தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த
கோயில்பாளையம்
கவைய காளியம்மன் பதிகம்
(அறுசீர்க்
கழிநெழிலடி ஆசிரிய விருத்தம்)
பூரணமா
மதிமுகமும் கருணைமழை
பொழிவிழியும் புனித வாயும்
வாரணியும்
தனமார்பும் படைக்கலமார்
கரமலரும், மலரார் பூசைச்
சீரணியும்
பதமலரும் சிங்கமிசை
தோன்றியருள்ச் சீலம் நல்காய்
காரணியும்
பொழில்க்கோயில்ப் பாளையத்தில்
அமர்கவைய காளித் தாயே.
(1)
நலம்பலவும்
தருமம்மே துயர்நீக்கும்
பெருந்தேவீ நாடு மன்பர்
குலம்பலவாம்
செல்வமெல்லாம் பெற்றுயரக்
கடைக்கண்ணருள் கொடுக்குங் கொற்றீ!
தலம்பலவி
லுயர்வாகிக் கவுசிகமா
முனிதவம்செய் தகைத்தாய் வேண்டுங்
கலம்பலவு
முளகோயில்ப் பாளையத்தில்
அமர்கவைய காளித் தாயே.
(2)
அமைதீமை
யடக்கிடுவே னெனவுணர்த்த
மயிடனுட லடக்கிக் காட்டிச்
சிமையம்நிகர்
கருணையுடன் படைக்கலங்கள்
துலங்கிடநீ திகழக் கண்டும்
உமையவளா
முனைவணங்க அறியாரை
என்னென்பே னுள்ள மொன்றிக்
கமையமைவார்
பணிகோயிற் பாளையத்தில்
அமர்கவைய காளித் தாயே.
(3)
மார்க்கங்கள்
பலவற்று மம்மைதனை
வழிபடுதல் வரம்பி லின்பஞ்
சேர்க்கும்நெறி
மிகவெளிதா மெனவுணர்ந்தேன்
திருக்கடவூர்ச் செய்த பாவந்
தீர்க்கயமன்
பணிந்திடவும் கவுசிகமா
முனிவேள்வி சிறந்த தாலுங்
கார்க்கண்ட
னுறைகோயில்ப் பாளையத்தில்
அமர்கவைய காளித் தாயே.
(4)
சீலமா
சாரம்முதல் பலநலனும்
பொருந்துமன்பர் திருவு ளத்தே
கோலமா
னந்தமுடன் கண்டுகளித்
திடவடியாய் குலவுந் தேவீ
ஞாலமுய்யக்
கடல்நுரையால் யமதருமன்
இலிங்கமென நாட்டு கால
காலசிவன்
வதிகோயில்ப் பாளையத்தில்
அமர்கவைய காளித் தாயே.
(5)
நற்றவர்கள்
சொலும்நெறியில் ஞாலமெலாம்
நடந்திடவும் நாட்டில் தீமை
உற்றவர்கள்
திருந்திடற்குங் கொலைபுலைதீர்
புனிதநெறி யுணரா ரெல்லாம்
பெற்றியுடன்
தெரிந்திடற்கு மெண்ணுமெண்ணம்
ஈடேறும் பேறென் றீவாய்
கற்றவர்கள்
வாழ்கோயில்ப் பாளையத்தில்
அமர்கவைய காளித் தாயே.
(6)
பொற்பகமார்
திருக்கோவில் பணிசெய்வோர்
சந்நிதியில் பொலிந்து வந்தே
சொற்பதத்தால்
துதித்திடுவோர் குலதேவாய்
வணங்குமவர் சொல்லி வேண்டும்
நற்பயன்க
ளத்தனையும் நல்கிடுவாய்
திருவாணி நாடிப் போற்றுங்
கற்பகமே
வளக்கோயில்ப் பாளையத்தில்
அமர்க்கவைய காளித் தாயே.
(7)
அடிதொழுவார்க்
கருள்புரியு மம்பிகையே
தும்பிமுகத் தமலன் தாயே
கடியிறையை
நம்பிடுவோ ருளம்வகுத்த
நாத்திகத்தைக் கவர்ச்சிப் பேச்சால்
படிமாக்க
ளிடைபரப்பு மொருசிலரும்
மனந்திருந்திப் பணியு மாறு
கடிதிரங்கா
யணிக்கோயில்ப் பாளையத்தில்
அமர்கவைய காளித் தாயே.
(8)
நாரணியே
மயிடன்தன் செருக்கடக்கித்
தேவர்க்கு நலஞ்செய் தாண்ட
பூரணியே
மூவுலகி லெல்லோரும்
எப்போதும் போற்று கின்ற
ஆரணியே
அகிலாண்ட கோடியெலாந்
தோன்றுதற்கோ ரன்னை யென்னுங்
காரணியே! எழில்க்கோயில்ப் பாளையத்தில்
அமர்கவைய காளித் தாயே.
(9)
சுருதிமறை
யாகமங்கள் போற்றுதிருக்
கோயிலிடைச் சுத்த பூசை
வரும்முறையால்ச்
செயுமன்பர் வழிவழியாய்க்
குலதேவாய் வணங்கும் பத்தர்
பெருநெறியால்
திருவிழாக்கள் செய்திடுவோர்
அனையர்நலம் பெற்று வாழக்
கருதிடுவாய் சரண்கோயில்ப் பாளையத்தில்
அமர்கவைய காளித் தாயே.
(10)
பூத்திகழும்
பொழில்க்காழிச் சம்பந்தப்
பெருமாற்குப் புகட்டும் பால்தான்
ஆத்திகர்கள்
களிகூர வெத்தனையோ
சாதித்த ததைச்சற் றீவாய்
நேர்த்தியாய்ப்
பொங்கலிட்டுத் திருமணமும்
தேருலாவும் நிகழ்த்து மன்பர்க்
காத்திடுவா
யுயிர்கோயில்ப் பாளையத்தில்
அமர்கவைய காளித் தாயே.
(11)
நூற்பயன்
எந்தைகந்த
சாமிமுனி யேத்துதிருப்
பாடலுட னேனை யன்பர்
வந்தனையார்
பாடல்களை யேற்றுவினை
யாடல்பல வகையாய்ச் செய்த
கந்தம்மலி
பொழில்க்கோயில்ப் பாளையத்தில்
அமர்க்வைய காளித் தாயைச்
சுந்தரப்பே
ரடியேன்சொல் லால்த்துதிப்போர்
இகபரச்சீர் தோய்ந்து வாழ்வார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக