சனி, 3 நவம்பர், 2018

சிலம்புகழி நோன்பு

      ஐம்பொன்களான இரும்பு, ஈயம், செம்பு, பொன், வௌ¢ளி முதலியவற்றால் ஆன தனித்தனி உலோகங்களிலும் ஒன்றுடன் மற்றொன்று உலோகம் கலந்தோ, ஐந்து உலோகங்களில் மூன்று, நான்கு, ஐந்து கலந்தோ அணிகலன்கள் செய்து அணிந்து கொள்ளும் வழக்கம் உண்டு.  இவ்வாறான உலோகங்களில் உருவாக்கப்படும் அணிகலன்களைச் சங்க காலம் தொடங்கி இன்று வரை மக்கள் அணிகின்றனர்.  பெண்களுக்கான தனி அணிகலன்கள், ஆண்களுக்கான தனி அணிகலன்கள், இருபாலருக்கான அணிகலன்கள் எனப் பல்வேறு வகையான அணிகலன்கள் காலங்காலமாக வழக்கத்தில் இருந்து வருகின்றன.  குறிப்பாக, ஆண்கள் அணிகளாக முடி, குண்டலம், வாகுவலயம், வீரகண்டை, அரைஞாண் முதலியனவும், பெண்கள் அணிகளாக கால்விரல் அணிகள், மகரவாய்மோதிரம், பீலி, கால்மோதிரம், பாதசாலம், சிலம்பு, பாடகம், சதங்கை, காற்சரி, பரியகம், குறங்குசெறி, (விரிசிகை), மாணிக்கவளை, முத்துவளை, குடகம், பொன் வளை, வமணி வளை, சங்க வளை, பவழ வளை, நெறி, பல ரத்தினங்கள் இழைத்த மோதிரங்கள், வீரசங்கிலி, நேர்ஞ்சங்கிலி, பொன்னூல், சவடி, சரப்பளி, கடிப்பிணை, வாளி, குழை முதலியனவும் இருந்ததை பலவாறு அறியமுடிகிறது.

   தற்காலத்தவர் காலத்திற்கு இயைந்தபடி பலவகைப்படச் செய்து அணிகின்றனர்.  தலைக்குச் சதேவியார் எனும் அணி, வலம்புரிச்சங்கம், பூரப்பாளை, தென்பல்லி, வடபல்லி, புல்லகம், சூளாமணி, பொன்னரிமாலை முதலியனவும், இடைக்கணி முதலிய இக்காலத்து அணிகள் ஒட்டியாணம் முதலியனவும், மூக்கிலும் காதிலும் இக்காலத்து அணியும் அணிகள் பலப்பல உள்ளன.  பின்னும் ஆடவர் அணிகளாக முடி, பதக்கம், தோளணி, குண்டலம், காதணி, குணுக்கு, தோடு, கங்கணம், கைவளை, சுட்டி, பட்டம், பாதகிண்கிணி, சதங்கை, சிலம்பு, காற்சரி, பாதசாலம், பாடகம்,  ஓசை செய்தளை, கழல் போன்றனவும், பெண்கள் அணிகளாக காஞ்சி, மேகலை, கலாபம், பருமம், விரிசிகை, அரைப்பட்டிகை, அரைஞாண், செவிமலர்ப்பூ, ஆழி, பூணூல், நுதலணி, தெய்யவுத்தி, தலைக்கோலம், தலைப்பாளை, கிம்புரி, பெருஞ்சூட்டு, சரப்பணி, மதாணி போன்றனவும் அணிகின்றதைக் காணமுடிகிறது.  சங்க காலப் பெண்கள் அணிகளில் ஒன்றான சிலம்பு பற்றியும் அது கழிக்கும் நோன்பு பற்றியும் இக்கட்டுரை விளக்குகிறது. 

சிலம்பு

சிலம்பு என்றால் ஒலித்தல் என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன.  பெண்கள் காலில் அணியும் அணிகளில் சத்தத்தை உண்டாக்கும் அணிக்குச் சிலம்பு என்று பெயர்.  இச்சிலம்பு சங்க காலம் தொட்டு பெண்கள் அணியும் அணிகலனாக விளங்குகிறது.  இன்று சிலம்பு அணியும் வழக்கம் பெண்களிடம் அருகியே காணப்படுகிறது.  சிலம்பை அடிப்படையாக வைத்து ஐம்பெருங்காப்பியங்களில் - இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் சிலம்பினை அடிப்படையாக வைதது எழுந்த காப்பியமாக அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.  சிலப்பதிகாரக் கதையின் முக்கியப் பகுதியாக அமைந்தது வழக்குரை காதையாகும்.  இதில் சிலம்பு மையப் பொருளானாலும் அதில் ஒலியெழுப்பத்தக்க பரல்கள் வேறுபட்டமைந்ததை இக்காதை விளக்குகின்றது.  அதாவது, கோப்பெருந்தேவியின் காற்சிலம்பில் முத்துப் பரல்களும், கண்ணகியின் காற்சிலம்பில் மாணிக்கப் பரல்களும் இருந்தமையை அறியமுடிகிறது.  இச்சிலம்பில் உள்ள பரல்கள் வேறுபட்டிருந்தாலும் உலோகம் ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும்.  ஐம்பொன்களில் பொன் (தங்கம்) தவிர்த்த ஏனைய நான்கு உலோகங்களில் ஒன்றாக சிலம்பு அமைந்திருக்க வேண்டும்.  பொதுவாக எடை வடுதலாக உள்ள இரும்பு, ஈயம், தாமிரம் ஆகியவற்றில் மக்கள் அணியும் அணிகலன்கள் செய்வதைத் தவிர்ப்பர்.  பொதுவாக அணிந்தே இருக்கும் அணிகளைத் தங்கம், வௌ¢ளி ஆகிய இரண்டு உலோகங்களில் மட்டுமே செய்கின்றனர்.  இன்றும் இவ்வழக்கம் இருப்பதைக் காணலாம்.  இவற்றில் வௌ¢ளியாலான அணிகலன்கள் பாதாதி கேசமாகவும் கேசாதி பாதமாகவும் அணிகின்றனர்.  ஆனால் தங்கத்தினாலான அணிகலன்கள் இடுப்புக் கீழே அணிவதில்லை.  இவ்வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.  அப்படிப் பார்க்கும்போது எப்பொழுதும் காலில் அணிந்திருக்கும் சிலம்பு வௌ¢ளியாலேயே அணிந்திருக்க வேண்டும்.  எனவேதான், சிலம்பின் உலோகத் தன்மை¬யை எடுத்துரைக்காமல் உள்ளீடு செய்யப்பட்ட பரல்களையே சிலப்பதிகாரம் பேசுகிறது.  சங்கப் பாடல்கள் சிலவற்றில் பெண்கள் சிலம்பு அணிந்ததையும், அச்சிலம்பினைத் திருமணத்திற்கு முன் கழற்ற விழா எடுத்ததையும் சுட்டிக் காட்டுகின்றன.  இவ்விழாவே “சிலம்புகழி நோன்பு” எனப்படுகிறது.

உரையாசிரியர்களின் பார்வையில் சிலம்புகழி நோன்பு

  சிலம்பு கழற்றுதலாகிய வினைமுறை திருமணத்திற்கு முன் செய்யப்படுவதா, பின் நிகழத்தடுவதா என்பதில் ஆராய்ச்சியாளரிடையே கருத்து வேறுபாடுண்டு.  பதிப்புப் பேராசிரியராகிய உ.வே.சா. அவர்களுக்கு இச்சிலம்பு கழித்தலாகிய வினை பற்றிய இருவேறுபட்ட கருத்து நிலவியுள்ளதனைக் குறுந்தொகைப் பதிப்பின் வாயிலாக அறியமுடிகிறது.  அவர் குறுந்தொகைப் பதிப்பின் நூலாராய்ச்சி என்ற பகுதியில் வழக்கங்களில் ஒன்றாகச் சிலம்புகழ நோன்பினைச் சுட்டும்போது, ‘மணம் செய்த பின்னர் மகளின் சிலம்பைக் கழிக்கும் ஒரு வகை நோன்பு பண்டைக் காலத்திற் செய்யப்பட்டது (குறுந்தொகை மூலமும் உரையும், நூலாராய்ச்சி, ப.83) என்று குறிப்பிட்டுவிட்டுப் பின்னர் நூற்பகுதியின் விளக்கவுரையில், ‘மணம் புரிவதற்கு முன், மணமகளது காலில் பெற்றோர்களால் அணியப்பட்ட சிலம்பை நீக்குவதற்கு ஒரு சடங்கு செய்யப்படும்; அது சிலம்புகழி நோன்பு’ எனப்படும் என்கிறார்.  சிலம்பு கழிதல் பற்றி அவர் கூறியுள்ள கருத்தினைத் தேடும்பொழுது ஐங்குறுநூற்றின் 399ஆம் செய்யுட் குறிப்புரையில், ‘மணம் புரிவதற்குமுன் மணமகளது காலில் பெற்றோர்களால் அணிந்திருந்த சிலம்பை நீக்குதற்கு ஒரு சடங்கு செய்யப்படும்; அது சிலம்புகழி நோன்பு எனப்படும் (ஐங்குறுநூறு மூலமும் பழைய உரையும், உ.வே.சா. பதிப்பு, ப.173) எனக் குறித்துள்ளார்.  மேற்காட்டிய கருத்துக்களை ஒத்து நோக்கும் பொழுது இருநூற்களின் செய்யுள் உரைக்குறிப்புகள் ஒத்த கருத்துடையனவாக இருப்பது கொண்டு திருமணத்திற்கு முன் நிகழ்த்தப்பெறுவதாகிய சடங்க என்பதே உ.வே.சா. அவர்களின் கருத்து எனலாம்.

சிலம்பு கழித்தலாகிய வினைமுறை மணவினைக்கண் நிகழ்த்தப்பெறும் சடங்கு முறையென நற்றிணைக்கு உரை வரைந்த பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், “மாதர்க்குக் காலணியாகிய சிலம்பு வதுவைக் காலத்துக் கழற்றுதல் மரபு” (நற்றிணை நானூறு மூலமும் உரையும், ப.5) என்கின்றார். 

  ஐங்குறுநூற்றக்கு உரை வரைந்த பெருமழைப்புலவர் பொ.வெ. சோமசுந்தரனார், “சிலம்பு கழீஇ என்பது மணவினைக்கண் ஒரு சடங்கு, மணமகள் இளம்பருவத்தே தொடங்கி அணிந்துள்ள சிலம்பினைக் கழற்றுதலாகிய சடங்கு” (ஐங்குறுநூறு, கழகம், ப.557) என்கிறார்.  
திருமணத்திற்குப் பின் நிகழ்த்தப்படும் வினைமுறையென ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி, “பண்டைக் காலத்தில் பெண்களுக்குத் திருமணம் ஆனவுடனே சிலம்புகழி நோன்பு என்னும் ஒரு சடங்கு நடைபெற்றது.  சிலம்பு அணிகிற வழக்கம் மறைந்து போன இந்தக் காலத்திலும் அந்தச் சடங்கு மறைந்து போமாமல் வழக்கத்தில் இருந்து வருகிறது.  திருமணம் ஆனவுடனே மணமகனும் மணமகளும் முதன்முதலில் வீட்டுக்கு வரும்போது அவர்களை வீட்டு வாயிலில் நிறுத்தி ஆலத்தி சுற்றி நீரை மணமகள் காலில் ஊற்றுகின்ற வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.  இது பழைய ‘சிலம்புகழி நோன்பைக்’ குறிக்கிறது போலும்” (நுண்கலைகள், மயிலை. சீனி. வேங்கடசாமி, ப.117) என்கின்றார்.

         இதற்கு மாறாக உ.வே.சா. அவர்களின் கருத்தை ஆதரிக்கும் வகையில் நற்றிணைக்கு விளக்கவுரை எழுதிய ஔவை துரைசாமிப்பிள்ளை, “பெற்றோர் மணமாகா முன்னர் அணிந்திருந்த சிலம்பும் வளையுமாகிய கலன்களைக் கழித்து மணமகன் அளிக்கும் சிலம்பும் வளையும் அணியும் சடங்கு சிலம்புகழீஇ என்றும், சிலம்புகழி செல்வமென்றும் பண்டை நாளில் வழங்கிற்று” (நற்றிணை விளக்கவுரை, ஔவை துரைசாமிப்பிள்ளை, பக்.1091-92) என்று கூறுகின்றார்.

       மேற்காட்டிய சான்றுகள் கொண்டு இவ்வினைமுறை நிகழ்த்தும் காலம் பற்றி மூன்று வேறுபட்ட கருத்துக்கள் நிலவியதனை அறியமுடிகின்றது.  இம்மூவகையான கருத்துக்களை மனத்தில் கொண்டு இலக்கியச் சான்றுகளை ஆராயும்பொழுது இவ்வினை பற்றிச் சுட்டிச் செல்லும் ஐங்குறுநூற்றுப் பாடலே இச்சிக்கலைத் தீர்க்கும் நிலையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிலம்புகழி நோன்பு

இளம்பெண்கள் திருமணம் ஆவதற்கு முன்பு காலில் சிலம்பு அணிந்திருப்பர்.  இளம் பருவத்திலிருந்தே அணியப்பட்ட அச்சிலம்பு, மணம் முடிவானதற்குப் பின்னரும், மணம் நிகழ்வதற்கு முன்னருமான ஒரு நன்னாளில் மணமகள் இல்லத்தில் சிலம்பு நீக்கும்விழா நடைபெறும்.

   அந்நாளில் மணமகள் நோன்பு நோற்பாள்.  இது சிலம்புகழி நோன்பு எனப்படும்.  கன்னி கழிக்கும் சின்னமே சிலம்புகழி நோன்பு எனத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட வாழ்வியற் களஞ்சியம் (தொகுதி 9, ப.36) குறிப்பிடுகிறது.  இவ்விழா அகவை முதிர்ந்த மங்கல மகளிர் சிலர் ஒன்றாகக் கூடிச் செய்யும் சடங்காகும்.  உறவினரும், மகளிரும் சூழ்ந்திருக்க, மணமகன் மணப்பெண்ணின் காலில் சிலம்பினைக் கழிக்கும் காட்சி பகடிக்கு - பரிகாசத்திற்கு உரியதாக அமையும்.  தாய்க்கு இக்காட்சி கண்ணிற்கும், உளத்திற்கும் உவப்பை நல்கும்.  சிலம்புகழி என்னும் தொடரால் குறிக்கப்பெற்றமையாலும், மணமகள் நோன்பு மேற்கொண்டமையாலும், சிலம்பை மணமகன் கழித்தமையாலும், மகளிர் விழாவாக நிகழ்த்தப்பட்டமையாலும் சிலம்பு ஒரு கன்னிச் சின்னமாக அணியப்பட்டதை உணரலாம்.

தமிழர் திருமணம் பற்றி ஆராய்ந்த எஸ். சுப்பிரமணிய பிள்ளை பின்வருமாறு கூறுவர்.  ‘குமரிக்கு அடையாளம் சிலம்பு எனக் கொண்டனர்.  குமரிமை கழிவிற்குச் சிலம்பு அகற்றப்படுகிறது.  இவ்வாறு சிலம்பு அகற்றுவதையே சிலம்புகழி நோன்பு எனக் குறிப்பிடுகின்றனர்.  இது திருமணத்தில் ஒரு சடங்காகவும் மாறியது.  இது சங்கச் சமுதாய வழக்காகவும் திகழ்ந்தது எனலாம்.  உடன் போக்கின் போதும் உறவினரல்லாத இடங்களில் மணம் செய்வதாயினும் அங்கே சிலம்பு அகற்றும் தன்மை காணப்படுகிறது.  ஆயினும் இதனைச் சோமசுந்தர பாரதியார் இடைச்சுரம் கடக்கும் தன்மை எனச் சுட்டிக் காட்டுகின்றனர்.  எனினும் யான் கொண்ட முடிவு இமு ஒரு சடங்கேயாம்.  இச்சடங்கைப் பார்க்க வேண்டுமென்று பெண்ணைப் பெற்றதாய் பெரிதும் விரும்புகின்றாள் என்பது சங்கப் பாடலால் உணரலாம்.  சிலம்பு அகற்றுவதன் மூலம் இவள் மணமானவள் என்பது தெளிய இயலும். சிலம்புகழி நோன்பு குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. எனினும் சிலம்புகழி நோன்பு சிலம்பை அகற்றுவதல் என்பதேயாம்” (மேற்கோள், முனைவர் வி.சி. சசிவல்லி, தமிழர் திருமணம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2003, பக்.43-45) என்கின்றார்.

சிலம்பு என்பது மகளிர் காலில் பூணும் அணியாகும்.  திருமணத்திற்குமுன் இவ்வணியைக் கழற்றுதல் மரபாகப் பேணப்பட்டிருப்பதனைச் சிலம்புகழி நோன்பு உணர்த்துகிறது.  எனினும் பெண்டிர் திருமணத்திற்குப் பின்னும் இவ்வணியினைப் பூண்டிருந்தமையினை இலக்கியச் சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன.  இவ்வணியை அழகுக் கருதி அணிந்தனரா அல்லது ஏதாவது குறியீட்டை உணர்த்தும் முகத்தான் பயன்படுத்தினரா எனச் சிந்திக்கும் பொழுது இது பரு மகளிரின் அணியாகத் திருமணத்தின் முன்னும் பின்னும் அணிந்திருந்தமையினையே இலக்கியச் சான்றுகள் தெரிவிக்கின்றன.  பெண்டிர் சிலம்பு பூண்ட நிலை கழல் அணிந்த நிலையோடு ஒப்பிடத்தக்கதாக அமைகிறது.  ஆடவர் கழல் அணிதல் பருவ வளர்ச்சியினை உணர்த்தும் நிலையிலும் மற்றும் வீரத்தின் அறிகுறியாகவும் பயன்பட்டமையினையே தமிழிலக்கியச் சான்றுகள் தெரிவிக்கின்றன.  சங்க காலச் சமுதாயத்தில் பெண் குழந்தைக்குப் பாலுண் பருவத்தில் கால்களில் சிலம்பணிவிப்பார்கள்.  இப்பெண் குழந்தை வளர்ந்து கன்னியாய் இருக்கும் வரை சிலம்பணிந்து கொள்ளும் பழக்கம் இருக்கும்.  இக்குழந்தை காற்சிலம்பு ஒலிக்க சிறுதோழயருடன் பந்து விளையாடுவதைக் கண்டு பெற்றோர் மகிழ்வர்.  இக்காற் சிலம்பின் இன்னோசை இக்குழந்தை வளர்ந்து இளம்பருவ வாயிலை அடைந்து தன் உள்ளங் கவர்ந்த தலைவனோடு கூடிப் பழகுதற்கு இன்னா ஓசையாய் அமைகிறது.  இரவுக் குறியில் தலைவனும் தலைவியும் சந்திக்கின்றனர். தனது நடமாட்டத்தைத் தன்வீட்டார் தன் சிலம்பின் ஒலியால் அறிந்துவிடக் கூடாது என்று அச்சிலம்பின் ஒலியைக் கட்டி அடக்கி வந்து செல்கின்றாள்.  இதனை,

“அஞ்சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து
துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்” (அகம்.198)

என்று தலைவன் தலைவியின் அன்பையும் அறிவையும் வியந்து கூறும் கூற்றால் அறியலாம்.  குறுந்தொகைத் தலைவி ஒருத்தி தன் திருமணம் பெற்றோரால் தடைப்படுமோ என்ற ஐயம் எழுந்தபோது தலைவனுடன் தன்தமர் அறியாவாறு செல்கின்றாள்.  பாலை நிலத்தைக் கடந்து தலைவனும் தலைவியும் போகிறார்கள்.  அவ்வாறு செல்கையில் வழியில் எதிர்ப்பட்டோர் இவர்களைக்  காண்கின்றனர்.  இவர்கள் யாரோ என எண்ணுகின்றனர்.

“வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே” (குறுந்.7)

என்ற குறுந்தொகைப் பாடலில், வில்லேந்திய இவன் காலில் வீரக்கழல்கள் உள்ளன.  வளையலணிந்த இவள் வெல்லடிகளில் சிலம்புகள் உள்ளன என்று வரும் அடிகளிலிருந்து இன்னும் இவர்கள் திருமணம் ஆகாமையை உணர்த்துதல் காணலாம்.  எனவே சங்க காலப் பெண்களுக்குத் திருமணம் நடைபெறும் வரை காலில் சிலம்பணிந்தனர் என்பது பெறப்படும்.  அதேசமயம் திருமணம் ஆன பெண் என்பதற்கு அடையாளமாக சிலம்பினை அகற்றுதல் இன்றியமையாத செயலாக இருந்தமையும் சங்கப் பாடல்களின் துணைகொண்டு அறியலாம்.  அந்நாளில் இதுவொரு சமுதாய மரபாகவும் கடைபிக்கப்பட்டது.  இதுவே சிலம்புகழி நோன்பு என்ற சடங்காகவும் மேற்கொள்ளப்பட்டது.

உடன் கொண்டு போய தலைமகன் தலைவியைத் தன் இல்லத்திற்குக் கொண்டு புக்குழி அவன்தாய் தன் மகளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்கின்றாளெனக் கேட்ட நற்றாய் ஆண்டு நின்று வந்தார்க்குச் சொல்லியதாக,

“நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினும்
எம்மனை வதுவை  நன்மணங் கழிகெனச்
சொலி னெவனோ மற்றே வென்வேல்
        மையற விளங்கிய கழலடிப்
        பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே” (ஐங்.399)

எனும் பாடல் அமையக் காண்கிறோம்.  இங்கு நற்றாயின் கூற்றில் சிலம்புகழிதலாகிய வினை தன்மனையில் நிகழ வில்லையேஎன்ற ஏக்கவுணர்வும் தன்மனையில் வதுவைச் சடங்காவது நிகழ்வதற்குத் தலைவனின் தாயிடம் கூறி வந்தீர்களா என்று உரிமையுணர்வோடு ஆண்டு நின்று வந்தாரிடம் வினவியமையும் சிலம்புகழி நோன்பு தலைவியின் இல்லத்தில் நிகழ்வதே அக்கால வழக்கமென்பதைப் புலப்படுத்தும்.  சங்க காலத்தில் திருமணம் பெண் வீட்டிலேயே நிகழ்ந்தமை மேற்சுட்டிய சான்றுக்கு ஆதாரமாகவும் ஆதரவாகவும் அமைகிறது.  மேலும் மகட்போக்கிகக செவிலித்தாய் கூற்றாக அமைந்த,

“சிறப்புஞ் சீரு மின்றிச் சீறூர்
நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பை
ஓரா யாத்த வொருதூண் முன்றில்
ஏதில் வறுமனைச் சிலம்புடன் கழீஇ
மேயினள் கொல்லென நோவல் யானே” (அகம்.339:22-26)

என்ற அகநானூற்றுப் பாடலிலும், நற்றாய் கூற்றாக அமைந்த,

“பசிப்பிடி யிதைத்த வோமைச் செவ்வரை
வெயில்கா யமைத் திமைக்கு மத்தத்து
அதருழந் தசையின கொல்லோ ததரல்வாய்ச்
சிலம்பு கழீஇய செல்வம்
பிறருழைக் கழிந்தவென் னாயிழை யடியே” (நற்.279:7-11)

என்ற நற்றிணைப் பாடலிலும், தன்மனையில் சிலம்பு கழித்தலாகிய வினை நிகழவில்லையே என்ற ஆற்றாமையுணர்வு வெளிப்பட்டிருக்கக் காண்கிறோம்.  ஐங்குறுநூற்றுக்குப் பின்னாளில் உரை வரைந்த பெருமழைப்புலவர் பொ.வெ. சோமசுந்தரனார் மற்றும் ஔவை துரைசாமிப்பிள்ளை ஆகியோர்களின் கூற்றுகளும் சிலம்புகழியாகிய வினை பெண் வீட்டில் நிகழ்வதனையே சிறப்பாகக் கருதியமையினைப் புலப்படுத்தும்.  மேற்காட்டிய சான்றுகள் கொண்டு சிலம்பு கழித்தலாகிய நோன்பு தலைவியின் வீட்டில் நிகழ்வதே அன்றைய வழக்கம் என்பது போதரும்.

முடிவுரை

சங்க காலத்தில் திருமணத்திற்கு முன் மணமகள் வீட்டில் மணமகளின் காலில் குழந்தைப் பருவம் முதல் அணிந்திருந்த சிலம்பை மணமகள் கழித்தல் ஒரு சடங்காக நடத்தப்பெற்றதை அறிகிறோம்.  “என் மகள் தான் பிறந்த மனையில் சிலம்பு கழிக்கும் நோன்பு செய்யப்பெறாளாய்த் தலைவனுடன் போயினாள்” (அகம்.315) என்று மகட்போக்கிய தாய் வருந்துவதாகவும், “என்மகள் சீறூரில் வறுமையுள்ள பெண்ணொருத்தியின் வறுமையிடத்தே சீரும் சிறப்புமின்றிச் சிலம்பு கழிக்கும் சடங்கினைச் செய்து தன் தலைவனுடன் மனம் பொருந்தினளோ” (அகம்.369) என்றும், “மூத்த சான்றோர் வதுகைக் கரணங்களை இயற்ற, மங்கல மகளிர் நீராட்டிப் பல சடங்குகளைச் செய்ய என் மகள் பலரறியக் காதலனை மணந்துசெல்லாது அறியாத் தேயத்துச் சென்று சிலம்புகழித்து உறைதல் கொடிது” (அகம்.385) என்று செவிலித்தாயர் வருந்துவதையும், “சிலம்பு கழிக்கும் காட்சியாகிய செல்வத்தை யான் கண்டு மகிழ்தற்கின்றிப் பிறர் கண்டு மகிழுமாறு என் மகள், தன் காதலனுடன் போய்விட்டாளே” (நற்.279) என்று ஒரு தாய் புலம்புவதையும், உடன்போக்கில் தலைவன், தலைவியைத் தன் இல்லத்திற்குக் கொண்டு சென்றவழி, அவன்தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்ய, நற்றாய், “தன்மனைக்கண் வருவை நன்மணய்ம செய்யத் தலைவனின் தாயிடத்து இசைவு பெற்று வாருங்கள்” (ஐங்.399) என்று தன் விருப்பதை அங்கிருந்து வந்தாரிடத்துக் கூறுவதையும் காணும்போது சிலம்புகழி நோன்பு மணமகளுக்குத் திருமணம் நடைபெறுவதற்கு முன்பு நடத்தப்பெறும் சடங்கு என்பது தெளிவாகிறது.  ஆனால் மணமான கண்ணகியின் காலில் சிலம்பு அணிந்திருந்ததைக் காப்பியக் காலம் எடுத்துரைக்கிறது.  சங்க கால மரபு காப்பியக் காலத்தில் மாற்றம் பெற்றுள்ளதை உணரமுடிகிறது.   சங்க காலத்தையும் காப்பியக் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது சிலம்பு கழித்த மணப்பெண் திருமணத்திற்குப் பிறகு சிலம்பு எவ்வாறு அணிந்தாள் என்ற வினா எழுகிறது.  இதற்கு, திருமணத்திற்கு முன் மணமகளின் பெற்றோரால் இடப்பெற்ற சிலம்பு கழற்றப்பெற்று பின் மணமான பிறகு மணமகள் வீட்டார் புதியதொகு சிலம்பு மணமானவளின் காலில் இடப்பெற்றிருக்கலாம்.  இக்கூற்று பொருந்துவதாக இல்லை.  ஏனெனில், உடன்போக்கில் சென்ற தலைவியின் காலில் சிலம்பு இருப்பதைக் கண்டு இவள் மணமாகாதவள் என்று குறிப்பிடும் குறுந்தொகை 7ஆம் பாடலால் உய்த்துணரப்படும்.  ஆக, சங்க காலத்தில் இருந்த சடங்கு காலப்போக்கில் காப்பியக் காலத்தில் மறைந்து மணமாவதற்கு முன்னும் பின்னும் பெண்கள் காலில் சிலம்பு அணிந்திருந்த நிலை மாறியிருக்கிறது.  இக்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெண்கள் கொலுசு அணிந்திருப்பதை ஒத்துப் பார்க்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக