தமிழ்ச் சுவடிகளில் பொதுவெழுத்து, தனியெழுத்து என இரண்டு வகையான எழுத்துக்கள் உண்டு. பொதுவெழுத்தாவது, எல்லாச் சொற்களுக்கும் வருவதான எழுத்தாகும். இவ்வகையில் முதலெத்து, சார்பெழுத்து அமையும். தனியெழுத்தாவது, ஒரு குறிப்பிட்ட சொல், எண், அளவு ஆகியவற்றிற்கு மட்டும் வருவதான எழுத்தாகும். இவ்வகையில் அலகெழுத்து, கூட்டெழுத்து, குறிப்பெழுத்து அமையும்.
I. பொதுவெழுத்து
அ. முதலெழுத்து
உயிரெழுத்து, மெய்யெழுத்து என முதலெழுத்து இரண்டு வகைப்படும். அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய பன்னிரண்டும் உயிரெழுத்து என்றும்; க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் மெய்யெழுத்து என்றும் கூறுவர். தமிழ்ச் சுவடிகளில் உயிரெழுத்து பன்னிரண்டில் அ, ஆ, இ, ஈ, உ, எ, ஐ, ஒ ஆகிய எட்டும் அவ்வவ்வெழுத்தின் தனித்தன்மையுடன் அமைந்திருக்கும். உயிரெழுத்தில் இடம்பெறாத ஊ, ஏ, ஓ, ஔ ஆகிய நான்கும் தன்னுடைய தனித்தன்மையுடன் இல்லாமல் ஒரு மயக்க நிலையில் தமிழ்ச்சுவடிகளில் அமைந்திருக்கும். உகரமும் ஒகரமும் ளகரத்தை உடன்பெற்று 'உள' என்று ஊகாரமாகவும், 'ஔ' என்று ஔகாரமாகவும் அமைந்திருக்கும். சுவடியெழுதும் முறையில் 'ஊ' எழுதுவதில் சில இடர்ப்பாடுகள் நேரிடுகின்றன. அதாவது, சுவடியில் எழுத்து எழுத எழுத ஓலை எழுத்தின் அளவிற்கேற்ப இடமாக நகர்ந்துவிடும். இதனடிப்படையில் 'உ' எழுதும் போது உகரம் எழுதியதற்கான எழுத்திடம் ஓலையில் இடமாக நகர்ந்திருக்கும். உகர எழுத்தில் அமைந்திருக்கும் படுக்கைக்கோட்டின் நடுவே ளகரம் சேர்ந்தால்தான் அது ஊகாரமாகும். ஆனால், ஓலை உகர எழுத்தளவு இடமாக நகர்ந்துவிட்டதால் மீண்டும் அவ்வோலையை வலமாக இழுத்து எழுதுவது என்பது மிகவும் கடினம். எனவே, உகரத்தை அடுத்து ளகரத்தை அமைத்தனர். எகர ஏகாரம், ஒகர ஓகாரம் ஆகியவற்றிற்கு மட்டும் குறில்-நெடில் வேறுபாடு காட்டாமல் அமைந்திருக்கும். மெய்யெழுத்து பதினெட்டும் புள்ளியில்லாமல் அகரமேறிய உயிர்மெய் போன்றே அமைந்திருக்கும்.
"மெய்யின் இயற்கை புள்யியொடு நிலையல்" (தொல். எழுத்து. நூ.15)
"எகர ஒகரத் தியற்கையும் அற்றே" (தொல். எழுத்து. நூ.16)
என்னும் தொல்காப்பியரின் வழக்குப்படி எகரமும் ஒகரமும் புள்ளிபெறும் என்பதால் தொல்காப்பியர் காலத்தில் எகர ஒகரங்களின் மீது புள்ளி(சுழி) வைத்து எழுதினால் குறிலெழுத்து என்றும், புள்ளி(சுழி) இன்றி எழுதினால் நெடிலெழுத்து என்றும் கொண்டனர்.
புள்ளிவைத்து எழுதினால் ஓலையில் ஓட்டை(துளை)விழும் என்னும் கருத்து நிலவுகின்றது. இது பொருந்துவதன்று. அண்மைக்காலத்தில் எழுதப்பெற்ற சில சுவடிகளில் புள்ளிவைத்து எழுதப்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது. இதனைப் பார்க்கும்போது தொல்காப்பியரின் வழக்குப்படி தமிழ்ச்சுவடிகளில் பழங்காலத்தில் புள்ளிவைத்து எழுதியிருக்கின்றனர் என்பது தெரிகின்றது. பழங்காலத்திலும் அண்மைக் காலத்திலும் தமிழ்ச்சுவடிகளில் புள்ளிவைத்து எழுதும் வழக்கம் இருந்திருக்கும் போது புள்ளியில்லா எழுத்து தமிழ்ச்சுவடிகளில் எப்படி வந்தது என்பதை ஆராயவேண்டும்.
தி.நா. சுப்பிரமணியம் அவர்கள் 'கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு வரை புள்ளியிட்டு எழுதும் வழக்காறு இருந்தது. அதன்பிறகே அவ்வழக்காறு கைவிடப்பட்டுப் புள்ளியின்றி எழுதும் நிலை உருவாகியுள்ளது' (மேற்கோள், சுவடியியல், ப.192) என்கின்றார். இக்கருத்தை மெய்ப்பிக்கும் விதமாக எஸ். சௌந்தரராஜன் அவர்கள் 'ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழ்மொழியில் வடமொழியின் தாக்கம் மிகுதியாகிவிட்டது. அதனால் கிரந்த எழுத்துகள் தமிழ்மொழியில் கலக்கத் தொடங்கின. புள்ளியிட்டு எழுதும் வடிவம் கிரந்த எழுத்துக்களுக்குக் கிடையாது. கிரந்தம் தெரிந்தவர்கள் தமிழ்ச் சுவடிகளை எழுதும் பொழுது சிறிது சிறிதாகச் சில கிரந்த எழுத்துக்களையும், புள்ளியின்றி எழுதும் கிரந்த எழுத்து முறைகளையும் சுவடிகளில் புகுத்திவிட்டனர்' (மேற்கோள், சுவடியியல், ப.193) என்கின்றார்.
இக்கூற்றுகளின்படி புள்ளிவைத்து எழுதும் வழக்கம் அற்றுப்போனதால் எகர ஏகார வேறுபாடும், ஒகர ஓகார வேறுபாடும் இன்றி சுவடியில் ஒன்றுபோல எழுதத் தொடங்கினர். இவ்வாறு புள்ளியின்றி எழுதுவதால் எழுதும் வரிகளும் ஓலைகளில் அதிகமாவதைக் கண்டவர்கள் இம்முறையையே பின்பற்றத் தொடங்கியிருக்கின்றனர், பெஸ்கி என்னும் வீரமாமுனிவர்(கி.1680-1742) அவர்கள் கி.பி.1710இல் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். அவர் வந்த சில ஆண்டுகளில் 'கொடுந்தமிழ் இலக்கணம்' என்னும் நூலை யாத்தார். இவற்றில் இதுநாள் வரை தமிழெழுத்தில் இருந்து வந்த சில இடர்ப்பாடுகளைக் களைய முற்பட்டிருக்கின்றார். இவற்றில் எகர ஒகர வேறுபாடும் அமையும். புள்ளியின்றி எழுதிய எகர(எ) ஒகர(ஒ)ங்களைக் குறில் உயிர் என்றும், எகர ஈற்றில் இடமாக சிறிய சாய்வுக்கோடு இட்டால் ஏகாரம்(ஏ) என்றும், ஒகர ஈற்றில் வலமாச் சுழித்தால் ஓகாரம்(ஓ) என்றும் கொண்டார். இம்முறை இன்றுவரை நடைமுறையில் இருந்துவருகின்றது.
இதன் பிறகும் எழுத்தின் வடிவ மாற்றம் நிகழக்கூடாது என்பதற்காக வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்(கி.பி.1839-1898) 'அறுவகை இலக்கணம்' எனும் நூலில்,
அ, ஆ- "கிளிமுகம் போலச் சுழித்துக் கீழ்க்கொணர்ந்து
இடப்பால் நீட்டி மேல்வளைத்து இடைவெளி
அமைதர வலத்துஈர்த்து அம்முகம் அடங்க
மேல்ஈர்த்து அம்முறை கீழும் ஈர்த்தல்
அகரக் குறியாம்; ஆன்இளங் கன்றிற்கு
இரங்கலில் மூலத்து எழுகால் துணைக்கொடு
சிறிது வாய் திறந்து ஒலிக்கும்; அக்குறியின்
ஈற்றின் வரைநுனி இலங்க வலந்தொட்டு
இடம்வரை சுழித்தல் ஆகாரத்து இயல்பாம்;
அவண்எழுந்து இருமடங் காம்அதன் தொனியே".(நூ.7)
இ, ஈ- "களம்வரை அகரம் ஆம்எனக் காட்டி
இடம்சுழித்து இடைவெளி நடுக்கொடு தலையைச்
சுற்றி வலத்தில் துகள்அற நிறுவல்
இகரம்; ஈகாரம் நிலைவரை ஒன்றுஇட்டு
அதன்தலை பற்றி வலத்துஓர் வரைஇழுத்து
அவ்வரை நடுவொன்று அடுத்ததிற் காட்டி
அதன்இரு கண்போன்று அருகிற் சுழித்தல்;
இவ்விரு பொறியும் எழில்நகைப் பந்தி
பாதியும் முற்றும் படர்ஒளி பரப்பத்
தொனிப்பவென்று உணர்வார் சொல்வது முறையே". (நூ.8)
உ, ஊ- "சுழியில் வலம்கீழ்ப் பற்றி இடத்திற்
சிறிதுஇழுத்து அகரத்து அடியெனக் கீழா
வளைத்த வரையை வலப்புறம் நீட்டல்
உகரம்; ஊகாரம் சுழித்தலை இடமேற்
பற்றி வலமாப் பண்புஉற வளைத்து
மேற்கொடு கூனற் பனையென முறையிற்
காட்டிக் கிடைவரை நடுவொரு நிலைவரை
அளவில் ஈர்த்த அக்கரம் புணரில்,
இவ்விரண்டு எழுத்தும் இலங்குஇதழ் பொருந்தாக்
குவிதலிற் குறுகலும் நீடலும் கொண்டு
தொனிக்கும் என்பது தொல்லோர் தொடர்பே". (நூ.9)
எ, ஏ- "மேல்உறச் சுழித்த வாக்கில் வலம்ஈர்த்து
அவ்வரை நடுவொரு காலிற் கீழ்வரை
அமைத்தல் எகரம்; அதன்ஈறு பற்றி
இடத்தில் நீட்டில் ஏகாரம் ஆகும்.
இவ்விரு பொறிகளும் நாநுனி கீழ்ப்பல்
உள்அருகு ஒன்றக் கடிதுவாய் திறந்து
குறுகியும் பெருகியும் தொனிக்கும் அன்றே". (நூ.10)
ஐ- "ஊகாரத்து இரண்டாம் எழுத்துஎனத் துவக்கி
வலத்தில் நீட்டாது வளைத்துஇடங் கொணர்ந்து
கீழுற இருதரம் மேல்நோக்கி வளைத்தல்
ஐகாரம்; நுனிநா அடிப்பல் உட்புறத்து
ஒன்றத் துருத்தியில் உயர்ந்துகீழ் அடங்கி
ஒலிக்கும் என்பது உணர்ந்தோர் இயல்பே". (நூ.11)
ஒ, ஓ- "சுழித்துமேற் கொடுவலத்து இடம்பட வளைத்துஉட்
புக்கு வளைநுனி காட்டக் கீழ்ப்பிரித்து
அவ்வழி வளைத்தே அளவில்மேற் கொண்டு
அதுமுதல் மேழியாம் என்றுஇடம் சாய்த்து
எழுதுவது ஒகரம்; ஆகாரத்து ஈறு
புணரில் ஓகாரம்; குவிந்தும் குவியா
உதடும் திறந்தும் திறவா வாயும்
திகழ்தரத் தொனிப்பன சிறுத்தும் பெருத்துமே". (நூ.12)
ஔ- "ஒகரமும் ஊகாரத்து இரண்டாம் எழுத்தும்
புணரில் ஔகாரம்; சிறிதுவாய் திறந்து
கீழ்இதழ் வளைதர மேற்பல் பொருந்த
மெல்லெனக் காட்டும் வியன்தொனி யுடைத்தே". (நூ.13)
ஃ- "உயிர்எழுத்து உரைத்தனம், உரித்த தேங்காய்க்
கண்போல் முச்சுழி கவினுறக் காட்டல்
ஆய்தம்; துணைஇழந்து அலமரும் காக்கை
குளறலில் மிடற்றில் குமுறொலி தருமே". (நூ.14)
மெய்எழுத்து
"ஒற்றின் சிகரந்தொறும் ஒன்றா ஒருசுழி
வைத்து வரைதரில் மருட்டா; அன்றெனில்
அகரம் சார்உயிர் மெய்எனப் பிறழும்;
அதனால் அவற்றின் வடிவே அறைகுதும்;
அவற்றின் தொனிதொறும் ஆவியும் உடலும்
தொனிக்கும் இயல்பே தோம்அறக் கலந்து
மிளிர்தரும் ஆயினும் விளம்பும் காலை
இவற்றின் ஒலிமுன் எழும்ஆ தலின்இப்
பொறிகளின் ஒலியெனப் புகலல் நன்றே". (நூ.15)
"ஒற்றிற்கு ஒருசுழி உயரக் காட்டியும்
பிறர்செவி யறியப் பேச ஒண்ணா
இயல்பினது ஆகி இதயத்து அவிர்ந்து
பொறியினம் விளையும் பூமி ஆகி
உயிரொலி பிறழ்தற்கு ஆதரம் ஆகி
அதனொடு கூடின் தொனிப்பது ஆகி
ஆய்தம் என்கைக்கு அண்ணிது ஆகிக்
கிடக்கும் என்றே கிளத்தினர் புலவோர்". (நூ.16)
"ஆய்தமும் ஒற்றும் அறிந்தவாறு உரைத்தனம்;
தனித்தனி ஒவ்வோர் ஒற்றும் உயிர்களில்
நிரைபெறப் புணர்ந்தமை நிகழ்த்தி அதன்அதன்
தொனிவரும் உழையும் சொல்லுதும் துணிந்தே". (நூ.17)
என முதலெழுத்து முப்பதுக்கும் வரிவடிவ இலக்கணம் கூறியிருக்கின்றார்.
ஆ. சார்பெழுத்துகள்
உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகிய பத்தும் சார்பெழுத்துக்கள் எனப்படும். இவற்றில் உயிர்மெய், ஆய்தம் ஆகிய இரண்டு வகையான சார்பெழுத்துகள் மட்டும் வரிவடிவ நிலையில் அமையக் கூடியவை. ஏனையவை ஒலிப்பு முறையால் அமைவனவாகும். வரிவடிவ நிலையில் அமையும் சார்பெழுத்துக்கள் (ஆய்தம், உயிர்மெய்) இருநூற்றுப்பதினேழில் ஒருவரிவடிவ எழுத்து, இருவரிவடிவ எழுத்து, மூவரிவடிவ எழுத்து என மூன்று வகையான வரிவடிவ எழுத்துகள் அமைந்திருக்கும். இவ்விருநூற்றுப்பதினேழில் தமிழ்ச்சுவடிகளில் 97 எழுத்துகள் தனித்தன்மையுடனும், உயிர்மெய் எழுத்துக்களுக்கான பொதுக்குறியீடு இரண்டும் அமைந்திருக்கும். அவை பின்வருமாறு:
அகர உயிர்மெய்யில் க. ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன ஆகிய 18ம்; ஆகார உயிர்மெய்யில் ணாகார, றாகார, னாகார ஆகிய 3ம்; இகர உயிர் மெய்யில் கி, ஙி, சி, ஞி, டி, ணி, தி, நி, பி, மி, யி, ரி, லி, வி, ழி, ளி, றி, னி ஆகிய 18ம்; ஈகார உயிர்மெய்யில் கீ, ஙீ, சீ, ஞீ, டீ, ணீ, தீ, நீ, பீ, மீ, யீ, ரீ, லீ, வீ, ழீ, ளீ, றீ, னீ ஆகிய 18ம்; உகர உயிர்மெய்யில் கு, ஙு, சு, ஞு, டு, ணு, து, நு, பு, மு, யு, ரு, லு, வு, ழு, ளு, று, னு ஆகிய 18ம்; ஊகார உயிர்மெய்யில் கூ, ஙூ, சூ, ஞூ, டூ, ணூ, தூ, நூ, பூ, மூ, யூ, ரூ, லூ, வூ,, ழூ, ளூ, றூ, னூ ஆகிய 18ம்; ஐகார உயிர்மெய்யில் ணைகாரம், றைகாரம், னைகாரம் ஆகிய 4ம்; ஆய்தம் (ஃ)1ம் ஆகத் தொண்ணூற்றெட்டு எழுத்துகளும் தமிழ்ச் சுவடிகளில் ஒருவரிவடிவ எழுத்துகளாக அமைந்திருக்கும்.
உயிர்மெய் எழுத்துக்களுக்கேயுரிய பொதுக்குறியீடுகளாக கோடு அல்லது கொம்பு, இணைகோடு அல்லது இருகோடு (இணைகொம்பு அல்லது இருகொம்பு) ஆகியன தமிழ்ச் சுவடிகளில் அமைந்திருக்கும். மேலும், ரகரம் காலாகவும், ளகரம் ஔகாரத்தைக் குறிக்கும் மூவரிவடிவத்தின் மூன்றாவது எழுத்தாகவும்(ள) அமைந்து உயிர்மெய் எழுத்துக்களுக்கான குறியீடுகளாக அமைந்திருக்கும்.
அதாவது, அகர உயிர்மெய்யை அடுத்து புள்ளி அல்லது கால் (£-இது தமிழ்ச்சுவடிகளில் ரகரமாகவும் வழங்கப்பெறும்) பெற்று கா, ஙா, சா, ஞா, டா, தா, நா, பா, மா, யா, ரா, லா, வா, ழா, ளா ஆகிய 15ம் ஆகார உயிர்மெய்யாகவும்; அகர உயிர்மெய்க்கு முன் கொம்பு பெற்று கெ, ஙெ, செ, ஞெ, டெ, ணெ, தெ, நெ, பெ, மெ, யெ, ரெ, லெ, வெ, ழெ, ளெ, றெ, னெ ஆகிய 18ம் எகர உயிர்மெய்யாகவும்; ஆகார உயிர்மெய்ய்கு முன் கொம்பு பெற்று 3ம் ஒகர உயிர்மெய்யாகவும் அமைந்த 36 வகையான எழுத்துக்கள் இருவரிவடிவ எழுத்துக்களாக அமைந்திருக்கும்.
அகர உயிர்மெய்க்கு முன் கொம்பும் ஈற்றில் காலும் பெற்று கொ, ஙொ, சொ, ஞொ, டொ, தொ, நொ, பொ, மொ, யொ, ரொ, லொ, வொ, ழொ, ளொ ஆகிய 15ம் ஒகர உயிர்மெய்யாகவும்; அகர உயிர்மெய்க்கு முன் கொம்பும் ஈற்றில் ளகரமும் பெற்று கௌ, ஙௌ, சௌ, ஞௌ, டௌ, ணௌ, தௌ, நௌ, பௌ, மௌ, யௌ, ரௌ, லௌ, வௌ, ழௌ, ளௌ, றௌ, னௌ ஆகிய 18ம் ஔகார உயிர்மெய்யாகவும் அமைந்த 33 வகையான எழுத்துக்கள் மூவரிவடிவ எழுத்துக்களாக அமைந்திருக்கும்.
அகர உயிர்மெய்க்கு முன் இருகொம்பு அல்லது இருகோடு பெற்று கெ-கை, ªஙெ-ஙை, ªசெ-சை, ªஞெ-ஞை, ªடெ-டை, ªதெ-தை, ªநெ-நை, ªபெ-பை, மெ-மை, ªயெ-யை, ªரெ-ரை, ªவெ-வை, ªழெ-ழை, ªறெ-றை ஆகிய 14ம் மூவரிவடிவம் மற்றும் இருவரிவடிவம் தாங்கிய எழுத்தாகத் தமிழ்ச்சுவடிகளில் அமைந்திருக்கும். உயிரெழுத்தில் 'எகர ஒகரம்' புள்ளிபெற்று வரும் என்று கூறிய தொல்காப்பியரின் கூற்றுக்கு உரைவரைந்த நச்சினார்க்கினியர் எகர ஒகர உயிர்மெய்களுக்கும் இக்கூற்று பொருந்தும் என்கின்றார்.
தமிழ்ச்சுவடிகளில் கி.பி.12ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு புள்ளிவைத்து எழுதும் வழக்கம் இல்லாததாலும், இன்று நமக்குக் கிடைக்கக் கூடிய தமிழ்ச்சுவடிகள் கி.பி.15ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட சுவடிகளானதாலும் சுவடிகளில் புள்ளியெழுத்துக்கள் காணப்பெறவில்லை எனலாம். எனவே, தமிழ்ச்சுவடிகளில் எகர-ஏகாரம், ஒகர-ஓகாரம் வேறுபாடு தெரியாதது போல் எகர-ஏகாரம் உயிர்மெய் எழுத்துக்கள் 18ம், ஒகர-ஓகார உயிர்மெய் எழுத்துக்கள் 18ம் ஆக 36 உயிர்மெய் எழுத்துக்களும் குறில்-நெடில் வேறுபாடின்றி அமைந்திருக்கும்.
இவ்வேறுபாடுகளைக் களைவதற்கு வீரமாமுனிவர் அவர்கள் அரும்பாடுபட்டிருக்கின்றார். அவர் தம்முடைய 'கொடுந்தமிழ் இலக்கணம்' என்னும் நூலில், குறிலுக்கும் நெடிலுக்கும் ஒரே மாதிரியாக எழுதப்பட்டு வருகின்ற கொம்பு என்று சொல்லப்படுகிற 'ª' இந்த எழுத்து குற்றெழுத்தைக் குறிப்பிடவும், இக்கொம்பை மேலே சுழித்து வருகிற '«' இந்த எழுத்து நெட்டெழுத்தைக் குறிப்பிடவும் பயன்படுத்தவேண்டும் என்று கூறியிருக்கின்றார். இவரின் இக்கருத்தினை ஏற்றுக்கொண்ட தமிழன்பர்கள் அதன்பிறகு எழுதப்பெற்ற சுவடிகளில் இவ்வேறுபாட்டைக் காட்டியிருக்கின்றனர் எனலாம். இவ்வேறுபாடு களைந்ததை நிலைநிறுத்தும் விதமாக வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் 'அறுவகை இலக்கணம்' என்னும் நூலில் 247 எழுத்துக்களுக்கும் வரிவடிவ இலக்கணம் கூறியிருக்கின்றார். குறிப்பாக, அகர உயிர்மெய் எழுத்துக்கள் 18க்கும் தனித்தனியாக வரிவடிவ இலக்கணம் கூறிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அதன்பிறகான உயிர்மெய் எழுத்துக்களுக்குப் பொதுவான குறியீட்டின் வரிவடித்தைக் கூறுகின்றார்.
ககர வருக்கம்
"இருசுழி எழுதா ஈகாரத்து ஈறு
பற்றி, இடவரை அடிசுழி யாதுஅதன்
இடம்சிறிது இடம்பட மேல்நோக்கி வலமா
நடுவளைத்து, அவ்விரு வரைக்குறுக் கேற்றி
மேல்வரை யளவிற் கொணர்ந்து கீழ்ஒரு
தோட்டியில் வளைக்கில் ககரம்; அதன்வலம்
முற்பகர் குறிஉறில் காஆம்; முடியில்
பிறைகவிழ்த் தாலென எழுதில் கிகரம்ஆம்;
அப்பிறை வலம்நுனி சுழிக்கில் கீஆம்;
ஈற்றுச் சிறுவளை வதனைக் கீழுற நிமிர்த்து,அது
இடமாத் தலைவரை கொணரிற் குகரம்சூம்;
அவ்வளை வதனைக் கீழுற நிமிர்த்து,அது
தொட்டுமேற் கொண்டு வலத்துஒரு சிறுவளைவு
இட்டுஅவண் நீட்டில் கூஆம்; ஒகரம்
போலக் கொணர்ந்துஉட் புகுதாது கீழ்இழுத்து
இட்டகொம்பு ஒன்றுமுன் இசையிற் கெகரம்ஆம்;
அக்கொம்பு ஈற்றின்மேற் சுழிக்கிற் கேஆம்;
இணைக்கொம்பு ஒன்றோடொன்று இசைவுற எழுதிய
பின்னுறிற் கைஆம்; கெக்கே இரண்டினும்
காஎனும் எழுத்தின் பிற்குறி அணையின்
கொக்கோ ஆகும்; கெகரத்து ஈற்றில்
ஔகா ரத்துஇரண் டாம்எழுத்து அணையில்
கௌஎனத் திகழும்; கழறிவை முற்றும்
அடிநாக் கொடுமிடறு அடைத்துஒலிப் பனவே". (நூ.18)
ஙகர வருக்கம்
"கோஎனும் எழுத்தன் மூன்றாம் குறியின்
ஈற்று வரையைக் குறைத்து, திற்கூகரத்து
ஈறுஉறப் பொருத்தி, மேல்வரை பொருந்தா
வண்ணம்மேல் நீட்டல் ஙகரம் ஆகும்;
அந்நிலை வரைஇடம் கிக்கீ அணிபிறை
மருவிடில் ஙிகர ஙீகாரம் விளங்கும்;
அவ்வரை அடிதொட்டு அகர ஆகாரத்து
ஈறு கூட்டில் ஙுங்ஙூ இயங்கும்;
ஙாவொடு ஙெங்ஙே ஆதிய பிறவும்
காவொடு கெக்கே ஆதிய போல்வ;
அடிநா உள்நாத் தொடும்ஒலி யினவே". (நூ.19)
சகர வருக்கம்
"ஈற்றின் வளைவுஒன்று இன்றெனில் ககரம்
சகரம் ஆம்;அதன் ஈற்றுக் கிடைவரை
நடுஒரு சிறுவரை கீழ்நோக்கி நாட்டில்
சுகரம் ஆம்;அது தொட்டு வலம்சுழித்துக்
குகரத்து ஈறுஎன நிறுவிற் சூஆம்;
சாசி சீயொடு செகரம் ஆதிய
காகி கீயொடு கெகரம் போல்வன,
இவற்றின் தொனிநடு நாவில்நின் றெழும்கால்
துணைக்கொடு வரும்எனச் சொல்வது கடனே". (நூ.20)
ஞகர வருக்கம்
"எகரத்து ஈற்றினில் சூஎனும் எழுத்தின்
ஈறுஉறு மாயின் ஞகரம் தோன்றும்;
சிச்சீ என்னும் பொறிகளின் பிறைகள்
மிகைபடக் கூனி இப்பொறி நடுநிலை
வரைமிசை நிற்பின் ஞிஞ்ஞீ வயங்கும்;
ஈற்றைமேற் கொணராது அகரமொத்து எழுதிக்
கீழ்இழா இடத்தே ஞுகரம் ஆகும்;
நதன்ஈறு பற்றி வலத்துஈர்த்து அவ்வரை
நடுஒரு தூண்பொரும் நல்வரை எழுதின்
ஞூகாரம்; ஞாவொடு ஞெஞ்ஞே ஆதிய
ஙாவொடு ஙெங்ஙே முதலிய பொறிகளின்
நிலைபெறீஇக் கிடப்பன, நீள்நா முற்புறம்
அண்£ ஒன்றுறும் அவற்றின் தொனிக்கே". (நூ.21)
டகர வருக்கம்
"நிலைவரை அடிதொட்டு அதன்இரு பங்கு
வலத்தில் நீட்டட் டகரம் ஆகும்;அக்
கிடைவரை நடுமேல் இடந்தொட்டு வலமாச்
சிறிது வளைத்துஓர் தோட்டியிற் குறுக்காய்க்
கீழ்உறள இழுப்பினும் அதன்தலை ஞீகர
மீக்குறி இடினும் டிட்டீ விளங்கும்;
முதல்வரை நடுவலம் தொட்டுஅடி அழியாது
ஒருகொம்பு எழுதினும் அதன்ஈ றளவில்
சுழிப்பினும் டுட்டூ ஒளிரும்; டாவொடு
டெமுதல் பிறவும் ஞாவொடு ஞெமுதற்
பிறவே போல்வன; நாநுனி அண்ணாத்
தொட்டுக் கீழ்வரத் தொனிப்பன ஆமே". (நூ.22)
ணகர வருக்கம்
"குறுகிய இரட்டைக் கொம்புஈறு எகரம்
பொருந்த ணகரம் பொலிதரும்; ஞகரம்
புணர்ந்துஅவ் வொருமுச் சுழியையும் முறையிற்
சுற்றி நடுச்சுழி மேல்வர ஆம்;
ஞிஞ்ஞீ மேற்குறி ணவ்வொடு அம்முறையில்
சேர்தர ணிண்ணீ திகழ்தரும்; ணுண்ணூ
ணெண்ணே ணௌஎனும் எழுத்தினம் ஞுஞ்ஞூ
ஞெஞ்ஞே ஞௌஎனல் போலும் நிலையின;
உகரத்து அடியினைச் சிறிதுமேல் வலம்கொணர்ந்து
அதனொடு ணகரம் பொருந்த ஆம்;
ணொண்ணோ இரண்டும் கொம்புஇயல் வழாஅ
இருகுறி உடைத்தாய்ப் பிற்குறி வாக்
கிடக்கும்;இப் பகுதியில் கிளர்தொனி எழுங்கால்
நுனிநா அடிப்புறம் அண்ணாத் தொட்டுத்
தடவும் என்று உரைப்பது தக்கோர் மரபே". (நூ.23)
தகர வருக்கம்
"சகரத்து ஈற்று வரையினைக் குறுக்கிக்
கீழுற இழுக்கில் தகரம் ஆகும்;
அவ்வரை இடம்சாய்த்து அதனொடு ணுண்ணூப்
பிற்குறி இசைக்கில் துகரமும் தூவும்
துலங்கும்; மற்றைய பொறி எலாம் முதற்சொல்
வருக்கம் போலும் நிலைகொடு வயங்கும்.
மேற்பல் உட்புறத்து அடியின் நாஒன்ற
ஒலிப்பன வாம்என்று உரைத்திடத் தகுமே". (நூ.24)
நகர வருக்கம்
"ஙகரத்து ஈற்று நிலைவரை யுடன்தேன்
அடிதொடுத் இடத்துக் கிடைவரை தவிரவும்
நகரம் தோன்றும்; நாமுதற் பிறஞா
முதலிய போன்றே மொழிதரும் நிலையின.
தகரந் தோன்றிய தானத்து உட்புறம்
மெல்லென நுனிநாத் தொடும்ஒலி யினவே". (நூ.25)
பகர வருக்கம்
"டகரத்து ஈற்று வரையினைக் குறைத்து
வலத்தும் ஓர்நிலை வரைஇடில் பகரம்;
மூன்றுதொட்டு ஆறு வரையினும் ஙகர
வருக்கத்து அவ்வத் தொகைஎழுத்து உறுகுறி
பொருந்தும்; பாவொடு பெகரம் ஆதிய
தகர வருக்கத் தன்மையிற் பிறங்கும்;
மொழிதரு தொனிஇதழ் மூடித் திறக்குமே". (நூ.26)
மகர வருக்கம்
"பகரத்து ஈற்று வரையினைக் குறைத்துஇடம்
வளைத்துக் கிடைவரை பொருந்த நாட்டில்
மகரம் ஆம்;அதன் ஈறுதொட்டு அதன்மேல்
ஞிஞ்ஞீ உறுகுறி பொருந்திடில் மிம்மீ;
அவ்விடம் தொட்டே அதன்கீழ் இடமாச்
சுற்றிமேல் நிறுவில் முகரம் தோன்றும்;
அவ்வீறு சுழிக்கின் மூகாரம் ஆகும்;
மாவொடு மெகரம் ஆதிய யாவும்
முற்பகர் இனமே போலும் குறிப்பின;
தொனியும்அவ் வாறே தோன்றிச் சிறிது
பேதம் ஆகி மெல்லெனப் பிறக்குமே". (நூ.2)
யகர வருக்கம்
"பகர எழுத்தின் முதல்நிலை வரைவலத்து
இடம்சிறிது ஒடுங்க நடுஒரு நிலைவரை
அவ்விரு வரைகளின் அளவில் காட்ட
யகரம் தோன்றும்; யாமுதல் யௌவரை
பாமுதல் பௌவரை நிகழ்வதின் நிற்பன.
நுனிநா மேற்புறம் அடிப்பல் உட்புறத்து
ஒன்றக் களம்தரு கால்துணை பற்றி
இகரஞ் சார்ந்துஒலி தரும்எனல் இயல்பே". (நூ.28)
ரகர வருக்கம்
"யாஎனும் எழுத்தின் இரண்டாம் குறியே
ரகரம் ஆகும்; நிந்நீ உறுகுறி
பொருந்த ரிகர ரீகாரம் தோன்றும்;
ரகர ஈற்றின் நிலைவரை நடுவலந்
தொட்டு ஞஈறு புணரினும், அதன்நுனி
சுழிப்பினும் ருகர ரூகாரம் ஒளிர்தரும்;
ராவொடு ரெகரம் ஆதிய யாவும்
முன்முறை பிறழா வண்ணம் கிடக்கும்.
நுனிநா அண்ணா மெல்லெனத் தொட்டுப்
பின்னுறத் தடவில் பிறங்கொலி யினவே". (நூ.29)
லகர வருக்கம்
"ரௌஎனும் பொறியின் கடைக்குறி யதன்முற்
பகுதி காட்டி அதன்ஈறு பற்றி
வலமா மேலுற வளைத்திடல் லகரம்;
அவ்வளை வதன்வலத்து அடிதொட்டுக் கீழ்கொணர்ந்து
அதன்வலந் தொட்டு நுந்நூப் பிற்குறி
பொருந்த லுகர லூகாரம் பொலிதரும்;
யெழுத்து இயல்பே காரம் மன்னும்;
லாகாரம் லிகர ல¦காரம் லெகர
லேகாரம் லொகர லோகாரம் லௌஎனும்
எட்டும் யகரத்து இனம்என இசைவுறும்;
நாநுனி அண்ணா முன்னோக்கித் தடவும்
ஒலியின வாகும்என்று உரைத்திடல் முறையே". (நூ.30)
வகர வருக்கம்
"பகரத் தலைநிலை வரைபோய்ச் சுழியுறில்
வகரம் தோன்றும்; மற்றைய பதினோர்
எழுத்தும் அவ்வாறு இசைவுறில் இவையாம்;
மேற்பல் நுனிஅடி இதழில் பொருந்தத்
தொனிப்பன வாம்எனச் சொல்வது துணிவே". (31)
ழகர வருக்கம்
"மகரத்து ஈற்றைத் தொட்டுச் சிறிது
கீழ்இழுத்து அதன்வலம் தோட்டி இசைக்க
ழகரம் தோன்றும்; ழாமுதல் பிறஎலாம்
மாமுதல் பிறவே போல மன்னும்.
நாவளைந்து உள்வாங்கு ஒலியின வாமே". (நூ.32)
ளகர வருக்கம்
"ஔஎனும் எழுத்துஎம் மெய்யொடு புணரினும்
தொடரும்ஈற்று எழுத்தே ளகரம் ஆகும்;
க்குறி பொருந்தி யெனல் விளங்கும்;
மற்றைய எழுத்தோர் பத்தும் ரகர
வருக்கம் போன்றே மன்னுறீஇக் கிடக்கும்;
அண்ணா அடியில் நுனிநா அடிதொட்டு
ஒலிப்பன வாம்என்று உரைத்திடல் உரித்தே". (நூ.33)
றகர வருக்கம்
"கீழ்நோக்கி இருவளைவு ஒன்றொடொன்று இட்டு
வலத்துள வரையைக் கீழுற இழுத்திட
றகரம் தோன்றும்; அவ்வரை அளவில்
தொட்டுக் குகரத்து ஈறு காட்ட
எனல் விளங்கும்; ªகர «காரத்து
இதுசேர்ந்து ஈருரு வாகச் செய்யும்;
றிகரம் ஆதி றைவரை ஏழும்
றௌவும் தகர வருக்கம் போன்றே
அமைவுறும் குறியின; அண்ணா வதனை
நுனிநாப் பின்னர் நோக்கித் தடவ
உருமி போலும் ஒலிதரும் அன்றே". (நூ.34)
னகர வருக்கம்
"குறுகிய ஒற்றைக் கொம்புடன் எகரம்
பொருந்த னகரம் பொலிதரும் மற்றைப்
பதினோ ரெழுத்தும் ணகர வருக்கத்து
இயல்பே விளங்கும்; இவற்றின் தொனியால்
முன்நா அண்ணா முட்டும் அன்றே". (நூ.35)
எனச் சார்பெழுத்துகள் 216ம் உருவாகும் முறையைத் தண்டபாணி சுவாமிகள் தன்னுடைய அறுவகை இலக்கணத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.
தமிழ்ச்சுவடிகளில் அமையக்கூடிய எழுத்துக்களில் ஏறக்குறைய 4இல் 1பங்கு எழுத்துக்கள் (247இல் 57 எழுத்துக்கள்) மட்டுமே குழப்ப நிலையில் அமைந்திருக்கின்றன எனலாம். அதாவது, புள்ளி வைக்காததால் 56 எழுத்துக்களும் (மெய்-18, உயிர்-2, எகர உயிர்மெய்-18, ஒகர உயிர்மெய்-18), எழுதும் முறையால் ஊகாரமும்(உள) ஆக 57 எழுத்துக்கள் மட்டுமே குழப்ப நிலையில் அமைந்திருக்கின்றன. பாடல் மற்றும் பாட்டும் உரையும் கொண்ட சுவடிகளைப் படிக்கும் போதும் படியெடுக்கும் போதும் யாப்பையும் பொருளையும் மனதில் கொள்ளவேண்டும். உரைநடைச் சுவடிகளைப் படிக்கும் போதும் படியெடுக்கும் போதும் பொருள் பொருந்தப் படிக்கவும் படியெடுக்கவும் வேண்டும்.
II. தனியெழுத்து
மேற்கூறிய 247 எழுத்துக்களுக்குள் அடங்காமல் அவ்வெழுத்துக்களின் துணைகொண்டு சொற்குறியீடாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துக்களின் கூட்டாகவும், சொற்களை உணர்த்தும் குறியீட்டெழுத்தாகவும் அமைவனவெல்லாம் தனியெழுத்து எனலாம்.
தொடக்க காலத்தில் மனித இனம் பேசும் ஆற்றல் பெற்றிருக்கவில்லை. விலங்குகளைப் போன்றே ஒலிகளை எழுப்பித் தங்களின் கருத்துகளைப் பிறரிடம் தெரிவித்து வந்தான். பின்னர் உடலுறுப்புகளின் அசைவுகளினால் தன்னெதிரில் உள்ளவர்களுக்குத் தன் கருத்தைத் தெரிவித்து வந்தான். இவ்வாறு ஒலிகள் எழுப்பியும் சைகைகள் காட்டியும் தங்களது கருத்துகளைப் பிறருக்குத் தெரியப்படுத்தியவர்கள் காலப்போக்கில் படங்கள் வரைந்து தங்களது எண்ணங்கள் யாவை என்று தெரிவித்தான். இவ்வாறு வரைந்த படங்களே குறியீடுகள் என்கிறோம். இக்குறியீடுகளை உருவ எழுத்துகள் என்றும் கூறுவர். காலநிலையில் அமைந்த குறியீடுகளின் அமைப்பினைக் கொண்டு அவற்றைப் பண்டைக்காலக் குறியீடுகள், இடைக்காலக் குறியீடுகள், தற்காலக் குறியீடுகள் என்று மூன்றாகப் பகுக்கலாம்.
பண்டைக்காலக் குறியீடுகள்
உருவ எழுத்துகளே பண்டைக் காலத்தில் குறியீடுகளாக அமைந்தன. இதன் காலம் கி.மு.க்களில் அமையும். இந்தியாவில் மொகஞ்சாதரோ, ஹரப்பா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிடைத்த களிமணி ஓடு, பானையோடு, காசுகள் போன்றவற்றில் உருவங்கள் காணப்படுகின்றன. அவை அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய எழுத்துக்களாகும்.
"ஒவ்வொரு படமும் ஒரு கருத்தைத் தெரிவிப்பனவாக உள்ளது" என்கிறார் நடன. காசிநாதன். இதனை ஒரு உதாரணம் வழியும் நிறுவுகின்றார். 'பகல்' என்பதற்குச் 'சூரியனது' படத்தை வரைந்தனர். அச்சூரியனது படமே நாளாவட்டத்தில் 'பகல்', 'வெப்பம்', 'கோள்' ஆகிய எல்லாவற்றையும் அறிவிப்பனவாக அமைந்தது" என்கிறார் (கல்லெழுத்துக்கலை, ப.1).
பண்டைக்கால மக்கள் மொழியை வளப்படுத்துவதற்கு உரு எழுத்துகளைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது புலனாகிறது. இவ்வுருவ எழுத்துகள் குறியீடுகளாக அமைந்து இன்று பண்டைக் காலக் குறியீடுகளுக்குச் சான்று பகர்கின்றன. யானை, நரி, புலி, சிங்கம், மரம், இரதம், சூரியன், சக்கரம், காளைமாடு, பசுமாடு, தானியக்கதிர்கள், பெண் தெய்வங்களது உருவங்கள், கடவுளின் தலை மற்றும் ஆட்சியில் இருந்தவர்களின் சின்னங்கள் போன்றவை குறியீடுகளாகப் பெருமான்மை இருந்துள்ளன.
இன்று பண்டைக்காலக் குறியீடுகள் நாணயங்கள் வழியாகவே நாம் அதிகம் கண்டிருக்கின்றோம். உருவங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்களை 'முத்திரை நாணயங்கள்' என்பர். நமக்குக் கிடைத்த மிகப் பழமையான நாணயம், கி.மு.1100இல் கண்டெடுக்கப்பட்ட முத்திரையிடப்பட்ட வௌ¢ளிநாணயம் தான். அதன்பிறகு நாணயங்கள் ஏராளம் கிடைத்துள்ளன.
"அந்நாணயங்களில் வெறும் முத்திரைச் சின்னங்கள்தாம் உள்ளன; எந்த எழுத்துகளும் அவற்றில் பொறிக்கப்படவில்லை. எழுத்துகளக்குப் பதிலாக குன்றுகள், மரங்கள், பறவைகள், பிராணிகள், ஊர்வன, மனிதன் போன்ற உருவங்களைப் பல வகையிலும் மதத்தின் அடையாளங்கள், சதுரம், முக்கோணம் போன்ற வடிவங்களையும் அவற்றில் பொறித்துள்ளனர். இவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்திற்காக அல்லது குறிக்கோளுக்காகப் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, இந்தவகை நாணயத்திற்கு இந்தச் சின்னம் அல்லது இந்த அடையாளம் என்று போட்டிருக்கின்றனர். எனவே எந்தெந்த நாணயங்கள் எந்தெந்த அரசிற்குரியது எந்தக் காலத்திற்குரியது என்றும் எளிதாகப் பாகுபடுத்திவிடலாம்" (நாணயங்கள், பக்.11-12) என்பார் டாக்டர் பரமேச்வரி லால் குப்தா.
நாணயங்களில் காணும் குறியீடுகளைப் போன்று கல்வெட்டுகளிலும் காணமுடிகிறது. தமிழிக் கல்வெட்டுகள் சிலவற்றில் அக்கல்வெட்டுக்களோடு சில குறியீடுகளையும் காணமுடிகிறது. இதேபோன்று இலங்கையில் கிடைத்துள்ள சில பிராமிக் கல்வெட்டுகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் சில குறியீடுகள் காணப்படுகின்றன.
"தமிழ்நாட்டில் கிடைத்துள்ள குறியீடுகளோடு கூடிய கல்வெட்டுகளை எல்லாம் தொகுத்து ஆய்வு செய்கையில் அக்குறியீடுகள் வணிகர்களின் தொழிலையும், தச்சர், கொல்லர் போன்ற கைவினைஞர்களின் தொழிலையும் குறிப்பனவாகக் காணப்படுகின்றன. ........ உப்பு வணிகர் எனில் அவருக்கெனத் தனிக் குறியீட்டையும், அறுவை வணிகர் என்றால் அவருக்கு என்ற குறியீட்டையும் பெற்றிருக்கின்றனர். தற்காலத்திய 'வியாபாரக் குறியீடு' போன்றதாக அவை இருந்திருக்கும். அதைத்தான் தமிழிக் கல்வெட்டுகளில் சிலவற்றோடு காணமுடிகிறது. தச்சுத் தொழில் புரிந்தோரும், கூரை வேய்தல் தொழில் புரிந்தோரும் கூட தனித்தனிக் குறியீட்டைப் பெற்றிருந்தார்கள் என ஊகிக்க வேண்டியிருக்கிறது என்கிறார் நடன. காசிநாதன் (கல்லெழுத்துக்கலை, பக்.20-21).
இடைக்காலக் குறியீடுகள்
மொழிக்கெனத் தனி எழுத்துகள் உருவாகும் வரை குறியீடுகள் மொழிக்குத் துணையாயின. மொழிக்குத் தனி எழுத்துகள் உருவாக்கப்பெற்றதும் குறியீடுகளின் தன்மை மாறத் தொடங்கியது. இக்கால கட்டத்தில் எழுந்த குறியீடுகளை இடைக்காலக் குறியீடுகள் எனலாம். இக்குறியீடுகள் கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் ஆகியவற்றின் மூலம் அறிகிறோம்.
மொழிக்குத் தனியெழுத்துகள் உருவானதும் குறியீடுகள் ஏதும் பெறாமல் முழுமையான எழுத்து நிலையையே மொழி கொண்டிருந்தது. சிலவற்றில் மட்டும் எழுத்தும் குறியீடும் ஒருசேர அமைந்திருக்கும். குறிப்பாக நாணயங்களில் இப்போக்கு அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து இருப்பதைக் காணலாம். பழங்காலத்தில் எண் குறியீடுகள், அளவுக் குறியீடுகள் ஏதும் இன்றி எழுத்தாலேயே எழுதி வந்தனர். குறிப்பாக, 192 என்னும் எண்ணை 'நூற்றுத் தொண்ணூற்றிரண்டு' என்று எழுத்தால் குறித்தே வந்துள்ளனர். "நமக்குக் கிடைத்துள்ள பல்லவர் கால வட்டெழுத்துக் கல்வெட்டுகளிலும் இலக்கணம், எண்களாக எழுதப்படாமல் எழுத்துக்களாகவே எழுதப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. ஆனால் செப்புப் பட்டயத்தில் கி.பி.4ஆம் நூற்றாண்டு அளவிலேயே எண்களைக் காணமுடிகிறது. என்றாலும் கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பார்த்திவேந்திரவர்மனின் உத்திரமேரூர்க் கல்வெட்டில்தான் 2 முதல் 10 வரையில் உள்ள எண்களைக் காணமுடிகிறது. அதுமட்டுமில்லாமல் நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கான குறியீடுகளையும் காணமுடிகிறது" என்கிறார் நடன. காசிநாதன் (கல்லெழுத்துக்கலை, பக்.68-70).
சங்க காலப் பாடல்கள் சில சுவரில் கோடு கிழித்துத் தலைவன் வரவை எதிர்பார்க்கும் தலைவியின் நிலையைச் சொல்கின்றன. குறிப்பாக,
"சேன் உறைபுலம்பின் நாள்முறை இழைத்த
திண்சுவர் நோக்கி நினைந்து கண்பனி
நெகிழ்நூல் முத்தின் முகிழ்முலைத் தெறிப்ப" (அகம்.289)
என்பதைச் சுட்டலாம். "கோடுகளை எண்ணி நாட்களை எண்ணும் நிலை இங்குத் தெரிகிறது" என்பார் கே. பகவதி (தமிழர் அளவைகள், ப.8). இன்றும் சில மகளிர் பால்கணக்கு, மோர் கணக்கு எழுதுதல் போன்ற சில நிலைகளில் சுவரில் கோடு கிழித்து இறுதியில் எண்ணிக் கணக்கிடும் நிலையைக் காண்கிறோம்.
"தமிழ்நாட்டிலுள்ள சாசனங்களில் எண் குறிகள் எட்டாம் நூற்றாண்டில் இருந்தான் கிடைக்கின்றன என்றும், எனினும் அதற்குமுன் ஆண்ட பல்லவர் முதலியோர் கல்வெட்டுகளிலிருந்து தொடர்ச்சியாக இவற்றின் வளர்ச்சியை ஓரளவு அறியமுடிகிறது என்றும், முதலில் படுத்த கோடாக இருந்த (-) குறியீடு | என்பது கி.பி.10ஆம் நூற்றாண்டில் ஒரு குறுக்குக் கோட்டையும் அடைந்து காணப்படுகிறது என்றும், படுத்த கோடு பழைய சாசனங்களில் வாக்கிய முடிவுகளையும் செய்யுட்பகுதி முடிவுகளையும் காட்டுவதற்காகப் பல இடங்களில் பயன்பட்டுள்ளது என்றும், அதனின்றும் வேறாக எண் என்பதைக் குறிக்கவே குறுக்குக் கோடு சேர்க்கப்பட்டது என்றும்" (அச்சும் பதிப்பும், மேற்கோள், ப.26) திரு. தி.நா. சுப்பிரமணியம் கூறுகின்றார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தமிழர் சுன்னம் (பூஜ்ஜியம்) என்ற கருத்தை இனங்கண்டு அதற்கு ஒரு குறியீடு அமைத்தார்கள். இதனையே பரிபாடல் 'பாழ்' என்று குறிப்பிடுகின்றது. சுமார் கி.பி.500இல் மாயர்கள் தாமாகவே பூஜியத்தின் குறியீட்டைக் கண்டுபிடித்தனர். "கி.பி.9ஆம் நூற்றாண்டில் சுன்னம் என்னும் குறியானது அரபியரிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. சுழித்தற் குறியானது 1202இல் பைசாவிலிருந்து இத்தாலிய வணிகரான வியானார்டோவால் கண்டுபிடிக்கப்பட்டது. தன் கடனைக் குறிக்கவே அக்குறியை ஏற்படுத்தினார். பெருக்கல் குறியும், கழித்தல் குறியும் பொதுவாக 14ஆம் நூற்றாண்டிலிருந்தே அமலிலிருந்து வருகின்றன" (அச்சும் பதிப்பும், மேற்கோள், பக்.27-28).
'இலட்சம்' என்று இன்று சுட்டும் அளவு அன்று 'நூறாயிரம்' என்றும், 'கோடி' என்று இன்று சுட்டும் அளவு அளவு அன்று 'நூறுநூறாயிரம்' என்றும் குறித்துள்ளனர். பெருஞ்சேரல் இரும்பொறி தன் வெற்றியைப் பாடிய அரிசில்கிழாருக்கு ஒன்பது நூறாயிரம் காணம் பொன் தந்த நிலையினையும் (பதிற்றுப்பத்து, 8), ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் காக்கைப் பாடினியாருக்கு நூறாயிரம் காணம் பொன் தந்த நிலையினையும் (பதிற்றுப்பத்து, 6), பட்டினப்பாலை நூலாசிரியர் உருத்திரங்கண்ணனார் பதினாறு நூறாயிரம் பொன் பெற்ற நிலையினையும் (பெரும்பாணாற்றுப்படை, நச்சர். உரை, 477-80) காண இச்சொல் வழக்கு புலனாகிறது.
இவ்வாறு வழங்கி வந்த குறியீடுகள் அண்மைக்கால ஓலைச்சுவடிகளில் அலகெழுத்து, கூட்டெழுத்து, குறிப்பெழுத்து (சொற்குறியீடு) என மூன்று வகையான எழுத்துக்களாக அமைந்திருக்கின்றன.
அ. அலகெழுத்து
கீழலகெழுத்து, நடுவலகெழுத்து, மேலலகெழுத்து, அளவலகெழுத்து என அலகெழுத்து நான்கு வகைப்படும். அதிசாரம் முதல் முந்திரிக்கு முன் வரையிலான பின்னவெண்ணெழுத்துக்களைக் கீழலகெழுத்துக்கள் என்றும், முந்திரி முதல் ஒன்றுக்கு முன் வரையிலான பின்னவெண்ணெழுத்துக்களை நடுவலகெழுத்துக்கள் என்றும், ஒன்று முதல் அதற்கு மேற்பட்ட முழுவெண்ணெழுத்துக்களை மேலலகெழுத்துக்கள் என்றும், நீட்டல், முகத்தல் மற்றும் நிறுத்தல் அளவுகளைக் குறிக்கும் எழுத்துக்களை அளவலகெழுத்துக்கள் என்றும் அழைப்பர்.
1. கீழலகெழுத்து
"ணவ்வே முந்திரி; டஅரைக் காணி
நிலைவரை ஒன்றே காணி ஆகும்;
தவ்வே மா;அதன் ஈற்றைக் குறைத்து
வலப்புறம் நீட்டல் இருமா ஆகும்;
கூவொடு சூவும் மும்மா நான்மா;
எகரமும் ளகரமும் கால்அரை; உகரத்து
ஈற்றைக் குறைத்துஒரு ரகரம் பொருத்தில்
முக்கால் எனப்படும்; அரைமா அரைக்கால்
ஆதிய பிறவும் அலகு நிலையில்
பிறழா இயல்பிற் பிறங்கும் ஆதலின்
கிளத்திலம்; இவைதாம் கீழ்அலகு உறுப்பே" (நூ.37)
என்னும் நூற்பாப்படி வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கீழ்முந்திரி, கீழரைக்காணி, கீழ்க்காணி, கீழ்மா, கீழிருமா, கீழ்மும்மா, கீழ்நான்மா, கீழ்க்கால், கீழரை, கீழ்முக்கால், கீழரைமா, கீழரைக்கால் ஆகிய கீழலகுகளுக்கு வரிவடிவத்தைக் குறிப்பிடுகின்றார். இவையன்றி மேலும் பல கீழலகுகள் உண்டு என்பதையும் சுட்டிச் செல்கின்றார். நடைமுறையில் பார்க்கும்போது இக்கீழலகு களுக்கு வேறுசில வரிவடிவங்களும் சுவடிகளில் வழங்கப்பெற்றிருப்பதைப் பார்க்கமுடிகிறது. இவையும் அவையும் பின்வருமாறு அமைவதைக் காணலாம்.
கீழ்க்கால் - 1/1280 கீழொருமா - 1/6400
கீழரை - 1/640 கீழரைமா - 1/12800
கீழ்முக்கால் - 3/1280 கீழ்க்காணி - 1/25600
கீழ்நாலுமா - 1/1600 கீழரைக்காணி- 1/51200
கீழ்மும்மா - 3/6400 கீழ்முந்திரி - 1/102400
கீழரைக்கால் - 1/2560 இம்மி - 1/1075200
கீழிருமா - 1/3200 அதிசாரம் - 1/1838400
கீழ்மாகாணி - 1/5120
(கீழ்வீசம்)
2. நடுவலகெழுத்து
"கீழ்முக் காலொடு ருகரத்து ஈறு
பொருந்தில் முந்திரி; ரகரத்து ஈற்றைக்
குறைத்து மேலுற வலமா வளைக்கில்
அரைக்கா ணிக்குறி யாகும்; முந்திரியில்
கிடைவரை முதற்கொடு தள்ளிற் காணி;
சுவ்வே அரைமா; கூஎனும் எழுத்தின்
ஈற்றுக் கிடைவரை தள்ளிமேல் வலமா
வளைக்கில் முக்காணி; பகரமே ஒருமா;
முற்பகர் முக்கால் ஈற்று நிலைவரை
தொட்டிட மேலா வளைத்துஓர் வரையினும்
ஒன்றாது அவ்வரைக் குறுக்கா வலங்கொடு
தொடுத்துஓர் நிலைவரை மேல்இடல் அரைக்கால்;
வகரமும் இகரமும் ளுகரமும் கால்அரை
முக்கால் எனப்படும்; அன்றிச் சிற்சில
கூட்டெழுத் தாகிக் குலவும் ஆதலின்
நவின்றிலம்; இவைதாம் நடுவலகு உறுப்பே"
(அறுவகை இலக்கணம், நூ.38)
என்னும் நூற்பாப்படி வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முந்திரி, அரைக்காணி, காணி, அரைமா, முக்காணி, ஒருமா, அரைக்கால், கால், அரை, முக்கால் ஆகிய நடுவலகுகளுக்கு வரிவடிவத்தைக் குறிப்பிடுகின்றார். இவையன்றி மேலும் பல நடுவலகுகள் உண்டு என்பதையும் சுட்டிச் செல்கின்றார். நடைமுறையில் பார்க்கும்போது இந்நடுவலகுகளுக்கு வேறுசில வரிவடிவங்களும் சுவடிகளில் வழங்கப்பெற்றிருப்பதைப் பார்க்கமுடிகிறது. இவையும் அவையும் பின்வருமாறு அமைவதைக் காணலாம்.
கால் - 1/4 அரைவீசம் - 1/32
அரை - 1/2 கால்வீசம் - 1/64
முக்கால் - 3/4 வீசம்/மாகாணி - 1/16
நாலுமா - 1/5 மூவீசம் - 3/16
மும்மா - 3/20 (மும்மாமுக்காணி)
இருமா - 1/10 காணி - 1/80
ஒருமா - 1/20 முக்காணி - 3/80
அரைமா - 1/40 அரைக்காணி - 1/160
அரைக்கால் - 1/8 முக்காணி
அரை அரைக்காணி - 3/160
அரைக்கால் - 5/8 முந்திரி - 1/320
3. மேலலகெழுத்து
"ககரமும் உகரமும் ஒன்றுஇரண்டு ஆகும்;
ஙகரத்து ஈற்று நிலைவரை தள்ளில்
மூன்றாம்; சகரத்து ஈறுதொட்டு ஒருநிலை
வரைமேல் நோக்கி நிறுவிடில் நாலாம்;
ருகரத்து ஈற்றைக் கொம்பென வளைக்கில்
ஐந்தாம்; தகரத்து ஈற்றைக் குறைத்துஒரு
ரகரம் பொருத்திடில் ஆறாம்; எகரமும்
அகரமும் ஏழு,எட்டு ஆகும்; ககரத்து
ஈறுதொட்டு ஒருசிறு கொம்பென வளைக்கில்
ஒன்பது ஆகும்; ஐகா ரத்தின்
கீழ்உறு பகுதியைத் தனிப்படக் காட்டில்
பத்துஎன விளங்கும்; றகரமுதல் வளைவு
உடனொரு ரகரம் பொருத்த நூறாம்;
சுகரத்து ஈற்றைச் சிறிதுஇடம் மேலா
வளைத்துச் சூஎன நிறுவல் ஆயிரம்.
இவற்றின் புணர்ப்பால் இயங்குவ பிறவால்
விளம்பிலம். இவைதாம் மேல்அலகு உறுப்பே" (நூ.39)
என்னும் நூற்பாப்படி வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, நூறு, ஆயிரம் ஆகிய மேலலகுகளுக்கு வரிவடிவத்தைக் குறிப்பிடுகின்றார். இவையன்றி மேலும் பல மேலலகுகள் உண்டு என்பதையும் சுட்டிச் செல்கின்றார். அவை பின்வருமாறு அமைவதைக் காணலாம்.
ஏகம் - ஒன்று - 1
தசம் - பத்து - 10
சதம் - நூறு - 100
சகசிரம் - ஆயிரம் - 1000
அயுதம் - பத்தாயிரம் - 10,000
நியுதம் - நூறாயிரம் (இலட்சம்) - 1,00,000
பிரயுதம் - பத்து நூறாயிரம் - 10,00,000
(ஆயிரமாயிரம், பத்துலட்சம்)
கோடி - நூறுநூறாயிரம் - 1,00,00,000
அற்புதம் - பத்து நூறுநூறாயிரம் - 10,00,00,000
நிகற்புதம் - நூறுகோடி - 1,00,00,00,000
கும்பம் - ஆயிரங்கோடி - 10,00,00,00,000
கணம் - பத்தாயிரங்கோடி - 1,00,00,00,00,000
கற்பம் - நூறாயிரங்கோடி - 10,00,00,00,00,000
நிகற்பம் - ஆயிரமாயிரங்கோடி - 1,00,00,00,00,00,000
பதுமம் - கோடிக்கோடி(இருகோடி) - 10,00,00,00,00,00,000
சங்கம் - பத்து கோடிக்கோடி - 1,00,00,00,00,00,00,000
வெள்ளம் - நூறு கோடிக்கோடி - 10,00,00,00,00,00,00,000
(சமுத்திரம்)
அந்நியம் - ஆயிரம் கோடிக்கோடி - 1,00,00,00,00,00,00,00,000
மத்தியம் - பத்தாயிரம்கோடிக்கோடி - 10,00,00,00,00,00,00,00,000
(அர்த்தம்)
பரார்த்தம் - நூறாயிரம் கோடிக்கோடி - 1,00,00,00,00,00,00,00,00,000
புரியம் - ஆயிரமாயிரங்கோடிக்கோடி - 10,00,00,00,00,00,00,00,00,000
பிரமகற்பம் - முக்கோடி - 1,00,00,00,00,00,00,00,00,00,000
4. அளவலகெழுத்து
"ளகரத்து ஈறு தொட்டுமேல் இடமா
வளைத்துஅவ் வரைக்குறுக் கேற்றி நாலின்
ஈறுஉறப் பொருத்தல் ஆழாக்கு எனப்படும்;
ளுகரம் தானே உழக்குஎன ஒளிர்தரும்;
வகரத்து ஈற்று நிலைவரை தள்ளில்
நாழி யாகும்; பகரமே குறுணி;
முந்திரி யீற்றை மேற்சுற் றாது
னுகரத்து ஈறுஎன நிறுவில் பதக்குஆம்;
தகரம் தூணி; ளகர மேகலம்;
பின்னும் சிலகூட்டு எழுத்துஎனப் பிறங்கும்
ஆதலின் இவைதாம் அளவலகு உறுப்பே" (நூ.40)
என்னும் நூற்பாப்படி வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆழாக்கு, உழக்கு, நாழி, குறுணி, பதக்கு, தூணி, கலம் ஆகிய அளவலகுகளுக்கு வரிவடிவத்தைக் குறிப்பிடுகின்றார். இவையன்றி மேலும் பல அளவலகுகள் உண்டு என்பதையும் சுட்டிச் செல்கின்றார்.
தற்காலக் குறியீடுகள்
தற்காலத்தில் அளவுக் குறியீடுகள் பொதுமை கருதி உலகளாவிய முறையில் கிலோகிராம், கிலோமீட்டர், கிலோலிட்டர் போன்ற மூன்று வகைகளில் முறையே நீட்டல் அளவு, முகத்தல் அளவு, நிறுத்தல் அளவு என அமைத்திருக்கின்றனர். அவை பின்வருமாறு அமைவதைக் காணலாம்.
4.1. நீட்டலளவு
10 கோண் - 1 நுண்ணணு
8 அணு - 1 கதிர்த்துகள்
10 நுண்ணணு - 1 அணு
8 கதிர்த்துகள் - 1 பஞ்சிற்றுகள்
8 பஞ்சிற்றுகள் - 1 மயிர்முனை
8 மயிர்முனை - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல் (3/4")
12 விரல் - 1 சாண்(3/4")
2 சாண் - 1 முழம்(18")
4 முழம் - 1 பாகம்(6')
6000 பாகம் - 1 காதம் (12000 கெசம்)
4 காதம் - 1 யோசனை
16 விரல் - 1 அடி(9")
12 அடி - 1 குழி
100 குழி - 1 மா
20 மா - 1 வேலி
4.2. முகத்தலளவு
360 நெல் - 1 செவிடு (37.6மிலி)
5 செவிடு - 1 ஆழாக்கு (168மிலி)
2 ஆழாக்கு - 1 உழக்கு (336மிலி)
2 உழக்கு - 1 உரி (672மிலி)
2 உரி - 1 படி (1.3லி)
8 படி - 1 மரக்கால் (5.3லி)
2 மரக்கால்
(குறுணி) - 1 பதக்கு (10.7லி)
2 பதக்கு - 1 தூணி (21.5லி)
2 தூணி - 8 குறுணி (43லி)
3 தூணி - 1 கலம் (64.5லி)
48 படி - 1 கலம் (64.5லி)
3 மரக்கால் - 1 பறை (16.5லி)
80 பறை - 1 கரிசை (1320லி)
120 படி - 1 பொதி (1560லி)
4.3. நிறுத்தலளவு
1 உளுந்து - 1 கிரெயின் (55மிகி)
4 நெல்லெடை - 1 குன்றிமணி (110மிகி)
2 குன்றிமணி - 1 மஞ்சாடி (219மிகி)
2 மஞ்சாடி - 1 பணவெடை (438மிகி)
5 பணவெடை - 1 கழஞ்சு (2.190கி)
10 வராகனெடை - 1 பலம் (35கி)
4 கஃசு - 1 பலம் (3.5கி)
6 குன்றிமணி - 1 மாஷம் (660மிகி)
18 குன்றிமணி - 1 தோலா (12கி)
1 தோலா - 1 ரூபாய்எடை(12கி)
4 யவம் - 1 குன்றிமணி(110மிகி)
3 தோலா - 1 பலம் (35கி)
8 பலம் - 1 சேர் (280கி)
40 பலம் - 1 வீசை (1.4கிகி)
6 வீசை - 1 துலாம் (8.4கிகி)
8 வீசை - 1 மணங்கு(11.2கிகி)
8 பணவெடை - 1 வராகனெடை (3.5கி)
20 மணங்கு - 1 பாரம்(220.40கிகி)
100 பலம் - 1 கா (3.5கிகி)
1/4 பலம் - 1 கஃசு (8.8கி)
50 பலம் - 1 தூக்கு (1.75கிகி)
2 தூக்கு - 1 துலாம் (3.5கிகி)
1 துலாம் - 12 சேர் (3.5கிகி)
ஆ. கூட்டெழுத்து
ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களைத் தொடர்ந்து எழுதும் போது முதலெழுத்து அடுத்த எழுத்தோடு சேர்த்து வரும் எழுத்தைக் கூட்டெழுத்து என்பர். இதனை வண்ணச்சரபர்,
"அகரத்து ஈறுதொட்டு அதன்இடம் சுழித்து
வலங்கொணர்ந்து அதனொடு நாழிஎன் எழுத்தைப்
பொருத்தில் ஆகஎன்று ஆயிற்று என்றும்,
ககரத் தகரத்து ஈற்றினை இரட்டித்து
ஒற்றெழுத்து அவற்றொடு கூடிற்று என்றும்,
ஐகா ரத்தின்முற் பகுதிமட் டெழுதி,
ஈறு தொட்டு வலத்துஓர் கிடைவரை
இழுக்கில்நெல் என்றும், சகரத்து ஈற்றுஒரு
லிகரம் கூட்டில் சங்கிலி என்றும்
இவ்வாறு உளகூட் டெழுத்துஎலாம் மொழியில்
அடங்கா; ஆதலின் அறைகிலம்; ஆயினும்
கூடும்நாண் மிகலாற், குலவுஅலகு உறுப்பூடு
அயல்போன்று உளசில அகற்றிடற்கு அரியன
அவ்வியல்பு உரைக்குதும் அறிந்த வாறே". (நூ.42)
"ஒருமா எழுதி அதன்ஈறு பற்றிக்
காணியின் உருவம் காட்டும்மா காணியும்
இரண்டு மூனறு நாலெனும் இவற்றின்
ஈற்றில் மாஇசைத்து இருமா மும்மா
நான்மா எனலும், மூன்றின் ஈறு
ணிகரத்து ஈறு பொருந்திடின் மூன்று
மாகாணி எனலும், எகரத்து ஈற்றை
இடம்மேற் சுழித்துஅவ் வரைக்குறுக் கேற்றிக்
கூகரத்து ஈறு காட்டிக் கீழ்இடம்
வளைத்து மேற்கொணர் கோடியும், கீகரத்து
ஈற்றில் நாழி இசைத்துக் கீழ்எனும்
பொறியும், அவ் வெழுத்தின் மேற்குறி அதனை
எகரமீது ஏற்றிஅவ் வெழுத்தின் ஈற்றை
இடமாய்ச் சகரத்து ஈறுஎன எழுதிய
சோடும், உகர ரிகரம் தோய்தரும்
உரியும், ... ஈற்றில் கீழ்ஈறு ஒன்றிய
மரக்காலும், மும்மாப் போலும்முக் குறுணியும்
நெல்எனும் கூட்டின் ஈற்றுக் கிடைவரை
தள்ளிஅவ் வீறு தொட்டுமேல் வலமாக்
கொண்டுஇடம் சுழித்த கோட்டையும், அன்றிக்
கீழ்அரைக் காலொடு, மூவுழக்கு ஆதிய
பொருந்தாக் கூட்டுப் பொறிகளும் உளவே". (நூ.43)
"இகரத்து ஈற்றுஒரு லகரம் கூட்டி,
அதன்ஈறு தொட்டுக் கீழ்ஓர் வரைஇழுத்து,
இடம்சுழித்து, அவ்வரைக் குறுக்கா வலங்கொடு
முக்காணி ஈறு பொருந்தக் காட்டிடல்
இலக்கணம் ஆகும்என்று இசைவுறல் இனியது" எனல்
போலும் பல்பொறி புதியன வரினும்
அலகுணர் மாக்கள் அகற்றார் அன்றே". (நூ.44)
எனக் கூட்டெழுத்துக்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். இவற்றில் ஆக, நெல், சங்கிலி போன்ற சொற்குறியீடான-குறிப்பெழுத்துக்களையும் வண்ணச்சரபர் கூட்டெழுத்தாகக் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும், மாகாணி, இருமா, மும்மா, நான்மா, மூன்றுமாகாணி, கோடி, கீழ், சோடு, உரி, மரக்கால், முக்குறுணி போன்ற அலகெழுத்துக்களையும் கூட்டெழுத்தாகக் குறிப்பிட்டிருக்கின்றார். இவைகள் இவ்விடத்தில் பொருந்தாமை காணமுடிகிறது. இருப்பினும் இவைகள் பொருந்தக்கூடிய இடங்களில்-இவ்வாய்வுப் பகுதியில் இடம்பெற்றிருக்கக் காணலாம்.
இ. குறிப்பெழுத்து (சொற்குறியீடு)
ஒரு சொல்லைக் குறிப்பதற்குப் பயன்படும் எழுத்தைக் குறிப்பெழுத்து அல்லது சொற்குறியீடு என்பர்.
இவ்வாறு தமிழ்ச் சுவடிகளில் எழுத்துக்கள் உயிர், மெய், ஆய்தம், உயிர்மெய், அலகு, கூட்டு, குறிப்பு என்ற நிலைகளில் அமைந்திருக்கின்றன எனலாம். இவையன்றி, தமிழ்மொழியில் வடமொழிச் சொற்களின் கலப்பு ஏற்பட்டு விட்டதால் அம்மொழியிலுள்ள ஒருசில எழுத்துக்கள் தமிழ்ச் சுவடிக்குள் நுழைந்துவிட்டன. அவ்வகையில் பார்க்கும் போது ஜ, ஸ, ஷ, ஸ்ரீ, ஹ, க்ஷ ஆகிய ஆறு எழுத்துக்களும், வடமொழி எழுத்துக்களுக்கான உகர ஊகாரக் இரண்டும் தமிழ்ச் சுவடிகளில் அமைந்திருப்பதைக் காணலாம்.
இவைகளன்றி தமிழ்மொழிக்கு ஒத்து வராத சில எழுத்துக்களும் தமிழ்ச் சுவடிகளில் இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது. இதனை வண்ணச்சரபர்,
"அகரம் ஒகரம் ஆதிய சிலபொறி
ஈறு தொட்டுச் சகரத்து ஈறுஎன
எழுதி ஆஓ முதலியன எனலும்,
ரகரத்து ஈற்றினை ஏகா ரத்துஈறு
ஆமெனக் காட்டலும், தகர றகரம்
ஆதியின் ஈறுஇடம் சாய்த்தலும், அவற்றின்
தலைமிசை ஒன்றாக் கிடைவரை காட்டலும்,
இகரத்து ஈற்றினைச் சுழித்துஈ எனலும்,
அகரத்து ஆதிதொட்டு இடம்கீழ்க் கொணர்ந்துஅரை
ஆகும்என்று இசைத்தலும், ககரத்து ஈற்றுஒரு
கணபதிச் சுழியிட்டு ஆய்தல் என்கையும்,
கெகரம் கொகரம் ஆதிய தாமே
கேகோ ஆதிய ஆம்எனக் கிளத்தலும்,
போல்வன பிறவும் புரையின வாமே". (நூ.48)
என்கின்றார். அதாவது, அ,ஒ போன்ற சில உயிர்க் குறில்களின் கடைசியிலிருந்து சகரத்தின் ஈற்றுப் பகுதியைப் போல் வரைந்தால் ஆ, ஓ என்றும், ரகரத்தில் இரண்டாவது குத்துக்கோட்டின் கீழ் ஏகாரத்திற்குப் போல் சிறிய சாய்வுக்கோடு இழுத்தலும், தகரம் றகரம் போன்றவைகளின் கடைசிப் பகுதியை மேலிருந்து கீழாக இழுக்காமல் இடப்புறமாக நீட்டலும், அவைகளின் தலைமேல் தொடாதவாறு ஒரு படுக்கைக்கோடு போடுதலும், இகர வடிவத்தின் கடைசியிலேயே ஒரு சிறு சுழியிட்டு ஈ எனலும், அரகத்தின் ஆரம்பம் ஆகிய வட்டத்தில் இருந்து இடப்புறம் கீழாகக் கொண்டு வந்த வடிவடிவத்தை அரை எனலும், சுகரத்தோடு சேர்த்து பிள்ளையார் சுழியை வரைந்து அதை ஆய்தம் எனலும், ஒற்றைக் கொம்போடு கூடிய கெ, கொ ஆகியவைகளைத் தாம் இருக்கும் இடத்தால் கே, கோ என நெடிலாக்கலும் தவறான எழுத்து முறைகளாகும் என்கின்றார். இருப்பினும் இம்மாதிரியான எழுத்து முறைகள் பழஞ்சுவடிகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவற்றில் காணமுடிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக