செவ்வாய், 13 அக்டோபர், 2026

இராமநாதபுரம் கணேசபுரம் சித்திவிநாயகர் பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

இராமநாதபுரம் கணேசபுரம் சித்திவிநாயகர் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

கோவைராம நாதபுரக் கூறாம்க ணேசபுரம்

மேவுமியல்ச் சித்தி விநாயகர்க்குச் - சேவையெனப்

பாவினங்கள் நன்றாய்ப் பரிந்தருளு மன்னவன்தாள்ப்

பூவினங்க ளென்னுள் பொலிந்து.

 (1)

நூல்

(எழுசீர் ஆசிரிய விருத்தம்)

மருப்பணி துதிக்கை முகமுமின் கருணை

            மழைபொழி விழிகளும் மேருப்

பொருப்பணி பவள மேனியு மடியார்

            பொற்புறு நெஞ்சகத் தின்கண்

விருப்புறு பதமும் விளங்கமூ டிகமேல்

            விரிசுரும் காட்சிதந் தருள்வாய்

திருப்பணித் தொண்டர் இராமநா தபுரச்

            முத்திவி நாயக மணியே.                                            

 (2)

நாரையூர் நம்பி நின்னையே நம்பி

            நயந்தசொல் கேட்டமு தருத்தி,

காரையூர் சோழ மன்னவன் விழிமுன்

            காணநல் திருமுறை யளித்தாய்

பேரையூர் போல அழகிய சிற்றம்

            பலவனும் பெரும்சிவைத் தாயும்

சீரையூர் தரவாழ் இராமநா தபுரச்

            சித்திவி நாயக மணியே.                                            

 (3)

பாலனாம் பருவத் துனைத்திருப் பூசை

            பண்ணவும் நண்ணவும் பணித்தாய்

கோலமா ரடியார் தகைத்திருக் கூட்டம்

            கூடவைத் தாண்டனை யினியும்

மேலதாம் பருவத் துன்னருங் கருணை

            மேலதாத் தந்தெனை யாள்வாய்

சீலமா ரன்பர் இராமநா தபுரச்

            சித்திவி நாயக மணியே.                                            

 (4)

வஞ்சகம் கொண்ட நெஞ்சகத் தினர்பால்

            மருவிடா துனதடி மலரே

தஞ்சமா மென்று மிஞ்சருள் வேண்டுந்

            தகையடி யாரொடுங் கூட்டாய்

பஞ்சின்னா லைகளு மியந்திரத் தொழிலும்

            பயில்நகர் மாடகூ டத்தில்

செஞ்சுடர் விளக்கார் இராமநா தபுரச்

            சித்திவி நாயக மணியே.                                            

 (5)

பிறந்தநாள் முதலா லுடம்பினை வளர்க்கப்

            பேச்சொடு செயல்நினை வெல்லாம்

கறந்தன உயிரின் துணையென மாற்றக்

            கருதிலேன் வறிதொழித் தனவாய்

மறந்திடா துணையே! இரவும்நண் பகலும்

            வணங்கவும் வாழ்த்தவும் நினைந்து

சிறந்திடப் புரிவாய் இராமநா தபுரச்

            சித்திவி நாயக மணியே.                                            

(6)

கயமுகற் தடிந்த கண்ணுதல்ப் பரனே

            கற்றிடும் அடியவ ருளத்தே

வயமுற விளங்கும் வள்ளலே  பணிவோர்

            மருவிடை யூற்றினை மாற்றி,

பயமறப் புரியும் ஐங்கரத் தரசே

            பண்பிலார் தமைத்திருத் திடலில்

செயமுறப் புரிவாய் இராமநா தபுரச்

            சித்திவி நாயக மணியே.                                            

 (7)      

வெற்றிவே லெந்தை விரும்பிட யானை

            வேடமாய் வேடர்வாழ் வள்ளி

வெற்பிடை அடைந்து வள்ளியெம் தாயை

            விளங்குநல் மணம்செயப் புரிந்து

நற்றுணை யாக யமர்பெரி யப்பா

            நாடுமெற் குற்றவல் வினையைச்

செற்றிடப் புரிந்தாள் இராமநா தபுரச்

            சித்திவி நாயக மணியே.                                            

 (8)

நாத்திகம் பேசி நாத்தழும் பேறும்

            நவையின ரவையினை யெல்லாம்

ஆத்திக நெறியில் செலுத்தவு முன்றன்

            அருள்திரு நோக்கினால் உயர்சற்

பாத்திர ராக மாற்றவுங் கருணை

            பண்ணுவா பலதிருக் கோயில்ச்

சேத்திரப் பொலிவார் இராமநா தபுரச்

            சித்திவி நாயக மணியே.                                            

 (9)

வற்றிடக் கருணை வாரியே ஐங்கை

            வள்ளலே நின்திருக் கோயில்

நற்றிருப் பணிகள் நயந்திடப் புரிந்து

            நாடுசீர் வுமைசிவன் முருகன்

பெற்றமார் மேனி அமைத்துநற் குடநீர்

            மெய்விழாச் செய்தவர் வினைகள்

செற்றிடப் புரிந்தாள் இராமநா தபுரச்

            சித்திவி நாயக மணியே.                                            

 (10)

தாயிலா யுயிர்கட் கிகபர மருளித்

            தகையமை வீட்டினை நல்கும்

வாயிலாய் விளங்கும் கோயிலின் பணிகள்

            வயக்கிடும் தொண்டர்க ளெல்லாம்

தீயிலா நன்மை யனைத்தையுந் தந்து,

            திருவருள் பெருக்கினா லுனது

சேயிலாண் டருள்வாய் இராமநா தபுரச்

            சித்திவி நாயக மணியே.                                            

 (11)

நூற்பயன்

சந்தவண் ணங்கள் பொழிதவக் கந்த

            சாமியா மெம்குரு நாதர்

சிந்தனை யிடம்கொள் இராமநா தபுரம்

            சீர்க்கணே சபுரம தாக

வந்தமர் சித்தி விநாயகப் பெருமான்

            மலர்ப்பதத் தணியுமிப் பதிகம்

வந்தனை செய்து படிப்பவ ரிருமை

            வளங்களும் பொருந்திவாழ் வாரே.

 

கல்யாண சுப்பிரமணியர் துதி

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

செங்கிரண மணிமுடியுந் திருமுகமண் டலமுந்

            திருக்கருணை பொழிவழியுஞ் செம்பவள வாயுந்

தங்காதல் அடியார்க்கு வழங்குதிருக் கரமுந்

            தகைவள்ளி தெய்வானை தாம்திளைக்கும் மார்புஞ்

செங்கமலத் திருவடியும் திகழமயில் மீதில்

            தெரிசனம்தந் தாண்டருள்வாய் சீர்த்தொழிலின் வளங்கள்

மங்காத புகழ்ராம நாதபுரக் கோயில்

            வள்ளிதெய்வ யானைமண வாளமுரு கோனே.          

அழகிய சிற்றம்பலமுடையார் துதி

உற்றுலக மீன்றவளாம் சிவகாமிப் பெயர்த்தாய்

            உமையம்மை இடம்விளங்க உலகநிலை யெல்லாம்

அற்றவர்கட் கருள்புரியப் பெற்றமிவர்ந் தருளும்

            அழகியசிற் றம்பலப்பே ரடிகளிடம் வினவில்

நற்றகைய தொழில்வளமுஞ் சைவநெறிக் கழகம்

            நல்லருண கிரிப்பெயர்தோய் நாதனது கழகம்

கற்றவர்க ளமைராம நாதபுரத் தினிலர்

            கணேசபுர மெனுந்நாமம் கவின்றிலகும் பதியே.       

சிவகாமியம்மன் துதி

(நேரிசை வெண்பா)

அழகியசிற் றம்பலவ னான்றயிடப் பாகம்

பழகும் சிவகாமிப் பாட்டீ - குழகனன்பர்

வாழ்ராம நாதபுரம் மன்னுமரு ளார்செல்வி

தாழ்வில்லா வாழ்வெமக்குத் தா.        

 

வாழ்த்து வெண்பா

(நேரிசை வெண்பா)

சீர்ராம நாதபுரம் சேரும் கணேசப்பேர்

ஊர்வாழ்க அம்பலவ னுற்றவுமை - தார்முருகன்

சித்தி விநாயகரின் சேவடியைப் போற்றுமன்பர்

நித்தியமாய் வாழ்க நிலைத்து.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக