வெள்ளி, 2 நவம்பர், 2018

திருமந்திரத்தில் பிறப்பியல்

தொல்காப்பியரின் பிறப்பியலிலிருந்து திருமூலரின் பிறப்பியல் முற்றிலும் வேறானது.  தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தில் மூன்றாவது இயலான பிறப்பியல் எழுத்துக்களின் பிறப்பினை உணர்த்துவதாகும்.  திருமூலரின் திருமந்திரத்தில் 477-486 வரையுள்ள பத்துப் பாடல்களும் உயிர்களின் பிறப்பியலையும், அவற்றின் தன்மைகளையும் இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.

சுவாசம்

பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என வாயுக்கள் பத்து வகைப்படும்.  இதில் முதலாவதாக இடம்பெறும் பிராண வாயுவே சுவாசம் நடைபெறுவதற்கு மூலகாரணமாக அமைகின்றது.  இது நெற்றியின் நடுப்பகுதியில் பிறக்கின்றது.  இப்பிராண வாயு நடுமுதுகில் ஓடும் சித்திரநாடி எனப்படும் சுழிமுனை நாடியில் விழுந்து மூலாதாரத்தில் "ஓம்" என்று உதித்துப் பின் தொப்புளின் வளையத்திலே "ரீம்" என்று முட்டி நின்று இடகலை, பிங்கலை என்னும் நாடிகளில் ஓடி, கபாலத்தைச் சுற்றி பின் மூக்கின் வழியாய் மூச்சு விடுவதனால் பன்னிரண்டு அங்குலம் சென்று, மீண்டும் எட்டங்குலம் உட்புறம் பாய்ந்து செயல்படும்.  இச்செயலே சுவாசம் எனப்படும்.

இச்சுவாசம், எந்தவித நோய்த் தன்மைகளும் இல்லாதவருடைய உடலில் ஒரு நாழிகைக்கு முன்னூற்றறுபது சுவாசமும்; ஒரு நாளைக்கு, அதாவது ஓரிரவும் பகலும் சேர்ந்த அறுபது நாழிகைக்கு (360x60=21,600) இருபத்தோராயிரத்து அறுநூறு சுவாசமும் உள்வாங்குகின்றது.  இதில் மூன்றில் ஒரு பங்கான ஏழாயிரத்து இருநூறு (7,200) சுவாசம் வெளிப்பட்டு விடுகின்றது.  மற்ற இரண்டு பங்கான பதினான்காயிரத்து நானூறு (14,400) சுவாசம் உள்ளடங்குகின்றது.

நாடி

நாடி, இதயத்தின் இடது சடரம் (Left Ventricle) குவியும்போது இதயத்தில் இருந்து வெளிப்படும் இரத்தம் உடலிலுள்ள நரம்புகளின் வழியோடி இங்கும் அங்கும் பரவும்.  அப்போது நாடிகள் விரியும்.  மீண்டுமது விரிகையில் நாடிகளில் இரத்தம் குறைந்து நாடி சுருங்கும்.  இவ்வாறு விரிந்தும் குவிந்தும் வருவதனால் அதனுடன் இணைந்த நாடிகளும் விரிதலையும் குவிதலையும் மேற்கொள்ளும் இச்செய்கையே நாடி எனப்படும்.  இவ்வாறு உண்டாகும் நாடி உடல் முழுவதும் உரிபோல் பின்னி நிற்கின்றது. இந்நாடி எழுபத்தீராயிரம் வகைப்படும்.  

இவ்எழுத்தீராயிரம் நாடிகளுள் பத்து நாடிகள் சிறப்பிடம் பெறுகின்றன.  அவை, இடகலை, பிங்கலை, சுழிமுனை, சிங்குவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குரு எனப்படும்.

இடகலை - வலக்கால் பெருவிரலில் இருந்து கத்தரிக்கோல் 
                                        போல் இடது மூக்கைப் பற்றி நிற்கும்.
பிங்கலை - இடக்கால் பெருவிரலில் இருந்து கத்தரிக்கோல் 
                                        போல் வலது மூக்கைப் பற்றி நிற்கும்.
சுழிமுனை - மூலாதாரத்தைத் தொடர்ந்து எல்லா 
                                        நாடிகளுக்கும் ஆதாரமாக நடு நாடியாகச் 
                                        சிரசளவும் முட்டி நிற்கும்.
சிங்குவை - உள் நாக்கில் நிற்கும்.
புருடன் - வலக்கண்ணளவாய் நிற்கும்.
காந்தாரி - இடக்கண்ணளவாய் நிற்கும்.
அத்தி - வலக்காதளவாய் நிற்கும்.
அலம்புடை- இடக்காதளவாய் நிற்கும்.
சங்கிலி - குறியளவாய் நிற்கும்.
குரு - அபானத்தளவாய் நிற்கும்.

மேலே குறிப்பிட்ட பத்து வகை நாடிகளுள் முதல் மூன்று நாடிகளான இடகலை, பிங்கலை, சுழிமுனை என்னும் மூன்று நாடிகள் மிகவும் சிறப்பிடம் பெறுகின்றன.  உடலில் காணப்படும் எழுபத்தீராயிரம் நாடிகளுள் இருநூற்று நாற்பத்தைந்து நாடிகளே உணரவும் உணர்த்தவும் கூடியனவாக உள்ளன.  இந்த இருநூற்று நாற்பத்தைந்து நாடிகளில் இடகலை, பிங்கலை, சுழிமுனை என்னும் மூன்று நாடிகளும் அடங்கும்.  இம்மூன்று நாடிகளில், இடகலை நாடியினை வாத நாடியாகவும்,  பிங்கலை நாடியினைப் பித்த நாடியாகவும், சுழிமுனை நாடியினைச் சிலேத்தும நாடியாகவும் கருதப்படுகின்றது. 

வாத பித்த சிலேத்தும நாடிகள் ஒரே நரம்பில் கைநாடியில் காணப்படும்.  இதனை, நோயாளியை உட்கார வைத்து அவரின் கையைப் பிடிக்க வேண்டும்.  நோயாளி ஆணாக இருந்தால் வலது கையையும், பெண்ணாக இருந்தால் இடது கையையும், அலியாக இருந்தால் இரண்டு கைகளையும் பிடிக்க வேண்டும்.  கையைப் பிடிக்கும் போது முதல் பணியாக விரல்களின் மூட்டுகளில் தங்கியிருக்கும் வாயுவை அகற்றுவதற்காக விரல்களைச் சுடக்கி விட வேண்டும்.  பின், உள்ளங்கையில் சூடு உண்டாகும் அளவிற்குத் தேய்த்துவிட வேண்டும்.  முன்கையின் ஆரையெலும்பின் மேற்புறமுள்ள பெருநாடியை மணிக்கட்டுக்கு ஒரு அங்குலம் கீழாக நோக்கி சுட்டுவிரல், நடுவிரல், மோதிரவிரல் ஆகிய மூன்று விரல்களால் ஒருவிரல் விட்டு மற்றொரு விரலால் அழுத்தியும், தளர்த்தியும் பார்க்க வேண்டும்.  அவ்வாறு பார்க்கும்போது சுட்டு விரலில் உணர்வது வாதம் என்றும், நடு விரலில் உணர்வது பித்தம் என்றும், மோதிர விரலில் உணர்வது சிலேத்துமம் என்றும் இம்மூன்று வகை நாடிகளையும் அறியலாம்.

சுவாசத்தை அடிப்படையாகக் கொண்டெழும் நாடி, போக காலத்தில் இருக்கும் தன்மையைக் கொண்டு உயிரின் பிறப்பியல் உணர்த்தப்படுகிறது.  தமிழர்கள் அறிவியலைத் தம் மூச்சை விட்டும் இழுத்தும் பயிலும் முறையில் கண்டுள்ளனர்.  இதனைப் 'பிராணாயாம முறை' என்பர்.  நாசியின் வழிகளில் வரும் மூச்சினை நம் விருப்பத்தின்படி நடக்க அமைப்பதே பிராணாயாமப் பயிற்சியாகும்.  இந்தப் பணிற்சியினால் ஆண்பிள்ளைகளை வேண்டின் ஆண் பிள்ளையையும், பெண்பிள்ளை வேண்டின் பெண்பிள்ளையையும் பெறலாம்.  ஏன், அலிப்பிள்ளைகள் பிறப்பதற்கும் காரணம் இந்தப் பிராணாயாமப் பயிற்சியே என்பர்.  இக்கருத்தின் அடிப்படையில் திருமூலரின் திருமந்திரம் அமைந்திருப்பதைப் பின்வருமாறு காணலாம்.

மூவகைப் பிறப்பியல்

உயிரை ஆணாகவும், பெண்ணாகவும், அலியாகவும் பார்த்தல் கூடாது.  அவ்வுயிர் உடலோடு சேர்ந்த பிறகுதான் ஆணாகவும், பெண்ணாகவும், அலியாகவும் மாறுகிறது.  உயிருக்கு இம்முத்திறத் தன்மை இல்லை.  உடம்புக்கே இம்முத்திரத் தன்மை உண்டு என்பர்.  இம்முத்திறத் தன்மையை உண்டாக்குபவர்கள் தாய் தந்தையரே ஆவர்.  தாய் தந்தையரின் தன்மையைத் திருமூலர்,

"மாண்பது வாக வளர்கின்ற வன்னியைக்
காண்பது ஆண்பெண் அலியெனும் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தான் அச்சோதிதன் ஆண்மையே" (திருமந்.477)

என்கிறார்.  மேலும், ஆண் குழந்தை பிறப்பதும், பெண் குழந்தை பிறப்பதும் தாய் தந்தையரின் தன்மையைக் கொண்டேயாகும்.  கூட்டுறவின்போது ஆண் தன்மை மிகுந்திருந்தால் ஆண் குழந்தை உண்டாகும் என்றும், பெண் தன்மை மிகுந்திருந்தால் பெண் குழந்தை உண்டாகும் என்றும், ஆண் தன்மையும் பெண் தன்மையும் சமமாக இருந்தால் அலிக்குழந்தை உண்டாகும் என்றும் கூறுவர்.  இதனைத் திருமூலர்,

"ஆண்மிகில் ஆண்ஆகும் பெண்மிகில் பெண்ஆகும்
பூண்இரண் டொத்துப் பொருந்தில் அலிஆகும்" (திருமந்.478)

என்கின்றார்.  ஆண், பெண், அலி ஆகிய உயிர்கள் பிறப்பதற்குப் போக காலத்தில் ஏற்படக்கூடிய சுவாச அமைப்பே காரணம் என்பர் அறிவியலார்.  அதாவது, போக காலத்தில் ஆண் மகனின் சுவாசம் வலது நாசி (சூரிய கலை)யில் இருக்கும்போது ஆண் குழந்தை உண்டாகும் என்றும், இடது நாசி (சந்திர கலை)யில் இருக்கும்போது பெண் குழந்தை உண்டாகும் என்றும், வலது நாசி (சூரிய கலை)யும், இடது நாசி (சந்திர கலை)யும் ஒத்து இயங்கினால் அலிக்குழந்தை உண்டாகும் என்றும், சுக்கிலத்தைச் செலுத்தும் பிராண வாயுவோடு அபானன் என்னும் மலக்காற்று எதிர்த்தால் சுக்கிலம் சிதைந்து இரட்டைக் குழந்தை உண்டாகும் என்றும் கூறுவர்.  இதனைத் திருமூலர்,

"குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே" (திருமந்.482)

என்கிறார்.

தோற்ற ஆயுள்

ஆணாகவும், பெண்ணாகவும், அலியாகவும் பிறக்கும் குழந்தை எவ்வளவு காலம் வாழும் என்பதைக் கருத்தரிக்கும் விதங்கொண்டே கணக்கிடுவர்.  சுக்கிலமானது ஆணிடமிருந்து பிரிந்து ஐந்து விரற்கடை ஓடி விழுந்தால் பிறக்கும் குழந்தை நூறாண்டு வாழும் என்றும், நான்கு விரற்கடை ஓடி விழுந்தால் பிறக்கும் குழந்தை எண்பதாண்டு வாழும் என்றும் கூறுவர்.  இதனைத் திருமூலர்,

"பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாயந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்" (திருமந்.479)

என்கிறார்.

பிறப்பும் பிறப்பின்மையும்

புணரும்போது, சுவாசமானது ஆணுக்கும் பெண்ணுக்கும் வலது நாசி அல்லது இடது நாசியில் ஒத்து இருக்குமாயின் உண்டாகும் குழந்தை அழகாக இருக்கும் என்றும், சுவாசமானது ஆணுக்கும் பெண்ணுக்கும் வலது நாசி அல்லது இடது நாசியில் ஒவ்வாமை இருக்குமாயின் அப்போது குழந்தை உண்டாகாது என்றும் கூறுவர்.  இதனைத் திருமூலர்,

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியும் கோமளம் ஆயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே". (திருமந்.483)

என்கிறார்.

கருப்பாசய நிலை

கருப்பையில் வளரும் குழந்தையும் அண்ணாக்கினுள்ளே விளங்கும் சோதியும் ஒன்றாகும்.  அது ஆணாகவோ பெண்ணாகவோ வளர்ந்து சூரியனது பொன்னுருவைப் போன்று வளர்ச்சியுற்றுப் பூரணமான உருவத்தைப் பெறும் என்பதைத் திருமூலர்,

"கோல்வளை உந்தியில் கொண்ட குழவியும்
தால்வலை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்
போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே". (திருமந்.484)

என்கிறார்.  கருவானது கருப்பையில் பத்து மாதங்கள் வளர்ந்து பக்குவம் உண்டான பிறகே பூமியில் பிறந்து வளரும் தன்மையைப் பெறும்.  இதனைத் திருமூலர்,

"உருவம் வளர்ந்திடும் ஒண்திங்கள் பத்தில்
பருவமது ஆகவே பாரினில் வந்திடும்" (திருமந்.485)

என்கிறார்.  பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை வித்திட்ட தந்தையும், ஏற்றுக்கொண்ட தாயும் அறியமுடிவதில்லை.  இதனைத் திருமூலர்,

"இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்" (திருமந்.486)

என்கிறார்.  ஆனால் இன்று அறிவியல் வளர்ச்சியின் காரணமாக பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதைக் காலவோட்டத்தில் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

உடல் குறைப்பாடு

குட்டையாகவும், கூனாகவும், முடமாகவும், ஊமையாகவும், குருடாகவும், மந்தமாகவும் குழந்தை பிறப்பதைக் காண்கிறோம்.  இக்குறைபாட்டிற்குப் பல்வேறு காரணங்களைக் கூறினாலும், இவற்றிற்கெல்லாம் சுக்கிலத்தைச் செலுத்துகின்ற வாயுவே மூல காரணமாக அமைகின்றது என்பர்.  சுவாசத்தின் மாறுபட்ட செயற்பாட்டால் விந்துவின் வேகத்தன்மை மாறுபடும்.  இதற்கேற்ப குழந்தை குட்டையாகவோ, முடமாகவோ, கூனாகவோ பிறக்கும்.  அதாவது, சுக்கிலத்தைச் செலுத்துகின்ற வாயு குறையுமானால் குழந்தை குட்டையாகவும், அவ்வாறு செலுத்துகின்ற வாயு மெலிந்திருக்குமானால் குழந்தை முடமாகவும், அவ்வாயு தடைப்படுமானால் குழந்தை கூனாகவும் பிறக்கும் என்பர்.  இதனைத் திருமூலர்,

"பாய்கின்ற வாயு குறையின் குறள்ஆகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடம்ஆகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூன்ஆகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே" (திருமந்.480)

என்கிறார்.  பெண்ணின் உடல் நிலையினாலும் குழந்தைகள் மந்தமாகவும், ஊமையாகவும், குருடாகவும் பிறக்கும் என்பதைத் திருமூலர்,

"மாதா உதரம் மலம்மிகின் மந்தனாம்
மாதா உதரம் சலம்மிகின் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்இல்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே" (திருமந்.481)

என்கிறார்.

ஆணாகவோ, பெண்ணாகவோ, அலியாகவோ பிறக்கும் குழந்தையின் தன்மையையும், அக்குழந்தை பிறந்த பின் அவற்றின் ஆயுள் காலத்தையும், அக்குழந்தை குறைப்பிறப்புடன் பிறப்பதற்கான காரணத்தையும் மேற்சுட்டிய திருமூலரின் திருமந்திரப் பாடல்களால் உணரமுடிகிறது.  இவற்றைப் பார்க்கும் போது திருமூலர் ஒரு குழந்தைப்பேறு மருத்துவராக விளங்கியுள்ளார் என்பது வௌ¢ளிடைமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக