ஞாயிறு, 4 நவம்பர், 2018

பொதட்டூர்பேட்டையில் பொங்கல் திருவிழா

உலகெங்குமுள்ள தமிழர்கள் ஒருமித்த கருத்தோடு கொண்டாடுவது பொங்கல் திருவிழாவாகும்.  இவ்விழாவினைத் தமிழர் திருநாள் என்றும் குறிப்பர்.  தை மாதம் தமிழர்களுக்கு ஒரு சிறப்பான மாதமாகும்.  எனவேதான், 'தை பிறந்தால் வழிபிறக்கும்' என்னும் பழமொழி தமிழரின் நம்பிக்கையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.  பொங்கல் வைப்பதில் பல பொதுக்கூறுகள் இருந்தாலும் பொதட்டூர்பேட்டையில் பொங்கல் வைக்கும் முறை சற்று வேறுபட்டிருப்பதைக் காணமுடிகிறது.  அவ்வேறுபாட்டைப் பற்றிக் கூறுவதே இவ்வாய்வு.

பொதட்டூர்பேட்டை

தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டத்தில் பொதட்டூர்பேட்டை என்னும் ஊர் உள்ளது.  இவ்வூர் கிழக்கே 22 கி.மீ. தொலைவில் குன்றுதோராடும் குமரன் குடியிருக்கும் திருத்தணிகையையும், மேற்கே ஆறுமுக மலையையும், வடக்கே 5 கி.மீ. தொலைவில் குசஸ்தல ஆற்றையும், தெற்கே 20 கி.மீ. தொலைவில் நரசிங்கப்பெருமாள் வீற்றிருக்கும் சோளிங்கபுரத்தையும் கொண்டு அமைந்துள்ளது.  இவ்வூரில் வாழும் மக்களில் 95% பேர் செங்குந்தர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.  இவர்களின் குடும்பத் தொழில் நெசவு செய்வதாகும்.  மேலும் இவ்வூரில் நெசவாளர்களைத் தவிர ஏனைய 5%த்தில் குடியானவர், ஒட்டர், பரையர் போன்றோர் பெரும்பான்மையினராகவும், வண்ணார், பார்ப்பனர், கிருத்துவர், குயவர், இசுலாமியர் போன்றோர் சிறுபான்மையினராகவும் உள்ளனர்.  இவ்வூர் ஏறக்குறைய 30,000 வாக்காளர்களைக் கொண்ட ஒரு பேரூராட்சியாகும்.

பொங்கல் திருவிழா

இவ்வூரில் பொங்கல் திருவிழா மூன்று நாட்கள் தொடர்ந்து சிறப்பாக நடைபெறும்.  முதல் நாள் விழாவைப் பெரும்பொங்கல் என்றும், இரண்டாம் நாள் விழாவைக் கன்னுப்பொங்கல் என்றும், மூன்றாம் நாள் விழாவைக் காணும் பொங்கல் என்றும் குறிப்பிடுவர்.

அ.  பெரும்பொங்கல்
1.  கதிரவன் வழிபாடு

தைப் பொங்கல் தினத்தன்று பொதட்டூர்பேட்டையில் உள்ளோர் அனைவரும் விடியற் காலையிலேயே எழுந்து வீட்டைப் பெருக்கிச் சாணத்தால் மெழுகித் தெருவில் சாணம் தெளித்து பெரியதாகக் கோலம் போட்டு அலங்கரிப்பர்.  வீட்டின் சுவர் ஓரம் செம்மண் தடவுவர்.  வீட்டு நிலைப்படிகளைச் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைப்பர்.  குளித்துவிட்டு புத்தாடை அணிந்து கொண்டு கதிரவன் உதயமாவதற்கு முன்னதாக அனைவரும் ஆறுமுகமலை உச்சியில் வீற்றிருக்கும் உச்சிப்பிள்ளையார் கோவிலருகேயும் மலையுச்சியின் பல பகுதிகளிலேயும் ஊருக்குள்ளிருக்கும் கோயில்களிலேயும்(சிவன் கோயில், முருகர் கோயில், ஸ்ரீகிருஷ்ணானந்த மடம் மற்றும் தெருதோறும் இருக்கும் 14 பிள்ளையார் கோயில்கள்) மக்கள் தேங்காய், பழம், கற்பூரம், ஊதுபத்தியுடன் குழுமிவிடுவர்.  

காலையில் கதிரவன் உதயமாகும் கிழக்குத் திசையை நோக்கி மலைமீதும் கோயில்களிலும் உள்ள மக்கள் முதலில் கதிரவனை வணங்கி வழிபடுவர்.  கோயில்களிலும் அன்று முதல் பூசை கதிரவனுக்கும் அடுத்த பூசை கோயில் உற்சவருக்கும் நடைபெறும்.  இந்தத் தை முதல் பூசையை 'சங்கராந்தி' என்று வழங்குவர்.  

கதிரவன் உதயமாகும் போது அவனைக் காண்பவர்கள் முதலில் மலையுச்சியில் இருப்பவர்களே.  கதிரவன் கிழக்கே இரண்டு மலைகளுக்கு இடையே உதயசூரியனின் சின்னம் (தி.மு.க. வின் கட்சிச் சின்னம்) போல் காட்சியளிப்பான்.  கதிரவன் உதயமாகும் முன் வானம் அதன் பட்டொளியில் மிளிர்வதைக் கண்டு தங்கத்தட்டு பறந்து சுழற்சியோடு வருவது கண்டு பொதட்டூர்பேட்டை வாழ் மக்கள் அனைவரும் மகிழ்வெய்துவர். 

கதிரவனைக் கண்ணால் கண்டவுடன் ஆறுமுகமலை உச்சியில் வீற்றிருக்கும் மக்கள் அனைவரும் கற்பூரம் ஏற்றித் தேங்காய் உடைத்து வழிபாடு செய்வர்.  அதன்பிறகே ஊருக்குள் இருக்கக் கூடிய கோயில்களில் கதிரவன் தெரிவான்.  கதிரவன் தெரியும் நேரத்தில் வழிபாடுகள் நிகழும்.  கதிரவன் வழிபாட்டிற்குப் பிறகே கோயில் வழிபாடு. அன்று மட்டும் வழிபாடு முறைமாறி நடைபெறும்.  

முதலில் மலையுச்சியில் தான் கதிரவனைக் காணமுடியும் என்பதால் பெரும்பாலான மக்கள் ஆறுமுகமலை உச்சிக்கே செல்வர்.  பின்னர் கோயில்களுக்குச் சென்று வழிபட்ட பிறகே வீடு திரும்புவர்.  வாசலில் பொங்கல் வைக்காத சிலர் வீடுகளில் சர்க்கரைப் பொங்கல் செய்து சாணப்பிள்ளையாரை வைத்து கதிரவனுக்குப் படைப்பர்.  ஆகத் தைப்பொங்கல் நிகழ்ச்சி முதலில் கதிரவன் வழிபாட்டில் தொடங்குகிறது எனலாம்.

2.  சில நம்பிக்கைகள்

கதிரவன் வழிபாடு முடிந்ததும் சிற்றுண்டி விடுதிகளிலும் மளிகைக் கடைகளிலும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு முதலில் இனிப்பு வழங்கிவிட்டு சிறிது நேரத்திற்கு வியாபாரத்தைத் தொடங்குவர்.  அதேபோல் இல்லந்தோறும் இருக்கும் நெசவாளர்கள் தங்கள் வீட்டுத் தறிகளை கொஞ்சநேரம் இயக்கச் செய்வர்.  பணியாட்கள் இருப்பின் அவர்களுக்கும் இனிப்பு கொடுத்துவிட்டு அவர்களையும் தறிகளை இயக்கச் செய்வர்.  இதுபோல் அவ்வூரில் நடைபெறும் எல்லா வகையான தொழில்களையும் சிறிது நேரம் இயக்கச் செய்வர்.  இவ்வாறு செய்வதால் ஆண்டு முழுவதும் தொழில் நன்றாக நடைபெறும் என்று நம்புகின்றனர்.  

அடுத்து, தறிகளுக்கு நூல் கொடுத்து வாங்குபவர்கள் தங்களிடம் நூல் பெறுபவர்களுக்கு இனிப்பும் பழமும் நூலும் வெற்றிலைப்பாக்கும் கொடுத்து மகிழ்வர்.  பணியாட்கள் இதைப்பெறுவதில் அதிக மகிழ்வெய்துவர்.  இவ்வாறு நூலும் பணமும் பெறுவதால் ஆண்டு முழுவதும் தொழிலும் வருமானமும் நன்றாக இருக்கும் என்று நம்புகின்றனர். 

பின்னர், ஊர்ப் பெரியவர்கள் மோர் சாப்பிடச் செய்வது வழக்கம்.  அதாவது கடந்த ஆண்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்குச் சென்று நலன் விசாரித்து, இனிவரும் ஆண்டுகள் நலமாகட்டும் என்று வாழ்த்தி, பொங்கல் வைக்கச்சொல்லி வருவர்.  வரும் பெயரியர்களுக்கு அவர்கள் தங்களின் வசதிக்கேற்ப சிற்றுண்டியையோ, பாலையோ, இனிப்பையோ, மோரையோ வெற்றிலைப்பாக்குப் பழத்துடன் வழங்கி பொங்கல் வைக்க ஊர்ப் பெரியவர்களிடம் அனுமதி பெறுவர்.

3.  பொங்கலிடுதல்

பொங்கல் வைப்பவர்கள் விரதமிருப்பர்.  குறிப்பிட்ட நேரத்தில் வாசலில் புத்துடையணிந்து புத்தடுப்பை (பொங்கலுக்கு முன் வாரத்தில் ஊர்ச்சபையினரால் ஒரு நல்லதொரு நாளில் குறிப்பிட்ட இடத்தில் மண்ணெடுத்து போட்ட புத்தடுப்பு) வைத்து, புதுப்பானை (குறிப்பிட்ட நல்லதொரு நாளில் குயவர் வீட்டிலிருந்து புதியதாகக் கொண்டு வந்தது) கொண்டு புத்தரிசியில் பொங்கல் வைப்பர்.  இதற்குக் கரும்பும் இஞ்சியும் மஞ்சளும் துணைநிற்கும்.  

கார்த்திகை மாதந்தொடங்கி கொப்பிலியாக வைக்கப்பெற்ற சாணப்பிள்ளையாரை வரட்டையாகத் தட்டி சேமித்து வைத்திருப்பர்.  இவ்வரட்டையைக் கொண்டு அடுப்பு எரியவிடுவர்.  வேறெதையும் எரிபொருளாகக் கொள்ளமாட்டார்கள்.  சாணப்பிள்ளையாரே தங்கள் வீட்டில் பொங்கல் சமைப்பதாக ஒரு நம்பிக்கை.  இச்சாம்பலைக் குப்பையில் கொட்டாமல் வீட்டுப் பாத்திரம் துலக்குவதற்காகப் பயன்படுத்துவர்.  

பொங்கல் பொங்கும் போது குடும்பத்தார் அனைவரும் வாசலில் கூடி நின்று பொங்கலோ பொங்கல் என்று கூறி நண்பகல் கதிரவனை வழிபடுவர்.  அதன்பிறகு பொங்கல் வைக்காதார் வீடு சென்று அவர்களை அழைத்து வந்து சாப்பிடச் செய்த பிறகே அவர்கள் தங்களின் விரதத்தை முடித்துக்கொள்வர்.

4.  போகிமுள்ளுக்குச் செல்லுதல்

அன்று யாரும் ஊரைவிட்டு வேற்றூருக்குப் போய்த் தங்கமாட்டார்கள்.  பொங்கல் நாளுக்கு முன்னாள் கொண்டாடும் போகிப்பண்டிகை, இவ்வூர் மற்றும் இவ்வூரைச் சுற்றியுள்ள ஊர்களில் கொண்டாடுவது இல்லை.  பொங்கல் அன்று எல்லோரும் சாப்பிட்ட பிறகு குடும்பத்திற்கு ஒருவர் வீதம் 'போகி முள்ளுக்கு'ச் செல்வர்.  அதாவது, மலைகளில் காணப்படும் காட்டு முள்களை வெட்டிவந்து ஈரமாகவே நள்ளிரவு தொடங்கி ஒவ்வொரு தெருவின் மத்தியிலும் எரியவிடுவர்.  அப்போகிமுள் சுடரில் வௌ¢ளையடித்தலின் போதும் வீட்டைச் சுத்தம் செய்தலின் போதும் ஒதுக்கிவைத்திருந்த பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எல்லாம் கொண்டு வந்து போகியில் போட்டு எரியவைத்து குளிர்காய்வர்.

ஆ.  கன்னுப்பொங்கல்

இன்று மாடு வைத்திருப்பவர்கள் அவற்றிற்குச் சிறப்பாக அலங்காரம் செய்து பொங்கலிட்டு வழிபாடு செய்வர்.  இந்நிகழ்ச்சிகள் எல்லாம் பொதுவான நடைமுறையேயாகும்.  எனவே அதைப்பற்றி இங்குக் கூறத் தவிர்க்கின்றேன்.

இ.  காணும்பொங்கல்

காணும்பொங்கல் என்று சொல்லுவதை விட கரும்புப்பொங்கல் என்றே சொல்லலாம்.  அன்று நாள் முழுவதும் கரும்பையே தங்கள் உணவாகக் கொள்வாரும் உண்டு.  பிற்பகல் தொடங்கி 'மலை சுற்றுதல்' நிகழ்ச்சி தொடங்கும்.  இந்நாள் நிகழ்ச்சி அப்பகுதியில் வேறெங்கும் நடைபெறாத ஒரு நிகழ்ச்சியாகும்.  ஆனால் சில இடங்களில் பல ஊர்த்தெய்வங்கள் ஒன்று கூடி வலம் வரும்.  ஆனால் ஒரே ஊரில் உள்ள தெய்வங்கள் ஒன்று கூடி வலம் வரும் காட்சி இவ்வூரில் மட்டும்தான் நடைபெறுகிறது.

சிவன் கோயிலிலிருந்து சிவனும் பார்வதியும், சுப்பிரமணியர் கோயிலிலிருந்து முருகனும் வள்ளியும் தெய்வானையும், நடுத்தெரு பிள்ளையார் கோயில் பிள்ளையாரை மடம்தெரு மடத்திலிருந்தும் புறப்பட்டு ஆறுமுகமலை அடிவாரத்திற்குத் தனித்தனியாக காலை பத்து மணியளவில் வந்து சேருவார்கள்.  அன்று மாலைவரை மலையடிவாரத்தில் கடவுளர் களுக்குச் சிறப்பு வழிபாடு நடைபெறும்.  

பெரும்பொங்கலன்று வந்த மக்கள் கூட்டம் இன்றும் மலைக்கு வருவார்கள்.  முதல் நாள் தனித்தனியாக சென்று தரிசித்த கடவுளர்கள் இன்று மலையடிவாரத்தில் அமர்ந்து எல்லோருக்கும் காட்சி கொடுப்பார்கள்.  மாலை வேளையில் ஊர் மக்கள் ஒன்று கூடி மகிழ்வர்.  பெரியவர்கள் சிறியவர்களுக்குப் பணம் கொடுத்து மகிழ்வர்.  

காணும் விழாவின் இறுதியாக கடவுளர்கள் 'மலை சுற்றல்' நடைபெறும்.  மூன்று முறை மலையடிவார நீண்ட சாலையை வலம் வருவார்கள்.  அப்போது ஒவ்வொரு தெருவிலும் நிறுத்தி தீப ஆராதனை காட்டுவார்கள்.  பிறகு ஒவ்வொரு தெருவாக கடவுளர்கள் ஊர்வலமாகச் செல்வர்.  செல்லும் தெருவெல்லாம் தீப ஆராதனை நடக்கும்.

ஊர்வலமாகச் செல்லும் கடவுளர்கள் முதலில் சுப்பிரமணியர் கோயிலில் முருகனையும் வள்ளி - தெய்வானையையும் விட்டுவிட்டு சிவனும் பார்வதியும் பிள்ளையாரும் விடைபெறுவர்.  பிறகு சிவன் கோயிலில் சிவனையும் பார்வதியையும் விட்டுவிட்டு பிள்ளையார் மட்டும் தனியாக மடத்துத் தெருவில் உள்ள மடத்திற்கு வந்து இறங்குவார்.  இந்நிகழ்ச்சி முடிவடைய நள்ளிரவு வரை கூட ஆகும்.  இந்நிகழ்ச்சியோடு மூன்றுநாள் பொங்கல்  விழா முடிவடைகிறது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக