கசடறக்
கற்ற கல்வியின் மேன்மையை ஆய்வுகளாகவும், எண்ண உறுத்தல்களைப் படைப்புகளாகவும் ஒருசேரச்
செய்து வந்த பெருமக்கள் ஒரு சிலரே ஆவர். அவர்களுள்
சரவணப்பெருமாளையர், த. சிவக்கொழுந்து தேசிகர், ஆறுமுக நாவலர், வடலூர் இராமலிங்க அடிகள்,
மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்களுள் ஒருவராக வைத்துப் போற்றத்தக்கவரே பேராசிரியர்
ச. வையாபுரிப்பிள்ளை.
வையாபுரிப்
பிள்ளையவர்கள் 'கட்டுரைகள் வரைந்திருப்பதோடு, ஆராய்ச்சிகள் செய்திருப்பதோடு, கவிதைகளும்
இயற்றியுள்ளார்; கதையும் எழுதியுள்ளார்' என்பார் மா.சு. சம்பந்தன் (அச்சும் பதிப்பு,
ப.407). வையாபுரியாரின் ஒன்பது சிறுகதைகளும்
ஒரு நாவலும் அவரின் எண்ணத்தையும் வளர்ச்சி நிலையையும் காட்டும் கருக்கோலாக இருக்கின்றன. வையாபுரியாரின் சிறுகதைகள் 'பாலையா' என்ற புனைபெயரில்
வெளிவந்திருக்கின்றன.
"சிறந்த
புதினத்திற்கு இன்றியமையாத உறுப்புக்களாக சூழ்ச்சி அல்லது சதி, பாத்திரங்கள், உரையாடல்,
காலம், இடம், நடை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ காட்டப்பெற்றுள்ள வாழ்க்கைத் தத்துவம்
என்பனவற்றைக் கூறலாம். இவை அனைத்தும் ஒரே அளவாகவோ
அனைத்துமோ இருந்து தீரல் வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. ஒவ்வொன்றும் மிக்கும் குறைந்தும் இருப்பினும் தவறு
இல்லை" (அ.ச. ஞானசம்பந்தம், இலக்கியக்கலை, ப.346). வையாபுரிப்பிள்ளையவர்களின் பத்து கதைகளிலும் சூழ்ச்சி
அல்லது சதி தவிர்த்த மேற்கூறிய அனைத்தும் வெளிப்படையாகவே அமைந்திருத்தலைக் காணமுடிகிறது.
கதைக்கரு - சிறுகதைகள்
அ. மணிமுடி மாளிகை
ரங்க
நாயகியின் விருப்பப்படி இந்தியாவின் வடவெல்லை வரை சுற்றிப்பார்க்க தந்தை இசைவு தருகிறார். தந்தையுடன் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு
சென்னையில் வெகுநாளாக சந்திக்காதிருந்த அத்தை விசாலாட்சியைச் சந்திக்கிறார்கள். பின் டெல்லியில் அத்தை மகன் சீனிவாசனைச் சந்திக்கிறார்கள். அங்கு, ரங்கநாயகிக்கும் சீனிவாசனுக்கும் காதல் மலர்கிறது.
பின் பெற்றோர்களின் ஆசியுடன் திருமணம் நடைபெறுகிறது.
ஆ. சுசீலை
குழந்தையிலேயே
அனாதையாகிவிட்ட சுசீலையைத் தூரத்து உறவு அம்மணியம்மாள் வளர்த்து வருகிறார். அம்மணியம்மாளின் தங்கை மகன் இராமநாதன் அவளின் வீட்டிற்கு களோக சாத்திரம் - புத்தகம் எழுதுவதற்காக அமைதியான
இடத்திற்கு வருகிறான். சுசீலை இராமநாதனைக்
காதலிக்கிறாள். இராமநாதன் தன் மாமன் மகள் சுந்தரியைக்
காதலிக்கிறான். சுந்தரி தன் தாயாரின் விருப்பப்படி
தன் தாய்மாமனையே மறுமணஞ் செய்து கொள்கிறாள்.
சுந்தரி இன்னொருவனுக்கு என்று முடிவானதும் இராமநாதன் பெண்களையே வெறுக்கிறான். அவனோடு அன்புடன் பழகும் சுசீலையையும் சேர்த்தே வெறுக்கிறான். சுசீலையின் மாறாத அன்பில் சிக்கிக்கொண்ட இராமநாதன்
மனம் மாறி சுசீலையைக் காதலிக்கின்றான். பின்
அவளைத் திருமணமும் செய்து கொள்கின்றான்.
இ. ராமுவின் சுயசரிதம்
தீபாவளிக்குப்
பத்மாவும் இராமஸ்வாமியும் சென்னையில் இருந்து தங்களுடைய சொந்த ஊரான திருநெல்வேலிக்குத்
தனித்தனியே இரயில் மூலம் புறப்படுகிறார்கள்.
இரயிலில் இரண்டு பேரும் சந்தித்துக்கொள்கிறார்கள். பத்மாவுக்கு தன்பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை இவர்
என்பதை தனக்குப் பெற்றோர் அனுப்பிய புகைப்படத்தை எடுத்துச் சரிபார்த்துக் கொண்டு அவனுடன்
பழகத் தொடங்குகிறாள். பழக்கம் காதலாகிறது.
பின் பெற்றோர்கள் ஆசியுடன் திருமணம் நிச்சயிக்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது.
ஈ. உதிர்ந்த மலர்
தாய்
இழந்த சுரைதா தந்தையின் ஆதரவில் அன்பாக வளர்கிறாள். தன் வயதொத்த அமீர்கானைக் காதலிக்கிறாள். தந்தையின் கட்டளைப்படி சுரைதா சதக்அலியைத் திருமணம்
செய்து கொள்கிறாள். அமீர்கானுடன் சுரைதா அன்பு
கொண்டிருப்பதை அறிந்த சதக்அலி அமீர்கானைக் கொன்று சவப்பேழைக்குள் வைத்து சுரைதாவுக்கு
அன்புப் பரிசாகக் காதலன் பிணத்தை அளிக்கிறான்.
ஆறாத அன்பு கொண்ட சுரைதா நெஞ்சில் உரங்கொண்டு சதக்அலியிடம் இருந்த கத்தியை எடுத்து
தற்கொலை செய்துகொள்கிறாள்.
உ. பேசாமடந்தை
கோபுவும்
சுகுணாவும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள். சுகுணா
கோபுவைக் காதலிக்கிறாள். கோபு ஓர் பேசாமடந்தையாக
இருப்பது கண்டு வெட்கி தலைகுனிகிறாள். எப்படியாகிலும்
கோபுவை இந்நிலையில் இருந்து மாற்றவேண்டும் என்று சுகுணா முடிவெடுக்கிறாள். சுகுணாவின் தூண்டுதலால் கோபு 'பிரசங்கமாரி' என்னும்
பட்டம் பெறும் அளவிற்குப் பேச்சில் முன்னேறுகிறான். பெற்றோர் ஆசியுடன் சுகுணாவைத் திருமணஞ் செய்துகொள்கிறான். தாம் படித்த மருத்துவத் தொழிலைவிட கோபு பேச்சுக்கே
முக்கியத்துவம் கொடுத்து வருவதைக் கண்ட சுகுணாவும் அவர்களின் பெற்றோர்களும் வருத்தமடைகின்றனர். பின்னர் அவர் பேசுவதை எந்த வகையிலாவது குறைக்கவேண்டும்
என்று பலவகையில் முயற்சி செய்கின்றனர்.
ஊ. ஓர் இரவு
காமுகர்களால்
விரட்டி வரப்பட்ட பஞ்கஜத்தை சோமு காப்பாற்றி வீட்டில் கொண்டுபோய் விடுகிறான். பங்கஜத்தின் அண்ணன் தன்னுடன் பயின்ற நண்பன் என்பதை
அறிகிறான். பின் பெற்றோர்களின் ஆசியுடன் பங்கஜத்தை
சோமு திருமணம் செய்து கொள்கிறான்.
எ. சந்திரா பழி வாங்கியது
குழந்தையில்லாத
கோவிலிங்கி ராணி, நடனமாது, வணிகன் மனைவி ஆகிய மூவரும் மகாதேவரிடம் வரம் கேட்க தவத்திடத்திற்குப்
புறப்படுகிறார்கள். மூவரும் ஓரிடத்தில் சந்திக்கின்றனர். மூன்று பேரும் சேர்ந்து மகாதேவரைக் கண்டு வரம் கேட்போம்
என்று செல்கின்றனர். வழியில் அக்கினி ஆற்றைக்
கடந்து போகும் சூழ்நிலை வரும் போது முதல் இரண்டு பேரும் தயங்குகிறார்கள். வணிகன் மனைவி மட்டும் ஆற்றில் இறங்கி கடக்க முற்படுகிறாள். அப்படி கடக்கும் போது இரண்டு பேரும் எனக்கும் வரம்
பெற்று வா என்று சொல்லி அனுப்புகின்றனர். வணிகன்
மனைவி மகாதேவரைக் கண்டு மாம்பழத்தை வரமாகப் பெற்று வந்து மூன்று பேரும் பழத்தை உண்ணுகிறார்கள். மூவருக்கும் முறையே சந்திரா, மௌலி, கோவிலன் என்ற
பெயருக்குகந்த குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்.
சந்திராவின்
சாதகத்தைக் கணித்த போது ஆபத்து வரும் என்று உணர்ந்த கோவிலிங்கி ராணி சந்திராவை ஆற்றில்
மிதக்கவிட்டுவிடுகிறாள். அக்குழந்தையை வணிகன்
எடுத்து வளர்த்து தன் மகன் கோவிலனுக்குத் திருமணம் செய்து வைக்கிறான். பின் கோவிலன் மௌலியின் நடனத்தைக் காணச் சென்று அவளையும்
ஏற்றுக்கொண்டு சிறிது காலம் அவளுடன் வாழ்கின்றான். பின் மௌலியுடன் கசப்பு உணர்வு (பொருளுக்காக) ஏற்பட
தன்மனைவி சந்திராவிடம் வந்து அவளின் காற்சிலம்பை விற்று மௌலியின் கடனைத் தீர்த்துவிட்டு
நாம் மகிழ்ச்சியாக வாழலாம் என்கிறான். சந்திரா
கணவனை நம்பாமல் தானும் உங்களுடன் வரவேண்டும் என்று கூறிக் கணவனுடன் காற்சிலம்பை விற்க
மதுரைக்கு புறப்படுகிறாள். கோவிலனை மதுரையில்
கள்வன் எனப் பட்டம் கட்டி கொலை செய்யச் சொல்கிறார்கள். பாவிகள் கையால் கொலைபடுவதைத் தவிர்க்க கோவிலனே தன்
கை வாளால் மாள்கிறான். இதையுணர்ந்த சந்திரா
கோபப்பட்டு மதுரையைத் தீக்கிரையாக்கித் தன் கணவன் உடலையும் தலையையும் ஊசியால் தைத்து
மகாதேவரிடம் உயிர்பெற்று இன்பமாக வாழ்கிறாள்.
ஏ. மத்தளக்காரன்
மாயக்காரியின்
வலையில் சிக்கிக்கொண்ட அரசகுமாரியைக் காப்பாற்றுகிறான் மத்தளக்காரன். பின் அவளையே திருமணமும் செய்துகொள்கிறான்.
ஐ. பாலகோபாலன் வழக்கு
ஏழைத்தாய்
சுமதியின் வழக்கில் தலையிட்டு தீர்த்து வைக்கிறான் வக்கீலுக்குப் படித்துக்கொண்டு இருக்கும்
மாணவன் பாலகோபாலன். சுமதியின் ஒரே மகள் சுந்தரியை
பாலகோபாலன் காதலிக்கின்றான். படிப்பினை முடித்த
பிறகு சுந்தரியைத் திருமணம் செய்துகொள்கிறான்.
ஒ. ராஜி - நாவல்
ராஜி
மோகனரங்கத்தைக் காதலிக்கின்றாள். நாராயணசாமி
ராஜியைக் காதலிக்கின்றாள். மோகனரங்கம் ராஜியைக்
காதலித்துவிட்டு வசதியான பெண் கமலினி கிடைத்தவுடன் அவளையே திருமணஞ் செய்துகொள்கின்றான். ருக்கு நாராயணசாமியை மனதில் நினைத்து அவன் கிடைக்காது
போகவே வரதராஜ அய்யங்காரரைக் காதலிக்கிறாள்.
மாறாத அன்பு கொண்ட நாராயணசாமி இறுதியில் ராஜியைத் திருமணஞ் செய்துகொள்ள வெளிநாட்டிலிருந்து
சென்னை வருகின்றான். பெங்களூரில் நோய்வாய்ப்பட்டு இருக்கும் ராஜியைக் காணச் செல்கின்றான்.
முடிவுரை
பேராசிரியர்
வையாபுரிப்பிளிளை அவர்கள் பத்து கதைகள் எழுதப்பட்டிருந்தும் சமூகத்தையோ சமுதாயத்தையோ
எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை. பெரும்பாலான
கதைகள் காதல் வேட்கை சார்புடையதாகவும் காதல் உணர்ச்சியைத் தூண்டக் கூடியதாகவும் அமைக்கப்பெற்றுள்ளன. ஒரு அடிப்படை நிலை எழுத்தாளர் எழுதக்கூடிய சாதாரண
கதைக்கருவைக் கொண்டே கதை பின்னப்பட்டுள்ளது.
தம் கதைகளில் கொள்கையுடையவர்களைக் காட்டத் தவரவில்லை. என்றாலும், இறுதியில் அவர்களையும் வழுவாக்கிவிடுகிறார். இவற்றையெல்லாம் உற்று நோக்கும் போது வையாபுரியார்
அவர்கள் கதாசிரியர் என்ற அளவில் பெரிய வெற்றி பெற்றார் என்று சொல்வதற்கில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக