செவ்வாய், 13 அக்டோபர், 2026

கணபதி காமாட்சியம்மை பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

கணபதி காமாட்சியம்மை பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

பணபதியாம் மன்னளகைப் பண்ணவன்போல் வார்வாழ்

கணபதியூர்க் காமாட்சி கானம் - கணபதியாம்

முன்னவனைப் போற்றி மொழிகின்றேன்; இன்பமெல்லாம்

மன்னனருள் செய்வான் மகிழ்ந்து.     

 (1)

நூல்

(வெண்டளைக் கலிப்பா)

சீரார் மதிமுகத்தில் சிந்துரப்பொட் டுங்கனிவார்

ஏரார் விழிகளும்கொண் டென்னெதிர்வந் தாண்டருள்வாய்

பாரார் புலவர்பலர் பாடுமெழி லார்பொழிலில்

காரார் கணபதிவாழ் காமாட்சி யம்பிகையே.

 (2)

கோட்டுக் களிற்றானைக் குன்றுதொறும் நின்றுபுரி

ஆட்டுக் குகன்றன்னை யன்றுமகவா யளித்தாய்;

பாட்டுக் குருகும் பானிடத்துற் றாயருட்சீர்

காட்டுங் கணபதிவாழ் காமாட்சி யம்பிகையே.                     

 (3)

மணஞ்சூழ் மலராலுன் வாரிசத்தாள் போற்றிடும்நல்

எணஞ்சூழ்ந் தியற்றுமெனக் கென்றருள் றீந்திடுவாய்

பணஞ்சூழ் அரவணிந்த பண்ணவன்ற னன்புடையார்

கணஞ்சூழ் கணபதிவாழ் காமாட்சி யம்பிகையே.

 (4)

புவியிலிரு நாழிநெல்லால் போற்றம்முப் பத்திரண்டும்

பவிசுறமுன் செய்துயிர்கள் பண்புறக்காத் தளித்தாயே

குவிமனத்துத் தொண்டர் குறைதவிர்க்க வேண்டுகிறேன்

கவினும் கணபதிவாழ் காமாட்சி யம்பிகையே.

 (5)

காஞ்சிரங்காய் போலக் கவினும் புறநட்பும்,

வேஞ்சினமும்,  சூதுமுட்சார்  வெய்யருற  வொன்றொழிப்பாய்

நாஞ்சில் வளக்கொங்கில் நற்கோவை யின்சார்பார்

காஞ்சிக் கணபதிவாழ் காமாட்சி யம்பிகையே.

 (6)

பண்ணுடைய பாடல்பல பாடியுனைப் போற்றிசெய

நண்ணுமெனக் கெந்தவித நன்மையுந்தந் தாண்டருள்வாய்

விண்ணுடைய செந்தீ விரிகதிரும் திங்களுமாம்

கண்ணீ கணபதிவாழ் காமாட்சி யம்பிகையே!.          

 (7)

பாய்ந்தோடு மைந்துபுலப் பாங்கிலலைந் தின்பமின்றி

ஓய்ந்தேயு முள்ள முனைக்கருத லுற்றிலதே

மாய்ந்தே பினும்பிறக்க வாட்டுமிரு வல்வினையைக்

காய்ந்தாள் கணபதிவாழ் காமாட்சி யம்பிகையே.      

 (8)

மெய்யார் பிணிமூப்பும் வெங்குணமுங் கொண்டடியேன்

எய்யாவா றாண்டுனரு ளீயத் தடையுளதோ

நெய்யார் மலர்கணையும் நீள்கழையாம் வில்லுமவிர்

கையாய் கணபதிவாழ் காமாட்சி யம்பிகையே.                     

 (9)

பூமணக்குஞ் செஞ்சலசப் பொன்மகளு மின்தமிழ்ப்பா

நாமணக்கும் வெண்கமல நங்கையுஞ்செய் நல்லருள்நின்

தேமணக்கு மின்பத் திருவருளால் சேர்த்தருள்வாய்

காமர் கணபதிவாழ் காமாட்சி யம்பிகையே.  

 (10)

தாமலையாம் கண்ணவனும் தன்கமலப் பண்ணவனும்

காமனைகாய் கண்ணவனும் காவுறையும் விண்ணவனும்

ஆமவர்கள் நாடுமரு ளுடையா யாண்டருள்வாய்

காமர் கணபதிவாழ் காமாட்சி யம்பிகையே.              

 (11)

தாளிணைகள் போற்றித் தரும்கோயில்ப் பணிபுரியும்

நீளிசையார் செங்குந்தர் றேடும்வர மீந்தருள்வாய்

வாளிசைகை  மாமாரீ மாதங்கீ  கௌமாரீ

காளக் கணபதிவாழ் காமாட்சி யம்பிகையே.             

 (12)

சிரவைஇரா மானந்த தேவனையும், செந்தமிழ்ச்சீர்

விரவுகந்த சாமியெனும் மேலவனை யும்தந்த

கரவில் கணபதிவாழ் காமாட்சி யம்பிகையைப்

பரவுசுந்த ரன்புகலும் பாட்டிவையன் னாளருளே.

 (13)

திருப்புகழ்

தனதனனாத் தானாத்த தனதானா

படைமதனால் கேடேற்று - மெலியாதே

            பகையுறவால்ச் சேரூக்கம் - நெகிழாதே

விடையிவர்வார்த் தோய்காட்சி - யதைநாயேன்

            விழியெதிர்தோற் றோர்பேற்றை - அருள்வாயே

குடைபுரிதாள் சேய்போற்றும் - அனையாவாய்

            கொடியவர்பால்ப் போராற்று - தயவாளே

கடைவிழியால்க் காமாட்சி - அருள்தாயே

            கணபதியூர்க் காமாட்சி - உமையாளே.

கும்பாபிடேகக் கால விளக்கம்

(கலி விருத்தம்)

பிலவ ஆண்டினில் பிறங்குதை யெட்டினில்

குலவு ஞாயிறு கூடிய பூசநாள்

திலக மார்காமாட் சிக்குக் கணபதி

நிலவு கும்பநீ ராட்டு நிகழ்ந்ததே.       

 

வாழ்த்து வெண்பா

(நேரிசை வெண்பா)

வாழி கணபதியூர் வாழிகா மாட்சியுமை

வாழிகுட நீராட்டும் மாண்புடையோர்  - வாழியவே

பூசனைசெய்யன் பர்களும் போற்றவருந் தொண்டர்களும்

நேசமுடன் பாரில் நிதம்.         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக