடுத்ததையும் நாவலர் அவர்கள்,

"புங்கமுற முசுகுந்தன் முற்சோழர் பரிவுடனே
தங்கிமுறை செய் தலைநகராங் கருவூரதினில்
திங்களும் கங்கையும் சேர மிலைந்தான் செய்ய சடை
அங்கணன் பாதந் தொழுவார் நரபதி யாகுவரே" (பா.4)

என்கின்றார்.  பசுபதீசுவரன் எப்படிப்பட்டவன் என்பதை,

"ஆணுடை யானெனை யாளுடையான் திருவாதிரையான்
கோனுடை யானெவர்க்கும்மே வைக்கும் ஒருகோல் வளையைத்
தானுடையான் மெய்த்தமி ழுடையான் சங்கரன் கரத்தோர்
மானுடைக் கருவூர் கண்டனம் வாழ்ந்தனமே" (பா.8)

எனும் பாடலால் அறியலாம்.

பஞ்சரத்தினம்

ஐவகை இரத்தினங்கள் என்ற பொதுப்பொருண்மை பற்றியும் இலக்கியப் பெயரான நிலையில் ஐந்து செய்யுள் கொண்ட பிரபந்தத்தைப் பற்றியும் குறிக்கும் சொல்லே 'பஞ்சரத்தினம்' ஆகும்.  பஞ்சரத்தின நூல்கள் பெரும்பாலும் ஆசிரிய விருத்தம் ஐந்தால் அமைந்து பாடல்தோறும் ஈறொப்புப் பெறுவது இயல்பு எனத் தெரிகின்றது.  இவ்வகையில் ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் பேரில் பஞ்சரத்தினம், தணிகாசலர் பஞ்சரத்தினம், ஆறுமுகசுவாமி பேரில் பஞ்சரத்தினம், சண்முகக்கடவுள் பஞ்சரத்தினம், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் பெருந்தேவியார் பஞ்சரத்தினம், காஞ்சிபுரம் பெருந்தேவித்தாயார் பஞ்சரத்தினம், ஸ்ரீநம்மாழ்வார் பஞ்சரத்தினம், சரஸ்வதி அம்மன் பஞ்சரத்தினம், மதுரை சொக்கநாதர் பஞ்சரத்தினம், மீனாட்சியம்மன் பஞ்சரத்தினம், திருமயிலாசலம் முருகக்கடவுள் பஞ்சரத்தினம், கற்பக வள்ளியம்மை பஞ்சரத்தினம், தேவி பஞ்சரத்தினம், ஸ்ரீகணேசர் பஞ்சரத்தினம், ஸ்ரீசுப்பிரமணியர் பேரில் பஞ்சரத்தினம் எனப் பல பஞ்சரத்தினங்கள் தமிழிலக்கியத்தில் இருக்கின்றன.  இவைகள் விருத்த யாப்பில் அமைந்த பஞ்சரத்தினங்களாகும்.  ஆனால், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் பஞ்சரத்தினமானது வெண்பா யாப்பில் அமைந்துள்ளது.  இந்நூல் கருவூர்ப் பதியில் வீற்றிருக்கும் பெத்தாச்சிப் பெருமான் மீது பாடப்பெற்றதாகும்.  காட்டாக ஒருபாடல்,

"ஞானக் கலைவாணி நன்மையுற நானிலத்தோர்
ஊனப் பிறவியிட ரோட்டெடுப்பக் - கானத்தே
நட்டமிடு வோர்ப்பாடும் நால்வரீர் பெத்தாச்சி
இட்டமுடன் வாழவருள் வீர்" (பா.5)

என்பதால் இந்நூலைப் பெத்தாச்சிப் பெருமான் பஞ்சரத்தினம் என்றும் கூறலாம்.  இதில் இடம்பெற்றுள்ள ஐந்து வெண்பாக்களிலும் பெத்தாச்சிப் பெருமானின் புகழ் பேசப்பெற்றுள்ளது.

வள்ளுவர் கலித்துறை

'வள்ளுவர் கலித்துறை' எனும் நூல் திருக்குறள் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஒரு கலித்துறை என 133 கலித்துறையாலானது.  ஆனால் இந்நூல் முழுமையும் பதிப்பாகவில்லை.  எழுத்துருவும் இதுவரை கிடைக்கவில்லை.  இந்நூலின் முதல் பத்து அதிகாரங்களுக்கான பத்து கலித்துறைகள் மட்டும் 1925-26ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப்பொழில் மாத இதழில் (துணர் 1, மலர் 11 மற்றும் 12) வெளிவந்திருக்கின்றன.  இதுவே இப்பகுதிக்கு ஆதாரமாகும்.

பிற வடிவில் 'வள்ளுவம்'

வள்ளுவப் பெருந்தகையின் திருக்குறள் பழங்காலந் தொட்டு இன்று வரை அறிஞர் பெருமக்களைப் பெரிதும் ஆட்கொண்டுள்ளது.  அவருடைய உரைகளையும் பொருள்களையும் பின்னையோர் தத்தம் வாக்குகளோடு பொன்னேபோலப் பொதிந்து போற்றிப் பெருமை கொண்டுள்ளனர்.  புலவர் பலர் தம்முடைய கருத்துகளோடு குறட்கருத்துகளையும் அங்கங்கே சேர்த்துக் கொண்டுள்ளனர்.  சிலர் குறளை அப்படியே எடுத்தாண்டும் இருக்கின்றனர்.  மணிமேகலையை யாத்த மதுரைக் கூலவாணிகன் சாத்தனார்,

"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றவப்
பொய்யில் புலவன் பொருளுரை தேராய்" (மணிமேகலை 12:59-61)

எனும் பகுதியில் குறட்பா அப்படியே கையாண்டு இருப்பது தெரியவருகின்றது.  சேரமான்பெருமாள் நாயனாரின் ஆதியுலாவில் திருவள்ளுவரின் குறள்கள் இரண்டு இடம்பெற்றுள்ளன (ஆதியுலா, வரி 136-137 மற்றும் 173-174).  அதேபோல் உமாபதி சிவாசாரியரின் நெஞ்சுவிடு தூதில் ஒரு குறள் இடம்பெற்றுள்ளது (நெஞ்சுவிடுதூது, வரி.24-25), கம்பராமாயணத்தில் வள்ளுவப் பெருந்தகையின் குறளுக்கு விளக்கமாய்ப் பல இடங்களைக் காணலாம்.  குறிப்பாக,

"எடுத்தொருவர்க் கொருவர் ஈவதனின் முன்னம்
தடுப்பது நினக்கழகி தோதகவில் வௌ¢ளி
கொடுப்பது விலக்குகொடி யோய்உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றிவிடு கின்றாய்" 

என்று கம்பர் அமைத்துள்ளார்.  இது,

"கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்" (குறள்.166)

எனும் குறளின் மறுபதிப்பாய் அதற்குரிய விளக்கமாய் அமைகிறதைக் காணலாம்.  முன்னையோர் பலரும் குறள் மணிகளைத் தேர்ந்தெடுத்துத் தாம் கூறும் பொருளுக்குப் பொருந்த அமைத்திருப்பதும், ஒவ்வொரு குறளுக்கும் ஒவ்வொரு கருத்தைக் கூறுவதையும் காண்கின்றோம்.

அதிகாரத்திற்கு ஒரு குறளைத் தேர்ந்தெடுத்து அக்குறளைப் பின்னிரண்டடியாகவும், அதற்கு விளக்கம் தரும் செய்தியை முன்னிரண்டடியாகவும் அமைத்துப் பாடிய நாலடிவெண்பாக்கள் தமிழுலகில் பலவுண்டு.  இவ்வகையில், பிறசைச் சாந்தக் கவிராயரின் இரங்கேச வெண்பா, பாகை அழகப்பனின் வடமலை வெண்பா, சிவஞான சுவாமிகளின் சோமேசர் முதுமொழி வெண்பா, சென்ன மல்லையரின் சிவசிவ வெண்பா, அரசஞ் சண்முகனாரின் வள்ளுவர் நேரிசை, சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்க சுவாமிகள் முருகேசர் முதுநெறி வெண்பா, குன்னூர் ஆறுமுக நாவலரின் வள்ளுவர் வெண்பா, ஏனையோரின் தினகர வெண்பா, திருமலை வெண்பா, முதுமொழி மேல்வைப்பு, திருப்புல்லாணி மாலை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.  இந்நூல்கள் ஒவ்வொன்றும் அதிகாரத்திற்கு ஒரு குறள் எனக் கொண்டு 133 வெண்பாக்களால் ஆனதாகும்.

குறள் ஒவ்வொன்றிலும் ஆசிரியரின் கருத்தைப் புகுத்தியும் பாடியிருக்கின்றனர்.  இவ்வகையில் சினேந்திரமாலை, ஜெகவீர பாண்டியனாரின் திருக்குறட் குமரேச வெண்பா போன்றன குறிப்பிடத்தக்கனவாகும்.  இந்நூல்கள் 1330 வெண்பாக்களால் அமைக்கப்பெற்றுள்ளன.  இதுவன்றி சைவத் தொண்டர்களாகிய நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிக்கு ஒத்த குறட்பாக்களை அமைத்து குமாரபாரதி அவர்கள் 'திருத்தொண்டர் மாலை' யை 100 வெண்பாக்களால் ஆக்கியிருக்கின்றார்.

திருக்குறளை நாலடி வெண்பாக்களில் புகுத்தி வந்ததுபோக, அறிஞர் பெருமக்கள் வள்ளுவக் கருத்துகளை அப்படியே உள்வாங்கிக் கொண்டு பல்வேறு வகையான இலக்கிய வடிவங்களில் யாத்துள்ளனர்.  மா. வேதாசலத்தின் 'திருக்குறள் அகவல்', வ.ஞா. கணேச பண்டிதரின் 'திருக்குறள் அதிகார சாரமாகிய திருத்தாலாட்டு', ஆக்கூர் சுந்தரமூர்த்தியின் 'திருக்குறள் நீதி' , நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் 'வள்ளுவர் கலித்துறை' போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

வள்ளுவர் கலித்துறைச் சிறப்பு

இதுவரை வள்ளுவத்தை இடைப்புகுத்தி எழுந்த நூல்கள் வள்ளுவக் குறளை அப்படியே எடுத்தாண்டிருக்கின்றன.  ஆனால் நாவலர் நாட்டார் அவர்களோ ஒவ்வொரு அதிகாரக் கருத்தையும் உள்வாங்கிக்கொண்டு அதிகாரப் பிழிவாக அதிகாரத்திற்கு ஒரு கட்டளைக் கலித்துறையாக அமைத்திருக்கின்றார்.  இந்நூல் முழுமையும் கிடைக்காதது ஒருபெருங்குறையே.  இந்நூலில் நாட்டார் வள்ளுவத்தை புதுவிதமாகப் பயன்படுத்தி இருக்கின்றார்.  திருவள்ளுவர் ஒருபொருளின் நன்மை - தீமை பற்றி விளக்கிக் காட்டுவார்.  ஆனால் நாட்டார் அவர்களோ வள்ளுவத்தின் நன்மைப் பொருளை மட்டும் எடுத்துக் கூறுகின்றார்.  குறிப்பாக சில பாடல்களைக் காண்போம்.

ஊனம் இல்லாமல் உயிர்கள் வாழ்வதும் உண்பதும்; தானம், தவம் இவையிரண்டும் தழைத்தோங்குவதும்; வானவர்கள் முறை தவறாது பூசை நடத்துவதும் எதனாலே என்றால் வானம் மழையைப் பெய்விப்பதனால் தான் என்கின்றார் வள்ளுவப் பெருந்தகை.  இதில் வானத்தின் சிறப்பை மட்டும் எடுத்துக்கூறி 'வான் சிறப்பு' அதிகாரத்தின் நிலையை எடுத்துக்கூறுகின்றார் நாவலர் நாட்டார் அவர்கள்.  ஆனால் வள்ளுவரோ வான் பொய்ப்பினால் ஏற்படும் விளைவுகளையும் வான் சிறப்பாக்கிப் பாடியுள்ளார்.

"ஊனமி லாதுயிர் யாவையும் வாழ்வது முண்பதுவும்
தான முடன்றவந் தான்றழைத் தோங்கலுந் தாரணியில்
வானவர் பூசை நடத்தலும் வான்பெய லாலெனநற்
றேனமர் சொல்லிற் றெரித்தவன் சீர்த்திரு வள்ளுவனே" (பா.2)

எனும் நாட்டாரின் பாடல் அவர்தம் கருத்தை உணர்த்துவதாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.  இதேபோல் வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தில் வள்ளுவப் பெருந்தகையின், 

"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை" (குறள்.55)
"தன்காத்துத் தன்கொண்டான் பேணித் தகைசான்ற
சொல்காத்துச் சோர்விலாள் பெண்" (குறள்.56)

ஆகிய குறட்பாக்களை அடிப்படையாகக் கொண்டு,

"தன்னிறை காத்துக் கணவனைப் பேணுந் தகையுறுசொற்
பொன்னினல் லாண்மழை பெய்யெனப் பெய்யும் பொலியு மவ்வில்
என்னில தூங்குப் பெருந்தக்க வென்னுள வென்றுரைத்தான்
மன்னிய வாய்மையன் மன்புல வன்றிரு வள்ளுவனே" (பா.6)

எனும் பாடலை நாட்டார் தருகின்றார்.  இதில், தன்னையும் தன்னைக் கொண்டவனையும் பாதுகாத்து எப்பொழுதும் சோர்வடையாமல் இருப்பவளே நல்ல பெண் என்றும், அவள் பெய் என்றால் மழையும் பெய்யும் என்றும், பெண்களிடம் இருக்கவேண்டிய பண்புகளில் மனத்திண்மையாகிய கற்பு என்ற உள்ள உறுதியே எல்லாவற்றினும் மேம்பட்டது என்றும் கூறுகின்றார்.  புதல்வரைப் பெறுதல் அதிகாரத்தில் வள்ளுவரின், 

"குழல்இனிது யாழ்இனிது என்ப தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்" (குறள்.66)

"தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்" (குறள்.67)

ஆகிய குறட்பாக்களின் கருத்தை நாட்டார் அவர்கள்,

"குழலினும் யாழினு மின்பம் பயக்கும் குதலைச் செவ்வாய்
அழகிய மக்கட் பெறலிற் பெறும்பே றரிதவரைக்
கழகமுந் தேறப் புரிவது தந்தை கடனெனவே
தழல்புரை தூய்மைத் திருவள் ளுவனுரை தந்தனனே" (பா.7)

எனும் பாடலில் சுட்டுகின்றார்.  இது, குழலிசையை விடவும் யாழிசையை விடவும் இன்பம் தரக்கூடியது மழலையரின் சொற்களே என்றும், மழலைச் சொல்லின்பத்தை நுகர்வது மட்டும் ஒரு தந்தை நின்றுவிடாமல் அவனைப் பெரிய அவையின் முன்னே இருக்கச் செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றார்.

இப்படியாக நாவலர் நாட்டார் அவர்கள் வள்ளுவரின் நேர்வழிக் கருத்துகளைத் தம்முடைய 'வள்ளுவர் கலித்துறை' எனும் நூலில் விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது.  நாவலர் நாட்டாரின் 'வைகறை நினைவு' , 'தமிழன்னை வாழ்த்து', 'பஞ்சரத்தினம்', 'கருவூர் ஒன்பான் மணிமாலை' ஆகியவையன்றி 'பந்து விளையாடல்', 'கரந்தை மாணவர்க்கு வாழ்த்து', 'திருநெல்வேலி மாவட்டம் சிந்துபூந்துறையில் உதவிப் பதிவாளர் வள்ளிநாயகம் அவர்கள் தாயார் 1.11.1926இல் காலமான பொழுது பாடிய 'இரங்கற்பா' போன்றவற்றையும் குறிப்பிடலாம்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது நாவலர் நாட்டார் அவர்கள் கவியும் புனைந்திருக்கின்றார் என்பது தெரிகிறது.  வரலாற்று ஆராய்ச்சியை விடவும், உரை வரைவதை விடவும் நாட்டார் கவி புனைவதில் அதிக ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை என்றே சொல்லலாம்.  ஏனெனில் வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளர் சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் ஆகியவற்றில் உள்ள வரலாற்றுப் புலமையும்; இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார் நாற்பது, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி, திருவிளையாடற் புராணம், சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூறு ஆகிய நூல்களுக்கான உரைகளில் உள்ள உரைத்திறனும் - உரைமாண்பும் அவ்வளவாக கவிதைகளில் வெளிப்படவில்லை.  வள்ளுவர் கலித்துறை மட்டும் முழுமையும் கிடைத்திருந்தால் நாவலர் நாட்டாரின் படைப்பாற்றல் ஓரளவேனும் வெளிப்பட்டிருக்கலாம்.  'கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்' என்னும் பழமொழிக்கேற்ப நாவலர் நாட்டார் அவர்களின் ஆய்வுத் திறனும் உரைத்திறனும் ஒருங்குபெற்ற இடத்தில் கவித்திறன் சிறிதேனும் இருக்கவேண்டும் என்பதை இக்கவிகள் நிலைநாட்டுகின்றன என்றே கூறலாம்.

ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்
  1. நாட்டார் ஐயா, வே. நடராஜன், கழக வெளியீடு, 1998
  2. நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஆய்வுக் கட்டுரைகள், பி.விருத்தாசலம்(பதி.), நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்வி அறப்பணிக்கழக வெளியீடு, தஞ்சை, 1994.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக