செவ்வாய், 13 அக்டோபர், 2026

கணபதி வேணுகோபாலசாமி பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

கணபதி வேணுகோபாலசாமி பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

பூபாரம் தீர்த்தருள்செய் புங்கவனைச் சீர்வேணு

கோபால சாமிப்பேர் கொள்மாலைக் - காபாலி

தந்த கணபதிப்பேர் சார்ந்தபதி யில்துதிக்கத்

தந்தருள்வான் சீர்முழுதும் தான்.

 (1)

நூல்

(அறுசீர்ச் சந்த விருத்தம்)

புவிமாது திருமாது மருவிருபு றத்தும்

            பொருந்திடக் கருடன்மீது

கவிமேகம் அனையதிரு மேனிசங் காழியிரு

            கைத்தலத் துறவந்துநான்

தவியாத வாறருள் கண்பார்த்த ருள்செயத்

            தயவுன்னு ளத்தில்லையோ

குவிமனத் தவர்மேவு கணபதியி லவிர்வேணு

            கோபால சாமிமாலே.                         

 (2)

மழவிளங் கன்றெனச் சகடமென மாமன்விடு

            வன்பகையை அட்டுவந்தாய்

அழகுமலி கோபியர்தம் மில்லத்தில் வெண்ணெய்பால்

            அத்தனையு முண்டுமகிழ்வாய்

தழலனைய வெஞ்சரம்வி டுத்துப்பல் தானவர்

            தமைப்புவிவு யத்தொலைத்தாய்

குழலிசைவி ருப்புளாய் கணபதிப் பதிவேணு

            கோபால சாமிமாலே.                                     

 (3)

காளவிட முண்டவனை  யுன்றன்னில் வேறெனக்

            கருதுமவ மதியினோர்தாம்

மூளவரு தீயினில் சூடொன்று வேறிலா

            முறையிலறி வுறவருள்செய்வாய்

வாளரவின்  மேற்றிருப் பாற்கடலி லறிதுயில்செய்

            வனசலோ சனமுகுந்தா

கோளறுமு ளத்தர்வளர் கணபதியி லுறைவேணு

            கோபால சாமிமாலே.                                     

 (4)

தெளிதமிழ்த் துதிகொண்டு போற்றுமொரு பதின்மர்தாம்

            செப்புபிர பந்தமோதிக்

களிகொடுநின் னுருவம்மன திடைநாடு தவவாழ்வு

            கடையனேற் கமையவருள்வாய்

புளிமரநி ழற்கண்ணவிர் சடகோப முனிபரவு

            புங்கவா  மங்குல்தவழும்

குளிர்பொழில்க் கணபதிப் பதியினில்த் திகழ்வேணு

            கோபால சாமிமாலே.                         

 (5)

கலகமுயல் தானவப் பேரிரு ளொழிக்கவரு

            கதிரையோப் பாம்திகிரியும்

நிலவுசங் கமுமேந்தி நீலமலை போல்க்குலவும்

            நின்சேவை யென்றருளுவாய்

உலகம்முழு தினையுமொரு திருவடியி னாலளந்து

            ஒளிர்பெரிய வடிவுகொண்டாய்

குலவுசீர்க் கணபதிப் பதியினில்த் திகழ்வேணு

            கோபால சாமிமாலே.                                     

(6)

வஞ்சகம் பொய்சூது முதலியகொ டுந்தீமை

            மருவுதுரி யோதனன்பால்

பஞ்சவர்வி டும்தூத னாச்செலுன் திருவருள்

            பண்பென்மே லவிர்வதென்றோ

தஞ்சமென அரமகளிர் வந்தவரி னத்தரொடு

            சந்தம்ம கிழ்ந்துதங்கிக்

கொஞ்சணிக் கணபதிப் பதியில்நித மவிர்வேணு

            கோபால சாமிமாலே.                                     

 (7)

சிற்றனைமொ ழிக்காக முடிசூடி வாழாது

            தேவியொடு தம்பிசூழப்

பற்றகலும் முனிவருறை கானகத் திற்சென்று

            பதினான்கு வருடம்வரையும்

உற்றர்க் கனையவன் சுற்றத்து டன்சாடும்

            உன்திறமு ரைக்கவறியேன்

கொற்றம்மலி யும்கணப திப்பதியி லவர்வேணு

            கோபால சாமிமாலே.                                     

 (8)

கோதண்ட ராமதா ரகராம ஜெயராம

            கூறுபட் டாபிராம

தீதில்சா னகிராம சிவராம  பலராம

            சீர்கொள்கல் யாணராம

ஓதுதச ரதராம அபிராம சீராம

            உயர்முனிவர் பரசுராம

கோதில்ரகு ராமவேங் கடராம கணபதிக்

            கோபால சாமிமாலே.                                     

 (9)

நவநீத கிருட்டிணா ராதா கிருட்டிணா

            நல்லருள் ராமகிருஷ்ணா

தவமார்கு மாரகிருஷ் ணாபால கிருட்டிணா

            சாற்றுசந் தானகிருஷ்ணா

பவமோவு முத்துக்கி ருட்டிணா கிருஷ்ணகோ

            பாலகிருஷ் ணாவருள்செய்வாய்

குவலயம் புகழ்கண பதிப்பதியி லுறைவேணு

            கோபால சாமிமாலே.                                     

 (10)

வாசுதே வாமுகுந் தாபத்ம நாபாநல்

            மதுசூத னாமாதவா

கேசவா தாமோத ராசொல்திரி விக்ரமா

            கிளரருட் சீதராசீர்

பேசருள்கொள் நாராய ணாசீர்வை குந்தா

            பிறங்குகோ விந்தாவெனக்

கூசலில தோதுவார் கணபதியி லவிர்வேணு

            கோபால சாமிமாலே.                                                 

 (11)

ஆக்கியோன்

(நேரிசை வெண்பா)

மெச்சு கணபதிவாழ் வேணுகோபா லன்மிசை

உச்சிதமா கும்துதிப்பாட் டோதினேன் - நச்சுபுகழ்

மன்னுமிரா மானந்தன் மாண்பருள்சேர் கந்தசாமி

இனருளால் சுந்தரன்நான் இன்று.

 

கும்பாபிடேகக் கால விளக்கம்

(கட்டளைக் கலித்துறை)

கணபதி யூருறை வேணுகோ பாலர் களிப்புறவே

குணம்மலி சோப கிருதாண்டு பங்குனி கூடுபத்தில்

அணவிய திங்கட் கிழமைபூ சத்தினத் தன்பரின்பால்

மணம்மலி கும்பநன் னீராட்டி மெய்ப்பயன் வாய்ந்தனரே.

   

வாழ்த்து வெண்பா

(நேரிசை வெண்பா)

வாழி கணபதியூர் வாழி கணபதிதாள்

வாழிகோ பால வரதனன்பர் - வாழியமெய்க்

கற்புடைய மாதர் கவினார் பசுக்குலங்கள்

பொற்புடனே யென்றும் பொலிந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக