பாட்டுடைத் தலைவனின் பெருமை, கொடை, வீரம், ஊரின் சிறப்பு போன்றவற்றையும், அவன் நாட்டுக்குச் செல்லும் வழியும், பெற்ற பரிசுகளைப் பற்றியும் குறிப்பிடுவது ஆற்றுப்படை நூல்கள். ஒவ்வொரு காலத்திலும் முருகன் அடியார்கள் அவதரித்து முருக வழிபாட்டை முறைப்படுத்தி மக்களுக்கு வழிகாட்டி வந்துள்ளனர் என்பதற்கு முருகாற்றுப்படை இலக்கியங்கள் ஓர் சான்றாகும். சித்தாந்தம் இதழ் 1937இல் வெளியிட்டுள்ள முருகாற்றுப்படை நூல்கள் என்னும் தலைப்பில் அருள்முருகாற்றுப்படை, பொருள்முருகாற்றுப்படை, அணிமுருகாற்றுப்படை, வருமுருகாற்றுப்படை ஆகிய நான்கும்; தஞ்சை சரசுவதிமகால் நூலகம் 2001இல் வெளியிட்டுள்ள ஆற்றுப்படை நூல்கள் என்னும் தொகுப்பில் அணிமுருகாற்றுப்படை, அருள்முருகாற்றுப்படை, வேல்முருகாற்றுப்படை, வருமுருகாற்றுப்படை-1, வருமுருகாற்றுப்படை-2, இயல்முருகாற்றுப்படை, பொருண் முருகாற்றுப்படை, சேய்முருகாற்றுப்படை, ஒரு முருகாற்றுப்படை ஆகிய ஒன்பதும் வெளிவந்திருக்கின்றன. சித்தாந்தம் இதழில் (1937) பதிப்பிக்கப்பெறாத ஐந்து நூல்கள் ஆற்றுப்படை நூல்களில் (2001) கூடுதலாக இடம்பெற்றுள்ளன. அந்நூல்களைப் பற்றி இனிக் காண்போம்.
1. அணிமுருகாற்றுப்படை
இந்நூல் 77 பாடலடிகளைக் கொண்டுள்ளது. தொடக்கத்தில் கடவுள் வாழ்த்து வெண்பா ஒன்றுள்ளது. ‘அணி’ என்றால் அழகு. முருகனின் அழகைக் கூறுவதால் இது அணிமுருகாற்றுப்படை என்ற பெயர் பெற்றிருக்கின்றது. சித்தாந்தம் இதழ்ப் பதிப்பாக வெளிவந்த இந்நூல் அருள்முருகாற்றுப்படை என்னும் பெயர் பெற்றுள்ளது. இந்நூல் 69 பாடலடிகளாலானது. ஆற்றுப்படை நூல்களில் அமைந்துள்ள அணிமுருகாற்றுப்படை வெண்பாவும், சித்தாந்தம் இதழ்ப் பதிப்பில் அமைந்துள்ள அணிமுருகாற்றுப்படை வெண்பாவும் ஒன்றாக அமைந்திருக்க நூலின் பாடலகள் வெவ்வேறாக அமைந்துள்ளன.
முருகனின் தோற்றப் பொலிவு, பன்னிரு கரங்களில் ஏந்தியுள்ள செய்தி, ஆறு முகங்களின் சிறப்பு போன்றவை குறிப்பிடப்படுவதால் இந்நூலுக்கு அணிமுருகாற்றுப்படை என்ற பெயரே பொருத்தமாக அமைகிறது. அடியவர்களுக்கு வீட்டுப் பேற்றினையும், நன்மையினையும் தந்தருள்வாயாக என வேண்டுவதாக அமைந்துள்ளது. முருகனின் உருவ வருணனைகள் கூறப்பட்டுள்ளன. அடியவர்களுக்கு வாக்கு, பொருள், பயன், செல்வம் கொடுக்கின்ற செய்திகள் இடம்பெற்றுள்ளன. அதனால் எந்த இடத்திலும் முருகனின் அருளை வேண்டுவதாக அமையவில்லை. எனவே, அருள் முருகாற்றுப்படை என்பதைவிட அணிமுருகாற்றுப்படை என்பதே பொருந்தும். முருகனைத் தவிர வாழ்வில் எந்தவித பற்றுக்கோடும் இல்லை என்று அடியவர்கள் கூறுவதாகவே இந்நூலின் மையக் கருத்து அமைந்துள்ளது.
2. அருள் முருகாற்றுப்படை
இந்நூல் 36 பாடலடிகளைக் கொண்டுள்ளது. ‘அருள்’ என்றால் கருணை என்று பொருள். முருகனின் கருணையை வேண்டிப் பெறுவதால் அருள்முருகாற்றுப்படை என்ற பெயர் பெற்றிருக்கின்றது. ஆனால், சித்தாந்தம் இதழ்ப் பதிப்பாக வெளிவந்துள்ள ‘பொருள்முருகாற்றுப்படை’ என்ற பெயரில் 35 பாடலடிகளைக் கொண்டு இந்நூல் வெளிவந்துள்ளது. “அருளை வழங்கி இவ்வுலகைக் காப்பவனே! எனக்கு அருளை வழங்குவாயாக! என வேண்டுவதாக அமைவதால் அருள் முருகாற்றுப்படை என்று பெயர் பெற்றது போலும்” என்பர்.1 “ அருணா லுலகை அமர்ந்தினி தளிக்கும்”2 எனத் தொடங்கி “சாற்றுவுன் திருத்தாளைத் தந்தருள் எனக்கே”3 என நிறைவு பெறுவதாலும் இந்நூலுக்கு அருள்முருகாற்றுப்படை என்ற பெயரே பொருத்தமாக அமைகிறது.
3. வேல்முருகாற்றுப்படை
இந்நூல் 39 பாடலடிகளைக் கொண்டுள்ளது. சித்தாந்தம் இதழில் 42 பாடலடிகளைக் கொண்ட இந்நூல் அணிமுருகாற்றுப்படை என்று விளங்குகின்றது. வேல்முருகாற்றுப்படையின் கட்வுள் வாழ்த்துப் பாடலாக,
பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்றன் பாதங்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு - சுருங்காமல்
ஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல்4
என்னும் பாடல் அமைந்துள்ளது. இப்பாடல் திருமுருகாற்றுப்படையில் பாராணயப் பாடல் எட்டாவதாக அமைந்துள்ளதாகும். இப்பாடல் ஆற்றுப்படை நூல்களில் (2001) அணிமுருகாற்றுப்படையில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்துள்ளது. இது ஆசையால் நெஞ்சே அருமுருகாற்றுப் படையை என்ற வரியில் அணிமுருகாற்றுப்படை என்று இடம்பெறுவதால் அணிமுருகாற்றுப்படைக்கு இப்பாடலைக் கடவுள் வாழ்த்துப் பாடலாக வைத்து இருக்கலாம்.
4. வருமுருகாற்றுப்படை-1
இந்நூல் 94 பாடலடிகளைக் கொண்டுள்ளது. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலின் அகச்சான்றினைக் கொண்டு பார்க்கும்போது இதன் ஆசிரியர் அருணகிரிநாதர் என்று அறிந்துகொள்ள முடிகிறது என்கிறார் இந்நூல் பதிப்பாசிரியர்.5
கருமுரு காருங் குழல்வள்ளி கேள்வன் கருதலரைப்
பொருமுரு காதி பனைக்காட்டென மன்னன் போர்ந்து சொன்ன
அருமுரு காதிற் பவன்றங் கருணை சிரியுரைத்த
வருமுரு காற்றுப்படை கொண்டே செந்தில் மன்னவனே6
என்ற கடவுள் வாழ்த்துப் பாடலின் மூலம் அருணகிரிநாதர் மன்னனின் வேண்டுகோளுக்கு இயைந்து இந்நூலை இயற்றியுள்ளார் என்பதை அறியமுடிகிறது.
மருக வருக என்பார் வெருவாமுனம்
போற்றி போற்றியென் நின்னடி மலரிட்டு
ஏற்றி வார்முன் னிமைப்பினில் வருகவே7
என்ற மூன்றடிகளைக் கொண்டு பார்க்கும் போது முருகனை வருக! வருக! என்று வேண்டி அழைப்பதால் இந்நூலுக்கு வருமுருகாற்றுப்படை என்ற பெயர் பெற்றிருக்கின்றது.
சித்தாந்தம் இதழ்ப் பதிப்பாக வந்துள்ள வருமுருகாற்றுப்படையின் பாடலடிகள் 64. இந்நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உள்ளது. ஆற்றுப்படைத் தொகுதியின் கடவுள் வாழ்த்துப் பாடலும் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது. பாடலடிகளின் எண்ணிக்கையில் மட்டுமே மாற்றம் பெற்றுள்ளது. இரண்டு பதிப்புகளின் தொடக்கமும் முடிவும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளன. மேற்காணும் அணி முருகாற்றுப்படை, அருள் முருகாற்றுப்படை, வேல் முருகாற்றுப்படை, வருமுருகாற்றுப்படை ஆகிய நான்கு நூல்களைத் தவிர ஆற்றுப்படைத் தொகுதியில் மேலும் ஐந்து முருகாற்றுப்படை நூல்கள் இடம்பெற்றுள்ளன.
5. இயல் முருகாற்றுப்படை
இந்நூல் 29 பாடலடிகளைக் கொண்டுள்ளது. ‘இயல்’ என்றால் ‘தன்மை’ என்று பொருள். முருகனின் தன்மைகளைப் பற்றிக் கூறுவதால் இந்நூல் இப்பெயர் பெற்றுள்ளது.
6. ஒரு முருகாற்றுப்படை
இந்நூல் 41 பாடலடிகளைக் கொண்டுள்ளது. இந்நூலில் வருமுருகாற்றுப்படையின் பாடலடிகள் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் வருமுருகாற்றுப்படையின் பாடலடிகள் இடம்பெற்றுள்ளன. இந்நூல் பேய், பிசாசு, பில்லி, சூனியம் முதலானவை தன்னை அணுகாமல் காக்க வேண்டும் என்று முருகனிடம் வேண்டுவதாக அமைந்துள்ளது.
7. சேய்முருகாற்றுப்படை
இந்நூல் 44 பாடலடிகளைக் கொண்டுள்ளது. தன் தாயிடம் ஒரு சேய் உரிமையுடன் கேட்பது போன்று முருகனிடம் தன்னுடைய தீமைகளைத் துரத்தி, செல்வத்தையும், பெருமையையும் நல்க வேண்டும் என்று உரிமையுடன் வேண்டுவதாக இந்நூற் பொருள் அமைந்துள்ளது. அதனால் இதற்குச் சேய்முருகாற்றுப்படை என்று பெயர் பெற்று இருக்கலாம்.
8. வருமுருகாற்றுப்படை-2
இந்நூல் 85 பாடலடிகளைக் கொண்டுள்ளது. இதில் மயிலை வாகனமாகக் கொண்ட சரவணணே! வருவாயாக என்று கூறப்படுகின்றது.
வருக முருகா வருக வருக8
முருகா சரவணா வா வா வா9
வா வா சகல தோஷங் களையும்
சகலபா வங்களையும் சகலவியாதி களையும்10
போன்ற பாடலடிகளைக் கொண்டு பார்க்கும்போது இதற்கு வருமுருகாற்றுப்படை என்ற பெயர் பொருந்துவதாக அமைகின்றது.
9. பொருமுருகாற்றுப்படை
இந்நூல் 54 பாடலடிகளைக் கொண்டுள்ளது. ‘பொருதல்’ என்பதற்குற் சண்டையிடுதல் என்று பொருள். முருகன் தீயவர்களுடன் போரிடுதல் பற்றிய செய்திகள் இதில் இடம்பெறுவதால் இதற்குப் பொருமுருகாற்றுப்படை என்ற பெயர் பொருத்தமாக அமைந்துள்ளது.
அசுர சங்காரா அகோர சங்காரா11
மந்திர சங்காரா சகல தெய்வப்
பிரமராட் சங்காரா பிதேத சங்காரா
பிசாசு சங்காரா சத்துரு சங்காரா12
என்ற வரிகளால் எதிரிகளைச் சண்டையிட்டு அழித்தவன் என்பது உணர்த்தப்படுவதால் இந்நூலுக்கு இப்பெயர் பெற்றது எனலாம். இதுவரை முருகாற்றுப்படை நூல்களின் அமைப்புகள் பற்றிக் கூறப்பட்டன. இனி அந்நூல்களில் இடம்பெறும் படைக்கலங்கள் பற்றிக் காண்போம்.
முருகனின் படைக்கலங்கள்
ஆதி மனிதன் தன்னை விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்வதற்காகக் கல்லாலும், மரத்தாலும் கருவிகளை உருவாக்கிக் கொண்டான். அவை காலத்தின் மாற்றத்திற்கும் மனிதனின் தேவைக்கும் ஏற்றாற்போல் உருவாக்கப்பட்டன. மனிதர்கள் மட்டுமன்றி ஒவ்வொரு தெய்வங்களுக்கும் தனித்தனியே கருவிகள் படைக்கப்பெற்றன. அவ்வகையில் காணும்போது முருகப்பெருமானின் படைக்கலங்கள் பற்றி அற இலக்கியங்கள் பலவற்றில் பேசப்படுகின்றன. முருகனது திருக்கரத்தில் உள்ள ஆயுதங்கள் தண்டம், சக்தி, வச்சிரம், அட்சமாலை, கட்கம், கேடகம், வேல், பாணம், சக்கரம், கதை, பாசம், வில், அங்குசம், கலப்பை, மணி, குக்குடம், கமண்டலம், தோமரம், சங்கம், வல்லி, மலரம்பு, கரும்புவில், தீயகல், கருவம், கவஸ்திகம், பரசு, தீக்கடைக்கோல், கோழிக்கொடி போன்ற ஆயுதங்களைத் தன் கரத்தில் கொண்டு விளங்குபவன் ஈருகப்பெருமான். திருத்தணிகைப் புராணத்திலும், அருணகிரியின் திருப்புகழிலும், நக்கீரரின் திருமுருகாற்றுப் படையிலும், கந்தர் கலிவெண்பாவிலும், கச்சியப்பரின் கந்த புராணத்திலும் முருகனின் படைக்கலங்கள் பேசப்படுகின்றன. முருகாற்றுப்படையில் குறிப்பிடப்படும் முருகனின் படைக்கலங்களை,
ஓங்கிய திருக்கையில் வாங்கிய வேலும்
ஆவலம் கொண்டு சேவலங் கொடியும்
அங்குச மயிலோர் தங்கிய சூலமும்
வீசுவில் தண்டும் பாசக் கரமும்
வச்சிர மழுவாள் மெச்சிய கடகம்
துலங்கிய நேரத்தில் நிலங்களோ டிலங்க
ஈராறு உறுப்பு ஈராறு கையும்13
எனும் பாடலடிகள் உணர்த்துகின்றன. வேல், சேவல்கொடி, அங்குசம், சூலம், வில், தண்டபம், பாசக்கரம், மழு, வாள், சடகம் ஆகியவற்றை உலகம் சிறக்கும் படியாக முருகன் தன்னுடைய கைகளில் ஏந்தி அருள் பாலிக்கின்றான் என்று இப்பாடல் வரிகளின் மூலம் உணரமுடிகிறது.
பன்னிரு கரத்தில் பதிந்த ஆயுதமும்
வேல்வாள் சக்கரம், வெயிலோளி வச்சிரம்
பால்நிறக் குக்குடம் பரிசைபொற் தண்டம்
வரதம் அபயம் இருதலைச் சூலம்
சரமொடு சாபம் தன்கரத் தேந்தி14
என்ற பாடல் வரிகளால் பன்னிரண்டு கரத்திலும் வச்சிராயுதம், வெண்மை நிறமுடைய கோழிக்கொடியும், பொன்னாலாகிய வளைதடியும், அடியார்க்கு வரமளித்துக் காத்து அருள்கின்ற கரத்தையும், அடைக்கலம் என்று வருபவர்களுக்கு அரவணைக்கும் அபையக்கரம் கொண்டு விளங்குபவன் என்றும், அவற்றினை அன்றி இருபிளவுபட்ட சூலமும், அம்பும், சரமும், சர்ப்பமும் கைகளில் ஏந்தியுள்ளவன் முருகப்பெருமான் என்றும் உணர்த்துகின்றது.
வெற்றிவேல் கரத்தின் வீறுசக் சீராயுதன்15
எனும் சேய்முருகாற்றுப்படையின் வரியில் வெற்றி பொருந்திய வேலேந்திய கரத்தினை உடையவன் முருகன் என்றும், அவன் சக்கரம் ஏந்திய கையையுடைய திருமாலுக்கு ஒப்பானவன் என்றும் அறிவிக்கின்றது.
முடிவுரை
இம்முருகாற்றுப்படை நூல்களில் முருகனின் தோற்றப் பொலிவில் முருகனின் மேனிநிறம், ஆறுமுகங்களின் சிறப்பு, தோள்கள் மற்றும் கரங்களின் சிறப்புப் பற்றியும், அணிகலன்களில் குண்டலம், குழை, ஆரம், முப்புரிநூல், செங்காந்தள் மலர்மாலை, கச்சை, வேல், கோழிக்கொடி, தண்டை, மணி, மணிமகுடம், தாமரை, கிண்கிணி, நவமணி, ஒட்டியாணம், சிலம்பு, தண்டலை பற்றியும் எடுத்துரைக்கின்றன. மேலும் இந்நூல்களில் முருகப்பெருமான் தீவினைகள் அழித்து உலகாண்ட செய்திகளும், முருகப்பெருமானின் பெயர்களும் திருமணங்களும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இந்நூல்களை எல்லாம் ஆய்வு செய்யின் முருகின் பெருமை இன்னும் மெருகேறும் என்பதில் ஐயமில்லை.
அடிக்குறிப்புகள்
1. ஆற்றுப்படைத் தொகுதி, ப.10.
2. அருள்முருகாற்றுப்படை, வரி.1.
3. மேலது, வரி.36.
4. சித்தாந்தம் இதழ், ஜனவரி 1931, ப.75.
5. ஆற்றுப்படைத் தொகுதி, ப.2.
6. மேலது, ப.24.
7. வருமுருகாற்றுப்படை-2, வரிகள்.92-94.
8. மேலது, வரி.51.
9. மேலது, வரி.61.
10. மேலது, வரிகள்.79-80.
11. பொருமுருகாற்றுப்படை, வரி.26.
12. மேலது, வரிகள்.31-33.
13. அணிமுருகாற்றுப்படை, வரிகள்.42-48.
14. வேல்முருகாற்றுப்படை, வரிகள்.8-13.
15. சேய்முருகாற்றுப்படை, வரி.11.
ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்
1. ஆற்றுப்படைத் தொகுதி, சத்தியபாமா காமேஸ்வரன் (பதி.), சரஸ்வதிமகால் நூலக வெளியீடு, தஞ்சாவூர், 2001.
2. முருகாற்றுப்படை நூல்கள், துரைசாமி முதலியார் (பதி.), சித்தாந்தம்-மாத இதழ், தொகுதி 10, பகுதி 2, 1937.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக