நீலகண்டர் என்றால் நீலநிறமுடைய கழுத்தையுடையவன் என்று பொருள். சிவபெருமானை நீலகண்டர் என்பர். சங்க இலக்கியந்தொடங்கி இன்றுவரை பல்வேறு வகையான இலக்கியங்களிலும் சிற்பங்களிலும் நீலகண்டரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. பெரும்பாலான நீலகண்டக் குறிப்புகள் பன்னிரு திரமுறைகளிலேயே பார்க்கமுடிகிறது. இலக்கியங்களில் கிடைக்கும் நீலகண்டக் குறிப்பிற்கொப்ப நீலகண்டச் சிற்பங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும், சில நீலகண்டச் சிற்பங்களே கிடைத்துள்ளன. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல இச்சில நீலகண்டச் சிற்பங்கள் இலக்கிய நீலகண்டருக்கு விளக்கம் அளிப்பவையாக உள்ளன.
நீலகண்டர்
பாற்கடலில் மந்திரகிரியை மத்தாகவும் வாசுகி எனும் பாம்பைக் கயிறாகவும் பூட்டிப் பாம்பின் வாய்ப்புறத்தில் அசுரரும் வாற்புறத்தில் தேவரும் நின்று பாற்கடலைக் கடைந்தபோது வாசுகி எனும் பாம்பானது தன் வாய் வழியாக நஞ்சைக் கக்கியது. இந்நஞ்சின் கொடுமை தாங்கமுடியாத தேவர்கள் பிரம்மனிடம் வந்து முறையிட்டனர். பிரம்மதேவனோ நம்மைக் காப்பவன் சிவபெருமானே என்றெண்ணி தேவர்களுடன் கயிலை மாமலையில் வீற்றிருக்கும் சிவபெருமானிடம் சென்று அடைக்கலம் கேட்கின்றனர். சிவபெருமானும் இவர்களைக் காப்பதாகக் கூறி அந்நஞ்சைப் பருகுகிறார். நஞ்சைப் பருகும் போது அந்நஞ்சு கழுத்தருகே வந்ததும் கழுத்து நீலநிறமாவதைக் கண்ட பிரம்மா 'பெருமானே இந்நீலநிறக் கழுத்து தங்களுக்கு மிகவும் அழகாக இருக்கிறது. இந்நஞ்சை இங்கேயே நிறுத்தி வையுங்கள்' என்கிறார். அதன்படியே சிவபெருமான் நஞ்சைக் கழுத்தில் நிறுத்தி 'ஸ்ரீகண்டமூர்த்தி' யாகிறார்(சிவமஉறாபுராணம், மூன்றாம் பாகம், பக்.53-60). இச் ஸ்ரீகண்டமூர்த்தியே நீலகண்டராவார்.
இலக்கியங்களில் நீலகண்டர்
சிவபெருமானின் அங்கங்களில் மிகவும் சிறப்பித்து வருணனை செய்யப்படுவது நீலநிறமாய்த் தோன்றும் கழுத்தேயாகும். சங்ககாலந் தொடங்கி எழுந்த பல்வேறு வகையான இலக்கியங்களில் இந்நீலநிறக் கழுத்தைப் பலர் வருணனை செய்துள்ளனர். ஸ்ரீகண்டர், விஷகண்டர், விஷபாஉறரணர், சிதிகண்டர், நீலகிரீவன் எனப் பலவாறு சமஸ்கிருதத்தில் கூறப்படும் இந்நீலகண்டப் பெயரைப் போலவே தமிழிலக்கியத்துள்ளும் பலவாறாகக் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.
தேவரும் அசுரரும் பாற்கடலில் அமுது கடையும் போது உண்டான நஞ்சைச் சிவபெருமான் உண்டு தேவர்க்கு அமுதளித்த செய்தியினைத் திருஞானசம்பந்தர்,
"சிலைதனை நடுவிடை நிறுவியொர் சினமலி யரவது கொடுதிவி
தலமலி சுரர சுரர்களொலி சலசல கடல்கடை வுழிமிகு
கொலைமிலி விடமெழ அவருடல் குலைதர வதுநுகர்பவன்" (1:22:1)
என்றும்,
"நாகந்தான் கயிறாக நளிர்வரை யதற்கு மத்தாகப்
பாகந்தே வரொடசுரர் படுகட லளறெழக் கடைய
வேகநஞ்செழ ஆங்கே வெருவாரு மிர்ந்தெங்கு மோட
ஆகந்தன்னில் வைத்தமிர்த மாக்கு வித்தான்" (2:91:7)
என்றும் கூறுகின்றார். இதனையே திருநாவுக்கரசர்,
". . . . . . . . . . இமையோர் இரிந்துபயமாய்த்
திருநெடுமால் நிறத்தை அடுவான் விசும்புசுடு வானெழுந்து விசைபோய்ப்
பெருகிட மற்றிதற்கோர் பிதிகார மொன்றையருளாய் பிரானே எனலும்
அருள்கொடு மாவிடத்தை யெரியாம லுண்டஅவன்" (4:14:1)
என்றும்,
"வடங்கெழுமலை மத்தாக வானவர் அசுரரோடு
கடைந்திட எழுந்தநஞ்சங் கண்டுபஃறே வரஞ்சி
அடைந்துநுஞ் சரணமென்ன அருள்பெரிதுடை யராகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார்" (4:65:2)
என்றும் கூறுகின்றார். இதேபோல் சுந்தரர்,
"கோலமால் வரைமத்தென நாட்டிக் கோளரவு சுற்றிக் கடைந்தெழுந்த
ஆலநஞ்சு கண்டவர் மிகஇரிய அமரர்கட் கருள்புரிவது கருதி
நீலமார் கடல்விடந் தனையுண்டு கண்டத்தே வைத்தபித்த நீசெய்த
சீலம்..." (7:55:5)
என்கின்றார். மிடற்றில் நஞ்சுடையதைத் திருஞானசம்பந்தர்,
"தடநிலவிய மலைநிறுவியொர் தழலுமிழ் தருபட அரவுகொ
டடலசுர ரொடமரர்க ளலைகடல் கடைவுழி யெழுமிகுசின
விடமடை தருமிடறு டையவன். . . . " (1:20:1)
என்கிறார். மேலும் தேவாரத்தில் இந்நஞ்சுண்ட செய்திகள் பற்பல பதிகங்களில் இடம்பெற்றுள்ளன. அவைகள் பின்வருமாறு:-
"உலகுய்யக் காரன்மல்கு கடல்நஞ்சம துண்டகடவுள்" (1:2:4)
"மத்தா வரைநிறுவிக் கடல்கடைந்தவ் விடமுண்ட
கொத்தார் தருமணி நீண்முடிச் சுடர்வண்ணன்" (1:12:1)
"நஞ்சினை உண்டு ஆரமுதம் அமரர்க்கருளி" (1:39:8)
"கனைத்தெழுந்த வெண்திரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ" (1:52:2)
"உண்ணற் கரியநஞ்சை யுண்டொரு தோழந்தேவர்
விண்ணிற் பொலியஅமுத மளித்தவிடை சேர்கொடி யண்ணல்" (1:74:7)
"கனத்தார் திரைமாண்டழற் கான்ற நஞ்சை
என்தாவென வாங்கிய துண்ட கண்டன்" (2:19:10)
"மின்னுஞ் சடைமேலிள வெண்டிங்கள் விளங்க
துன்னுஞ் கடனஞ் சிருடோய் கண்டர்" (2:63:1)
"வளர்கங்குல் நங்கை வெருவத் திரையொலி நஞ்சமுண்ட சிவன்" (2:86:1)
"வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மாகடல்விடம்
தானமுது செய்தருள் புரிந்தசிவன்" (3:69:1)
"எண்பெரிய வானவர்கள் நின்றுதுதி செய்யஇறையே கருணையாய்
உண்பரிய நஞ்சதனை யுண்டுலக முய்யஅருள் உத்தமன்" (3:77:7)
"கையின் மான்மழுவினார் கடுவிட முண்ட வெங்காள கண்டர்" (3:93:2)
"பொங்கி நின்றெழுந்த கடல்நஞ்சினைப்
பங்கி உண்டதோர் தெய்வமுண்டோ சொலாய்" (5:33:6)
"சங்கையொன் றின்றியே தேவர்வேண்டச் சமுத்திரத்தின்
நஞ்சுண்டு சாவாமூவாச் சிங்கமே....." (6:99:2)
"கடிக்கம் மரவால் மலையாலமரர்
கடலைக் கடையவெழு காளகூடம்
ஒடிக்கும் முலகங்களை யென்றதனை
யுமக்கே யமுதாக உண்டீருமிழீர்" (7:9:10)
"முன்றான் கடல்நஞ்ச முண்டவத னாலோ
பின்றான் பரவைக் குபகாரஞ் செய்தாயோ" (7:32:2)
"விடஞ்சுட வந்தமார்தொழ அங்கலக்
கண்டீர்த் துவிடமுண்டு கந்தவம்மான்" (7:51:3)
"வங்கமேவிய வேலைநஞ்செழ வஞ்சர்கள் கூடித்
தங்கண் மேலடரா மையுண்ணென வுண்டிருள் கண்டேன்" (7:75:2)
"பிறையணி வாணுதலாள் உமையாளவள் பேழ்க்கணிக்க
நிறையணி நெஞ்சனுங்க நீல்மால்விடம் உண்ட" (7:99:1)
இவ்வாறாக நஞ்சுண்ட பெருமானின் செயல்களையும் பெருமைகளையும் சிறப்புக்களையும் குறிப்பிடும் போது அவனது திருப்பெயர்களை,
"மையாடிய கண்டன்" (1:51:1)
"கறையார் மிடறுடையான்" (1:16:3)
"நச்சம் மிடறுடையார்" (1:18:2)
"கருவார் கண்டத்தீசன்" (1:25:1)
"மணிகொள் கண்டர்" (1:28:4)
"கரிதாகிய நஞ்சணி கண்டன்" (1:35:5)
"கறைமிடற்றான்" (1:40:1)
"நீலமாகிய கண்டர்" (1:42:5)
"மணிவளர் கண்டர்" (1:44:1)
"நஞ்சடை கண்டர்" (1:44:3)
"மணிகண்டர்" (1:55:1)
"பவ்வ நஞ்சடை கண்டர்" (1:56:8)
"மணிநீலகண்ட முடையபிரான்" (1:59:2)
"காளகண்டர்" (1:72:4)
"பெருநீல மிடற்றண்ணல்" (1:119:8)
"அழல்விட மிடறினன்" (1:121:3)
"வேலை நீலஞ்சேர் கண்டர்" (4:27:7)
"கடுக்கண்டர்" (5:11:10)
"கறைமிடற்றண்ணல்" (5:42:3 மற்றும் புறம்.55:4)
"நன்மணிகண்டர்" (5:42:5)
"கண்டங் கறுத்த கடவுள்" (5:93:9)
"கோலமாமணி கண்டர்" (6:4:11)
"நீலமுண்டார்" (6:10:9)
"ஆலத்தான்" (6:15:7)
"நீலகண்டர்" (6:99:8)
"கண்டங் கறுத்தார்" (7:18:3)
"கறைக்கண்டத் தீசன்" (7:44:10)
"கறையணிமிடறுடை அடிகள்" (7:58:9)
"அல்லுறு கண்டன்" (7:71:7)
"விடமுடைமிடறன்" (7:81:6)
"காரிடங்கொள் கண்டத்தன்" (7:89:8)
எனப் பலவாறாகத் தேவாரப் பாடல்களில் காணப்படுவதை அறியலாம். மேலும் சங்க இலக்கிய நூல்களான புறநானூற்றில்,
"கறைமிட றணியன்"(1)
"கறைமிடற்றண்ணல்" (54:4)
"மணிமிடற்றோன்" (56:2)
எனவும், அகநானூற்றில்,
"மணிமிடற்றந்தணன்"(கடவுள் வாழ்த்து, வரி.15)
எனவும், மலைபடுகடாம் மற்றும் சீவக சிந்தாமணியில்
"காரியுண்டிக் கடவுள்" (83 & 670:3)
எனவும் சுட்டப்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.
சிற்பங்களில் நீலகண்டர்
நின்ற, இருந்த, கிடந்த ஆகிய மூன்று நிலைகளில் நீலகண்டரின் செப்புத் திருமேனி வடிவங்கள் கிடைத்துள்ளன. இச்செப்புத் திருமேனிகள் கி.பி.9-10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அ. நின்ற நீலகண்டர்
நின்ற நிலையில் காணப்படும் நீலகண்டரின் வடிவம் மூன்று கண்களும் நான்கு கைகளும் உடையனவாகக் காணப்படுகின்றது. சடா மகுடமும் கரங்களில் மழுவும் மானும் நஞ்சு நிரம்பிய கிண்ணமும் அருளல் குறிப்பும் இருக்கும். பார்வை நஞ்சின் மீது இருக்கும். உடலில் பலவித அணிகலன்கள் அணிசெய்யும் என்பர் (மூவர் தேவாரத்தில் சிவவடிவங்கள், ப.90). இந்நிலைக்கு இவரால் வரையப்பெற்ற படம் இந்நூலில் காணப்படுகிறது. இந்நிலையில் காணப்படும் செப்புத் திருமேனியோ கற்சிற்பமோ வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இப்படம் கற்பனையில் வரைந்ததாகத் தெரிகிறது. நின்ற நீலகண்டர் வடிவம் கல்லிலோ செப்புத் திருமேனியிலோ எங்காவது இருக்கலாம். கண்டு தெளிந்தால் ஆய்வு சிறக்கும்.
ஆ. கிடந்த நீலகண்டர்
கிடந்த நிலையில் காணப்படும் நீலகண்டரின் வடிவம் மூன்று கண்களும் நான்கு கைகளும் உடையனவாகக் காணப்படுகின்றது. கரங்களில் மழுவும் மானும் இருக்கும். வலது கையைத் தலைக்கடியிலும் இடது கையை இடுப்பிலும் வைத்து கிடந்தகோலத்தில் உள்ளார். அருகில் அம்மையும் விண்ணவரும் முனிவர்களும் இருப்பர். அம்மையுடன் கிடந்த நிலையில் உள்ள நீலகண்டரின் வடிவம் "சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் வழியில் 60 கிலோ மீட்டர் தூரத்தில் ஆந்திர மாநிலச் சோதனைச் சாவடியை அடுத்துள்ள சுருட்டப்பள்ளி என்ற சிற்றூரில் உள்ள விடமுண்ட(விஷபகரண) சிவவடிவம் குறிப்பிடத்தக்கது. . . . . . இந்நீலகண்டச் சிவனாரின் சிலை செப்பு வடிவங்கள் காணப்படும் இடங்கள் சிலவே. ஐரோப்பாவில் கானாஸ் என்ற நகரத்து அருங்காட்சியகத்தில் கி.பி.10ஆம் நூற்றாண்டு ஆந்திர சிற்பம் ஒன்று இருப்பது குறிப்பிடத்தக்கது" (சிவவடிவங்கள், ப.170) என்கிறார் சிவகுருநாதப்பிள்ளை.
இ. இருந்த நீலகண்டர்
இருந்த நிலையில் காணப்படும் நீலகண்டரின் வடிவம் மூன்று கண்களும் நான்கு கைகளும் உடையனவாகக் காணப்படுகின்றது. சடா மகுடமும் கரங்களில் மழுவும் மானும் நஞ்சு நிரம்பிய கிண்ணமும் பாம்பும் ஏந்தியபடி பீடத்தில் அமர்ந்து அணிகலன்களுடன் காணப்படுகிறார். இந்நிலையில் இரண்டு செப்புத் திருமேனிகள் கிடைத்துள்ளன. கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஷபஉறரணர் என்ற நீலகண்டரின் செப்புத் திருமேனியானது தஞ்சை மாவட்டம் கீழப்புதனூரில் கிடைத்துள்ளது. இதே அமைப்பு திருவாட்சியுடன் கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீகண்டமூர்த்தி என்ற நீலகண்டரின் செப்புத் திருமேனியானது தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் பூஞ்சையூரில் கிடைத்துள்ளது.
இவ்வாறான நீலகண்டருக்குக் கோயில்கள் பல எழுப்பியுள்ளனர். பழமண்ணிப்படிக்கரை என்னும் திருத்தலத்தில் குடியிருக்கும் இறைவனின் திருப்பெயர் நீலகண்டேஸ்வரர் ஆகும். சோழநாட்டு வடகரையில் "வைத்தீஸ்வரன்கோயில் திருப்பனந்தாள் சாலையில் இளந்தோப்பு, வாளப்புத்தூர் ஆகியவற்றைத் தாண்டி மணல்மேடு அடைந்து; பஞ்சாலையைத் தாண்டி 'பாப்பாகுடி' என்று கைகாட்டி உள்ள இடத்தில் பிரியும் (அது காட்டும்) சாலையின் வலப்புறமாக சென்று பாப்பாகுடியைத் தாண்டிச் சென்றால் இத்தலம் அமைந்துள்ளது"(திருமுறைத் தலங்கள், ப.281). இத்தலத்திற்கு இலுப்பைப்பட்டு என்று வேறொரு பெயரும் உண்டு. இப்பெயரே இன்று மக்கள் மத்தியில் வழக்கில் உள்ளது. இத்தலம் "இறைவன் விஷத்தைப் பருகியபோது உமாதேவி தன் கரத்தால் அவருடைய கழுத்தை ஸ்பரிசித்த தலம்" (திருமுறைத் தலங்கள், ப.281) என்பர். இத்தலத்திற்கு மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் தலபுராணம் பாடியுள்ளார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இதுபோல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீலகண்டேஸ்வரருக்குக் கோயில்கள் இருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக