ஞாயிறு, 4 நவம்பர், 2018

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

    நூலாசிரியரால் ஓலையிலோ காகிதத்திலோ தம்மாலோ பிறராலோ எழுதப்பெற்றதைச் சுவடி என்கின்றோம்.  இச்சுவடி நாளடைவில் பல படிநிலைகளில் ஓலை எழுதுவோராலும் எழுதுவிப்போராலும் பல்கிப் பெருகிற்று எனலாம்.  மூலத்தை மட்டுமோ அல்லது மூலத்துடன் அடிக்குறிப்பு, உரை, கருத்துரை, குறிப்புரை, பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை போன்றவற்றில் ஏதாவதொன்றினையோ ஒன்றிற்கும் மேற்பட்டவைகளைப் பெற்றோ பதிப்பிக்கப்பெறுவதே 'சுவடிப்பதிப்பு' எனப்பெறும்.  அதாவது, சுவடிகளை (ஓலை, காகிதம்) அடிப்படையாகக் கொண்டு பதிப்பிக்கப் பெறுவன எல்லாம் சுவடிப்பதிப்பு எனலாம்.  ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளிவருவதைக் 'கால இதழ்' (Periodical) அல்லது 'பருவ இதழ்' (Magazine) எனலாம். 

   தமிழிலக்கிய இலக்கண நூல்களில் தேர்ச்சிபெற்ற தமிழறிஞர்கள் நாடெங்கும் பரவியிருக்கின்றனர்.  அவர்கள் கற்ற, கேட்ட, அறிந்த நூல்கள் அவர்களவிலேயே நின்றுவிடுகின்றன.  ஒருவருக்கொருவர் தொடர்பின்றிப் போவதால் அவரவர் ஆய்ந்துணர்ந்த அரும்பொருள்கள் மற்றவர்க்கு எட்டாமல் போக நேரிடுகின்றது.  இக்குறையினைப் பருவ இதழ்கள் காலங்காலமாகப் போக்கி வருகின்றன.  இவர்கள் தங்களிடமுள்ள சுவடிகளைப் பிறருக்குக் கொடுத்தோ, தாமாகப் பிரதிசெய்தோ பருவ இதழ்களில் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.  தனிநூலாக்கும் தன்மையற்ற சுவடிகளைத் தமிழுலகிற்கு அறிமுகப்படுத்திவிட வேண்டும் என்ற உயரிய நோக்கில் பெரும்பாலான பருவ இதழ்ப் பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. 

இதழியலின் தந்தை

"ரோம் நாட்டை ஆண்ட ஜீலியஸ் சீசர் கி.மு.60இல் அரண்மனைச் செய்திகளை 'ஆக்டா டைர்னா' (Acta Diurna - அன்றாட நடவடிக்கை)  என்ற பெயரில் எழுதி பொது இடங்களில் வைத்தார்.  அவர் போரிட்டுக் கொண்டிருந்த பொழுது, போர்ச் செய்திகளைத் தலைநகருக்கு அனுப்பிவைத்தார். இதனால் சீசரை 'இதழியலின் தந்தை' என்று அழைக்கின்றனர்.  ஆனால், சிலர் சீசருக்கு முன்பே கி.மு.106இல் சிசரோ பிறப்பு-இறப்பு விவரங்களை எழுதித் தனது அரண்மனைக்கு முன்னால் பலரும் பார்க்க அறிவித்தாரென்றும், ஆதலால் அவரையே இதழியலின் முன்னோடியாகக் கருத வேண்டுமென்றும்"(இதழியல் கலை, மேற்கோள், பக்.40-41) குறிப்பிடுவர்.  கி.பி.3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அசோகர் கல்வெட்டுக்களில் தம் ஆணைகளையும் அறிவுரைகளையும், புத்தரின் கொள்கைகளையும் பொறித்திருக்கின்றார்.  எனவே இவற்றினைப் பார்க்கும் போது "இந்திய மாமன்னர் அசோகர் தான் இதழியலின் தந்தை" (இதழியல்,ப.x) என்று பேராசிரியர் சூ. இன்னாசி அவர்கள் குறிப்பிடுகின்றார்.  இவர்களின் கூற்றுகளைப் பார்க்கும் போது உலக இதழியலின் தந்தையாக சிசரோவையும், இந்திய இதழியலின் தந்தையாக மாமன்னர் அசோகரையும் குறிப்பிடலாம்.

இதழியலின் தோற்றுவாய்  

கி.பி.105இல் மல்பெரி மரப்பட்டையிலிருந்து சாய்லன் என்ற சீனாக்காரர் முதன் முதலாக காகிதம் செய்வதைக் கண்டுபிடித்தார்.  உலக மக்கள் காகிதம் செய்யும் கலையைக் கற்றுச் சென்றனர்.  கி.பி.1041இல் பிசெங் என்ற சீனாக்காரர் களிமண்ணில் எழுத்துக்களைச் செய்து சுட்டு, தகடு சுத்தி, கடினப்படுத்தி, அச்சிடும் முறையைக் கண்டுபிடித்தார்.  அதன் பின்பு அச்சுக் கலையில் ஒரு புரட்சி ஏற்பட்டது எனலாம்.  கி.பி.1450இல் ஜான் கூடன்பர்க் என்ற ஜெர்மானியர் முதன் முதலில் அச்சுப்பொறியினைக் கண்டுபிடித்தார். காகிதமும் அச்சுப்பொறியும் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு தாள்களின் வழியேயான இதழியலின் வளர்ச்சி தொடங்குகின்றது எனலாம்.  இந்தியாவில் கி.பி.1556இல் அச்சுக்கலையின் தோற்றம் பெற்றிருந்தாலும் இதழியலின் தொடக்கம் சற்று தாமதமாகத்தான் தோன்றியிருக்கின்றது.  ஏனெனில் இதற்கு ஆங்கிலேயரின் அடக்குமுறை ஆட்சியும் தங்கள் மதத்தை மட்டும் பரப்பவேண்டும் என்ற அவாவும் மேலோங்கி நின்றதுமே இதற்குக் காரணம் எனலாம்.

கி.பி.1768இல் வில்லியம் போல்ட்ஸ் என்னும் ஆங்கிலேயர் செய்தி இதழ் ஒன்றைத் தொடங்குவதற்கு விருப்பம் கொண்டு, கல்கத்தா நகரின் ஓரிடத்தில் "பொது மக்களுக்குக் கல்கத்தா நகரின் செய்திகள் இல்லாதது வணிகத்திற்கும் சமுதாயத்திற்கும் பெரிய இழப்பாகும்.  ஒவ்வொரு இந்தியனுக்கும் அது இன்றியமையாதது.  அச்சுத்தொழில் அறிந்தவர்கள், அச்சகத்தை நடத்துபவர்கள் ஆகியோருக்கு நான் ஊக்கமளிக்கத் தயாராக இருக்கிறேன்" (தமிழ் இதழியல், ப.25) என்று தட்டி ஒன்றில் எழுதி வைத்தாராம்.  இதனைக் கண்ட ஆங்கில அரசு வில்லியம் போல்ட்ஸ்சை நாடு கடத்தியிருக்கின்றது. கி.பி.1780வரை இந்தியாவிலிருந்த ஐரோப்பியர்கள் இங்கிலாந்திலிருந்து கப்பல் மூலம் வந்துசேரும் இதழ்களையே நம்பியிருந்தனர்.  இவ் இதழ்கள் இங்கிலாந்தில் வெளியாகி ஒன்பது முதல் பன்னிரண்டு மாத இடைவெளிக்குப் பிறகே இந்தியா வர நேர்ந்தது.  இக்குறையினைப் போக்கும் விதத்தில் ஜேம்ஸ் அகஸ்டஸ் உறிக்கி என்பவர் கி.பி.1780இல் கல்கத்தாவில் 'பெங்கால் கெசட்டி' என்னும் மாத இதழைத் தொடங்கினார்.  இவ்விதழ் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.

தொடக்க கால இதழின் போக்கு

பெங்கால் கெசட்டி ஆங்கில அரசு அதிகாரிகளின் முறையற்ற செய்திகளைக் கண்டித்து எழுதியது.  குறிப்பாக, இந்தியத் தலைமை ஆளுநர் வாரன்கேஸ்டிங், இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி எலிஜா இம்பே ஆகியோரைத் தாக்கி எழுதியது.  இதன் காரணமாக இப்பத்திரிகை ஆட்சியாளரின் எதிர்ப்புக்கு உள்ளானது.  இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பெங்கால் கெசட்டில் வெளிவந்த செய்திகளை ஆதாரமாகக் கொண்டு அவ்வரசைச் சாடினர்.  இதனால் ஜேம்ஸ் அகஸ்டஸ் உறிக்கிக்கு இந்தியாவில் இருந்த ஆங்கில அரசு அதிகாரிகள் பல தொல்லைகளைக் கொடுக்கத் தொடங்கினர்.  இந்தியாவில் முதல் இதழ் ஆசிரியரே வழக்கு மன்றம், அடிதடி, அச்சுறுத்தல், சிறைச்சாலை, தண்டம், நாடு கடத்தல் ஆகிய கொடுமைகளை எல்லாம் சந்திக்க நேர்ந்தது.

ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டஸ் உறிக்கி அவர்கள் அச்சகம் நடத்துவதற்காகவும் இதழ் வெளியிடுவதற்காகவும் காப்பீட்டுத் தொகையாக ரூபாய் எட்டாயிரத்தை ஆங்கில அரசுக்குச் செலுத்தியிருக்கின்றார்.  ஆங்கில அரசு அதிகாரிகளைப் பழித்து எழுதியமைக்காக ரூ.500 அபராதமும் நான்கு மாத சிறைத் தண்டனையும் பெற்றிருக்கின்றார்.  சிறைக்குச் சென்றபோதும் உறிக்கி அவர்கள் பெங்கால் கெசட்டைத் தம் போக்கிலேயே வெளியிட்டார்.  இதனால் மீண்டும் அவருக்கு ஆங்கில அரசு ரூ.5000 அபராதத் தொகை விதித்தது.  அப்படியும் அவர் தம் போக்கிலிருந்து மாறாததால் கி.பி.1782இல் பெங்கால் கெசட் இதழின் அச்சுப்பொறிகளும் எழுத்துக்களும் பறிமுதல் செய்யப்பெற்று அச்சகம் மூடப்பெற்று முத்திரை வைக்கப்பெற்றிருக்கின்றது.

உறிக்கியின் இதழ் ஆங்கில அரசு அதிகாரிகளின் குறைகளையே சுட்டிக் காட்டியது என்று குற்றம் சாட்டப்பெற்றது.  என்றாலும், அவருக்குப் பின் தொடங்கிய ஆங்கிலேயர்களின் இதழ்களும் உறிக்கியின் போக்கினையே கடைபிடித்தன.  கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவாகத்தினர் மற்றும் அதிகாரிகளின் உல்லாச வாழ்க்கையினையும், அவர்களுடைய ஒரு சார்பு போக்கினையும், தங்களைச் சார்ந்து இல்லாதவர்கள் மீது அவர்கள் விடுத்த கொடுமைக் கணைகளையும் வெறுத்த கம்பெனிப் பணியாளர்கள் தங்கள் மனக்குமுறலை வெளிக்காட்ட இதழ்களைப் பயன்படுத்திக் கொண்டனர். என்றாலும் உறிக்கிக்கு ஏற்பட்ட கொடுமை தங்களுக்கு நேரா வண்ணம் பார்த்துக்கொண்டனர்.

இதழ்களின் போக்கும் சட்டங்களும்

கி.பி.1812இல் கிறித்துவத் தமிழரால் சென்னையில் 'மாசத்தினச் சரிதை' என்னும் இதழ் நடத்தப்பெற்றிருக்கின்றது.  ஒரு மாதத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கால முறைப்படி செய்து மாத முடிவில் தினசரிச் செய்தியாக இவ்விதழ் வெளியிட்டது.  இவ்விதழ் வெளியிட்ட அச்சுக்கூடத்தின் மூலம்தான் கி.பி.1812இல் 'திருக்குறள் மூலமும் நாலடியார் மூலமும்' என்னும் முதல் சுவடிப்பதிப்பு நூல் வெளிவந்திருக்கின்றது.  இவ்விதழின் இதழ்ப் பகுதிகள் எதுவும் இன்று கிடைக்கவில்லை என்றாலும் இதழ் இருந்தமைக்கான சான்று நமக்குக் கிடைத்திருக்கின்றது எனலாம்.

இந்நிலையில் கி.பி.1818இல் வில்லியம் பட்டர்வொர்த் பெய்லியின் 'தணிக்கைச் சட்டம்' நடைமுறைக்கு வந்தது.  "அரசாங்கத்தில் நடைமுறைச் செயல்களுக்குத் தடையாகும் வகையில் வெளியிடப்படும் செய்திகளைத் தடுப்பதும், பொதுமக்களிடையில் அரசாங்கத்தைப் பற்றிய தவறான கருத்துகளைப் பரவச் செய்யும் வகையில் வெளியிடப்படும் செய்திப் பகுதிகளைத் தடுப்பதும், சமய உணர்வு காரணமாக எவர்க்குள்ளும் வேறுபாடுகள் வளர்ந்துவிடக் கூடாது என்று கருத்தாகப் பார்த்துக் கொள்வதும், இந்திய மக்களின் உணர்வுகள் பாதிக்காத வகையில் இயங்கச் செய்வதும், எங்கும் அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதுமே தணிக்கை முறையின் கடமைகளாக இருந்தன.  இம்முறையில் இதழாசிரியர்கள் பொதுவான தங்கள் பகுதிவாழ் மக்களின் பிரச்சனைகள் பற்றி விவாதிப்பதற்கும் சிந்திப்பதற்கும் தடைசெய்யப்படவில்லை" (மேற்கோள், இந்திய இதழ்கள், ப.162).

இச்சட்டத்தை முழுமையாக உணர்ந்து கொண்ட இந்தியர்கள் சமுதாய சீர்திருத்தம், சமய மறுமலர்ச்சி போன்ற சிந்தனையில் ஈடுபட்டு எழுதலாயினர். இதனால் ஆங்கிலேயர் மனங்கோணாததைக் கண்டவர்கள் ஆங்கிலேயரைத் தாக்காமல் தங்கள் மதத்தைப் பற்றியும் சமயத்தைப் பற்றியும் பரப்புவதற்கு இதழ்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.   சில இதழ்கள் ஆங்கிலேயரை நாட்டைவிட்டு வெளியேற்றிவிட வேண்டும் என்ற ஆதங்கத்தோடும் வெளிவந்திருக்கின்றன.  இக்கால கட்டத்தில் வெளிவந்த இதழ்களின் நோக்கங்களைக் கண்ட ஆங்கில அரசு கி.பி.1857ஆம் ஆண்டு 'வாய்ப்பூட்டுச் சட்டம்' ஒன்றைக் கொண்டுவந்தது.  

இச்சட்டத்தின்படி, "நேராகவோ, மறைபொருளாகவோ, குறிப்பாகவோ, உட்கருத்தாலோ வேறு எந்த விதத்தாலோ சில செயல்களை எழுப்பக்கூடிய எதையும் வெளியிடலாகாது" என்பதால், இந்தியர்கள் எவரும் இதழ்களை உரிமையோடு நடத்தமுடியாத சூழ்நிலை உருவாகிவிட்டது.  ஆகவே, இந்தியர்களால் அரசியல் இதழ்களை நடத்தமுடியவில்லை.  இருப்பினும், சிலர் இலக்கியம்-சமயம்-சமூகம் ஆகிய கெடுபிடியற்ற துறைகளில் தங்கள் எண்ணங்களைச் செலுத்தி இதழ்களை நடத்தத் தொடங்கினர்.  

கி.பி.1878ஆம் ஆண்டு 'இந்தியமொழி இதழ்ச்சட்டம்' (The Vernacular Press Act)  ஒன்றை லிட்டன்பிரபு அவர்கள் கொண்டுவந்துள்ளார். இச்சட்டத்தின்படி, இதழ்கள் குறிப்பிட்ட தொகையைப் பிணையாகக் (Deposit) கட்டவேண்டும்.  அரசாங்கத்தின் மீது வெறுப்பு உண்டாகுமாறு எழுதக்கூடாது. இனம், மதம், சாதி இவற்றின் அடிப்படையில் கலவரத்தைத் தூண்டும் முறையில் செய்திகள் வெளியிடக்கூடாது.  நீதிபதி அல்லது காவல்துறை அதிகாரியிடம் உறுதிமொழிப் பத்திரம் எழுதிக் கொடுக்கவேண்டும்.  இவ்விருவருக்கும் இதழ்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரம் உண்டு.  இந்நடவடிக்கைகளை எதிர்த்து வழக்குமன்றம் போகமுடியாது.  இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு முதலில் எச்சரிக்கையும், மீண்டும் தொடர்ந்தால் பிணையத்தொகை இழப்பும், அதன் பின்னரும் தொடர்ந்தால் அபராதத் தொகையையோ அல்லது சிறைத்தண்டனையோ விதிக்கப்படும் என்ற கடுமையான சட்டத்தினால் மக்கள் அரசியல் இதழ் நடத்துவதை விட்டுவிட்டு அரசாங்க எதிர்ப்பு இல்லாத துறைகளில் இதழ்களை வெளியிடத் தலைப்பட்டனர்.  இந்நிலையில், 1878இல் மகாபாரத வசனம், 1878ல்  பாகவத புராண வசனம், 1878இல் குருபரம்பரா பிரபாவம், 1880இல்  மார்க்கண்டேய புராணம்,  1880இல்  திருப்பாவை, 1880இல்  முதலாயிர வியாக்கியானம், 1881இல்  பரதத்துவப் பிரகாசிகை, 1881 இல்  தேவாரப் பதிகத் திருமுறைகள், 1881 இல்  பெரிய திருமொழி, 1882 இல்  இயல்பா-முதல் திருவந்தாதி, 1882 இல்  நாலாயிரதிவ்விய பிரபந்தம், 1882 இல்  முதலாயிரம், 1883 இல்  பகவத் விஷயம், 1883 இல்  நாச்சியார் திருமொழி, 1883 இல்  திருவிளையாடற் புராணம், 1883 இல்  பெரிய புராணம் உரையுடன், 1884 இல்  கூர்ம புராணம், 1884 இல்  பெரிய புராணம் உரையுடனும் விளக்கங்களுடனும் போன்ற நூலிதழ்களை வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்தியிருக்கின்றனர் எனலாம்.  இதனால்  நூல்களை வெளியிட்ட பெருமையையும்  இதழ்கள் அடைந்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல.

தமிழ்ப் பருவ இதழ்கள்

தமிழ்மொழியில் கி.பி.1554இல் 'கார்த்தில்யா' என்னும் அச்சுநூல் உருவாகி ஏறக்குறைய 250 ஆண்டுகள் கழிந்த பின்னரே இதழ்கள் தோன்றத் தொடங்கியுள்ளன.  கி.பி.1802இல் 'சிலோன் கெசட்' என்னும் மும்மொழி (தமிழ், சிங்களம், ஆங்கிலம்) இதழில் 'அரசாங்க வர்த்தமானி' என்ற தனிப்பெயருடன் தமிழ் இடம்பெற்றுள்ளது.  இவ்விதழின் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு கட்டுரை அல்லது செய்தியும் மூன்று மொழிகளிலும் வெளியாகும்.  மூன்று மொழிகளில் ஏதாவது ஒன்றைத் தெரிந்தவர்கள் அந்தப் பத்திரிகையைப் படிக்கலாம்.

ஜான்மர்டாக்(கி.பி.1819-1904) அவர்கள் தொகுத்த 'தமிழ் அச்சு நூல்களின் பட்டியல்' என்னும் நூலை அவரது காலத்திலேயே 1865ஆம் ஆண்டு அச்சிட்டு வெளிப்படுத்தினார்.  இந்நூலில், 'பருவ இதழ்கள் - செய்தித்தாள்கள்' என்ற பகுதியில் அக்காலத்தில் வெளிவந்த 12 இதழ்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.  இப்பன்னிரண்டு இதழ்களில் பத்து இதழ்கள் கிறித்துவச் சமயத்தைச் சார்ந்ததாகவும் மற்ற இரண்டு இதழ்கள் பிரம்மஞான இயக்கத்தைச் சார்ந்ததாகவும் இருக்கின்றன.  இப்பட்டியல் முழுமையானதாக இருக்க முடியாது என்கிறார் அ.மா. சாமி.  "மர்டாக் தமிழில் அதிகப் புலமை இல்லாதவர்.  (இலங்கையில் கூட சிங்கள இதழ்தான் நடத்தினார்) இவரது தமிழறிவு மிகவும் குறைவு என்பது நூலின் முன்னுரையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மற்ற இதழ்களைப் படிக்க அவருக்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்காது.  கிறித்துவக் கல்விக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் கிறித்துவ இதழ்கள் அனைத்தும் மர்டாக்கின் பார்வைக்கு வந்திருக்கக் கூடும்.  மற்ற இதழ்களை அவர் பார்த்ததாகவே தெரியவில்லை. நமக்குத் தெரிந்து 1831 - 1865 ஆண்டுகளுக்கு இடையே இருபதுக்கு மேற்பட்ட இதழ்கள் (கிறித்துவ சமயத்தைச் சாராதவை) வெளிவந்தும், அவை பற்றி மர்டாக் குறிப்பிடாததற்கு இதுதான் காரணமாக இருக்கும்" (19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள், ப.26) என்னும் இவரின் கூற்று தமிழில் வெளிவந்த இவரது இதழ்களின் பட்டியலைக் காணும்போது உண்மையென்றே தோன்றுகிறது.

மர்டாக் பட்டியலில் தமிழ்மொழியில் முதன்முதலாக வெளிவந்த இதழாகத் 'தமிழ் மேகசி'னைக் குறிப்பிடுகிறார்.  இவ்விதழ் சென்னைக் கிறித்துவக் கல்விக் கழகத்தின் சார்பில் 1831ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.  ஜான்மர்டாக் குறிப்பிடும் பட்டியலின்படி 'தமிழ் மேகசின்' (1831)ம், அ.மா. சாமி குறிப்பிடும் பட்டியலின்படி 'மாசத்தினச்சரிதை' (1812)ம் தமிழ்மொழியில் தமிழ் நாட்டில் வெளிவந்த முதல் இதழ் என்கிறார்கள்.  இதில் எது சரியானது?  இதழ்களின் பட்டியலில் 'தமிழ் மேகசின்' இடம்பெற்றிருக்கின்றது.  ஆனால் 'மாசத்தினச்சரிதை' இதழ்களின் பட்டியலில் இடம்பெறவில்லை.  மாறாக, 'மாசத்தினச் சரிதையின் அச்சுக்கூடம்' என்னும் அச்சுக்கூடத்தின் பெயரைக் கொண்டு 'மாசத்தினச் சரிதை' இதழைக் குறிப்பிடுகின்றார் அ.மா.சாமி.

உலகப் பொது மறையாம் திருக்குறள் முதல் முதலில் அச்சேறியது கி.பி.1812இல் தான்.  "திருநெல்வேலி அம்பலவாணக் கவிராயர் பிழை தீர்த்துச் சென்னைப் பட்டினத்திற்கு அனுப்பிவிச்சு அவ்விடத்திலிருந்து திருவாவடுதுறை ஆதீனவித்துவான் அம்பலவாணத் தம்பிரான், சீர்காழி வடுகநாத பண்டாரம் அவர்கள் மறுபடி கண்ணோட்டத்துடன் ஆராயப்பட்டு அச்சிற் பதிப்பித்த காயிதப் பொத்தகம்" என்று அச்சேற்றியவர்களைப் பற்றி அந்நூலிலேயே குறிப்புக் காணப்படுகிறது.  இந்நூலை யார் - எங்கு - எப்பொழுது - எந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டது என்பதை இந்நூலின் முகப்பு அட்டையில் இடம்பெற்றிருக்கும் குறிப்புத் தெரிவிக்கின்றது.  "இது பொத்தகம் கலியுகாப்தம் 4900க்கு ஆங்கீரச வருடம் தொண்டை மண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சை நகர மலையப்பப்பிள்ளை குமாரன் ஞானப்பிரகாசனால் அச்சில் பதிக்கப்பட்டது.  மாசத்தினச்சரிதையின் அச்சுக்கூடம். இ.ஆண்டு 1812" என்னும் குறிப்பால் மாசத்தினச்சரிதை என்னும் அச்சுக்கூடத்தில் இருந்து 1812ஆம் வருடம் தஞ்சைநகர மலையப்பப்பிள்ளை குமாரன் ஞானப்பிரகாசன் அவர்களால் சென்னையிலிருந்து 'திருக்குறள் - மூலபாடம்' வெளிவந்ததாக அறிய முடிகிறது.

இதழ்கள் தோன்றிய காலந்தொட்டு இதழ்களின் பெயரில் அச்சகங்கள் நிறுவப்பட்டு வந்துள்ளன என்பது வரலாற்று உண்மை.  அதாவது அத்தினீயம் அண்டு டெய்லி நியூஸ் பிரஸ், இந்து பிரஸ், கல்வி விளக்க அச்சுக்கூடம், சுதேசமித்திரன் அச்சுக்கூடம், ஞானரத்னாகரம் அச்சுக்கூடம், ஞானபானு அச்சுக்கூடம், திராவிட வர்த்தமானி அச்சுக்கூடம், வித்தியா ரத்னாகரம் பிரஸ், மெய்ஞ்ஞான விளக்கம் அச்சுக்கூடம், வித்தியாவிநோதினி அச்சுக்கூடம், விவேக கலாநிதி பிரஸ், விவேக சந்திரோதயம் அச்சுக்கூடம், அத்வைத விளக்கம் என்னும் அச்சுக்கூடம் போன்ற பல இதழ்களின் பெயர்களில் அமைந்த அச்சுக்கூடங்களின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இக்கூற்றின்படி, 'மாசத்தினச்சரிதை' என்ற மாத இதழும் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிவந்திருக்கவேண்டும். திருக்குறள் இவ்வச்சகத்தின் வழியே கி.பி.1812இல் வெளியிடப்பட்டிருப்பதற்கு நூல் ஆதாரம் கிடைத்திருக்கின்றது.  இந்நூல் தோன்றிய கி.பி.1812ஆம் ஆண்டையே 'மாசத்தினச் சரிதை' மாத இதழின் ஆண்டாகக் கொள்ளப்பட்டிருப்பது அவ்வளவு பொருத்தமாகத் தோன்றவில்லை.  அச்சுக்கூடங்களின் வரலாற்றைப் பார்க்கும்போது முதலில் பிரச்சாரத் துண்டு அறிக்கைகளும் அரசின் ஆணைகளுமே வெளியிட்டுப் பிறகு பல மாத/ஆண்டுகளின் முயற்சியால் நூல்களை உருவாக்கியுள்ளனர்.  "உலக நாடுகளில் அச்சுக்கலையின் வளர்ச்சியையொட்டியே செய்தி வெளியீடுகள் துண்டுப் பிரசுரங்களாக அச்சிடப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டன"(தமிழ் இதழியல், ப.19) என்கிறார் மு.அ. முகம்மது உசேன்.  கி.பி.1455இல் 'கீர்த்தனைகள்' என்ற உபவாசப் பத்திரிகையை ஜான்கூடன்பர்க் வெளியிட்டார்.  இதுவொரு துண்டுப் பிரசுரமாகும்.  இது 13 பக்கங்களைக் கொண்டது.  இதன்பிறகு பல துண்டுப் பிரசுரங்கள் வெளிவந்து சேமிப்பாரின்றி அழிந்திருக்கலாம். 

கட்டடம் செய்யப்பெற்ற நூல்கள் உலகின் ஏதோவொரு மூலையில் கிடைப்பதால் அதனைக் கொண்டு அவ்வவற்றின் வரலாற்றைக் கணிக்கின்றோம்.  ஒரு அச்சகம் நூல்களை மட்டும் வெளியிடுவனவாக இருந்திருக்க முடியாது.  நூல்களை வெளியிடுவது அவ்வச்சகத் தொழில்களில் ஒன்றாகவே இருந்திருக்கின்றது.  ஒரு அச்சகத்தின் துணைத் தொழிலான நூல்வெளியீட்டைக் கொண்டு அவ்வச்சகம் நூல் வெளியிட்ட ஆண்டில் தோன்றியது என்று ஆணித்தரமாகக் கூறமுடியாது.  இவ்வச்சகம் நூல்களை வெளியிடுவதற்கு முன் பல ஆண்டுகள் அச்சுத்தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும்.  அனுபவமுள்ள அச்சுக்கூடத்தில் தான் நூல்கள் அச்சிடக் கொடுப்பது வழக்கம்.  1812இல் வெளியான 'திருக்குறள்-மூலபாடம்' தஞ்சையைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் சென்னையில் உள்ள 'மாசத்தினச்சரிதை' அச்சுக் கூடத்தில் ஏன் அச்சிட்டிருக்கிறார்.  அக்காலத்தில் இவ்வச்சுக்கூடம் 'மாசத்தினச்சரிதை' என்னும் மாத இதழைத் திறம்பட நடத்தி வந்திருக்கவேண்டும்.  இதனைக் கண்ட ஞானப்பிரகாசம் இவ்வச்சகத்தில் அச்சிட்டிருக்கவேண்டும் என்பதே உண்மை.  எனவே, அனுபவமிக்க அச்சகமாக மாசத்தினச்சரிதை அச்சுக்கூடத்தை கருதிப் பார்ப்பின் இவ்வச்சுக்கூடம் கி.பி.1812க்கும் முன்னரே 'மாசத்தினச்சரிதை' எனும் மாத இதழ் தமிழகத்தில் முதன் முதலில் வெளிவந்திருக்கக் கூடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இலக்கியப் பருவ இதழ்கள்

இவ்வகையான பருவ இதழ்களில் ஒன்றே ‘இலக்கியப் பருவ இதழ்’.  இதில் தமிழிலக்கியம் - தமிழிலக்கணம் தொடர்பான ஆய்வுகள், விவாதங்கள், நூல்கள், உரைகள், வினா-விடைகள், பொதுக்கட்டுரைகள், சொல்லாராய்ச்சிகள், நூலாராய்ச்சிகள், தமிழ் மற்றும் தமிழ்ப்புலவர் வரலாறுகள், தமிழ்ப் பாடங்கள், மொழிபெயர்ப்புகள் மற்றும் மொழிபெயர்ப்பு குறித்த கட்டுரைகள், தமிழையும் தமிழிலக்கியத்தையும் மேம்படுத்தும் வகையிலமையும் கருத்துகள் சிறப்பிடம் பெறுகின்றன.  இவ்விலக்கியப் பருவ இதழ்களை நூல்கள் வெளியிட்ட பருவ இதழ், நூல்கள் வெளியிடாத பருவ இதழ் எனப் பிரிக்கலாம்.  மேலும், நூல்கள் வெளியிட்ட பருவ இதழ்களைச் சுவடிப்பதிப்புகள் வெளியிட்ட பருவ இதழ், நிகழ்கால ஆசிரியர்தம் நூல்கள் வெளியிட்ட பருவ இதழ் எனப் பிரிக்கலாம்.

சுவடிப்பதிப்புகள் வெளியிட்டதாக அறியத்தக்க பருவ இதழ்கள் தமிழகத்தில் பல வெளிவந்திருக்கின்றன.  அவ்விதழ்களைப் பார்வையிட முடியவில்லை.  என்றாலும் அங்கங்குக் காணும் குறிப்புகளால் அபிநவப் பத்திரிகை, அமிர்த வசனி, அருள் ஒளி, அழகேசன், ஆனந்தபோதினி, இந்து சமயச் செய்தி, கம்ப நாடர், கலாநிதி, கலாவல்லி, காமகோடி, குமரன், கொங்கு, சமய ஞானம், சாந்தி, சித்தாந்த ஞானபோதம், சில்பஸ்ரீ, செந்தமிழ்ப்பானு, சைவம், ஞான அரசு, தமிழகம், தமிழர், திருநாவுக்கரசு, தருமசீலன், திருவிளக்கு, வித்தியா பாநு, விவேக சிந்தாமணி, விவேக தீபிகை, ஸ்ரீவைஷ்ணவன் போன்ற பருவ இதழ்கள் சுவடிப்பதிப்புகளை வெளியிட்டதாக அறியமுடிகிறது.  

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பின் தொடக்கக் காலம் கி.பி.1897 எனலாம்.  எனவே, கி.பி.1897 முதல் கி.பி.2000 வரை வெளிவந்த 36 இலக்கியப் பருவ இதழ்களில் இதுவரை 406 சுவடிப்பதிப்புகள் கிடைத்துள்ளன.  இவ்விதழ்களில் பெரும்பாலானவை இந்திய விடுதலைக்கு முந்தைய காலத்தன.  என்றாலும், இந்திய விடுதலைக்குப் பின் சில நிறுவன வெளியீட்டுப் பருவ இதழ்களில் சுவடிப்பதிப்பு நூல்களை மிகுதியாகக் காணமுடிகின்றது.  

சுவடிப்பதிப்பு வரலாற்றில் பருவ இதழ்களில் வெளிவந்த நூல்கள் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன.  ஆனால், இந்நூல்கள் பருவ இதழ்கள் வெளிவந்த காலத்தில் மக்களால் பேசப்பட்டு வந்தனவேயன்றி அதன்பின் பேசுவாரற்று இதழோடு நின்றுவிட்டன.  தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் தமிழின உணர்வுக்கும் இச்சுவடிப் பதிப்புகள் பெருந்துணை புரிந்திருக்கின்றன.  இதழ்களின் வழியாக அவை தலைகாட்டத் தவறியிருந்தால் பல நூல்களின் பெயர்களைக் கூட நாம் அறிந்திருக்க முடியாது.  அந்த வகையில் இதழ்களின் தமிழ்ப்பணியை நினைவுகூர்ந்து நன்றி பாராட்டவேண்டும்.

இந்த வகையில் உண்மை விளக்கம் என்னும் சித்தாந்த தீபிகை, ஞானபோதினி, விவேகபாநு, பைந்தமிழ், பஞ்சாமிர்தம், ஹரிசமய திவாகரன், செல்வக்களஞ்சியம், சிவநேசன், கலாநிலையம், தேனோலை, புலமை  போன்ற தனியார்ப் பருவ இதழ்களும், செந்தமிழ், தமிழ்ப் பொழில், கொங்குமலர் போன்ற தமிழ்ச் சங்கப் பருவ இதழ்களும், சரஸ்வதிமகால் நூலகப் பருவ இதழ், சென்னை அரசியர் கீழ்த்திசைச்சுவடிகள் நூலகம் பருவ இதழ் போன்ற சுவடிநூலகப் பருவ இதழ்களும், ஞானசம்பந்தம், குமரகுருபரன், ஸ்ரீசங்கர க்ருபா, ஸ்ரீகாமகோடி ப்ரதீபம், ஸ்ரீகுமரகுருபரர், மாதாந்திரஅமுதம், மெய்கண்டார் போன்ற ஆதீனப் பருவ இதழ்களும், சித்தாந்தம்(1912), கலைமகள்-சென்னை, செந்தமிழ்ச் செல்வி, செங்குந்தமித்திரன், சித்தாந்தம் (1928), சக்தி, நல்லறம், முக்குடை, திருக்கோயில், கல்வெட்டு போன்ற நிறுவனப் பருவ இதழ்களும், தமிழாய்வு, உயராய்வு, தமிழ்க்கலை போன்ற பல்கலைக்கழகப் பருவ இதழ்களும் சுவடிப்பதிப்புகளை வெளியிட்டதாக அறியமுடிகிறது.  இவ்விதழ்களில் 406க்கும் மேற்பட்ட சுவடிப்பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன (காண்க: பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு, முனைவர் மோ.கோ. கோவைமணி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2010 எனும் நூலில் இவை தொடர்பான விரிவான செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன).

இதழ்ப் பதிப்பு நூல்களின் நிலைகள்

பருவ இதழ்களில் வெளிவந்த நூல்களின் நோக்கையும் போக்கையும் உணர்ந்தோமானால் பருவ இதழ்ப் பதிப்பின் நிலைப்பாடு நன்கு உணரலாம்.

1. நூற்பெயர் மாற்றம் பெற்றவை

காலந்தோறும் இலக்கிய இலக்கணங்களில் வழக்குச் சொற்கள் இடம்பெறுவதியல்பு.  பழந்தமிழ் இலக்கியங்களில் வழக்குச் சொற்களும் மொழிநடையும் இவ்வாறு அமைந்தவையே.  அதனால்தான் இன்று பழந்தமிழிலக்கிய இலக்கணங்களை அறிந்துகொள்ளப் பல்வேறு வகையான உரைகள் தேவைப்படுகின்றன.  உரைகளால் நூற்பொருள் அறிந்து தெளிதல் போல, நூற்பெயரால் நூல் பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முடியும்.  இந்நூல் பெயரும் நூல் தோன்றிய காலத்து வழக்குச் சொற்களில் அமையும்.  இச்சொல் நூல் பதிப்பாகுங் காலத்து உள்ள வழக்குச் சொல்லாக மாற்றப்படுதலுண்டு.  அதாவது, நூலாசிரியர் நூலிற்கிட்ட பெயரும், பதிப்பாசிரியர் நூலிற்கிட்ட பெயரும் வேறுவேறாக அமையும்.

“கூழையந்தாதி, வரராசையந்தாதி என்ற பெயர்கள் பிரதிகளில் காணப்பட்டாலும் தமிழ்நாட்டில் கூழை, வரராசைப் பெயர்கள் அதிகமாக வழக்கில் இல்லாமையால் எல்லோருக்கும் விளங்கவேண்டி சங்கரநயினார் கோயிலந்தாதி என்று வழக்கிலுள்ள பெயர் புதியதாக அமைக்கப்பட்டது” எனும் உ.வே. சாமிநாதையர் கூற்றுப்படி கூழையந்தாதி, வரராசையந்தாதி எனும் நூற்பெயரானது ‘சங்கரநயினார் கோயிலந்தாதி’யாக மாற்றப்பெற்றது தெரியவருகின்றது.

2. உரைக்குறிப்பால் அறிமுகமானவை

      ஒரு நூலின் உரையில் குறிப்பாகவோ மேற்கோள்களாகவோ பிறிதொரு நூலின் சில/பல பாடல்கள் இடம்பெறுவதியல்பு.  அச் சில/பல பாடல்களைக் கொண்டு நூலின் முழுப் பிரதியைத் தேடுவதும், கிடைத்தபின் நூல் முழுமையும் பதிப்பிப்பதையும் பருவ இதழ்ப் பதிப்புகளில் காணலாம்.  காட்டாக, ‘திருநெறி விளக்கம்’ எனும் நூல் அறிமுகமான நிலையைச் சுட்டலாம்.  அதாவது, மதுரைச் சிவப்பிரகாசரின் சிவப்பிரகாச உரையை மு. அருணாசலம் சைவசித்தாந்த மகாசமாஜ வெளியீடாக 1940ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.  உரையாசிரியர் குறிப்பில் ‘திருநெறி விளக்கம்’ பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.  இவ்வுரையில் இடம்பெற்ற ‘திருநெறி விளக்கம்’ எனும் நூலின் ஆறு பாடல்களையும் தருமையாதீன வெளியீடான ‘ஞானசம்பந்தம்’ திங்களிதழில் 1941ஆம் ஆண்டு மேற்படியாரால் வெளியிடப் பெற்றுள்ளது.  இவற்றைக் கண்ணுற்ற தி.கி. நாராயணசாமி நாயுடு இந்நூலைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  இந்நூல் தஞ்சை சரஸ்வதிமகால் நூலகச் சுவடிகளில் இருப்பதைக் கண்டு, பிரதி செய்து ‘சித்தாந்தம்’ திங்களிதழில் 1959-60ஆம் ஆண்டுப் பகுதிகளில் வெளியிட்டுள்ளார்.  இந்நூல் இதன்பிறகு அறிஞர் பெருமக்களிடையே பெரிதும் பேசப்பெற்றது.  அதன் பிறகு சரஸ்வதிமகால் நூலகச் சுவடியை அடிப்படையாகக் கொண்டு இராம. கோவிந்தசாமி பிள்ளை தம்முடைய உரையுடன் 1963ஆம் ஆண்டு சரஸ்வதிமகால் வெளியீடாக வெளியிட்டுள்ளார்.  

3. குறைப்பதிப்பை நிறைவு செய்பவை

     தனிநூலாக்க இயலாத சிறு மற்றும் குறை நூல்கள் பெரும்பாலும் பருவ இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.  ஆயினும், ‘கொத்து’, ‘திரட்டு’ போன்ற தொகுப்பு நூல்களில் இடம்பெற்றிருக்கும் குறைப்பகுதியை நிறைவு செய்வதாகவும் பருவ இதழ்ப் பதிப்பு அமைந்துள்ளது.  காட்டாக, தமிழ்நாட்டு அரசின் கீழ்த்திசைச் சுவடிகள் நூல் நிலைய வெளியீடான ‘பிள்ளைத்தமிழ்க் கொத்து’ (1959) இரண்டாம் பாகத்தில் ஐந்தாம் நூலாக ‘யோக சாத்தையர் பிள்ளைத்தமிழ்’ எனும் நூல் இடம்பெற்றுள்ளது.  இது ஒரு குறை நூலாகும்.  இதில் நான்காம் பருவமாகிய சப்பாணிப் பவத்தின் 5ஆம் பாடல் தொடங்கி நூல் முடிய உள்ளது.  இந்நூலின் ஒவ்வொரு பருவமும் ஐந்தைந்து பாடல்களால் ஆக்கப்பெற்றுள்ளது.  இந்நூலின் முழுப் பிரதியைப் பேரா. மு. சண்முகம் பிள்ளை ‘அடிமதிக்குடி அய்யனார் பிள்ளைத்தமிழ்’ என்ற பெயரில் 1976ஆம் ஆண்டு தமிழாய்வு இதழில் பதிப்பித்துள்ளார்.

4. முதற்பதிப்பு கிட்டாமையால் வெளிவந்தவை

      சுவடிப்பதிப்பின் தொடக்க காலத்தில் நூற்றுக்கணக்கான சுவடிப்பதிப்புப் படிகளை அச்சிட்டதாகத் தெரியவில்லை.  கையொப்பம் (முன்பணம்) பெற்ற அளவில் தேவைக்கேற்பவே வெளிவந்திருக்கின்றன.  அவை, சில காலங்களிலேயே இருக்குமிடம் தெரியாது போய்விடுதலுமுண்டு.  இந்நிலையில் ஏற்கெனவே அச்சான நூல் கிடைக்காமையாலும் இருக்கும் சுவடியும் சிதிலம் அடைந்து போகும் நிலையில் இருந்தமையாலும் அந்நூல் மீண்டும் பருவ இதழ்ப் பதிப்பாக வெளிவந்திருக்கின்றது.  காட்டாக, சிறைவிடந்தாதி எனும் நூல் 1921ஆம் ஆண்டு செந்தமிழ் இதழ் வழி வெளிவருவதற்கு முன்பே ஒரு பதிப்பு வெளிவந்திருக்கின்றது.  அப்பதிப்பு எங்கும் கிடைக்காததால் செந்தமிழில் வெளியிடப்பெற்று இருக்கின்றது.  இந்நூல் பதிப்பாசிரியர் சு. நல்லசிவன் பிள்ளை, “பல்லாண்டுகட்கு முன் வெளிவந்துள்ள இது, இப்பொழுது யாங்கனும் கிடைக்காமையானும் ஒரே பிரதியேயுள்ளமை யானும் ஏட்டுப்பிரதி சிதிலமடைந்து போகுமுன் பாதுகாக்கப்படுதலவசியமாகலானும் தனியே புத்தகமாகப் பதிப்பித்தற்கு ஒப்புநோக்கிச் செப்பனிட வேறு  பிரதிகள் கிட்டாமையால் ஏட்டிலுள்ளவாறே செந்தமிழ்ப் பத்திரிகை மூலம் வெளியிடப்படுகிறது” என்கின்றார்.

5. பதிப்புரிமை பெற்றவை

தனிநூலான பதிப்பின் பதிப்புரிமை பெற்று வெளிவந்த பருவ இதழ்ப் பதிப்புகள், பருவ இதழ்ப் பதிப்பின் பதிப்புரிமை பெற்றுத் தனிநூலான பதிப்புகள் எனப் பருவ இதழ்களில் வெளிவந்த பதிப்புரிமைப் பதிப்புகள் இரண்டு நிலைகளில் அமைந்திருக்கின்றன.  தி. சந்திரசேகரன் 1953ஆம் ஆண்டு சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலக வெளியீடாக ‘திருமயிலைப் பிரபந்தங்கள்’ எனும் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார்.  இத்தொகுப்பில் ‘திருமயிலை உவமை வெண்பா’ ஒன்று.  இந்நூல் சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலக அனுமதியுடன் குமரகுருபரன் இதழில் 1054-55ஆம் ஆண்டுகளில் வெளிவந்துள்ளது.  சீகாழித் தாண்டவராயரின் உரையுடன் ‘திருவாசக அனுபூதி’ எனும் நூலை உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம் வெளியிட்டுள்ளது.   இதன் பதிப்புரிமையைப் பெற்று 1965-69ஆம் ஆண்டு குமரகுருபரன் இதழ்ப் பகுதிகளில் வெளிவந்துள்ளது.

6. அறிமுக நோக்கில் வெளிவந்தவை

     அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் பருவ இதழ்களில் நூல்கள் குறையுடன் வெளிவந்திருக்கின்றன. இந்நூல்கள் பின்னாளில் தனிநூலாகவோ மீண்டும் முழுமையான பருவ இதழ்ப் பதிப்பாகவோ வெளிவரக்கூடும்.  ‘திருஞானசம்பந்த சுவாமிகள் பிள்ளைத்தமிழ்’ எனும் நூலின் சில பாடல்களை எஸ். சோமசுந்தர தேசிகர் செந்தமிழ் இதழில் 1918ஆம் ஆண்டு வெளிப்படுத்தியிருக்கின்றார்.  இது வெளிவந்து 48 ஆண்டுகள் கழித்து 1966ஆம் ஆண்டு ம. சீராளன் சரஸ்வதிமகால் நூலகப் பருவ இதழில் ஆஃப் பிரிண்ட் முறையில் தனிப்பக்கவெண் கொடுத்துப் பதிப்பித்துள்ளார்.

7. நூலாசிரியரின் குறைப்பதிப்பை நிறைவு செய்தவை

     நூலாசிரியரால் பருவ இதழ்களில் குறையுடன் வெளியிட்ட நூல் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வேறொருவரால் மீண்டும் பருவ இதழில் முழுமையும் பதிப்பித்து வெளியிட்ட நூல்களாகச் சில காணப்படுகின்றன.  குறிப்பாக, நா.ரா. சிவராஜ பிள்ளையின் ‘கம்பராமாயணக் கவுத்துவமணிமாலை’யைக் காரைக்குடியிலிருந்து வெளிவந்த ‘குமரன்’ இதழில் முதல் 12 பாடல்கள் 1927ஆம் ஆண்டும், செந்தமிழ் இதழில் முதல் 16 பாடல்கள் 1928-29ஆம் ஆண்டுப் பகுதிகளிலும் நூலாசிரியரால் வெளியிடப்பெற்றுள்ளன.  இந்நூல் இதற்குப் பிறகு வெளிவரவில்லை.  நூலாசிரியரின் மறைவுக்குப் பிறகும், நூல் வெளிவந்த ஐம்பது ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகும் இந்நூலை மு. சண்முகம் பிள்ளை தமிழாய்வு இதழில் 1979ஆம் ஆண்டு முழுமையும் வெளியிட்டுள்ளார்.  ஆக, இந்நூல் நூலாசிரியரால் முழுமையும் வெளியிடமுடியாத போது பிறறொருவரால் நூல் முழுமையும் வெளியிட்டிருப்பதைப் பருவ இதழ்ப் பதிப்புகளில் காணமுடிகிறது.

8. குறைப்பதிப்பை முழுநூலாகக் கருதியவை

        ஒரு முழுமையான நூல் பருவ இதழில் குறைப்பதிப்பாக வெளிவந்து, பின்னர்த் தனிநூலாகும் போது அக்குறைப்பதிப்பையே முழுநூலாக்கிய போக்கும் பருவ இதழ்ப் பதிப்புகளில் காணமுடிகிறது.  ‘கருணாம்பிகை யமக அந்தாதி’ எனும் நூல் 30 பாடல்களாலானது.  மாதாந்திர அமுதம் இதழில் 1988ஆம் ஆண்டு துணர் 9, பகுதி 2-6களில் ப.வெ. நாகராஜனின் உரையுடன் முதல் 29 பாடல்கள் வெளிவந்திருக்கின்றன.  30ஆவது பாடல் துணர் 9, பகுதி 7இல் வெளிவந்திருக்கவேண்டும்.  ஆனால் வெளிவரவில்லை.  இவ்விதழ்ப் பதிப்பு 1988ஆம் ஆண்டு தனிநூலாக வெளிவரும் போது 30ஆவது பாடலை இணைக்காமல் இதழில் வெளிவந்த முதல் 29 பாடல்களை அச்சிட்டு ‘முற்றும்’ எனப் போட்டிருக்கின்றனர் என்கின்றார் இந்நூல் பதிப்பாசிரியர். இப்பதிப்பு இறுதிப்பாடல் இல்லாத ஒரு குறைப்பதிப்பாகத் திகழ்கின்றது.  ‘முற்றும்’ போட்டுவிட்டதாலே முழுமை என்று கருதிவிடமுடியாது என்பதற்கு இப்பருவ இதழ்ப் பதிப்பு ஒரு சான்றாகத் திகழ்கின்றது.

9. ஒரு நூலின் யாப்பை மாற்றிப் பதிப்பித்தவை

ஒரு நூலுக்கான யாப்பை விடுத்து மாற்று யாப்பில் பதிப்பித்த போக்கையும் பருவ இதழ்ப் பதிப்புகளில் காணமுடிகிறது.  ‘கோதை நாய்ச்சியார் தாலாட்டு’ 167 தாழிசைகளைக் கொண்டதொரு நூலாகும்.  இந்நூல் எஸ். வையாபுரிப் பிள்ளை உபதேசித்து 1928ஆம் ஆண்டு ஆழ்வார்திருநகரி திருஞானமுத்திரைப் பிரசுராலயம் மூலமாகப் பெரியன் ஸ்ரீநிவாஸன் வெளியிட்டுள்ளார்.  இப்பதிப்பில் விடுபட்ட பகுதிகள் கோடிட்டுக் காட்டப்பெற்றுள்ளன.  ஆனால் இதே நூலை வ.ரா. கல்யாணசுந்தரம் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பருவ இதழில் 1953ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.  1928ஆம் ஆண்டுப் பதிப்பில் கோடிட்ட பகுதிகள் இப்பதிப்பில் நீக்கப்பெற்று 316 அகவல்வரி கொண்ட நூலாக மாற்றிப் பதிப்பித்துள்ளார்.  இதனைப் பார்க்கும்போது இந்நூல் பதிப்பாசிரியர் வ.ரா. கல்யாணசுந்தரம் முன்பதிப்பையும் பார்க்கவில்லை; அதற்குச் சரியான யாப்பையும் தேர்ந்தெடுக்கவில்லை என்றே தோன்றுகிறது.  சுவடியில் விடுபாடுகள் மிகுதியாக இருந்தமையால் ஸ்ரீநிவாஸனால் யாப்பை முழுமையாகத் தேர்ந்தெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

10. ஒரே நூல் இருவேறு பெயர்களில் வெளிவந்தவை

பருவ இதழ்களில் சுவடிப்பதிப்பு வெளிவருவதற்கு முன்/பின் வெளிவந்த தனிநூல்/பருவ இதழ்ப் பதிப்புப் பெயரில் சிறுமாற்றம் பெற்று வெளிவந்திருக்கின்றன. செந்தமிழ் இதழில் 1909ஆம் ஆண்டு ‘சங்கரசோழன் உலா’ வெளிவந்திருக்கின்றது.  இந்நூல் 1977ஆம் ஆண்டு ‘சங்கரராசேந்திர சோழன் உலா’ என்ற பெயரில் கி.வா. ஜெகந்நாதனின் குறிப்புரையுடன் உ.வே. சாமிநாதையர் நூலக வெளியீடாக வெளிவந்துள்ளது.  

11. பாதுகாத்தவரால் நூற்பெயர் சுட்டப்பெற்றவை

சுவடியில் நூற்பெயர் இல்லாத போழ்து சுவடிப் பொருளைக் கொண்டு பதிப்பாசிரியரால் பொதுவானதொரு நூற்பெயர் சுட்டும் வழக்கம் உண்டு.  அதுபோல் சுவடியைப் பாதுகாத்து வருபவர்கள், அட்டவணை தயாரிப்பவர்கள் ஆகியோராலும் நூற்பெயர் சுட்டப்பெற்றுள்ள பருவ இதழ்ப் பதிப்புகளும் உண்டு.  காட்டாக, தஞ்சை சரஸ்வதிமகால் நூலக வெளியீடாக ‘தஞ்சை வௌ¢ளைப்பிள்ளையார் குறவஞ்சி’ எனும் நூல் இவ்வகையில் பெயர் பெற்றதாகும்.  இந்நூலைப் பதிப்பித்த புலவர் வீ. சொக்கலிங்கம், “இந்நூலுக்கு நூலாசிரியரால் இடப்பட்ட பெயர் இன்னதெனத் தெரியவில்லை யாயினும், இந்நூலைப் பாதுகாத்தவர்களால் ‘பிள்ளையார் பேரில் குறவஞ்சி’ என்றும், ‘பிள்ளையார் சரித்திரம்’ என்றும், ‘வௌ¢ளைப்பிள்ளையார் குறவஞ்சி’ என்றும் பெயர் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.  1925ஆம் ஆண்டு, தஞ்சை சரஸ்வதிமகால் தமிழ் ஏட்டுச் சுவடிகளின் அட்டவணை தயாரித்த, திருவையாறு தமிழ்க் கல்லூரிப் பேராசிரியர் உயர்திரு எல். உலகநாத பிள்ளை அவர்களால் இந்நூலுக்குத் ‘தஞ்சை வௌ¢ளைப்பிள்ளையார் குறவஞ்சி’ என்று பெயர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.  ஆகவே இப்பெயர் பொருத்தமென்று கருதியே இந்நூலுக்குத் ‘தஞ்சை வௌ¢ளைப்பிள்ளையார் குறவஞ்சி’ என்ற தலைப்புக் கொடுத்துள்ளேன்” என்கின்றார்.

12. மனன நிலையில் உருவானவை

மூலச் சுவடி அல்லது படிச்சுவடி எங்கும் இல்லாத போழ்து, அச்சுவடி படித்தவரின் நினைவிலிருந்தும் நூல்களை உருவாக்கியிருக்கின்றனர்.  இவ்வாறான நூல்கள் பருவ இதழ்ப் பதிப்புகளாகவும் வெளிவந்திருக்கின்றன.  காட்டாக, ‘தளசிங்க மாலை’ எனும் நூலைக் குறிப்பிடலாம்.  இந்நூல் கருங்காலக்குடி குப்புசாமிக் குருக்களுக்குப் பாடமாய் இருந்து இருக்கின்றது.  இந்நூல் பதிப்பிக்க எண்ணும்போது பிரதிகள் எங்கும் கிடைக்கவில்லை.  குப்புசாமிக் குருக்களின் நினைவில் இருந்து 25 பாடல்கள் கிடைத்தன.  அப்பாடல்களை மட்டும் திருவாரூர் எஸ். சோமசுந்தர தேசிகர் செந்தமிழ் இதழில் பதிப்பித்திருக்கின்றார்.  “இந்நூல் (தளசிங்க மாலை) இங்கு (மதுரைத் தமிழ்ச்சங்கம்) வந்திருந்த கருங்காலக்குடி குப்புசாமிக் குருக்கள் அவர்கட்குப் பாடமாயிருந்ததை அவர் வாய்படக் கேட்டு எழுதியது” என்னும் சோமசுந்தர தேசிகரின் கூற்று இதனை மெய்ப்பிக்கின்றது.

13. மீண்டும் பருவ இதழில் பதிப்பித்தவை

ஒரு நூல் பருவ இதழில் அறிமுகமாகிப் பின்னர் நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் பருவ இதழ்களிலேயே வெளிவந்த சூழல்களிலும் சில நூல்கள் காணப்படுகின்றன.  அதாவது, நூல் கிடைக்காமையாலும் நூலின் தேவை கருதியும் முதற்பதிப்பாகவோ இரண்டாம் பதிப்பாகவோ இதழ்ப் பதிப்புகள் வெளிவராமல், மீண்டும் பருவ இதழ்ப் பதிப்பாக - இரண்டாவது முறையாக வெளிவந்திருக்கின்றன.  இவ்வகையில் ‘கோமதி அந்தாதி’ எனும் நூல் சித்தாந்தம் இதழில் 1955, 1976ஆம் ஆண்டுகளிலும், ‘தருக்க சூத்திரம்’ எனும் நூல் செந்தமிழ் இதழில் 1902, 1908ஆம் ஆண்டுகளிலும், ‘புலவராற்றுப்படை’ எனும் நூல் செந்தமிழ் இதழில் 1903, 1969ஆம் ஆண்டுகளிலும் முறையே முதல் மற்றும் இரண்டாம் பதிப்புகளாக வெளிவந்திருக்கின்றன.  இவற்றில் கோமதி அந்தாதி மட்டும் குறைப்பதிப்பாகும்.  இந்நூல் குறைப்பதிப்பாகவே தனி நூலாகவும் வெளிவந்திருக்கின்றது.  இந்நூலின் பதிப்பாசிரியர் அம்பை இரா. சங்கரன், “பெரும்பாலும் அந்தாதிகள் நூறு பாட்டுக்களைக் கொண்டே யிலங்குவது வழக்கம்.  அதேபோன்று இந்நூலும் நூறு பாட்டுக்களைத்தான் பெற்றிருக்கவேண்டும்.  அப்படியிருக்க நம் போகூழினால் அவ்வேட்டுச் சுவடியில் 44 பாட்டுகளே யிருந்தன.  அவைகளை அப்படியே பிரதி செய்து கொண்டு எஞ்சிய பகுதி யாண்டாவது கிடைக்க இயலும் எனப் பல்லிடத்தும் விசாரிக்க முற்பட்டேன்.  இருபது ஆண்டுகட்கு முன் சித்தாந்தம், மலர் 28, இதழ்10லும் இந்நூல் பற்றி விசாரித்து எழுதியிருந்தேன்.  எவ்வகையான தகவலும் கிடைத்திலது.  எனவே கிடைத்தவற்றையாவது வெளியிட்டுவிட வேண்டும் என்ற நோக்கங் கொண்டு இதை வெளியிடலானேன்” என்கின்றார்.

14. ஏடு பிறழ்ச்சியால் உருவானவை

       பேரா.எஸ். வையாபுரிப்பிள்ளை பதிப்பித்த இராஜராஜதேவருலாவைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.  இந்நூல் வெளிவந்த பிறகு திருவாரூர் எஸ். சோமசுந்தர தேசிகர் தம்மிடமுள்ள இராஜராஜனுலாப் பிரதியோடு ஒத்துப்பார்த்து இப்பதிப்புச் சுவடியின் தன்மையை, “இப்போது வெளியிட்டுள்ள இராஜராஜ தேவருலாவிலே பாட்டுடைத் தலைவனாகிய இராஜராஜன் முன்னோர்களில் இராஜராஜன் பாட்டனான விக்கிரமன் வரை முதலிருபத்தெட்டுக் கண்ணிகளாற் கூறியிருப்பினும், விக்கிரமனை யடுத்து, அவன் மகனும் இவ்விராஜராஜனுக்குத் தகப்பனுமான குலோத்துங்கன் பெயரும் இவ்விராஜராஜன் பெயரும் காணப்படவில்லை.  பாட்டுடைத் தலைவனாகிய இராஜராஜன் பெயர், இவ்வுலாவின் தொடக்கத்துப் பரம்பரை கூறுமிடத்து மட்டுமன்றி, இவ்வுலா முழுவதிலும் ஓரிடத்தேனும் வெளிப்படையாகக் கூறப்படவில்லை.  மேலும் இவ்வெளிவந்த உலாவில் 32ஆம் கண்ணியுடன் 83ஆம் கண்ணி முதலியன பொருட்டொடர்பின்றி நிற்கின்றன.  என்னிடமுள்ள இவ்விராஜராஜனுலாக் கையெழுத்துப் பிரதி 1-32ஆம் கண்ணி வரை இவ்வச்சுப் பிரதியோடு ஒத்தும், 33ஆம் கண்ணி முதல் உலா முழுவதும் ஒவ்வாது வேறுபட்டும் காணப்படுகின்றன” “32ஆம் கண்ணிக்குப் பின் காணப்படுவனவெல்லாம் எவ்வுலாவைச் சேர்ந்தவையெனிற் கூறுவன்..... மூவருலாக்களும் முறைதவறிக் கலந்து இராஜராஜதேவருலா என்று பெயர் கொண்ட ஓரேட்டுச் சுவடியைப் பார்த்து எழுதிய பிரதியைக் கொண்டு இப்பொழுது இவ்விராஜராஜனுலா வெளியிடப்பட்டதென்னேற்படுகிறது.  இவ்வாறு பிறழ்ந்த பிரதியொன்று சென்னை மாநகரிலே யுண்டென்று என் நண்பர் காலஞ்சென்ற திரு. செல்வக்கேசவராய முதலியாரவர்கள் சொல்லக் கேட்டதுண்டு” என்கின்றார்.  ஆக, பேரா. எஸ். வையாபுரிப்பிள்ளை பதிப்பித்த சுவடி ஏடு பிறழ்ந்தது என்பது தெரிகின்றது.

15. ஓரிதழில் மூலமும் பிறிதோரிதழில் உரையும் பதிப்பித்தவை

ஒரு நூலின் மூலம் ஓர் இதழிலும் உரை மற்றோர் இதழிலும் எனத் தனித்தனியாக வெளிவந்த போக்கைப் பருவ இதழ்களில் காணமுடிகிறது.  ‘பர்த்ருஹரி நீதிசதகம்’ எனும் நூலின் மூலம் மட்டும் ‘அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பருவ இதழ்’ப் பகுதியில் 1949ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.  இந்நூல் பத்துப் பகுதிகளாகப் பகுக்கப்பட்டு ஒவ்வொரு பகுப்பிற்கும் பெயர் வைக்கப்பெற்றுள்ளது.  இந்நூலின் உரைப்பகுதியானது 1909-10ஆம் ஆண்டு ‘வித்தியாபாநு’ இதழ்ப் பகுதிகளில் வெளிவந்துள்ளது.  இவ்வுரையினை ஆர். சேதுநாராயணன் சர்மா எழுதியுள்ளார்.  இவ்வுரையும் பத்துப் பகுதிகளாக அமைந்துள்ளது.  

16. பதிப்புக்கு முன் அறிமுகப்படுத்தியவை

ஒரு நூல் அச்சாவதற்கு முன் அந்நூல் பற்றிய செய்திகளைத் தகவல் தொடர்பு கருவிகளின் வாயிலாக அறிமுகப்படுத்தும் போக்கு தமிழ்ப் பதிப்புலகில் காணக்கூடிய ஒன்று.  சில நூல்களை இதழ்களில் அறிமுகப்படுத்தியும் வானொலியில் உரையாற்றியும் பதிப்பித்திருக்கின்றனர்.  இவ்வகையில், தஞ்சை வௌ¢ளைப்பிள்ளையார் குறவஞ்சி, வலைவீசு புராணம், மூவர் அம்மானை, எக்காலக் கண்ணி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு ஆகிய பருவ இதழ்ப் பதிப்புகள் இடம்பெறுகின்றன.

    அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்திலுள்ள மூவர் அம்மானை, எக்காலக்கண்ணி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு ஆகிய மூன்று நூல்களும் சென்னை வானொலியில் உரையாற்றிய பிறகு பதிப்பிக்கப்பெற்றதாகத் தெரிகின்றது.  மூவர் அம்மானையின் சிறப்பியல்புகள் குறித்துத் தி. சந்திரசேகரன் 28.4.1951லும், எக்காலக் கண்ணியின் சிறப்பு இயல்புகள் குறித்து வ.ரா. கல்யாணசுந்தரம் 14.6.1952லும், கோதை நாய்ச்சியார் தாலாட்டின் சிறப்பியல்புகள் குறித்து வி.எஸ். கிருஷ்ணன் 20.9.1952லும் உரையாற்றியுள்ளனர்.  இவ்வுரைகளுக்குப் பிறகு இந்நூல்கள் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பருவ இதழில் 1953ஆம் ஆண்டு வெளிவந்துள்ளன.  உரையாற்றியவர்களே இந்நூற் பதிப்பாசிரியர்களாக இருந்துள்ளனர்.

17. தவறான பதிப்பைச் சுட்டியவை

அழிந்துபோகும் நிலையிலுள்ள, அரிதின் கிடைத்த சுவடியைக் கொண்டு பல சுவடிப்பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. மாற்றுச் சுவடிகள் கிடைக்காத போது, பிழைகள் மலிந்திருந்தாலும் நூல் பதிப்பாக வேண்டும் என்ற எண்ணத்தில், பிழையுடன் பல பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.  பின்னாளில் மாற்றுச் சுவடிகள் கிடைத்த போது திருத்தப்பதிப்பாகப் பருவ இதழ்ப் பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.  காட்டாக, திருவானைக்காவுலாப் பதிப்பைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

1890ஆம் ஆண்டு திருவானைக்காவுலா முதற்பதிப்பு வெளிவந்துள்ளது.  இந்நூற்பதிப்பைக் கண்ணுற்ற எஸ். சரவணப்பிள்ளை, அதில் நடந்து உள்ள தவறுகளைக் கொண்டு வெதும்புகின்றார். “இதையச்சிட்டதினும் இறந்துபடவிட்டிருப்பதே நன்று என்று தோன்றிற்று.  ஒருங்கே நாலுவரிக்குப் பொருள்கொள்ள வியலாது பல்வகைப் பிழையும் பொதிந்து கிடந்தமையால்” என்று தம்முடைய ஆதங்கத்தைக் காட்டுகின்றார்.  மாற்றுச் சுவடியால் இத்தவறான பதிப்பிற்குத் திருத்தப் பதிப்பாகப் பருவ இதழில் வெளியிட்டுத் தம்முடைய ஆதங்கத்தைப் போக்கிக் கொண்டுள்ளார் எனலாம்.  இப்பதிப்பின் முன்னுரையில் அவர், “திருவானைக்காவுலாவை அச்சு ரூபத்திற் கண்டு துக்கமே யதிகரிக்கப்பெற்று நிற்கையில் அச்சம்புகேச்சுரர் திருவருளால் அவ்வுலா ஏட்டுப் பிரதியொன்று கிடைத்தது.  அதுவும் மேற்கூறியபடி எழுதுவோரால் நேர்ந்த பல வழுக்கள் நிறைந்ததே.  ஆயினும் அதைக் கொண்டே ஒரு பிரதி செம்மை செய்து இப்போது வெளியிடலாயிற்று” என்கின்றார்.

18. முதற்பதிப்பும் மறுபதிப்பும்

பருவ இதழ்களில் வெளியான நூல்களின் முதற்பதிப்புகள் அனைத்தையும் பருவ இதழ்ப் பகுதியில் வெளிவந்த அளவிலேயே (size) அமைத்துக்கொண்டு உள்ளனர்.  பருவ இதழ்ப் பகுதிக்குள் இடம்பெற்றிருக்கும் நூல் பகுதிக்கு மட்டும் தனிப்பக்கவெண் கொடுத்திருக்கின்றனர்.  இப்பகுதிகளை அச்சிடும்போது இதழ்ப் பகுதிகளை அச்சிடும் எண்ணிக்கையைவிடக் கூடுதலாக அச்சிட்டுத் தனியே வைத்துக்கொள்கின்றனர்.  நூல் பகுதிகள் இதழ்ப்  பகுதிகளில் வெளியிட்டு முடிந்தவுடன், நூல் பகுதிகள் எல்லாவற்றையும் முறையே ஒன்றாக்கி, இதழ்ப் பகுதியின் இறுதியில் வேறொரு தனிப் பக்கவெண் பெற்று வெளிவந்த முன்னுரை/ஆய்வுரை/பதிப்புரைப் பகுதியை முதலில் வைத்து முகப்பட்டையைத் தனியே அச்சிட்டுத் தனிநூலாக்கும் முறை இருந்து வருகின்றது.  இம்முறையை ‘OFF PRINT METHOD’ என்பர்.  பருவ இதழ்ச் சுவடிப்பதிப்புகளில் இருந்து வெளிவந்த முதற்பதிப்புகள் எல்லாம் இவ்வகையில் வெளிவந்தவையே ஆகும்.

19. திருத்தப் பதிப்பு

திருத்தப் பதிப்புகளும் பருவ இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.  இவ்வகையில் ஞானாமிர்தம், பதிபசுபாசத்தொகை, நாலடியார் - இருவருரைத் திருத்தம் ஆகிய மூன்று நூல்கள் வெளிவந்திருப்பது தெரிகின்றது.

ஔவை சு. துரைசாமிப்பிள்ளையின் விளக்க உரையுடன் ‘ஞானாமிர்தம்’ எனும் நூல் திருத்தப் பதிப்பாக 1935-38ஆம் ஆண்டு சித்தாந்தம் இதழ்ப் பகுதிகளில் வெளிவந்துள்ளது.  இப்பதிப்பு தோன்றுவதற்கான காரணத்தை ஔவை சு. துரைசாமிப்பிள்ளை “1932ஆம் ஆண்டுக் கோடைவிடுமுறைக்கு யான் என் ஊராகிய ஔவையார் குப்பம் சென்றிருந்த போது, வீட்டில் ஒரு மூலையில் கிடந்த ஏடுகளைப் புரட்டிப் பார்க்கலானேன் .... அதன்கண், ‘இன்னிசை எழுவர்ப் பயந்தோள் - சுநந்தன் முதலிய எழுவரைப் பெற்றாள்’ என்ற உரை இருக்கக் கண்டு, இது ஞானாமிர்தம் என்று அறிந்து அதனைப் படியெடுத்து அச்சுப்பிரதியோடு ஒப்பு நோக்கினேனாக.  வேறுபாடுகள் பல இருப்பது புலனாயிற்று.  அது கொண்டு ஞானாமிர்தத்துக்கு விளக்கவுரையொன்று எழுதுவது எனத் துணிந்து, முதற்கண் சில பாட்டுக்கு உரை எழுதிச் சென்னைச் சைவசித்தாந்த சமாஜத்தின் வெளியீடான சித்தாந்தம் என்னும் திங்கள் இதழில் வெளியிட்டேன்” என்கின்றார்.

20. பல சுவடிப்பதிப்பு

ஒரு நூல் தொடர்பான பல சுவடிகள் கிடைக்கும் போது, ஒவ்வொன்றும் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பில்லை.  அவை பாடவேறுபாடுகளுடன் இருப்பதியல்பு.  மேலும் கிடைத்த சுவடிகளெல்லாம் நல்ல நிலையிலும் முழுமையாகவும் இருக்கும் என்று சொல்லமுடியாது.  ஒரு சுவடியில் உள்ள பகுதி மற்றொன்றில் இல்லாமலும் இருக்கும்.  ஒரு நூல் தொடர்பான பாடல்களைப் பல பிரதிகளிலிருந்து தேர்ந்தெடுத்தும் பருவ இதழ்ப் பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.  காட்டாக, சரஸ்வதிமகால் நூலக வெளியீடான ‘திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்’ப் பதிப்பைச் சுட்டலாம்.  இந்நூலைப் பதிப்பித்த ம. சீராளன், “சரஸ்வதிமகாலில் திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்ச் சுவடிகள் நான்கு உள்ளன.  அவற்றின் எண்களாவன:444, 445, 447, 564a.  இவற்றில் 447, 564a ஆகிய எண்ணுள்ள இரண்டு சுவடிகளும் மிகச் சிதைந்தும், பூச்சி அரித்தும், ஏடுகள் முறிந்துமுள்ளன.  மற்ற இரு சுவடிகளையும் ஒப்பு நோக்கிச் சிறந்த பாடம் கொடுக்கப்பட்டுள்ளது.  அதிக பாடபேதங்கள் ஒப்பு நோக்கையில் தென்பட்டன.  444ஆம் எண்ணுள்ள சுவடியில் சிறுதேர் பருவம் தவிர்த்து ஏனைய ஒன்பது பருவங்களும் உள்ளன.  ஆகையால் இப்பருவத்தில் 444ஆம் எண் சுவடியில் உள்ள பாக்களை அப்படியே தந்துள்ளோம்.  சில பருவங்களில் பாக்கள் முன்னுக்குப் பின்னாக மாற்றி எழுதப்பட்டுள்ளன.  ஆனால் பாக்களில் எவ்வித மாற்றமும் இல்லை” என்கின்றார்.  இவரின் கூற்றுப்படி இந்நூல் இரு சுவடிகளிலிருந்து தெரிவுசெய்யப்பெற்றது என்பது தெரிகின்றது.

21. குறைப்பதிப்பு தோன்றக் காரணங்கள்

  • நூல் வெளிவந்து கொண்டிருந்த இதழ் நின்றுவிட்டது.   
  • சிதைந்தும் தொடர்பின்றியும் முறைபிறழ்ந்தும் கிடைத்த சுவடியைக் கொண்டது. 
  • தமக்குக் கிடைத்த சுவடியை முழுதும் பிரதி எழுதுவதற்குள் வேறொருவர் படிக்க வாங்கிச் சென்று, திரும்பி வராததால் பிரதி எடுத்த அளவில் வெளிவந்தது. 
  • நூல் பதிப்பாசிரியர் இயற்கையெய்தியதால் நின்றுவிட்டது. 
  • ஒரேயொரு பிரதி மட்டும் குறைவாக இருப்பதால் அதன் தன்மை அழியாதபடி காக்கவேண்டி சுவடியில் உள்ளதை உள்ளபடியே பதிப்பிக்கப்பெற்றது. 
  • ஒரு நூலின் சில கவிகளை வெளிப்படுத்தி ஏனைய கவிகளைத் தேடியது. 
  • பழஞ்சுவடிகள் கிடைத்த அளவிலேனும் பதிப்பித்து நூற்பகுதிகளைக் காத்தல். 
  • செப்பஞ் செய்ய இயலாத குறைச்சுவடிகளையும் முடிந்தவரை செப்பனிட்டது. 
  • கிடைத்த ஒரு குறைப்பிரதியும் அழிந்து போகாமல் இருத்தல். 
  • சில பாடல்களில் சொற்கள் பிழைபடவும், சில அடிகளில் எழுத்துக்கள் கூடவும் குறையவும் தளையோசை சிதையவும், சில அடிகளும் தொடர்களும் சிதைந்தனவும் ஒரு நூலின் தொடக்கத்தில் சிலபல ஏடுகள் இல்லாத போது கிடைத்த பகுதியிலிருந்து பதிப்பிப்பதே முறை.  ஆனால் மூலநூல் பகுதி பகுதியாக இருக்கும் போது குறைவான முதல் பகுதியை முதலில் பதிப்பிக்காமல் முழுதும் உள்ள இரண்டாம் பகுதியை முதலிலும் குறைப்பகுதியை அவற்றின் இறுதியிலும் பதிப்பித்தல். இதுவரை வெளிவராத நூல் என்று கருதி அதற்கு உரையும் எழுதி பருவ இதழில் வெளியிட்டு வரும்போது ஏற்கெனவே அந்நூல் அச்சிடப்பெற்று இருப்பதை அறிந்ததும் இவ்விதழ்ப் பதிப்பு நிறுத்தப்படுதல்.  


முடிவுரை

இதுபோன்ற போக்குகளுக்கிடையே வெளிவந்த சுவடிப்பதிப்புகளை தமிழிலக்கிய வரலாற்றில் இடம்பெறச் செய்து தமிழ் இலக்கிய வரலாற்றின் பரப்பை விரிவடையச் செய்தால் வரலாறு விரிவடையும் என்பதோடு முழுமை பெறும் எனலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக