வெள்ளி, 2 நவம்பர், 2018

திருப்புல்லாணித் திருவனந்தல்

பாண்டிய நாட்டில், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விஷ்ணுத் தலங்களுள் திருப்புல்லாணியும் ஒன்று.  இதனை வடமொழியில் 'தர்ப்பாசயனம்' என்றும் கூறுவர்.  அதாவது, இராமன் இலங்கையை நோக்கிப் படையெடுத்துச் செல்லும் பொழுது, கோடிக்கரையை அடைந்து நெடுங்கடலைக் கடப்பதற்கு வழி தரும்படி வருணதேவனை நோக்கி வரங்கிடந்தான்.  அப்படி வேண்டும் பொழுது திருப்புல்லைத் தலையணையாக வைத்துப் பாடு கிடந்தான் என்றும், அதன் காரணமாகத் திருப்புல்லணை என்று பெயர்பெற்று நாளடைவில் திருப்புல்லாணி என்று ஆகியது என்றும் கூறுவர்.  இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளைத் தெய்வச்சிலையார் என்றும் செகந்நாதர் என்றும் அழைப்பர்.  தாயாரை பதுமாசனித்தாயார் என்றும் தெய்வச்சிலை நாச்சியார் என்றும் அழைப்பர்.  இத்தலத்தில் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கின்றார்.

இராமன் இராவணனுடன் போர் புரிய இலங்கைக்குச் செல்லும் முன் தங்கியிருந்து திருப்புல்லணைந்தான் என்ற சிறப்பைப் பெற்ற இத்தலத்தில்தான் இராமன், இலட்சுமணன், சீதை, அனுமன், ஸ்ரீசக்கரம் ஆகிய ஐந்து செப்புத் திருமேனிகள் பூமிக்குள் இருப்பதைத் திருமதி. சரஸ்வதி அம்மாள் அவர்கள் கனவில் இறைவன் தோன்றி சொல்லியதாகவும், அத்திருமேனிகளை வெளிக்கொணர்ந்து அயோத்தியில் வைத்து வழிபடவேண்டும் என்று ஆணை இட்டதாகவும் கூறுவர்.  இவ்வாணைப்படி திருமதி. சரஸ்வதி அம்மாள் அவர்களால் அக்கால மத்திய அரசின் ஒப்புதலோடு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இச்செப்புத் திருமேனிகளை வெளியில் எடுத்து அயோத்திக்குக் கொண்டு சென்று அங்கு 'அம்மாஜிகா மந்திர்' என்ற மடத்தை 2லு ஏக்கர் நிலப் பரப்பில் உருவகித்து அதில் செப்புத் திருமேனிகளையும் புதியதாக உருவாக்கிய இராமர், இலட்சுமணர், சீதை, அனுமார், ஸ்ரீசக்கரங்களையும் பிரதிஷ்டை செய்து தொடர்ந்து வழிபாடு நடக்கச் செய்து உள்ளார்.  திருப்புல்லாணியில் தோண்டி எடுக்கப்பெற்ற இவ்வைந்து செப்புத் திருமேனிகளும் கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்று வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர்.  இவ்வாறு இராம பிரானோடு தொடர்புடையதாக இத்திருப்புல்லாணித் திருத்தலம் விளங்குகின்றது.

இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளைப் பற்றியும் தாயாரைப் பற்றியும் காலந்தோறும் பல்வேறு வகையான சிற்றிலக்கியங்கள் தோன்றியுள்ளன.  அவைகள் பின்வருமாறு:-

1. திருப்புல்லாணி மழை வசியந்தாதி - தெய்வநாயகப் பெருமாள் நாயுடு
2. திருப்புல்லாணி மான்மியம் - சீநிவாச ஐயங்கார்
3. திருப்புல்லாரணிய மான்மியம் - ஐயாத்துரை ஐயர்
4. திருப்புல்லை திரிபந்தாதி - கிருஷ்ணமாச்சாரி
5. திருப்புல்லாணி எம்பெருமான் மீது கதவு திறத்தற்பாட்டு
6. திருப்புல்லாணி எம்பெருமான் மீது வண்ண விருத்தம்
7. திருப்புல்லாணி எம்பெருமான் மீது வாகன மாலை
8. திருப்புல்லாணி எம்பெருமான் மீது துதி
9. திருப்புல்லாணி எம்பெருமான் மீது திருப்புகழ்
10. திருப்புல்லாணி எம்பெருமான் மீது ஊசல் - செந்தமிழ் வீரராகவன்
11. திருப்புல்லாணி எம்பெருமான் மீது நொண்டி நாடகம்
12. திருப்புல்லாணி எம்பெருமான் மீது நலங்கு - செந்தமிழ் வீரராகவன்
13. திருப்புல்லாணி எம்பெருமான் மீது கிள்ளைப்பாட்டு 
                  - செந்தமிழ் வீரராகவன்
14. திருப்புல்லாணி எம்பெருமான் மீது சிந்து,
15. திருப்புல்லாணி எம்பெருமான் மீது வண்ணம்
16. திருப்புல்லாணி எம்பெருமான் மீது தாலாட்டு - செந்தமிழ் வீரராகவன்
17. திருப்புல்லாணி எம்பெருமான் மீது விண்ணப்பம்
18. திருப்புல்லாணி எம்பெருமான் மீது திருவனந்தல் 
                     - செந்தமிழ் வீரராகவன்
19. திருப்புல்லாணி எம்பெருமான் மீது வாகனக்கவிகள்
20. திருப்புல்லாணி பதுமாசனித்தாயார் பேரில் ஊசல்
                       - செந்தமிழ் வீரராகவன்
போன்றவற்றைக் குறிப்பிடலாம்.  இவற்றுள் திருப்புல்லாணி எம்பெருமான் மீது பாடிய 'திருவனந்தல்' என்பதும் ஒன்று. இங்கு இந்நூலைப் பற்றிக் காண்போம்.

நூலாசிரியர்

"நந்ந மணிந்த புல்லாணி நகர்ச்
செகநாதரே பள்ளியுணர்வீர்! - நிதம்
செந்தமிழ் வீர ராகவன் பணி
தெய்வச்சிலை யாரே பள்ளியுணர்வீர்!"

எனவரும் திருவனந்தலின் இறுதியடிகளால், செந்தமிழ் வீரராகவன் என்பவர் இந்நூலைப் பாடியிருக்கின்றார் எனலாம்.  "இவர் ஓர் சிறந்த கவி.  இவர் இதனையன்றி, அரிச்சந்திர புராணம் என்னும் நூலையும் பாடியுள்ளார்.  அதனை 1596ஆம் ஆண்டில், திருப்புல்லாணி என்னும் தலத்தில், தெய்வச்சிலைப் பெருமாள் சந்நிதியில் அரங்கேற்றியுள்ளார். ஆகவே, இக்கவி, பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கணிக்க வேண்டியுள்ளது.  இவர் எளிய நடையில் பாடவல்லவராகவும் பழமொழிக் கருத்துக்களையும் பழமொழிகளையும் அப்படியே, தக்கவிடத்தில் புகுத்திப் பாடவல்லவராகவும், பக்தராகவும் காணப்படுகின்றார்" (மு. பசுபதி, அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பருவஇதழ், தொகுதி 16, பகுதி 1, 1961, ப.23) என்பர்.

திருப்புல்லாணித் திருவனந்தல்

திருவனந்தல் என்றால் 'கடவுளின் திருப்பள்ளியெழுச்சிப் பூசை' என்று பொருள்.  இங்குத் திருப்புல்லாணியில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் தெய்வச் சிலையார் மீது இந்நூலாசிரியர் செந்தமிழ் வீரராகவன் என்பார் திருப்பள்ளி எழுச்சிப் பாடிப் பூசை செய்வதாக இந்நூல் அமைந்துள்ளது.  இந்நூல் சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் 'திருப்புல்லாணி எம்பெருமான் மீது பாடிய சிறுபிரபந்தங்கள்' என்ற தலைப்பில் ஓலைச்சுவடியாக உள்ளது.  புலவர் மு. பசுபதி அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு அச்சுவடியில் உள்ள கிள்ளைப்பாட்டு, தாலாட்டு, திருவனந்தல், நலங்கு ஆகிய நான்கு சிற்றிலக்கியங்களும் சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பருவஇதழ்த் தொகுதி 16, பகுதி 1, 1961, பக்.21-39இல் வெளிவந்துள்ளன.

பதினொரு பாடல்களைக் கொண்ட இந்நூல், திருப்புல்லாணி சக்கர தீர்த்தத்தில் பக்தர்கள் காலையில் நீராடிக் கொண்டிருக்கிறார்களே அவர்களுக்குக் காட்சி தரவேண்டாமா! எழுந்தருள்வீர் எம்பெருமானே என்றும், சதுரங்க வாத்தியமும் சங்கும் முழங்குகின்றதே! தாமரையும் மணக்கின்றதே! சூரியனும் உதயமாகின்றதே! எம்பெருமானே நீர் எப்பொழுது எழுந்தருளப் போகின்றாய் என்றும், தங்களின் தரிசனத்திற்காக பதினான்கு உலகமும் வரிசையில் நின்றிருக்க நீர் மட்டும் இன்னும் துயில் கொண்டிருந்தால் நான் என்ன சொல்வேன் என்றும், சாமி துயின்றாலும் தாயுந் துயல்வாளோ? தாய் எழுந்து எம்பெருமானை எழுப்ப மாட்டாளோ என வினாவெழுப்பியும் உள்ள பல செய்திகள் இந்நூலுள் இடம்பெற்றிருக்கின்றன.  இவ்வாறு பல செய்திகளைக் கூறித் தூங்கிக் கொண்டிருக்கும் திருப்புல்லாணி தெய்வச் சிலையாரை திருப்பள்ளியெழுச்சி பாடிப் பூசை செய்கின்றார் இந்நூலாசிரியர். இந்நூல் பின்னர் வருமாறு:-

என்ன வனந்தலையர் திருப்புல்லாணி
எம்பெருமா னென்கோனே! முன்னந்தான்
அன்னமாய் நூல்பயின் றாதியு மான
வம்மானே! தெய்வச் சிலையானே! (1)

அருண னுதய கிரியில்வந் தானிரு
ளகன்றொளி பரந்தது காணும்நீர்
திருவனந்தல் தெளிந்தெழுந்து வந்தெங் கட்குச்
சேவைதந் தருள வேணும்!                 (2)

அரிகரி யென்று சக்கரதீர்த் தத்தில்
அன்பர் நீராட்ட முழங்குதுபாரு - மினித்
தெரிசனந் தரவேணுந் திருப்பள்ளி யறையைத்
திறந்தெழுந் தருள வாரும்!       (3)

மேயும் விடைமணி யோசையு மாயர்கள்
வேய்ங்குழ லோசையும் கேளும் - பிறகாகிலும்
பள்ளி யெழுந்துவந் தங்கட்கு அன்போடு
சேவை தந்தாளும்!               (4)

பூண்ட பணிகள் கல¦ரென் றொலித்துக்கண்
பொருந்துமோ விடியற்கால - மெங்கள்
ஆண்டவனே! பள்ளியெழுந் தருளுமையா
வேதுக் கன்பரிடத்திந்தச் சாலம்!        (5)

சதுரங்க வாத்தியமுஞ் சங்கும் முழங்குது
தாமரைப் பூமணம் வருகுது - சூரிய
உதையமாகு மெழுப்ப வெழுப்ப
வுறங்குகிறீ ரிதுநல்ல விருது!        (6)

பந்தசனங்களும் பரிசெனங்களும் வந்தார்
பதினாலுலகும் பின்செல்ல - இத்தனை
பேரையும் சேவைக்கிக் காக்கவைத்
தின்னந் துயின்றா லென்சொல்வேன்? (7)

விசுவரூப சேவைப் பசுவு மசுவமும்
மேச்சலுக்குத் தாமிச மாகுதே - நல்ல
சசிவர்ண மாய்வெகு ருசியாய் இருக்கின்ற
தாரையுஷ்ண மாறிப் போகுதே!        (8)

சாமி துயின்றாலுந் தாயுந் துயில்வாளோ?
தானெழுந் தெழுப்ப வொண்ணாதோ? - அன்னையாம்
அவள் துயின்றாலு மனையாய்க் கிடக்கின்ற
பாம்பாகிலுஞ் சாடை பண்ணாதோ? (9)

நந்த மணிந்த புல்லாணி நகர்ச்செக
நாதரே! பள்ளி யுணர்வீர்! - நிதம்
செந்தமிழ் வீரராகவன் பணிதெய்வச்
சிலையாரே! பள்ளி யுணர்வீர்!         (10)

என்ன வனந்தலையர் திருப்புல்லாணி
எம்பெருமானே! என்கோனே! - முன்ன
மன்னமாய் நூல்பயில் றாதியு மான
வம்மானே! தெய்வச் சிலையானே! (11)

முற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக