செவ்வாய், 13 அக்டோபர், 2026

சபரிமலை ஐயப்பசாமி பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

சபரிமலை ஐயப்பசாமி பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

சபரிமலை ஐயப்ப சாமிசர ணென்ன

அபரிமிதத் தொண்டருவந் தன்பால் - உபரிநலங்

கொள்ளும் படிகருதிக் கூறுதுதிக் கேற்றதுணை

விள்ளுங் குருபாத மே.

(1)

நூல்

(பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்)

செந்திரு வெனுங்கமல மங்கையரு ளாம்பொருள்

                        செல்வவள மோங்க வேண்டுஞ்

            செப்பும்மொழி யாமெவைக் கும்தா யெனுங்கலைச்

                        செல்வியருள் வளர வேண்டும்

புந்தியொரு மித்துனைப் போற்றிவழி பாடுகள்

                        புரிந்திடும் போதம் வேண்டும்

            புகலுமிவை யாவையுந் தரவேண்டி நின்றனைப்

                        போற்றிநின் றேன ருளுவாய்

“சந்திரன ணிந்திலகு சடைமுடிப் பரமனார்

                        தனயனே சரண” மென்றும்

            “சக்திவடி வேல் ஏந்து சண்முகக் கடவுளது

                        தம்பியே சரணம்” என்றும்

சந்ததம் முழங்கிவரு தொண்டருக் கருள்செயுந்

                        தலைவனே யென்னை யாள்வாய்

            சபரிமலை தனிலுறையு மிறைவனே!ஐயப்ப

                        சாமி நின்தாள் சரணமே.

 (2)

பக்தியுட னேயுனைப் பாடிப் பராவுவோர்

                        பாலுறவு கொண்டு பழகேன்

            படிமீது பலவாய பொருள்மீதி லாவலால்ப்

                        பாடு பட்டுத் தளர்ந்தேன்

நத்திவரு மிரவலர்வி ரும்பியபடிக் கீந்து

                        நாளும் வாழக் கருதிலேன்

            நானுனது திருவருளை யெவ்வாறு பெற்றுய்ய

                        ஞாயமுண் டருள்கொ டேற்பாய்

எத்திசையி லுள்ளவரும் மெச்சிவந் தநுதினமும்

                        ஏத்திப் பராவு மெந்தாய்

            ஏறூரு மீசனுந் திருமாலும் மைந்தனென்று    

                        இன்புற உதித்த பரனே

சத்தியத் தொடுசுத்த மும்கொண்டு போற்றுவார்

                        தமையெ நாளும் புரப்பாய்

            சபரிமலை தனிலுறையு மிறைவனே

                        சாமி நின்தாள் சரணமே.                                

 (3)

கஞ்சமலர் வேதனெற் கென்றின்னு மோருடல்

                        கணிக்கா திருக்க வேண்டும்

            காமனென் போன்மலர்க் கணைவிட்டென் நெஞ்சைக்

                        கலங்கச் செய்யாமை வேண்டும்

பஞ்சமென் னுங்கொடிய வறுமைமெய் யன்பர்தம்

                        பால்வரா நன்மை வேண்டும்;

            பகடேறி வரும்நமன் பாசம்வீ சாதெனைப்

                        பாதுகாத் திடுதல் வேண்டும்

நெஞ்சமிசை நின்வடிவை யல்லாமல் வேறெதையும்

                        நினையாத நிலைமை வேண்டும்

            நின்புகழை யல்லாம லுலகில்மா னிடர்புகழ்

                        நிகழ்த்தாத நீர்மை வேண்டும்

தஞ்சமென வந்திடுமு னடியவர் பதம்பரவு     

                        சத்தியமும் நல்க வேண்டும்

            சபரிமலை தனிலுறையு மிறைவனே ஐயப்ப

                        சாமி நின்தாள் சரணமே.                                

 (4)

வஞ்சநினை வால்புலிப் பால்வேண்டு சிற்றன்னை

                        வார்த்தைமெய் யென்று கருதி

            வன்கா னடைந்தங்கு வாழ்ந்திடும் புலிகள்பல

                        மந்தை யாகக் கூடியே

தஞ்சமென் றுடன்வரப் பெரியதோர் புலிமீது

                        தாட்டீக மாய்வ ருங்கால்

            தரணியோ ரஞ்சிடத் தன்மனைக் கண்வருந்

                        ததியினில் தாய றிந்தே

நெஞ்சமிசை யச்சமும் பெருமதிப் பும்கொண்டு

                        நீடுதன் பிழையை யெண்ணி

            நின்னையே போற்றசெய யுலகெலா முன்தெய்வ

                        நிலையுணரு மாறு செய்தாய்

சஞ்சல மெலாமகன் றுன்னடி பராவும்மெய்த்

                        தவமடிய னேற்க ருளுவாய்

            சபரிமலை தனிலுறையு மிறைவனே ஐயப்ப

                        சாமி நின்தாள் சரணமே.                                

 (5)

வேயொத்த தோள்மகளி ராசையுங் கடல்போல

                        மேவிடும் பொன்னா சையும்

            வெற்பனைய மண்ணாசை யும்பெருகி நாள்தோறும்

                        விளைக்கும் பெருந்து யரினால்

நாயொத்த லைந்திளைத் துச்சோர்ந் திடாவண்ணம்

                        நல்லடியார் கூட்ட முடனே

            ஞானமணம் நாளுமிரு பாதமலர் சூடுமொரு

                        நன்னிலைமை துன்ன ருள்வாய்

காயொத்த கடுமனங் கனிபோ லிளகிடக்

                        கருணைபுரி கண்களு டையாய்

            கணபதி தனக்கிளைய சோதரா என்னன்பர்

                        கழறிட வரும்பி ரானே

தாயொத்த நீயெனைச் சேயொத்திடக் கொண்டு

                        சந்ததம் காத்தல் முறைகாண்

            சபரிமலை தனிலுறையு மிறைவனே ஐயப்ப

                        சாமி நின்தாள் சரணமே.                                

 (6)

தாமளவில் துன்புறத் தீமைசெயி னும்பிறர்

                        தமக்கிடர் செயாமை வேண்டும்

            தன்னுயிரி னைப்போல மன்னுயிர்க ளைக்கருதுந்

                        தண்கருணை மேவ வேண்டும்

சேமமாய் இவ்வுணர் வுற்றதால் பிறவுயிர்ச்

                        செற்றுணா நியமம் வேண்டும்

            தெய்வநெறி பேணும்திருத் தொண்ட ரோடுனைச்

                        சேவிக்கு மன்பு வேண்டும்

பாமரர்க ளானநாத் திகரையும் பத்திபுரி

                        பண்பில்ப் பழக்க வேண்டும்

            பசியதா மரையிலையில் நீர்போல வாழ்க்கையில்

                        பற்றின்றி நிற்க வேண்டும்

சாமளவி லிடர்வரினும் மனநிலை தளர்ந்திடாத்

                        தத்துவத் தெளிவு வேண்டும்

            சபரிமலை தனிலுறையு மிறைவனே ஐயப்ப

                        சாமி நின்தாள் சரணமே.                                

 (7)

இன்பமக வில்லாமல் ஏங்கும்மன் னவன்மகிழ

                        இனியமணி கண்ட நல்ப்பேர்

             இசையும்மக வாகிவந் தன்றுவிளை யாடினாய்

                        இவ்வுலக மென்று மேத்த

வன்பகடு புலிகரடி யானைமுத லாங்கொடிய

                        வனமிருகம் வாழ்ம லைக்கண்

            வாசமுற் றாய்போற்ற வருபவர்க் கிடையூறு

                        வாராத வண்ணம் வைத்தாய்

அன்பமைய வருதொண்டர் தமைவலது கையினால்

                        அஞ்சலென் றபய மருள்வாய்

            அவிர்மகர மாதமாம் தைத்திங்கள் முதல்நாளின்

                        அந்தியில்ச் சோதி வடிவாய்த்

தன்பதம் காட்டியே துன்பினைப் போக்கிடும்

                        தயைமருவு தம்பி ரானே

            சபரிமலை தனிலுறையு மிறைவனே ஐயப்ப

                        சாமி நின்தாள் சரணமே.                                

 (8)

கந்தம்மலி பன்மலர்த் திரள்கொண்டு நின்மலர்க்

                        கழல்க ளையருச் சித்துமெய்க்

            கனிவினொடு பலவான தோத்திரப் பாக்களைக்

                        காதலால்ப் பாடி யாடி

நிந்தனைக் கிடமாக்கும் பொறிபுலன்க ளைந்தினையும்

                        நேர்வழியில் செல்ல விட்டே

            நெஞ்சினைத் தம்வசம் நிறுத்தும்நல்த் தவயோக

                        நெறியை யான்பெற நல்குவாய்

பைந்தரு நிழல்த்தேவ ரிந்திரன் முதல்ப்பலோர்

                        பணியநின் றருள்செய் பரனே

            பரவுபூ ரனைபுட் கலையென்ற சத்திகள்

                        பத்தினிக ளாக வைத்தாய்

தந்தக் களிற்றின்மிசை வந்துற்றென் விழிகளில்த்

                        தரிசனம் தருவ தென்றோ

            சபரிமலை தனிலுறையு மிறைவனே ஐயப்ப

                        சாமி நின்தாள் சரணமே.                                

 (9)

நேத்திரமோர் மூன்றுடைய சிவபிரான் மாலன்று

                        நிறையழ கின்மோ கினியெனா

              நின்றபோ தொன்றலால் வந்ததாய் மன்பதையில்

                        நித்தமும் புகலு கின்றார்

ஆத்திரம கன்றஇடை பிங்கலைப் பெயரிரண்டு

                        அமைநாடி யொன் றாகிய

              அவிர்சுழு முனைத்திறம் போலவே திருமேனி

                        ஆனவிதம் யாவ ரறிவார்

சாத்திரமு ணர்ந்தவர்கள் போல்யோக பட்டிகை

                        தரித்திலரும் வடிவ மாய்நீ

              சார்வதால் மாதவத் திறத்தினில்க் குலவிடும்

                        தன்மைநன் கிலங்கு மன்றோ

சாத்தனரி கரபுத்ரன் மணிகண்டன் ஐயனெனச்

                        சாற்றுதிரு நாம முடையாய்

              சபரிமலை தனிலுறையு மிறைவனே ஐயப்ப

                        சாமி நின்தாள் சரணமே.                                

 (10)

நீலமுட னேகரிய நிறமுறும் கலையக்கம்

                        நிகழ்துளவ மணிகள் பூண்டு

              நெஞ்சினிலத் திடம்மேவி ஐம்புலச் சேட்டையற

                        நின்றுப்பி லாம லுண்டு

சாலவும் உரத்தெழும் தொனியினா லையப்ப

                        சாமியே சரண மென்று

             சத்தமிட் டெய்துமுன தன்பரைக் காணினுந்

                        தகுபத்தி யோங்கு மன்றோ

கோலமுறும் யானைபரி கொடுவரி யென்பதாம்பல்

                        குதிரை யில்ச்செண் டாயுதம்

              கொண்டுவரு சேவையைக் கண்டுபே ரின்பம்யான்

                        கொள்ளநீ அருள வருவாய்

தாலம்முழு தும்பரவு தலைவனே சத்தியத்

                        தவர்பர வுகுரு நாதனே

              சபரிமலை தனிலுறையு மிறைவனே ஐயப்ப

                        சாமி நின்தாள் சரணமே.                                

 (11)

திருப்புகழ்

தனனதன தனனதன தய்யத்த தான - தனதானா

மனதுலக நெறியினிடை

எய்திப்பல் வாறு - திரியாதே

            மதன்மறலி பிரமனிவர்

கையுற்று வாடி - மறுகாதே

தினமுன்னடி நினைதவசு

செய்யக்கொள் யோக - வலியாலே

            தெரிசனைகொள் ளொருநல்வரம்

நல்கக்கண் நேரில் - வருவாயே

பனகமனி பரமனரி

வெஃகிக்கொள் சேயில் - நிகழ்வோனே

            படிறுதவி ரடியரிசை

சொல்லக்கு லாவு - திறலோனே

சனனமொடு மரணமறு

மெய்யுற்ற போதர் - பனிசீலா

            சபரிமலை தனில்மருவும்

ஐயப்ப னான – பெருமாளே.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக