மூலச்சுவடி என்பது, ஆசிரியர் தாமே எழுதியதையும், ஆசிரியர் சொல்லச் சொல்ல பிறர் எழுதி ஆசிரியரால் திருத்தம் மேற்கொள்ளப் பெற்றதையும், உரையாசிரியர் தாமே எழுதியதையும், உரையாசிரியர் சொல்லச் சொல்ல பிறர் எழுதி உரையாசிரியரால் திருத்தம் மேற்கொள்ளப்பெற்றதையும், பல தலைமுறைகள் ஓராசிரியரின் நூலை வாய்மொழியாக வழங்கப்பெற்று ஏதாவதொரு காலத்தில் அந்நூல் படித்தவர்களால் ஏட்டுருவாக்கம் செய்யப்பெற்றதையும், மூலச் சுவடியினின்று படியெடுத்துத் திருத்தம் மேற்கொள்ளப்பெற்ற அண்மைச் சுவடியையும் குறிக்கும். இவற்றில் உள்ள உண்மையான பாடமே மூலபாடம் ஆகும்.
மூலபாட ஆய்வு
"ஆசிரியரால் இயற்றப்பட்ட மூலத்தில், பிற்காலத்தில் நிகழ்ந்த மாசுகளை நீக்கி, அம்மூலத்தின் உண்மையான பொருளை நிச்சயித்து மூலத்தை நிலைநிறுத்துதல்" மூலபாட ஆய்வு என ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி குறிப்பிடுகின்றது (மேற்கோள்-மூலபாட ஆய்வியல், ப.12). "பாடவேறுபாடு என்பது பாடம் வேறுபடுவது ஆகும். பாடம் என்பது மூல பாடத்தைக் குறிக்கும். நூலாசிரியரோ உரையாசிரியரோ எழுதிய உண்மைத் தொடர் மூலபாடம் என்று வழங்கப்பெறும்"(சுவடியியல், ப.100) என்றும், "நூலாசிரியர், உரையாசிரியர்களின் கூற்றுகளும் தொடர்களும், படியெடுப்போரால் காலந்தோறும் வேறுபட்டுவிடுகின்றன. ஒரே நூலுக்குக் கிடைக்கும் பல சுவடிகளிலும் மூலத் தொடர்கள் வெவ்வேறாக அமைந்துவிடுகின்றன. அவற்றில் காணப்பெறும் பலவகைத் தொடர்களையும் ஒப்பிட்டு ஆய்ந்து ஆசிரியரின் மூலபாடம் இதுதான் என்று காண முயற்சி செய்வது மூலபாட ஆய்வு எனப்பெறுகிறது. நூல், நூலாசிரியர், நூலின் காலம், நூல் இடம், பொருளமைதி, தொடரமைதி, நடையமைதி, யாப்பமைதி ஆகியவற்றின் பொருத்தத்திற்கு ஏற்ப, ஆசிரியரின் மூலபாடம் இதுதான் என்று முடிவு செய்வது மூலபாட ஆய்வாகும்" (சுவடியியல், ப.150) என்றும் பூ. சுப்பிரமணியம் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது மூலபாட ஆய்வு என்பது, பாடவேறுபாடு ஒரு நூலுக்கு ஏற்பட்டவிடத்து நூலாசிரியரின் பாடத்திற்கும் நூலாசிரியன் கருத்து இன்னவாகத்தான் இருந்திருக்கும் என்று கருதுகின்ற பதிப்பாசிரியரின் பாடத்துக்கும் இடையேயுள்ள தொடர்பை ஆராய்வதாகும். அதாவது, பழமையான நூல்களில் உள்ள தொடர்களுக்குக் கிடைக்கும் பாடங்கள் எல்லாவற்றையும் நுணுகி ஆராய்ந்து ஆசிரியரின் பாடம் இதுவாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்தலாகும்.
சுவடிகளை வகைப்படுத்தும் முறை
நூலாசிரியர், உரையாசிரியர் தாமே எழுதியதோ, பிறரை எழுதச்சொல்லி திருத்தம் மேற்கொண்டதையோ 'மூலச்சுவடி' என்றும், மூலப் படியைப் பார்த்துப் படியெடுக்கப்பெற்ற சுவடியை 'அண்மைச் சுவடி' என்றும், அண்மைச் சுவடியைப் பார்த்துப் பின்னால் பல நிலைகளில் படியெடுக்கப்பெற்ற சுவடிகளைக் 'கீழ்வழியேடு'கள் என்றும், கீழ்வழியேடு ஒன்றினைக்கொண்டு அது எந்த சுவடியின் வழி வந்தது என்பதைக் காணும்போது, அதன் மூலச்சுவடிகளின் வரிசை 'மேல்வழியேடு' என்றும், வழியேடுகள் சிலவற்றின் துணைகொண்டு ஒப்பிட்டு எழுதப்பெறும் சுவடியை 'கலப்பு வழியேடு' என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வகைச் சுவடிகளில் பலவகைச் சுவடிகள் கிடைத்து, மூலச்சுவடி கிடைக்காத நிலையில், கிடைத்த சுவடிகளின் வரிசை முறையை ஆய்ந்து, மேலேட்டு வரிசை முறையில் முதல் நிற்பதையே மூலச்சுவடியாகக் கருதவேண்டும். இது உண்மையான மூலச்சுவடி இல்லை. என்றாலும் கிடைத்த சுவடிகளின் மேலேட்டு வரிசையில் முதலில் நிற்பதால் இதனை 'ஊகமூலயேடு' என்று அழைக்கப்படுகிறது. இதனைப் பின்வரும் வரைபடம் மூலம் விளக்கலாம்.
A
B C
D E F G
H I J K
L M N O
P Q R S
T
இங்கு A என்பது மூலச்சுவடி. BC என்பது அண்மைச் சுவடி. DE என்பன B என்னும் அண்மைப்படியிலிருந்து படியெடுக்கப்பெற்ற கீழ்வழியேடுகள். FG என்பன C என்னும் அண்மைப்படியிலிருந்து படியெடுக்கப்பெற்ற கீழ்வழியேடுகள். HLP என்பன Dயின் வழியும், IMQ என்பன Eயின் வழியும், JNR என்பன Fயின் வழியும், KOS என்பன Gயின் வழியும் தோன்றிய கீழ்வழியேட்டுகளாகும். P என்பதைப் பார்க்கும் போது LHDயும், Q என்பதைப் பார்க்கும் போது MIEயும், R என்பதைப் பார்க்கும் போது NJFவும், S என்பதைப் பார்க்கும் போது OKGயும் மேல்வழியேடுகளாகின்றன. QR ஆகிய இவ்விரண்டின் துணையோடு தோன்றிய Tயானது கலப்பு வழியேடாகிறது. Pக்கு மேலேடு L ஆகவும், Lக்கு மேலேடு H ஆகவும், Hக்கு மேலேடு Dயாகவும் அமையும். Dக்கு மேலேடு கிடைக்காத போது Dயானது ஊகமூலயேடாகிறது. இதேபோல் ஒவ்வொரு மேலேட்டு வரிசைக்கும் ஊகமேலேட்டை நிர்ணயிக்கலாம்.
மக்களுக்கு எவ்வாறு தலைமுறைகள் உண்டோ அதுபோல் ஓலைச்சுவடிகளுக்கும் அதைப் படியெடுத்தவர்களுக்கும் உண்டு. ஓலைச்சுவடிகளின் முற்குறிப்பாகவோ பிற்குறிப்பாகவோ இடம்பெற்றிருக்கும் சில செய்திகளின் வாயிலாக இவற்றை அறியமுடிகிறது. சுவடி எழுதுபவர்களால் குறிப்பிடப்பெறும் சில செய்திகளில் எழுதப்பெற்ற சுவடியில் தாய்ச்சுவடி(மூலச்சுவடி)யைப் பற்றிய குறிப்பும் சுவடி எழுத்தர்களின் வரலாறும் இடம்பெற்றிருக்கும்.
உ,வே. சாமிநாதையர் பதிப்பித்த சீவக சிந்தாமணிக்கு உதவிய சுவடிகளின் ஒரு சுவடியில் பிற்குறிப்பாக, "920ஆம் ஆண்டு குரோதன வருஷம் சித்திரை மாஸம் 15ஆம் தேதி முதல், சிந்தாமணி, திருநெல்வேலி, தம்பாபிள்ளையன் அவர்கள் ஏடு பார்த்து எழுதின, ஸ்ரீவைகுண்டம். சிவசங்கரம் பிள்ளையவர்கள் ஏடு பார்த்து இராமாயணம்-திருவேங்கடம் எழுதுவித்து எழுதின ஏட்டின் படிக்கு முதற்புத்தகம் பிழைபார்த்து முடிந்தது" எனவும், பிறிதொரு ஏட்டின் பிற்குறிப்பாக, "அர்த்தநாரி பண்டிதர் பாத பத்மம் துணை; ஆங்கீரஸ வருஷம் சித்திரை மாஸம், 9ஆம் தேதி சோம வாரம் திருதியை உரோகிணி எழுத ஆரம்பம், மேற்படி வருஷம் வைகாசி மாஸம் 26ஆம் தேதி புதவாரமும் தசமியும் இரேவதி நக்ஷத்திரமும் பெற்ற சுபதினத்திலே திருச்சிராப்பள்ளியிலிருக்கும் குமாரஸாமி வாத்தியார் குமாரர் வேலாயுத வாத்தியார் சேலத்திருக்கும் அட்டாவதானச் சொக்கநாத முதலியாரவர்கள் (தஞ்சைவாணன் கோவையுரையாசிரியர்) மேலேடு பார்த்து எழுதியது" (உ.வே. சா., சீவக சிந்தாமணி, 2ம் பதிப்பு முன்னுரை, ப.13) என்பதைப் பார்க்கும் போது படியெடுக்கப்பெற்ற சுவடிக் குறிப்பில் தாய்ச்சுவடி பற்றிய செய்தி இடம்பெற்றிருப்பதை உணரலாம்.
தொடர்ந்து ஒரே குடும்பத்து உறுப்பினர்கள் சுவடி எழுதுவதிலும் எழுதுவிப்பதிலும் ஈடுபட்டிருந்திருக்கின்றனர் என்பதை முற்குறிப்பு மற்றும் பிற்குறிப்புச் செய்திகள் வழி அறியமுடிகிறது. அதாவது, தாழப்பட்டி வீரமலைப்பிள்ளை யவர்களுக்கு (கி.பி.1662ஆம் வருடம்) அவருடைய மகன் திருமலைக்கொழுந்தாபிள்ளை எழுதிக்கொடுத்து இருக்கின்றார். அதற்கடுத்து தாழப்பட்டி வீரமலைப்பிள்ளையின் மகன் கொழுந்தாப்பிள்ளை எழுதியிருக்கின்றார். அவருடைய மகன் முனியப்பப்பிள்ளை எழுதியிருக்கின்றார். அவருடைய மகன் தொப்பப்பிள்ளை (1915ஆம் வருடம்) எழுதுவித்திருக்கின்றார். இதற்கு முன் வீரமலைப்பிள்ளையின் தந்தை தொப்பப்பிள்ளை (1634ஆம் வருடம்) எழுதுவித்திருக்கின்றார். இவற்றையெல்லாம் ஒன்று கூட்டிப் பார்க்கும் போது இக்குடும்ப உறுப்பினர்கள் ஏறத்தாழ 350 ஆண்டுகள் சுவடிகள் எழுதுவதிலும் எழுதுவிப்பதிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றனர் என்ற செய்தி அறியமுடிகிறது.
வெவ்வேறு படியெடுப்பவர்களால் ஒரு சுவடி கீழ்வழியேட்டு வரிசை முறையை உணர்த்தும். காட்டாக, டாக்டர் உ.வே. சாமிநாதையர் சுவடிகள் நூலகத்தில் உள்ள 'வைஷ்ணவ குருபரம்பரை' (சுவடி எண்.100) என்னும் சுவடிக் குறிப்பில், "விகாரி வருஷம் ஆனி மாதம் 2ந் தேதி சோம வாரம் திரியோதசி ரோகணி நட்சத்திரமும் பெற்ற சுபதினத்தில் ஆழ்வார் திருநகரியில் எழுதுவித்தது. தவிர ஸ்ரீவிஷ்ணு புராணமும் ஆறங்கிசையும் எழுதி நிறைவேறிச்சு. இதுகள் திருநெல்வேலியில் தளவாய் திருமலையப்ப முதலியாராண்டைக்கு சென்னைப் பட்டணம் துபாசி பொன்னப்பிள்ளை பணத்துக்குத் தாசீலாக ஸ்ரீநிவாசனை அனுப்பிவிச்சிருந்த போது எழுதுவிச்சது. இந்தப் பிரதியைப் பார்த்துச் சென்னைப் பட்டணத்தில் பெத்துநாயகன் பேட்டையில் லஷ்மணப்பிள்ளை வீட்டில் அவருடைய அம்மான் குமரப்பிள்ளை குரோதி வருஷத்தில் ஒரு பிரதி எழுதி இருக்கிறார். விரோதி வருஷம் பட்டணத்தில் அய்யாசாமிப்பிள்ளை தம்பி எழுதினார். ஸ்ரீவிஷ்ணு புராணம் காஞ்சிபுரம் மளிகை ரங்கப்ப செட்டியார் ஒரு பிரதியும், நவாபு துபாசி முத்துக்கிருஷ்ண முதலியார் ஒரு பிரதியும் எழுதுவிச்சிருக்கிறார்கள்" என்னும் குறிப்பைக் காணும் போது, கி.பி.1779ஆம் ஆண்டு எழுதப்பெற்ற சுவடியைப் பார்த்து கி.பி.1784ஆம் ஆண்டு குமரப்பிள்ளையாலும், கி.பி.1829ஆம் ஆண்டு அய்யாசாமிப்பிள்ளை தம்பியாலும் எழுதப்பட்டதை அறியமுடிகிறது. இக்குறிப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது, 'வைஷ்ணவ குருபரம்பரை' என்னும் இச்சுவடி கி.பி.1779ஆம் ஆண்டும், கி.பி.1784ஆம் ஆண்டும், கி.பி.1829ஆம் ஆண்டும் படியெடுக்கப்பெற்ற கீழ்வழியேட்டு வரிசையை அறியமுடிகிறது.
சுவடிகளை வரிசைப்படுத்தும் முறை
ஒரு மூல ஏட்டில் உருவான அண்மைப்படிகளோ அவற்றின் கீழேடுகளோ பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பெற்று, ஆங்காங்கு அவ்வவற்றின் வழியேடுகள் பல தோன்றுதல் இயல்பு. இவ்வாறு உருவான வழியேடுகள், இவ்வேடு உருவாகக் காரணமான மேலேட்டினை ஒட்டியே அமைந்திருக்கும். மேலேட்டில் இருப்பதோடு படியெடுப்போர் செய்யும் தவறுகளால் புதிய சில வேறுபாடுகள் தோன்றும். பிரிந்து விரிந்து பரந்து கிடக்கும் சுவடிகளையெல்லாம் ஒன்று சேர்த்து இவற்றினுள் காணப்படும் ஒன்றுமை வேற்றுமைகளின் ஒப்புமைகளைக் கொண்டு சில குடும்பங்களாகப் பிரித்துக்கொள்ளலாம். அதாவது, ஒரே மாதிரியான விடுகைகள் மட்டும் உடைய சுவடிகளை 'விடுகைவழிக் குடும்பச் சுவடிகள்' என்றும், ஒரே மாதிரியான சேர்க்கைகள் மட்டும் உடைய சுவடிகளைச் 'சேர்க்கைவழிக் குடும்பச் சுவடிகள்' என்றும், ஒரே மாதிரியான விடுகை - சேர்க்கை - பிழை மற்றும் பிற வகைவேறுபாடு உடைய சுவடிகளை 'ஒத்தல் வழிக் குடும்பச் சுவடிகள்' என்றும் மூன்றுவகைக் குடும்பங்களாகப் பிரிக்கலாம்.
இரண்டு அல்லது சில ஏடுகளின் சொற்களோ தொடர்களோ பாடல்களோ குறிப்பிட்ட சிலபல இடங்களில் ஒன்றுபோல விடுபட்டோ முன்பின்னாக மாறியோ அமைந்திருக்கலாம். விடுகைகள்/மாற்றங்கள் குறிப்பிட்ட எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக அமைவது தற்செயலாக நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, விடுகைகள்/மாற்றங்கள் இருக்கின்ற ஒரே மூல ஏட்டினைப் பார்த்து எழுதப்பெற்றவையாகவோ ஒன்றைப் பார்த்து ஒன்றாக எழுதப்பெற்றவையாகவோ இருக்கும் சுவடிகளை 'விடுகைவழிக் குடும்பச் சுவடிகள்' எனலாம்.
இரண்டு அல்லது சில சுவடிகளில் கூடுதலான சில சொற்களோ தொடர்களோ பாடல்களோ குறிப்பிட்ட சிலபல இடங்களில் ஒன்றுபோல சேர்க்கப்பெற்றிருக்கலாம். பாடவேறுபாடுகள், பிழைகள் ஆகியவையும் காணப்படலாம். இக்கூடுதல் தொடர்களும் பாடல்களும் வேறுபாடுகளும் ஒன்றுபோல எல்லா இடங்களிலும் பொருந்தியிருக்குமாயின் அச்சுவடிகள் அனைத்தும் ஒரு மூல ஏட்டின் வழிவந்த ஒருகுடும்பத்தைச் சேர்ந்தவையாக இருக்கும். இச்சுவடிகளைச் 'சேர்க்கைவழிக் குடும்பச் சுவடிகள்' எனலாம்.
ஒரு குடும்பத்துச் சுவடிகளில் விடுகைகள் மட்டுமேயும், ஒரு குடும்பத்துச் சுவடிகளில் சேர்க்கைகள் மட்டுமேயும் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. சேர்கையாக உள்ள குடும்பச் சுவடிகளில் சில விடுகைகளும், விடுகையாக உள்ள குடும்பச் சுவடிகளில் சில சேர்க்கைகளும் நிகழ்ந்திருக்கலாம். இவ்விரு முறைகளும் ஆங்காங்கு அமைந்திருக்கும். ஒன்றுபோல ஒத்திருக்கும் இவற்றை 'ஒத்தல் வழிக்குடும்பச் சுவடிகள்' எனலாம்.
சுவடி எழுதப்பெற்ற/படியெடுக்கப்பெற்ற காலத்தை அடிப்படையாகக் கொண்டு சுவடியின் முறைவைப்பைத் தீர்மானிக்கலாம். அதாவது, காலத்தால் முந்திய சுவடி எது என்பதை சுவடியின் முற்குறிப்பு/பிற்குறிப்பு ஆகியவற்றில் காணப்படும் குறிப்புகளால் அறியலாம். குறிப்பிட்ட சுவடியின் காலத்தையும் அதற்குண்டான மேலேட்டையும் உணர இக்குறிப்புகள் துணைபுரிகின்றன. காட்டாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடி எண்.94இல் உள்ள குறிப்பில் "சாலிவாகன சகாப்தம் 1800க்குச் சரியாகச் செல்லாநின்ற கொல்லம் 1053ஆம் வருஷம் உத்திராயணமாகிய மேஷரவி (சித்திரை மாதம்) 13ஆம் தேதி புதன் வாரமும் அமர பச்சத்து அட்டமி திதியும் உத்திராட நட்சத்திரமும் சாத்திய நாமயோகமும் பாலவ கரணமும் அமுர்த கடிகையும் மேஷ லக்கினமும் தாமச வேளையும் புதவோரையுங் கூடிய இந்த சுபயோக சுபதினத்தில் சிவஞான சித்தியார் சுபக்கம் எழுதி நிறைந்தது, முற்றும்" என்றிருக்கின்றது. இச்சுவடியின் காலம் கி.பி.1878ஆம் ஆண்டு சனவரி மாதம் 7ந்தேதியாகும். இதேபோல் ஒரு குடும்பத்துச் சுவடிகளின் காலத்தை வரையறை செய்தும் சுவடிகளை வரிசைப்படுத்தலாம்.
சுவடித் திருத்தம்
ஒருவர் படிக்க மற்றொருவர் எழுதும் போதோ, பார்த்து எழுதும் போதோ எழுதப்படும் சுவடியில் எழுத்து - அசை - சொல் - தொடர் ஆகியவற்றில் விடுகை/சேர்க்கை நிகழ்வதுண்டு. இவ்வாறு நேரிடும் போது மூலப்படியை ஒப்பிடும் வழக்கம் பழங்காலத்தில் இருந்திருக்கின்றது. இதனைப் பல சுவடிகளைப் பார்க்கும் போது தெளிவாகத் தெரிகின்றது. அதாவது, மூலப் படியில் உள்ள பாடப் பகுதிகள் எழுத்தாகவோ சொல்லாகவோ விடப்பட்டிருப்பின் விடுபட்ட இடத்திற்கும் மேல் வரிக்கும் இடையிலும், சொல்லாகவோ தொடராகவோ விட்டிருப்பின் ஓலையின் இடது அல்லது வலது ஓரப் பகுதியிலும் எழுதுவர். எழுத்தோ சொல்லோ தொடரோ தவறுதலாகவோ கூடுதலாகவோ எழுதப்பட்டிருப்பின் அவற்றை அடித்தல் முறையில் நீக்கியிருப்பர். ஒரு பாடலோ, ஒன்றுக்கும் மேற்பட்ட பாடலோ விடுபட்டிருப்பின் தனியேட்டில் எழுதி துணையேட்டெண் கொடுத்துச் சேர்ப்பர்.
மூலபாடம் பெருகுதல்
- ஆசிரியர் தம்முடைய நூலை வாய்மொழியாகக் கூறும்போது, அதனைப் பரப்புபவர் தாமாகவே சிலபல பாடல்களை இயற்றிச் சேர்ப்பர்.
- நூல் எழுத்து வடிவம் பெற்ற பின்னரும் மூலபாடத்தில் நூலைப் பாடஞ் சொல்பவரோ, பாடங்கேட்பவரோ, படியெடுப்பவரோ நூலுக்குத் தொடர்பு உள்ள செய்திகளைத் தாமே பாட்டு வடிவில் இயற்றி நூலின் இடையிடையிலோ முன்னோ பின்னோ சேர்ப்பர்.
- மூலத்தின் கருத்துடன் ஒத்தவையாகத் தாம் கருதிய அல்லது கேட்ட வேறு நூலின் பாடல்களைப் படியெடுப்பவர், பாடஞ்சொல்பவர், பாடங்கேட்பவர் ஆகியோர் தம்முடைய நினைவிற்காக மூலப் பகுதியோடு சேர்த்து எழுதுவர். இவ்வாறு நினைவிற்காக எழுதப்பெற்றவற்றைத் தாம் எழுதியவை என்றோ, இன்ன நூலிலிருந்து எடுத்த மேற்கோள் என்றோ ஆங்காங்கே குறிக்காமல் விட்டுவிடுவர்.
பிற்காலத்தில் இந்த ஏடுகளைப் படியெடுப்போர் இது மூலநூல் ஆசிரியர் இயற்றியது என்றோ; இது இடைக்காலத்தினர் சேர்த்தது என்றோ தெரியாமல் எல்லாவற்றையும் தொடர்ச்சியாக எழுதி விடுவர். அதாவது, இடைச்சேர்க்கைகளையும் மூலநூலின் பகுதிகள் என்று எண்ணிப் படியெடுத்து விடுவர். இவ்வாறு மூலநூல் வளர்வதைப் 'பெருக்கம்' என்பர்.
சுவடித்தேர்வு
மூலபாட ஆய்வில் நுழையும் ஒரு ஆய்வாளர் முதலில் சுவடியைத் தேர்வு செய்யவேண்டும். சுவடியைத் தேர்வு செய்யும் முறைகள் பல உண்டு. அவை,
- சுவடிகள் எவ்வெவ்விடங்களில் இருக்கின்றன என்பதற்கான முழுமையான பட்டியல் தயார் செய்யவேண்டும்
- சுவடி முழுமையா? குறையா? என்றறிய வேண்டும். முழுமையான சுவடிகள் எவையெவை, குறையான சுவடிகள் எவையெவை எனப் பிரிக்கவேண்டும்
- மூலம் மட்டும் கொண்டவையா, மூலமும் உரையும் கொண்டவையா, உரைநடையால் மட்டும் அமைந்தவையா, இவற்றில் இரண்டு வகையையோ மூன்று வகையையோ பெற்றவையா எனப் பகுத்தறிதல் வேண்டும்
- ஓலைச்சுவடி மட்டும் உள்ளவையா, காகிதச் சுவடி மட்டும் உள்ளவையா, அச்சுநூல் உள்ளவையா, இவற்றில் இரண்டு வகையையோ மூன்று வகையையோ பெற்றவையா என்றறிய வேண்டும்
- தொகுக்கப்பெற்ற சுவடிகளின் தலைமுறையை வரிசைப்படுத்த வேண்டும்
இவ்வாறு இவ்வகைகளில் கிடைக்கக் கூடிய சுவடிகள் அனைத்தையும் தொகுக்க வேண்டும். இவற்றில் கிடைக்காத சுவடிகளை நகல் எடுத்தோ(செராக்ஸ்), சுவடிகள் கிடைக்காத போது அச்சுவடிகள் இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று ஒப்பிட்டுப் பார்த்தோ வருதல் மூலபாட ஆய்வில் ஈடுபடுவோரின் கடமையாகும்.
மூலபாட ஆய்வு முறை
ஓர் ஆய்வாளர் மூலபாடத்தை ஆய்வு செய்யும் போது தன்னை இரண்டு நிலைகளில் உட்படுத்திக் கொண்டு ஆய்வு செய்யத் தொடங்குவான். ஒன்று, அகநிலை ஆய்வு; மற்றொன்று, புறநிலை ஆய்வு ஆகும். அகநிலை ஆய்வு என்பது, ஓர் ஆய்வாளன் நூலோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நூல் கருத்து தன்னுடைய கருத்தாகவே இருக்கவேண்டும் என்பதற்கேற்ப மூலபாடக் கருத்தை வலியுறுத்துதல் ஆகும். புறநிலை ஆய்வு என்பது, ஓர் ஆய்வாளன் மூலநூலாசிரியனின் மனநிலைக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டு நூலாசிரியரின் மனநிலையில் நின்று ஆராய்வதாகும்.
ஓர் ஆய்வாளர் மூலபாடத்தை ஆய்வு செய்யும் போது மூல நூலாசிரியருக்குத் தொடர்பான அனைத்துச் செய்திகளையும், படியெடுப்பவர்க்குத் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் கவனத்தில் கொண்டு ஆய்வு செய்தல் வேண்டும்.
நூலின் அகச்சான்றான நூலாசிரியரின் நடை, மூலக் கருத்துக்கள், வரலாற்றுப் போக்கு, பொருளமைதி(அகப்பொருளமைதி, புறப்பொருளமைதி), இடவமைதி ஆகியவற்றையும்; நூலின் புறச்சான்றான நூலெழுந்த காலம், ஏடு எழுதப்பெற்ற காலம், ஏடு கிடைத்த இடவகை ஆகியவற்றையும் மனதில் கொண்டு ஓர் மூலபாட ஆய்வாளர் மூலபாடத்தை ஆய்வு செய்தல் வேண்டும்.
ஏடு கிடைத்த வரலாற்றுப் பின்னணி, அவ்வேட்டுடன் ஒத்த மேலேடு, கீழேடுகளில் காணும் மாறுபாடுகள் - திருத்தங்கள் இவற்றின் வரலாற்றுப் பின்னணி ஆகியவற்றையும் மனதில் கொண்டு மூலபாடத்தை ஆய்வு செய்தல் வேண்டும்.
மூலபாட ஆய்வுக்குத் தேவையான பிற ஆதாரங்கள்
- ஒரு மூல நூலை ஆராயும்போது அதனின்று கிளைத்தெழுந்த வழிநூல்களையும் சார்பு நூல்களையும் ஆராய்தல் வேண்டும்.
- ஒரு மூல நூல் எழுந்த காலத்துத் தோன்றிய கல்வெட்டுகள், செப்பேடுகள், ஆவணங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவற்றையும் ஆராய்தல் வேண்டும். காட்டாக, "ஏட்டுச் சுவடிகள் பலவற்றை ஆராய்ந்து திருஞானசம்பந்தருடைய தேவாரப் பதிகங்களைப் பலர் வெளியிட்டுள்ளனர். எனினும், திருவிடைவாசல் என்ற தலத்தில் கி.பி.1917இல் நிகழ்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியின்போது, அங்கு உள்ள கல்வெட்டு ஒன்றினால், அவருடைய பதினொரு பாடல்கள் கொண்ட பதிகம் ஒன்று வெளிப்பட்டது. அத்தலம் விடைவாய் என்று வழங்கப்பட்டது. அப்பர் சுவாமிகள் தமது அடைவு திருத்தாண்டகப் பதிகத்தில் 'விடைவாய்க்குடி' என அத்தலப் பெயரினை வழங்குகின்றார். பாடல் பெறாத தலமாக - வைப்புத் தலமாகக் - கருதப்பட்ட அது இப்பதிக வெளிப்பாட்டிற்குப் பின்னர்ப் புதிய நிலை பெறுவதாயிற்று. வழிவழியாக ஏடுகளைப் பெயர்த்தெழுதியவர்கள் தம் மேலேடுகளில் அப்பதிகம் இல்லாமையால் பிரதி செய்யாமலே விட்டுவந்துள்ளனர் என்பதும், பிற ஆவணங்களையும் ஆராய்வதனால் இத்தகைய புதிய செய்திகள் கிடைக்கக்கூடும் என்பதும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்"(மூலபாட ஆய்வியல், பக்.19-20) என்பதைப் பார்க்கும் போது கல்வெட்டுச் சான்று மூலபாட ஆய்வுக்குத் துணைபுரிதலை அறியலாம்.
மூலபாடம் தெளிதலில் ஏற்படும் சிக்கல்கள்
மூலபாடம் தெளிவதில் பல்வேறு வகையான சிக்கல்கள் தோன்றுகின்றன. அவற்றுள் சில பின்வருமாறு: -
- ஒன்றுக்கும் மேற்பட்ட சுவடிகள் ஒரு நூலுக்குக் கிடைக்கும் போது பாடவேறுபாடுகள் மிகப் பலவாகக் கிடைக்கும். இவற்றிலிருந்து மூலபாடத்தைத் தெரிவு செய்வதில் தயக்கமும் குழப்பமும் உண்டாகும்.
- ஒன்றுக்கும் மேற்பட்ட சுவடிகள் ஒரு நூலுக்குக் கிடைக்கும் போது பொருள் மாறுபாடுகளும், கருத்து வேற்றுமைகளும் மிகுதியாகத் தோன்றும்.
- ஒரு சுவடியில் உள்ள ஒரு சொல் திருத்தமானது என ஆய்வாளர் எண்ணிக் கொண்டிருக்கும் போது மற்றொரு சுவடியில் காணப்படும் பாடம் திரிந்து காணப்படுமாயின் ஆய்வாளர் மயங்க நேரிடும்.
மூலபாட ஆய்வில் உரையாசிரியரின் பங்கு
தமிழைப் பொறுத்தவரை மூலபாட ஆய்வின் தொடக்கத்தை உரையாசிரியர்களே தொடங்கியிருக்கின்றனர். உரையாசிரியர்களின் ஆய்வுப் பணியை மூலபாட ஆய்வு என்று சொல்லவில்லையே தவிர அவர்களின் உரைப் போக்குகளில் இன்றைய மூலபாட ஆய்வின் தன்மை முற்றிலும் நிலவுவதைக் காணமுடிகிறது. மூல நூலாசிரியரின் பாடம் வேறுபடும் இடங்களில் தக்க சான்றுகள் காட்டி ஆசிரியன் கருத்து இதுவாகத்தான் இருக்கும் என்று கூறியதை உடனிருந்து அறிந்த சான்றோர்கள் உரையாசிரியனின் திறத்தைப் பாயிரமாக எழுதிச் சேர்த்திருக்கின்றனர். காட்டாக,
"பாடிய சான்றோர் பீடுநன்கு உணர
மிகைபடு பொருளை நகைபடு புன்சொலில்
தந்திடை மடுத்த கந்திதன் பிழைப்பும்
எழுதினர் பிழைப்பும் எழுத்துரு ஒக்கும்
பகுதியின் வந்த பாடகர் பிழைப்பும்
ஒருங்குடன் கிடந்த ஒவ்வாய் பாடம்...
மதியின் தகைப்பு விதியுளி யகற்றி
எல்லையில் சிறப்பின் தொல்லோர் பாடிய
அணிதிகழ் பாடத்துத் துணிதரு பொருளைச்
சுருங்கிய உரையின் விளங்கக் காட்டினன்...
பரிமே லழகன் உரிமையின் உணர்ந்தே"
என்ற பரிபாடலின் உரைப்பாயிரப் பகுதியை உற்று நோக்கும் போது பரிமேலழகரின் மூலபாட ஆய்வு முறை வெளிப்படுவதை உணரலாம். அதாவது, கந்தி என்பவர் சான்றோர் பாடல்களின் இடையிடையே சான்றோர் பாடல்களைப் போலத் தாம் எழுதிய சில பாடல்களைச் செருகிவந்திருக்கின்றார். மேலும் எழுத்தின் வடிவத்தால் ஒத்து வரும் சில சொற்கள் பாடியவர்களாலும் எழுதியவர்களாலும் பிழைபட உணர்ந்து பாடப்பெற்றும் எழுதப்பெற்றும் வந்துள்ளன. இவ்வாறு பல நிலைகளில் பொருந்தாப் பாடங்கள் சான்றோர் நூல்களிடையே தோன்றிவிட்டன. அவற்றை நுட்பமாக அறிந்து இடைச்செருகல்களையும் பிழைகளையும் களைந்து, சான்றோர் பாடிய உண்மைப் பாடங்களை நிறுவி அவற்றிற்குப் பரிமேலழகர் உரை கண்டிருக்கின்றார் என்னும் செய்தி பரிமேலழகரின் மூலபாட ஆய்வின் திறத்தினை வெளிப்படுத்துகின்றது.
பொதுவாக, உரையாசிரியர்கள் மூலபாடத் தேர்வில் பின்வரும் வழிமுறைகளைக் கையாண்டிருக்கின்றனர்.
- நூலுக்கு உரையெழுதப் புகும்போது உரையாசிரியர் அந்நூற் சுவடிகள் அனைத்தையும் ஒன்று திரட்டி ஒப்பு நோக்குகின்றார்.
- நூலோடு தொடர்புடைய வழிநூல் மற்றும் சார்பு நூல்களையும் ஒப்பீடு செய்கின்றார்.
- நூலெழுந்த காலத்துத் தோன்றிய கல்வெட்டுகள், செப்பேடுகள், ஆவணங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், பட்டயங்கள் ஆகியவற்றைப் உற்று நோக்கிப் பாடம் தெளிவடைகின்றார்.
- மூல நூலுக்கெழுந்த உரைநடைகளையும் மொழிபெயர்ப்புகளையும் ஒப்பு நோக்குகின்றார்.
- மொழிபெயர்ப்பு நூல்களால் ஆசிரியருடைய சொற்போக்கு, சொற்பொருள், சொல்லின் இடப்பொருத்தம் ஆகியவற்றைத் தெளிவாக்குகின்றார்.
உரையாசிரியர்கள் பாடவேறுபாட்டைச் சுட்டும் விதம்
உரையாசிரியர்கள் ஒரு நூலுக்கு உரை வரையும் போது அந்நூல் பாடங்கள் பிற நூல் பாடங்களில் உள்ள பொருட்பொருத்தத்தைத் தமது உரையில் எடுத்துக்காட்டுவர். இவ்வாறு எடுத்துக்காட்டும் இடங்களில் 'இன்னவாறு பாடம் ஓதுவாரும் உளர்', 'இன்னதும் பாடம்' என்று உரைப்பகுதியிலோ அடிக்குறிப்பிலோ எடுத்துக்காட்டுவர்.
உரையாசிரியர்கள் ஒரு நூலுக்கு உரை வரையும் போது அந்நூல் பாடங்கள் பிறர் கொண்ட பாடங்களில் பொருட்பொருத்தம் இல்லாதவற்றை எடுத்துக்காட்டுவர், இவ்வாறு எடுத்துக்காட்டும் இடங்களில் 'இன்னவாறு பாடம் கூறுவாரும் உளர்', 'இன்ன காரணத்தால் அது பொருந்தாமை அறிக' என்று உரைப்பகுதியிலோ அடிக்குறிப்பிலோ எடுத்துக்காட்டுவர்.
பாடவேறுபாடும் வடிவவேறுபாடும்
பாடவேறுபாடு சொல்லின் பொருளில் மாற்றத்தை உண்டாக்குபவையாகும். ஆனால், வடிவ வேறுபாடாடு சொல்லின் பொருளில் மாற்றத்தை உண்டாக்காதவையாகும். அதாவது, ஒரு பாடலின் கருத்தை மாற்றுவதாகவோ, தொடரின் பொருட்போக்கைத் திருப்புவதாகவோ அமைவது பாடவேறுபாடு. "மாதர்கள் கற்பின் மிக்கார்" என்பது கம்பராமாயணத்தில் வரும் ஒரு பாடம் ஆகும். இதற்குப் பாடவேறுபாடாக "மாதர்கள் வயதின் மிக்கார்" என்பது உண்டு. இதில் 'கற்பின்', 'வயதின்' என்ற சொற்கள் இத்தொடரில் பாடவேறுபாடாகத் தோன்றுகின்றன. இவ்விரு பாடங்களில் எது சரியான பாடம் எனத் தேர்ந்து மூலப்பகுதியில் காட்டி, சரியில்லாத பாடத்தை அடிக்குறிப்பில் காட்டுவது மூலபாட ஆய்வாளரின் கடமையாகும். தோன்றினன்-தோன்றினான், வந்தனன்-வந்தான், உரைத்தான்-சொன்னான், வென்றனன்-வென்றான், நூலார்-நூலோர் ஆகிய தொடர்கள் பாடவேறுபாடு போன்று தோன்றினும் இவைகள் பாடவேறுபாடு அல்ல, வடிவ வேறுபாடாகும். இவற்றால் பாடலின் பொருள் பெரும்பான்மை சிதைவதில்லை.
மூலபாடத்தைத் திருத்தும் முறைகள்
மூலபாட ஆய்வாளர் மூலபாடத் தெளிவின் காரணமாக ஒரு பாடத்தை ஏற்றுக்கொள்ளுதலும், விலக்கிவிடுதலும் கூடும். அதாவது, மூலபாட ஆய்வாளர் மூலபாடத்தில் திருத்தம் மேற்கொள்ளும் போது நான்கு நிலைகளைக் கையாளுகின்றார். அவை,
அ. ஒரு பாடத்தை ஒப்புக் கொள்ளுதல்
ஆ. ஒரு பாடத்தை விலக்கி விடுதல்
இ. ஒரு பாடத்தை ஐயத்தோடு ஒப்புக் கொள்ளுதல்
ஈ. ஒரு பாடத்தை ஐயதோடு விலக்கி விடுதல்
என அமையும்.
1. கிடைக்கின்ற சுவடிகளில் காணப்படும் எல்லா பாடங்களையும் ஒப்பு நோக்கி, அவற்றுள் எது சிறந்த பாடமோ அதனைக் கையாளவேண்டும். இம்முறையில், திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் ஆகியவற்றைக் குறிப்புரையுடன் பதிப்பித்த வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர்,
துனியும் புலவியும் இல்லாயின் காமக்
கனியும் கருக்காயும் அற்று
என்னும் 1306ஆம் திருக்குறள் பரிமேலழகரின் விசேடவுரையில் "மிக முதிர்ந்திறும் எல்லைத்தாய கனி நுகர்வார்க்கு மிகவும் இனிமை செய்தலில்' என்றே பல பிரதிகளில் காணப்படினும், அது பொருளமைதிக்கு ஏற்றிராமையால், அந்தப் பாடத்தைப் பிரதிபேதமாகக் காட்டிவிட்டு, எமக்குக் கிடைத்த ஒரு பிரதியிலுள்ளவாறு, 'மிக முதிர்ந்திறும் எல்லைத்தாய கனி நுகர்வார்க்கு மிகவும் இனிமை செய்யாமையில்' என்ற பாடத்தைப் பிரதானமாகக் கொண்டுள்ளேன்" என்று குறிப்பிடுவதன் மூலம் உணரலாம்.
2. கிடைக்கின்ற சுவடிகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து குறிப்பிட்ட பகுதி மூல நூலாசிரியருடையதாகக் கருதப்படாத நிலையேற்படும் போது அம்மூல நூலுக்கு எழுந்த பல்வேறு உரைக்கருத்துக்களை ஒப்பீடு செய்து பதிப்பாசிரியர் மூல பாடத்தைத் திருத்தம் செய்யலாம். திருத்தப் பகுதியைப் பற்றித் திருத்தம் பெற்ற பகுதி இன்னது எனவும், இன்ன காரணத்தினால் திருத்தம் செய்யப்பெற்றது எனவும் அடிக்குறிப்பிலோ நூலின் முன்னுரை மற்றும் பின்னுரைகளிலோ குறிப்பிடல் வேண்டும். இம்முறையில், திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் ஆகியவற்றைக் குறிப்புரையுடன் பதிப்பித்த வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியார்,
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்குங் காடிக்குங் கூற்று
என்னும் 1050ஆம் திருக்குறள் பரிமேலழகரின் விசேடவுரையில், "இனி, முற்றத் துறத்தலாவது - துப்புற வில்லாமையின் ஒருவாற்றால் றுறந்தாராயினார் பின் அவற்றை மனத்தாற் றுறவாமை' என்றே எல்லாப் பிரதிகளிலும் காணப்பட்டமையால், அங்ஙனமே பதிப்பித்துள்ளேன். அந்தப் பாடம் பொருளமைதிக்கு ஏலாமையால், குறிப்புரையில், 'மனத்தாற் றுறத்தல்' என்று இருக்கவேண்டுமென்று காட்டியுள்ளேன்" என்று குறிப்பிடுவதன் மூலம் உணரலாம்.
மூலபாடத் தேர்வு முறைகள்
மூலபாடத் தேர்வு காலந்தோறும் பல்வேறு நிலைகளில் வளர்ந்து வந்துள்ளது. அவற்றின் பரப்பு மிகமிக அதிகம். அவற்றையெல்லாம் கூறின் ஆய்வு விரியும். எனவே, இங்குச் சில வழிமுறைகள் மட்டும் எடுத்துக்காட்டப்பெறுகின்றது.
1. உரையின்றி நூல்களின் மூலம் மட்டும் கிடைக்குமிடத்து, சுவடிகளிலுள்ள மூலத்தால் மட்டும் திருத்தம் செய்தல். அதாவது, மூலம் மட்டும் இருக்கின்ற சுவடிகளில் பாடவேறுபாடுகள் இருப்பின், அவற்றுள் சிறந்த பாடத்தைத் தெரிவு செய்தல் வேண்டும். எ.கா.
"ஊர்க்கு மணித்தே பொய்கை" (குறுந்.113)
எனும் பாடலின் ஈற்றயலடியைக்
"கூழைக் கேர்மணம் கொணர்கம் சேறும்"
எனச் சௌரிப்பெருமாள் அரங்கனாரும்,
"கூழைக் கெருமண் கொணர்கம் சேறும்"
என உ.வே. சாமிநாதையரும் குறிப்பிடுகின்றனர். உ.வே.சாமிநாதையர்,
'கூழைக்கேர் மணங்குறுகம்',
'கூழைக்கேரு மணங்குணர்கம்'
என்பனவற்றைப் பாடவேறுபாடாகக் காட்டுகின்றார். அரங்கனார்,
'ஏர்மணங் கொணர்கம்'
என்பதற்கு 'அழகிய மணமுள்ள மலரைக்கொள்ள' எனப் பொருள் எழுதுகின்றார். இதையே இரத்தின ஐயரும் ஏற்றுக்கொள்கின்றார். ஆனால் உ.வே.சா. அவர்கள் 'கூந்தலுக்கு இட்டுப் பிசையும் பொருட்டு எருமண்ணைக் கொணர்வேமாய்' என்று பொருள் கூறி, 'எருமண் என்றது களிமண்ணை கூந்தலிலுள்ள எண்ணெய்ப்பசை, சிக்கு முதலியன போக்கும் பொருட்டுக் களிமண்ணைத் தேய்த்துக்கொண்டு மகளிர் நீராடுதல் வழக்கு; இதனைச் சிற்றூர்களில் இன்றும் காணலாம் என விளக்கமும்,
"கூழைபெய் எக்கர்" (குறுந்.372:5)
"கூந்தல் நறுமண்" (பெருங்.1.40:28)
என்பனவற்றைப் பார்க்க என மேற்கோள்களையும் எழுதுகின்றார். ஆனால், வையாபுரியார், "எருமண் கொணரச் செல்வதாகக் கூறுவது பெருமையன்று; தகுதியும் அற்றது" என்று குறிப்பிட்டவர், எருமணம் - செங்கழுநீர், கூந்தலில் முடிவதற்குச் செங்கழுநீர் கொணரச் செல்வதாகக் குறிப்பதே தகுதி என்றவர் அஃது "எருமணம்" என அமைந்திருக்க வேண்டும் என்கின்றார். இவ்வாறு ஒரு சொல் பல்வேறு சுவடிகளில் பாடவேறுபாடாக இருக்க அதைத் தெளிவுபடுத்த இவர்கள் கையாண்ட முறைகளைக் காணமுடிகிறது.
2. மூலமும் உரையும் உள்ளவிடத்து, உரைகளின் துணைகொண்டு மூலச் சுவடிகளின் பாட வேறுபாட்டைத் திருத்தம் செய்யலாம். எ.கா.
"தூங்கு கையான் ஓங்குநடைய" (புறம்.22)
எனும் பாடலில் "நிற்பாடிய அலங்கு செந்நா பிறரிசை நுவலாமை வேண்டும்" என்று பல பதிப்புகளில் இடம்பெற்றிருக்கின்றது. 'பிற்பிறரிசை' என்பது ஏட்டில் புள்ளியின்று 'பிறபிறரிசை' என்று இருக்கும். ஏடு பெயர்த்து எழுதுபவர்கள் 'பிற' என்னும் சொல் கூடுதலாக இருமுறை எழுதப்பட்டிருக்கும் என்று விடுத்து 'பிறரிசை' என்று பதிப்பித்திருக்கின்றனர். ஆனால், இவ்வரிக்கான உரைப்பகுதியானது "நின்னைப் பாடிய விளங்கிய செவ்விய நா பின்னைப் பிறருடைய புகழைச் சொல்லாமல்" என்றிருப்பதைக் கண்டவர்கள் 1940ஆம் ஆண்டு சைவ சித்தாந்த சமாஜம் வெளியிட்ட 'சங்க இலக்கியம்' பதிப்பில் 'பிற் பிறரிசை' என்று இருப்பதே சரியான பாடம் எனத் தேர்ந்து "நிற்பாடிய அலங்கு செந்நா பிற்பிறரிசை நுவலாமை வேண்டும்" எனப் பதிப்பித்திருக்கின்றதை அறியமுடிகிறது.
3. உரைகளில் மேற்கோளாக எடுத்தாளப்பட்டவிடத்து, அவ்வுரையிற் காணும் பாடத்தை ஒப்பு நோக்கித் தகுதியான பாடங்கொள்ளுதல். எ.கா.
"ஒண்டொடி அரிவை" (ஐங்.93)
எனத் தொடங்கும் பாடலின் மூன்றாவது அடியாகிய "உரவுக் கடல் ஒலித்திரை போல" என்பதை தொல்காப்பிய இளம்பூரணர் உரையிலும், இலக்கண விளக்க உரையிலும் கையாண்ட மேற்கோள் பாடலினால் திருத்தம் பெற்றது என்பர்(பதிப்புப் பார்வைகள், ப.32).
4. ஒரு சுவடியில் தவறாக உள்ள ஒரு சொல்லோ தொடரோ வேறொரு சுவடியிலோ உதிரி ஏடுகளிலோ திருத்தம் பெறுதலுண்டு. அதனால் பல்வேறு பொருள்களும் அரிய செய்திகளும் தெளிவாகும். பல சுவடிகளில் விடுபட்டிருக்கும் தொடர்கள் சொற்கள் இறுதியாகக் கிடைக்கின்ற ஒரேயொரு சுவடி/உதிரி ஏடுகளில் வெளிப்படுதலும் உண்டு. காட்டாக, உ.வே.சாமிநாதையர் அவர்கள் பத்துப் பாட்டுப் பதிப்பில் ஈடுபட்டிருந்தபோது, குறிஞ்சிப் பாட்டிலுள்ள மலர்களின் வரிசையில் எவையோ சில விடுபட்டிருந்தனவாக ஊகித்துத் தம்மிடமிருந்த பல பிரதிகளிலும் அவை கிடைக்காமல் மனம் சோர்ந்திருந்த நேரத்தில், தருமபுர ஆதீனதில் பெற்ற ஒற்றையெடுகளில் காணப்பட்ட "செங்கோடு வேரி தேமா மணிச்சிகை யுரிது நாறவிழ் தொத்துந்தூழ்" என்ற அடிகளினால் குறை நிரம்பிப் பிரதி திருத்தமும் முழுமையும் பெற்றதைக் குறிப்பிடுகின்றார்.
5. யாப்பின் சீரமைதியாலும் மூலபாடத்தைத் தெளியலாம். காட்டாக, பதினோராம் திருமுறையில் காய்ச்சீர் இருக்கவேண்டிய இடத்தில் கனிச்சீரும் நாற்சீரும் இடம்பெற்றிருக்கின்றன.
வெண்டளை மாற்றம்-ஐகாரக்குறுக்கம்
"கவ்வைக் கடிபிடிக்கும் காதன்மையால் - செவ்வை"
(திருஈங்கோய்மலை எழுபது, 35:2)
"தேயத்ததுவே செம்பொற் செழுஞ்சடைமேற் சேர்வித்து
வாய்த்திமையோர் தம்மையெல்லாம் வான்சிறையிற்"
(போற்றித் திருக்கலிவெண்பா,27)
"தானவர்கட் காற்றாது தன்னடைந்த நன்மைவிறல்
வானவர்கள் வேண்ட மயிலூரும்" (மேலது, 31)
"கொலைபுரியா நீர்மையவாய்க் கொம்புவளைத் தேந்தி
மலையு மரவடிவங் கொண்டாங்"
(ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை,15)
"புகழ்வாருந் தன்மையதாய்ப் பூதலத்துள் ஓங்கி
நகழ்கிடங்குஞ் சூழ்கிடப்ப நேரே" (மேலது, 26)
"பெற்றிடலாம் என்றிருந்த நம்மிலும் பேதையர்கள்
மற்றுளரோ என்று வகுத்துரைப்பார்" (மேலது, 136)
"வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்துச்
சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டைஒண்கட்"
(திருக்கயிலாய ஞானவுலா, 41)
இவற்றில் காதன்மையால், தம்மையெல்லாம், நன்மைவிறல், நீர்மையவாய், தன்மையதாய், பேதையர்கள், கெண்டைஒண்கட் போன்ற சீர்கள் காய்ச்சீராக இல்லாததை உணரலாம். இச்சீர்களில் இருக்கக் கூடிய ஐகாரத்தைக் குறுக்கமாக எண்ணில் காய்ச்சீர் வரும். எனவே இவ்விடங்களில் யாப்பினை அலகிடும் போது ஐகாரத்தைக் குறுக்கமாக அலகிட்டுக் கொள்ளவேண்டுவது தெரிகின்றது.
வெண்டளை மாற்றம்-எழுத்தை விடுத்தல்
பதினோராம் திருமுறையில் சேரமான்பெருமாள் நாயனாரின் திருக்கயிலாய ஞானவுலாவும், நம்பியாண்டார் நம்பியின் ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலையும் நேரிசை வெண்பா யாப்பில் அமைந்திருக்கின்றன. வெண்பாவிற்குள் கனிச்சீர் இடம்பெறக் கூடாது. ஆனால்,
"வஞ்சியும் வேயும் வளர்தா மரைமொட்டும்
மஞ்சில்வரு மாமதிபோல் மண்டலமும்"(திருக்கயிலாய ஞானவுலா, 114)
"ஆடும் இறைவன் அமரர்குழாம் தற்சூழ
மாட மறுகில் வரக்கண்டு" (மேலது, 192)
"குடைபலவுஞ் சாமரையுந் தொங்கல்களுங் கூடிப்
புடைபரந்து பொக்கம் படைப்ப"
(ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை, 116)
போன்ற பாடல்களில் மஞ்சில்வரு, அமரர்குழாம், தொங்கல்களும் என்ற சொற்கள் கனிச்சீராக அமைந்திருக்கின்றன. இவற்றில் முறையே ல், ர், ல் ஆகிய எழுத்துக்களை விடுத்து அலகிட்டால் காய்ச்சீர் வரும். எனவே, இவ்விடங்களில் யாப்பினை அலகிடும் போது எழுத்தை விடுத்து அலகிட்டுக் கொள்ள வேண்டுவது தெரிகின்றது.
முடிவுரை
மூல நூலாசிரியர் இல்லாத காலத்து எழும் பதிப்புகளில் பெரும்பாலும் மூலபாட ஆய்வு அமைந்திருக்கம். அவற்றையெல்லாம் தொகுத்து முறைப்படுத்தினால் மூலபாட ஆய்வின் நோக்கும் போக்கும் தெளிவாகத் தெரியும் என்பதில் ஐயமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக