ஞாயிறு, 4 நவம்பர், 2018

படைப்புலகில் வையாபுரிப்பிள்ளை

கசடறக் கற்ற கல்வியின் மேன்மையை ஆய்வுகளாகவும், எண்ண உறுத்தல்களைப் படைப்புகளாகவும் ஒருசேரச் செய்து வந்த பெருமக்கள் ஒரு சிலரே ஆவர்.  அவர்களுள் சரவணப்பெருமாளையர், த. சிவக்கொழுந்து தேசிகர், ஆறுமுக நாவலர், வடலூர் இராமலிங்க அடிகள், மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.  இவர்களுள் ஒருவராக வைத்துப் போற்றத்தக்கவரே பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை.

வையாபுரிப் பிள்ளையவர்கள் 'கட்டுரைகள் வரைந்திருப்பதோடு, ஆராய்ச்சிகள் செய்திருப்பதோடு, கவிதைகளும் இயற்றியுள்ளார்; கதையும் எழுதியுள்ளார்' என்பார் மா.சு. சம்பந்தன் (அச்சும் பதிப்பு, ப.407).  வையாபுரியாரின் ஒன்பது சிறுகதைகளும் ஒரு நாவலும் அவரின் எண்ணத்தையும் வளர்ச்சி நிலையையும் காட்டும் கருக்கோலாக இருக்கின்றன.  வையாபுரியாரின் சிறுகதைகள் 'பாலையா' என்ற புனைபெயரில் வெளிவந்திருக்கின்றன.

"சிறந்த புதினத்திற்கு இன்றியமையாத உறுப்புக்களாக சூழ்ச்சி அல்லது சதி, பாத்திரங்கள், உரையாடல், காலம், இடம், நடை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ காட்டப்பெற்றுள்ள வாழ்க்கைத் தத்துவம் என்பனவற்றைக் கூறலாம்.  இவை அனைத்தும் ஒரே அளவாகவோ அனைத்துமோ இருந்து தீரல் வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை.  ஒவ்வொன்றும் மிக்கும் குறைந்தும் இருப்பினும் தவறு இல்லை" (அ.ச. ஞானசம்பந்தம், இலக்கியக்கலை, ப.346).  வையாபுரிப் பிள்ளையவர்களின் பத்து கதைகளிலும் சூழ்ச்சி அல்லது சதி தவிர்த்த மேற்கூறிய அனைத்தும் வெளிப்படையாகவே அமைந்திருத்தலைக் காணமுடிகிறது.

1.  வகைப்பாடு

படைப்புகளை, கதையின் கருப்பொருளை மையமாகக் கொண்டும், மாந்தர்களின் பண்பு நலன்களை மையமாகக் கொண்டும், ஆசிரியரின் நடை கொண்டும், சமுதாய சரித்திர அமைப்பு கொண்டும் எனப் பலவாறு வகைப்படுத்தலாம்.  ஆனால் இவ்வகைப்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டு அமைந்துள்ளது வையாபுரிப் பிள்ளையின் கதைகள்.  இவரின் கதைகளை மூன்று நிலைகளில் வகைப்படுத்தலாம்.

1.  தன் கதை
2.  தழுவல் கதை
3.  பதிப்புக் கதை

என அவை அமையும்.  தன் கதையாக பேசா மடந்தை, ஓர் இரவு ஆகிய சிறுகதைகளையும் ராஜி என்னும் நாவலையும்; தழுவல் கதையாக சுசீலை, உதிர்ந்த மலர், சந்திரா பழி வாங்கியது, மத்தளக்காரன் மற்றும் பாலகோபாலன் வழக்கு ஆகிய சிறுகதைகளையும்; பதிப்புக் கதைகளாக மணிமுடி மாளிகை, ராமுவின் சுயசரிதம் ஆகிய சிறுகதைகளையும்  இவ்வகைகளுக்குள் அடக்கலாம்.

தழுவல் கதையாக இருந்தாலும் பதிப்புக் கதையாக இருந்தாலும் அவைகள் தன்கதையில் இருந்து வேறுபடுத்திக் காட்டவும் ஆய்வு நெறிமுறையில் ஊன்றிய தன்மையை வெளிப்படுத்தவும் பிறரின் கருத்தைப் பிறருடையதாகவே காட்டவும் வையாபுரியார் ஒருபொழுதும் தவறியதில்லை.  கதை தொடங்குவதற்கு முன்னதாகவோ இறுதியிலோ கதையின் தொடக்கப் பக்க அடிப்பகுதியிலோ தழுவல் அல்லது பதிப்பு பற்றிய குறிப்பு காணமுடிகிறது.

தழுவல் கதையாக அமைந்த 'சந்திரா பழி வாங்கியது' என்னும் சிறுகதை தென்தமிழ் நாட்டுப்புற மக்களால் வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வரும் நாட்டுப்புறக் கதையாகும்.  இக்கதையை வையாபுரியார் அவர்கள் ஆங்கிலக் கதையாசிரியர் எம்.பிரேரே அவர்களின் 'தக்காணத்துப் பண்டை நாட்கள்' என்று பொருள்படக் கூடிய நூலில் உள்ள கதையைப் படித்திருக்கிறார்.  தாம் ஆங்கில நூலில் படித்த கதையும் தென்தமிழ்நாட்டில் நாட்டுப்புறக் கதையும் ஒத்திருப்பதைக் கண்டு இக்கதையைத் தழுவல் கதையாக உருவாக்கி இருக்கலாம் என்று துணிய எண்ணமிடும்.

மனம் எதை விரும்புகிறதோ அதைத்தான் எண்ணம் செயல்படுத்தும்.  வையாபுரியாரின் கதை வகைகளைக் கருத்தில் கொள்ளாமல் எல்லா வகையான கதைகளும் (தன் கதை, தழுவல் கதை, பதிப்புக் கதை) அவருடையதாகவே கொண்டு கதைகளின் வாயிலாக பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையவர்களைக் காண இவ்வாய்வு முற்படுகிறது.

2.  கதைக்கரு - சிறுகதைகள்
அ.  மணிமுடி மாளிகை

ரங்க நாயகியின் விருப்பப்படி இந்தியாவின் வடவெல்லை வரை சுற்றிப்பார்க்க தந்தை இசைவு தருகிறார்.  தந்தையுடன் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்னையில் வெகுநாளாக சந்திக்காதிருந்த அத்தை விசாலாட்சியைச் சந்திக்கிறார்கள்.  பின் டெல்லியில் அத்தை மகன் சீனிவாசனைச் சந்திக்கிறார்கள்.  அங்கு, ரங்கநாயகிக்கும் சீனிவாசனுக்கும் காதல் மலர்கிறது.  பின் பெற்றோர்களின் ஆசியுடன் திருமணம் நடைபெறுகிறது.

ஆ.  சுசீலை

குழந்தையிலேயே அனாதையாகிவிட்ட சுசீலையை தூரத்து உறவு அம்மணியம்மாள் வளர்த்து வருகிறார்.  அம்மணியம்மாளின் தங்கை மகன் இராமநாதன் அவளின் வீட்டிற்கு  களோக சாத்திரம் - புத்தகம் எழுதுவதற்காக அமைதியான இடத்திற்கு வருகிறான்.  சுசீலை இராமநாதனைக் காதலிக்கிறாள்.  இராமநாதன் தன் மாமன் மகள் சுந்தரியை காதலிக்கிறான்.  சுந்தரி தன் தாயாரின் விருப்பப்படி தன் தாய்மாமனையே மறுமணஞ் செய்து கொள்கிறாள்.  சுந்தரி இன்னொருவனுக்கு என்று முடிவானதும் இராமநாதன் பெண்களையே வெறுக்கிறான்.  அவனோடு அன்புடன் பழகும் சுசீலையையும் சேர்த்தே வெறுக்கிறான்.  சுசீலையின் மாறாத அன்பில் சிக்கிக்கொண்ட இராமநாதன் மனம் மாறி சுசீலையைக் காதலிக்கின்றான்.  பின் அவளைத் திருமணமும் செய்து கொள்கின்றான்.

இ.  ராமுவின் சுயசரிதம்

தீபாவளிக்குப் பத்மாவும் இராமஸ்வாமியும் சென்னையில் இருந்து தங்களுடைய சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் தனித்தனியே இரயில் மூலம் புறப்படுகிறார்கள்.  இரயிலில் இரண்டு பேரும் சந்தித்துக்கொள்கிறார்கள்.  பத்மாவுக்கு தன்பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை இவர் என்பதை தனக்குப் பெற்றோர் அனுப்பிய புகைப்படத்தை எடுத்துச் சரிபார்த்துக் கொண்டு அவனுடன் பழகத் தொடங்குகிறாள்.  பழக்கம் காதலாகிறது. பின் பெற்றோர்கள் ஆசியுடன் திருமணம் நிச்சயிக்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது.

ஈ.  உதிர்ந்த மலர்

தாய் இழந்த சுரைதா தந்தையின் ஆதரவில் அன்பாக வளர்கிறாள்.  தன் வயதொத்த அமீர்கானைக் காதலிக்கிறாள்.  தந்தையின் கட்டளைப்படி சுரைதா சதக்அலியைத் திருமணம் செய்து கொள்கிறாள்.  அமீர்கானுடன் சுரைதா அன்பு கொண்டிருப்பதை அறிந்த சதக்அலி அமீர்கானைக் கொன்று சவப்பேழைக்குள் வைத்து சுரைதாவுக்கு அன்புப் பரிசாகக் காதலன் பிணத்தை அளிக்கிறான்.  ஆறாத அன்பு கொண்ட சுரைதா நெஞ்சில் உரங்கொண்டு சதக்அலியிடம் இருந்த கத்தியை எடுத்து தற்கொலை செய்துகொள்கிறாள்.

உ.  பேசாமடந்தை

கோபுவும் சுகுணாவும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள்.  சுகுணா கோபுவைக் காதலிக்கிறாள்.  கோபு ஓர் பேசாமடந்தையாக இருப்பது கண்டு வெட்கி தலைகுனிகிறாள்.  எப்படியாகிலும் கோபுவை இந்நிலையில் இருந்து மாற்றவேண்டும் என்று சுகுணா முடிவெடுக்கிறாள்.  சுகுணாவின் தூண்டுதலால் கோபு 'பிரசங்கமாரி' என்னும் பட்டம் பெறும் அளவிற்குப் பேச்சில் முன்னேறுகிறான்.  பெற்றோர் ஆசியுடன் சுகுணாவைத் திருமணஞ் செய்துகொள்கிறான்.  தாம் படித்த மருத்துவத் தொழிலைவிட கோபு பேச்சுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருவதைக் கண்ட சுகுணாவும் அவர்களின் பெற்றோர்களும் வருத்தமடைகின்றனர்.  பின்னர் அவர் பேசுவதை எந்த வகையிலாவது குறைக்கவேண்டும் என்று பலவகையில் முயற்சி செய்கின்றனர்.

ஊ.  ஓர் இரவு

காமுகர்களால் விரட்டி வரப்பட்ட பஞ்கஜத்தை சோமு காப்பாற்றி வீட்டில் கொண்டுபோய் விடுகிறான்.  பங்கஜத்தின் அண்ணன் தன்னுடன் பயின்ற நண்பன் என்பதை அறிகிறான்.  பின் பெற்றோர்களின் ஆசியுடன் பங்கஜத்தை சோமு திருமணம் செய்து கொள்கிறான்.

எ.  சந்திரா பழி வாங்கியது

குழந்தையில்லாத கோவிலிங்கி ராணி, நடனமாது, வணிகன் மனைவி ஆகிய மூவரும் மகாதேவரிடம் வரம் கேட்க தவத்திடத்திற்குப் புறப்படுகிறார்கள்.  மூவரும் ஓரிடத்தில் சந்திக்கின்றனர்.  மூன்று பேரும் சேர்ந்து மகாதேவரைக் கண்டு வரம் கேட்போம் என்று செல்கின்றனர்.  வழியில் அக்கினி ஆற்றைக் கடந்து போகும் சூழ்நிலை வரும் போது முதல் இரண்டு பேரும் தயங்குகிறார்கள்.  வணிகன் மனைவி மட்டும் ஆற்றில் இறங்கி கடக்க முற்படுகிறாள்.  அப்படி கடக்கும் போது இரண்டு பேரும் எனக்கும் வரம் பெற்று வா என்று சொல்லி அனுப்புகின்றனர்.  வணிகன் மனைவி மகாதேவரைக் கண்டு மாம்பழத்தை வரமாகப் பெற்று வந்து மூன்று பேரும் பழத்தை உண்ணுகிறார்கள்.  மூவருக்கும் முறையே சந்திரா, மௌலி, கோவிலன் என்ற பெயருக்குகந்த குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்.  

சந்திராவின் சாதகத்தைக் கணித்த போது ஆபத்து வரும் என்று உணர்ந்த கோவிலிங்கி ராணி சந்திராவை ஆற்றில் மிதக்கவிட்டுவிடுகிறாள்.  அக்குழந்தையை வணிகன் எடுத்து வளர்த்து தன் மகன் கோவிலனுக்குத் திருமணம் செய்து வைக்கிறான்.  பின் கோவிலன் மௌலியின் நடனத்தைக் காணச் சென்று அவளையும் ஏற்றுக்கொண்டு சிறிது காலம் அவளுடன் வாழ்கின்றான்.  பின் மௌலியுடன் கசப்பு உணர்வு (பொருளுக்காக) ஏற்பட தன்மனைவி சந்திராவிடம் வந்து அவளின் காற்சிலம்பை விற்று மௌலியின் கடனைத் தீர்த்துவிட்டு நாம் மகிழ்ச்சியாக வாழலாம் என்கிறான்.  சந்திரா கணவனை நம்பாமல் தானும் உங்களுடன் வரவேண்டும் என்று கூறிக் கணவனுடன் காற்சிலம்பை விற்க மதுரைக்கு புறப்படுகிறாள்.  கோவிலனை மதுரையில் கள்வன் எனப் பட்டம் கட்டி கொலை செய்யச் சொல்கிறார்கள்.  பாவிகள் கையால் கொலைபடுவதைத் தவிர்க்க கோவிலனே தன் கை வாளால் மாள்கிறான்.  இதையுணர்ந்த சந்திரா கோபப்பட்டு மதுரையைத் தீக்கிரையாக்கித் தன் கணவன் உடலையும் தலையையும் ஊசியால் தைத்து மகாதேவரிடம் உயிர்பெற்று இன்பமாக வாழ்கிறாள்.

ஏ.  மத்தளக்காரன்

மாயக்காரியின் வலையில் சிக்கிக்கொண்ட அரசகுமாரியைக் காப்பாற்றுகிறான் மத்தளக்காரன்.  பின் அவளையே திருமணமும் செய்துகொள்கிறான்.

ஐ.  பாலகோபாலன் வழக்கு

ஏழைத்தாய் சுமதியின் வழக்கில் தலையிட்டு தீர்த்து வைக்கிறான் வக்கீலுக்குப் படித்துக்கொண்டு இருக்கும் மாணவன் பாலகோபாலன்.  சுமதியின் ஒரே மகள் சுந்தரியை பாலகோபாலன் காதலிக்கின்றான்.  படிப்பினை முடித்த பிறகு சுந்தரியைத் திருமணம் செய்துகொள்கிறான்.

ஒ.  ராஜி - நாவல்

ராஜி மோகனரங்கத்தைக் காதலிக்கின்றாள்.  நாராயணசாமி ராஜியைக் காதலிக்கின்றாள்.  மோகனரங்கம் ராஜியைக் காதலித்துவிட்டு வசதியான பெண் கமலினி கிடைத்தவுடன் அவளையே திருமணஞ் செய்துகொள்கின்றான்.  ருக்கு நாராயணசாமியை மனதில் நினைத்து அவன் கிடைக்காது போகவே வரதராஜ அய்யங்காரரைக் காதலிக்கிறாள்.  மாறாத அன்பு கொண்ட நாராயணசாமி இறுதியில் ராஜியைத் திருமணஞ் செய்துகொள்ள வெளிநாட்டிலிருந்து சென்னை வருகின்றான். பெங்களூரில் நோய்வாய்ப்பட்டு இருக்கும் ராஜியைக் காணச் செல்கின்றான்.

3.  கதைமாந்தர்கள்

கதையின் கருப்பொருளை நகர்த்திச் செல்பவர்கள் கதைமாந்தர்கள்.  ஆசிரியரின் மனநிலைக் கேற்றவாறு ஒவ்வொரு கதைமாந்தர்களின் பண்பு நலன்கள் மாறுபட்டமையும்.  'படைப்பாளனின் சொந்த வாழ்க்கையிலிருந்தே அவன் படைக்கும் படைப்பு முழுவதும் உருவம் பெறுவதில்லை; ஆனால் அவனது எண்ணத்தின் வித்து அவனுடையதும், பிறருடையதுமான வாழ்க்கைச் சத்துகளை மட்டும் எடுத்துக்கொண்டு படைப்பாக வளர்கின்றது' (ஜெகசிற்பியின் சமூகப் புதினங்கள், ப.9).  வையாபுரிப் பிள்ளையவர்களின் கதைகளும் அவ்வாறே அமைந்துள்ளன.  அவரின் எண்ணங்களை பதிப்புக் கதைகள் உட்பட்ட கதைகளில் காணப்படும் கதை மாந்தர்களின் வாயிலாக வெளிப்படுத்துகிறார்.

வையாபுரிப் பிள்ளையவர்கள் தாம் காணும் அன்பர்கள் அனைவரையும் நல்லவராகவே கொண்டுள்ளார் என்பதற்கு அவரின் கதைகளில் அமைக்கப்பட்டு இருக்கும் கதைமாந்தர்களே சான்றாக நிற்கின்றார்கள்.  தம் படைப்புகளில் நினைவுப் பரிசாகக் கொடுப்பவை எல்லாம் புத்தகங்களாகவே இருக்கின்றன.  இயன்றவரை எல்லோரையும் புத்தகம் படிக்கவைக்க வேண்டும் என்ற அவரின் தெளிவான எண்ணம் உள்ளார்ந்த உணர்வு வௌ¢ளிடைமலை போலத் தெரிகிறது.

வையாபுரிப் பிள்ளையவர்களின் கதைமாந்தர்கள் நிலையான கொள்கை உடையவர்களாகக் கருத முடியவில்லை என்றாலும் நல்ல பண்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.  காலத்திற்கு ஏற்றார் போல தங்களின் கொள்கைகளை மாற்றிக் கொண்டு வாழ்பவர்களாகவும் இருக்கிறார்கள்.  தனவணிகனின் மனைவி குழந்தைப் பேறு பெறுவதற்காக பன்னிரண்டு ஆண்டுகள் காடு, மலை, ஆறுகள் பல கடந்து சென்று மகாதேவரைக் கண்டு வரம்பெற்று குழந்தை பெறுகிறாள்.  சந்திரா பழி வாங்கியது எனும் கதையில் மட்டும் கதைமாந்தர் மேற்காணும் கொள்கையில் இருந்து மாறுபடுகின்றார்.

ராஜி என்னும் நாவலில், ராஜி தான் விரும்பும் மோகனரங்கம் தனக்கில்லை என்றானதும் தன்னை விரும்பும் நாராயணசாமியை ஏற்றுக்கொள்ள துணிகிறாள்.  தான் விரும்பிய ராஜி தனக்கில்லை என்றானதும் பிரமச்சரி விரதத்தைக் கடைபிடித்து கணித சாத்திரத்தில் முன்னேறுவேன் என்று உறுதி கொண்ட நாராயணசாமி ராஜி தன்னை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை வரும்போது தன்னுடைய பிரமச்சரி விரதத்தைக் கைவிடுவேன் எனத் துணிகின்றான்.  ருக்கு, தான் மனதால் விரும்பிய நாராயணசாமி இல்லையென்றானதும் கிடைத்த சந்தர்ப்பத்தில் வரதராஜ அய்யங்காரைக் காதலிக்கின்றாள்.  படிக்காத நாட்டுப்புறப் பெண்ணையே மணக்க விரும்பும் வரதராஜ அய்யங்கார் ருக்குவின் அழகைக் கண்டு மனம் மாறுகிறார்.  சுசீலை  என்னும் சிறுகதையில் இராமநாதன், தான் காதலிக்கும் சுந்தரி வேறொருவனை மணக்க நேரிட்ட போது மனம் வெறுத்துப் பின்னர் அனாதைப் பெண் சுசீலையின் அன்பில் சிக்கிக் கொள்கிறான்.

வையாபுரிப்பிள்ளை அவர்களின் கதைகளில் வில்லன் வில்லி மாந்தர்களைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது.  உதிர்ந்த மலரில் சதக்அலியும், மத்தளக்காரனில் மந்திரக்காரக் கிழவியும், பாலகோபாலன் வழக்கில் மூன்று கள்வர்களும் ராஜியில் மோகனரங்கம் போன்றோரின் குணங்களில் வில்லத்தனம் வெளிப்பட்டாலும் கதையின் திருப்பத்திற்கோ கதையோட்டத்திற்கோ இவர்கள் தேவையற்றவர்களாகவே இருக்கிறார்கள்.  கதைப்போக்கில் இடையே வந்து செல்லும் சிறுசிறு மாந்தர்களாகவேதான் அவர்களைப் படைத்துள்ளார்.  இவர்களை வில்லத்தனம் கொண்டவர்களாகக் கருதிக் கொள்ளலாமே தவிர வில்லர்களுக்கான சிறப்புப் பண்புகள் எதுவும் இவர்களிடம் காண்பதரிதே.  இதை வைத்துப் பார்க்கும் போது, பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் தாமும் தம்மைச் சுற்றியுள்ளர்களும் நல்லவர்களாகவே இருக்கவேண்டும் என்ற கோட்பாடு உடையவராக இருக்கலாம் என்று இச்சான்றுகள் துணியச் செய்கின்றன.

4.  காதல் கொள்கை

"ஆணும் பெண்ணுமாய்க் கூடி வாழும் வாழ்வுக்கு அடிப்படையாய் இருப்பது காதலும் காமமுமே.  எல்லாக் காலத்து இலக்கியங்களிலும் எல்லா நாட்டு இலக்கியங்களிலும் இவ்விரண்டும் அளவுக்கதிகமாகவே பேசப்பட்டு வந்துள்ளன" (விடுதலைக்கு முன் புதிய தமிழ்ச் சிறுகதைகள், ப.100).  வையாபுரிப் பிள்ளையவர்களின் காதல் உறவினர், தெரிந்தவர், அறிமுகமானவர் என்ற முறையிலேயே வளர்ந்துள்ளது.  மேலும், அவரின் கதைகளில் காமமும் இடம்பெற்றுள்ளது.  இளம்பருவ வேட்கை காரணமாக எழும் இளம்பருவக் காதல் அனுபவங்களை மணிமுடி மாளிகையில் சீனிவாசன் - ரங்கநாயகி ஆகியோர்க்கிடையேயும், ராமுவின் சுய சரிதத்தில் இராமஸ்சுவாமி - பத்மாவுக்கிடையேயும் காட்டுகின்றார்.

வேட்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அன்பு ஒன்றே காதலின் அடிப்படை என்பதை பேசாமடந்தையில் கோபு - சுகுணா காதலையும், ஓர் இரவில் சோமு - பங்கஜத்தின் காதலையும், பாலகோபாலன் வழக்கில் பாலகோபாலன் - சுந்தரி காதலையும், ராஜியில் நாராயணசாமி - ராஜி மற்றும் வரதராஜ அய்யங்கார் - ருக்கு ஆகியோரின் காதலையும் குறிப்பிடுகின்றார்.

பொருந்தாக் காதலை (காமத்திற்பாற்பட்ட) உதிர்ந்த மலரில் சதக்அலி - சுரைதா மீது கொண்ட காதலை - காமத்தைக் குறிப்பிகின்றார்.  எவ்வகைப்பட்ட காதலாயினும் வெற்றியைப் பெறுதல் வேண்டும் என்னும் வையாபுரியாரின் காதற்கொள்கை தெளிவாகத் தெரிகிறது.

5.  நடை அமைப்பு

எந்தவொரு இலக்கியமானாலும் அதற்கென ஒரு நடையைப் படைப்பாளன் உருவாக்கிக் கொள்ளவேண்டும்.  இந்நடை படைப்பாளருக்கு இயல்பாக வரக்கூடியவை.  ஒருவரின் நடையே அவரின் இலக்கியச் செழிப்பிற்கு வித்திட்டதாக அமையும் சிறப்புடைத்து எனலாம்.  பேரா. வையாபுரிப் பிள்ளையவர்களின் நடையில் கட்டுரை மணம் கமழ்கிறது எனலாம்.  இன்றைய சிறுகதை மற்றும் நாவலாசிரியர்கள் பெரும்பாலான வழக்குச் சொற்களைத் தம் நடைக்குப் பயன்படுத்துகின்றனர்.  அவ்வகைக் கதைகள் வட்டார வழக்குத் தொடர்புடைய கதைகளாக மிளிர்கின்றன.  ஆனால் இவரின் கதைகளை அவ்வகைகளுக்கு உட்படுத்த முடியவில்லை.  இவரின் நடையில் கட்டுரைப் போக்கு இருந்தாலும் சிற்சில இடங்களில் பாத்திரங்களை உரையாட விடும்போது நாடகநிலை வெளிப்படுவதைக் காணமுடிகிறது.

"சுசீலை -  யார் காத்திருக்கிறார்கள்?
அம்மணியம்மாள் -  யார்! இராமநாதன்.
   சுசீலையின் அடிவயிற்றில் நெருப்பைக் கொண்டினது
   போல் இருந்தது.
அம்மணியம்மாள் -  சுந்தரி என் அண்ணாவின் குழந்தை.  இராமநாதனும்
   சுந்தரியும் சிறு குழந்தைகளாயிருக்கும் பொழுதே
   இணைபுரியாத தோழர்களா யிருந்தார்கள்.  
   ஒருவருக்கொருவர் மிகுந்த அன்பு பாராட்டி வந்தார்கள். 
   இதைக்கண்டு இவருடைய பெற்றோர்களும் இருவரையும்
   மணமுடித்துவிட வேண்டுமென்று தீர்மானித்து விட்டார்கள். 
   ஆனால் சௌகரியம் வாய்க்கவில்லை; என் அண்ணா தூர
   தேசங்களிலே வேலையா யிருந்தார்.  இப்போதுதான்
   வருகிறார்" (சுசீலை, பக்.26-27)

இதுபோன்ற அமைப்பு ராஜி, சுசீலை, பேசாமடந்தை, பாலகோபாலன் வழக்கு போன்ற கதைகளிலும் காணமுடிகிறது.

கதைமாந்தர் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் பாங்கு இவரின் நடை உத்தியில் சிறந்ததாகக் கருதலாம்.  தலைவியின் கூற்றாக வெளிப்படும் கதையில் தலைவியை இன்னாரென்று அறியாத தலைவன் தன் கூற்றாக்கும் காட்சி ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.  "ரங்கா, உன் மறுமொழியில் தான் என் உயிர் இருக்கிறது.  நீ இன்னாரென்று எனக்குத் தெரியும்.  திருவனந்தபுரத்திற்கு ஒருமுறை உன்னைப் பார்ப்பதற்கென்றே வந்தேன்.  என் தகப்பனார் அப்போது உயிரோடிருந்தார்.  உங்கள் வீட்டுக்குப் போகக்கூடாது என்பது அவருடைய கடுமையான உத்தரவு.  அவ்வுத்தரவுக்குப் பங்கம் வராமல் உன்னைப் பார்த்துத் திரும்பினேன்.  நான்கு வருஷம் ஆய்விட்டது . . . .   நான் பார்த்தது முதல் உன் முகத்தை என் மனத்திலே பிரதிஷ்டை செய்துவிட்டேன்.  என்னை உனக்குத் தெரியக் காரணமில்லை.  உன் அப்பாவோடு உடன் பிறந்த அத்தையொருத்தி உண்டென்று கேள்விப்பட்டு இருப்பாயோ என்னவோ தெரியாது.  நான் அவளுடைய ஏக புத்திரன்தான்' என்று கூறி என்னை நோக்கிக் கொண்டே நடந்தார்" (சிறுகதை மஞ்சரி, மணிமுடி மாளிகை, ப.13).  இதுபோன்ற நடை உத்தி - கூற்று மாற்றிச் சொல்லும் நடை உத்தி சில உள்ளதைக் காணமுடிகிறது.

6.  சொல்லமைப்பு

இக்கால இலக்கியத்திற்கு எப்படி நடையமைப்பு சிறந்திருக்க வேண்டுமோ அதே அளவிற்கு சொல்லமைப்பும் அமைந்திருத்தல் வேண்டும்.  வையாபுரிப் பிள்ளையவர்கள் இலக்கியத்தின் பாற்கொண்ட பெரும் ஈடுபாட்டின் காரணமாகவோ என்னவோ உலக வழக்குச் சொற்களைப் பெரிதும் கையாளாமல் செய்யுள் வழக்கின் இயல்பான சொற்களையே மொழிக்கலப்புடன் கையாண்டுள்ளார் எனலாம்.  இன்றைய எழுத்தாளர்களின் சொல்லமைப்பைப் பார்க்கும் போது இவர் அவர்களில் இருந்து மாறுபட்டு தனித்து நிற்கிறார்.  வையாபுரியாரின் சொல்லமைப்பில் வடமொழி மற்றும் ஆங்கிலச் சொற்களின் தாக்கம் பெரும்பாலும் காணமுடிகிறது.  "அப்பாவின் நண்பரொருவர் வந்து ஸ்டேஷனில் எங்களைச் சந்தித்தார்.  எங்கள் ஜாகைக்கு அழைத்துச் சென்றார்.  எங்களுக்கு வேண்டிய சௌகரியங்களை எல்லாம் ஏற்கனவே செய்திருந்தார்" (மணிமுடி மாளிகை, ப.3).  இந்தத் தொடரில் ஆங்கிலம் மற்றும் வடமொழிச் சொற்கள் கலந்து வந்துள்ளமை புலப்படும்.  மேலும், 'கீச்கீச்', 'திக்திக்', 'விறுவிறு', 'ஆ!', 'ஆஉறா!', 'கிரீச்' போன்ற உணர்வுச் சொற்களையும் சிற்சில இடங்களில் கையாண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

7.  கதை சொல்லும் முறை

கதை சொல்லுதல் என்பது ஒவ்வொருவருக்கும் கை வந்த கலையாக அன்று முதல் இன்று வரை இருந்து வருகின்றது.  கதையில் நல்ல கருப்பொளும் அதை நடைபோட்டுச் செல்ல கதைமாந்தர்கள் நல்ல பண்பு உள்ளவர்களாகவும் இருந்தால் மட்டும் போதாது.  சுவைஞர் மனதில் கதை பதியும்  அளவுக்குக் கதை சொல்லும் முறை அமைந்திருக்க வேண்டும்.  பெரும்பாலான கதைகள் ஆசிரியர் வெளியில் இருந்துகொண்டும் கதைக்குள்  இருந்துகொண்டும் தானே ஒரு மாந்தராகக் கருதிக்கொண்டும் கதையைச் சொல்லுதல் என்பது ஒரு சிறந்த உத்தி.  இதனால் அவரின் (ஆசிரியர்) எண்ணத்தை முழுமையாக கதையின் மூலம் வெயியுலகுக்குக் காட்டமுடியும்.  இந்த முறையை ஆசிரியர் கூற்று என்கின்றோம்.  கதையை நடத்திச் செல்லும் முதன்மைக் கதைமாந்தர்களோ துணைக்கதைமாந்தர்களோ கூடக் கதையைச் சொல்லலாம்.  இந்த முறையை கதைமாந்தர் கூற்று என்கிறோம்.  பேராசிரியர் வையாபுரிப் பிள்ளைவர்களின் கதைகளை உற்று நோக்கும் போது பெரும்பான்மை ஆசிரியர் கூற்றாகவும் சிறுபான்மை கதைமாந்தர் கூற்றாகவும் அமைந்திருப்பதைக் காணமுடியும்.  ராஜி, பாலகோபாலன் வழக்கு, மத்தளக்காரன், சந்திரா பழி வாங்கியது, பேசாமடந்தை, உதிர்ந்த மலர், ராமுவின் சுயசரிதம், சுசீலை போன்ற கதைகள் ஆசிரியர் கூற்றாகவும்; மணிமுடி மாளிகை, ஓர் இரவு போன்ற கதைகள் கதைமாந்தர் கூற்றாகவும் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.

8.  மாந்தரின் பெயர்ச்சுருக்கம்

அன்பில் உருவான நெருக்கம் அதிகமாகும் போது, பேசும் பேச்சில் மதிப்பு தானாகக் குறைந்துவிடும்.  இந்த மதிப்பு அன்பு கொண்டவரின் பெயரைச் சுருக்கியோ தனக்குப் பிடித்த மாற்றுப் பெயரையோ வைத்துவிடத் தூண்டும்.  கதைகளிலும் இவ்வாறு மாந்தர்களின் பெயர்களைச் சுருக்கிக் கையாள்வது சில கதாசிரியர்களின் கரைகண்ட கலையாக இருக்கின்றன.  கதையோடு ஒன்றிப்படிக்கும் சுவைஞர் கதைமாந்தரின் பெயர்ச்சுருக்கத்தினால் தன்னுடன் அன்பு கொண்டவரை மனதில் எண்ணுவதாய்க் கதையைச் சுவைப்பர்.

வையாபுரிப் பிள்ளையவர்கள் கதை போகும் போக்கில் மாந்தர்தம் பெயர்களை (மனதில் இடம் பிடிக்கும் மாந்தர்தம் பெயர்களை மட்டும்) சுருக்கிக் கையாண்டுள்ளார்.  சீனிவாசனை சீனு என்றும், நாராயணசாமியை நாணு என்றும், ரங்கநாயகி அம்மாளை ரங்கா என்றும், மோகனரங்கத்தை ரங்கு என்றும், ஆராவமுதை அமுது என்றும், அம்புஜத்தை அம்பு என்றும் சுருக்கியுள்ளார்.  இவ்வாறு பெயர்களைச் சுருக்கிவிடுவதால் கதையை ஊன்றிப் படிக்கும் நமக்கு நம்முடைய வாழ்க்கையில் நடந்தவற்றையோ அல்லது உணர்ந்தவற்றையோ நினைவூட்டும் நிகழ்ச்சியாகவே கதையை எண்ணத் தோற்றுவிக்கும்.  இப்பெயர்ச் சுருக்கம் நம்மை கதைக்குள் ஐக்கியப்படுத்திவிடும்.

9.  புரட்சிப்பெண்

அடக்கு முறையில் வெளிப்பாடும் மனவேதனையின் எல்லைக் கோடுமே புரட்சி.  வையாபுரிப் பிள்ளையவர்களின் புரட்சிப்பெண் பாரதி,  பாரதிதாசன் படைத்த புதுமைப் பெண்ணைப் போல் முழுவதும் மாறி வெளியுலகிற்கு வரவில்லை.  தன் மனதுக்குள்ளேயே குமுறிக் குழம்பிக் கொண்டிருக்கும் வேதனையை அவ்வப்போது திடீரென்று வெளிப்படுத்தும் நிலையிலேயே இருக்கிறார்கள்.  அதைவிட்டு வெளியுலகிற்கு வர மறுத்து அடங்கி ஒடுங்குகின்றனர்.

அறுபது வயதான சதக்அலி சுரைதாவை மூன்றாவது மனைவியாக்கித் தன் வேட்கையைத் தணித்துக்கொள்ள விரும்புகிறார்.  சுரைதாவின் தந்தை பணத்துக்கு மயங்கி சதக்அலிக்குத் தன் ஒரே மகளை மணம்முடிக்க வாக்குத் தருகிறார்.  இதைக் கேள்விப்பட்ட சுரைதா, "சதக்அலி பெரிய தனவந்தராகவும் புத்திசாலியாகவும் இருக்கலாம்.  ஆனால் அவர் எனக்குத் தாத்தா அல்லவா?  கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! குழந்தையாகிய நான் எப்படி அறுபது வயது கிழவரைக் கலியாணம் செய்து கொள்வது?" (உதிர்ந்த மலர், ப.56) என்று இந்தப் பேச்சோடு நின்றுவிட்டு பின் சதக்அலியின் வஞ்சகக் செயலால் சுரைதாவின் காதலன் மாளும் போது அவ்விடத்திலேயே சுரைதாவும் தன் உயிரை மாய்த்துக்கொள்கிறாள்.  எந்தவொரு புரட்சியையும் தன்னந்தனியாகவும் அமைதியாகவுமே செயல்படுத்தவேண்டும் என்னும் காந்திய சிந்தனையில் ஆசிரியர் மூழ்கியவராகக் காணப்படுகிறார்.

10.  பெண்களைப் பற்றிய எண்ணம்

'ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே' என்ற கூற்றை மெய்ப்பிக்கிறார் வையாபுரியார்.  பேசாமடந்தையில் சுகுணா கோபுவை உருவாக்குகிறாள்.  சந்திரா பழி வாங்கியதில் சந்திரா மதுரை நகரையே எரித்து சாம்பலாக்குகிறாள்.  பெரும்பாலான பெண் மாந்தர்கள் அனைவரும் தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டை பேணிக்காப்பவர்களாகவே இருக்கிறார்கள்.  ஒரு சில மாந்தர்களின் வாயிலாக காலவோட்டத்தின் பின்னணியில் சமூகம் எவ்வாறு மாறுபாடு அடைந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டத் தவரவில்லை.  காலமாறுபாட்டிற்கு ஏற்றவாறு பெண்கள் சமுதாயத்தில் ஏற்பட்ட பாதிப்பையும் ஆங்காங்குச் சுட்டித் தமிழர்தம் பண்பாட்டை மறந்த நிலையையும் சுட்டிக்காட்டுகிறார்.

11.  மனித உள்ளுணர்வு

மனிதனுடைய உள்ளுணர்வு எப்போதும் இயங்கிக்கொண்டே இருப்பதில்லை.  ஏதாவதொன்றின் தூண்டுதலே அதன் இயக்கத்திற்கு அடிப்படைக் காரணமாக அமையும்.  தன்னால் ஆவது ஒன்றுமில்லை; எல்லாம் இறைவன் செயலே என்று விட்டுவிடாமல், முயற்சி செய்தால் எல்லாம் வல்ல இறைவனையும் காணலாம் என்னும் குறிக்கோள் கொண்டிருத்தல் ஒவ்வொருவரின் கடமையாகும்.

வையாபுரியார் கோபுவின் உள்ளுணர்வை சுகுணாவின் மூலம் தட்டி எழுப்புகிறார்.  அறிவுள்ள கோபு பேச்சாற்றல் அற்றிருப்பதைச் சுகுணா அறிந்து, கோபுவைத் தூண்டுகிறாள்.  பின்னர் கோபு 'பிரசங்கமாரி' என்னும் பட்டம் பெறும் அளவிற்குத் தன்னுடைய பேச்சாற்றலை வளர்த்துக்கொள்கிறான்.  மனிதனுடைய உள்ளுணர்வு வெளிப்படும் போதுதான் அவனுடைய உண்மையான ஆற்றலும் திறனும் வெளிப்படும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

12.  விருந்தோம்பல்

பன்நெடுங்காலமாகத் தமிழர்களின் தனிச்சிறப்புப் பெற்றது விருந்தோம்பல்.  இவ்விருந்தோம்பல் இலக்கியங்களிலும் முறையாகச் சொல்லப்பட்டு வருகிறது.  உற்றார் உறவினர் என்ற வேறுபாடின்றி விருந்தோம்புதல் என்பது தமிழருக்கு உரிய தனிச் சிறப்பம்சமாகும்.  பேராசிரியர் வையாபுரியார் தம்முடைய படைப்புகளில் விருந்தாம்பல் தன்மையை மிகத் தெளிவாக, பரவலாக எடுத்துச் சொல்லிச் செல்கிறார். 

மணிமுடி மாளிகையில் இராமநாதன் மற்றும் இரங்கநாயகிக்கு விலாசாட்சியும், விசாலாட்சிக்கு இராமநாதனும், இராமநாதன் இரங்கநாயகி மற்றும் சீனிவாசனுக்கு ஜலஜாவின் தந்தை கொடுக்கும் விருந்தும்;  ராஜியில் சௌந்தரத்தம்மா மற்றும் நாராயணசாமிக்கு இராமையர் கொடுக்கும் விருந்துகளும், நாராயணசாமி கோபாலையங்கார் குடும்பத்துக்குக் கொடுக்கும் விருந்தும்; நாராயணசாமிக்குக் கோபால அய்யங்கார், உறர்ட்டி, வரதராஜ அய்யங்கார் போன்றோர் கொடுக்கும் விருந்துகளும் விருந்தோம்புதல் முறையைச் சுட்டுகிறது.  இவற்றையெல்லாம் பார்க்கும் போது பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையவர்கள் விருந்தோம்புதலைப் பாராட்டி வந்துள்ளார் என்பது தெளிவாகிறது.

13.  இடச்சூழல்

தாம் பிறந்த, வளர்ந்த, வாழ்ந்த இடங்களை என்றும் எப்பொழுதும் யாரும் எச்சூழ்நிலையிலும் மறப்பதில்லை.  ஏதாவதொரு வகையில் தம்மோடு தொடர்புடைய ஊரின் பெயரையோ ஊரின் சுற்றுப்புறச் சூழலையோ நேரிடையாகவோ மறைமுகமாகவோ சுட்டிச்செல்வர்.  இம்மரபு சிறுகதை மற்றும் நாவலாசிரியர்களுக்குக் கைவந்த கலை.  இடத்திற்குத் தக்கவாறும் மாந்தருக்குத் தக்கவாறும் இவர்கள் மொழி அமைப்புகளையும் மாற்றி அமைத்துக்கொள்வர்.

வையாபுரிப் பிள்ளையவர்கள், தாம் பிறந்த திருநெல்வேலியையும் படித்த திருவனந்தபுரத்தையும் பணியாற்றிய சென்னையையும் பெரும்பாலான கதைகளின் நிகழிடமாகக் கொண்டுள்ளார்.  மணிமுடி மாளிகை, திருவனந்தபுரத்தில் தொடங்கி சென்னையில் முடிகிறது.  ராமுவின் சுயசரிதம், சென்னையில் தொடங்கி திருநெல்வேலியில் முடிகிறது.  ராஜி நாவல், பெரும்பான்மையான பகுதிகள் சென்னையில் நிகழ்வதாகவே அமைந்துள்ளது.  இவற்றையெல்லாம் பார்க்கும் போது வையாபுரியாருக்கும் இடப்பற்று இருப்பது தெளிவாகிறது.

14.  புராணத்தாக்கம்

"புராணங்களும் பழங்கதைகளும் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களின் படைப்பாற்றலுக்கு உணவாகவும் உள்ளார்ந்த தூண்டுதலாகவும் இருந்து வந்துள்ளது.  பழங்கதைகளைத் தம் காலத்திற்கும் நோக்கத்திற்கும் ஏற்பப் புதிய நோக்கில் கண்டு சில விளக்கங்களை நம் எழுத்தாளர்கள் தந்துள்ளனர்" என்று காணும் போது வையாபுரிப் பிள்ளையவர்கள் சமைத்த தழுவல் கதையான 'சந்திரா  பழி வாங்கிய'தில் நம்முடைய காப்பிய இலக்கியமான சிலம்பின் கதைக்கு ஒத்து இருப்பதைக் கண்டு வியக்கிறார்.  "தக்காணத்துப் பண்டை நாட்கள்" என்று பொருள்படும் ஓர் ஆங்கில நூலிலுள்ள கதையைத் தழுவி இக்கதை எழுதப்பட்டுள்ளது.  ஆங்கில நூலை எம். பிரேரே அவர்கள் 1868இல் எழுதி வெளியிட்டுள்ளார்.  இக்கதைக்கும் சிலப்பதிகாரக் கதைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை அறியத்தக்கன" என்கிறார்.  இவ்வொற்றுமை வேற்றுமைகளைச் சுட்டிச் செல்லுதல் சால்புடைத்து.

ஒற்றுமைகள்

1. கதைத்தலைவன் வணிகன் மகள் கோவிலன் (கோவலன்)
2. கோவிலன் நடனத்தைக் காணச் செல்லுகிறான்
3. மனைவியின் காற்சிலம்பை விற்பதற்காகக் கோவிலன்                                              மனைவியுடன் மதுரை மாநகருக்குச் செல்லுகிறான்
4. சிலம்பு விற்குமுன் தன் மனைவி சந்திராவைப் பால்காரக்                                          கிழவியிடம் ஒப்புவித்துச் செல்லுகிறான் கோவிலன்
5. கள்வன் பட்டத்தை மதுரை மாநகர்ச் சபையில் சூட்டப்பெற்று
கொலை செய்ய ஆணை இடுகிறார்கள்
6. கோவிலன் இறந்துபட்டான் என்ற செய்தி அறிந்த சந்திரா மதுரை
மாநகருக்கு விரைந்து நீதி கேட்டு கோபக் கனலில் முழு
மதுரையையும் தீக்கிரையாக்குகிறாள்.

வேற்றுமைகள்

1. கோவலன் கோவிலனாகவும், கண்ணகி சந்திராவாகவும், மாதவி
மௌலியாகவும் பெயர் மாற்றம் பெறுகின்றனர்
2. கோவிலன், சந்திரா மற்றும் மௌலியின் பிறப்பு வரலாறு
சொல்லப்படுகிறது
3. கோவிலன் தந்தையால் சந்திரா வளர்க்கப்படுகிறாள்
4. சூழ்நிலையின் காரணமாக மௌலியுடன் வாழ்கிறான் கோவிலன்
5. பொருளுக்காக கோவிலனைப் பிரிகிறாள் மௌலி
6. மௌலிக்குக் கடன் தீர்ப்பதற்கே தன்மனைவியின் காற்சிலம்பை
விற்கத் துணிகிறான் கோவிலன்
7. கணவன் மீது நம்பிக்கை இல்லாத சந்திரா தானும் மதுரைக்கு
வருவேன் என்று உடன் புறப்படுகிறாள்
8. தன் மகள் தான் சந்திரா என்பதை உணர்கிறாள் பாண்டிமாதேவி
9. சிலம்பின் வரலாற்றையும் உணர்கிறாள் பாண்டிமாதேவி
10. கயவர்களால் மாள்வதைத் தவிர்க்க கோவிலனே தற்கொலை செய்து
கொள்கிறான்
11. கோவிலன் இறந்துபட்டான் என்பதைப் பால்காரக்கிழவி தெரிந்து
வந்து சந்திராவுக்குச் சொல்லுகிறாள்
12. சந்திராவின் காலடிக்குக் கோவிலன் கையில் இருந்து பறித்து
பேழைக்குள் வைக்கப்பட்ட சிலம்பானது உருண்டு வருகிறது
13. கோவிலனுடைய உடலையும் தலையையும் ஊசியால் தைத்து
மகாதேவனிடம் உயிர் பெற்று வாழ்கிறாள் சந்திரா
14. மதுரை மாநகர் தீக்கிரையாக்கப்பட்ட போது அதனுடன் மௌலியும்
அவர் தாயும் தீக்கு இரையாகிறார்கள்.

இதுபோன்ற கருத்துகள் ஒத்தும் மாறுபட்டும் இருக்கக் காணலாம்.  காலவோட்டம் எவ்வளவு வேகமாக ஓடுகிறதோ அதற்குத் தக்கவாறு மனிதனுடைய உணர்வும் எண்ணங்களும் மாறுபடும்.  இக்கதை சிலப்பதிகாரக் கதைக்கருவைக் கொண்டிருந்தாலும் வளர்ந்து வரும் சமுதாய மாற்றத்தில் இக்கதைப் பின்னலும் அதன் பின்னணியும் மாறுபட்டு, சமுதாய வளர்ச்சிக்குத் தக்கவாறு அமைக்கப்பட்டுள்ளது எனலாம்.

15.  முடிவுரை

பேராசிரியர் வையாபுரிப்பிளிளை அவர்கள் பத்து கதைகள் எழுதப்பட்டிருந்தும் சமூகத்தையோ சமுதாயத்தையோ எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை.  பெரும்பாலான கதைகள் காதல் வேட்கை சார்புடையதாகவும் காதல் உணர்ச்சியைத் தூண்டக் கூடியதாகவும் அமைக்கப்பெற்றுள்ளன.  ஒரு அடிப்படை நிலை எழுத்தாளர் எழுதக்கூடிய சாதாரண கதைக்கருவைக் கொண்டே கதை பின்னப்பட்டுள்ளது.  தம் கதைகளில் கொள்கையுடையவர்களைக் காட்டத் தவரவில்லை.  என்றாலும், இறுதியில் அவர்களையும் வழுவாக்கிவிடுகிறார்.   இவற்றையெல்லாம் உற்று நோக்கும் போது வையாபுரியார் அவர்கள் கதாசிரியர் என்ற அளவில் பெரிய வெற்றி பெற்றார் என்று சொல்வதற்கில்லை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக