சங்க காலந் தொடங்கி இன்றுவரை கள் அருந்துதல் என்பது மக்களிடைய நீங்கா இடம்பிடித்த ஒரு மரபாகவே இருந்து வருகிறது. ஆனால் நீதி நூலான உலகப் பொதுமறை திருக்குறள் கள்ளுண்ணாமையைக் குறிப்பிடுகிறது. கள்ளுண்ணுதலை சங்க இலக்கியங்கள் ஏற்றுக்கொள்வதையும் அதற்குப் பிறகான திருக்குறள் முற்றிலும் மறுப்பதையும் உற்று நோக்கும் போது கள்ளினால் வரும் கேடு உற்றுணரப்படும். இன்றும் அறிவிழந்த செயல்கள் நிகழ்வதற்கு முக்கியக் காரணமாக அமைவது கள்ளுண்ணலே என்பது உண்மை. இச்செயலைத் தடுப்பதற்குக் கள்ளுண்ணாமையே சிறந்தது என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. இக்கட்டுரை சங்க காலக் கள்ளுண்ணும் மரபையும் வள்ளுவரின் கள்ளுண்ணாமையையும் பற்றி எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.
கள்ளுக்குப் பண்டமாற்று
ஓரிடத்தில் கிடைக்கும் ஒரு பொருளை மற்றோரிடத்தில் கிடைக்கும் பொருளுக்கு விலையாகக் கொடுத்துப் பெறும் வழக்கம் சங்க காலத்தில் மிகுதியும் போற்றப்பட்டது. இதற்குப் பண்டமாற்று முறை என்று பெயர். காந்தட் பூவினால் செய்த கண்ணியையும் கொலை செய்யும் வில்லினையும் உடைய வேட்டுவர் சிவந்த கொம்பையுடைய காட்டுப் பசுவின் இறைச்சியோடு காட்டிலுள்ள வலிமையுள்ள யானையினது வௌ¢ளிய கொம்புகளையும் எடுத்துக் கொண்டு செல்வம் பொருந்திய கடைத்தெருவிற்குச் செல்வர். அங்குத் தாம் வாங்கும் கள்ளுக்கு விலையாகத் தாம் கொண்டு வந்திருக்கும் காட்டுப்பசுவின் இறைச்சியையும் யானையினது தந்தத்தினையும் கொடுப்பர் என்கிறது பதிற்றுப்பத்து (பதிற்.30). இதனால் விலையுயர்ந்த காட்டுப்பசுவின் இறைச்சியும் யானைத்தந்தமும் கள்ளுக்கு மாற்றாகக் கொடுத்திருக்கின்றனர் என்பது விளங்குகிறது. அதுபோல்,
“கள்ளுடை நியமத்து ஔ¢விலை கொடுக்கும்” (பதிற்றுப்.75:10)
என்பதால், பகைவரைத் தோல்வியடையச் செய்து அவர்பால் பெற்ற பொருள்களைக் கள்ளுக்கு விலையாகக் கொடுத்திருக்கின்றனர் என்பது விளங்குகிறது.
இவ்வாறு பொருளுக்குக் கள்ளைக் கொடுத்து உண்பாரின் நிலையை வள்ளுவர்,
“கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்” (குறள்.925)
என்கிறார். அதாவது, ஒருவன் விலைப்பொருளைக் கொடுத்துக் கள்ளால் தனக்கு மெய்ம் மறப்பினைக் கொள்ளுதல் எப்படி இருக்குமெனின் அவன் பழவினைப் பயனாய செய்வதறியாமையைத் தனக்குக் காரணமாக உடைத்து என்கிறார்.
கள் மணங்கமழும் நகரம்
மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் வாழும் பகுதி அமைந்திருக்கும்.
“விளையா இளங்கள் நாற” (சிறு.45)
என்ற வரியால் காட்டு மல்லிகைக் கொடியாகிய படுக்கையின் மேல் கள் மணம் கமழ அசையிட்டுத் துயில் கொள்ளும் நகரம் வஞ்சி நகரம் என்கிறது சிறுபாணாற்றுப்படை. இதுபோல் பல சான்றுகள் சங்க இலக்கியங்களில் பரவலாகக் காணக்கிடக்கின்றன. குறிப்பாக, கள்ளுண்ணப் பலரும் புகும் வாயில். கள்ளைச் சமைக்கின்ற மகளிர் வட்டிலாகிய சிண்ணத்தைக் கழுவியதனால் வடிந்த நீர் குழம்பி ஈரமாகிய சேற்றினை அளைந்து கொண்டிருக்கும் கரிய பல குட்டிகளையுடைய பெண் பன்றிகள் (பெரும்.339-341) வாழும் ஊர்’ என்றும், பாண்டிய நெடுஞ்செழியனின் கொற்கை எவ்வகைப்பட்டது என்று கூறுமிடத்து ‘கொற்கை முத்து, சங்கு ஆகியவற்றைக் குளிப்பார் இருக்கைகளையும், கள் உண்பார் இருக்கைகளையும் புறஞ்சேரிகளாய்க் கொண்ட ஊர்’ (மது.136-138) என்றும், சோழரின் ஆர்க்காட்டு ஊரில் கள்ளுடைய குடியில் வண்டுகள் ஒலித்து ஒலியடங்காததும் தேர் திரிந்தியங்கி அமைவதுமான தெரு (நற்.227.7-) என்றும், பனங்குடையிலிட்டு உண்ணும் கள்ளினால் வளப்பமான மகிழ்ச்சியுற்ற பாரியினுடையதுமான பலாமரம் விளங்கும் பறம்புமலை (நற்.253) என்றும், கடற்கரை ஊர் உயர்ந்து தோன்றும் இனிய கள்ளைத் தன்னிடத்துக் கொண்ட மனை மரங்களின் நடுவில் உள்ளது (நற்.323) என்றும், உம்முடைய அரசன் யாரென்று நீங்கள் கேட்பீர்கள் ஆயின், கூறுவேன். களமர்க்கு அரிக்கப்பட்ட முதிர்ச்சியுற்ற விரும்பத்தக்க மதுவை ஆமை இறைச்சியோடு வேட்கை தீர அக்களமர் உண்பர். அவர்கள் ஆரல் மீனினது வேகவைத்த கொழுப்பமைந்த துண்டைத் தம் கன்னத்தினுள்ளே அடக்கிக் கொண்டு மதுவுண்டு மயங்கி இருப்பர். இத்தகைய வளமும் விழாவும் உடைய வருவாய் மிக்கது சோழநாடு என்பதை,
“’நும்கோ யார்?என வினவின், எம்கோக்
களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கின் காமம் வீடஆரா,
ஆரல் கொழுஞ்சூடு அம்கவுள் அடாஅ
வைகுதொழில் மடியும் மடியா விழவின்
யாணர் நல் நாட்டுள்ளும்” (புறம்.212:1-6)
என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளதைக் காணும் போது அக்கால மக்கள் வாழ்ந்த பகுதிகளில் கள்ளின் தேவையும் முக்கியத்துவமும் தெளிவாகத் தெரிகிறது.
கள்ளுண்ணும் முறை
கள்ளுண்ணும் முறையைச் சங்கப் பாடல்கள் விதந்தோதுகின்றன. பருத்தி நூற்கும் பெண்டின் பஞ்சு போன்றதும் சூடு தணிந்த நெருப்பின் வெம்மை போன்ற கொழுப்பு படர்ந்ததும் ஆன இறைச்சியைக் (ஊனை) கள் வார்த்த மண்டையோடு (உண்கலத்தில்) முறைமுறையாக ஒன்றற்கொன்று மாறுபட உண்பேமாக என்பதை,
“பருத்தின் பெண்டின் பனுவல் அன்ன,
நெருப்புச் சினம்தணிந்த நிணம்தயங்கு கொழுங்குறை,
பரூஉக் கள் மண்டையோடு, ஊழ்மாறு பெயர
உண்கும் எந்தை!” (புறம்.125:1-4)
என்றும், ஒன்றற்கொன்று நெருக்கமாய் இருக்கின்ற குறிய பல அரண்களில் இருந்து கள்ளை ஒருவர்க்கு ஒருவர் மாறிமாறி நீட்ட, அக்கள்ளை நிரம்ப உண்பர்; பின் செருக்கினால் விடாய் மிக்குப் புளிச் சுவையை விரும்பிய மதத்தால் சிவந்த கண்ணையுடைய ஆடவர், புளிப்புடைய களாப்பழத்துடன் துடரிப்பழத்தைத் தின்பர்; அதனைத் தின்று வெறுப்பின், கரை மரத்து தேன் ஒழுகுகின்ற கான்யாற்றின் மணற் குன்றில் ஏறிக் கரிய நாவற்பழத்தைப் பறித்து இருந்தவாறே உண்வர் என்பதை,
“கள்மாறு நீட்ட நணிநணி இருந்த
குறும்பல் குறும்பின் ததும்ப வைகி,
புளிச்சுவை வேட்ட செங்கண் ஆடவர்
தீம்புளிக் களாவொடு துடரி முனையின்,
மட்டுஅறல் நல்யாற்று எக்கர் ஏறி,
கருங்கனி நாவல் இருந்து கொய்து உண்ணும்” (புறம்.177:6-11)
என்றும் விளம்புவதால் உணரமுடிகிறது.
கள் விருந்து
அரசன் முதல் குடிகள் வரை கள்ளை மதிப்புமிகுந்த ஒரு விருந்துப் பொருளாகக் கருதியிருந்தனர் என்பதை சங்கப் பாடல்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. அதியமான் நெடுமானஞ்சியை ஒவையார் பாடியதாக புறநானூற்றில் ஒரு பாடலில், குறைவாகக் கள் கிடைக்குமானால் அதனை எங்களுக்குத் தருவன்; அது கழிந்தது. மிகுதியாகக் கள் கிடைக்கப்பெற்றால் அதனை யாம் உண்டு பாட எஞ்சிய மதுவைத் தான் விரும்பி உண்ணுவான் என்கிறார். இதனை,
“சிறிய கட் பெறினே, எமக்கு ஈயும்; மன்னே!
பெரிய கட் பெறினே, யாம் பாட,
தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே!” (புறம்.235:1-3)
எனும் பாடல் உணர்த்தக் காணலாம். ஓரரசன் பரிசிலர்க்கு விருந்தாகக் கள்ளைக் கொடுத்தான் என்கிறது ஒரு புறநானூற்றுப் பாடல். அதாவது, சிறுகண் யானையின் தந்தத்தில் விளைந்த ஒளி திகழும் முத்தத்தை விறலியர்க்குக் கொடுத்தான்; நாரைப் பிழிந்தெடுத்த கள் தெளிவைப் பண்பொருந்திய யாழுடைய பாணர் சுற்றத்திற்கு நுகரக் கொடுத்தான்; இவ்வாறு தன்னிடம் பரிசில் வேண்டி வந்தோர்க்கு மென்மை உடையவனாவான் என்பதை,
“சிறுகண் யானை வெண்கோடு பயந்த
ஒளிதிகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து,
நார்பிழிக் கொண்ட வெங்கட் தேறல்
பண்அமை நல்யாழ்ப் பாண்கடும்பு அருத்தி
நசைவர்க்கு மென்மை அல்லது” (புறம்.170:10-14)
என்பதால் உணரலாம்.
கள்ளுண்போர் இயல்பு
கள்ளுண்போர் எத்தகைய மன இயல்புகளில் இருப்பர் என்பதை சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. படைத்தலைவர் கள்ளினையுடைய பெரிய பச்சைக் குப்பிகள் வற்றும்படி கள்ளினை உண்டு இருப்பர் (மதுரைக்.228) என்றும், மூப்பு காரணமாகச் சேற்றில் செல்ல வலிமையில்லாமல் தங்கிய எருதுகள் போல கள் உண்ணும் உழவர்கள் (மது.259-260) இருப்பர் என்றும், தலைவன் வாழுமிடமான காட்டில் உடும்பைக் கொன்றும், வரிந்த தவளையை அகழ்ந்து எடுத்தும், நெடிய கோடுகளைக் கொண்ட புற்றுகளை வெட்டி ஆண்டுறையும் ஈசல்களை மண்ணைத் தோண்டி எடுத்தும் பகலில் முயலை வேட்டையாடியும் வாழும் வேட்டுவன் இரவின் கண் தன் அழகிய தோளில் சுமந்து வந்த பல்வேறு வகைப்பட்ட பண்டங்களைப் பொதிந்த மூட்டையுடனே ஏனைய கருவிகளையும் வீட்டிலே போட்டுவிட்டு மறந்து மிகுதியாகப் பருகிய கள்ளின் மயக்கத்தில் செருக்குற்றுக் கிடப்பான் (நற்.59) என்றும், விருப்பம் தரும் கள்ளைப் பருகுவாருடைய கை நடுக்கத்தால் கள் தெருவில் சிந்தும்; மணமிகுந்த கள்ளாகிய சேற்றில் ஆடிய பாகர் ஏறாத யானை பறையோசையைச் செவிதாழ்த்தி உற்றுக்கேட்கும் என்பதை,
“கடுங்கள் பருகுநர் நடுங்குகை உகுத்த
நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை
நெடுநகர் வரைப்பில் படுமுழா ஓர்க்கும்” (புறம்.68:15-17)
என்கிறது புறநானூற்றுப் பாடல்.
நாட்காலையில் மதுவை உண்டு, நாளோலகக்கத்திலே (யாவரும் தன்னைக் காணும்படி நாளவையில் வீற்றிருத்தல்) மகிழ்ச்சியுடன் இருக்கும்போது, தேர் வழங்குதல் யாவர்க்கும் எளிது; கெடாத நற்புகழுடைய மலையன் மது உண்டு மகிழாது (மது அருந்தாமல் இருக்கும் வேளையிலே) விருப்பமுடன், பொன் அணிகலன் அணிந்த நெடுந்தேரினைக் கொடையாக வழங்கினான் என்பதை,
“நாள்கள் உண்டு, நாள்மகிழ் மகிழின்,
யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே;
தொலையா நல்இசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த இழைஅணி நெடுந்தேர்” (புறம்.123:1-4)
என்கிறது புறநானூறு. இதனை வள்ளுவப் பெருந்தகை,
“கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு” (குறள்.930)
‘கள்ளுண்பான் ஒருவன் தான் அஃதுண்ணாது தெளிந்திருந்த பொழுதின் கண் உண்டு களித்த பிறனைக் காணுமன்றோ, காணுங்கால் தானுண்ட பொழுது உளதாஞ் சோர்வினை அவன் சோர்வால் அதுவும் இற்றென்று கருதான் போலும்’ என்பதால் கள்ளுண்ட காலத்து தாம் இருந்த இருப்பை கள்ளுண்ணாத போழ்து கள்ளுண்டானைக் கண்டு உணர்ந்து செயற்படுவதே சிறந்தது என்பதை உணர்ந்த சங்க கால வள்ளலின் இயல்பை இக்குறள் சுட்டிக்காட்டுகிறது.
பகைவர் எறிந்த படைக்கலம் தம்மிற் கலந்த அஞ்சத்தக்க போரில், கள்ளுண்ட கலத்தினராய், அதனால் விளைந்த செருக்கால் ஊர்க்குள்ளே சொல்லிய வீரம் மேம்பட்ட வார்த்தையைப் போரில் மறந்த சிறிய பேராண்மையுடையோர், போர்க்களத்து அஞ்சிப் புறங்கொடுத்து ஓடினர். புறங்கொடுத்து ஓடும் அவர்க்கு அரணாகத் தான் தன் வலிமையால் முன்னிற்பதோடு தன் வீரரையும் காத்துப் பகைவரை வெற்றி கொள்ளும் ஆண்மையன் என்பதை,
“எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின்,
கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய
நெடுமொழி மறந்த சிறு பேராளர்
அஞ்சி நீங்கும் காலை
ஏமமாகத் தான் முந்துறுமே” (புறம்.178:7-11)
என்றதால் கள்ளுண்டு செய்யும் செயல் புறங்கொடுக்கும் என்பதை உணரமுடிகிறது. அதுபோல், கள் இல்லாமல் போகும் காலத்து உண்டாகும் வேறுபாடு எத்தன்மைதாக இருக்கும் எனின் காம வேறுபாடு (நற்.35.11-12) காட்டுவதாக அமையும் என்கிறது நற்றிணை.
ஒரு வீரன் பசுக்கூட்டங்களைக் கவரச் சென்றமையைக் கண்டோர், கள் விற்போர்க்குக் கூறுவதாக புறநானூற்றில் ஒரு பாடல் (258) அமைந்துள்ளது. ‘பகைப் புலத்திலிருந்து தான் கொண்டு வந்துநிறுத்தின பசுக் கூட்டத்தை முட்களை உடைய காரைச் செடியின் முதிர்ந்த பழத்தை ஒத்த முற்ற விளைந்த இனிய கந்தாரம் என்னும் பெயருடைய மதுவிற்கு விலையாகத் தந்து உண்பான். பசிய ஊனைத் தின்று, நிணமிக்க எச்சிலாகிய ஈரம் பொருந்திய கையைத் தன் வில்லில் முறுக்கேறப் பூசுவான். புல்லிய தாடியை உடைய காளை போன்ற அவ்வீரன் பகைவரின் பசுக் கூட்டங்களைக் கவர வேற்று நாட்டில் புகுந்துள்ளான். இங்குள்ள மறவர் ஒருமுறை மதுவை உப்தற்கு முன்பே ஆனிரையை இவ்வூர்ப்புறம் நிற்கக் கொண்டு தருவான். அவ்வாறு வருங்கால் அவன் தாகமுடையவனாய் இருத்தலும் கூடும். எனவே, அவன் தாகம் தணிக்க முதிர்ந்த மதுவை உடைய சாடியை யாரும் தொடாதவாறு பாதுகாத்து வைப்பாயாக’ என்பதாக இப்பாடற்பொருள் அமைகிறது.
கள்ளுண்பதால் வரும் கேடினை உணர்ந்த ஒருவன் போருக்குப் போகும்முன் கள்ளுண்டு செல்க என்ன, கள்ளுண்டால் வீரம் மழுங்கும் என்ற எண்ணத்தவனாய் கள்ளை மறுத்து வாளை ஏற்ற செய்தியைப் புறநானூறு உணர்த்துகிறது. அதாவது, பசிய தழையால் விரவித் தொடுத்த கண்ணியை உடைய துடி கொட்டுவோன் அதனைக் கொட்ட, வடித்த கள்ளை உண்க என வேண்டியும் உண்ணாது கள்ளினை வாழ்த்தி வாளைக் கொண்டாய் என்று புறம்.269இல் கூறப்பட்டுள்ளது. கள்ளுண்பதை வரவேற்ற சங்கச் சமூகம் கள்ளுண்பதை வள்ளுவர் வாக்குப்படி மறுத்தும் இருப்பதை உணர முடிகிறது.
“களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்
தொளித்ததூஉம் ஆங்கே மிகும்” (குறள்.928)
‘மறைந்துண்டு வைத்து யாண் கள்ளுண்டறியேனென்னு உண்ணாத பொழுது தம் ஒழுக்கம் கூறுதலை யொழிக. அவ்வுண்ட பொழுதே பிறரறியின் இழுக்காமென்று முன் நெஞ்சத்தொளித்த குற்றமும் முன்னையளவின் மிக்கு வெளிப்படுதலான்’ என்பதால் உணரலாம்.
கள்ளுண்பார் செயற்பாடு
கள்ளுண்பாரின் செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என்பதைச் சில சங்கப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. குறிப்பாக, கள் உண்டவர் செல்லும் பயணம் பனையில் நுங்கு உள்ள வரை தொடரும். நுங்கு நீங்கியவழி பயணமும் நின்றுவிடும் (குறுந்.293.1-3) என்றும், காமக்களிப்பினை ஊரார் பார்க்காமல் மறைக்க தலைவன் முயலுதல் கள்ளுண்டதை மறைப்பது போன்றது (பரி.10:65-69) என்றும் கூறுவதால் உணரலாம்.
தன்னிலை மறப்பதற்குக் கள்ளுண்ணலை இச்சமூகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. உடன் பிறந்தானைக் கொன்றதால் உண்டான வஞ்சினம் வெளிப்படப் பகைவனைப் பழிவாங்கத் துடிக்கும் வீரன் ஒருவன் எதிரியை எவ்வாறு தேடுகிறான் என்றால், ‘பெரிய ஊரின் கண் காய்ச்சிய கள்ளைப் பெறும் பொருட்டு மனைக்குள் புகுந்து கள் முகக்கும் பாத்திரத்தைத் தேடுவது போல்’ தேடுகின்றான் என்பதாக ஒரு பாடல் புறநானூற்றில் (300) அமைந்திருக்கிறது.
இவ்வாறு சங்க காலத்தில் மிகுந்த வரவேற்பும், மக்கள் வாழ்வியலில் ஒன்றாகவும் இருந்த கள், இன்றும் அதன் தாக்கத்திலிருந்து மீளவில்லை என்றே சொல்லலாம். வள்ளுவப் பெருந்தகை, மக்கள் நல்வழி வாழ நல்வழிப்படுத்தும் நோக்கில் படைக்கப்பெற்ற வள்ளுவத்தில் கள்ளுண்பதை முற்றிலும் மறுக்கிறார். அதனால்தான் கள்ளுண்ணாமை என்ற அதிகாரம் 93யைப் படைத்திருக்கின்றார். இதில் கூறப்பட்டுள்ள செய்திகளை உற்றுப் பார்க்கும் போது சங்க காலத்தில் மரபாகப் பின்பற்றப்பட்டவை இவர் மறுத்திருப்பது நன்கு விளங்கும்.
கள்ளின் மேல் காதல் செய்து ஒழுகும் அரசன் எஞ்ஞான்றும பகைவரான் அஞ்சப்படார்; அதுவே யன்றி முன்னெய்தி நின்ற ஒளியினையும் இழப்பர் (921).
அறிவுடையாராயினார் அஃதிலராதற்கு ஏதுவாய கள்ளினை உண்ணாதொழிக. அன்றியே உண்ணல் வேண்டுவார் உளராயின், நல்லோரால் கண்ணப்படுதலை வேண்டாதார் உண்க (922).
உறங்கினார் செத்தாரின் வேறாதல் உடையரேனும், அக்காலத்து அறிவின்மையான் வேறெனப்படார். அவ்வாறே கள்ளுண்பார் நஞ்சுண்பாரின் வேறாதல் உடையரேனும்,எக்காலத்தும் அறிவின்மையான் வேறெனப்படார் (926).
கள்ளை மறைந்துண்டு, அக்களிப்பால் தம்மறிவு தளர்வார். உள்ளூர் வாழ்பவரான் உள்நிகழகின்ற துய்த்துணர்ந்து எஞ்ஞான்றும் நகுதல் செய்யப்படுவர் (927).
இதுபோன்ற நற்செயல்களைச் சுட்டி வள்ளுவம் கள்ளுண்ணாமையை வரவேற்பதைக் இதன் வழி உணரமுடிகிறது. ஆகச் சங்கச் சமுதாயம் கள்ளுண்பதை மரபாகவும், வள்ளுவம் கள்ளுண்ணாமையை வலியுறுத்துவதும் தௌ¢ளத் தெளிவாகத் தெரிகிறது. வள்ளுவம் வாழ்ந்தால் சமுதாயம் சிறக்கும் என்பதில் எள்ளளவும் குறையில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக