செவ்வாய், 13 அக்டோபர், 2026

கணவாய்ப் பாளையம் கற்கிமலை ஈசர் பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

கணவாய்ப் பாளையம் கற்கிமலை ஈசர் பதிகம்

(கொச்சகக் கலிப்பா)

மதிநதியார் சடைமுடியும், மங்களமார் திருநுதலும்

பதிகருணை விழிமலரும் பங்கயக்கை களுந்துலங்க

விதியழிக்குந் துணையடிகள் விளங்கவிடை மிசைவந்து

கதியருள்வாய் கணவாயூர்க் கற்கிமலை ஈச்சுரனே.   

 (1)

திருஞான சம்பந்தர் திருநாவுக் கரசர்புவி

வருநாவ லாருரர் மணிவாச கப்பெருமான்

தருபாடல் நுகர்செவியில் தமியேன்சொ லேற்றருள்வாய்

கருணையன்பர்க் கணவாயூர்க் கற்கிமலை ஈச்சுரனே.          

 (2)

தீநெறியில் செல்வோரைச் சித்தாந்தப் பெருவழியாம்

தூநெறியில் செலுத்திடற்குத் துணைநின்றாண் டிடவேண்டும்

ஆர்நெறியில் பூசிக்க வருள்வழங்கும் பெருமானே

காநிறையுங் கணவாயூர்க் கற்கிமலை ஈச்சுரனே.                   

 (3)

பெற்றமிவர்ந் தம்மையுடன் பிறங்கியருட் காழியர்க்கு

நற்றனப்பால் தந்தாண்ட நாயகனே  நாயடியேன்

உற்றுனடி பற்றிநின்றே னுயர்காட்சி தந்தருள்வாய்

கற்றவர்வாழ் கணவாயூர்க் கற்கிமலை ஈச்சுரனே.     

 (4)

கற்கிமுனைக் கருள்செய்தாய் கருதுமவர் பிணிதவிர்ப்பாய்

பொற்புடைய கற்கோவில் பொலிவமையத் தான்தோன்றி

நிற்கின்ற திருவுருவாய்  நிறைபச்சைக் கொடிபடர்ந்த

கற்பகமே கணவாயூர்க் கற்கிமலை ஈச்சுரனே.           

 (5)

பாவளம்சால் நால்வர்தமிழ்ப் பாட்டினுக்காகப் பற்பலவா

மேவருமை யற்புதங்கள் மிகவிளைத்த வித்தகனே

நாவளம்சா லஞ்செழுத்தை நவின்றிடுவார் நெஞ்சகத்தாய்

காவளஞ்சால் கணவாயூர்க் கற்கிமலை ஈச்சுரனே.    

 (6)

மருதமலைத் தொடராக மன்னுகற்கி மலையின்கீழ்

கருதமலை கருணாம்பாள் கவினவிநா யகர்முருகன்

வருபரிவா ரங்களுடன் வயங்கிடும்நீ யெனக்கருளக்

கருதிடுவாய் கணவாயூர்க் கற்கிமலை ஈச்சுரனே.      

 (7)

அருணைநகர் முனிக்கருளு மணிக்குமர குருபரன்தான்

உருகிநினைந் திடுமடியே னுயர்நிலைமென் மேலுறச்செய்

தருவினிடைக் கிளிபாடத் தண்மயிலா டிடவண்டு

கருதியிசை கணவாயூர்க் கற்கிமலை ஈச்சுரனே.                    

 (8)

கண்டதுவே காட்சியதாம் கள்குடித்துத் தடுமாறும்

வண்டர்களைத் திருத்திவுயர் வழிநடத்தும் பேறருள்வாய் 

தொண்டர்பணி செய்தினிய தோத்திரங்கள் சொலும்நீல

கண்டனே கணவாயூர்க் கற்கிமலை ஈச்சுரனே.                     

 (9)

விண்ணுறையுந் தேவர்களும் விரிநீர்த்தண் கடல்சூழும்

மண்ணுறையும் மானிடமும் வணங்கவளர் பெருமானே

எண்ணுமுளத் தன்புட னைந்தெழுத்தோது வார்க்கெளிய

கண்நுதலே கணவாயூர்க் கற்கிமலை ஈச்சுரனே.       

(10)

நற்கோவில் பணிசெய்வார், நாளும்வந்து வழிபடுவோர்

பொற்பாரு முற்சவங்கள் பொலிவுடனே செய்வோர்கள்

உற்றநலம் பெற்றிலக வுந்தனருள் நல்கிடுவாய்

கற்கிமுனி கணவாயூர்க் கற்கிமலை ஈச்சுரனே.                      

 (11)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக