செவ்வாய், 13 அக்டோபர், 2026

உப்பிலியபாளையம் தண்டுமாரியம்மன் பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

உப்பிலியபாளையம் தண்டுமாரியம்மன் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

உற்றபுகழ்க் கோவைநகர் உப்பிலிய பாளையத்தில்

பற்றுதண்டு மாரிப் பரைகோயில் - பெற்ற

கணபதியே! நின்தாள் கதியாகக் கொண்டேன்

குணநலன்க ளீவாய் குறித்து. 

 (1)

நூல்

(எழுசீர் ஆசிரிய விருத்தம்)

மதித்திரு முகமும் பிறைநிகர் நுதலும்

            மங்களப் புன்னகை வாயுந்

திதித்தருள் கருணை விழிகளும் படைகள்

            திகழ்திருக் கைகளு மடியார்ப்

பதித்தருள் பதமுந் துலங்கிடச் சிங்கப்

            பரிமிசை காட்டிதந் தருள்வாய்

மதித்திடும் பெருமைக் கோயமுத் தூரில்

            வாழ்தண்டு மாரியம்  பிகையே.                                 

 (2)

கண்ணினில் கண்ட நோய்தவிர்த் திடலில்

            கண்ணெதிர் கண்டதெய் வமதாய்

நண்ணிடும் பரையே பராபரன் பாகம்

            நயந்தருள் சத்தியா முமையே

பண்ணினிற் கண்ட பாடலின் சுவையே

            பணிபவர் தமக்குறு பாவம்

மண்ணியாண் டருள்வாய் கோயமுத் தூரின்

            வாழ்தண்டு மாரியம் பிகையே.                                  

 (3)

செந்திரு மாதும் வெண்கலை மகளுந்

            திருவிழி யெனக்கொடுற் றருள்செய்

பைந்தகை மேனி படைத்ததற் பரையே

            பதமலர் தஞ்சமென் றடைந்தேன்

வந்தவல் வினைநோய்த் தொந்தம்முற் றகற்றி

            வண்பதப் பத்திதந் தருள்வாய்

வந்தனைத் தொண்டர் கோயமுத் தூரில்

            வாழ்தண்டு மாரியம் பிகையே.                                  

 (4)

எத்தனை பிறப்போ யெடுத்தன னவற்றில்

            எய்திடாப் பொருளிலை உன்தாள்

பத்தியு மதிலாம் சித்திமுத் திகளும்

            பாக்கியப் பாக்கியம் பணிப்பாய்

நித்தனார் பாகம் பொருந்தி யன்படியார்

            நினைத்தவை முடித்தருள் செய்யும்

வத்துவே வளமைக் கோயமுத் தூரில் 

            வாழ்தண்டு மாரியம் பிகையே.                                  

 (5)

பன்னுசீர் அண்ட சராசரம் யாவும்

            படைத்தரு ளால்ப்புரந் தருளும்

அன்னையே! யடியேன் முறையினைச் செவியேற்று

            அமைந்தவிப் பிறவியீ டேற

உன்னையே போற்றி வழிபட என்நா

            உன்புக ழேமிகப் பேச

மன்னுநல் லருள்செய் கோயமுத் தூரில்

            வாழ்தண்டு மாரியம் பிகையே.                                  

 (6)

உளமெனும் கமல மிசையம ருமையே

            உம்பர்க ளஞ்சும்நஞ் சிறைவன்

களமிசை நிறுத்துங் கற்பகக் கொடியே

            கவினர னுளத்தினி லெழுதி

அளவிலா வின்பத் துடன்பரு கமுதே

            ஆலயத் திடைப்பணி வார்க்கு

வளமெலாம் தருவாய் கோயமுத் தூரில்

            வாழ்தண்டு மாரியம் பிகையே.                                  

 (7)

மந்தமார் குணத்தா லுயிருட லுறவை

            மறந்து நல்த்தெய்வமுண் டென்னும்

சிந்தனை யின்றிக் கண்டதே காட்சி

            சித்தம்கொள் கோலமே நம்பும்

அந்தகர் உண்மை யாம்நெறி யுணர

            அருள்செய வேண்டினன் சரணம்

வந்தெனை யாள்வாய் கோயமுத் தூரில்

            வாழ்தண்டு மாரியம் பிகையே.                                  

 (8)

எண்ணிய எண்ண மடியவர்க் கருளி

            ஏத்திடு மவரிடர் களைந்து

நண்ணிய பயன்முற் றளித்தருள் கருணை

            நாயகி சித்திரை மாதம்

புண்ணிய மானத் திருவிழாக் கொள்ளும்

            புராதனீ சிங்கவா கனியே

மண்ணினிற் சிறந்த கோயமுத் தூரில்

            வாழ்தண்டு மாரியம் பிகையே.                                  

(9)

பாடல்க ளாட லாதிய இயற்றிப்

            பயில்திரு விழாவினைச் செய்யும்

நாடகப் பத்தி யன்பர்க டிருமை

            நலங்களும் தந்தரு ளமையே

கூடகோ புரங்கள் நாடக சாலை

            குலவுபல் கலைக்கழ கங்கள்

மாடமா ளிகைசூழ் கோயமுத் தூரில்

            வாழ்தண்டு மாரியம் பிகையே.                                  

(10)

பன்னெடுங் காலம் திருவருள் கருணை

            பாலிக்கும் நின்திருக் கோயில்

நன்னல முறங்காத் திருப்பணி பலவும்

            நயந்துசெய் யன்பர்கள் பணிவோர்

கின்னம்முற் றொழித்திட் டிகபர நலங்கள்

            கிட்டிடும் படியருள் புரிவாய்  

மன்னுமங் காடிக் கோயமுத் தூரில்

            வாழ்தண்டு மாரியம் பிகையே.                                  

 (11)

ஆக்கியோன்

திருநிறை மாட கூடமங் காடிச்

            சிறப்பமை கோயமுத் தூரில்

மருவுமுப் பிலிய பாளையக் கோயில்

            வாழ்தண்டு மாரியம் பிகையைத்

தருவளச் சிரவைச் சுந்தர சாமி

            சாற்றிய பாடல்போற் றிசைப்பார்

இருமையாம் நலங்கள் பெற்றிட வம்மை

            இணையடி தொழுதுவாழ்த் துதுமே.                          

வருகை வேண்டல்

(பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்)

அன்னே வருக கணபதியின்

                        ஆயே வருக பணிந்துவக்கும்

             அடியார்க் கின்ப வாழ்வருளும்

                        அரசீ வருக பச்சைநிறப்

பொன்னே வருக பேரின்பப்

                        பொருப்பே வருக பொருப்பில்வரு

            பொன்றாக் கருணை வழிந்தொழுகும்

                        பொலிவே வருக யெமக்கருளும்

மன்னாம் முருகன் தனையளித்த

                        மயிலே வருக சம்பந்த

            மதலைக் கினிய பாலளித்த

                        மணியே வருக வளமைமிகுந்

தன்னேர் கோவைத் திருத்தலத்தின்

                        தலைவீ வருக வருகவே

             தண்டு மாரிப் பேர்கொண்ட

                        தாயே வருக வருகவே.

(1)       

(பன்னிருசீர் சந்த விருத்தம்)

திருவளம் பொலிகின்ற கயிலையங் கடவுளின்

                        திகழிடம் கொண்டசத்தீ

            திகழ்காஞ்சி காமாட்சி  காசியில்வி சாலாட்சி

                        திருமதுரை மீனாட்சியே

கருவலூர் வளர்மாரி சமயபுர முறும்மாரி

                        கருமாரி அருள்மாரியே

            கண்ணனூர் மாரியெழில் தஞ்சைநகர் வாழ்மாரி

                        காளநற் பட்டிமாரி

தருவளம் பொலிகின்ற பண்ணாரி மாரியணி

                        தங்குமூர் எங்குமமருந்

            தகைமாரி கண்நோய்கள் தனைமாறி டச்செய்யும்

                        தண்ணருள் புரிமாரியே

பெருவளம் பொலிகோவை தண்டுமா ரிப்பெயர்

                        பெற்றவுமை வந்தருள்கவே

            பேசுமும் மாரியுல கெங்கணும் நன்முறையில்

                        பெய்யவந்தருள் செய்வையே.

 

திருப்புகழ்

தான தான தந்த தான - தனதானா

ஞால மீது பந்த பாசம் - அணுகாதே

            நாடு யோக சிந்தை யாளர் - உறவாலே

சீலம் மேவி கந்த பாத - மலர்மீதே

            சேரு ஞானம் ஒன்ற நீமுன் - வருவாயே

பாலன் ஆன கந்த வேளை - அருள்தாயே

            பாக மான தொண்ட ரூடு - குடியாவாய்

கோல நீடு மண்ட ரூரை - நிகரான

            கோவை மேவு தண்டு மாரி – உமையாளே.

வாழ்த்து வெண்பா

வாழ்கதிருக் கோவைநகர் வாழ்கதண்டு மாரியுமை

வாழ்க தினமும் வழிபடுவோர் - வாழ்கவே

நல்ல பணிசெய்வோர் நாட்டமுடன் பாட்டிசைப்போர்

சொல்லும் நலமனைத்துந் தோய்ந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக