செவ்வாய், 13 அக்டோபர், 2026

கணபதி ஆதிவிநாயகர் பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

கணபதி ஆதிவிநாயகர் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

கணபதியூர்க் கோவில் கவினுமிய லாதிக்

கணபதிமேல் பாடுதுதிக் காப்பு - குணமியலுங்

கந்தச் சுவாமிகுரு கந்தரர விந்தமலர்ச்

சந்தத் துணையடிகள் தாம்.     

 (1)

நூல்

(எழுசீர் ஆசிரிய விருத்தம்)

நற்சடா டவியும் யானைமா முகமும்,  

            நவிலுமைங் கரங்களும் மேருப்

பொற்பமை சிவந்த மேனியு மடியார்

            போற்றுசீ ரடியிணை மலரும்

கற்பகச் சித்தி புத்திமத் தியினில்

            கவின்தர மூடிகப் பரிமேல்

அற்புதக் காட்சி யருள்கண பதிவாழ்

            ஆதிவி நாயக மணியே.

 (2)

வள்ளியம் மையின்பால் கானகம் சென்ற

            வளமிகு திருவடி மலர்கள்

உள்ளியேத் தடியே னுளத்திடை வதியா

            துறுதலென் திருவருள் புரிவாய்

தெள்ளிசைப் பாடல் பாடிமிக் காடிச்

            சிறப்புடன் வழிபடுந் தொண்டர்

அள்ளியேத் தெடுக்கு மணிக்கண பதிவாழ்

            ஆதிவி நாயக மணியே.                                              

 (3)

இன்பமே நல்கும் திருவருட் கருணை

            இயல்பினை யேத்திடா தென்றுந்

துன்பமே யளிக்கு முலகியற் பொருளைத்

            துணையென நம்பியே யிளைத்தேன்

மன்பதை கொல்லா நெறிக்கவு மார

            மடாலயத் தொடர்பினைக் கொண்ட

அன்பரேத் திசைசா லணிக்கண பதிவாழ்

            ஆதிவி நாயக மணியே.                                              

(4)

புத்தகத் துள்ள செய்திகள் கற்ற

            புதுமையா லாணவங் கொண்டு

வித்தகம் பேசித் திரியும் மானிடர்பால்

            மேவிடா துன்திரு வடிகள்

சித்தமீ தமைத்திட் டிரவொடு பகலுந்

            தியானமா தியசெயப் புரிவாய்

அத்தனே சரண மணிக்கண பதிவாழ்

            ஆதிவி நாயக மணியே.                                              

(5)

மாற்றுயர் பொன்னை நிகர்திரு மேனி

            வள்ளலே கிருபையம் கடலே

ஏற்றமார் பஞ்ச தருவினம் நாண

            எழில்கர மைந்துடைப் பரனே

நாற்றிசை யிலுமுன் திருவருள் சிறப்பை

            நவின்றுநாத் திகர்தமைத் திருத்தும்

ஆற்றலீந் தருள்வா யணிக்கண பதிவாழ்

            ஆதிவி நாயக மணியே.                                              

 (6)

கண்ணுதல்ப் பரனே! நின்திரு வருளை

            கவின்திரு மேனியை யுளத்தே

எண்ணிடுந் தோறு முள்ளமள் ளூறும்

            என்னினு முலகியல் பதனைக்

கண்ணினில் கண்டால் மாறிடு மந்தோ

            கருத்தினில் நிறுத்துவாய் திருத்தாள்

அண்ணலே  யரசே  யணிக்கண பதிவாழ்

            ஆதிவி நாயக மணியே.                                              

(7)

இளமையில் தடுத்தாண் டுன்திருப் பூசை

            இயற்றவுந் திருப்பணி செயவும்

வளமையார் வாழ்வை யளித்தருள் கருணை

            வள்ளலே வரும்பரு வத்தில்

உளமிசை சகுணத் திருவுருக் கண்டு

            உருகவும் பருகவு மருள்வாய்

அளவிலா வளமா ரணிக்கண பதிவாழ்

            ஆதிவி நாயக மணியே.                                              

(8)

மிஞ்சுறு மன்பால் பூசனை புரிந்த

            விளங்குசீர் நாரையூர் நம்பி

கெஞ்சுறும் மொழிக்கா மன்னவன் கொணர்ந்து

            குவிநிவே தனம்முழு துண்டாய்

தஞ்சமா மடியே னுலகியல் மாயைச்

            சழக்கினி லுழன்றிடா வண்ணம்

அஞ்சலென் றருள்வாய் அணிக்கண பதிவாழ்

            ஆதிவி நாயக மணியே.                                              

(9)

தெருள்குணத் தன்ப ரகத்திலள் ளூறும்

            சுகப்பெரும் குன்றமே நாயேன்

மருளுறா தாண்ட கருணைவா ரிதியே

            வயங்குநின் னருட்பொலி கோவில்

பொருள்கொடு புதுக்கித் திருக்குட முழுக்குப்

            பொலிவுறச் செயுமவர்க் கிருமை

அருளுவாய் சோலை அணிக்கண பதிவாழ்

            ஆதிவி நாயக மணியே.                                              

(10)

மங்களப் பொலிவார் கோயில்கள் தோறும்

            வணங்கவுந் துதித்துரு கிடவும்,

எங்கணுங் கடவுள் கொள்கையை யுலகோர்

            ஏற்றிடும் படியியம் பிடவும்,

பங்கமில் லாத நெறியினில் புகவும்

            பணித்தருள் பணிபவர்க் கருளும்

அங்கணா  அமுதே  அணிக்கண பதிவாழ்

            ஆதிவி நாயக மணியே.                                              

 (11)

வந்தடி பணிவார்க் கிகபர நலங்கள்

            வழங்கவுந் திருப்பணி புரிவோர்

சிந்தையி லெண்ணுஞ் சீர்த்திபெற் றிடவுந்

            தினந்தொறும் பூசனை புரிவோர்

சந்தமார் சதுர்த்தி முதற்றிரு நாட்கள்

            சார்தரு திருவிழா புரிவோர்க்கு

அந்தமி லின்ப மருள்கண பதிவாழ்

            ஆதிவி நாயக மணியே.                                              

 (12)

வாழி வெண்பா

(நேரிசை வெண்பா)

ஆதி விநாயகர்த மாலயமு மான்னினமும்

வீதிக் கணபதியில் மேவுகின்ற - நீதியரும்

பத்தி யுடனிந்தப் பாடல் படிப்போரும்

நித்தியமாய் வாழ்க நிலைத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக