ஞாயிறு, 4 நவம்பர், 2018

நால்வர் பார்வையில் பாவேந்தர்

பாரதிதாசன் அவர்கள் புரட்சிகரமான கருத்துக்களை வெளிப்படுத்திய முதல் கவி என்று தந்தை பெரியாராலும், தாம் கண்டதை எழுதுகிறார்; பார்த்ததை எழுதுகிறார்; புரியாத செய்திகள் - தெரியாத செய்திகள் பக்கமே போக மாட்டார் என்று பேரறிஞர் அண்ணாவாலும், புரட்சி மனப்பான்மையோடு சொல்கின்ற துணிவைப் பெற்றவர் என்று கலைஞர் மு. கருணாநிதியாலும், தமிழ்மொழியின் மீட்சிக்கும் மாட்சிக்கும் உரிமைக்கும் ஏற்றத்துக்கும் ஆட்சிக்கும் எழுச்சிப் பண்பாடி, உணர்ச்சிக் கனல் எழுப்பி, இளைஞர்களின் குருதியிலே சூடேற்றி, இன உணர்வோடு மொழிகாக்கும் போரிலே குதித்திடச் செய்தவர் என்று பேராசிரியர் க. அன்பழகனாலும் போற்றப்படுபவர் பாவேந்தராகவும் பாரதிதாசனாகவும் விளங்கும் கனகசுப்புரத்தினம் அவர்கள்.  இவர் ஆன்றோர் - சான்றோர்களின் மனதில் நிலையாகக் குடியேறியவர்.  வளரும் தலைமுறைக்கு வழிகாட்டியாக விளங்குபவர்.  இவர்தம் காலத்தில் வாழ்ந்த ஆன்றோர்களும் சான்றோர்களும் பலராவர்.  அவர்களின் எண்ணங்களில் பாவேந்தரை நோக்கின் ஆய்வு விரியும்.  எனவே, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, பேராசிரியர் க. அன்பழகன் ஆகியோரின் பார்வையில் பாவேந்தர் எவ்விதம் காணப்படுகிறார் என்பதை இக்கட்டுரை ஆய்கின்றது.

தோற்றப்பொலிவு

ஒருவரின் தோற்றத்தைக் கண்டே அவரின் குணநிலைகளை கணக்கிடுவதுண்டு.  பழந்தமிழ் நூலான 'கொக்கோகம்' மனிதனின் அங்க அடையாளங்கள் எப்படி எப்படி இருக்கும், இப்படி இருந்தால் அதற்கான குணங்கள் எப்படி இருக்கும் என்று பட்டியலிட்டுக் காட்டுகின்றது.  பாவேந்தரின் பாடல்களில் காணப்படும் வீரத்தையும் பகுத்தறிவுக் கொள்கையையும் காதல் தன்மைகளையும் பார்க்கும் போது ஓரளவு பாவேந்தரின் தோற்றப்பொலிவை நினைவுக்குக் கொண்டு வரும்.  என்றாலும், அவரோடு ஒட்டி உறவாடி வாழ்ந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், "பாரதிதாசன் முகத்திலே அமைதி தவழாது; அதற்கு பதிலாகப் புரட்சி வாடை வீசும்; கோபத் தீக் கொழுந்து வீசும்!  அவரது முகத்திலே மீசை கறுத்து முறுக்கேறியிருக்கும்! அவரது முகத்திலே யோகத்தின் சின்னங்களைக் காணமுடியாது; தியாகத்தின் தழும்புகளைக் காணலாம்!"1 என்று கூறுவதிலிருந்து பாவேந்தரின் தோற்றப்பொலிவு நம் கண்முன் நிற்கக் காணலாம்.

பாவேந்தர் பாடல்களின் தனித்தன்மை

கவிஞனின் வெற்றி அவனின் படைப்பில் காணப்படும் நடையும் கருத்தும் ஆகும். பாவேந்தர் பாடல்களில், பாமரரும் எளிதில் புரிந்துகொள்ளும் அளவுக்கு நடையமைப்பு இருக்கும், இதனை,

"பாரதிதாசனின் பாண்டியன் பரிசு சங்ககால இலக்கியங்களில் உள்ள உவமைகளையும் அணிகளையும் எளிய நடையில் எல்லோரும் புரிந்துகொள்ளுமாறு இயற்றப்பட்டிருப்பதைக் காணலாம்.

பாரதிதாசனின் இந்தக் காவியத்தைப் பார்த்துப் படித்து உணர - இலக்கணம் தேவையில்லை?  இலக்கியங்களைப் படித்திருக்க வேண்டுவது இல்லை; நிகண்டு தேவையில்லை; பேராசிரியர்கள் உதவி தேவையில்லை.

பாரதிதாசன்தரும் இலக்கியச் சுவையை அனுபவிக்க இலக்கணம் கற்றிருக்க வேண்டியது இல்லை.

பாரதிதாசன் பாக்களைப் படித்தவுடன் அவை நம் இரத்தத்தோடு இரத்தமாகக் கலக்கின்றன; உணர்ச்சி நம் நரம்புகளிலே ஊறுகிறது; சுவைத்தால் ருசிக்கிறது.

படிக்கிறோம்; பாரதிதாசன் ஆக நாமே ஆகிறோம்.
படிக்கிறோம்; நாமும் பாடலாமா என நினைக்கிறோம்.
படிக்கிறோம்; 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்கின்றோம்"2 

என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிடுவதிலிருந்து அவரின் நடையமைப்பு அமையும் விதம் தெளியலாம்.

யாப்பியல் உணர்த்தும் பாவமைப்பு இவர்தம் பாடல்களில் இருக்கும் (காண்க:- பாவேந்தர் பாடல்களில் பாவும் பாவினமும், மோ.கோ. கோவைமணியின் கட்டுரை). நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, பஃறொடை வெண்பா, கலி வெண்பா, கொச்சகக் கலிப்பா ஆகிய பா வகைகள் இவர்தம் பாடல்களில் அமைந்திருக்கக் காணலாம். 

இயற்கை வருணனை, காதல், வீரம், தேசியம், நாட்டுப்பற்று, மொழிப்பற்று, பகுத்தறிவு போன்ற பல பொருள்களில் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கும். இருப்பினும் இவர்தம் பாடல்களின் தனித்தன்மையை, 

"புரட்சிக் கவிஞர் மேல்நாட்டுக் கவிதைகளைப் போல் கலையைக் காலத்தின் கண்ணாடி ஆக்குகிறார்!,

காலத்தை உருவாக்குகிறார்!, 

காலத்தையே உருவாக்குகிறார் என்பது மாத்திரமல்ல; காலத்தையே மாற்றுகிறார்!,

காலத்தையே மாற்றுகிறார் என்பது மட்டுமல்ல; மாறிய காலத்திற்கும் நம்மை அழைத்துச் செல்கிறார். அப்படி அழைத்துச் செல்கிறார் என்பது மாத்திரம் அல்ல; சமயம் கிடைத்தால் முன்னேயும் பிடித்துத் தள்ளுகிறார் - மாறிடும் காலத்தை நோக்கி!"3 என்று பேரறிஞர் அண்ணா அவர்களும்; "பாரதிதாசன் எந்த இடத்திலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் பகுத்தறிவுக்குப் புறம்பான கருத்துக்களை எடுத்துப்பாட முற்படவே இல்லை.  சமுதாய மாற்றத்திற்கான கருத்துக்களைத் துணிந்து கூறிய பெரும்புலவர் அவர்.  இன்றைக்கும் பகுத்தறிவாளர்களுக்கு எடுத்துச் சொல்லத்தக்க சாதனமாகப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் அமைந்துள்ளன"4  என்று தந்தை பெரியார் அவர்களும்; "பாவேந்தருடைய கவிதைகள் நியாயத்தைத் தெரிவிக்கக் கூடியவை.  நீதிக்காகக் குரல் கொடுக்கக் கூடியவை.  பூகம்பத்தை உருவாக்கக் கூடியவை.   அதே நேரத்தில் அருமையான உவமைகளை நயங்களை நமக்கு வழங்கக் கூடியவை"5 என்று கலைஞர் மு. கருணாநிதி அவர்களும்; "கவிதையுலகில் அவர் ஒரு முடிசூடா மன்னர்.  புரட்சி உணர்வில் அவர் தமிழ்நாட்டு ஷெல்லி; இயற்கையைப் பாடுவதில் அவர் வால்ட் விட்மன்; வரலாற்றைக் காவியமாக்குவதில் அவர் இளங்கோ; வருணனையில் சொல் வளத்தில்  அவர் கம்பர், காலத்தின் தேவையில் அவர் பாரதி, நம்முடைய உள்ளத்தில் அவர் என்றும் பாவேந்தர்"6 என்று பேராசிரியர் க. அன்பழகன் அவர்களும் கூறுவதிலிருந்து தெளியலாம்.  

மேலும், ஒரு கவிதை வெற்றி பெறுவதற்கும் ஒரு கவிஞன் வெற்றி பெறுவதற்கும் ஏதாவதொரு பின்னணி இருக்கவேண்டும்.  அந்த பின்னணி பாவேந்தர் பாரதிதாசனுக்கு செறிவாக அமைந்திருக்கின்றது. "பாரதிதாசன் புதுக்கருத்துக்களையும் புரட்சிக் கருத்துக்களையும் மக்கள் சமுதாயத்திற்குத் தேவையான சமதருமக் கருத்துக்களையும் துணிந்து வெளியிட்டுள்ளார்.  அவருக்கு அனுசரணையாகச் சுயமரியாதை இயக்கமும் திராவிடர் இயக்கமும் இருந்தன"7 என்று தந்தை பெரியார் அவர்களின் கருத்தும், "புரட்சி இயக்கத்திற்கு அன்றைக்குத் தலைமை தாங்கிய தந்தை பெரியார் அவர்கள், அன்றைக்குத் தளபதியாக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், அந்த இயக்கத்திற்கு எழுச்சியூட்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ஒலித்த முரசும்தான் அவருடைய கவிதைகள்"8 என்று கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் கருத்தும் பாவேந்தருக்கு அமைந்திருந்த பின்னணியை எடுத்துக்காட்டும்.

பாவேந்தரின் மனஇயல்பு

பாவேந்தர் அவர்களின் மனம் எப்பொழுதும் தெளிவாக இருக்கும்.  மற்றவர் மனம் புண்படும் என்று எண்ணித் தான் நினைத்ததைக் கூறாமல் விடமாட்டார்,  அதேபோல் மற்றவர் மகிழ்வர் என்பதற்காக தேவையற்றவற்றைப் புகழ்ந்தும் பேசமாட்டார்.  அதாவது, 'ஒன்றைப் போற்றினும் எல்லையில்லாத அளவு போற்றிப் புகழுவார்.  ஒன்றில் மாறுபடினும் போற்றுதலின் மறுஎல்லைக்கே செல்வார்' என்று பேராசிரியர் அவர்கள் குறிப்பிடுகின்றார்.  பேராசிரியர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றுகொண்டிருந்த காலத்தில் தண்டபாணி தேசிகர்,

"இல்லை யென்பான் யாரடா?
தில்லை வந்து பாரடா?

என்று கடவுள் இல்லை என்று கூறும் பகுத்தறிவாளர் கூற்றுக்கு எதிர்ப்பாக இப்பாடலைப் பாடினார் என்றதும், பாவேந்தர் அவர்கள் உடனடியாக,

"இல்லை யென்பேன் நானடா
தில்லை கண்டு தானடா" 

என்று தம்முடைய எதிர்ப்பைக் கவிதையாகவே வெளிப்படுத்தினார் என்கிறார்.  ஆனால், மறைமலையடிகள் ஒருமுறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வரும்போது மாணவர்களின் முழக்கத்தில் தமிழ் வாழ்க! அடிகள் வாழ்க! இந்தி ஒழிக! தமிழ் வெல்க!  இராமாயணம் ஒழிக! புராணங்கள் ஒழிக, பெரியபுராணம் ஒழிக என்று சொன்னபோது பெரியபுராணம் ஒழிக என்று சொல்லவேண்டாம் அது தமிழகத்தில் வாழ்ந்த பெரியோர்களின் வரலாறு, வடநாட்டவர்களுடையது அல்ல என்று கூறுகின்றார்.  இது பகுத்தறிவுக் கொள்கைக்கு மாறுபாடாகத் திகழ்கின்றதே என்ற போது, பாவேந்தர் அவர்கள், " அடிகள் பெரிய அறிஞர்.  ஏராளமாகப் படித்தவர்.  ஆராய்ச்சியாளர்.  என்றாலும் அவர் சைவர்.  அவருடைய சமயத்தைக் குறை சொன்னால், அவரால் பொறுக்க முடியவில்லை.  என்றாலும் சைவத்தின் தொன்மையைக் கொண்டு அது தென்னாட்டவர் (தமிழர்) சமயம் என்று நம்புகிறார்.  தமிழர்களிடம் தோன்றித் தனித்து நின்ற சமயம் - ஆரியத்தால் வந்ததன்று என்பதற்காக - என்பதால் நாமும் மதிக்கலாம்"9 என்றார் என்கின்றார்.  இவற்றைப் பார்க்கும் போது பாவேந்தரின் மனஇயல்பு தௌ¢ளத் தெளிவாகத் தெரிகின்றது.

பாவேந்தருடைய பாடல்களில் உள்ள விருவிருப்பும் வீராவேசமும் அவருடைய நடைமுறையிலும் இருந்திருக்கின்றது.  மற்றவர்களைப் போல நாமும் இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.  ஒருமுறை புதுவையில் அன்பழகன் அவர்கள் புதுவை கவர்னரிடம் புதுவைத் தமிழ்ச் சங்கம் நடத்திய கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் முதற்பரிசு பெறுவதற்காக சென்றிருந்த போது, பாவேந்தர் அவர்கள் கவர்னருக்கு இணையாக நாமும் காலில் பூட்சு அணிந்து செல்ல வேண்டும் என்ற அவாவில், அன்பழகனை பூட்சு அணிந்துசெல் என்கிறார்.  அவர் தயங்க, தாமே கடைவீதிக்குச் சென்று பூட்சு வாங்கித் தந்திருக்கின்றார்.  இதனைப் பேராசிரியர் அன்பழகன் அவர்கள், "மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சி.  மாலை ஐந்து மணிக்குக் கவிஞருக்கு ஒரு திடீர் எண்ணம் ஏற்பட்டு - நான் பூட்ஸ் (காலணி) போடாமல் கவர்னரிடம் சென்று பரிசு பெறுவது நன்றாக இராது.  எனவே உடனே சென்று 'கட்பூட்ஸ்' வாங்கிவர வேண்டும் என்றார்.  நான் தயங்கினேன்.  அவரே எண்ணையும் அழைத்துக்கொண்டு கடைத்தெருவுக்குச் சென்றார்"10 என்பதிலிருந்து பாவேந்தரின் உயரிய எண்ணம் வெளிப்படுகிறது.

பாடற்பொருள்

கவிதைகள் எப்படி? எப்பொருளில் இருந்தால் மக்களுக்குப் பயன்படும் என்று அறிந்து தம்முடைய கவிதைகளை யாத்தவர் பாவேந்தர்.  இக்கருத்தினைப் பாவேந்தர், "தெய்வங்களைப் பற்றிய கதைகளையே பொருளாகக் கொண்டு - பாடிக்கொண்டிருந்தால் என்ன பயன்?  மக்களின் வாழ்க்கைப் பிரச்சனையை, உழைப்பை, தொழில், குடும்ப வாழ்க்கையை, காதலைப் பாடும் பாடல்களைப் பாடினாலன்றோ மக்களுக்குப் பயன்படும்"11 என்கின்றார்.  இவருடைய கவிதைகள் எப்படி இருக்கின்றன என்பதை, பேரறிஞர் அண்ணா அவர்கள், "கடவுள் முதற்கொண்டு கருப்பத்தடை வரைக்கும் - காதலிலிருந்து விதவை மறுமணம் வரைக்கும் - சுண்ணாம்பு இடிக்கிற பெண்ணின் பாட்டிலிருந்து ஆலைச் சங்குநாதம் வரைக்கும் - அன்றாட வாழ்க்கைக்கு அவசியமானதை கண்டுகளிப்பதை அவர் பாடினார்"12 என்றும், "புரட்சி மனப்பான்மையையே நம் கவிதைகளும் காவியங்களும் அடக்கிவிடுகின்றன; அதனால்தான் நம்முடைய கவிஞர் பாரதிதாசன் இந்த உலகத்தைப் பற்றிப் பாடுகிறார்" என்றும், "அவர் கவிதைகளிலே இந்த உலகத்தைப் பற்றி - இந்த வாழ்வைப் பற்றி - வாழ்கின்ற முறையைப் பற்றித்தான் இருக்கும்"13 என்றும் குறிப்பிடுகின்றனர்.

தமிழில் பிறமொழிச் சொற்கள்

தமிழகத்தில் தனித்தமிழ் இயக்கம் கால்கொண்டிருந்த வேளை.  மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர் போன்றோர் தனித்தமிழ் குறித்து கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் வேளையில் பாவேந்தர் அவர்கள் 'தனித்தமிழ் கவிதைக்கு பொருந்துவதன்று' என்று தம்முடைய கருத்தை வெளிப்படையாகக் கூறிய நேரிய நெஞ்சத்தினர்.  இதனைப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள், "தனித்தமிழ் நல்லது தான், கூடாது என்பதல்ல.  ஆனால் ஒரு கவிஞனின் உள்ளத்து உணர்வை கவிதையாக வடிக்கும் நிலையில் இயல்பாக வரும் சொல்லை விட்டுவிட்டு, தனித்தமிழ் சொல்லாகத் தேடிப் பயன்படுத்துவது என்பது கவிதையின் உணர்ச்சி வேகத்தைத் தடைப்படுத்தி அதன் அழகைக் குறைத்துவிடும்.  'கவிதை' செய்யப்படுவதல்ல - அது உள்ளத்தின் வௌ¢ளப்பெருக்கு, அது எப்படி வருகிறதோ அப்படியே அமைவது தான் அதற்குச் சிறப்பு.  தனித்தமிழ், உரைநடைக்கு, பேச்சுக்கு வேண்டியதே.  ஆனால் கவிதைக்கு ஒத்துவராது"14 என்றார் என்பர்.

முடிவுரை

இதுபோல் பல்வேறு தமிழறிஞர்களின் கருத்துக்களை ஆராயின் பாவேந்தரின் பல்வேறு மனஇயல்புகள், பகுத்தறிவுச் சிந்தனைகள், தனித்தமிழ் தொடர்பான செய்திகள், பாடற்பொருள், பாடல் சொல்லும் திறன், சமகாலத்தவர் கருத்துகள் போன்ற இன்னோரன்ன பல செய்திகள் வெளிக்கொணரலாம்.  அதற்கு இக்கட்டுரை வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

அடிக்குறிப்புகள்
  1.  அண்ணா போற்றிய பெருமக்கள் தொகுதி 1, 'புத்தொளி பாய்ச்சிய புரட்சிப்பாவேந்தர்' , பாவேந்தர் நூற்றாண்டு விழாமலர், சூலூர், 1990
  2.  மேலது
  3.  மேலது
  4.  பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், 'பகுத்தறிவுப் பாவலர் பாரதிதாசன்', வே. ஆனைமுத்து(தொகுப்.), பாவேந்தர் நூற்றாண்டு விழாமலர், சூலூர், 1990
  5.  பாதை அமைத்த பாவேந்தர், மு. கருணாநிதி, முரசொலி-8.5.1990, பாவேந்தர் நூற்றாண்டு விழாமலர், சூலூர், 1990
  6.  புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள், 'பாவேந்தர் நினைவு போற்றுவோம்', பேராசிரியர் க. அன்பழகன், பாவேந்தர் நூற்றாண்டு விழாமலர், சூலூர், 1990
  7.  'பகுத்தறிவுப் பாவலர் பாரதிதாசன்'
  8.   'பாதை அமைத்த பாவேந்தர்'
  9.   'பாவேந்தர் நினைவு போற்றுவோம்'
  10. மேலது
  11. மேலது
  12. 'புத்தொளி பாய்ச்சிய புரட்சிப் பாவேந்தர்' 
  13. மேலது
  14. 'பாவேந்தர் நினைவு போற்றுவோம்'




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக