ஞாயிறு, 4 நவம்பர், 2018

பட்டினப்பாலையில் திணைமயக்கம் காட்டும் வாழ்வியல் நெறி

அக வாழ்க்கையின் நெறிமுறைகளை ஏழு பகுதிகளாகப் பிரித்துள்ளனர் தமிழர்கள். கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை என்று அகத்திணை ஏழுவகைப்படும்.  இவற்றில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நான்கும் முறையே காடும் காடு சார்ந்த இடமும் முல்லை, மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி, வயலும் வயல்சார்ந்த இடமும் மருதம்,  கடலும் கடல்சார்ந்த இடமும் நெய்தல் ஆகிய நான்கு திணைகளுக்கும் நிலத்தினைக் குறிப்பிட்டுள்ளனர்.  கைக்கிளை, பெருந்திணை, பாலை இம்மூன்றிற்கும் நிலம் கிடையாது.  முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நான்கினையும் நானிலம் என்பர். இதனைத் தொல்காப்பியர்,

“மாயோன் மேய காடுறை உலகமும்,
சேயோன் மேய மைவரை உலகமும்,
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்,
வருணன் மேய பெருமணல் உலகமும்,
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே” (தொல்.அகத்.நூ,5)

என்கின்றார்.  ஒருதலைக் காதலைக் கைக்கிளை என்றும், பொருந்தாக் காதலை பெருந்திணை என்றும் குறிப்பர்.  பாலையாவது  தலைவன் தலைவி பிரிவு பற்றிக் குறிப்பிடுவது.  

பாலை நிலம்

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நான்கிற்கும் நிலமுண்டு.  ஆனால் பாலைக்கு நிலமில்லை.  பாலைத்திணையை ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதிக்கு உரிய பெயராகக் கொள்ளக் கூடாது.  அதை ஒரு நிலப்பகுதி என்றும் சொல்லக்கூடாது.  

குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும், மருத நிலமும், நெய்தல் நிலமும் இயற்கையின் விளைவால், சில சமயங்களில் அதன் வளம் குன்றிவிடும்.  அப்படி வளம் குறைந்த நிலையில் இருக்கும் குறிஞ்சியும், முல்லையும், மருதமும், நெய்தலும் பாலை நிலமாகத் தோன்றும்.  பாலை நிலம் போலக் காட்சி தரும் நானிலத்தை மனித முயற்சியால் விரட்டிவிடலாம்.  இதைத்தான், 

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு அழிந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர்  படிவம் கொள்ளும்”

என்கிறார் இளங்கோவடிகள்.  அதாவது, முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் அது அதற்கு உரிய இயற்கை வளத்தில் இருந்து வேறுபடும்போது, அங்குள்ள மக்களின் நல்ல ஒழுக்கம் கெட்டுப் போகிறது.  காரணம் தாங்கள்  வாழும் நிலங்களின் வளம் குறையும்போது, அவர்கள் வறுமையால் வாடுகின்றனர்.  துன்பத்தால் துடிக்கின்றனர்.  இதனால் அவர்கள் தங்கள் ஒழுக்கத்தில் இருந்து அவர்களையும் அறியாமலேயே நழுவுகின்றனர். இம்மாதிரியான சமயங்களில் அந்த நிலங்களுக்கு உரிய அரசும், சான்றோர்களும் தக்க முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.   அப்படி  எடுத்துக்கொள்ளுமானால் முல்லை நிலமும், குறிஞ்சி நிலமும் அது அதற்கு உரிய இயற்கை வளத்தை மீண்டும் பெற்றுவிடும்.  பாலை நிலம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.  

பாலைத்திணை

பாலைத்திணை என்றால் பிரிவு ஒழுக்கம்.  அதாவது பிரிந்து இருக்கின்ற நிலையிலும் ஒழுக்கத்தைக் கடைபிடிப்பது ஆகும்.  பிரிவு ஒழுக்கம் இல்லை என்றால் அன்பு விரியாது, வாழ்க்கையில் வெற்றியும் கிடைக்காது.  சுவையும் ஏற்படாது.  இதனால்தான் ‘பாலை’ என்ற அகத்திணைப்குப் புறமாக ‘வாகை’ என்ற புறத்திணை அமைந்திருக்கிறது எனலாம்.  பிரிவு இல்லை என்றால் வெற்றி இல்லை என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே, ‘வாகை தானே பாலையது புறனே’ என்றார் தொல்காப்பியர்.  வாகைத்திணை என்றால் வெற்றி ஒழுக்கம் பற்றிக் குறிப்பிடுவதாகும்.  அதாவது ஒழுக்கத்தின் மூலமாகவே வெற்றியைப் பெறுவது ஆகும்.  நடுநிலையில் இருந்து முயற்சி செய்தால்தான் எடுத்த காரியத்தில் வெற்றிபெற முடியும். வெற்றியைப் பெறுவதில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம், நடுநிலையில் இருந்து நிதானம் தவறாமல் செயற்படுவது ஆகும்.  

பாலை ஒழுக்கம்

மக்கள் ஒருவரை ஒருவர் நெருங்கி, ஒருவர் இன்பத்தில் மற்றவர் பங்கு கொள்ளும் நிலை நீடித்து இருப்பது இல்லை.  ஒருவர் மீது மற்றவர்களுக்கு இருக்கும் அன்பு காரணமாகவே, அவர்கள் வாழ்க்கையை வளப்படுத்துவதற்காகவே ஒருவரை ஒருவர் பிரிய நேருகிறது.  இவ்வாறு பிரிவது ‘பாலை ஒழுக்கம்’ என்று பெயர் பெறும்.  இந்த ஒழுக்கத்தைப் பாலை மலர் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

பாலை மலர்

பாலை மரம் வறண்ட பூமியிலும் செழுமையுடன் இருக்கும்.  வறண்ட பூமியில் மிக ஆழத்தில் நீர்ப்படிவம் இருக்கும் வரை, தன் வேர்களைச் செலுத்திச் செழுமையுடன் இருக்கும்.  வறண்ட பூமியிலும் வளமாக நிற்கும் ஆற்றலை உடையது பாலை மரம்.  நீர்வளம் இல்லாத பூமியில் இருக்கும் பாலை மரம், வறண்ட பூமியையும் வளமாக்கும் உணர்வை மனிதர்களுக்கு ஊட்டுகிறது.  பாலை வனத்தையும் சோலைவனம் ஆக்கும் முயற்சியில் மனிதனை ஈடுபடுத்தப் பாலை மரம் தன் விடாமுயற்சி மூலமாகவே மக்களைத் தூண்டுகிறது.

பட்டினப்பாலை

கடியலூர் உருத்திரங்கண்ணனார்  என்னும் புலவர் பாடியது பட்டினப்பாலை என்னும் நூல்.   சங்க இலக்கியம் மேற்கணக்கு நூல்களில் பத்துப்பாட்டில்,

“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து”

எனும் பழம்பாடலின் அடிப்படையில் ஒன்பதாம் நூலாகப் பட்டினப்பாலை அமைந்துள்ளது. இந்நூல் 301 அடிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.  பெரும்பாலும் வஞ்சியடிகளால் அமைந்துள்ளது.  ஈற்றடி நாற்சீராகவும் ஈற்றயலடி முச்சீராகவும் அமைந்து நேரிசையாசிரியப்பாவின் முடிவு கொண்டுள்ள இந்நூல் பா வகையால் வஞ்சிப்பாவினதாகக் கொள்ளப்படுகிறது. வஞ்சி நெடும் பாட்டு என்றும் இதனை வழங்குவர்.  இதுவரை கிடைத்துள்ள வஞ்சிப் பாடல்களுள் இதுவே தொன்மையும் நெடுமையும் மிக்கதாகும்.  இந்நூலைப் பாடியமைக்காக கரிகாற்பெருவளத்தால் கடியலூர் உரித்திரங்கண்ணனாருக்குப் பதினாறு நூறாயிரம் பொற்காசுகள் பரிசு அளித்துள்ளான் எனக் கலிங்கத்துப்பரணியும் தமிழ்விடு தூதும் குறிப்பிடுகின்றதைக் காணமுடிகிறது.  அதாவது,

“தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்
பத்தொடு ஆறு நூறாயிரம் பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டதும்”

என்று கலிங்கத்துப்பரணியும்,

“பாடியதோர் வஞ்சி நெடும்பாட்டால் பதினாறு
கோடிபொன் கொண்டது நின் கொற்றமே”

என்று தமிழ்விடு தூதும் குறிப்பிடுவதால் உணரமுடிகிறது.  பிற்காலப் பாண்டிய மன்னன் சோழநாட்டை வென்று அதன் தலைநகரை அழித்தபோது, அந்நகரில் இந்நூல் அரங்கேற்றப்பட்ட பதினாறு கால் மண்டபத்தை அழிக்காதிருக்க ஆணையிட்டுக் காத்த சிறப்பினைப் பெற்றது இந்நூல்.  இதனை, திருவௌ¢ளறைக் கல்வெட்டுப் பாடல் ஒன்று இச்செய்தியினைக் குறிப்பிடுகிறது.

பாலை  -  இலக்கணம்

பாலை என்பது பிரிதலும் பிரிதல் நிமித்தமும் உணர்த்தும் அக ஒழுக்கமாகும்.  தன் மனத்துக்கு இனிய காதலியை மணந்து கொண்டு தலைமகன் வீட்டில் இருந்துகொண்டு வாழுங்காலத்து, வேற்று நாட்டிற்குச் சென்று பொருள் தேடலைக் கருதித் தன் இல்லத்தரசியைப் பிரிந்து போதற்குக் குறித்தவழி, அக்குறிப்பினை உணர்ந்த, அறிந்த தலைவனின் காதல் மனைவி அவனைப் பிரிவதற்கு விரும்பாதவளாய் இருப்பாள்.  அவளின் உணர்வினைப் புரிந்துகொண்ட தலைவன்,

“முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்,
வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய,
வாரேன் வாழிய நெஞ்சே”

என்று கூறித் தான் வேற்றிடம் சென்று பொருளீட்டுதலைத் தவிர்க்கிறார்.  இவ்வாறு பிரிதலைத் தவிர்த்தது  எதற்கு எனின், தன்னைப் பிரிய விரும்பாத தலைவியைத் தேற்றிப் பிரிதொரு காலத்து பிரிவதற்காம் என்பதால் இது பிரிதல் நிமித்தம் என்ற அக ஒழுக்கத்தின் பாற்பட்டது எனலாம். இதனைத் தொல்காப்பியர்,

“செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே
வன்புறை குறித்த றவிர்ச்சி யாகும்”

என்கிறார்.

முப்பொருள்

“முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங் காலை” (தொல்.அகத்.நூ.3)

என்பர்.  முதற்பொருளாவது காலமும் இடமும் என்றும்; கருப்பொருளாவது இடத்தினும் காலத்தினும் தோன்றும் பொருள் ஆகும்.  அதாவது, தேவர், மக்கள், விலங்கு முதலாயினவும், உணவு செயல் முதலாயினவும், பறை யாழ் முதலாயினவும் என்றும்; உரிப்பொருளாவது மக்கட்கு உரியபொருள். அது அகம், புறம் என இருவகைப்படும் என்றும் கொள்ளலாம்.  

பாலைப்பொருள்

பாலைத்திணைக்குரிய முதற்பொருள் எதுவெனத் தொல்காப்பியம்,
“நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே” (தொல்.அகத்.நூ.11)

என்கிறது. அதாவது, நானிலத்தும் பாலை நெறி வெளிப்படும் நிலமே இடத்தினையும், இளவேனில் (சித்திரை, வைகாசி), முதுவேனில் (ஆனி, ஆடி), பின்பனி (மாசி, பங்குனி) ஆகிய பெரும்பொழுதுகளின்கண் வரும் நண்பகற் பொழுதே முதற்பொருளாகும்.  பாலையின் பொருளாவது, பிரிவு.  அப்பிரிவின்கண் தலைமகற்கு வருத்தம் உறும் என்று தலைமகள் கவலுங்கால், நிழலும் நீரும் இல்லாத வழி ஏகினார் எனவும் கவலுமாகலின், அதற்க அது சிறந்தது என்க.  பாலைக்கு உரிப்பொருளாவது, தலைமகளைப் பிரிதலும், தலைமகளை உடன்கொண்டு தமர்வரைப் பிரிதலும் ஆகிய இருவகைப் பிரிவும் உரியதாகும் என்க.

திணைமயக்கம்

“திணைமயக் குறுதலும் கடிநிலை இலவே
நிலனொருங்கு மயங்குதல் இல்லென மொழிப
புலன்நன் குணர்ந்த புலமை யோரே” (தொல்.அகத்.நூ.14)

என்பதால் ஒரு திணைக்கு உரிய முதற்பொருள்  மற்றோர் திணைக்குரிய முதற்பொருளோடு சேர நிற்றலும், ஒரு திணைக்குரிய கருப்பொருள் மற்றோர் திணைக்குரிய கருப்பொருளோடு மயங்குதலும், ஒரு திணைக்குரிய உரிப்பொருள் வேறோர் உரிப்பொருளோடு மயங்குதலும் ஆகிய இவற்றினைத் திணைமயக்கம் என்பர்.

“உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே” (தொல்.அகத்.நூ.15)

என்பதால் உரிப்பொருள் அல்லாத கருப்பொருளும், முதற்பொருளும் நால்வகை (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்) திணையோடு சேர நிற்கவும் பெறும் என்பர்.

வாகை

“வாகை தானே பாலையது புறனே”

என்ற தொல்காப்பியரின் கூற்றுப்படி, வாகை என்பது ஒருவர் தம் திறத்தினை ஏனையோரின் மிக்குத் தோன்ற விளக்குவதாகும்.   எனவே, இஃது ஒருவர்க்கு உளதாம் வெற்றி என்னும் புறவொழுக்கத்தை உணர்த்துவதென்பது  இனிது பெறப்படும்.  பாலை என்பதும் காதற் கிழமையிற் சிறந்த தன் காதலிபாற் சென்ற அன்பின் வழியே ஒழுகி அவளிடத்தே தங்கியிராது, இல்லற வாழ்க்கையினை இனிது நடப்பித்தற்கு இன்றியமையாது வேண்டப்படும் நன்பொருள் திரட்டுதற் பொருட்டு அவள்மேற் சென்ற அன்பினை அடக்கி வெற்றி கண்டு தலைமகன் பிரிந்து போதலை உணர்த்துவதாம்.  ஆகவே, அகத்தே நிகழும் அன்பை வெற்றி காணும் ‘பாலை’யும், புறத்தே நிகழும் பகைவர் மறத்தை வெற்றி காணும் ‘வாகை’யும் தம்முள் ஒப்புமை உடையவாதல் தெற்றெனப் புலப்படும்.

பட்டினப்பாலையில் வாகை

“கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப்
பிறர்பிணி யகத்திருந்து பீடுகாழ் முற்றி
....   .....   .....   .....
....   .....   .....   .....
செஞ்சாந்து சிதைந்த மார்பி னொண்பூ
ணரிமா வன்ன வணங்குடைத் துப்பிற்
றிருமா வளவன் றெவ்வர்க் கோக்கிய”  (பட்டினப்பாலை 221-299)

என்ற அடிகளில் தன் காதலிமாட்டுச் சென்ற காதலை அடக்கிப் பிரிதற்கு எழுந்த தலைவன் அவள் மிக வருந்துதல் கண்டு இரங்கி அவளை ஆற்றுதற்குத் தங்கிய ‘பாலை’ ஒழுக்கத்தைக் கூறும் இப்பாட்டின்கண் ‘வாகை’ என்னும் புறஒழுக்கம் யாண்டுக் கூறப்பட்டதெனிற் காட்டுதலும்; கரிகாற்சோழன் தன் இளம் பருவத்தே பகைவர் இட்ட சிறைக்களத்தில் இருந்தபோது, அவரை வெல்லும் வகையெல்லாம் நினைந்து பார்த்துப் பின் அச்சிறைக்களத்தினின்றும் அஞ்சாது தப்பிப் போய்த் தன் அரசவுரிமையினைக் கைப்பற்றிக் கொண்டு அப் பகைவர்மேற் சென்று அவரையெல்லாம் வென்று அவர் நாடு நகரங்களை அழித்து வெற்றி வேந்தனாய்ச் செங்கோல் ஓச்சினமை விரித்துக் காட்டினாராகலின் பாலையோடு இயைபுடைய ‘வாகை’ என்னும் புறத்திணையும் இந்நூலாசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது தொல்காப்பியரின் விரிக்கேற்பவே எனலாம்.

பட்டினப்பாலை வரலாறு

பட்டினப்பாலை இயற்றிய நல்லிசைப் புலவரான கடியலூர் உருத்திரங்கண்ணனார் தம் ஆருயிர்க் காதலியொடு மருவியிருந்து இல்லறம் நடத்துகின்ற போது அவர் தமக்குள்ள பொருள்வளஞ் சுருங்க வறுமை வந்து நலிவதாயிற்று.  அவ்வறுமை நோயினைக் களைந்து விருந்தோம்பி வாழ்தற்கு இன்றியமையாது தேவைப்படும் பொருள் பெறுதற் பொருட்டுக் கரிகாற்சோழனிடத்துப் போவதற்கு எண்ணினார்.  அக்கருத்தறிந்த அவர் அருமை மனைவியார் அவரைப் பிரிதற்குச் சிறிதும் பொருந்தாராய் வருந்தினார்.  அவ்வருத்தங் கண்டு பிரிதலைத் தவிர்ந்த கடியலூர் உருத்திரங்கண்ணனார் தாம் கரிகாற்சோழன்பாற் போதற்குக் கருதினமையும், அது தெரிந்து தம் மனைவி வருந்தினமையும், அவள் ஆற்றாமையினைத் தணித்துப் பின் ஒருகாற் பிரிதற்பொருட்டுப் போகாது தவிர்ந்தமையும் இனிது விளங்க நலமுறவுரைத்துத், தாம் சோழ வேந்தனிடத்துப் பரிசில் பெறவேண்டினமையும் “முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்” எனக் குறிப்பால் அறிவித்து, அக்கரிகாற்சோழ மன்னற்குரிய அரிய பெரிய வெற்றித் திறங்களெல்லாம் நடந்தவாறே மொழிந்து பட்டினப்பாலை எனும் திருப்பாட்டை அருளிச் செய்தார்.  இங்ஙனம் இயற்றிய இச்செய்யுளைப் பின்னொருகால் இவர் அச்சோழ வேந்தன்பாற் சென்று காட்ட அவன் இவர் செய்யுளின் சொற்சுவை பொருட் சுவைகளை மிக வியந்து இவர்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசிலாக வழங்கிச் சிறப்புச் செய்தான்.  இதனை,

“தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்
பத்தொ டாறு நூறாயிரம் பெறப்,
பண்டு பட்டினப் பாலை கொண்டதும்”

என்று கலிங்கத்துப்பரணி குறிப்பிடுகிறது.

நூற்பொருள்

முதல், கரு, உரிப்பொருள் ஆகிய மூன்றனுள் உரிப்பொருளால் சிறந்து விளங்கும் நூலாகப் பட்டினப்பாலை விளங்குகிறது.

காவிரியின் சிறப்பு, சோழநாட்டுக் குடிமக்களின் இயல்பு, இரு காமத்து இணை ஏரி, அறச்சாலை, தவப்பள்ளி, கோயில் ஆகிய நகர்ப்புறப் பகுதிகள் பற்றியும்; பரதவர் பொழுது போக்கு, அவர்களுடைய குடில்கள், வழிபாடு, உவா நாளில் மீன் பிடிக்கச் செல்லாமை, கடலாடுதல், புனல் படிதல் ஆகிய பழக்கங்கள், மாடங்களின் விளக்குகளை எண்ணும் செயல், பரதவர்தெருக்களின் இயல்புகள், சுங்கச்சாலை, பொருள்கள், காவலர் சங்கம் கொள்ளும் முறை, ஆவண வீதிகள், விழா, பல்வேறு கொடிகள், பன்னாட்டுப் பொருள்கள் வாணிபத்தின் பொருட்டு குவிக்கப் பெற்றமை, வணிகரின் இயல்புகள் போன்றன தெளிவுறக் கூறப்பட்டுள்ளன.

கரிகாலன் இளமைக் காலம், சிறைப்பட்டமை, வெளிப்பட்டமை, அரசுரிமை பெற்றமை, பகைவர் நாடுகள் பாழ் செய்யப்பட்டமை, அரசர் பலர் பணிந்து திறை தந்து ஏவல் கேட்டு ஒழுகுதல், வளம் பெருக்கி, உறையூரில் குடி நிறுத்திக் காவல் ஓம்பி நல்லரசு புரிதல் ஆகியவை  இந்நூலால் விளக்கம்  பெறுகிறது.

பட்டினப்பாலை - நூல் நயம்

பட்டினப்பாலையில் சொல்லப்பட்டுள்ள கருப்பொருள்கள் ஒருசேரக் கூறாது கிடந்தவாறே சொல்லிக்கொண்டு போம்வழி இடையிடையே சுவை வேறுபடுத்திக் கற்பார்க்கு உணர்வெழுச்சி உண்டாமாறு அவை தம்மை ஊடே ஊடே இனிதமைத்திருக்கின்றார்    உருத்திரங்கண்ணனார்.  பொருள்களைக் கிடந்தவாறே கூறினராயின், அதனான் மன உணர்வினைக் கவர்தல் ஏலாதாகி இருக்கும்.  உலகியற் பொருள்களில் இயற்கையழகுள்ளனவும், அஃதில்லனவும் என இரு  வகைத்துண்டு.  பட்டினப்பாலையில் ஆசிரியர் உலகியற் பொருள்களில் அழகாற் சிறந்து மக்கள் மனஉணர்வை எளிதிலே கவர்தற் பயத்தவான அரிய பெரிய பொருள்களைக் கூறும் வழியெல்லாந் தன்மை நவிற்சியும், அவற்றிடையே இயற்கையழகுப் பொருளின் வேறாவன சில வந்தால், அவற்றை அழகுபெறக் கூறல் வேண்டி உவமையும் வைத்துரைக்கும் நுட்பம் மிகவும்  பாராட்டற்குரியதாகும்.  இந்நிலையில் பட்டினப்பாலையில் இருபது உவமைகைக் காட்டியிருக்கின்றார்.  அவை பின்வருமாறு:

¨ காவிரிப்பூம்பட்டினத்து உப்பங்கழியில் நெல்லேற்றிக் கொண்டுவந்த                  படகுகள் தறிகடோறும் கட்டப்பட்டிருந்தன
- இலாயத்தில் வரிசையாகக் கட்டப்பட்டிருக்கும் குதிரை வரிசை.

¨ சுற்றிக் கரை எழுப்பி விளங்கும் மலர்ப் பொய்கை
- மகமீனாற் சூழப்பட்ட பதி.

¨ சோறாக்குஞ் சாலைகளிலிருந்து பெருகியோடுங் கஞ்சி.
- ஆற்றின் வெள்ளம்

¨ கஞ்சி உலர்ந்து புழுதியாய் மேற்படிந்த அரண்மனை வீடு.
- வெண்ணீற்றிற் புரண்டெழுந்த களிற்றியானை.

¨ கடற்கரையின் மேட்டுக்குப்பத்திலே உள்ள வலிய செம்படவர் கரடிக்                  கூடத்தில் ஒருவரோடொருவர் பிணைந்து மற்போர் புரிதல்.
- நீலவானில் வலப்புறமாய்ச் சுழன்று வான்மீன்களோடு கலந்து செல்லும்             கோள்கள்.

¨ செம்படவர் தம்முடைய குடிசை வீடுகளில் தூண்டிற் கோலையும்                          மீன்இடும் புட்டிலையுஞ் சார்த்தி வைத்திருத்தல்.
- போர்க்களத்திலிறந்த மறவனுக்கு நிறுத்திய கல்லின் எதிரிலே ஊன்றிய             வேல் மற்றும் கேடகம்.

¨ செம்படவர் குடிசை வீட்டு முற்றத்தில் வெண்மணலிலே வலையை உலர             வைத்தல்
- நிலவின் இடையிலே சேர்ந்த இருள்.

¨ செக்கச்சிவந்த நீரையுடைய காவிரியாறு கடலோடு கலத்தல்.
- கரியமலையைச் சேர்ந்த செக்கர் வான்.

¨ தாயின் கொங்கையைத் தழுவிக் கிடந்த மகவையும்,சுங்கச்                                    சாவடியிலுள்ள காவலாளர் இரவும் பகலும் ஒழியாது தங்கடமை                              செய்திருத்தல்.
-கதிரவன் தேரிற் பூட்டப்பட்டு இடையறாது செல்லும் குதிரை.

¨ மரக்கலத்தில் வந்த சரக்கைக் கடலினின்று கரையிலேற்றுதற்கும்                        கரையிற் கிடந்தவற்றைக் கடல்மேல் கப்பலில் ஏற்றுதல்
- முகில் கடலில் முகந்த நீரை மலையிற் பொழிதல், அங்ஙனம் மலையிற்               பொழிந்த நீர் பின் கடலில் சேறல்.

¨ கடற்கரையில் பண்டசாலை முற்றங்களிலே அடுக்கிக் கிடக்கம்                           மூட்டைகளின்மேல் ஆண் நாய்களும் ஆட்டுக் கிடாய்களும் ஏறிக் குதித்து          விளையாடுதல்.
- மலைப் பக்கங்களிலே ஏறிக் குதிக்கும் வருடை மான்கள்.

¨ மாதர்கள் முருகவேளைத் தொழுதற் பொருட்டாகத் தலைமேற் குவித்த                 தொடிக்கைகள்
- காந்தட் செடியின் கணுக்களிற் கிளைத்த கவிந்த முகைக்குலைகள்.

¨ தெருக்களின் இருபுறத்தும் நாட்டப்பட்ட துகிற் கொடிகள்.
- ஆற்றின் இரு கரையிலுமுள்ள கரும்பின் பூ.

¨ காவிரிப்பூம்படடினக் கடற்றுறைமுகத்தில் அசைந்துகொண்டிருக்கும்                மரக்கலங்கள்.
- கட்டுத் தறியை அசைக்குங் களிற்றியானைகள்.

¨ வேளாளரது நடுவு நிலைமை.
- நுகத்தடியிற்றைத்த பகலாணி.

¨ கரிகாற்சோழன் இளைஞனாயிருந்தபோது பகைவரது சிறைக்களத்தில் அடைக்கப்பட்டிருத்தல்.
- கூட்டிலடைக்கப்பட்ட புலிக்குட்டி.

¨ கரிகாற்சோழன் சிறைக்களத்தில் காவலரையெல்லாம் கடந்துபோய்த்              தன் அரசுரிமையினைக் கைப்பற்றுதல்.
- குழியில் வீழ்ந்த ஆண்யானை அக்குழியினைத் தூர்த்து                                               மேலேறிப்போய்த் தன் பெட்டை யானையைச் சேர்தல்.

¨ போர்க்கடையாளமான பூளைப்பூவும் உழிஞைப்பூவுஞ் சூடிவந்த படை.
- குற்றுச்செடி பம்பிய கருங்கற் பாறை.

¨ போர்முரசின் வாய்
- பிதுங்கின பேயின் கண்.

என்றவாறெல்லாம் உவமை கூறி உள்ள பாங்கு குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் ஆகிய நான்கு நிலங்களின் கருப்பொருள்களை இந்நூலில் காட்டப்பட்டிருத்தல் காணலாம். 

மேலும், இந்நூலாசிரியர்  பட்டினப்பாலையில் உலகியற் கருப்பொருள்களை உள்ளவாறே வைத்து உரைக்கும் தன்மையையும் காண்கிறோம்.  குறிப்பாக,

  • குடகுமலையிற் தோன்றிய காவிரியாறு சோழனாட்டின்கண் என்றும் நீர் அறாது நிரம்பிப் பொன் கொழித்து ஒழுகும்.
  • கழனிகளெல்லாம் எப்போதும் விளைந்து கொண்டிருப்பக் கரும்பாலைகளிற் கரும்பை நறுக்கிப் பிழிந்து பாகு காய்ச்சுதல்.
  • எருமைக் கன்றுகள் நெற்கூடுகளின் நிழலிலே ஆங்காங்கு உறங்கிக் கிடத்தல்.
  • தென்னை வாழை கமுகு மா பனை  மஞ்சள் இஞ்சி சேம்பு முதலியன மிகவுங் கொழுமையாய் நெடுக வளர்ந்து அடர்ந்திருத்தல்.
  • சிறு பெண்கள் வீட்டு முற்றத்தில் நெல்லுலர வைத்துக் காவலாயிருப்பச் சிறார் சிறுதேர் செலுத்தி விளையாடுதல்.
  • கடற்கரை உப்பங்கழிகளிலே படகுகள் வரிசையாக நிற்றல்.
  • கடற்கரையிற் கானற்சோலை வளஞ் சிறந்து தோன்றுதல்.
  • மலர்வாவிகள், ஏரிகள் அடிசிற்சாலைகள், அரண்மனைகள், மாட்டுக்கொட்டில்கள், பௌத்தர் சைனர் மடங்கள், காளிகோயில்கள் ஆங்காங்கிருத்தல்.
  • செம்படவர் தம் குப்பங்களிலே இறாமீன் சுட்டுத் தின்றும் வயலாமையைப் புழுக்கி உண்டும் அடம்பு ஆம்பல் முதலியவற்றின் பூக்கள் சூடியும் ஒருவரோடொருவர் செருக்குற்றுக் கவண்கல்      
  • வீச அவற்றிற்கு அஞ்சிப் பனைமரங்களிலுள்ள புட்கள் பறந்து போதல்.
  • செம்படவரது புறச்சேரியில் பன்றிகளுங் கோழிகளும் உலாவ ஆட்டுக்கிடாய்களும் கௌதாரிப் பறவைகளும் விளையாட உறைக்கிணறுகள் பல இருத்தல்.
  • சிறு குடிசை வீடுகளினுள்ளே தூண்டிற்கோலும் மீனிடும் புட்டிலுஞ் சார்த்தி வைத்திருத்தல்.
  • வீட்டு முற்றங்களின் மணலிலே வலைகள் உலர்தல்.
  • பரதவரும் பரத்தியரும் முழுநிலவு நாளிலே சுறாமீன் கொம்பை நட்டுக் கடற்றெய்வத்திற்குத் திருவிழாக் கொண்டாடுதல்.
  • நகரத்துள்ள மாந்தர் மேன்மாடங்களிலே யாமத்திற் பலவகையான இன்பந் துய்த்து உறங்கினமையால் அவியாதுவிட்ட விளக்கங்களைக் கட்டுமரத்தில் மீன்பிடிக்கப்போய் வைகறையில் வந்த பரதவர் எண்ணிப் பார்த்தல்.
  • கடை யாமத்தில் பரதவர் கடற்கரை எக்கர்  மணலிலே உறங்கிக் கிடத்தல்.
  • சுங்கச்சாவடியில் சுங்கங்கொள்ளுங் காவலர் அளவிறந்த பண்டங்களையெல்லாம் தம் அறிவால் அளந்து பார்த்துச் சோழனுக்குரிய புலி முத்திரையிட்டுப் போக்கித் தங்கடமை வழாது செய்தல்.
  • பண்டகசாலை முற்றங்களிலே மலைபோல் அடுக்கப்பட்ட மூட்டைகளின்மேல் நாயும் ஆட்டுக் கிடாயும் ஏறிவிளையாடுதல்.
  • நகரத்திலுள்ள மகளிர் முருகவேள் திருவிழாவைக் கண்டு தொழுதற் பொருட்டு மேல் மாடங்களிற் சாளரவாயிலைப் பொருந்தி நின்று கை கூப்புதல்.
  • நகரமெல்லாம் பலதிறப்பட்ட கொடிகள் நாட்டப்பட்டு விளங்குதல்.
  • பர்மாவிலிருந்து வந்த குதிரைகள், மலையமா நாட்டிலிருந்து வந்த மிளகு பொதிகள், இமயமலையிலிருந்து வந்த பலவகை மணிகள், பொதிய மலையிலிருந்து வந்த சந்தன அகிற்கட்டைகள், இலங்கைக் கடலில் எடுத்த முத்துக்கள், கீழ்க்கடலினின்றுங் கொணர்ந்த பவளங்கள், கங்கை காவிரி ஈழம் முதலிய இடங்களிலிருந்து வந்த உணவுப் பொருட்கள் முதலியனவெல்லாம் கடைத்தெருவுகள் தோறும் தொகுக்கப்பட்டிருத்தல்.
  • புலான் மறுத்துப் பொய்யாவொழுக்க மேற்கொண்டு வாழும் வேளாளர் பலதிறப்பட்டார்க்கும் உதவி புரிதல்.
  • பலதேயத்தினின்றும் வந்த மக்கள் ஒருவரோடொருவர் அளவளாவி யுறைதல்.
  • கரிகாற்சோழன் பகைவரிட்ட சிறைக்களத்தினின்றுந் தப்பிப்போய்ப் பின் அப்பகைவர்மேற் படை திரட்டி வந்து அவர் நாடு நகரங்களைப் பாழ்படுத்தினமையால் அவருடைய பொய்கைகள், மன்றங்கள், அரண்மனைகள், நகரங்கள் முதலியனவெல்லாம் வெறும் பாழாய்க் கிடத்தல்.
  • கரிகாற்சோழன் வெற்றியிற் சிறந்து போந்து தன் நகரத்தில் அத்தாணி மண்டபத்தே அவன் அரசு வீற்றிருக்குங்காற் பலதேய மன்னரும் போந்து அவன் மருங்கிருந்து அவனேவிய தொழில் கேட்டு நிற்றல்.
  • பகைவர்க்கு இன்னனாயினும் தன்னோடொருமையுடையாரிடத்து அவன் மிக்க  அன்புடையவனாய் ஒழுகுதல்


போன்ற செய்திகளை அழகுபட உரைத்திருப்பது பாலைத்திணைக்கண் காணப்படும் ஒழுகலாறுகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.  

உலக இயற்கைப் பொருட்டோற்றங்களை இடையறாது திரிந்துகண்டு வியந்துள்ளமையினை இந்நூலுள் கடியலூர் உருத்திரங்கண்ணனார் எடுத்தோதியுள்ளார்.

  • வானம்பாடிப் பறவை மழைத்துளியை உண்டு உயிர் வாழும்.
  • குயிற்பறவையும் தூதுணம் புறாவும் தனித்துள்ள காளிகோட்டத்தில் ஒதுங்கியிருக்கும்.
  • செம்படவர் சேரியிற் கோழி, கௌதாரி முதலிய புட்களிருக்கும்.
  • பாழ்பட்ட இடங்களிலே கூகை, கோட்டான்கள் உறையும்.
  • எருமைக்கன்றுகள் மருத நிலத்தில் கிடத்தல்.
  • களிற்றியானைகள் வெண்ணீற்றிற் புரளல்.
  • மாடுகள் கொட்டில்களில் தொகுதி தொகுதியாக நிற்றல்.
  • இறாமீன்கள், ஆமையிறைச்சிகள் செம்படரவால் தின்னப்படுதல்.
  • நீர்வற்றிய வாவிகளில் அறல்பட்ட கொம்புகளையுடைய மான்கள் துள்ளுதல்.

போன்ற பலபொருள்களை இவர் விளித்திருக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக