வெள்ளி, 2 நவம்பர், 2018

தொல்காப்பியத்தில் மும்மை

அண்மைக் காலம்வரை நமக்குக் கிடைத்த இலக்கண நூல்களில் பழமையானதும் முழுமையானதும் தொல்காப்பியமே யாகும்.  இத்தொல்காப்பியத்திற்குப் பண்டைய உரையாசிரியர்களான இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர் ஆகியோர் உரைகண்டவர்களாவர்.  இலக்கணம், இலக்கியம் ஆகிய நூல்களில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கையே பகுப்பாய்வு செய்தோருக்குத் துணைபுரிந்தன எனலாம்.  சங்கப் பாடல்கள் இவ்வாறு பெயர் பெற்றனவே.

எண் பகுப்பு

எண் பகுப்பை ஒன்றும் ஒன்றின் மடங்காகவும், இரண்டும் இரண்டின் மடங்காகவும், மூன்றும் மூன்றின் மடங்காகவும், நான்கும்  ஐந்தும் ஐந்தின் மடங்காகவும், ஆறும் ஏழும் ஏழின் மடங்காகவும், எட்டும் ஒன்பதும் எனப் 14 முறைகளில் எண் பகுப்பு அமைக்கலாம்.  இதில் ஒன்றும், ஐந்தும், ஏழும் ஓர் இனமாகவும்; இரண்டும், நான்கும், எட்டும் ஓர் இனமாகவும்; மூன்றும், ஆறும், ஒன்பதும் ஓர் இனமாகவும் என மேலும் இவற்றை மூன்று இனப்பகுப்பிற்குள் உட்படுத்தலாம்.

எண் பகுப்பின் மூலம்

சொற்களே எண் பகுப்பிற்கு மூலமாக அமைகின்றது எனலாம்.  "இலக்கணம் என்பது 'இலக்கு + அண் + அம்' என்னும் முப்பகுப்பு ஒருசொல் ஆகும்(இரா. இளங்குமரன், இலக்கண வரலாறு, ப.1).  இலக்கியம் என்பது 'இலக்கு + இயம்' என்னும் இருபகுப்பு ஒருசொல் ஆகும்.  இந்த முப்பகுப்பும் இருபகுப்பும் முறையே இலக்கண இலக்கியங்களில் கடைபிடித்து வந்திருக்கின்றனர் என்று எண்ணத் தோன்றுகிறது.

இலக்கணங்களில் மும்மை

பெரும்பாலான இலக்கண நூல்களில் அமைந்துள்ள நூற்பாக்கள், இயல்கள் மற்றும் அதிகாரங்கள் மூன்றும் மூன்றின் மடங்காகவும் அமைந்துள்ளன.  அவை கீழ்வருமாறு:-

அ.  நூற்பாக்கள்

1. அகத்தியம் - 12,000(அடைக்கலசாமி, தமிழ் இலக்கிய வரலாறு, ப.25)
2. இறையனார் அகப்பொருள் - 60 பாடல்கள்
3. யாப்பருங்கலம் - 96 நூற்பாக்கள்
4. யாப்பருங்கலக்காரிகை - 60 காரிகைகள்
5. வீரசோழியம் - 183 பாடல்கள்
6. நேமிநாதம் - 96 வெண்பாக்கள்
7. தண்டியலங்காரம் - 126 நூற்பாக்கள்
8. நன்னூல் - 462 நூற்பாக்கள்
9. அகப்பொருள் விளக்கம் - 252 நூற்பாக்கள்
10. நவநீதப்பாட்டியல் - 129 செய்யுள்கள்
11. மாறனலங்காரம் - 327 நூற்பாக்கள்
12. சிதம்பரச்செய்யுட்கோவை - 84 செய்யுள்கள்
13. பிரயோக விவேகம் - 51 செய்யுள்கள்
14. சாமிநாதம் - 213 செய்யுள்கள்

என அமைவதைக் காணலாம்.

ஆ.  இயல்கள்

1. புறப்பொருள் வெண்பாமாலை - 12 படலங்கள்
2. யாப்பருங்கலம் - 3 இயல்கள்
3. யாப்பருங்கலக் காரிகை - 3 இயல்கள்
4. வெண்பாப்பாட்டியல் - 3 இயல்கள்
5. தண்டியலங்காரம் - 3 இயல்கள்
6. தஞ்சைவாணன் கோவை - 3 பகுதிகள்
7. பன்னிருபாட்டியல் - 3 இயல்கள்
8. நவநீதப்பாட்டியல் - 3 பகுதிகள்
9. சிதம்பரச்செய்யுட்கோவை - 9 பா வகைகள்
10. இலக்கண விளக்கம் - 3 அதிகாரத்துள் (3X5) 15 இயல்கள்
11. இலக்கணக்கொத்து - 3 இயல்கள்
12. முத்துவீரியம் - 15 இயல்கள்
13. சாமிநாதம் - 15 இயல்கள்

என அமைவதைக் காணலாம்.

இலக்கியங்களில் இருமை

பெரும்பாலான இலக்கிய நூல்களில் அமைந்துள்ள பாடல்கள் இரண்டும் இரண்டின் மடங்காகவும் அமைந்துள்ளன.  அவை கீழ்வருமாறு:-

1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் - 3250 பாடல்கள்
2. எட்டுத்தொகை - 2252 பாடல்கள்
3. பத்துப்பாட்டு - 10 பாடல்கள்
4. சம்பந்தர் தேவாரம் - 16,000 பாடல்கள்(நம்பியாண்டார் நம்பி வாக்கு)
5. அப்பர் தேவாரம் - 49,000 பாடல்கள் (சுந்தரர் வாக்கு)
6. திருவாசகம் - 656 பாடல்கள்
7. திருமந்திரம் - 3000 பாடல்கள்
8. கந்தபுராணம் - 10,346 பாடல்கள்
9. பெரியபுராணம் - 4,252 பாடல்கள்

என அமைவதைக் காணலாம்.  மேற்கூறிய இலக்கண இலக்கியங்களுக்கெல்லாம் மூல நூலாகத் திகழும் தொல்காப்பியத்தில் இப்பகுப்பு முறை எவ்வாறு அமைந்திருக்கின்றது என்பதையே இங்கு ஆராயப்படுகின்றது.

தொல்காப்பியத்தில் மும்மை

தொல்காப்பியத்தில் அகமும்மை, புறமும்மை என்ற இரண்டு வகையான மும்மைகள் இடம்பெற்றிருக்கின்றன.

அ.  அகமும்மை

அகமும்மை என்பது தொல்காப்பிய நூற்பாக்களுக்குள் அமைந்த மும்மைப் பொருளைக் குறிப்பனவாகும்.  இவை எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரத்துள்ளும் அமைந்துள்ளன.  அவை கீழ்வருமாறு:-

எழுத்து - எழுத்து 30 (நூ.1:1)
சார்பெழுத்து 3 (நூ.1:2)
இனம் 3 (நூ.1:19-21)
சுட்டெழுத்து 3 (நூ.1:31)
வினாவெழுத்து 3 (நூ.1:32)
மொழி 3 (நூ.2:12)
புணர்ச்சியில் திரிபு 3 (நூ.4:7)
சாரியை 9 (நூ.4:17)
சொல் - உயர்திணையில் பால் 3 (நூ.1:2)
இடப்பெயர் 3 (நூ.1:28)
திணைக்குப் புறனடை 18 (நூ.1:56)
உணர்திணைப்பெயர் 33 (நூ.5:8-10)
அஃறிணைப்பெயர் 24 (நூ.5:13-14)
காலம் 3 (நூ.6:2-3)
உணர்திணைப் படர்க்கைப் பன்மை வினைமுற்று 3 (நூ.6:9)
அஃறிணைப் படர்க்கைப் பன்மை வினைமுற்று 3 (நூ.6:19)
அஃறிணைப் பன்மை வினைமுற்று 6 (நூ.6:21)
முன்னிலையொருமை வினைமுற்று 3 (நூ.6:26)
முன்னிலைப்பான்மை வினைமுற்று 3 (நூ.6:27)
வினையெச்சம் 15 (நூ.6:31-32)
முன்னிலை அசைச்சொல் 6 (நூ.7:26)
பிரிவில் அசை நிலை 3 (நூ.7:32)
தொகைமொழி 6 (நூ.6:16)
உம்மைத்தொகை 6 (நூ.9:21)
வினைமுற்றின் வகை 6 (நூ.9:31)
பொருள் - பொருள் 3 (நூ.2:11)
உழிஞ்ஞைத்துறை 12 (நூ.2:11)
வாகைத்துறை 18 (நூ.2:17)
தலைமகட்கு உரியதோர் இலக்கணம் 3 (நூ.3:8)
பாங்கரி கூட்டம் 12 (நூ.3:13)
தலைவர்க்குரிய கிளவி 33 (நூ.4:5)
இளமைப்பெயர் 9 (நூ.9:1)
ஆண்பாற்பெயர் 15 (நூ.9:2)
உயிர் 9 (நூ.9:26)

என அமைந்துள்ளமையைக் காணலாம்.

ஆ. புறமும்மை

புறமும்மை என்பது நூலிற்கு வெளிப்புறமாக அமைந்த அதிகாரம், இயல் மற்றும் நூற்பா ஆகியவற்றின் எண்களை அடிப்படையாகக் கொண்டது.  தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களும் முறையே ஒவ்வொன்றும் ஒன்பது இயல்களைப் பெற்று மொத்தம் இருபத்தேழு இயல்கள் அமைந்துள்ளன.  இவ்வதிகாரங்களும் இயல்களும் மும்மைப் பகுப்பிற்கு ஒத்துள்ளன.  ஆனால் நூற்பாக்கள் மட்டும் இவ்வாறு அமையவில்லை.  இதனைச் "சொல் - நூற்பா எண்ணிக்கையாக இவர் (இராசகோபால பிள்ளை) 429 தருகிறார்.  பொதுவாக, 463.  காரணம் சேனாவரையர், உரிச்சொல்லியலில் சில நூற்பாக்கட்குச் சேர்த்து உரையெழுதி உரைக்குப் பின் இவை இரண்டு சூத்திரம், இவை மூன்று சூத்திரம், இவை நான்கு சூத்திரம் என எழுதுகின்றார்" (தொல்காப்பியப் பதிப்புகள், ப.76) என்பதாலும், "செய்யுளியல் 206ஆம் நூற்பாவிற்கு விளக்கந்தரும் போது இளம்பூரணர் 'கொல்லே ஐயம் எல்லே இலக்கம்' எனத் தந்துள்ளார்.  இந்நூற்பாக்கள் இசைச்சொல்லியலில் 753(20), 754(21) இரண்டு நூற்பாக்களாக அமைந்துள்ளன.  கொல்லே ஐயம் என்பது ஒரு நூற்பா. எல்லே இலக்கம் என்பது ஒரு நூற்பா" (தொல்காப்பியப் பதிப்புகள், ப.50) என்பதாலும் அறியலாம்.

இளம்பூரணர் தொல்காப்பிய நூற்பாக்கள் 1595 (எழுத்து 483, சொல் 456, பொருள் 656)என்றும், நச்சினார்க்கினியர் 1437 நூற்பாக்கள் (எழுத்து 483, சொல் 463, பொருள் ஐந்து இயல்களில் 491) என்றும், பேராசிரியர் பொருளதிகார இறுதி நான்கு இயல்களுக்கு 217 நூற்பாக்கள் என்றும், சேனாவரையர் சொல்லதிகார நூற்பாக்கள் 463 என்றும், தெய்வச்சிலையார் சொல்லதிகார நூற்பாக்கள் 543 என்றும், கல்லாடர் சொல்லதிகார முதல் ஆறு இயல்களுக்கு 250 நூற்பாக்கள் என்றும் கொண்டிருக்கின்றனர்.

மேலும் முனைவர் ச.வே. சுப்பிரமணியம் அவர்களின் தொல்காப்பியப் பதிப்புகள் என்னும் நூலில் சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் தொல்காப்பிய நூற்பாக்கள் 1610 (எழுத்து 483, சொல் 453, பொருள் 664) என்றும், கா. நமச்சிவாய முதலியார் அவர்கள் 1600 (எழுத்து, சொல் 948, பொருள் 652) நூற்பாக்கள் என்றும், ச. சோமசுந்தர பாரதியார் அவர்கள் அகத்திணையியல் புத்துரையில் 54 நூற்பாக்கள்(இளம்.58, நச்சர்.55) என்றும், புறத்திணையியல் புத்துரையில் 35 நூற்பாக்கள் (இளம்.30, நச்சர்.36) என்றும், மர்ரே எஸ். இராஜம் அவர்களின் தொல்காப்பியப் பதிப்பில் 1602 (எழுத்து 483, சொல் 463, பொருள் 656) நூற்பாக்கள் என்றும், புலியூர்கேசிகன் பதிப்பில் 1604 நூற்பாக்கள் என்றும், சிதம்பர புன்னைவனநாத முதலியார் அவர்கள் 1610 நூற்பாக்கள் என்றும் அறுதியிட்டுப் பெரும்பான்மையும் நச்சினார்க்கினியர் பாடத்தை ஏற்றுக்கொண்டு மூலத்தைக் கொடுத்துள்ளனர்.

நூற்பாக்களை இயல் மாற்றி உரைகண்ட தன்மையையும் பதிப்பாசிரியர்களிடையே காணப்படுகிறது.  பொருளதிகார குழந்தையுரையில், "அகத்திணை இயலில் 55 நூற்பாக்கள்.  அவற்றுள் 42 நூற்பாக்களை எடுத்துக்கொண்டு பொருளியல் 17, 42ஆம் நூற்பாக்களை அகம் 39, 40ஆம் நூற்பாக்களாகத் தருகிறார்.  புறம் 32ஆம் நூற்பாவை அகம் 45ஆம் நூற்பாவாகவும் இவர் கொள்கிறார்....... அகத்திணையியல் 41ஆம் சூத்திரத்தில் உள்ள தலைவன் கூற்றுக்கள் 17இல் 6 களவின் உடன்போக்கிற்கும், அடுத்த 11ம் கற்பின் பிரிவுக்கும் உரியவையாகும்.  எனவே அச்சூத்திரத்தை இரண்டாக்கி, அந்தந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ளன" (தொல்காப்பியப் பதிப்புகள், ப.137) என்கிறார்.

இவற்றையெல்லாம் நோக்கும் போது உரையாசிரியர்கள் தத்தம் கருத்திற்கு ஏற்ப நூற்பாக்களை இணைத்தும் பிரித்தும் இடம்மாற்றியும் பொருள் கொண்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.  உரையாசிரியர்களிடையே காணப்படும் இம்மாறுபாடுகள் இதுநாள்வரை தீர்க்கப்பெறாமலேயே இருக்கின்றன.  இதற்கு ஓர் தீர்வு காணல் இன்றையத் தேவையாகும்.

உரையாசிரியர்களின் நூற்பா பகுப்பில் மும்மை

இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர் ஆகியோர் ஒவ்வொருவரும் தொல்காப்பியம் ஒவ்வோர் இயலிலும் கொண்ட நூற்பா அளவு பின்வரும் அட்டவணை விளக்கும்.
உரையாசிரியர் இயல்கள்            தொகை
             பெயர் 1 2 3 4 5 6 7 8 9
எழுத்து
  இளம்.               33 49 21 40 30 30 93 110 77 483
  நச்சர்.               33 49 20 40 30 30 93 110 78 483
சொல்
  இளம்.              62 17 35 37 43 49 48 99 66 456
  நச்சர்.              62 22 35 37 43 51 48 98 67 463
  சேனா.      61 22 34 37 43 51 48 100 67 463
  தெய்வச்.      60 21 33 36 41 54 47 100 61 453
  கல்லாடர்      62 23 35 37 43 50 10 250
பொருள்
  இளம்.              58 30 51 53 52 27 38 235 112 656
  நச்சர்.              55 36 50 53 54 243 491
  பேராசிரியர்         27 37 243 110 217

இவ்வட்டவணையைக் காணும்போது உரையாசிரியர்களின் இயல் பகுப்பில் மும்மைத் தன்மை பெரும்பான்மை இருத்தலைக் காணமுடிகிறது.  எழுத்ததிகார 1-9 இயல்களும், சொல்லதிகார 1-9 இயல்களும், பொருளதிகார 1-9 இயல்களும் ஆக இருபத்தேழு இயல்களுள் 19 இயல்களும்; அதிகாரப் பகுப்பில் எழுத்து (483)ம், சொல் (456, 453)லும் மும்மைப் பகுப்பளவில் அமைந்துள்ளமையைக் காணலாம்.

இலக்கணம் என்னும் சொல் முப்பகுப்பைக் கொண்டதாலும், தொல்காப்பியத்துள்ளும் இதனைத் தொடர்ந்த இலக்கண நூல்களிலும், தொல்காப்பிய உரையாசிரியர்களின் பெரும்பாலான இயல் மற்றும் அதிகார நூற்பா பகுப்பளவுகளிலும் மும்மைத் தன்மை வெளிப்படுகிறது.  எனவே, இனித் தொல்காப்பிய நூற்பா அளவை முறைப்படுத்தி அறுதியிட முற்படுவோர் இவ்வழிமுறையைப் பின்பற்றினால் தெளிவு பிறக்கும் என்பது திண்ணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக